Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

சவால் மேல் சவால்—பிள்ளைகளுக்கு! உதவும் பொறுப்பு—உங்களுக்கு!

சவால் மேல் சவால்—பிள்ளைகளுக்கு! உதவும் பொறுப்பு—உங்களுக்கு!

சவால் மேல் சவால்—பிள்ளைகளுக்கு! உதவும் பொறுப்பு—உங்களுக்கு!

நம்முடைய பிள்ளைகள் பல்வேறு பிரச்சினைகளால் விழிபிதுங்கி நிற்கிறார்கள். சாத்தானுடைய பொல்லாத உலகத்தின் சிந்தையால் கறைபடும் ஆபத்தில் இருக்கிறார்கள்; ‘இளமைப் பருவத்திற்குரிய ஆசைகளோடு’ போராடிக்கொண்டிருக்கிறார்கள். (2 தீ. 2:22; 1 யோ. 5:19) ‘தங்களுடைய சிருஷ்டிகரை நினைப்பதற்கு’ முயற்சி எடுப்பதால் கேலி கிண்டல்களைச் சந்திக்கிறார்கள்; சதா தொல்லையையும் அனுபவிக்கிறார்கள். தங்களுடைய மத நம்பிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிப்பவர்களிடமிருந்தே இவற்றையெல்லாம் எதிர்ப்படுகிறார்கள். (பிர. 12:1) வின்சென்ட் என்ற சகோதரர், தன் வாலிபப் பருவத்தை நினைத்துப் பார்த்து இவ்வாறு சொல்கிறார்: “எப்போது பார்த்தாலும் யாராவது எனக்குத் தொல்லை கொடுத்துக்கொண்டே இருப்பார்கள்; நான் ஒரு சாட்சி என்பதாலேயே சதா வம்புக்கு வருவார்கள். நிறையத் தடவை என்னால் தாங்க முடியாத அளவுக்குத் தொல்லை கொடுத்திருக்கிறார்கள், அப்போதெல்லாம் பள்ளிக்குப் போகவே எனக்குப் பிடிக்காது.” *

நம் பிள்ளைகள் இந்த உலகத்திலிருந்து வருகிற பிரச்சினைகளை எதிர்த்துப் போராடுவதோடு, சக வயதினரைப் போலிருக்க வேண்டுமென்ற ஆசையையும் எதிர்த்துப் போராட வேண்டியுள்ளது. “மற்றவர்கள் என்னை வித்தியாசமாகப் பார்க்கும்போது எனக்குச் சங்கடமாக இருக்கும்” என கத்லின் என்ற 16 வயது சகோதரி சொல்கிறார். ஆலன் என்ற ஓர் இளம் சகோதரர், “வாரக் கடைசியில் ஜாலியாக ஊர் சுற்றுவதற்கு என் பள்ளித் தோழர்கள் என்னை அடிக்கடி அழைத்தார்கள், எனக்கும் ஆசையாக இருந்தது” என்று ஒப்புக்கொள்கிறார். பள்ளியில் விளையாட்டு நிகழ்ச்சிகள் நடைபெறும்போது அதில் கலந்துகொள்ள இளைஞர்கள் துடிக்கலாம்; இதனால், கெட்ட சகவாசத்திற்குள் எளிதில் சிக்கிக்கொள்கிற அபாயம் இருக்கிறது. டான்யா என்ற ஓர் இளம் சகோதரி, “விளையாட்டு என்றால் எனக்குக் கொள்ளைப் பிரியம்” என்கிறார். “என்னை எப்படியாவது டீமில் சேர்த்துக்கொள்ள வேண்டுமென்று பயிற்சியாளர்கள் ஒற்றைக் காலில் நின்றார்கள். மாட்டேன் என்று சொல்வது எனக்குக் கஷ்டமாக இருந்தது” என்றும் அவர் சொல்கிறார்.

உங்கள் பிள்ளைகளுக்கு வருகிற பல்வேறு சவால்களைச் சமாளிக்க நீங்கள் எப்படி உதவலாம்? பிள்ளைகளுக்கு வழிகாட்டும்படி பெற்றோருக்கு யெகோவா கட்டளை கொடுத்திருக்கிறார். (நீதி. 22:6; எபே. 6:4) யெகோவாவுக்குக் கீழ்ப்படிய வேண்டுமென்ற ஆசையைத் தங்களுடைய பிள்ளைகளின் இருதயத்தில் ஊட்டி வளர்ப்பதே தேவபயமுள்ள பெற்றோரின் லட்சியமாக இருக்கிறது. (நீதி. 6:20-23) அப்படிச் செய்தால், பெற்றோருடன் இல்லாத சமயங்களில்கூட பிரச்சினைகளில் மாட்டிக்கொள்ளாதபடி பிள்ளைகள் கவனமாக இருப்பார்கள்.

பெற்றோருக்கு நிறையப் பொறுப்புகள் இருக்கின்றன. அடிப்படைத் தேவைகளுக்காக உழைப்பது, குடும்பத்தைப் பராமரிப்பது, சபைப் பொறுப்புகளைக் கையாளுவது ஆகிய அனைத்தையும் செய்ய வேண்டியிருக்கிறது. இவற்றைச் சிலர் ஒற்றை ஆளாகச் செய்ய வேண்டியுள்ளது, அல்லது சத்தியத்தில் இல்லாத துணையிடமிருந்து வருகிற எதிர்ப்பின் மத்தியில் செய்ய வேண்டியுள்ளது. இருந்தாலும், பெற்றோர் தங்களுடைய பிள்ளைகளுக்குக் கற்பிக்கவும் உதவியளிக்கவும் நேரம் செலவிட வேண்டுமென யெகோவா எதிர்பார்க்கிறார். ஆகவே, அன்றாடம் எதிர்ப்படுகிற சபலங்களிலிருந்தும், நண்பர்களிடமிருந்து வருகிற பிரச்சினைகளிலிருந்தும் தொல்லைகளிலிருந்தும் உங்கள் பிள்ளைகளைப் பாதுகாக்க நீங்கள் என்ன செய்யலாம்?

யெகோவாவோடு உள்ள பந்தம்

முதலில், யெகோவா உண்மையான ஒரு நபர் என்பதை நம் இளம் பிள்ளைகள் உணர வேண்டும். ‘காணமுடியாதவரைக் காண’ அவர்களுக்குப் பெற்றோர் உதவ வேண்டும். (எபி. 11:27) முன்பு குறிப்பிடப்பட்ட வின்சென்ட், யெகோவாவோடு பந்தத்தை வளர்த்துக்கொள்ள தன் பெற்றோர் எப்படி உதவினார்கள் என்று சொல்கிறார்: “ஜெபம் செய்வதன் அவசியத்தை அவர்கள் எனக்குக் கற்றுக்கொடுத்தார்கள். சின்ன வயதிலேயே தினமும் இரவு படுக்கைக்குப் போவதற்குமுன் யெகோவாவிடம் ஜெபம் செய்தது எனக்கு ஞாபகமிருக்கிறது. யெகோவா எனக்கு ஒரு நிஜமான நபராக இருந்தார்.” நீங்கள் உங்களுடைய பிள்ளைகளோடு சேர்ந்து ஜெபம் செய்கிறீர்களா? அவர்கள் எப்படி ஜெபம் செய்கிறார்கள் என்று கவனிக்கிறீர்களா? அவர்கள் சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்கிறார்களா? அல்லது, யெகோவாவைக் குறித்துத் தாங்கள் உண்மையில் என்ன நினைக்கிறார்களோ அதைக் குறிப்பிடுகிறார்களா? அவர்களுடைய ஜெபங்களைக் கவனிப்பதன் மூலம் ஆன்மீக ரீதியில் எந்தளவு முன்னேறியிருக்கிறார்கள் என்பதை நீங்கள் தெரிந்துகொள்ளலாம்.

இளம் பிள்ளைகள் யெகோவாவிடம் நெருக்கமான பந்தத்தை வளர்த்துக்கொள்வதற்கு இன்னொரு முக்கிய வழி, அவருடைய வார்த்தையைத் தனிப்பட்ட விதத்தில் வாசிப்பதாகும். முன்பு குறிப்பிடப்பட்ட கத்லின் சொல்கிறார்: “சிறு வயதிலேயே பைபிளை முழுமையாக வாசித்தது எனக்கு உதவியாக இருந்தது. மற்றவர்கள் எனக்கு எதிராகச் செயல்பட்டாலும் யெகோவா எனக்குப் பக்கபலமாக இருக்கிறார் என்ற நம்பிக்கையைத் தந்தது.” உங்கள் பிள்ளைகளுக்கும் தனிப்பட்ட பைபிள் வாசிப்புப் பழக்கம் இருக்கிறதா?—சங். 1:1-3; 77:12.

பிள்ளைகள் எல்லாருமே பெற்றோரின் வழிநடத்துதலை ஒரே விதமாக ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அதோடு, அவர்களது வயதுக்கேற்ப ஆன்மீக வளர்ச்சியும் மாறுபடும். என்றாலும், சரியான வழிநடத்துதல் இல்லாமல் யெகோவாவை நிஜமான ஒரு நபராக அவர்களால் அறிந்துகொள்ளவே முடியாது. பிள்ளைகளுக்கு, கடவுளுடைய வார்த்தையைப் பெற்றோர் கருத்தாய்ப் போதிக்க வேண்டும். அப்போதுதான், பிள்ளைகள் எங்கிருந்தாலும் யெகோவாவின் வார்த்தை தங்கள் காதில் ஒலிப்பதுபோல் உணருவார்கள். (உபா. 6:6-9) யெகோவா தனிப்பட்ட விதத்தில் தங்கள்மீது அக்கறை காட்டுகிறார் என்பதை உங்கள் பிள்ளைகள் நம்புவது அவசியம்.

அர்த்தமுள்ள பேச்சுத்தொடர்பு

உங்கள் பிள்ளைகளுக்கு உதவ இன்னொரு முக்கிய வழி பேச்சுத்தொடர்பாகும். அவர்களிடம் பேசுவது மட்டுமே நல்ல பேச்சுத்தொடர்பு என்று சொல்லிவிட முடியாது. கேள்விகள் கேட்பதும், அவர்கள் சொல்கிற பதில்களைக் காதுகொடுத்துக் கேட்பதும்கூட அவசியம்; நீங்கள் எதிர்பார்க்கிற பதில்களை அவர்கள் சொல்லாவிட்டாலும் அப்படிக் கேட்பது அவசியம். ஆன் என்பவர் இரண்டு மகன்களுக்குத் தாய்; “என் மகன்களுடைய மனதில் என்ன இருக்கிறது, என்ன மாதிரியான பிரச்சினைகளை அவர்கள் சமாளிக்க வேண்டியிருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள பல கேள்விகளைக் கேட்கிறேன்” என்கிறார் அவர். தாங்கள் சொல்வதை நீங்கள் காதுகொடுத்துக் கேட்கிறீர்களென உங்கள் பிள்ளைகள் உணருகிறார்களா? முன்பு குறிப்பிடப்பட்ட டான்யா கூறுகிறார்: “என் பெற்றோர் நான் சொல்வதையெல்லாம் காதுகொடுத்துக் கேட்டார்கள், ஏற்கெனவே பேசியிருந்த விஷயங்களை ஞாபகத்தில் வைத்திருந்தார்கள். என் பள்ளி நண்பர்களின் பெயர்களைத் தெரிந்து வைத்திருந்தார்கள். அவர்களைப் பற்றியும், நாங்கள் பேசிய மற்ற விஷயங்களைப் பற்றியும் கேட்பார்கள்.” ஆகவே, காதுகொடுத்துக் கேட்பதும் கேட்டவற்றை நினைவில் வைப்பதும் நல்ல பேச்சுத்தொடர்புக்கு அவசியம்.

அர்த்தமுள்ள பேச்சுத்தொடர்புக்கு, சாப்பாட்டு நேரம் சிறந்த நேரம்; இதை அநேக குடும்பங்கள் அனுபவத்தில் கண்டிருக்கின்றன. வின்சென்ட் சொல்கிறார்: “எங்கள் குடும்பத்தில் எல்லாருமாகச் சேர்ந்து சாப்பிடுவதற்கு முக்கியத்துவம் கொடுத்தோம். சாப்பாட்டு நேரத்தில் எல்லாரும் வீட்டில் இருந்தால் சேர்ந்துதான் சாப்பிடுவோம். டிவி பார்த்துக்கொண்டோ, பாட்டு கேட்டுக்கொண்டோ, புத்தகம் வாசித்துக்கொண்டோ சாப்பிட அனுமதி இருக்கவில்லை. அந்தச் சமயத்தில் ஜாலியாகப் பேசுவது எங்கள் வழக்கமாய் இருந்தது; அதனால், பள்ளியில் அன்றாடம் சந்தித்த பிரச்சினைகளையும் தொல்லைகளையும் சமாளிக்கத் தெம்பு கிடைத்தது.” அவர் மேலும் சொல்கிறார்: “சாப்பாட்டு வேளைகளில் என் பெற்றோருடன் மனந்திறந்து பேசுகிற பழக்கம் இருந்ததால், பெரிய பிரச்சினைகள் வந்த சமயங்களில் அவர்களோடு பேசுவது சுலபமாக இருந்தது.”

அப்படியானால், ‘ஒரு வாரத்தில் எத்தனை முறை குடும்பமாகச் சேர்ந்து சாப்பிடுகிறோம்?’ என உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள். இந்த விஷயத்தில் நீங்கள் மாற்றங்களைச் செய்ய வேண்டியிருக்கிறதா? அப்படிச் செய்வது உங்கள் பிள்ளைகளோடு சிறந்த விதத்தில் பேச்சுத்தொடர்பு கொள்ள நிறைய வாய்ப்புகளை அளிக்கலாம்.

ஒத்திகை பார்ப்பது மிக முக்கியம்

வாரந்தோறும் ஒரு மாலை நேரத்தில் குடும்ப வழிபாட்டுக்காக ஒன்றுகூடுவதும்கூட அர்த்தமுள்ள பேச்சுத்தொடர்புக்கு உதவுகிறது; குறிப்பிட்ட சில பிரச்சினைகளைச் சமாளிக்க இளம் பிள்ளைகளுக்கு உதவுகிறது. முன்பு குறிப்பிடப்பட்ட ஆலன் இவ்வாறு கூறுகிறார்: “எங்களுடைய மனதில் என்ன இருக்கிறதென்று குடும்பப் படிப்பின்போது எங்கள் பெற்றோர் தெரிந்துகொண்டார்கள். எங்களுக்கு இருந்த பிரச்சினைகளைச் சமாளிக்க உதவிய விஷயங்களை அப்போது கலந்தாலோசித்தார்கள்.” ஆலனின் அம்மா சொல்கிறார்: “பிரச்சினைகளை எப்படிச் சமாளிப்பதென்பதை ஒத்திகை பார்ப்பதற்காகக் குடும்பப் படிப்பில் கொஞ்ச நேரத்தைச் செலவிட்டோம். இப்படிச் செய்தபோது, தங்களுடைய நம்பிக்கையைக் குறித்துத் தயங்காமல் பேசுவதற்கும், அதுவே சரியென நிரூபிப்பதற்கும் பிள்ளைகள் கற்றுக்கொண்டார்கள். இதனால், தாங்கள் எதிர்ப்பட்ட சவால்களைச் சந்திக்கத் தேவையான தன்னம்பிக்கையைப் பெற்றார்கள்.”

சக நண்பர்கள் எதையாவது செய்யச் சொல்லி வற்புறுத்தும்போது, ‘முடியாது!’ என்று சொல்லிவிட்டு நடையைக்கட்டினால் மட்டும் போதாது. ஏன் முடியாது என்பதையும் பிள்ளைகள் பெரும்பாலான சமயங்களில் விளக்க வேண்டியிருக்கும். அதோடு, தங்கள் விசுவாசத்தை முன்னிட்டு கேலி கிண்டல்களை எதிர்ப்படும்போது என்ன செய்ய வேண்டுமென்பதை அவர்கள் அறிந்திருக்க வேண்டும். தங்களுடைய நம்பிக்கைகளைக் குறித்துத் தைரியமாகப் பேசத் தெரியாவிட்டால், உண்மை வணக்கத்தின் சார்பில் உறுதியாய் நிற்க முடியாமற்போய்விடும். எனவே, பிரச்சினைகளைச் சமாளிப்பதைக் குறித்து ஒத்திகை பார்ப்பது அவர்களது தன்னம்பிக்கையை வளர்க்கும்.

உங்களுடைய குடும்ப வழிபாட்டு நேரத்தில் எப்படிப்பட்ட விஷயங்களை ஒத்திகை பார்க்கலாமென பக்கம் 18-ல் உள்ள பெட்டியில் பட்டியலிடப்பட்டுள்ளது. உங்கள் பிள்ளைகள் சொல்கிற பதில்களுக்கு எதிர்க் கேள்விகளைக் கேட்பதன் மூலம் அந்த ஒத்திகையை எதார்த்தமாக்குங்கள். அதோடு, பைபிள் கதாபாத்திரங்களிலிருந்து நாம் கற்றுக்கொள்கிற நடைமுறையான பாடங்களில் சிலவற்றையும் கலந்தாலோசியுங்கள். வீட்டில் இப்படிப்பட்ட பயிற்சி அளிக்கும்போது, பள்ளியிலும் சரி வேறு இடங்களிலும் சரி, தாங்கள் எதிர்ப்படுகிற சவால்களைப் பிள்ளைகள் வெற்றிகரமாகச் சமாளிப்பார்கள்.

வீடுபுகலிடமா?

பள்ளி முடிந்தவுடன் எப்போது வீட்டிற்குப் போவோமென்று உங்கள் பிள்ளைகள் ஏங்குகிறார்களா? உங்கள் வீடு புகலிடமாக இருந்தால் நிச்சயம் அப்படி ஏங்குவார்கள்; அதோடு, அன்றாடப் பிரச்சினைகளை எளிதில் சமாளிப்பார்கள். இப்போது பெத்தேலில் சேவை செய்கிற ஒரு சகோதரி இவ்வாறு கூறுகிறார்: “நினைவுதெரிந்த நாளிலிருந்தே எங்கள் வீடு ஒரு புகலிடமாய் இருந்திருக்கிறது; பள்ளியில் எப்படிப்பட்ட பிரச்சினை வந்திருந்தாலும் சரி, வீட்டிற்கு வந்ததுமே அதெல்லாம் சுத்தமாக மறந்துவிடும்.” உங்கள் வீட்டுச் சூழல் எப்படி இருக்கிறது? “கோபாவேசம், வாக்குவாதம், பிரிவினை” குடிகொள்கிற குகையாக இருக்கிறதா அல்லது “அன்பு, சந்தோஷம், சமாதானம்” தவழ்கிற அமைதிப் பூங்காவாக இருக்கிறதா? (கலா. 5:19-23) உங்கள் வீட்டில் அடிக்கடி சமாதானம் தொலைந்துபோகிறதென்றால், அதை அமைதிப் பூங்காவாக ஆக்குவதற்குத் தேவையான மாற்றங்களைச் செய்யுங்கள்; அதற்காகக் கடினமாய் உழையுங்கள்.

உங்கள் பிள்ளைகளுக்கு உதவ மற்றொரு வழி, ஊக்கமூட்டுகிற தோழமையை அவர்களுக்கு ஏற்படுத்திக் கொடுப்பதாகும். உதாரணத்திற்கு, நீங்கள் குடும்பமாகச் சேர்ந்து ஏதாவது பொழுதுபோக்கில் ஈடுபடும்போது, உங்கள் சபையிலுள்ள ஆன்மீக முதிர்ச்சியுடைய சகோதர சகோதரிகள் சிலரையும் சேர்த்துக்கொள்ளலாம். பயணக் கண்காணியையோ முழுநேர ஊழியம் செய்கிறவர்களையோ உங்கள் வீட்டிற்கு அழைத்து உபசரிக்கலாம். மிஷனரிகளை அல்லது பெத்தேல் ஊழியர்களை உங்களுக்குத் தெரிந்திருந்தால், அவர்களோடு உங்கள் பிள்ளைகள் நட்பை வளர்த்துக்கொள்ள உதவலாம். நேருக்கு நேர் சந்திக்க முடியாவிட்டாலும், கடிதம் மூலமாகவோ, ஈ-மெயில் மூலமாகவோ, டெலிஃபோன் மூலமாகவோ அவர்களோடு நட்பை வளர்த்துக்கொள்ள உதவலாம். உங்கள் பிள்ளைகள் நேர்வழியில் செல்வதற்கும், ஆன்மீக லட்சியங்களை வைத்து அதற்காக உழைப்பதற்கும் அப்படிப்பட்ட நட்பு அவர்களுக்குக் கைகொடுக்கும். இளம் தீமோத்தேயுமீது அப்போஸ்தலன் பவுல் ஏற்படுத்திய நல்ல தாக்கத்தைப் பற்றிச் சிந்தித்துப் பாருங்கள். (2 தீ. 1:13; 3:10) தீமோத்தேயு, பவுலோடு நெருங்கிய தோழமை கொண்டிருந்ததால் ஆன்மீக லட்சியங்கள்மீது முழு கவனம் செலுத்த முடிந்தது.—1 கொ. 4:17.

பிள்ளைகளைப் பாராட்டுங்கள்

சாத்தானின் உலகத்திலிருந்து இளம் பிள்ளைகளுக்கு ஏராளமான பிரச்சினைகள் வருகின்றன; அவற்றின் மத்தியிலும் அவர்கள் சரியான காரியங்களைச் செய்வதில் உறுதியாக இருக்கிறார்கள்; அதைப் பார்த்து யெகோவா சந்தோஷப்படுகிறார். (சங். 147:11; நீதி. 27:11) உங்கள் பிள்ளைகள் ஞானமான வழியில் நடக்கத் தீர்மானித்திருப்பதைக் கண்டு நீங்களும்கூட மகிழ்ச்சி அடைகிறீர்கள். (நீதி. 10:1) உங்கள் பிள்ளைகளைக் குறித்து நீங்கள் எப்படி உணருகிறீர்கள் என்பதை அவர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்; அவர்களை மனதார பாராட்டுங்கள். இவ்விஷயத்தில் பெற்றோர்களுக்கு யெகோவா அருமையான முன்மாதிரி வைத்திருக்கிறார். இயேசு ஞானஸ்நானம் எடுத்த சமயத்தில், “நீ என் அன்பு மகன்; நான் உன்னை அங்கீகரிக்கிறேன்” என்று யெகோவா சொன்னார். (மாற். 1:11) தம் தகப்பன் இப்படிச் சொன்னது சோதனைகளைச் சமாளிக்க இயேசுவுக்கு எவ்வளவாய்த் தெம்பளித்திருக்கும்! எனவே, உங்கள் பிள்ளைகளை நீங்கள் நேசிக்கிறீர்கள் என்பதை வெளிக்காட்டுங்கள்; அவர்கள் செய்கிற சாதனைகளுக்குப் பாராட்டுத் தெரிவியுங்கள்.

பிரச்சினைகளிலிருந்தும் தொல்லைகளிலிருந்தும் கேலி கிண்டல்களிலிருந்தும் உங்கள் பிள்ளைகளை நீங்கள் முழுமையாகப் பாதுகாக்க முடியாதென்பது உண்மையே. இருந்தாலும், நிறைய வழிகளில் உங்களால் அவர்களுக்கு உதவ முடியும். எவ்வழிகளில்? யெகோவாவோடு நெருக்கமான பந்தத்தை வளர்த்துக்கொள்ள அவர்களுக்கு உதவுங்கள். அர்த்தமுள்ள பேச்சுத்தொடர்பு கொள்வதற்கு ஏற்ற அருமையான சூழலை உருவாக்குங்கள். குடும்ப வழிபாட்டு நேரத்தை நடைமுறையானதாக ஆக்குங்கள். உங்கள் வீட்டை அமைதிப் பூங்காவாக ஆக்குங்கள். இப்படியெல்லாம் செய்தால், தங்களுக்கு வருகிற பல்வேறு பிரச்சினைகளை உங்கள் பிள்ளைகள் வெற்றிகரமாகச் சமாளிப்பார்கள்.

[அடிக்குறிப்பு]

^ பாரா. 2 இந்தக் கட்டுரையில் சில பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.

[பக்கம் 18-ன் பெட்டி/படம்]

ஒத்திகை பார்ப்பதற்கான விஷயங்கள்

இளம் பிள்ளைகள் சந்திக்கிற பிரச்சினைகளுக்குச் சில உதாரணங்கள் கீழே தரப்பட்டுள்ளன. இவற்றில் சிலவற்றை உங்கள் குடும்ப வழிபாட்டு நேரத்தில் ஒத்திகை பார்க்கலாம், அல்லவா?

▸ பள்ளி விளையாட்டுக் குழுவில் சேரும்படி அதன் பயிற்சியாளர் உங்கள் மகளிடம் சொல்கிறார்.

▸ பள்ளியிலிருந்து வீடுதிரும்பும் வழியில் சிகரெட் குடிக்கும்படி உங்கள் மகனை அவனது நண்பர்கள் வற்புறுத்துகிறார்கள்.

▸ ‘இனிமேல் நீ உன் மதத்தைப் பற்றிப் பேசினால் உன்னைத் தொலைத்துவிடுவோம்’ என்று சில பையன்கள் உங்கள் மகனை மிரட்டுகிறார்கள்.

▸ உங்கள் மகள் வீட்டுக்கு வீடு ஊழியம் செய்யும்போது தன்னுடன் படிக்கும் ஒரு பையனையோ பெண்ணையோ சந்திக்கிறாள்.

▸ ஏன் கொடிவணக்கம் செய்வதில்லை என்று வகுப்பிலுள்ள அனைவர் முன்பும் ஆசிரியர் உங்கள் மகளிடம் கேட்கிறார்.

▸ உங்கள் மகன் யெகோவாவின் சாட்சியாய் இருப்பதால் அவனை ஒரு பையன் சதா கேலி செய்கிறான்.

[பக்கம் 17-ன் படம்]

உங்கள் பிள்ளைகளுக்குத் தனிப்பட்ட பைபிள் வாசிப்புப் பழக்கம் இருக்கிறதா?

[பக்கம் 19-ன் படம்]

பொழுதுபோக்கில் குடும்பமாக ஈடுபடும்போது, ஆன்மீக முதிர்ச்சியுள்ள சகோதர சகோதரிகளைச் சேர்த்துக்கொள்கிறீர்களா?