வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்
வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்
சாத்தான் எப்போது பரலோகத்திலிருந்து தள்ளப்பட்டான்?—வெளி. 12:1-9.
சாத்தான் எப்போது பரலோகத்திலிருந்து தள்ளப்பட்டான் என பைபிளிலுள்ள வெளிப்படுத்துதல் புத்தகம் திட்டவட்டமாகக் குறிப்பிடுவதில்லை; என்றாலும், அவன் எப்போது தள்ளப்பட்டான் என்பதைப் புரிந்துகொள்ள உதவும் தொடர் சம்பவங்களை அது குறிப்பிடுகிறது. அவற்றில் முதல் சம்பவம், மேசியானிய அரசாங்கம் ஸ்தாபிக்கப்பட்டதாகும். அதையடுத்து, “பரலோகத்தில் போர் மூண்டது”; அந்தப் போரில் சாத்தான் தோற்கடிக்கப்பட்டு பரலோகத்திலிருந்து கீழே தள்ளப்பட்டான்.
1914-ல் “புறதேசத்தாருக்குக் குறிக்கப்பட்ட காலங்கள்” முடிவடைந்து, கடவுளுடைய அரசாங்கம் ஸ்தாபிக்கப்பட்டதாக பைபிள் தெளிவாய்க் காட்டுகிறது. * (லூக். 21:24) அது நடந்து எவ்வளவு காலத்திற்குப் பின்பு பரலோகத்தில் போர் மூண்டு சாத்தான் கீழே தள்ளப்பட்டான்?
“அந்தப் பெண்ணுக்குக் குழந்தை பிறந்தவுடன் அதை விழுங்குவதற்காக அந்த ராட்சதப் பாம்பு [சாத்தான்] அவள்முன் நின்றுகொண்டே இருந்தது” என வெளிப்படுத்துதல் 12:4 குறிப்பிடுகிறது. புதிதாய் பிறந்த அரசாங்கத்தை, முடிந்தால் அது ஸ்தாபிக்கப்பட்ட உடனேயே, அழித்துப்போட சாத்தான் விரும்பியதை இது காட்டுகிறது. யெகோவா தலையிட்டு அவனுடைய பொல்லாத திட்டத்தைக் குலைத்துப்போட்டபோதிலும், புதிதாய் ஸ்தாபிக்கப்பட்ட அந்த அரசாங்கத்தை அழிப்பதிலேயே சாத்தான் குறியாக இருந்தான், அதற்காக விடாமல் முயற்சி செய்தும் வந்தான். அந்த அரசாங்கத்திற்கு எவ்வித தீங்கும் வராதிருப்பதற்காகத்தான், ‘மிகாவேலும் அவருடைய தூதர்களும்’ காலம் தாழ்த்தாமல் ‘ராட்சதப் பாம்பையும் அதனுடைய தூதர்களையும்’ பரலோகத்திலிருந்து வெளியேற்ற நடவடிக்கை எடுத்தார்கள். அப்படியென்றால், 1914-ல் அந்த அரசாங்கம் ஸ்தாபிக்கப்பட்ட சில காலத்திற்குள்ளாகவே சாத்தான் போரில் வீழ்த்தப்பட்டு கீழே தள்ளப்பட்டான் என்று தெரிகிறது.
நாம் கவனிக்க வேண்டிய மற்றொரு விஷயமும் இருக்கிறது; பைபிள் அளிக்கிற அத்தாட்சிப்படி, பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்களின் உயிர்த்தெழுதல் கடவுளுடைய அரசாங்கம் ஸ்தாபிக்கப்பட்ட சில காலத்திற்குள்ளாகவே ஆரம்பித்தது. * (வெளி. 20:6) ராட்சதப் பாம்புடனும் அதனுடைய தூதர்களுடனும் நடந்த போரில் இயேசுவோடு இந்தக் கிறிஸ்தவர்கள் எவருமே இருந்ததாகச் சொல்லப்படவில்லை; அதனால், அந்தப் பரலோகப் போரும் சாத்தான் மற்றும் அவனுடைய தூதர்கள் வெளியேற்றப்பட்டதும் கிறிஸ்துவின் சகோதரர்களுடைய உயிர்த்தெழுதல் ஆரம்பிப்பதற்கு முன்பாகவே நடந்து முடிந்திருக்க வேண்டும்.
ஆகவே, சாத்தானும் அவனுடைய தூதர்களும் எப்போது பரலோகத்திலிருந்து தள்ளப்பட்டார்களென பைபிள் திட்டவட்டமாகச் சொல்வதில்லை. என்றாலும், அது 1914-ல் இயேசு கிறிஸ்து பரலோகத்தில் ராஜாவாக முடிசூட்டப்பட்டு சில காலத்திற்குள்ளாகவே நடந்திருக்க வேண்டும் எனத் தெரிகிறது.
[அடிக்குறிப்புகள்]
^ பாரா. 4 பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது? புத்தகத்தில் பக்கங்கள் 215-218-ஐப் பாருங்கள்.
^ பாரா. 6 காவற்கோபுரம், ஜனவரி 1, 2007, பக்கங்கள் 27-8, பாராக்கள் 9-13-ஐப் பாருங்கள்.