Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

இளைஞர்களே, உங்களுடைய முன்னேற்றம் எல்லாருக்கும் தெரியட்டும்

இளைஞர்களே, உங்களுடைய முன்னேற்றம் எல்லாருக்கும் தெரியட்டும்

இளைஞர்களே, உங்களுடைய முன்னேற்றம் எல்லாருக்கும் தெரியட்டும்

“இவற்றைக் குறித்து ஆழ்ந்து சிந்தித்துக்கொண்டிரு; இவற்றிலேயே மூழ்கியிரு; அப்போதுதான் உன்னுடைய முன்னேற்றம் எல்லாருக்கும் தெரியவரும்.”—1 தீ. 4:15.

1. இளைஞர்கள் எப்படி இருக்க வேண்டுமென்று கடவுள் விரும்புகிறார்?

 “வாலிபனே! உன் இளமையிலே சந்தோஷப்படு, உன் வாலிப நாட்களிலே உன் இருதயம் உன்னைப் பூரிப்பாக்கட்டும்.” (பிர. 11:9) பூர்வ இஸ்ரவேலில் ஞானவானாக விளங்கிய சாலொமோன் ராஜா எழுதிய வார்த்தைகளே இவை. இவற்றை எழுதும்படி தூண்டிய யெகோவா தேவன், இளைஞர்களாகிய நீங்கள் சந்தோஷமாக இருக்க வேண்டுமென்றே விரும்புகிறார். சொல்லப்போனால், இளமைக் காலத்தைக் கடந்த பின்பும் நீங்கள் சந்தோஷமாக இருக்க வேண்டுமென்று விரும்புகிறார். என்றாலும், இளமைப்பருவத்தில் இளைஞர்கள் தவறுகள் செய்வது சகஜம்; அது அவர்களுடைய எதிர்கால சந்தோஷத்தையே பறித்துவிடலாம். உண்மையுள்ளவராய் இருந்த யோபுவும்கூட ‘தன்னுடைய இளமைக் காலக் குற்றங்களால் வந்த விளைவுகளை’ குறித்து வருந்தினார். (யோபு 13:26, NW) பொதுவாக, டீன்ஏஜ் வயதிலும் அதைத் தொடர்ந்து வாலிப வயதிலும் ஒரு கிறிஸ்தவர் முக்கியமான தீர்மானங்களை எடுக்க வேண்டியுள்ளது. தவறான தீர்மானங்களை எடுப்பது, உணர்ச்சி ரீதியில் நீங்காத வடுக்களை ஏற்படுத்துவதோடு பிற்கால வாழ்க்கையைப் பாதிக்கும் பிரச்சினைகளை உருவாக்கலாம்.—பிர. 11:10.

2. இளைஞர்கள் பெரிய தவறுகளைச் செய்யாதிருக்க பைபிளிலுள்ள எந்த அறிவுரையைக் கடைப்பிடிக்கலாம்?

2 இளைஞர்கள் விவேகத்தோடு நடந்துகொள்வது அவசியம். கொரிந்தியர்களுக்கு அப்போஸ்தலன் பவுல் கொடுத்த அறிவுரையைச் சிந்தித்துப் பாருங்கள். ‘புரிந்துகொள்ளும் திறனைப் பொறுத்ததில் சிறுபிள்ளைகளாக இல்லாமல் முதிர்ச்சி அடைந்தவர்களாக இருங்கள்’ என்று அவர் எழுதினார். (1 கொ. 14:20) இளைஞர்கள் இந்த அறிவுரைக்குச் செவிசாய்த்து, முதிர்ச்சி அடைந்த ஒருவரைப் போல சிந்திக்கவும் பகுத்துணரவும் கற்றுக்கொண்டால் பெரிய தவறுகளைச் செய்யாதிருக்கலாம்.

3. முதிர்ச்சி அடைவதற்கு நீங்கள் என்ன செய்யலாம்?

3 நீங்கள் ஓர் இளைஞராக இருந்தால், முதிர்ச்சி அடைவதற்கு முயற்சி தேவை என்பதை நினைவில் கொள்ளுங்கள். தீமோத்தேயுவுக்குப் பவுல் இவ்வாறு எழுதினார்: “எந்த மனிதனும் உன் இளமையைக் கண்டு உன்னை அற்பமாகக் கருதாதிருக்கட்டும்; பேச்சிலும் நடத்தையிலும் அன்பிலும் விசுவாசத்திலும் ஒழுக்கத்திலும் உண்மையுள்ளவர்களுக்கு நீ முன்மாதிரியாக விளங்கு. . . . சபையார்முன் வாசிப்பதிலும் அவர்களுக்கு அறிவுரை வழங்குவதிலும் கற்பிப்பதிலும் முழுமூச்சுடன் ஈடுபட்டுக்கொண்டிரு. . . . இவற்றைக் குறித்து ஆழ்ந்து சிந்தித்துக்கொண்டிரு; இவற்றிலேயே மூழ்கியிரு; அப்போதுதான் உன்னுடைய முன்னேற்றம் எல்லாருக்கும் தெரியவரும்.” (1 தீ. 4:12-15) கிறிஸ்தவ இளைஞர்கள் முன்னேற்றம் செய்வதும் அவர்களுடைய முன்னேற்றம் மற்றவர்களுக்குத் தெரியுமளவுக்கு இருப்பதும் அவசியம்.

முன்னேற்றம் என்றால் என்ன?

4. ஆன்மீக ரீதியில் முன்னேறுவதற்கு என்னவெல்லாம் செய்ய வேண்டும்?

4 முன்னேற்றம் என்பது வளர்ச்சி அடைவதை அல்லது மேம்படுவதைக் குறிக்கிறது. பேச்சிலும் நடத்தையிலும் அன்பிலும் விசுவாசத்திலும் ஒழுக்கத்திலும் ஊழியத்தை நிறைவேற்றும் விதத்திலும் முன்னேறுவதற்கு முழுமூச்சுடன் உழைக்கும்படி தீமோத்தேயுவுக்குப் பவுல் அறிவுறுத்தினார். தீமோத்தேயு மற்றவர்களுக்கு முன்மாதிரியாக வாழப் பாடுபட வேண்டியிருந்தது. ஆகவே, ஆன்மீக ரீதியில் அவர் தொடர்ந்து முன்னேற வேண்டியிருந்தது.

5, 6. (அ) தீமோத்தேயு எப்போதிலிருந்து மற்றவர்களுக்குத் தெரியுமளவுக்கு முன்னேற்றம் செய்ய ஆரம்பித்தார்? (ஆ) முன்னேற்றம் செய்வதில் இன்றைய இளைஞர்கள் எப்படித் தீமோத்தேயுவைப் பின்பற்றலாம்?

5 பவுல் இந்த அறிவுரையை பொ.ச. 61-க்கும் 64-க்கும் இடைப்பட்ட ஒரு சமயத்தில் எழுதினார்; அப்போது தீமோத்தேயு ஆன்மீக முன்னேற்றம் செய்ய ஆரம்பித்தவராக இருக்கவில்லை, ஏற்கெனவே முன்னேற்றம் செய்திருந்த அனுபவமுள்ள ஒரு மூப்பராக இருந்தார். பொ.ச. 49 அல்லது 50-ல், சுமார் 17-22 வயதுள்ளவராக இருந்த தீமோத்தேயு, ‘லீஸ்திராவிலும் இக்கோனியாவிலும் இருந்த சகோதரர்களால் உயர்வாகப் பேசப்பட்டார்’; அவருடைய ஆன்மீக முன்னேற்றத்தை அவர்கள் கவனித்திருந்தார்கள். (அப். 16:1-5) அந்தச் சமயத்தில், பவுல் தன்னுடைய மிஷனரி பயணத்திற்குத் துணையாகத் தீமோத்தேயுவைக் கூட்டிக்கொண்டுச் சென்றார். தீமோத்தேயு தொடர்ந்து முன்னேற்றம் செய்ததைச் சில மாதங்களாகக் கவனித்த பவுல், தெசலோனிக்கேயாவில் இருந்த கிறிஸ்தவர்களை ஆறுதல்படுத்தவும் பலப்படுத்தவும் அவரை அங்கே அனுப்பினார். (1 தெசலோனிக்கேயர் 3:1-3, 6-ஐ வாசியுங்கள்.) தீமோத்தேயு இளம் வயதிலேயே மற்றவர்களுக்குத் தெரியுமளவுக்கு முன்னேற்றம் செய்ய ஆரம்பித்தார் என்பது இதிலிருந்து தெளிவாகிறது, அல்லவா?

6 சபையிலுள்ள இளைஞராகிய நீங்கள், தேவையான ஆன்மீகக் குணங்களை இப்போதே வளர்த்துக்கொள்ள உழைக்க வேண்டும்; அப்போதுதான் கிறிஸ்தவ வாழ்க்கையிலும் பைபிள் சத்தியங்களைப் போதிக்கும் திறனிலும் நீங்கள் செய்கிற முன்னேற்றம் மற்றவர்களுக்குப் பளிச்செனத் தெரியும். இயேசு, 12 வயதிலிருந்தே ‘ஞானத்தில் பெருகி வந்தார்.’ (லூக். 2:52) அப்படியானால், வாழ்க்கையின் இந்த மூன்று அம்சங்களில் உங்கள் முன்னேற்றத்தை எப்படி விளங்கச் செய்யலாம் என்பதைக் கவனியுங்கள்: (1) பிரச்சினைகளைச் சந்திக்கையில், (2) மணவாழ்வுக்குத் தயாராகையில், (3) ‘சிறந்த ஊழியக்காரராவதற்கு’ பாடுபடுகையில்.—1 தீ. 4:6.

‘தெளிந்த புத்தியோடு’ பிரச்சினைகளைச் சந்தியுங்கள்

7. இளைஞர்கள் எப்படிப் பிரச்சினைகளால் பாதிக்கப்படலாம்?

7 கேரல் * என்ற 17 வயது கிறிஸ்தவ இளைஞி இவ்வாறு சொன்னாள்: “நான் சில சமயங்களில், உணர்ச்சி ரீதியிலும் உடல் ரீதியிலும் மன ரீதியிலும் ரொம்பவே ஓய்ந்துபோனதுண்டு. அப்போதெல்லாம், காலையில் எழுந்திருக்கக்கூடப் பிடிக்காது.” அவள் ஏன் அந்தளவுக்கு நொந்துபோயிருந்தாள்? அவளுக்குப் பத்து வயது இருந்தபோது, அவளுடைய பெற்றோர் விவாகரத்து செய்துகொண்டதால் குடும்பமே சின்னாபின்னமானது. அவள் தன்னுடைய அம்மாவோடு வாழ வேண்டியதாயிற்று. அவளுடைய அம்மாவோ பைபிளிலுள்ள ஒழுக்க நெறிகளின்படி வாழவில்லை. கேரலைப் போல நீங்களும் மீளமுடியாத சோகத்தில் சிக்கித் தவித்துக்கொண்டிருக்கலாம்.

8. தீமோத்தேயு என்ன பிரச்சினைகளோடு போராடினார்?

8 தீமோத்தேயும்கூட ஆன்மீக முன்னேற்றம் செய்தபோது சில பிரச்சினைகளோடு போராடினார். உதாரணத்திற்கு, வயிற்றுக் கோளாறு காரணமாக அவருக்கு ‘அடிக்கடி உடல்நலக் குறைவு’ ஏற்பட்டது. (1 தீ. 5:23) அதுமட்டுமல்ல, அவர் கூச்ச சுபாவமுடையவராகவும் இருந்தார். இது எப்படி நமக்குத் தெரியும்? பவுலை ஓர் அப்போஸ்தலனாக ஏற்க மறுத்தவர்களால் ஏற்பட்ட பிரச்சினைகளைச் சரிசெய்ய தீமோத்தேயுவைப் பவுல் கொரிந்து சபைக்கு அனுப்பினார். அந்தச் சபையாரைப் பவுல் அறிவுறுத்தி, தீமோத்தேயுவோடு ஒத்துழைக்குமாறும், அவர்கள் மத்தியில் அவர் “பயமில்லாமல் இருக்கும்படி” பார்த்துக்கொள்ளுமாறும் சொன்னார். (1 கொ. 4:17; 16:10, 11) ஆகவே, தீமோத்தேயு கூச்ச சுபாவத்தோடும் போராட வேண்டியிருந்ததைத் தெரிந்துகொள்கிறோம்.

9. தெளிந்த புத்தி என்றால் என்ன, இது கோழைத்தனத்திலிருந்து எவ்வாறு வேறுபடுகிறது?

9 தீமோத்தேயுவுக்கு உதவ, பிற்பாடு பவுல் இவ்வாறு அவருக்கு நினைப்பூட்டினார்: “கடவுள் அருளும் சக்தி நமக்குக் கோழைத்தனத்தை அல்ல, வல்லமையையும் அன்பையும் தெளிந்த புத்தியையுமே கொடுக்கிறது.” (2 தீ. 1:7) “தெளிந்த புத்தி” என்பது புத்திசாலித்தனமாகச் சிந்திப்பதையும் பகுத்தறிவதையும் குறிக்கிறது. நீங்கள் விரும்புகிறபடிதான் எல்லாம் நடக்க வேண்டுமென எதிர்பார்க்காமல் விரும்பாத சூழ்நிலையைக்கூட சகித்துக்கொள்கிற மனப்பக்குவமும் இதில் உட்பட்டிருக்கிறது. முதிர்ச்சியில்லாத சில இளைஞர்கள் கஷ்டமான சூழ்நிலையிலிருந்து தப்பிக்க கோழைத்தனமாக நடந்துகொள்கிறார்கள்; எப்படியெனில், அளவுக்குமீறி தூங்குகிறார்கள், சதா டிவி பார்க்கிறார்கள், போதைப்பொருளுக்கோ மதுபானத்திற்கோ அடிமையாகிறார்கள், பார்ட்டியே கதியென்று கிடக்கிறார்கள், அல்லது ஒழுக்கக்கேட்டில் ஈடுபடுகிறார்கள். எனவே, ‘தேவபக்தியற்ற நடத்தையையும் உலக ஆசைகளையும் விட்டொழித்து தெளிந்த புத்தியுள்ளவர்களாக, நீதியுள்ளவர்களாக, தேவபக்தியுள்ளவர்களாக இந்த உலகத்தில் வாழும்படி’ கிறிஸ்தவர்களுக்கு அறிவுரை வழங்கப்படுகிறது.—தீத். 2:12.

10, 11. பலத்திற்காகக் கடவுளை நம்பியிருக்கத் தெளிந்த புத்தி எவ்வாறு நமக்கு உதவுகிறது?

10 ‘இளம் ஆண்கள் தெளிந்த புத்தியுள்ளவர்களாக இருக்க வேண்டும்’ என பைபிள் ஆலோசனை கொடுக்கிறது. (தீத். 2:6) இந்த ஆலோசனைக்குச் செவிகொடுப்பது, பிரச்சினைகளைச் சந்திக்கையில் ஜெபம் செய்வதையும் பலத்திற்காகக் கடவுளைச் சார்ந்திருப்பதையும் அர்த்தப்படுத்துகிறது. (1 பேதுரு 4:7-ஐ வாசியுங்கள்.) இப்படிச் செய்கையில், ‘கடவுள் அருளுகிற பலத்தில்’ இதயப்பூர்வமான நம்பிக்கையை வளர்த்துக்கொள்வீர்கள்.—1 பே. 4:11.

11 தெளிந்த புத்தியும் ஜெபமும்தான் கேரலுக்குக் கைகொடுத்தன. “எனக்கு ரொம்பவே கஷ்டமாக இருந்த ஒன்று, அம்மாவுடைய மோசமான நடத்தையை எதிர்த்து நிற்பதுதான். ஆனால், ஜெபம் எனக்குப் பேருதவியாக இருந்தது. யெகோவா என்னோடு இருக்கிறார் என்று இப்போது எனக்குத் தெரியும், அதனால் நான் பயப்படுவதே இல்லை” என்று அவள் கூறினாள். பிரச்சினைகள் உங்களைச் செதுக்கிச் சீராக்கிப் பலப்படுத்தலாம் என்பதை மறந்துவிடாதீர்கள். (சங். 105:17-19; புல. 3:27) எப்பேர்ப்பட்ட சூழ்நிலையிலும், கடவுள் உங்களைக் கைவிடவே மாட்டார். அவர் நிஜமாகவே ‘உங்களுக்குச் சகாயம்பண்ணுவார்.’—ஏசா. 41:10.

வெற்றிகரமான மணவாழ்வுக்குத் தயாராதல்

12. திருமணம் செய்ய நினைக்கும் ஒரு கிறிஸ்தவர் நீதிமொழிகள் 20:25-ல் உள்ள நியமத்தைக் கடைப்பிடிப்பது ஏன் முக்கியம்?

12 இளைஞர்கள் சிலர் அவசரப்பட்டுத் திருமணம் செய்துகொள்கிறார்கள்; சோகத்துக்கும், தனிமைக்கும், சலிப்புக்கும், வீட்டுப் பிரச்சினைக்கும் அதுதான் பரிகாரமென நினைத்துக்கொள்கிறார்கள். ஆனால், திருமண உறுதிமொழிகளை எடுப்பது சாதாரண விஷயமல்ல. பைபிள் காலங்களில் சிலர் கவனமாக யோசிக்காமல், அவசரப்பட்டுக் கடவுளிடம் உறுதிமொழி (பொருத்தனை) செய்தார்கள். (நீதிமொழிகள் 20:25-ஐ வாசியுங்கள்.) இன்றும் சில இளைஞர்கள் மணவாழ்வில் தங்களுக்கு எந்தளவு பொறுப்புகள் உள்ளன என்று கவனமாகச் சிந்தித்துப் பார்ப்பதில்லை. அவர்கள் எதிர்பார்த்திராத பல சவால்கள் மணவாழ்வில் இருப்பதை மணமுடித்த பிறகுதான் புரிந்துகொள்கிறார்கள்.

13. திருமணம் செய்யும் நோக்கத்துடன் ஒருவரோடு பழக நினைப்பவர்கள் என்ன கேள்விகளைக் கேட்டுக்கொள்ள வேண்டும், பயனுள்ள அறிவுரைகளை அவர்கள் எங்கிருந்து பெறலாம்?

13 ஆகவே, திருமணம் செய்யும் நோக்கத்துடன் ஒருவரோடு பழகுவதற்குமுன் உங்களையே இவ்வாறு கேட்டுக்கொள்ளுங்கள்: ‘நான் ஏன் கல்யாணம் செய்துகொள்ள ஆசைப்படுகிறேன்? என்னுடைய எதிர்பார்ப்புகள் என்ன? அவர்/ள் எனக்கு ஏற்ற ஜோடியா? கணவனாக/மனைவியாக என் பொறுப்புகளை நிறைவேற்றத் தயாராய் இருக்கிறேனா?’ நீங்கள் கவனமாகச் சிந்தித்துப் பார்ப்பதற்காக “உண்மையும் விவேகமும் உள்ள அடிமை” இது சம்பந்தமாக விலாவாரியான கட்டுரைகளை வெளியிட்டுள்ளது. * (மத். 24:45-47) அவற்றை யெகோவா உங்களுக்குக் கொடுக்கும் அறிவுரையாக ஏற்றுக்கொள்ளுங்கள். அவற்றிலுள்ள விஷயங்களைச் சீர்தூக்கிப் பார்த்து வாழ்க்கையில் கடைப்பிடியுங்கள். “புத்தியில்லாக் குதிரையைப்போலவும் கோவேறு கழுதையைப்போலவும் இருக்க” ஒருபோதும் உங்களை அனுமதிக்காதீர்கள். (சங். 32:8, 9) மணவாழ்வில் உட்பட்டுள்ள பொறுப்புகளைப் புரிந்துகொள்வதில் முதிர்ச்சி அடைந்தவராகுங்கள். திருமணம் செய்துகொள்ளும் நோக்கத்தோடு ஒருவருடன் பழகுவதற்கு நீங்கள் தயாரென்றால், ‘ஒழுக்கத்தில் முன்மாதிரியாக விளங்க’ வேண்டுமென்பதை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள்.—1 தீ. 4:12.

14. ஆன்மீக முதிர்ச்சி நீங்கள் மணமுடித்த பிறகும் உங்களுக்கு எப்படி உதவும்?

14 திருமணத்திற்குப் பிறகும் வெற்றிகாண ஆன்மீக முதிர்ச்சி கைகொடுக்கிறது. முதிர்ச்சி அடைந்த ஒரு கிறிஸ்தவர், ‘கிறிஸ்து எந்தளவுக்கு முதிர்ச்சி நிறைந்தவராக இருக்கிறாரோ அந்தளவுக்கு முழு வளர்ச்சி அடைவதற்கு’ முயலுவார். (எபே. 4:11-14) கிறிஸ்துவைப் போன்ற சுபாவத்தை வளர்த்துக்கொள்ள அரும்பாடுபடுவார். நமக்கு முன்மாதிரியாக இருக்கிற ‘கிறிஸ்து தமக்கே பிரியமாக நடக்கவில்லை.’ (ரோ. 15:3) ஆகவே, தம்பதியர் இருவருமே, தங்களுக்குப் பிரயோஜனமானதை நாடாமல், மற்றவருக்குப் பிரயோஜனமானதை நாடும்போது குடும்ப வாழ்க்கையில் சமாதானமும் ஐக்கியமும் செழித்தோங்கும். (1 கொ. 10:24) கணவர் சுயதியாக அன்பைக் காட்டுவார்; இயேசு தம் தலைவருக்குக் கீழ்ப்பட்டிருப்பது போல் மனைவியும் தன் கணவருக்குக் கீழ்ப்பட்டிருக்கத் தீர்மானமாய் இருப்பாள்.—1 கொ. 11:3; எபே. 5:25.

‘உங்கள் ஊழியத்தை முழுமையாக நிறைவேற்றுங்கள்’

15, 16. ஊழியத்தில் நீங்கள் எப்படி மற்றவர்களுக்குத் தெரியுமளவுக்கு முன்னேற்றம் செய்யலாம்?

15 தீமோத்தேயுவுக்குக் கொடுக்கப்பட்டிருந்த வேலை எவ்வளவு முக்கியமானது என்பதைப் பவுல் வலியுறுத்தி, ‘கடவுளுடைய முன்னிலையிலும் கிறிஸ்து இயேசுவின் முன்னிலையிலும் நான் உனக்கு ஆணையிடுகிறேன். . . . அவசர உணர்வுடன் பிரசங்கி’ என்று எழுதினார். அதோடு, “நற்செய்தியாளரின் வேலையைச் செய், உன் ஊழியத்தை முழுமையாக நிறைவேற்று” என்றும் எழுதினார். (2 தீ. 4:1, 2, 5) தீமோத்தேயு இந்த வேலையை நிறைவேற்றுவதற்கு, ‘விசுவாசத்திற்குரிய வார்த்தைகளால் ஊட்டம் பெற்றவராக’ இருக்க வேண்டியிருந்தது.1 தீமோத்தேயு 4:6-ஐ வாசியுங்கள்.

16 நீங்கள் எவ்வாறு ‘விசுவாசத்திற்குரிய வார்த்தைகளால் ஊட்டம் பெற’ முடியும்? தீமோத்தேயுவுக்குப் பவுல் இவ்வாறு எழுதினார்: “சபையார்முன் வாசிப்பதிலும் அவர்களுக்கு அறிவுரை வழங்குவதிலும் கற்பிப்பதிலும் முழுமூச்சுடன் ஈடுபட்டுக்கொண்டிரு. இவற்றைக் குறித்து ஆழ்ந்து சிந்தித்துக்கொண்டிரு; இவற்றிலேயே மூழ்கியிரு.” (1 தீ. 4:13, 15) அப்படியானால், முன்னேறுவதற்கு ஊக்கமாகப் படிப்பது அவசியம். “மூழ்கியிரு” என்ற வார்த்தை ஒரு செயலில் ஆழ்ந்துவிடுவதைக் குறிக்கிறது. உங்களுடைய படிப்புப் பழக்கம் எப்படிப்பட்டதாய் இருக்கிறது? ‘கடவுளுடைய ஆழமான காரியங்களில்’ மூழ்கிவிடுகிறீர்களா? (1 கொ. 2:10) அல்லது, கடமைக்கென்று படிக்கிறீர்களா? படிக்கிற விஷயங்களை ஆழ்ந்து சிந்திப்பது உங்களைச் செயல்படத் தூண்டும்.நீதிமொழிகள் 2:1-5-ஐ வாசியுங்கள்.

17, 18. (அ) என்னென்ன திறன்களை வளர்த்துக்கொள்ள நீங்கள் முயல வேண்டும்? (ஆ) தீமோத்தேயு காட்டிய அதே மனப்பான்மையைக் காட்டுவது ஊழியத்தில் உங்களுக்கு எப்படி உதவும்?

17 மிஷல் என்ற ஓர் இளம் பயனியர் இவ்வாறு சொன்னாள்: “ஊழியத்தைத் திறம்படச் செய்வதற்காக, நல்ல அட்டவணைபோட்டு படிக்கிறேன், கூட்டங்களுக்குத் தவறாமல் செல்கிறேன். இதனால், ஆன்மீக ரீதியில் நான் எப்போதும் முன்னேறிக்கொண்டே இருக்கிறேன்.” பயனியர் சேவை, பைபிளைத் திறமையாகப் பயன்படுத்துவதற்கும் ஆன்மீக முன்னேற்றம் செய்வதற்குமான திறன்களை வளர்த்துக்கொள்ள உதவுகிறது. கூட்டங்களில் பயனுள்ள குறிப்புகளைச் சொல்வதற்கும் நன்கு வாசிப்பதற்கும் முயற்சி எடுங்கள். ஆன்மீக முதிர்ச்சி பெற்ற ஓர் இளைஞராக, தேவராஜ்ய ஊழியப்பள்ளியில் மற்றவர்களுக்குப் பிரயோஜனமான விதத்தில் மாணாக்கர் பேச்சுகளைக் கொடுங்கள்; பேச்சுக்காக நியமிக்கப்பட்டுள்ள தகவலை மட்டுமே பயன்படுத்துங்கள்.

18 ‘நற்செய்தியாளரின் வேலையைச் செய்வது’ ஊழியத்தை இன்னும் திறம்படச் செய்வதையும் மற்றவர்கள் மீட்படைவதற்கு உதவுவதையும் குறிக்கிறது. இதற்கு, ‘கற்பிக்கும் கலையை’ வளர்த்துக்கொள்வது அவசியம். (2 தீ. 4:2) அனுபவமுள்ளவர்களோடு சேர்ந்து ஊழியத்தில் கலந்துகொள்ளும்போது, கற்பிப்பதற்கு அவர்கள் பயன்படுத்துகிற முறைகளை நீங்கள் கற்றுக்கொள்ள முடியும்; தீமோத்தேயுவும்கூட பவுலிடம் அவற்றைக் கற்றுக்கொண்டார். (1 கொ. 4:17) பவுலிடம் சத்தியத்தைக் கற்றுக்கொண்டவர்கள் அவரது அன்புக்குரியவர்களாக ஆகியிருந்தார்கள்; ஆகவே, அவர்களுக்கு நற்செய்தியை அறிவித்ததோடு, தன் ‘உயிரையே கொடுக்க,’ அதாவது தன் வாழ்க்கையையே அர்ப்பணிக்க, ஆவலாய் இருந்ததாக அவர் சொன்னார். (1 தெ. 2:8) நீங்கள் ஊழியத்தில் பவுலின் முன்மாதிரியைப் பின்பற்றுவதற்கு, தீமோத்தேயு காட்டிய அதே மனப்பான்மையைக் காட்ட வேண்டும்; அவர் மற்றவர்கள்மீது உள்ளப்பூர்வமான அக்கறையைக் காட்டினார், ‘நற்செய்தியை அறிவிப்பதில் கடினமாக உழைத்தார்.’ (பிலிப்பியர் 2:19-23-ஐ வாசியுங்கள்.) ஊழியத்தில் நீங்கள் இதே சுயதியாக மனப்பான்மையைக் காட்டுகிறீர்களா?

முன்னேற்றத்தால் கிடைக்கும் நிஜ திருப்தி

19, 20. ஆன்மீக முன்னேற்றம் செய்வது ஏன் மகிழ்ச்சி தருகிறது?

19 ஆன்மீக முன்னேற்றம் செய்வதற்கு முயற்சி தேவை. உங்களுடைய கற்பிக்கும் திறன்களைப் பொறுமையோடு வளர்த்துக்கொள்வதன் மூலம், ஆன்மீக ரீதியில் ‘அநேகரைச் செல்வந்தராக்கும்’ பாக்கியத்தைக் காலப்போக்கில் நீங்கள் பெறுவீர்கள்; அவர்கள் உங்களுக்கு “சந்தோஷமாகவும் பெருமைக்குரிய கிரீடமாகவும்” ஆவார்கள். (2 கொ. 6:10; 1 தெ. 2:19) முழுநேர ஊழியரான ஃப்ரெட் இவ்வாறு சொன்னார்: “மற்றவர்களுக்கு உதவுவதற்காக முன்னொருபோதும் இல்லாதளவுக்கு இப்போது நேரத்தைச் செலவிடுகிறேன். வாங்குவதைவிட கொடுப்பதில் அதிக சந்தோஷம் உள்ளது என்பது நூற்றுக்கு நூறு உண்மை.”

20 ஆன்மீக முன்னேற்றம் செய்வதால் கிடைக்கும் மகிழ்ச்சியையும் திருப்தியையும் குறித்து இளம் பயனியரான டாஃப்னி இவ்வாறு சொன்னாள்: “யெகோவாவைப் பற்றி நான் அதிகமதிகமாகத் தெரிந்துகொண்டபோது அவருடன் மிக நெருக்கமான பந்தத்தை வளர்த்துக்கொண்டேன். நம்மால் எந்தளவுக்கு முடியுமோ அந்தளவுக்கு யெகோவாவைப் பிரியப்படுத்தும்போது மனநிறைவும் ஆத்ம திருப்தியும் கிடைக்கிறது.” நீங்கள் ஆன்மீக முன்னேற்றம் செய்வதை மற்றவர்கள் எப்போதும் கவனிக்காவிட்டாலும் யெகோவா அதை எப்போதும் கவனிக்கிறார், உயர்வாகக் கருதுகிறார். (எபி. 4:13) அப்படியானால், இளம் கிறிஸ்தவர்களாகிய உங்களால் நம்முடைய பரலோகத் தகப்பனுக்கு மகிமையையும் புகழையும் சேர்க்க முடியும் என்பதில் சந்தேகமில்லை. மற்றவர்களுக்குத் தெரியுமளவுக்கு நீங்கள் முன்னேற்றம் செய்து, தொடர்ந்து அவருடைய இருதயத்தைச் சந்தோஷப்படுத்துங்கள்.—நீதி. 27:11.

[அடிக்குறிப்புகள்]

^ பாரா. 7 இக்கட்டுரையில் சில பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.

^ பாரா. 13 மே 2007 விழித்தெழு! இதழில், இளைஞர் கேட்கின்றனர் . . . இவர் எனக்குப் பொருத்தமானவரா?; மே 15, 2001 காவற்கோபுரம் இதழில், “துணையை தேர்ந்தெடுப்பதில் கடவுளுடைய வழிநடத்துதல்”; இளைஞர் கேட்கும் கேள்விகள்—பலன்தரும் விடைகள் புத்தகத்தில், “நான் விவாகத்துக்குத் தயாரா?”

என்ன கற்றுக்கொண்டீர்கள்?

• ஆன்மீக முன்னேற்றத்தில் என்ன உட்பட்டிருக்கிறது?

• மற்றவர்களுக்குத் தெரியுமளவுக்கு நீங்கள் எப்படி இந்த அம்சங்களில் முன்னேற்றம் செய்யலாம்:

பிரச்சினைகளைச் சந்திக்கையில்?

திருமணத்திற்குத் தயாராகையில்?

ஊழியத்தில்?

[கேள்விகள்]

[பக்கம் 15-ன் படம்]

பிரச்சினைகளைச் சமாளிக்க ஜெபம் உங்களுக்கு உதவும்

[பக்கம் 16-ன் படம்]

இளம் கிறிஸ்தவர்கள் எவ்வாறு கற்பிக்கும் முறைகளைத் திறம்படக் கற்றுக்கொள்ளலாம்?