சாத்தானின் ஆட்சிக்கு வீழ்ச்சி உறுதி!
சாத்தானின் ஆட்சிக்கு வீழ்ச்சி உறுதி!
“துன்மார்க்கனோ நன்றாயிருப்பதில்லை.”—பிர. 8:13.
1. துன்மார்க்கருக்குத் தண்டனைத் தீர்ப்பு கிடைக்கும் என்பது ஏன் ஆறுதலான செய்தி?
துன்மார்க்கர் தண்டனைக்குத் தப்ப முடியாது. இன்றோ நாளையோ, அவர்கள் தண்டனையை அனுபவித்தே தீர வேண்டும். கடவுளுக்குக் கணக்குக் கொடுத்தே ஆக வேண்டும். (நீதி. 5:22; பிர. 8:12, 13) நீதியை நேசிப்போருக்கும், அநியாயத்தையும் கொடுமைகளையும் அனுபவிப்போருக்கும் இது ஆறுதலான செய்தி! தண்டனை பெறப்போகிறவர்களின் பட்டியலில் துன்மார்க்கரின் தகப்பனாகிய சாத்தான் முதலிடம் வகிக்கிறான்.—யோவா. 8:44.
2. ஏதேனில் எழுந்த விவாதத்தைத் தீர்க்க ஏன் காலம் தேவைப்பட்டது?
2 யெகோவாவுடைய ஆட்சியை உதறித்தள்ளும்படி ஏதேன் தோட்டத்திலிருந்த மனிதர்களைச் சாத்தான் தூண்டினான்; தன்னைப் பற்றிய மிதமிஞ்சின எண்ணத்தால் அப்படிச் செய்தான். யெகோவாவின் நீதிதவறாத ஆட்சியை எதிர்த்து அவன் சவால்விட்டபோது நம் முதல் பெற்றோர் அவன் பக்கம் சேர்ந்துகொண்டார்கள், கடவுளுடைய பார்வையில் பாவிகளானார்கள். (ரோ. 5:12-14) அவர்களுடைய அவமரியாதையான, கலகத்தனமான நடத்தையால் ஏற்படும் விளைவுகளை யெகோவா அறிந்திருந்தார். அந்த விளைவுகளைத் தேவதூதர்களுக்கும் மனிதர்களுக்கும் தெரியப்படுத்த அவர் விரும்பினார். எனவே, ஏதேனில் எழுந்த விவாதத்தைத் தீர்க்கவும், இந்தக் கலகக்காரர்கள் செய்தது மிகப் பெரிய அநியாயம் என்பதைச் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கவும் காலம் தேவைப்பட்டது.
3. மனித அரசாங்கங்களைக் குறித்து நமக்கு இருக்க வேண்டிய கண்ணோட்டம் என்ன?
3 யெகோவாவின் அரசாட்சியை மனிதர்கள் ஒதுக்கித் தள்ளிவிட்டு, தங்களுக்கென்று வெவ்வேறு அரசாங்கங்களை ஏற்படுத்திக்கொண்டார்கள். ரோமிலிருந்த சக கிறிஸ்தவர்களுக்கு அப்போஸ்தலன் பவுல் எழுதியபோது, அந்த அரசாங்கங்களைத்தான் ‘அதிகாரத்தில் இருக்கிறவர்கள்’ எனக் குறிப்பிட்டார். பவுலின் காலத்தில் அப்படி அதிகாரத்திலிருந்த ஒருவர் நீரோ மன்னர் ஆவார்; இவர் ரோமப் பேரரசை கி.பி. 54 முதல் 68 வரை அரசாண்டார். அதிகாரத்தில் இருக்கிறவர்களை, ‘தமக்குக் கீழ்ப்பட்ட ஸ்தானங்களில் இருக்கும்படி கடவுள் அனுமதித்திருக்கிறார்’ எனவும் பவுல் குறிப்பிட்டார். (ரோமர் 13:1, 2-ஐ வாசியுங்கள்.) அதிகாரத்தில் இருக்கிறவர்களுக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டுமென்றும் அவர் சொன்னதால், கடவுளுடைய ஆட்சியை விட மனித ஆட்சி மேலானது என அர்த்தப்படுத்தினாரா? இல்லவே இல்லை. மனித அரசாங்கங்களைக் கடவுள் எவ்வளவு காலத்திற்கு அனுமதிக்கிறாரோ அவ்வளவு காலத்திற்கு ‘அவருடைய இந்த ஏற்பாட்டை’ கிறிஸ்தவர்கள் மதிக்க வேண்டுமென்றும், அதன் ஆட்சியாளர்களை ஏற்றுக்கொள்ள வேண்டுமென்றுமே அவர் அர்த்தப்படுத்தினார்.
அழிவுக்கு வழிநடத்தும் பாதை
4. மனித ஆட்சி ஏன் வீழ்ச்சி அடையும் என விளக்குங்கள்.
4 சாத்தானுடைய கைப்பாவையாகச் செயல்படுகிற மனித ஆட்சி வீழ்ச்சி அடைவது உறுதி. ஏன்? ஒரு காரணம், அது கடவுளுடைய ஞானத்தின் அடிப்படையில் செயல்படுவதில்லை. யெகோவா ஒருவரே பரிபூரண ஞானம் உள்ளவர். எனவே, வெற்றிகரமான ஆட்சியை அமைப்பதற்கு அவரால் மட்டுமே நம்பகமான வழிநடத்துதலைத் தர முடியும். (எரே. 8:9; ரோ. 16:27) பெரும்பாலும், மனிதர்கள் அனுபவப்பட்டுத்தான் பாடம் கற்றுக்கொள்கிறார்கள்; ஆனால், யெகோவாவுக்கு அனுபவப் பாடம் அவசியமில்லை. மிகச் சிறந்த வழி எதுவென்று அவருக்கு நன்றாகத் தெரியும். அவருடைய வழிநடத்துதலை ஏற்றுக்கொள்ளாத எந்த அரசாங்கமும் வீழ்ச்சிதான் அடையும். இதன் காரணமாகவும் சாத்தானுடைய தீய உள்நோக்கத்தின் காரணமாகவும் அவனுடைய ஆட்சி வீழ்ச்சி அடைவது உறுதி என்பது தொடக்கத்திலேயே தெரிந்துவிட்டது.
5, 6. யெகோவாவுக்கு விரோதமான பாதையில் சாத்தான் சென்றதற்குக் காரணம் என்ன?
5 தான் செய்யப்போகும் காரியம் தோல்வி அடையும் என்பது தெரிந்திருந்தால் புத்தியுள்ள நபர் துணிந்து அதில் இறங்க மாட்டார். செய்தே தீருவேன் எனப் பிடிவாதமாக இருந்தால், பிற்பாடு தன் தவறை அவர் உணர வேண்டியிருக்கும். சர்வ வல்லமையுள்ள படைப்பாளருக்கு விரோதமாக யார் செயல்பட்டாலும் அவர் வெற்றியடைய மாட்டார் என்பதைச் சரித்திரம் பல தடவை நிரூபித்திருக்கிறது. (நீதிமொழிகள் 21:30-ஐ வாசியுங்கள்.) சாத்தான் அகம்பாவத்தாலும் தன்னைப் பற்றிய மிதமிஞ்சின எண்ணத்தாலும் யெகோவாவுக்கு எதிராகச் செயல்பட்டான். இவ்வாறு, அழிவுக்கு வழிநடத்தும் பாதையில் துணிந்து இறங்கினான்.
6 சாத்தானின் இதே மனநிலையை பாபிலோனிய அரசன் ஒருவன் வெளிக்காட்டினான்; அவன் இப்படிப் பெருமை பேசியதாக நாம் வாசிக்கிறோம்: “நான் வானத்துக்கு ஏறுவேன், தேவனுடைய நட்சத்திரங்களுக்கு மேலாக என் சிங்காசனத்தை உயர்த்துவேன்; வடபுறங்களிலுள்ள ஆராதனைக் கூட்டத்தின் பர்வதத்திலே வீற்றிருப்பேன் என்றும், நான் மேகங்களுக்கு மேலாக உன்னதங்களில் ஏறுவேன்; உன்னதமானவருக்கு ஒப்பாவேன் என்றும் நீ உன் இருதயத்தில் சொன்னாயே. ஆனாலும் நீ அகாதமான பாதாளத்திலே தள்ளுண்டுபோனாய்.” (ஏசா. 14:13-15) இந்த அரசன் முட்டாள்தனமாக மேற்கொண்ட காரியம் தோல்வி அடைந்தது; அதோடு, பாபிலோனிய அரச பரம்பரை வெட்கக்கேடான முடிவைச் சந்தித்தது. அதுபோல, சாத்தானும் அவனுடைய உலகத்தைச் சேர்ந்தவர்களும் முற்றிலுமாக வீழ்ச்சி அடைவார்கள்.
கடவுள் ஏன் அனுமதித்தார்?
7, 8. யெகோவா சிலகாலம் துன்மார்க்கத்தை அனுமதித்திருப்பதால் என்ன நன்மைகள் வந்திருக்கின்றன?
7 மனிதர்கள் சாத்தானின் பக்கம் சேர்ந்துகொண்டபோதும், படுதோல்வி அடையவிருந்த ஓர் ஆட்சியைத் தங்களுக்கென்று ஏற்படுத்தியபோதும் யெகோவா ஏன் அவர்களைத் தடுக்கவில்லை எனச் சிலர் யோசிக்கலாம். அவர் சர்வ வல்லமையுள்ள கடவுளாக இருப்பதால், நிச்சயம் அவர்களைத் தடுத்திருக்க முடியும். (யாத். 6:3) ஆனால், அவர் தடுக்கவில்லை. மனிதர்களுடைய கலகத்திற்கு உடனடியாக முடிவுகட்டாமல் கொஞ்சக் காலம் அதை அனுமதித்தால் பிற்பாடு நல்ல பலன்கள் விளையும் என்பதைத் தம்முடைய ஞானத்தால் அவர் அறிந்திருந்தார். ஆம், யெகோவாவே நீதியுள்ள, அன்புள்ள அரசர் என்பது காலப்போக்கில் நிரூபணமாகும், உண்மையுள்ள மனிதர்களுக்கு நன்மைகளும் கிடைக்கும்.
8 மனிதர்கள் சாத்தானுடைய தூண்டுதலை நிராகரித்திருந்தால், கடவுளுடைய ஆட்சியிலிருந்து விலகாமல் இருந்திருந்தால், எவ்வளவோ துன்பங்களைத் தவிர்த்திருக்கலாம்! என்றாலும், தங்களுக்கென்று ஆட்சியை அமைத்துக்கொள்ள மனிதர்களைக் கடவுள் அனுமதித்ததால் சில நன்மைகளும் விளைந்திருக்கின்றன. கடவுளுடைய பேச்சைக் கேட்டு அவர்மீது நம்பிக்கை வைப்பதே ஞானமான செயல் என்பது நல்மனமுள்ளவர்களின் மனதில் ஆணித்தரமாகப் பதிந்திருக்கிறது. கடந்த பல நூற்றாண்டுகளாக, மனிதர்கள் பல்வேறு ஆட்சி முறைகளை முயன்று பார்த்திருந்தாலும், எந்த ஆட்சியும் நல்லாட்சியாக அமையவில்லை. இந்த உண்மை, யெகோவாவின் ஆட்சியே மிகச் சிறந்தது என்ற நம்பிக்கையை அவருடைய வணக்கத்தாருக்கு ஊர்ஜிதப்படுத்தியிருக்கிறது. சாத்தானுடைய தீய ஆட்சியை யெகோவா தற்காலிகமாக அனுமதித்திருப்பதால் அவருடைய உண்மை வணக்கத்தார் உட்பட மனிதர்கள் எல்லாருக்குமே துன்ப துயரங்கள் வந்திருக்கின்றன என்பது உண்மைதான்; என்றாலும், அவரது வணக்கத்தாருக்கு நன்மைகளும் விளைந்திருக்கின்றன.
சாத்தானின் கலகம் —யெகோவாவுக்கு மகிமை!
9, 10. சாத்தானின் ஆட்சி யெகோவாவுக்கு மகிமை சேர்த்திருப்பது எப்படி?
9 சாத்தானுடைய செல்வாக்கின் கீழ் மனிதர்கள் தங்களைத் தாங்களே ஆட்சி செய்துகொள்ள யெகோவா அனுமதித்திருப்பது அவருடைய ஆட்சியை எந்த விதத்திலும் மட்டம்தட்டுவதாக இல்லை. மாறாக, அவருக்கு மகிமை சேர்த்திருக்கிறது. மனிதர்களால் தங்களைத் தாங்களே ஆண்டுகொள்ள முடியாது எனக் கடவுளுடைய சக்தியின் தூண்டுதலால் எரேமியா எழுதினார்; இந்த வார்த்தைகள் நூற்றுக்கு நூறு உண்மை என்பதைச் சரித்திரம் நிரூபித்திருக்கிறது. (எரேமியா 10:23-ஐ வாசியுங்கள்.) தம்முடைய முத்தான குணங்களை இன்னும் சிறப்பாக வெளிக்காட்டவும் சாத்தானின் கலகம் யெகோவாவுக்கு வாய்ப்பளித்திருக்கிறது. எப்படி?
10 சாத்தானுடைய ஆட்சியால் விளைந்திருக்கும் தீமைகளைப் பார்க்கும்போது யெகோவாவின் பரிபூரண குணங்கள் முன்பு எப்போதையும்விட இப்போது மிகத் தெளிவாகத் தெரிகின்றன. இதனால், அவரை நேசிக்கிறவர்களின் நெஞ்சங்களில் அவர் உயர்ந்து நிற்கிறார். சாத்தானுடைய ஆட்சி உண்மையில் கடவுளுக்கு மகிமையைத்தான் சேர்த்திருக்கிறது! முரண்பாடுபோல் தெரிகிறது, அல்லவா? ஆனால், இதுவே உண்மை. யெகோவாவின் பேரரசாட்சியைக் குறித்து சாத்தான் எழுப்பிய சவாலை அவர் சிறப்பான விதத்தில் கையாண்டிருக்கிறார் என்பதை அவனுடைய ஆட்சி எடுத்துக்காட்டியிருக்கிறது. இந்தக் குறிப்பைப் புரிந்துகொள்ள, யெகோவாவின் குணங்கள் சிலவற்றைச் சுருக்கமாகச் சிந்திப்போம்; சாத்தானுடைய தீய ஆட்சியின் மத்தியில் இந்தக் குணங்களை இன்னும் எவ்விதங்களில் அவர் காட்டியிருக்கிறார் என்பதையும் சிந்திப்போம்.
11. யெகோவா தம் அன்பை எப்படி வெளிக்காட்டியிருக்கிறார்?
11 அன்பு. “கடவுள் அன்பாகவே இருக்கிறார்” என்று பைபிள் சொல்கிறது. (1 யோ. 4:8) மனிதர்களை அவர் படைத்திருப்பதே அவருடைய அன்பின் வெளிக்காட்டுதான். அதுவும், பிரமிக்கத்தக்க அதிசயமாய் அவர்களை உண்டாக்கிய விதம் அவருடைய அன்புக்கு மாபெரும் அத்தாட்சியாக இருக்கிறது. மனிதர்கள் மீதிருந்த அன்பினால்தான் பூஞ்சோலையான அழகிய வீட்டை அவர்களுக்குத் தந்தார்; அங்கு சந்தோஷத்திற்குக் குறைவே இருக்கவில்லை. (ஆதி. 1:29-31; 2:8, 9; சங். 139:14-16) மனித குடும்பம் பாவத்தில் வீழ்ந்த பின்பு யெகோவா தம்முடைய அன்பைப் புதிய கோணங்களில் வெளிக்காட்டினார். எப்படி? “கடவுள், தம்முடைய ஒரே மகன்மீது விசுவாசம் வைக்கிற எவரும் அழிந்துபோகாமல் முடிவில்லா வாழ்வைப் பெறுவதற்காக அவரைத் தந்து, இந்தளவுக்கு உலகத்தின் மீது அன்பு காட்டினார்” என்று இயேசு சொன்ன வார்த்தைகளை அப்போஸ்தலன் யோவான் மேற்கோள் காட்டினார். (யோவா. 3:16) பாவிகளை மீட்பதற்காகத் தம் ஒரே மகனைப் பூமிக்கு அனுப்பியதைவிடச் சிறப்பான வழியில் கடவுள் தம்முடைய அன்பை மனிதர்கள்மீது காட்டியிருக்க முடியுமா? (யோவா. 15:13) இந்தளவு மகத்தான விதத்தில் அன்பை வெளிக்காட்டியதன் மூலம் மனிதர்களுக்கு முன்மாதிரியும் வைத்திருக்கிறார். கடவுளுடைய முன்மாதிரியைப் பின்பற்றி சுய தியாக அன்பை அன்றாட வாழ்க்கையில் அவர்களும் வெளிக்காட்ட வேண்டும்; ஆம், இயேசுவைப் போலவே வெளிக்காட்ட வேண்டும்.—யோவா. 17:25, 26.
12. யெகோவா தம் வல்லமையை எப்படி வெளிக்காட்டியிருக்கிறார்?
12 வல்லமை. ‘சர்வ வல்லமையுள்ள கடவுள்’ ஒருவருக்கே படைக்கும் வல்லமை இருக்கிறது. (வெளி. 11:17; சங். 36:9) ஒரு மனிதன் பிறக்கும்போது அவனுடைய வாழ்க்கை வெற்றுத் தாளைப் போல இருக்கிறது. அவன் இறக்கும்போது, அந்த வெற்றுத் தாள் நிரப்பப்பட்டுவிடுகிறது; அவனுடைய சுபாவத்தை வடிவமைத்த அனுபவங்கள், செயல்கள், தீர்மானங்கள் ஆகியவற்றால் அது நிரப்பப்பட்டுவிடுகிறது. இந்தத் தகவல்களை யெகோவா தமது ஞாபகத்தில் பதிவுசெய்து வைக்கிறார். வருங்காலத்தில், அந்த மனிதனுக்கே உரிய தனித்தன்மைகளுடன் அவனை உயிர்த்தெழுப்புவார். (யோவா. 5:28, 29) எனவே, மரணம் என்பது கடவுளுடைய நோக்கமாக இல்லாவிட்டாலும், மரணமடைந்தவர்களை உயிர்ப்பிக்கிற வல்லமை அவருக்கு இருக்கிறது என்பதை வெளிக்காட்ட அது அவருக்கு வாய்ப்பளித்திருக்கிறது. ஆம், யெகோவா ‘சர்வ வல்லமையுள்ள கடவுளே’!
13. இயேசுவின் பலி யெகோவாவுடைய பரிபூரண நீதியை எப்படி எடுத்துக்காட்டியது?
13 நீதி. யெகோவா பொய் சொல்லாதவர், அநியாயம் செய்யாதவர். (உபா. 32:4; தீத். 1:3) உண்மை மற்றும் நீதியின் பரிபூரண நெறிகளையே அவர் எப்போதும் கடைப்பிடிக்கிறார்; தமக்குப் பேரிழப்பு ஏற்பட்டாலும் அவற்றைக் கடைப்பிடிக்கிறார். (ரோ. 8:32) தம்முடைய அன்பு மகன், தெய்வநிந்தனை செய்த குற்றவாளிபோல் கழுமரத்தில் இறந்ததைப் பார்த்தபோது அவர் எவ்வளவாய் வேதனைப்பட்டிருப்பார்! என்றாலும், அபூரண மனிதர்கள்மீது வைத்த அன்பினால் அந்த வேதனைமிக்க சூழ்நிலையை அவர் அனுமதித்தார்; தம்முடைய பரிபூரண நீதியை உறுதியாகக் கடைப்பிடிக்கவே அப்படிச் செய்தார். (ரோமர் 5:18-21-ஐ வாசியுங்கள்.) தம்மை நீதியின் சிகரமாக வெளிக்காட்ட அநீதி நிறைந்த இந்த உலகம் அவருக்கு வாய்ப்பளித்தது.
14, 15. யெகோவாவின் அபார ஞானமும் பொறுமையும் எந்தெந்த வழிகளில் வெளிக்காட்டப்பட்டுள்ளன?
14 ஞானம். ஆதாமும் ஏவாளும் பாவம் செய்தவுடனேயே, அவர்களுடைய கலகத்தால் ஏற்பட்ட தீய விளைவுகளைச் சரிசெய்வதற்கான வழியை யெகோவா தெரியப்படுத்தினார். (ஆதி. 3:15) அவர் இப்படி உடனடியாக நடவடிக்கை எடுத்த விதமும், இது சம்பந்தமான விஷயங்களைத் தமது ஊழியர்களுக்குப் படிப்படியாக வெளிப்படுத்திய விதமும் அவருடைய ஞானத்தைச் சிறப்பித்துக் காட்டின. (ரோ. 11:33) அவருடைய நோக்கத்தை வெற்றிகரமாக நிறைவேற்றுவதை எதுவுமே தடுத்து நிறுத்த முடியாது. பாலியல் முறைகேடு, போர், அநியாயம், கீழ்ப்படியாமை, கொடுமை, பாரபட்சம், வெளிவேஷம் ஆகியவை நிறைந்த இந்த உலகில், உண்மையான ஞானத்தை யெகோவா தமது படைப்புகளுக்கு ஏராளமான வழிகளில் வெளிக்காட்டியிருக்கிறார். “பரலோகத்திலிருந்து வருகிற ஞானமோ முதலாவது சுத்தமானதாகவும், பின்பு சமாதானம் பண்ணுவதாகவும், நியாயமானதாகவும், கீழ்ப்படியத் தயாரானதாகவும், இரக்கமும் நற்செயல்களும் நிறைந்ததாகவும், பாரபட்சமற்றதாகவும், வெளிவேஷமற்றதாகவும் இருக்கிறது” என்று சீடரான யாக்கோபு எழுதினார்.—யாக். 3:17.
15 பொறுமை. மனிதர்களின் அபூரணங்களையும் பாவங்களையும் தவறுகளையும் புரிந்துகொண்டு அவர்களை நடத்த வேண்டிய அவசியம் யெகோவாவுக்கு ஏற்பட்டிருக்காவிட்டால், அவருடைய பொறுமை இந்தளவுக்குத் தெளிவாகத் தெரிந்திருக்காது. ஆயிரக்கணக்கான வருடங்களாக அவர் மனிதர்களைப் பொறுமையுடன் நடத்தி வந்திருக்கிறார்; இந்தப் பொன்னான குணம் அவரிடம் முழுமையாக இருப்பதையே அது காட்டுகிறது. இதற்கு நாம் நன்றியுள்ளவர்களாக இருக்க வேண்டும். “நம் எஜமானருடைய பொறுமை நமக்கு மீட்பு என்று எண்ணுங்கள்” என அப்போஸ்தலன் பேதுரு சரியாகவே சொல்லியிருக்கிறார்.—2 பே. 3:9, 15.
16. யெகோவா நம்மை மன்னிக்க மனமுள்ளவராக இருப்பது ஏன் அளவில்லா ஆனந்தத்தைத் தருகிறது?
16 மன்னிப்பு. நாம் எல்லாருமே பாவிகளாய் இருக்கிறோம், பலமுறை தவறு செய்கிறோம். (யாக். 3:2; ) நமக்கு மன்னிப்பு வழங்குவதில் யெகோவா ‘வள்ளலாய்’ இருப்பதால் நாம் அவருக்கு எவ்வளவு நன்றியுள்ளவர்களாய் இருக்க வேண்டும்! ( 1 யோ. 1:8, 9ஏசா. 55:7, தமிழ் கத்தோலிக்க பைபிள்) பாவிகளாகப் பிறந்திருக்கிற நாம் தவறு செய்யும்போது கடவுள் அவற்றை மன்னிக்கிறார்; இதை நினைத்து நாம் எவ்வளவாய் மகிழ்ச்சி அடைகிறோம்! (சங். 51:5, 9, 17) யெகோவாவின் இந்த இனிய பண்பிலிருந்து தனிப்பட்ட விதமாக நன்மை அடையும்போது அவர்மீது நாம் வைத்திருக்கும் அன்பு அதிகமாகிறது; அதோடு, அவருடைய முன்மாதிரியைப் பின்பற்றி மற்றவர்களை மன்னிக்கவும் நம்மைத் தூண்டுகிறது.—கொலோசெயர் 3:13-ஐ வாசியுங்கள்.
உலகம் ஏன் வியாதிப்பட்டிருக்கிறது?
17, 18. சாத்தானின் ஆட்சி எவ்விதங்களில் வீழ்ச்சி அடைந்திருக்கிறது?
17 கடந்த பல நூற்றாண்டுகளாக, சாத்தானுடைய ஆட்சியின்கீழ் உள்ள முழு உலகமும் திரும்பத் திரும்ப வீழ்ச்சி அடைந்துள்ளது. 1991-ஆம் வருடத்தில் வெளியான த யூரோப்பியன் என்ற ஆங்கில செய்தித்தாள் இவ்வாறு குறிப்பிட்டது: “உலகம் வியாதிப்பட்டிருக்கிறதா? ஆம், சந்தேகமே இல்லை! ஆனால், . . . இது கடவுளின் செயல் அல்ல, மனிதர்களுடைய செயல்.” எவ்வளவு உண்மை! சாத்தானால் வசப்படுத்தப்பட்ட நம் முதல் பெற்றோர் யெகோவாவின் ஆட்சியைத் தூக்கியெறிந்துவிட்டு மனித ஆட்சியைத் தேர்ந்தெடுத்தார்கள். இவ்வாறு, வீழ்ச்சியின் பாதையில் அடியெடுத்து வைத்த ஆட்சியை அவர்கள் துவக்கி வைத்தார்கள். மனித ஆட்சியை ‘பயங்கரமான வியாதி’ தாக்கியிருக்கிறது என்பதற்கு உலகெங்குமுள்ள மக்கள் படுகிற துன்பமும் துயரமும் அத்தாட்சி அளிக்கின்றன.
18 சாத்தானின் ஆட்சி சுயநலத்திற்குத் தீனிபோடுகிறது. ஆனால், சுயநலம் ஒருபோதும் அன்பை வெல்லாது. அன்பே யெகோவாவின் ஆட்சிக்கு அஸ்திவாரமாக இருக்கிறது. சாத்தானின் ஆட்சி நிலையான, சந்தோஷமான, பாதுகாப்பான வாழ்க்கையை அளிக்கத் தவறிவிட்டது. இதனால், யெகோவாவின் ஆட்சியே சரியானதென நிரூபிக்கப்படுகிறது. இதற்கான அத்தாட்சி இன்று நமக்கு இருக்கிறதா? ஆம், இருக்கிறது. இதை அடுத்த கட்டுரையில் பார்ப்போம்.
ஆட்சி சம்பந்தமாக, பின்வரும் வசனங்களிலிருந்து என்ன தெரிந்துகொள்கிறோம்?
[கேள்விகள்]
[பக்கம் 25-ன் படங்கள்]
சாத்தானின் ஆட்சியில் மனிதர்களுக்கு எந்த நன்மையும் கிடைக்கவில்லை
[படத்திற்கான நன்றி]
U.S. Army photo
WHO photo by P. Almasy
[பக்கம் 26-ன் படம்]
மரணமடைந்தவர்களை உயிர்த்தெழுப்ப யெகோவாவுக்கு வல்லமை இருக்கிறது
[பக்கம் 27-ன் படம்]
யெகோவா தமது மகனைப் பலியாகத் தந்தபோது அவரது அன்பும் நீதியும் வெளிக்காட்டப்பட்டது