Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

முடிவு வரும்போது நீங்கள் எங்கே இருக்க வேண்டும்?

முடிவு வரும்போது நீங்கள் எங்கே இருக்க வேண்டும்?

முடிவு வரும்போது நீங்கள் எங்கே இருக்க வேண்டும்?

அர்மகெதோனில் இந்தக் கெட்ட உலகத்திற்கு யெகோவா ஒரு முடிவைக் கொண்டுவரும்போது நல்லவர்களுக்கு என்ன நடக்கும்? நீதிமொழிகள் 2:21, 22 இவ்வாறு பதிலளிக்கிறது: “செவ்வையானவர்கள் பூமியிலே வாசம்பண்ணுவார்கள்; உத்தமர்கள் அதிலே தங்கியிருப்பார்கள். துன்மார்க்கரோ பூமியிலிருந்து அறுப்புண்டுபோவார்கள்; துரோகிகள் அதில் இராதபடிக்கு நிர்மூலமாவார்கள்.”

ஆனால், உத்தமர்கள் எவ்வாறு இந்தப் பூமியில் தங்கியிருப்பார்கள்? அவர்களுக்கென்று ஒரு புகலிடம் இருக்குமா? முடிவு வரும்போது அவர்கள் எங்கே இருக்க வேண்டும்? பூர்வ காலங்களில் ஏற்பட்ட அழிவுகளின்போது தப்பித்தவர்களைப் பற்றிய நான்கு பைபிள் பதிவுகள் இந்தக் கேள்விகளுக்குப் பதிலளிக்கும்.

இடம் முக்கியமாக இருந்த சமயங்கள்

நோவாவும் லோத்துவும் காப்பாற்றப்பட்ட சமயங்களைக் குறித்து 2 பேதுரு 2:5-7-ல் நாம் இவ்வாறு வாசிக்கிறோம்: “பூர்வ உலகத்தையும் அவர் [கடவுள்] தண்டிக்காமல் விடவில்லை; நீதியைப் பிரசங்கித்தவராகிய நோவா உட்பட எட்டுப் பேரை மட்டும் காப்பாற்றி, தேவபக்தியற்றவர்கள் நிறைந்த அந்த உலகத்தின் மீது ஜலப்பிரளயத்தைக் கொண்டுவந்தார்; சோதோம், கொமோரா என்ற நகரங்களையும் தண்டித்தார்; தேவபக்தியற்றவர்களுக்கு வரப்போகும் முடிவு எப்படியிருக்கும் என்பதற்கு எடுத்துக்காட்டாக அவற்றை எரித்துச் சாம்பலாக்கினார்; வெட்கங்கெட்ட நடத்தையில் மூழ்கியிருந்த நெறிகெட்டவர்களைக் கண்டு மிகுந்த வேதனையடைந்த நீதிமானாகிய லோத்துவைக் காப்பாற்றினார்.

நோவா எவ்வாறு ஜலப்பிரளயத்திலிருந்து தப்பிப்பிழைத்தார்? கடவுள் அவரிடம், “மாம்சமான யாவரின் முடிவும் எனக்கு முன்பாக வந்தது; அவர்களாலே பூமி கொடுமையினால் நிறைந்தது; நான் அவர்களைப் பூமியோடுங்கூட அழித்துப் போடுவேன். நீ கொப்பேர் மரத்தால் உனக்கு ஒரு பேழையை உண்டாக்கு” என்று சொன்னார். (ஆதி. 6:13, 14) யெகோவா கட்டளையிட்டபடியே நோவா ஒரு பேழையைக் கட்டினார். ஜலப்பிரளயம் வருவதற்கு ஏழு நாட்களுக்கு முன்பு, மிருகங்களைப் பேழைக்குள் கொண்டுபோகும்படியும் தன்னுடைய குடும்பத்தோடு சேர்ந்து அதற்குள் பிரவேசிக்கும்படியும் யெகோவா நோவாவிடம் சொன்னார். ஏழாவது நாள் பேழையின் கதவு அடைக்கப்பட்டது; பின்பு, “நாற்பதுநாள் இரவும் பகலும் பூமியின்மேல் பெருமழை பெய்தது.” (ஆதி. 7:1-4, 11, 12, 16) நோவாவும் அவருடைய குடும்பத்தாரும் “வெள்ளத்திலிருந்து காப்பாற்றப்பட்டார்கள்.” (1 பே. 3:20) அவர்கள் அந்தப் பேழைக்கு உள்ளே இருந்ததால்தான் காப்பாற்றப்பட்டார்கள். பூமியில் வேறெந்த இடத்தில் இருந்திருந்தாலும் அவர்களுக்குப் பாதுகாப்பு கிடைத்திருக்காது.—ஆதி. 7:19, 20.

லோத்துவுக்கோ சற்று வித்தியாசமான கட்டளைகள் கொடுக்கப்பட்டன. அவர் எந்த இடத்தில் இருக்கக்கூடாது என்பதை இரண்டு தேவதூதர்கள் தெரிவித்தார்கள். “[சோதோம்] பட்டணத்தில் உனக்குரிய எவர்களாவது இருந்தால், அவர்களை இந்த ஸ்தலத்திலிருந்து வெளியே அழைத்துக்கொண்டு போ. நாங்கள் இந்த ஸ்தலத்தை அழிக்கப்போகிறோம்” என்று அந்தத் தேவதூதர்கள் அவரிடம் சொன்னார்கள். லோத்துவும் அவருக்குரியவர்களும் ‘மலைக்கு ஓடிப்போக’ வேண்டியிருந்தது.—ஆதி. 19:12, 13, 17.

“தேவபக்தியுள்ளவர்களைச் சோதனையிலிருந்து விடுவிக்கவும், அநீதிமான்களை நியாயத்தீர்ப்பு நாளில் அழிப்பதற்கென்று விட்டுவைக்கவும் யெகோவா அறிந்திருக்கிறார்” என்ற உண்மையை நோவா மற்றும் லோத்துவின் அனுபவங்கள் நிரூபிக்கின்றன. (2 பே. 2:9) இந்த இரண்டு சந்தர்ப்பங்களிலுமே, தப்பிப்பிழைப்பதற்கு இடம் முக்கியமானதாக இருந்தது. நோவா பேழைக்கு உள்ளே போக வேண்டியிருந்தது; லோத்துவோ சோதோமுக்கு வெளியே போக வேண்டியிருந்தது. ஆனால், எப்போதுமே இடம் முக்கியமானதா? நீதிமான்கள் எங்கிருந்தாலும் அவர்களை அந்த இடத்திலேயே காப்பாற்ற யெகோவாவால் முடியுமா? இந்தக் கேள்விக்குப் பதிலைத் தெரிந்துகொள்ள, தப்பிப்பிழைப்பது சம்பந்தமான இன்னும் இரண்டு பதிவுகளைக் கவனிக்கலாம்.

இடம் எப்போதுமே முக்கியமா?

யெகோவா, மோசேயின் காலத்தில் எகிப்தைப் பத்தாவது வாதையால் தாக்குவதற்குமுன், பஸ்கா ஆட்டுக்குட்டியின் இரத்தத்தை இஸ்ரவேலர்கள் தங்கள் வீட்டு வாசலின் மேற்சட்டத்திலும் நிலைக்கால்களிலும் தெளிக்க வேண்டுமெனக் கட்டளையிட்டார். ஏன்? ஏனென்றால், ‘கர்த்தர் எகிப்தியரை அதம்பண்ணுகிறதற்கு [அதாவது, தாக்குவதற்கு] கடந்துவருகையில், நிலையின் மேற்சட்டத்திலும் வாசலின் நிலைக்கால்கள் இரண்டிலும் அந்த இரத்தத்தைக் காணும்போது, கர்த்தர் சங்காரக்காரனை அவர்கள் வீடுகளில் அவர்களை அதம்பண்ணுகிறதற்கு வரவொட்டாமல், வாசற்படியை விலகிக் கடந்துபோவார்.’ அதே இரவில், “சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கும் பார்வோனுடைய தலைப்பிள்ளைமுதல் காவல் கிடங்கிலிருக்கும் சிறைப்பட்டவனின் தலைப்பிள்ளை வரைக்கும், எகிப்து தேசத்தில் இருந்த முதற்பேறனைத்தையும் மிருகஜீவன்களின் தலையீற்றனைத்தையும் கர்த்தர் அழித்தார்.” இஸ்ரவேலர்களின் தலைப்பிள்ளைகள், இருந்த இடத்திலேயே காப்பாற்றப்பட்டார்கள்; அவர்கள் யாரும் வேறு இடத்திற்குப் போகவேண்டிய அவசியம் இருக்கவில்லை.—யாத். 12:22, 23, 29.

எரிகோ பட்டணத்தில் வசித்த ராகாப் என்ற விலைமகளின் உதாரணத்தையும் கவனியுங்கள். இஸ்ரவேலர்கள் வாக்குப்பண்ணப்பட்ட தேசத்தைக் கைப்பற்றும் படலத்தில் இறங்கவிருந்தார்கள். எரிகோ அழியப்போவதை உணர்ந்த ராகாப், இஸ்ரவேலர்களின் தாக்குதலை நினைத்துத் தன்னுடைய பட்டணத்தார் கதிகலங்கிப் போயிருந்ததாக இஸ்ரவேலின் இரண்டு வேவுகாரர்களிடம் தெரிவித்தாள். அவ்விருவரையும் ராகாப் ஒளித்துவைத்தாள்; இஸ்ரவேலர்கள் எரிகோவைக் கைப்பற்றும்போது தன்னையும் தன் குடும்பத்தார் அனைவரையும் காப்பாற்றப்போவதாக வாக்குக் கொடுக்கும்படி அவ்விருவரிடம் கேட்டுக்கொண்டாள். அதற்கு அவர்கள், பட்டணத்து மதிலுடன் சேர்ந்தாற்போல் அமைந்திருந்த அவளுடைய வீட்டுக்குள் அவளுடைய குடும்பத்தாருடன் கூடியிருக்கும்படி சொன்னார்கள். யாராவது அந்த வீட்டைவிட்டு வெளியே சென்றால், பட்டணத்திலிருந்த மற்றவர்களைப் போலவே உயிரிழக்க நேரிடுமென்றும் சொன்னார்கள். (யோசு. 2:8-13, 15, 18, 19) ஆனாலும், “பட்டணத்தின் அலங்கம் [அதாவது, மதில்] இடிந்துவிழும்” என்று யெகோவா யோசுவாவிடம் பிற்பாடு சொன்னார். (யோசு. 6:5) பாதுகாப்புக்கு எங்கு இருக்க வேண்டுமென அந்த வேவுகாரர்கள் சொல்லியிருந்தார்களோ அந்த இடமே ஆபத்திலிருந்ததுபோல் தோன்றியது. அப்படியிருக்க, ராகாபும் அவளுடைய குடும்பத்தாரும் எப்படிக் காப்பாற்றப்பட்டார்கள்?

எரிகோவைக் கைப்பற்றும் நேரம் வந்தபோது, இஸ்ரவேலர்கள் ஆர்ப்பரித்து எக்காளங்களை ஊதினார்கள். “எக்காள சத்தத்தை ஜனங்கள் [இஸ்ரவேலர்கள்] கேட்டு, மகா ஆரவாரத்தோடே முழங்குகையில், அலங்கம் இடிந்துவிழுந்தது” என்று யோசுவா 6:20 குறிப்பிடுகிறது. அந்த மதில் இடிந்துவிழுவதை எந்த மனிதனாலும் தடுத்த நிறுத்த முடியவில்லை. ஆனால், இடிந்துகொண்டேவந்த அந்த மதில் ராகாபின் வீடு அமைந்திருந்த பகுதியில் மட்டும் இடியாமல் அற்புதகரமாக அப்படியே நின்றது. யோசுவா அந்த இரண்டு வேவுகாரர்களிடம் இப்படிக் கட்டளையிட்டார்: “அந்த வேசியின் வீட்டிற்குள் போங்கள். அவளையும், அவளோடு இருப்போர் அனைவரையும் வெளியே அழைத்து வாருங்கள். நீங்கள் அவளுக்கு அளித்த வாக்குறுதியின்படி இதைச் செய்யுங்கள்.” (யோசு. 6:22, ஈஸி டு ரீட் வர்ஷன்) இவ்வாறு, ராகாபின் வீட்டிலிருந்த அனைவரும் காப்பாற்றப்பட்டார்கள்.

எது முக்கியமானதாக இருந்தது?

நோவாவும், லோத்துவும், மோசேயின் காலத்து இஸ்ரவேலர்களும், ராகாபும் காப்பாற்றப்பட்டதிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்? இந்த உலகத்திற்கு முடிவு வரும்போது நாம் எங்கே இருக்க வேண்டுமெனத் தீர்மானிக்க இவர்களைப் பற்றிய பதிவுகள் நமக்கு எப்படி உதவுகின்றன?

நோவா பேழைக்குள் இருந்ததால் காப்பாற்றப்பட்டார் என்பது உண்மைதான். ஆனால் அவர் ஏன் பேழைக்குள் இருந்தார்? விசுவாசத்தையும் கீழ்ப்படிதலையும் காட்டியதால்தானே? ‘நோவா அப்படியே செய்தார்; தேவன் தனக்குக் கட்டளையிட்டபடியெல்லாம் அவர் செய்து முடித்தார்’ என்று பைபிள் சொல்கிறது. (ஆதி. 6:22; எபி. 11:7) நம்மைப் பற்றி என்ன சொல்லலாம்? கடவுள் நமக்குக் கட்டளையிட்டிருக்கிற எல்லாவற்றையும் செய்கிறோமா? நோவா ‘நீதியைப் பிரசங்கித்தவராக’ இருந்தார். (2 பே. 2:5) மக்கள் ஆர்வம் காட்டாவிட்டால்கூட அவரைப் போல் நாமும் ஊழியத்தில் மும்முரமாக ஈடுபடுகிறோமா?

லோத்து சோதோமைவிட்டு ஓடிப்போனதால் அழிவிலிருந்து தப்பித்தார். அவர் கடவுளுடைய பார்வையில் நீதிமானாக இருந்ததாலும் சோதோம், கொமோராவிலிருந்த அக்கிரமக்காரர்களின் ஒழுக்கங்கெட்ட நடத்தையைக் கண்டு மிகுந்த வேதனைப்பட்டதாலும் உயிர்தப்பினார். இன்று பரவலாகக் காணப்படும் ஒழுக்கங்கெட்ட நடத்தையைக் கண்டு நாமும் உண்மையிலேயே வேதனைப்படுகிறோமா? அல்லது, அப்படிப்பட்ட நடத்தையைப் பார்த்துப் பார்த்து மனம் மரத்துப்போயிருப்பதால் அவற்றைக் கண்டுகொள்ளாமல் இருந்துவிடுகிறோமா? நாம் “கறையற்றவர்களாகவும் மாசற்றவர்களாகவும் சமாதானமுள்ளவர்களாகவும்” காணப்படுவதற்கு நம்மாலான அனைத்தையும் செய்கிறோமா?—2 பே. 3:14.

எகிப்திலிருந்த இஸ்ரவேலர்களும் எரிகோவிலிருந்த ராகாபும், அழிவிலிருந்து தப்பிக்க தங்கள் வீடுகளுக்குள் இருக்க வேண்டியிருந்தது. அதற்கு விசுவாசமும் கீழ்ப்படிதலும் அவசியமாக இருந்தது. (எபி. 11:28, 30, 31) எகிப்தியரின் வீடுகளில் அடுத்தடுத்து “மகா கூக்குரல்” எழும்புவதைக் கேட்டு ஒவ்வொரு இஸ்ரவேல் குடும்பத்தாரும் எப்படித் தங்கள் தலைப்பிள்ளையைக் கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்திருப்பார்கள் என்பதைக் கற்பனை செய்து பாருங்கள். (யாத். 12:30) எரிகோவின் மதில்கள் நொறுங்கி விழுந்துகொண்டே வருவதைக் கேட்கக் கேட்க ராகாப் எப்படித் தன் குடும்பத்தாரை இறுகப் பற்றிக் கொண்டிருந்திருப்பார் என்பதையும் யோசித்துப் பாருங்கள். கீழ்ப்படிதலுடன் வீட்டிற்குள்ளேயே இருக்க அவருக்கு அதிக விசுவாசம் தேவைப்பட்டது.

சாத்தானுடைய பொல்லாத உலகத்துக்குச் சீக்கிரத்தில் முடிவு வரப்போகிறது. யெகோவா எவ்வாறு தம்முடைய பயங்கரமான “கோபத்தின் நாளிலே” தம் மக்களைக் காப்பாற்றப்போகிறார் என்று நமக்குத் தெரியாது. (செப். 2:3) என்றாலும், அந்தச் சமயத்தில் நாம் எந்த இடத்தில் இருந்தாலும் சரி எப்படிப்பட்ட சூழ்நிலையில் இருந்தாலும் சரி, யெகோவாமீது விசுவாசமாக இருந்து அவருக்குக் கீழ்ப்படிந்தால் மட்டுமே உயிர்பிழைப்போம் என்பது நிச்சயம். இதற்கிடையே, ஏசாயாவின் தீர்க்கதரிசனம் குறிப்பிடுகிற ‘அறைகள்மீது’ நாம் மதிப்பை வளர்த்துக்கொள்ள வேண்டும்.

“உன் அறைகளுக்குள்ளே பிரவேசி”

“என் ஜனமே, நீ போய் உன் அறைகளுக்குள்ளே பிரவேசித்து, உன் கதவுகளைப் பூட்டிக்கொண்டு, சினம் கடந்துபோகுமட்டும் கொஞ்சநேரம் ஒளித்துக்கொள்” என்று ஏசாயா 26:20 குறிப்பிடுகிறது. இந்தத் தீர்க்கதரிசனம், பொ.ச.மு. 539-ல் மேதியர்களும் பெர்சியர்களும் பாபிலோனைக் கைப்பற்றியபோது முதன்முதலாக நிறைவேறியிருக்கலாம். அச்சமயத்தில், பாபிலோனுக்குள் நுழைந்த பெர்சியனான கோரேசு, எல்லாரையும் தங்கள் அறைகளுக்குள்ளேயே இருக்கும்படி கட்டளையிட்டார்; ஏனென்றால், யார் வெளியே இருந்தாலும் அவர்களைக் கொன்று வீழ்த்தும்படி தன் படைவீரர்களுக்கு ஆணையிட்டிருந்தார்.

நம் காலத்தில், இந்தத் தீர்க்கதரிசனம் குறிப்பிடுகிற ‘அறைகள்,’ உலகெங்கும் உள்ள யெகோவாவின் சாட்சிகளுடைய 1,00,000-க்கும் அதிகமான சபைகளோடு நெருங்கிய சம்பந்தமுள்ளதாக இருக்கலாம். இந்தச் சபைகள் நம் வாழ்க்கையில் முக்கிய பங்கு வகிக்கின்றன. ‘மிகுந்த உபத்திரவத்தின்போதும்’ அவை அவ்வாறே முக்கிய பங்கு வகிக்கப்போகின்றன. (வெளி. 7:14) கடவுளுடைய மக்கள் தங்களுடைய ‘அறைகளுக்குள்ளே’ போக வேண்டுமென்றும் “சினம் கடந்துபோகுமட்டும்” ஒளிந்துகொள்ள வேண்டுமென்றும் கட்டளையிடப்பட்டிருக்கிறார்கள். ஆகவே, சபையின்மீது மதிப்பை வளர்த்துக்கொண்டு அதைக் காத்துக்கொள்வது அவசியம்; எப்போதும் சபையுடன் நெருங்கிய கூட்டுறவு வைத்திருக்கத் திடத்தீர்மானமாக இருப்பதும் அவசியம். பவுல் கொடுத்திருக்கும் இந்த அறிவுரையை நாம் எப்போதும் நினைவில் வைப்போமாக: “அன்பு காட்டவும் நற்செயல்கள் செய்யவும் ஒருவரையொருவர் தூண்டியெழுப்பி, ஒருவர்மீது ஒருவர் ஆழ்ந்த அக்கறை காண்பிப்போமாக; சபைக் கூட்டங்களைச் சிலர் வழக்கமாகத் தவறவிடுவதுபோல் நாமும் தவறவிடாமல், ஒன்றுகூடிவந்து ஒருவரையொருவர் ஊக்கப்படுத்துவோமாக. நாளானது நெருங்கி வருவதை நாம் எந்தளவுக்குப் பார்க்கிறோமோ அந்தளவுக்கு ஒருவரையொருவர் ஊக்கப்படுத்துவோமாக.”—எபி. 10:24, 25.

[பக்கம் 7-ன் படங்கள்]

கடவுள் தம் மக்களைக் காப்பாற்றியதைப் பற்றிய பதிவுகளிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?

[பக்கம் 8-ன் படம்]

‘அறைகள்’ என்பது நம் காலத்தில் எதை அர்த்தப்படுத்தலாம்?