Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

ஈத்தாயின் பற்றுறுதியைப் பின்பற்றுங்கள்

ஈத்தாயின் பற்றுறுதியைப் பின்பற்றுங்கள்

ஈத்தாயின் பற்றுறுதியைப் பின்பற்றுங்கள்

“சர்வ வல்லமையுள்ள கடவுளாகிய யெகோவாவே, உங்களுடைய செயல்கள் மகத்தானவை, அற்புதமானவை. நித்திய ராஜாவே, உங்களுடைய வழிகள் நீதியானவை, உண்மையானவை. யெகோவாவே, யார் உங்களுக்குப் பயந்து உங்களுடைய பெயரை மகிமைப்படுத்தாமல் இருப்பார்கள்? நீங்கள் ஒருவரே பற்றுமாறாதவர்.” இந்தப் பாட்டு, ‘மூர்க்க மிருகத்தின் மீதும் அதன் உருவத்தின் மீதும் . . . வெற்றி பெற்றவர்களால்’ பரலோகத்தில் பாடப்பட்டது; இது, கடவுள் காட்டுகிற பற்றுறுதியிடம் நம் கவனத்தைத் திருப்புகிறது. (வெளி. 15:2-4) தம்முடைய வணக்கத்தாரும் இந்த அருமையான குணத்தைக் காட்ட வேண்டுமென யெகோவா விரும்புகிறார்.—எபே. 4:24.

பிசாசாகிய சாத்தானோ, பூமியிலுள்ள கடவுளுடைய ஊழியர்களை அவருடைய அன்பைவிட்டுப் பிரிப்பதற்காகத் தன்னாலான அனைத்தையும் செய்கிறான். இருந்தாலும், அநேகர் மிகக் கடுமையான சூழ்நிலையிலும் கடவுளிடம் தொடர்ந்து பற்றுறுதியைக் காட்டியிருக்கிறார்கள். அவ்வாறு பற்றுறுதி காட்டுவதை யெகோவா உயர்வாய் மதிப்பதால் நாம் எவ்வளவு நன்றியுள்ளவர்களாய் இருக்கலாம்! உண்மையில், “கர்த்தர் நியாயத்தை விரும்புகிறவர்; அவர் தமது பரிசுத்தவான்களைக் [“தம்மீது பற்றுறுதியுள்ளவர்களை,” NW] கைவிடுவதில்லை” என்ற உறுதி நமக்கு அளிக்கப்படுகிறது. (சங். 37:28) பற்றுறுதியுடன் நிலைத்திருக்க நமக்கு உதவுவதற்காக, பற்றுறுதியுடன் நடந்துகொண்ட அநேகரைப் பற்றி அவர் பைபிளில் பதிவுசெய்து வைத்திருக்கிறார். அவர்களில் ஒருவர்தான் கித்தியனாகிய ஈத்தாய்.

‘அந்நிய தேசத்தான்’

ஈத்தாய், பெலிஸ்தரின் புகழ்பெற்ற காத் பட்டணத்தைச் சேர்ந்தவராய் இருந்திருக்க வேண்டும்; இராட்சதனாகிய கோலியாத்தும் இஸ்ரவேலரின் மற்ற பயங்கரமான எதிரிகளும்கூட அந்தப் பட்டணத்தைச் சேர்ந்தவர்களே. தாவீது ராஜாவுக்கு எதிராக அப்சலோம் கலகம் செய்த சந்தர்ப்பத்தைப் பற்றிய பதிவில்தான் வீரதீரமிக்க ஈத்தாயைக் குறித்து பைபிள் முதன்முறையாகச் சொல்கிறது. நாடுகடத்தப்பட்ட ஈத்தாயும் அவருடைய ஆட்களான 600 பெலிஸ்தரும் அப்போது எருசலேமுக்கு அருகே வாழ்ந்து வந்தார்கள்.

தாவீது இவர்களுடைய நிலைமையைக் கண்டபோது, தான் நாடோடியாய் இருந்த சமயத்தை நினைத்துப் பார்த்திருக்கலாம்; அந்தச் சமயத்தில் அவர் தன் 600 இஸ்ரவேலப் படைவீரர்களுடன் பெலிஸ்தருடைய பிராந்தியத்திற்கு, அதாவது காத் பட்டணத்து ராஜாவாகிய ஆகீசின் பிராந்தியத்திற்கு, சென்று தங்கினார். (1 சா. 27:2, 3) தாவீதின் மகனான அப்சலோம் அவருக்கு எதிராகக் கலகம் செய்தபோது ஈத்தாயும் அவருடைய ஆட்களும் என்ன செய்தார்கள்? அவர்கள் அப்சலோமின் பக்கம் சேர்ந்துகொண்டார்களா, நடுநிலை காத்தார்களா, அல்லது தாவீதோடும் அவருடைய ஆட்களோடும் சேர்ந்துகொண்டார்களா?

தாவீது எருசலேமிலிருந்து தப்பியோடி பெத்மெர்ஹாக் (“தொலைவிலுள்ள வீடு” என்று அர்த்தம்) என்ற இடத்திற்கு வருவதைக் கற்பனை செய்து பாருங்கள். அது ஒருவேளை எருசலேமின் கடைசி வீடாக, அதாவது கீதரோன் பள்ளத்தாக்குக்குச் சற்று முன் ஒலிவ மலையின் திசையில் அமைந்துள்ள கடைசி வீடாக, இருக்கலாம். (2 சா. 15:17, NW அடிக்குறிப்பு) அந்த இடத்தில் தாவீது தன்னுடைய படைவீரர்களைப் பார்வையிடுகிறார். பற்றுறுதியுள்ள இஸ்ரவேலர்கள் மட்டுமல்ல, கிரேத்தியர் எல்லாரும், பிலேத்தியர் எல்லாரும் அவருடன் இருக்கிறார்கள். அதுமட்டுமா, கித்தியர் எல்லாரும், அதாவது ஈத்தாயும் அவருடைய 600 படைவீரர்களும், அவருடன் இருக்கிறார்கள்.—2 சா. 15:18.

தாவீது இதயப்பூர்வமான அனுதாபத்தோடு ஈத்தாயிடம், “நீ எங்களுடனேகூட வருவானேன்? நீ திரும்பிப்போய், ராஜாவுடனேகூட [பெரும்பாலும், அப்சலோமுடனே] இரு; நீ அந்நிய தேசத்தான்; நீ உன் இடத்திற்குத் திரும்பிப் போகலாம். நீ நேற்றுதானே வந்தாய்; இன்று நான் உன்னை எங்களோடே நடந்துவரும்படிக்கு அழைத்துக்கொண்டு போகலாமா? நான் போகக்கூடிய இடத்திற்குப் போகிறேன்; நீ உன் சகோதரரையும் அழைத்துக்கொண்டு திரும்பிப்போ; கிருபையும் உண்மையும் உன்னோடே இருப்பதாக” என்று சொல்கிறார்.—2 சா. 15:19, 20.

அதற்கு ஈத்தாய் சொல்லும் இந்தப் பதில் அவருக்கு இருக்கும் அசைக்க முடியாத பற்றுறுதியை வெளிக்காட்டுகிறது: “ராஜாவாகிய என் ஆண்டவன் எங்கேயிருப்பாரோ, அங்கே உமது அடியானும், செத்தாலும் பிழைத்தாலும், இருப்பான் என்று கர்த்தருடைய ஜீவனையும் ராஜாவாகிய என் ஆண்டவனுடைய ஜீவனையும் கொண்டு சொல்லுகிறேன்.” (2 சா. 15:21) இதைக் கேட்டதும் தாவீது தன்னுடைய கொள்ளுப்பாட்டியான ரூத் சொன்ன வார்த்தைகளை நினைத்திருக்கலாம். (ரூத் 1:16, 17) உடனே அவர் நெகிழ்ந்துபோகிறார். ஆகவே, ஈத்தாயிடம் கீதரோன் பள்ளத்தாக்கைக் கடந்து “நடந்துவா” என்கிறார்; ‘அப்படியே கித்தியனாகிய ஈத்தாயும் அவருடைய எல்லா மனுஷரும் அவரோடிருக்கிற எல்லாப் பிள்ளைகளும் நடந்துபோகிறார்கள்.’—2 சா. 15:22.

“நம்முடைய அறிவுரைக்காகவே”

“முற்காலத்தில் எழுதப்பட்ட அனைத்தும் நம்முடைய அறிவுரைக்காகவே எழுதப்பட்டன” என ரோமர் 15:4 குறிப்பிடுகிறது. ஆகவே, ஈத்தாயின் உதாரணத்திலிருந்து நாம் என்ன பாடங்களைக் கற்றுக்கொள்ளலாம் என நம்மையே கேட்டுக்கொள்வது நல்லது. தாவீதிடம் பற்றுறுதியாய் இருக்க அவரை எது தூண்டியிருக்கலாம் என்பதைக் கவனியுங்கள். பெலிஸ்தனாகிய ஈத்தாய், ஓர் அந்நியராகவும் நாடு கடத்தப்பட்டவராகவும் இருந்தபோதிலும், யெகோவாவை ஓர் உயிருள்ள கடவுளாகவும் தாவீதை யெகோவாவால் நியமிக்கப்பட்ட ராஜாவாகவும் கருதினார். அவர் இஸ்ரவேலருக்கும் பெலிஸ்தருக்கும் இடையேயிருந்த விரோதத்தை மனதில் வைக்காமல் செயல்பட்டார். பெலிஸ்த மாவீரனான கோலியாத்தையும் அந்நாட்டவர் பலரையும் கொன்ற ஒரு நபராக மட்டுமே அவர் தாவீதைப் பார்க்கவில்லை. (1 சா. 18:6, 7) யெகோவாமீது அன்பு வைத்திருந்த ஒரு நபராகவே அவரைப் பார்த்தார்; சந்தேகமின்றி அவருடைய சிறந்த குணங்களையும் கவனித்தார். இதனால், ஈத்தாய்மீது தாவீதுக்கு மிகுந்த மரியாதை ஏற்பட்டது. அதுமட்டுமா, அப்சலோமின் சேனைக்கு எதிராக நடந்த இறுதிப் போரின்போது தன்னுடைய படைவீரர்களில் மூன்றில் ஒரு பங்கினரை “ஈத்தாயின் வசமாக” ஒப்படைத்தார்.—2 சா. 18:2.

நாமும்கூட இனம், குலம், கலாச்சாரம் என எந்த வித்தியாசத்தையும் விரோதத்தையும் பாகுபாட்டையும் மனதில் வைக்காமல் மற்றவர்களிடமுள்ள நல்ல குணங்களைப் பார்க்க வேண்டும். யெகோவாவை அறிந்து அவரை நேசிக்கும்போது இந்த எல்லா பேதங்களையும் விட்டு வெளிவர முடியும் என்பதை, தாவீதுக்கும் ஈத்தாய்க்கும் இடையே ஏற்பட்ட நெருக்கம் காட்டுகிறது.

ஈத்தாயின் உதாரணத்தைச் சிந்திக்கையில், நம்மையே இவ்வாறு கேட்டுக்கொள்ளலாம்: ‘பெரிய தாவீதாகிய கிறிஸ்து இயேசுவிடம் இதே போன்ற பற்றுறுதியைக் காட்டுகிறேனா? ராஜ்யத்தைப் பற்றிப் பிரசங்கிப்பதிலும் சீடராக்குவதிலும் பக்திவைராக்கியத்தோடு ஈடுபடுவதன் மூலம் என்னுடைய பற்றுறுதியைக் காட்டுகிறேனா?’ (மத். 24:14; 28:19, 20) ‘என்னுடைய பற்றுறுதியை நிரூபிக்க நான் எந்தளவுக்குப் பாடுபட மனமுள்ளவனாய் இருக்கிறேன்?’

பற்றுறுதிக்கு ஈத்தாய் வைத்த முன்மாதிரியை ஆழ்ந்து சிந்திப்பதன் மூலம் குடும்பத் தலைவர்களும் நன்மை அடையலாம். கடவுள் நியமித்த ராஜாவான தாவீதின் மீது ஈத்தாய் பற்றுடன் இருந்து அவரோடு செல்லத் தீர்மானித்தது அவருடைய ஆட்களையும் பாதித்தது. அவ்வாறே, உண்மை வணக்கத்தை ஆதரிப்பதற்காகக் குடும்பத் தலைவர்கள் எடுக்கிற தீர்மானங்கள் குடும்பத்திலுள்ள மற்றவர்களையும் பாதிக்கின்றன; அதனால், அவர்கள் தற்காலிகமாகச் சில கஷ்டங்களை அனுபவிக்க வேண்டியிருக்கலாம். என்றாலும், ‘பற்றுறுதியுள்ளவரிடம் [யெகோவா] பற்றுறுதியுள்ளவராய் நடந்துகொள்வார்’ என்ற உறுதி நமக்கு அளிக்கப்படுகிறது.—சங். 18:25, NW.

தாவீதுக்கும் அப்சலோமுக்கும் நடந்த போரை விவரித்த பிறகு ஈத்தாயைப் பற்றி பைபிள் எதுவும் குறிப்பிடுவதில்லை. என்றாலும், தாவீது கஷ்டமான சூழ்நிலையில் இருந்தபோது ஈத்தாய் நடந்துகொண்ட விதத்தைப் பற்றி கடவுளுடைய வார்த்தையில் கொடுக்கப்பட்டுள்ள சுருக்கமான பதிவிலிருந்து அவருடைய குணத்தை மிக நன்றாகப் புரிந்துகொள்ள முடிகிறது. ஈத்தாயைப் பற்றி பைபிளில் பதிவு செய்யப்பட்டிருப்பது, அப்படிப்பட்ட பற்றுறுதியைக் காட்டுவோரை யெகோவா கண்ணோக்கிப் பார்த்து அவர்களுக்குப் பலனளிக்கிறார் என்பதற்கு அத்தாட்சி அளிக்கிறது.—எபி. 6:10.