நேர்மைக்கு ஓர் எடுத்துக்காட்டு
நேர்மைக்கு ஓர் எடுத்துக்காட்டு
நெல்மா என்ற பெண், பிரேசிலில் உள்ள க்ரூசேரூ டூ சூல் நகரில் சிகையலங்காரப் பணியாளராக வேலை செய்கிறார். சமீபத்தில், அவருடைய கிறிஸ்தவ உத்தமத்தன்மைக்கு ஒரு சோதனை வந்தது. அவர் வசித்த பகுதி வெள்ளத்தால் பாதிக்கப்பட்டபோது, அவருடைய வாடிக்கையாளராயிருந்த ஒரு பெண்மணி சில துணிமணிகளை நன்கொடையாகக் கொடுத்தார். துணிகளைப் பிரித்து அடுக்கிக் கொண்டிருந்தபோது, பேன்ட் பாக்கெட்டுகளில் பணம் இருந்ததைக் கவனித்தார். அதன் மொத்த மதிப்பு 1,000 (அமெரிக்க) டாலருக்குச் சமம்.
அது நெல்மாவின் ஏழு மாத சம்பளத்திற்கு ஈடான தொகை. அதுமட்டுமின்றி, அவர் பண நெருக்கடியில் கஷ்டப்பட்டார். அவருடைய வீடு வெள்ளத்தால் சேதமடைந்திருந்தது. அவருடைய அப்பாவும், உடன்பிறந்தோரும் தங்களுடைய உடமைகளில் பெரும்பாலானவற்றை இழந்திருந்தார்கள். நெல்மா நினைத்திருந்தால் அந்தப் பணத்தைப் பயன்படுத்தி தன் வீட்டையும் பழுதுபார்த்திருக்கலாம், தன் உறவினர்களுக்கும் உதவியிருக்கலாம். என்றாலும், பைபிளால் பயிற்றுவிக்கப்பட்டிருந்த நெல்மாவின் மனசாட்சி அதற்கு இடமளிக்கவில்லை.—எபிரெயர் 13:18.
அடுத்த நாள், சற்று முன்னதாகவே அவர் வேலைக்குச் சென்றார். துணிமணிகளை நன்கொடையாகக் கொடுத்திருந்த அந்தத் தொழிலதிபரைச் சந்தித்தார். துணிகளைத் தனக்குத் தந்ததற்காக நன்றி தெரிவித்த பிறகு, அதில் இருந்த பணத்தை தான் வைத்துக்கொள்ள விரும்பவில்லை என்று நெல்மா கூறினார். பணத்தைப் பெற்றுக்கொண்ட அந்தப் பெண்மணியின் சந்தோஷத்திற்கு அளவேயில்லை. தன்னுடைய பணியாட்களுக்குக் கொடுப்பதற்காக அவர் அந்தப் பணத்தை வைத்திருந்திருக்கிறார். “இப்படி நேர்மையாக இருப்பவர்களைப் பார்ப்பதே அபூர்வம்” என்றார் அவர்.
நேர்மையாக இருப்பதால் ஒரு பிரயோஜனமும் இல்லை என்று சிலர் நினைக்கலாம். ஆனால், உண்மைக் கடவுளாகிய யெகோவாவைச் சந்தோஷப்படுத்த முயலுவோர் நேர்மை என்ற குணத்தைப் பொக்கிஷமாகக் கருதுகிறார்கள். (எபேசியர் 4:25, 28) “பணத்தைத் திருப்பிக் கொடுத்திருக்காவிட்டால் எனக்குத் தூக்கமே வந்திருக்காது” என்றார் நெல்மா.