Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

நீங்கள் கிறிஸ்துவின் உண்மைச் சீடரா?

நீங்கள் கிறிஸ்துவின் உண்மைச் சீடரா?

நீங்கள் கிறிஸ்துவின் உண்மைச் சீடரா?

“நல்ல மரமெல்லாம் நல்ல கனியைக் கொடுக்கும், கெட்ட மரமெல்லாம் கெட்ட கனியைக் கொடுக்கும்.”—மத். 7:17.

1, 2. முக்கியமாக இந்தக் கடைசிக் காலத்தில் கிறிஸ்துவின் உண்மைச் சீடர்கள் போலிச் சீடர்களிலிருந்து எப்படி வித்தியாசப்படுகிறார்கள்?

 ‘நாங்கள் இயேசுவின் சீடர்கள்’ எனப் போலிக் கிறிஸ்தவர்கள் சொல்லிக்கொள்கிறார்கள். ஆனால், அவர்களுக்கும் உண்மைச் சீடர்களுக்கும் இடையே வித்தியாசம் இருக்குமென்றும், அது அவர்கள் தரும் கனிகளிலிருந்து தெரியுமென்றும் இயேசு சொன்னார். அந்தக் கனிகள் என்ன? அவர்களுடைய போதனைகளும் நடத்தையுமே! (மத். 7:15-17, 20) ஆம், மக்கள் தங்களுடைய மனதிற்குள்ளும் இருதயத்திற்குள்ளும் உள்வாங்கிக்கொள்கிற விஷயங்களால் பெரிதும் செல்வாக்கு செலுத்தப்படுகிறார்கள். (மத். 15:18, 19) அவர்களுக்குப் பொய்ப் போதனை கற்பிக்கப்பட்டால், ‘கெட்ட கனிகளை’ தருவார்கள்; உண்மைப் போதனை கற்பிக்கப்பட்டால், ‘நல்ல கனிகளை’ தருவார்கள்.

2 இவ்விரண்டு கனிகளும் இந்தக் கடைசிக் காலத்தில் தெள்ளத்தெளிவாகத் தெரிகின்றன. (தானியேல் 12:3, 10-ஐ வாசியுங்கள்.) போலிக் கிறிஸ்தவர்களுக்குக் கடவுளைப் பற்றிய திருத்தமான அறிவு இல்லை; தேவபக்தி உள்ளவர்கள்போல் அவர்கள் வெளிவேஷம் போடுகிறார்கள். கடவுளைப் பற்றித் திருத்தமான அறிவைப் பெற்றிருக்கிறவர்களோ, ‘அவருடைய சக்தியின் வழிநடத்துதலோடும் சத்தியத்தோடும் அவரை வணங்குகிறார்கள்.’ (யோவா. 4:24; 2 தீ. 3:1-5) அதோடு, கிறிஸ்து காட்டிய பண்புகளை வெளிக்காட்டக் கடும் முயற்சி எடுக்கிறார்கள். தனிப்பட்டவர்களாக நம்மைப் பற்றி என்ன? உண்மைக் கிறிஸ்தவர்களுக்குரிய ஐந்து அடையாளங்களை இக்கட்டுரையில் சிந்திக்கும்போது உங்களையே பின்வருமாறு கேட்டுக்கொள்ளுங்கள்: ‘என் நடத்தையும் போதனையும் கடவுளுடைய வார்த்தைக்கு இசைவாக இருக்கின்றனவா? நல்மனமுள்ளவர்கள் சத்தியத்திடம் கவர்ந்திழுக்கப்படும் விதத்தில் அவை இருக்கின்றனவா?’

கடவுளுடைய வார்த்தையின்படி வாழுங்கள்

3. யெகோவாவை எது பிரியப்படுத்துகிறது, உண்மைக் கிறிஸ்தவர்கள் எப்படி யெகோவாவைப் பிரியப்படுத்துகிறார்கள்?

3 “என்னை நோக்கி, ‘கர்த்தாவே, கர்த்தாவே’ என்று சொல்கிறவர்கள் பரலோக அரசாங்கத்திற்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். பரலோகத் தகப்பனுடைய சித்தத்தின்படி செய்கிறவர்களே அதில் அனுமதிக்கப்படுவார்கள்” என்று இயேசு சொன்னார். (மத். 7:21) ஆம், கிறிஸ்தவர்கள் எனச் சொல்லிக்கொண்டால் மட்டுமே யெகோவாவைப் பிரியப்படுத்த முடியாது; மாறாக, கிறிஸ்தவர்களாய் நடந்துகொண்டால்தான் அவரைப் பிரியப்படுத்த முடியும். உண்மைச் சீடர்கள் இருபத்து நான்கு மணிநேரமும் கிறிஸ்தவர்களாக வாழ்கிறார்கள். பணம், வேலை, பொழுதுபோக்கு, சம்பிரதாயம், கொண்டாட்டம், திருமணம், நட்புறவு ஆகியவை சம்பந்தப்பட்ட அவர்களுடைய மனப்பான்மையிலும்கூட கிறிஸ்தவர்களாய் இருக்கிறார்கள். போலிக் கிறிஸ்தவர்களோ, இன்றைய தேவபக்தியற்ற உலகத்தாரின் சிந்தைகளையும் வாழ்க்கை முறைகளையுமே ஏற்றுக்கொள்கிறார்கள்.—சங். 92:7.

4, 5. மல்கியா 3:18-ல் உள்ள யெகோவாவின் வார்த்தைகளை நாம் எவ்வாறு கடைப்பிடிக்கலாம்?

4 மல்கியா தீர்க்கதரிசி இவ்வாறு எழுதினார்: “நீங்கள் நீதிமானுக்கும் துன்மார்க்கனுக்கும், தேவனுக்கு ஊழியஞ்செய்கிறவனுக்கும் அவருக்கு ஊழியஞ்செய்யாதவனுக்கும் இருக்கிற வித்தியாசத்தைத் திரும்பவும் காண்பீர்கள்.” (மல். 3:18) இந்த வார்த்தைகளைக் குறித்து ஆழ்ந்து சிந்திக்கையில் உங்களையே பின்வருமாறு கேட்டுக்கொள்ளுங்கள்: ‘நான் இந்த உலகத்தாரைப் போல நடந்துகொள்கிறேனா, அல்லது வித்தியாசமாய் நடந்துகொள்கிறேனா? சக மாணவர்களையோ சக பணியாளர்களையோ பிரியப்படுத்த நினைக்கிறேனா, அல்லது பைபிள் நெறிமுறைகளை உறுதியாய்க் கடைப்பிடிக்கிறேனா? சரியான சந்தர்ப்பங்களில் அவற்றைக் குறித்து மற்றவர்களிடம் பேசுகிறேனா?’ (1 பேதுரு 3:16-ஐ வாசியுங்கள்.) உண்மைதான், நாம் நீதிமான்கள் போலக் காட்டிக்கொள்ளத் தேவையில்லை; ஆனால், யெகோவாவுக்குச் சேவை செய்யாத, அவரை நேசிக்காத மக்களிலிருந்து வித்தியாசமாய் நடந்துகொள்ள வேண்டும்.

5 இந்த விஷயத்தில் நீங்கள் முன்னேற்றம் செய்ய வேண்டியிருந்தால், இதைக் குறித்துக் கடவுளிடம் ஜெபம் செய்யலாம், அல்லவா? தவறாமல் பைபிளைப் படிப்பது, ஜெபம் செய்வது, கூட்டங்களுக்குச் செல்வது ஆகியவற்றின் மூலம் ஆன்மீகப் பலத்தைப் பெற்றுக்கொள்ளலாம், அல்லவா? கடவுளுடைய வார்த்தையை எந்தளவுக்குக் கடைப்பிடிக்கிறீர்களோ அந்தளவுக்கு ‘நல்ல கனிகளை’ தருவீர்கள்; ‘கடவுளுடைய பெயரை எல்லாருக்கும் அறிவித்து உதடுகளின் கனியை அவருக்குப் பலியாகச் செலுத்துவது’ அந்தக் கனிகளில் ஒன்றாகும்.—எபி. 13:15.

கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றி அறிவியுங்கள்

6, 7. பிரசங்க வேலையைப் பொறுத்தவரை உண்மைக் கிறிஸ்தவர்களுக்கும் போலிக் கிறிஸ்தவர்களுக்கும் இடையே என்ன வித்தியாசம் காணப்படுகிறது?

6 “நான் மற்ற நகரங்களிலும் கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய நற்செய்தியை அறிவிக்க வேண்டும், இதற்காகவே அனுப்பப்பட்டிருக்கிறேன்” என்று இயேசு சொன்னார். (லூக். 4:43) இயேசு ஏன் கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றி முக்கியமாக அறிவித்தார்? அந்த அரசாங்கத்தின் ராஜாவாக, பரலோக வாழ்க்கைக்கு உயிர்த்தெழுப்பப்படுகிற தம் சகோதரர்களோடு சேர்ந்து, துன்பங்களுக்கு ஆணிவேராக இருக்கிற பாவத்தையும் பிசாசையும் ஒழித்துக்கட்டுவார் என்பதை அவர் அறிந்திருந்ததால் அதைப் பற்றி அறிவித்தார். (ரோ. 5:12; வெளி. 20:10) எனவே, இந்தக் கடைசிக் காலத்தின் முடிவுவரை அந்த அரசாங்கத்தைப் பற்றி அறிவிக்கும்படி தம் சீடர்களுக்குக் கட்டளை கொடுத்தார். (மத். 24:14) போலிச் சீடர்கள் இந்த வேலையைச் செய்வதில்லை; சொல்லப்போனால், அவர்களால் இந்த வேலையைச் செய்ய முடியாது. ஏன்? இதற்குக் குறைந்தபட்சம் மூன்று காரணங்கள் உள்ளன. முதலாவதாக, அவர்களுக்கே புரியாத விஷயங்களை அவர்களால் பிரசங்கிக்க முடியாது. இரண்டாவதாக, பிரசங்கிக்கும்போது கேலி கிண்டல்களையும் எதிர்ப்புகளையும் சந்திக்க அவர்களில் பெரும்பாலோருக்கு மனத்தாழ்மையோ தைரியமோ கிடையாது. (மத். 24:9; 1 பே. 2:23) மூன்றாவதாக, அவர்களிடம் கடவுளுடைய சக்தியும் கிடையாது.—யோவா. 14:16, 17.

7 மறுபட்சத்தில், கிறிஸ்துவின் உண்மைச் சீடர்கள் கடவுளுடைய அரசாங்கத்தையும் அது நிறைவேற்றுகிற காரியங்களையும் அறிந்திருக்கிறார்கள். அதோடு, அந்த அரசாங்கம் சம்பந்தப்பட்ட காரியங்களுக்கே தங்கள் வாழ்க்கையில் முதலிடம் தருகிறார்கள்; அந்த அரசாங்கத்தைப் பற்றி உலகெங்கும் அறிவிக்கிறார்கள், இவற்றையெல்லாம் யெகோவாவுடைய சக்தியின் உதவியோடு செய்கிறார்கள். (சக. 4:6) பிரசங்க வேலையில் நீங்கள் தவறாமல் ஈடுபடுகிறீர்களா? இந்த வேலையை இன்னும் சிறந்த முறையில் செய்ய முயற்சி எடுக்கிறீர்களா, அதற்காக அதிக நேரம் செலவிட அல்லது இன்னும் திறம்பட்டவர்களாய் ஆக முயற்சி எடுக்கிறீர்களா? சிலர், பைபிளை நன்றாக உபயோகிப்பதன் மூலம் தங்களது ஊழியத்தின் தரத்தை மேம்படுத்த முயற்சி எடுத்திருக்கிறார்கள். “கடவுளுடைய வார்த்தை உயிருள்ளது, வல்லமையுள்ளது” என்று அப்போஸ்தலன் பவுல் எழுதினார்; வேதவசனங்களிலிருந்து நியாயங்காட்டிப் பேசுவது அவருடைய வழக்கமாக இருந்தது.—எபி. 4:12; அப். 17:2, 3.

8, 9. (அ) ஊழியத்தில் பைபிளைப் பயன்படுத்துவதன் முக்கியத்துவத்தைச் சிறப்பித்துக் காட்டுகிற அனுபவங்கள் யாவை? (ஆ) பைபிளைப் பயன்படுத்துவதில் நாம் எப்படிக் கைதேர்ந்தவர்களாய் ஆகலாம்?

8 வீட்டுக்கு வீடு ஊழியத்தில் ஈடுபட்டிருந்த ஒரு சகோதரர் கத்தோலிக்க மதத்தைச் சேர்ந்த ஒருவரிடம் தானியேல் 2:44-ஐ வாசித்துக் காட்டி, கடவுளுடைய அரசாங்கம் எப்படி உண்மையான சமாதானத்தையும் பாதுகாப்பையும் தரப்போகிறது என விளக்கினார். அதைக் கேட்ட அவர், “சொந்தமாகச் சொல்லாமல் பைபிளிலிருந்து எடுத்துக் காட்டினீர்களே, அதுதான் எனக்கு ரொம்பப் பிடித்திருக்கிறது!” என்று கூறினார். கிரேக்க ஆர்த்தடாக்ஸ் மதத்தைச் சேர்ந்த பெண்மணியிடம் ஒரு சகோதரர் பைபிளிலிருந்து ஒரு வசனத்தை வாசித்துக் காட்டியபோது அந்தப் பெண்மணி ஆர்வத்தோடு நிறையக் கேள்விகளைக் கேட்டார். அப்போது, அந்தச் சகோதரரும் அவருடைய மனைவியும் பைபிளிலிருந்தே பதில்களைச் சொன்னார்கள். “என் வீட்டிற்கு வந்தபோது, பைபிளிலிருந்து வாசித்துக் காட்டினீர்கள். அதனால்தான் நீங்கள் சொன்னதையெல்லாம் நான் கேட்டேன்!” என்று அந்தப் பெண்மணி பிற்பாடு சொன்னார்.

9 நம்முடைய பிரசுரங்கள் முக்கியமானவையாக இருப்பதால் அவற்றை மக்களிடம் அளிக்கிறோம். என்றாலும், பைபிளையே நாம் மிக முக்கியமாகப் பயன்படுத்த வேண்டும். ஊழியத்தில் பைபிளைப் பயன்படுத்துகிற வழக்கம் உங்களுக்கு இல்லையென்றால், அதைப் பயன்படுத்துவதை உங்களுடைய இலக்காக ஆக்கிக்கொள்ளலாம், அல்லவா? கடவுளுடைய அரசாங்கம் என்றால் என்ன என்பதையும், உங்கள் பிராந்தியத்தில் மேலோங்கி இருக்கிற பிரச்சினையை அது எப்படித் தீர்க்கும் என்பதையும் விளக்குகிற முக்கியமான வசனங்களை முன்கூட்டியே பார்த்து வைத்துக்கொள்ளுங்கள். பிறகு, வீட்டுக்கு வீடு செல்லும்போது பைபிளிலிருந்து அவற்றை வாசித்துக் காட்டுங்கள்.

கடவுளுடைய பெயரைத் தாங்கியிருப்பதில் பெருமிதம் கொள்ளுங்கள்

10, 11. கடவுளுடைய பெயரைப் பயன்படுத்துவது சம்பந்தமாக இயேசுவுக்கும் அவரைப் பின்பற்றுவதாகச் சொல்லிக்கொள்கிற அநேகருக்கும் இடையே என்ன முரண்பாடு இருக்கிறது?

10 ‘நானே தேவன் என்பதற்கு நீங்கள் எனக்குச் சாட்சிகள் என்று யெகோவா சொல்கிறார்.’ (ஏசா. 43:12) கடவுளுடைய பெயரைத் தாங்கியிருப்பதையும் அதை மற்றவர்களுக்கு அறிவிப்பதையும் யெகோவாவின் பிரதான சாட்சியான இயேசு கிறிஸ்து கௌரவமாகக் கருதினார். (யாத்திராகமம் 6:2; யோவான் 17:6; எபிரெயர் 2:12 ஆகியவற்றை வாசியுங்கள்.) ஆம், தம்முடைய தகப்பனின் பெயரை அறிவித்ததால், “உண்மையுள்ள சாட்சி” என்று அவர் அழைக்கப்பட்டார்.வெளி. 1:5; மத். 6:9.

11 ஆனால், கடவுளுக்கும் அவருடைய மகனுக்கும் பிரதிநிதிகளெனச் சொல்லிக்கொள்கிற அநேகர், கடவுளுடைய பெயரை அவமதிக்கும் விதத்தில் நடந்திருக்கிறார்கள், தங்கள் பைபிளிலிருந்தே அந்தப் பெயரை நீக்கியிருக்கிறார்கள். அத்தகைய மனப்பான்மையை கத்தோலிக்க பிஷப்புகளுக்கான சமீபத்திய கையேடு ஒன்று படம்பிடித்துக் காட்டியது; “ய்ஹ்வ்ஹ் என்ற நான்கெழுத்து வடிவிலுள்ள கடவுளுடைய பெயரைப் பயன்படுத்தவோ உச்சரிக்கவோ கூடாது” என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. * எவ்வளவு மட்டமான சிந்தனை!

12. தாங்கள் யெகோவாவின் மக்கள் என்பதை 1931-ஆம் ஆண்டில் அவருடைய ஊழியர்கள் இன்னும் எப்படித் தெளிவாக அடையாளம் காட்டினார்கள்?

12 கிறிஸ்துவையும், ‘திரண்டிருக்கும் மேகம் போன்ற சாட்சிகளையும்’ பின்பற்றுகிற இன்றைய உண்மைக் கிறிஸ்தவர்கள் கடவுளுடைய பெயரைப் பயன்படுத்துவதில் பெருமிதம் கொள்கிறார்கள். (எபி. 12:1) சொல்லப்போனால், 1931-ஆம் ஆண்டில், “யெகோவாவின் சாட்சிகள்” என்ற பெயரைச் சூட்டிக்கொண்டார்கள்; இதன் மூலம் தாங்கள் யெகோவாவின் மக்கள் என்பதை இன்னும் தெளிவாக அடையாளம் காட்டினார்கள். (ஏசாயா 43:10-12-ஐ வாசியுங்கள்.) இவ்வாறு, விசேஷ அர்த்தத்தில், ‘கடவுளுடைய பெயரால் அழைக்கப்படுகிற மக்களாக’ ஆனார்கள்.—அப். 15:14, 17.

13. கடவுளின் பெயருக்குப் புகழ் சேர்க்கும் விதத்தில் நாம் எப்படி நடந்துகொள்ளலாம்?

13 இந்த ஒப்பற்ற பெயரைத் தாங்கியிருக்கிற நாம், அதற்குப் புகழ் சேர்க்கும் விதத்தில் எப்படி நடந்துகொள்ளலாம்? ஒரு வழி, கடவுளைப் பற்றித் தொடர்ந்து அறிவிப்பதாகும். “யெகோவாவின் பெயரைச் சொல்லி வேண்டிக்கொள்கிற ஒவ்வொருவரும் மீட்புப் பெறுவார்கள். என்றாலும், அவர்மீது விசுவாசம் வைக்காதவர்கள் எப்படி அவரிடம் வேண்டிக்கொள்வார்கள்? அவரைப் பற்றிக் கேள்விப்படாதவர்கள் எப்படி அவர்மீது விசுவாசம் வைப்பார்கள்? யாருமே பிரசங்கிக்காவிட்டால் எப்படி அவர்கள் கேள்விப்படுவார்கள்? அனுப்பப்படாமல் எப்படிப் பிரசங்கிப்பார்கள்?” என்று பவுல் எழுதினார். (ரோ. 10:13-15) இன்னொரு வழி, நம் படைப்பாளர்மீது களங்கம் கற்பிக்கிற பொய்ப் போதனைகளைத் தவறென்று சாதுரியமாக எடுத்துச்சொல்வதாகும். இந்தப் பொய்ப் போதனைகளில் எரிநரகம் என்ற போதனையும் அடங்கும். கடவுள் பிசாசைப் போல் குரூர குணமுள்ளவரென இந்தப் போதனை காட்டுகிறது. ஆனால், கடவுள் அன்பானவர் என்று பைபிள் சொல்கிறது.—எரே. 7:31; 1 யோ. 4:8; ஒப்பிடுக: மாற்கு 9:17-27.

14. கடவுளுடைய பெயரைத் தெரிந்துகொண்டபோது சிலர் எப்படிப் பிரதிபலித்திருக்கிறார்கள்?

14 பரலோகத் தகப்பனின் பெயரைத் தாங்கியிருப்பதில் நீங்கள் பெருமிதம் கொள்கிறீர்களா? அந்தப் புனிதமான பெயரைத் தெரிந்துகொள்ள மற்றவர்களுக்கு உதவுகிறீர்களா? யெகோவாவின் சாட்சிகளுக்குக் கடவுளுடைய பெயர் தெரியுமென பிரான்சு நாட்டிலுள்ள பாரிஸ் நகரில் வசிக்கும் ஒரு பெண் கேள்விப்பட்டாள். அதனால், தன்னைச் சந்தித்த யெகோவாவின் சாட்சியிடம் கடவுளுடைய பெயரை பைபிளிலிருந்து எடுத்துக் காட்டும்படி கேட்டாள். சங்கீதம் 83:17-ஐ அவர் வாசித்துக் காட்டியபோது அவள் அப்படியே நெகிழ்ந்துபோனாள். பைபிளைப் படிக்க ஆரம்பித்தாள்; இப்போது வேறொரு நாட்டில் யெகோவாவுக்கு உண்மையோடு ஊழியம் செய்துவருகிறாள். ஆஸ்திரேலியாவில் வசிக்கிற ஒரு கத்தோலிக்கப் பெண் கடவுளுடைய பெயரைத் தன் பைபிளில் முதன்முதலாகப் பார்த்தபோது ஆனந்தக் கண்ணீர் வடித்தாள். கடந்த பல வருடங்களாக, அவள் ஓர் ஒழுங்கான பயனியராய்ச் சேவை செய்துவருகிறாள். சமீபத்தில், ஜமைகாவிலுள்ள ஒரு பெண்ணுக்கு அவளுடைய பைபிளிலிருந்தே கடவுளுடைய பெயரை யெகோவாவின் சாட்சிகள் எடுத்துக் காட்டினார்கள். அவளும் சந்தோஷம் தாளாமல் கண்ணீர் வடித்தாள். ஆகவே, கடவுளுடைய பெயரைத் தாங்கியிருப்பதில் பெருமிதம் கொள்ளுங்கள்; இயேசுவைப் போலவே அந்த ஒப்பற்ற பெயரை எல்லாருக்கும் தெரிவியுங்கள்.

‘இந்த உலகத்தின் மீது அன்பு வைக்காதீர்கள்’

15, 16. இந்த உலகத்தைக் குறித்து உண்மைக் கிறிஸ்தவர்களின் கண்ணோட்டம் என்ன, நம்மையே கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்விகள் யாவை?

15 “இந்த உலகத்தின் மீதோ, இந்த உலகத்திலுள்ள காரியங்கள் மீதோ அன்பு வைக்காதீர்கள். ஒருவன் இந்த உலகத்தின் மீது அன்பு வைத்தால், பரலோகத் தகப்பன்மீது அவனுக்கு அன்பில்லை.” (1 யோ. 2:15) இந்த உலகமும் சரி அதன் பாவச் சிந்தையும் சரி, யெகோவாவுக்கும் அவரது சக்திக்கும் எதிரானவை. அதனால்தான் கிறிஸ்துவின் உண்மைச் சீடர்கள் இந்த உலகத்தின் பாகமாக இருப்பதில்லை, அதை நேசிப்பதில்லை. ஏனென்றால், சீடராகிய யாக்கோபு சொன்னபடி, “உலக நட்பு கடவுளுக்குப் பகை” என அவர்கள் அறிந்திருக்கிறார்கள்.—யாக். 4:4.

16 சபல புத்திக்கு ஏராளமாகத் தீனிபோடுகிற இந்த உலகில் யாக்கோபின் அறிவுரைப்படி நடப்பது கஷ்டம்தான். (2 தீ. 4:10) தம் சீடர்களுக்காக இயேசு இப்படி ஜெபம் செய்தார்: “நீங்கள் இவர்களை இந்த உலகத்திலிருந்து எடுத்துவிட வேண்டுமென்று நான் கேட்காமல், பொல்லாதவனிடமிருந்து இவர்களைப் பாதுகாக்க வேண்டுமென்றே கேட்டுக்கொள்கிறேன். நான் இந்த உலகத்தின் பாகமாக இல்லாதது போலவே இவர்களும் இந்த உலகத்தின் பாகமாக இல்லை.” (யோவா. 17:15, 16) ஆகையால், உங்களையே இப்படிக் கேட்டுக்கொள்ளுங்கள்: ‘நான் இந்த உலகத்தின் பாகமாக இல்லாதிருக்கிறேனா? வேதப்பூர்வமற்ற கொண்டாட்டங்களையும் சம்பிரதாயங்களையும் நான் அனுசரிப்பதில்லை என்பது மற்றவர்களுக்குத் தெரியுமா? சில கொண்டாட்டங்கள் புறமதத்திலிருந்து தோன்றவில்லை என்றாலும் இவ்வுலக மனப்பான்மையை வெளிக்காட்டுவதால் அவற்றை நான் கடைப்பிடிப்பதில்லை எனவும் அவர்களுக்குத் தெரியுமா?’2 கொ. 6:17; 1 பே. 4:3, 4.

17. யெகோவாவின் பக்கம் வருவதற்கு நல்மனமுள்ளவர்களை எது உந்துவிக்கலாம்?

17 பைபிள் அடிப்படையிலான நம் நடத்தையை இந்த உலகம் வரவேற்கப்போவதில்லை; ஆனால், நம் நடத்தையைப் பார்த்து நல்மனமுள்ளவர்கள் சத்தியத்திடம் கவர்ந்திழுக்கப்படுவார்கள். நம்முடைய விசுவாசம் பைபிளின் அடிப்படையில் இருக்கிறது என்பதையும், நம் வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் அந்த விசுவாசத்தை வெளிக்காட்டுகிறோம் என்பதையும் அவர்கள் பார்க்கும்போது, “தேவன் உங்களோடே இருக்கிறார் என்று கேள்விப்பட்டோம்; ஆகையால் உங்களோடேகூடப் போவோம்” எனச் சொல்லாமல் சொல்வார்கள்.—சக. 8:23.

உண்மையான அன்பைக் காட்டுங்கள்

18. யெகோவா மீதும் சக மனிதர்மீதும் அன்பு காட்டுவதில் என்ன உட்பட்டுள்ளது?

18 “உன் கடவுளாகிய யெகோவாமீது உன் முழு இருதயத்தோடும் உன் முழு மூச்சோடும் உன் முழு மனதோடும் அன்பு காட்ட வேண்டும்” என்றும், “உன்மீது நீ அன்பு காட்டுவதுபோல் சக மனிதர்மீதும் அன்பு காட்ட வேண்டும்” என்றும் இயேசு சொன்னார். (மத். 22:37, 39) அந்த அன்பு (கிரேக்கில், அகாப்பே), தார்மீக அன்பு. கடமை, கண்ணியம், கட்டுப்பாடு ஆகியவற்றை உள்ளடக்குகிறது. பெரும்பாலும், ஆழ்ந்த உணர்ச்சியை உட்படுத்துகிறது. இந்த அன்பு கனிவானது, வலிமையானது. (1 பே. 1:22) சுயநலத்திற்கு நேர்மாறானது. தன்னலமற்ற சொல்லிலும் செயலிலும் வெளிக்காட்டப்படுகிறது.—1 கொரிந்தியர் 13:4-7-ஐ வாசியுங்கள்.

19, 20. கிறிஸ்தவ அன்புக்கு இருக்கிற வலிமையை எடுத்துக்காட்டும் அனுபவங்கள் சிலவற்றைக் கூறுங்கள்.

19 அன்பு, கடவுளுடைய சக்தி பிறப்பிக்கிற பண்பு! எனவே, மற்றவர்களால் செய்ய முடியாத காரியங்களைச் செய்ய இந்த அன்பு உண்மைக் கிறிஸ்தவர்களுக்கு உதவுகிறது; அதாவது, இன, கலாச்சார, அரசியல் ரீதியிலான தடைகளைத் தகர்த்தெறிய உதவுகிறது. (யோவான் 13:34, 35-ஐ வாசியுங்கள்; கலாத்தியர் 5:22) நல்மனமுள்ளோர் இப்படிப்பட்ட அன்பைக் காண்கையில் மனம் நெகிழ்ந்துபோகிறார்கள். உதாரணமாக, இஸ்ரேலில் உள்ள ஒரு யூத இளைஞர் முதல் முறையாகக் கிறிஸ்தவக் கூட்டத்திற்குச் சென்றிருந்தார். அங்கு, யூதச் சகோதரர்களும் அராபியச் சகோதரர்களும் ஒற்றுமையாக யெகோவாவை வணங்குவதைக் கண்டு ஆச்சரியப்பட்டார். கூட்டங்களுக்குத் தவறாமல் செல்ல ஆரம்பித்தார். பைபிள் படிப்பிற்கும் சம்மதம் தெரிவித்தார். சகோதர அன்பை நீங்களும் இருதயப்பூர்வமாகக் காட்டுகிறீர்களா? ராஜ்ய மன்றத்திற்கு வருகிற புதியவர்களை இனம், நிறம், குலம் என எந்த வேறுபாடும் பார்க்காமல் வலியச் சென்று முகம் மலர வரவேற்கிறீர்களா?

20 உண்மைக் கிறிஸ்தவர்களாகிய நாம், எல்லாரிடமும் அன்பு காட்ட பெருமுயற்சி எடுக்கிறோம். எல் சால்வடாரில், 87 வயதான ஒரு கத்தோலிக்கப் பெண்ணுக்கு ஓர் இளம் பிரஸ்தாபி பைபிள் படிப்பு நடத்திவந்தார். அந்தப் பெண்ணோ சர்ச்சுக்குப் போவதை நிறுத்தவே இல்லை. ஒருநாள் அந்தப் பெண்ணின் உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டது; அவர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். வீட்டிற்குத் திரும்பிவந்தபின் சகோதரிகள் அவருடைய வீட்டிற்குச் சென்று அவருக்குச் சாப்பாடு கொடுத்தார்கள். இப்படி ஒருநாள் இரண்டு நாள் அல்ல, கிட்டத்தட்ட ஒரு மாதம் கவனித்துக்கொண்டார்கள். ஆனால் அந்தப் பெண்ணின் சர்ச்சிலிருந்து யாருமே அவரைப் பார்க்க வரவில்லை. அதன் பிறகு என்ன நடந்தது? அவர் தன் வீட்டிலிருந்த எல்லாச் சிலைகளையும் தூக்கியெறிந்துவிட்டார், சர்ச்சிலிருந்தும் விலகிவிட்டார். பைபிள் படிப்பை மீண்டும் தொடர்ந்தார். ஆம், கிறிஸ்தவ அன்புக்கு வலிமை உண்டு! வார்த்தைகளுக்கு இல்லாத வலிமை, இதயங்களைக் கவர்ந்திழுக்கிற வலிமை அதற்கு உண்டு!

21. பாதுகாப்பான எதிர்காலத்தை நாம் எப்படிக் கண்டடையலாம்?

21 தம்மைப் பின்பற்றுவதாகச் சொல்லிக்கொள்ளும் போலிச் சீடர்களிடம் விரைவில் இயேசு சொல்லப்போவது இதுதான்: “நீங்கள் யாரென்றே எனக்குத் தெரியாது! அக்கிரமக்காரர்களே, என்னைவிட்டுப் போய்விடுங்கள்.” (மத். 7:23) ஆகவே, பரலோகத் தகப்பனுக்கும் மகனுக்கும் கௌரவம் சேர்க்கிற விதத்தில் கனிகளைத் தருவோமாக! இயேசு கூறினார்: “நான் சொன்ன இந்த விஷயங்களைக் கேட்டு, இவற்றின்படி நடக்கிற எவனும் கற்பாறைமீது தன் வீட்டைக் கட்டிய புத்தியுள்ள மனிதனுக்கு ஒப்பாக இருக்கிறான்.” (மத். 7:24) நாம் கிறிஸ்துவின் உண்மைச் சீடர்களாக இருந்தால், கடவுளின் கருணை நமக்குக் கிடைக்கும்; கற்பாறைமீது கட்டப்பட்ட வீட்டைப் போல் நம் எதிர்காலம் பாதுகாப்பாக இருக்கும்!

[அடிக்குறிப்பு]

^ பாரா. 11 த ஜெருசலேம் பைபிள் உட்பட, ஆங்கிலத்தில் வெளிவந்துள்ள நவீன கத்தோலிக்கப் பிரசுரங்கள் சில, அந்த நான்கெழுத்துக்களை “யாவே” என்று மொழிபெயர்த்திருக்கின்றன.

நினைவில் இருக்கிறதா?

• கிறிஸ்துவின் உண்மைச் சீடர்கள் போலிச் சீடர்களிலிருந்து எப்படி வித்தியாசப்படுகிறார்கள்?

• உண்மைக் கிறிஸ்தவர்களை அடையாளம் காட்டுகிற ‘கனிகள்’ சிலவற்றைக் குறிப்பிடுங்கள்.

• கிறிஸ்தவக் கனிகளைத் தருகிற விஷயத்தில் என்ன இலக்குகளை நீங்கள் வைக்கலாம்?

[கேள்விகள்]

[பக்கம் 13-ன் படம்]

ஊழியத்தில் பைபிளைத் தவறாமல் பயன்படுத்துவது உங்கள் வழக்கமா?

[பக்கம் 15-ன் படம்]

வேதப்பூர்வமற்ற கொண்டாட்டங்களை நீங்கள் ஏன் அனுசரிப்பதில்லை என மற்றவர்களுக்குத் தெரியுமா?