Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

‘யெகோவாவுடைய பெரிய நாள் சமீபம்’—முதிர்ச்சியை நோக்கி முன்னேறுங்கள்

‘யெகோவாவுடைய பெரிய நாள் சமீபம்’—முதிர்ச்சியை நோக்கி முன்னேறுங்கள்

‘யெகோவாவுடைய பெரிய நாள் சமீபம்’—முதிர்ச்சியை நோக்கி முன்னேறுங்கள்

“முதிர்ச்சியை நோக்கி வேகமாய் முன்னேறுவோமாக.”—எபி. 6:2.

1, 2. முதல் நூற்றாண்டில் எருசலேமிலும் யூதேயாவிலும் இருந்த கிறிஸ்தவர்கள் “மலைகளுக்குத் தப்பியோட” எப்படி வாய்ப்பு கிடைத்தது?

 இயேசு பூமியில் இருந்த சமயத்தில், அவருடைய சீடர்கள் அவரிடம் வந்து, “உங்களுடைய பிரசன்னத்திற்கும் இந்தச் சகாப்தத்தின் இறுதிக்கட்டத்திற்கும் அடையாளம் என்ன?” என்று கேட்டார்கள். அப்போது இயேசு ஒரு தீர்க்கதரிசனத்தைச் சொன்னார்; அதன் ஆரம்ப நிறைவேற்றம் முதல் நூற்றாண்டில் நிகழவிருந்தது. முடிவு நெருங்கி விட்டதற்கு அறிகுறியாக ஓர் அசாதாரண சம்பவம் நடக்குமென இயேசு சொன்னார். அந்தச் சம்பவத்தைப் பார்த்ததும் ‘யூதேயாவில் இருந்தவர்கள் மலைகளுக்குத் தப்பியோட’ வேண்டியிருந்தது. (மத். 24:1-3, 15-22) இயேசுவின் சீடர்கள் அவர் கொடுத்த அடையாளத்தைக் கண்டுணர்ந்து அவருடைய அறிவுரைகளுக்குக் கீழ்ப்படிவார்களா?

2 கிட்டத்தட்ட முப்பது வருடங்களுக்குப் பிறகு, பொ.ச. 61-ல், எருசலேமிலும் அதன் சுற்றுப்புறத்திலும் வாழ்ந்த எபிரெய கிறிஸ்தவர்களுக்கு அப்போஸ்தலன் பவுல் சிந்தையைத் தட்டியெழுப்பும் வலிமைமிக்க ஒரு கடிதத்தை எழுதினார். ‘மிகுந்த உபத்திரவத்தின்’ ஆரம்பத்திற்கான அடையாளம் ஐந்தே வருடங்களில் சம்பவிக்கவிருந்ததை பவுலும் அறியவில்லை அவருடைய சக விசுவாசிகளும் அறியவில்லை. (மத். 24:21) பொ.ச. 66-ல் ரோம படையைத் தலைமை தாங்கி வந்த செஸ்டியஸ் காலஸ், எருசலேமைக் கைப்பற்றும் தறுவாயில் இருந்தார். ஆனால், திடுதிப்பென்று திரும்பிப் போய்விட்டார்; ஆபத்திலிருந்தவர்கள் பத்திரமான இடத்திற்குத் தப்பியோட அது வாய்ப்பளித்தது.

3. எபிரெய கிறிஸ்தவர்களுக்குப் பவுல் என்ன அறிவுரையை வழங்கினார், ஏன்?

3 இயேசு சொன்னபடியே சம்பவிப்பதைக் கண்டுணர்ந்து அவ்விடத்தைவிட்டு ஓட்டம்பிடிக்க, அந்தக் கிறிஸ்தவர்களுக்கு ஆழ்ந்த பகுத்துணர்வும் ஆன்மீக புரிந்துகொள்ளுதலும் தேவையாக இருந்தன. என்றாலும், அவர்களில் சிலர் ‘செவிகொடுத்துக் கேட்பதில் மந்தமாக’ இருந்தார்கள். அவர்கள் ஆன்மீக ரீதியில் “பால்” குடிக்கும் பிள்ளைகளைப் போல் இருந்தார்கள். (எபிரெயர் 5:11-13-ஐ வாசியுங்கள்.) பல வருடங்களாகச் சத்திய வழியில் நடந்திருந்தவர்கள்கூட ‘உயிருள்ள கடவுளைவிட்டு விலகிச் செல்வதற்கான’ அறிகுறிகளை வெளிக்காட்டினார்கள். (எபி. 3:12) அழிவு ‘நாள் நெருங்கிவந்த’ சமயத்தில் சிலர் கிறிஸ்தவக் கூட்டங்களை “வழக்கமாகத்” தவறவிட்டார்கள். (எபி. 10:24, 25) ஆகவே, “கிறிஸ்துவைப் பற்றிய அடிப்படைப் போதனைகளைக் கடந்து வந்திருக்கிற நாம், . . . முதிர்ச்சியை நோக்கி வேகமாய் முன்னேறுவோமாக” என்ற காலத்துக்கேற்ற அறிவுரையை பவுல் அவர்களுக்கு வழங்கினார்.—எபி. 6:1, 2.

4. ஆன்மீக விதத்தில் எப்போதும் உஷாராக இருப்பது ஏன் முக்கியம், அப்படி இருக்க எது நமக்கு உதவும்?

4 இயேசுவின் தீர்க்கதரிசனம் கடைசி நிறைவேற்றத்தை அடையும் காலத்தில் நாம் வாழ்கிறோம். சாத்தானுடைய முழு உலகத்திற்கும் முடிவுகட்டப்போகும் ‘யெகோவாவுடைய பெரியநாள் சமீபித்திருக்கிறது.’ (செப். 1:14) நாம் ஆன்மீக ரீதியில் முன்பைவிட இப்போது அதிக விழிப்பாகவும் உஷாராகவும் இருக்க வேண்டும். (1 பே. 5:8) நாம் உண்மையிலேயே அப்படி இருக்கிறோமா? கால ஓட்டத்தில் நாம் எங்கிருக்கிறோம் என்பதை எப்போதும் நினைவில் வைத்திருக்க கிறிஸ்தவ முதிர்ச்சி நமக்கு உதவும்.

கிறிஸ்தவ முதிர்ச்சி என்றால் என்ன?

5, 6. (அ) ஆன்மீக முதிர்ச்சியில் என்ன உட்பட்டிருக்கிறது? (ஆ) முதிர்ச்சியை நோக்கி வேகமாக முன்னேற எந்த இரண்டு அம்சங்களில் நாம் உழைக்க வேண்டும்?

5 பவுல் முதல் நூற்றாண்டு எபிரெய கிறிஸ்தவர்களுக்கு, முதிர்ச்சியை நோக்கி வேகமாய் முன்னேறும்படி சொன்னதோடு கிறிஸ்தவ முதிர்ச்சியில் என்ன உட்பட்டிருக்கிறது என்றும் சொன்னார். (எபிரெயர் 5:14-ஐ வாசியுங்கள்.) ‘முதிர்ச்சி அடைந்தவர்கள்’ வெறும் “பால்” குடிப்பதோடு திருப்தி அடைந்துவிடுவதில்லை. அவர்கள் ‘திட உணவை’ உட்கொள்கிறார்கள். அதனால், அவர்கள் சத்தியத்தின் “அடிப்படைக் காரியங்களை” மட்டுமல்ல “ஆழமான காரியங்களையும்கூட” அறிந்திருக்கிறார்கள். (1 கொ. 2:10) அதோடு, அவர்களுடைய பகுத்தறியும் திறன்கள் நன்மை தீமையைக் கண்டறிய அவர்களுக்கு உதவுகின்றன; அறிந்திருக்கிற விஷயங்களைக் கடைப்பிடிப்பதன் மூலம், அவர்கள் அத்திறன்களைப் பயன்படுத்திப் பயிற்றுவிக்கிறார்கள். ஒரு தீர்மானம் எடுக்க வேண்டிய தருணத்தில், என்ன பைபிள் நியமங்கள் அதில் உட்பட்டிருக்கின்றன என்பதையும் அவற்றை எப்படிக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதையும் புரிந்துகொள்ள இந்தப் பயிற்றுவிப்பு அவர்களுக்கு உதவுகிறது.

6 “ஆகவே நாம் கேட்டறிந்த விஷயங்களுக்கு வழக்கத்தைவிட அதிக கவனம் செலுத்துவது அவசியம்; அப்போதுதான் விசுவாசத்தைவிட்டு நாம் ஒருபோதும் வழுவிப்போக மாட்டோம்” என்று பவுல் எழுதினார். (எபி. 2:1) விசுவாசத்தைவிட்டு வழுவிப்போகும் அவலம் நம்மை அறியாமலேயே நடந்துவிடலாம். அதைத் தவிர்க்க பைபிள் சத்தியங்களுக்கு ‘வழக்கத்தைவிட அதிக கவனம் செலுத்த’ வேண்டும். எனவே, நம்மை இவ்வாறு கேட்டுக்கொள்ள வேண்டும்: ‘நான் இன்னும் அடிப்படைக் காரியங்களே போதுமென்று இருக்கிறேனா? சத்தியத்தில் முழு ஈடுபாடின்றி கடமைக்கென்று காரியங்களைச் செய்கிறேனா? நான் சத்தியத்தில் உண்மையிலேயே முன்னேற என்ன செய்ய வேண்டும்?’ முதிர்ச்சியை நோக்கி வேகமாக முன்னேற குறைந்தது இரண்டு அம்சங்களில் நாம் உழைக்க வேண்டும். முதலாவதாக, கடவுளுடைய வார்த்தையை நன்கு தெரிந்திருக்க வேண்டும். இரண்டாவதாக, கீழ்ப்படிதலைக் கற்றுக்கொள்ள வேண்டும்.

கடவுளுடைய வார்த்தையை நன்கு தெரிந்துவைத்திருங்கள்

7. கடவுளுடைய வார்த்தையை நன்கு தெரிந்து வைத்திருப்பதால் நாம் எப்படி நன்மை அடையலாம்?

7 “பால் குடிக்கிற எல்லாரும் குழந்தைகள் என்பதால், நீதியின் வார்த்தையைப் பற்றி தெரியாதவர்களாக இருக்கிறார்கள்” என்று பவுல் எழுதினார். (எபி. 5:13) முதிர்ச்சி அடைவதற்கு, கடவுள் நமக்குத் தெரிவித்திருக்கிற விஷயங்களை நாம் நன்கு தெரிந்திருக்க வேண்டும். அந்த விஷயங்கள் அவருடைய வார்த்தையாகிய பைபிளில் அடங்கியிருப்பதால் அதையும் “உண்மையும் விவேகமும் உள்ள அடிமை” மூலமாகக் கிடைக்கும் பிரசுரங்களையும் நாம் ஆர்வத்தோடு படிக்க வேண்டும். (மத். 24:45-47) இப்படிப் படிப்பது கடவுளுடைய சிந்தையை நன்கு தெரிந்துகொள்ள நமக்கு உதவும்; அதோடு, நம்முடைய பகுத்தறியும் திறன்களைப் பயிற்றுவிக்க உதவும். ஆர்கட் என்ற கிறிஸ்தவச் சகோதரியின் அனுபவத்தைக் கேளுங்கள். * அவர் சொல்கிறார்: “தவறாமல் பைபிளை வாசிக்க வேண்டும் என்ற நினைப்பூட்டுதல்தான் என் வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. முழு பைபிளையும் படித்து முடிக்க எனக்கு கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் எடுத்தன; ஆனால், அப்போதுதான் முதல்முறையாக என் படைப்பாளரோடு பரிச்சயமானதுபோல் உணர்ந்தேன். அவருடைய வழிகளையும், விருப்புவெறுப்புகளையும், எல்லையற்ற வல்லமையையும், அளவுகடந்த ஞானத்தையும் தெரிந்துகொண்டேன். பைபிளைத் தினமும் வாசிப்பது வாழ்க்கையின் மிகக் கசப்பான தருணங்களைச் சமாளிக்க எனக்கு உதவியிருக்கிறது.”

8. கடவுளுடைய வார்த்தை நம்மீது எப்படி வல்லமை செலுத்தும்?

8 கடவுளுடைய வார்த்தையைத் தவறாமல் வாசிக்கும்போது அது நம்மீது ‘வல்லமை’ செலுத்த நாம் அனுமதிப்போம். (எபிரெயர் 4:12-ஐ வாசியுங்கள்.) அப்படி வாசிப்பது நம்முடைய சுபாவத்தைச் செதுக்கிச் சீராக்கி, யெகோவாவின் பிரியத்தை இன்னும் அதிகமாகச் சம்பாதிக்க உதவும். பைபிளை வாசிப்பதற்கும் தியானிப்பதற்கும் நீங்கள் இன்னும் அதிக நேரம் ஒதுக்க வேண்டுமென நினைக்கிறீர்களா?

9, 10. கடவுளுடைய வார்த்தையைத் தெரிந்திருப்பது எதை அர்த்தப்படுத்துகிறது? ஓர் உதாரணத்தைச் சொல்லுங்கள்.

9 பைபிளைப் பற்றித் தெரிந்திருப்பது என்பது வெறுமென அது என்ன சொல்கிறது என்பதை அறிந்திருப்பதை அர்த்தப்படுத்தாது. பவுலின் நாட்களில் ஆன்மீக ரீதியில் குழந்தைகளாக இருந்தவர்கள் கடவுளுடைய வார்த்தையைப் பற்றி ஒன்றுமே தெரியாதவர்களாக இருக்கவில்லை. ஆனால், அதை அவர்கள் சொந்த வாழ்க்கையில் கடைப்பிடிக்கவில்லை, அதனால் கிடைக்கும் நன்மைகளை ருசித்துப் பார்க்கவில்லை. தங்கள் வாழ்க்கையில் ஞானமான தீர்மானங்களை எடுக்க அதன் உதவியை அவர்கள் நாடாததால் அதை அவர்கள் தெரிந்துகொள்ளவில்லை.

10 கடவுளுடைய வார்த்தையைத் தெரிந்திருப்பது என்பது அதிலுள்ள விஷயங்களை அறிந்திருப்பதை மட்டுமல்ல, அவற்றைக் கடைப்பிடிப்பதையும் அர்த்தப்படுத்துகிறது. இதை எப்படிச் செய்யலாம் என்பதற்கு கைல் என்ற கிறிஸ்தவச் சகோதரியின் அனுபவத்தைக் கவனியுங்கள். கைல்லுக்கும் அவருடன் வேலைசெய்த ஒரு பெண்ணுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்தப் பிரச்சினையைத் தீர்க்க அவர் என்ன செய்தார்? அவர் சொல்கிறார்: “‘கூடுமானால், உங்களால் முடிந்தவரை எல்லாரோடும் சமாதானமாகுங்கள்’ என்று ரோமர் 12:18-ல் சொல்லப்பட்டுள்ள வார்த்தைகள்தான் சட்டென என் நினைவுக்கு வந்தன. எனவே, வேலை முடிந்த பிறகு பேச விரும்புவதாக அந்தப் பெண்ணிடம் சொன்னேன்.” அவர்கள் இருவரும் பேசியதில் சமாதானம் பிறந்தது; கைல் எடுத்த முயற்சி அந்தப் பெண்ணின் மனதைத் தொட்டது. “நாம் பைபிள் நியமங்களின்படி நடந்தால் நாம் செய்வதெல்லாம் சரியாக இருக்கும் என்பதை நான் கற்றுக்கொண்டேன்” என்கிறார் கைல்.

கீழ்ப்படிதலைக் கற்றுக்கொள்ளுங்கள்

11. கஷ்டமான சந்தர்ப்பங்களில் கீழ்ப்படிவது கடினம் என்பதை எது காட்டுகிறது?

11 பைபிளில் நாம் கற்றுக்கொள்ளும் விஷயங்களைக் கடைப்பிடிப்பது சவாலாக இருக்கலாம்; அதுவும் கஷ்டமான சந்தர்ப்பங்களில் சொல்லவே வேண்டாம். உதாரணமாக, யெகோவா இஸ்ரவேலர்களை எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுவித்த சில காலத்திலேயே அவர்கள் “மோசேயோடே வாதாடி” திரும்பத் திரும்ப ‘யெகோவாவை . . . பரிட்சை பார்த்தார்கள்.’ ஏன்? குடிக்கத் தண்ணீர் கிடைக்காததால். (யாத். 17:1-4) அவர்கள் யெகோவாவுடன் ஓர் ஒப்பந்தத்திற்குள் வந்து, ‘அவர் அருளின எல்லா வார்த்தைகளின்படியும் செய்வோம்’ என்று ஒத்துக்கொண்டு இரண்டு மாதங்கள்கூட முடியவில்லை; அதற்குள்ளேயே உருவ வழிபாடு சம்பந்தமான அவரது கட்டளையை மீறினார்கள். (யாத். 24:3, 12-18; 32:1, 2, 7-9) ஓரேப் மலையில் கடவுளிடமிருந்து அறிவுரைகளைப் பெற்றுக்கொண்டிருந்த மோசே பல நாட்களாகத் திரும்பி வராததால் அவர்கள் பயந்துபோனார்களா? முன்பு அமலேக்கியர்கள் அவர்களைத் தாக்கியபோது, மோசே தன் கையை உயர்த்தி வைத்ததால்தான் அவர்கள் வெற்றி அடைந்தார்கள்; ஆகவே, இப்போது மோசே இல்லாததால் அமலேக்கியர்கள் திரும்பவும் வந்து தங்களைத் தாக்கிவிடுவார்கள் என்று நினைத்தார்களா? (யாத். 17:8-16) ஒருவேளை அப்படி நினைத்திருக்கலாம். காரணம் எதுவாக இருந்தாலும், இஸ்ரவேலர்கள் ‘கீழ்ப்படிய மறுத்தார்கள்.’ (அப். 7:39-41) வாக்குப்பண்ணப்பட்ட தேசத்திற்குள் நுழைவதற்குப் பயந்த இஸ்ரவேலர்களின் மாதிரியை, அதாவது, ‘கீழ்ப்படியாதவர்களுடைய மாதிரியை, பின்பற்றிப் பாவத்தில் விழுந்துவிடாதபடி’ ‘தங்களால் முடிந்த அனைத்தையும் செய்யுமாறு’ பவுல் கிறிஸ்தவர்களிடம் சொன்னார்.—எபி. 4:3, 11.

12. இயேசு எப்படிக் கீழ்ப்படிதலைக் கற்றுக்கொண்டார், அதனால் கிடைத்த பலன் என்ன?

12 முதிர்ச்சியை நோக்கி வேகமாக முன்னேற வேண்டுமென்றால், யெகோவாவுக்குக் கீழ்ப்படிய நம்மாலான அனைத்தையும் செய்வது அவசியம். பெரும்பாலும், நாம் படும் பாடுகளிலிருந்து கீழ்ப்படிதலைக் கற்றுக்கொள்ள முடியும்; இதற்கு இயேசு கிறிஸ்து ஓர் உதாரணம். (எபிரெயர் 5:8, 9-ஐ வாசியுங்கள்.) பூமிக்கு வருவதற்கு முன்பு இயேசு தம் தகப்பனுக்குக் கீழ்ப்படிந்திருந்தார். என்றாலும், பூமியில் தம் தகப்பனுடைய சித்தத்தைச் செய்வதற்கு உடல் ரீதியிலும் மன ரீதியிலும் அவர் பல பாடுகளை அனுபவிக்க வேண்டியிருந்தது. கடும் துன்பத்தின் மத்தியிலும் இயேசு கீழ்ப்படிதலைக் காட்டினார்; இவ்வாறு, கடவுள் நோக்கம் கொண்டிருந்தபடியே ராஜாவாகவும் தலைமைக் குருவாகவும் புதிய பொறுப்பை ஏற்க அவர் ‘பரிபூரணமாக்கப்பட்டார்.’

13. நாம் கீழ்ப்படிதலைக் கற்றுக்கொண்டோமா என்பதை எது காட்டும்?

13 நம்மைப் பற்றி என்ன? பிரச்சினைகள் நம்மை வாட்டிவதைக்கையிலும்கூட யெகோவாவுக்குக் கீழ்ப்படிந்திருக்கத் தீர்மானமாய் இருக்கிறோமா? (1 பேதுரு 1:6, 7-ஐ வாசியுங்கள்.) ஒழுக்கமாக இருப்பது, நேர்மையாக நடப்பது, நாவடக்கம் காட்டுவது, பைபிளை வாசிப்பது, அதை ஆராய்ந்து படிப்பது, சபைக் கூட்டங்களில் கலந்துகொள்வது, ஊழியத்தில் ஈடுபடுவது ஆகியவை சம்பந்தமாகக் கடவுளுடைய ஆலோசனைகள் தெளிவாக உள்ளன. (யோசு. 1:8; மத். 28:19, 20; எபே. 4:25, 28, 29; 5:3-5; எபி. 10:24, 25) கஷ்டமான சந்தர்ப்பங்களில்கூட இந்த விஷயங்களில் யெகோவாவுக்குக் கீழ்ப்படிதலைக் காட்டுகிறோமா? நம்முடைய கீழ்ப்படிதல் முதிர்ச்சியை நோக்கி நாம் முன்னேறுவதற்கு அத்தாட்சி.

கிறிஸ்தவ முதிர்ச்சி—ஏன் பயனுள்ளது?

14. முதிர்ச்சியை நோக்கி வேகமாக முன்னேறுவது பாதுகாப்பை அளிக்கிறது என்பதற்கு ஓர் உதாரணத்தைச் சொல்லுங்கள்.

14 ஒரு கிறிஸ்தவர் நன்மை தீமையைக் கண்டறிவதற்குத் தன்னுடைய பகுத்தறியும் திறன்களை நன்கு பயிற்றுவிப்பது, ‘ஒழுக்க உணர்வு துளிகூட இல்லாத’ இந்த உலகத்தில் உண்மையிலேயே பாதுகாப்பாக இருக்கிறது. (எபே. 4:19) உதாரணத்திற்கு, தவறாமல் பைபிள் பிரசுரங்களை வாசித்து அவற்றை உயர்வாய் மதித்த ஜேம்ஸ் என்ற சகோதரர், பெண்கள் மட்டுமே பணிபுரிந்த ஒரு அலுவலகத்தில் வேலைக்குச் சேர்ந்தார். அவர் சொல்கிறார்: “இந்தப் பெண்கள் பலருக்கு ஒழுக்க உணர்வு துளிகூட இருக்கவில்லை. ஆனால், அவர்களில் ஒரு பெண் நல்ல நடத்தையுள்ளவள் போல் தெரிந்தாள்; அவள் பைபிள் சத்தியத்தில் ஆர்வம் காட்டினாள். ஒருநாள் நாங்கள் மட்டும் ஓர் அறையில் தனியாக வேலை செய்தபோது அவள் என்னிடம் தகாத விதத்தில் நடந்துகொள்ள ஆரம்பித்தாள்; அவள் ஏதோ விளையாட்டாக அப்படிச் செய்கிறாள் என்று நினைத்தேன்; ஆனால், அவளைத் தடுப்பது பெரும்பாடாக இருந்தது. வேலைபார்க்கும் இடத்தில் இதே போன்ற சோதனையைச் சந்தித்த ஒரு சகோதரரைப் பற்றி காவற்கோபுரத்தில் வெளிவந்திருந்த ஓர் அனுபவம் சட்டென என் நினைவுக்கு வந்தது. அந்தக் கட்டுரையில், போத்திபாரின் மனைவியிடம் யோசேப்பு நடந்துகொண்ட விதத்தைப் பற்றியும் விளக்கப்பட்டிருந்தது. * உடனே அந்தப் பெண்ணைத் தள்ளிவிட்டேன், அவள் அங்கிருந்து ஓடிவிட்டாள்.” (ஆதி. 39:7-12) எந்தத் தப்புத்தண்டாவும் நடக்காததாலும் சுத்தமான மனசாட்சியைக் காத்துக்கொள்ள முடிந்ததாலும் ஜேம்ஸ் நிம்மதியடைந்தார்.—1 தீ. 1:5.

15. முதிர்ச்சியை நோக்கி வேகமாக முன்னேறுவது நம் இருதயத்தை எப்படித் திடப்படுத்துகிறது?

15 முதிர்ச்சி, நம்முடைய இருதயத்தைத் திடப்படுத்தவும் ‘மாறுபட்ட பலவிதப் போதனைகளை நம்பி வழிவிலகிப் போய்விடாதிருக்கவும்கூட’ உதவுகிறது. (எபிரெயர் 13:9-ஐ வாசியுங்கள்.) நாம் ஆன்மீக ரீதியில் முன்னேறுவதற்குப் பாடுபடுகையில் ‘மிக முக்கியமான காரியங்களை’ எப்போதும் மனதில் வைக்கிறோம். (பிலி. 1:9, 10) அதனால், கடவுள்மீதும் நம்முடைய நன்மைக்காக அவர் செய்திருக்கும் எல்லா ஏற்பாடுகள்மீதும் நமக்கிருக்கும் நன்றியுணர்வு பெருகுகிறது. (ரோ. 3:24) ‘புரிந்துகொள்ளும் திறனைப் பொறுத்ததில் முதிர்ச்சி அடைந்த’ ஒரு கிறிஸ்தவர், இப்படிப்பட்ட நன்றியுணர்வை வளர்த்துக்கொள்கிறார், யெகோவாவுடன் நெருங்கிய பந்தத்தையும் அனுபவிக்கிறார்.—1 கொ. 14:20.

16. ‘இருதயத்தைப் பலப்படுத்த’ ஒரு சகோதரிக்கு எது உதவியது?

16 லவிஸ் என்ற ஒரு சகோதரி ஞானஸ்நானம் பெற்று கொஞ்சக் காலத்திற்கு, மற்றவர்களிடம் நல்ல பெயர் வாங்கவே ஆன்மீகக் காரியங்களில் ஈடுபட்டதாக ஒத்துக்கொள்கிறார். “நான் தவறென்று எதையும் செய்யவில்லை, என்றாலும் யெகோவாவைச் சேவிக்க வேண்டுமென்ற ஆர்வம் எனக்குள் அந்தளவுக்கு இருக்கவில்லை. என்னால் முடிந்த அனைத்தையும் யெகோவாவுக்குக் கொடுக்கிறேன் என்ற உணர்வு எனக்குள் வரவேண்டுமென்றால், நான் சில மாற்றங்களைச் செய்ய வேண்டும் என்று உணர்ந்தேன். யெகோவாவின் வணக்கத்தில் முழு மனதுடன் ஈடுபடுவதுதான் நான் செய்ய வேண்டிய மிகப் பெரிய மாற்றமாக இருந்தது” என்கிறார் லவிஸ். இவ்வாறு முயற்சி செய்ததன் மூலம் லவிஸ் தன் ‘இருதயத்தைப் பலப்படுத்தினார்’; உடல்நலப் பிரச்சினையால் அவதிப்பட்டுக்கொண்டிருந்த சமயத்தில் அது அவருக்குப் பேருதவியாக இருந்தது. (யாக். 5:8) “நான் ரொம்பவே அவதிப்பட்டேன், ஆனால் நிஜமாகவே யெகோவாவிடம் நெருங்கிச் சென்றேன்” என்கிறார் அவர்.

‘இருதயப்பூர்வமாகக் கீழ்ப்படியுங்கள்’

17. கீழ்ப்படிந்திருப்பது முக்கியமாக முதல் நூற்றாண்டில் ஏன் அவசியமாக இருந்தது?

17 ‘முதிர்ச்சியை நோக்கி வேகமாக முன்னேறுங்கள்’ என்று எருசலேமிலும் யூதேயாவிலும் இருந்த முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்களுக்குப் பவுல் சொன்ன அறிவுரை உயிர்காக்கும் அறிவுரையாக இருந்தது. அதற்குக் கீழ்ப்படிந்தவர்களுக்கு ஆன்மீக ரீதியில் ஆழ்ந்த பகுத்துணர்வு இருந்ததால், இயேசு சொன்ன அறிகுறியைக் கண்டுகொண்டார்கள். ‘பாழாக்கும் அருவருப்பு பரிசுத்தமான இடத்தில் நிற்பதை,’ அதாவது ரோம சேனைகள் எருசலேமைச் சூழ்ந்து அதற்குள் ஊடுருவுவதை, அவர்கள் பார்த்தபோது இயேசு சொன்னபடி ‘மலைகளுக்குத் தப்பியோட’ அதுவே சமயம் என்பதைப் புரிந்துகொண்டார்கள். (மத். 24:15, 16) இயேசு தீர்க்கதரிசனமாகச் சொன்ன எச்சரிப்புக்குச் செவிசாய்த்த கிறிஸ்தவர்கள் எருசலேமின் அழிவுக்கு முன்பாகவே அந்நகரைவிட்டு ஓடிப்போனார்கள்; சர்ச் சரித்திராசிரியர் யூசிபியஸ் குறிப்பிட்டபடி, கீலேயாத் மலைப்பகுதியிலுள்ள பெல்லா என்ற நகரில் குடியேறினார்கள். இவ்வாறு, எருசலேமுக்கு வந்த படுமோசமான அழிவை அவர்கள் தப்பித்தார்கள்.

18, 19. (அ) கீழ்ப்படிந்திருப்பது நம் நாளில் ஏன் அத்தியாவசியம்? (ஆ) அடுத்த கட்டுரையில் எதைக் காணலாம்?

18 இன்றும்கூட முதிர்ச்சியை நோக்கி வேகமாக முன்னேறுவதன் மூலம் கீழ்ப்படிதலைக் காட்டுவது நம் உயிரைக் காக்கும்; ஆம், சரித்திரம் காணாதளவுக்கு “மிகுந்த உபத்திரவம் உண்டாகும்” என்று இயேசு சொன்ன தீர்க்கதரிசனத்தின் மாபெரும் நிறைவேற்றத்தின்போது அது நம் உயிரைக் காக்கும். (மத். 24:21) எதிர்காலத்தில் ‘உண்மையுள்ள நிர்வாகி’ அளிக்கப்போகும் எந்த அவசரக் கட்டளைக்கும் நாம் கீழ்ப்படிவோமா? (லூக். 12:42) ‘இருதயப்பூர்வமாகக் கீழ்ப்படிய’ கற்றுக்கொள்வது எவ்வளவு முக்கியம்!—ரோ. 6:17.

19 ஆகவே, முதிர்ச்சி அடைவதற்கு, நம் பகுத்தறியும் திறன்களைப் பயிற்றுவிக்க வேண்டும். கடவுளுடைய வார்த்தையை நன்கு தெரிந்துகொள்ள முயலுவதன் மூலமும் கீழ்ப்படியக் கற்றுக்கொள்வதன் மூலமும் இதைச் செய்யலாம். ஆனால், கிறிஸ்தவ முதிர்ச்சியை நோக்கி முன்னேறும்போது இளைஞர்கள் பல சவால்களைச் சந்திக்கிறார்கள். அவற்றை அவர்கள் எப்படி வெற்றிகரமாகச் சமாளிக்கலாம் என்பதை அடுத்த கட்டுரையில் காணலாம்.

[அடிக்குறிப்புகள்]

^ பாரா. 7 சில பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.

^ பாரா. 14 “தப்புதண்டா செய்யமாட்டேனு சொல்ல தைரியம் வேணும்” என்ற கட்டுரையை அக்டோபர் 1, 1999 காவற்கோபுரத்தில் பாருங்கள்.

என்ன கற்றுக்கொண்டீர்கள்?

• ஆன்மீக முதிர்ச்சி என்றால் என்ன, அதை நாம் எப்படி அடையலாம்?

• முதிர்ச்சியை நோக்கி வேகமாக முன்னேறுவதற்கு, கடவுளுடைய வார்த்தையைத் தெரிந்துகொள்வது எவ்விதத்தில் உதவுகிறது?

• நாம் எப்படிக் கீழ்ப்படிதலைக் கற்றுக்கொள்கிறோம்?

• முதிர்ச்சி அடைவது எவ்விதங்களில் நமக்கு நன்மை அளிக்கிறது?

[கேள்விகள்]

[பக்கம் 10-ன் படம்]

பைபிள் ஆலோசனைகளைக் கடைப்பிடிப்பது பிரச்சினைகளை முதிர்ச்சியோடு கையாள உதவுகிறது

[பக்கம் 12, 13-ன் படம்]

முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்கள் இயேசுவின் ஆலோசனையைப் பின்பற்றியதால் உயிர் பிழைத்தார்கள்