யெகோவாவின் ஆட்சியே சரியானது!
யெகோவாவின் ஆட்சியே சரியானது!
‘உன்னதமானவர் மனுஷருடைய ராஜ்யத்தில் ஆளுகை செய்கிறார்.’—தானி. 4:17.
1, 2. மனித ஆட்சி படுதோல்வி அடைந்திருப்பதற்குச் சில காரணங்கள் யாவை?
மனித ஆட்சி படுதோல்வி அடைந்திருக்கிறது! இது மறுக்க முடியாத உண்மை. இதற்கு முக்கியக் காரணம் என்ன? நல்லாட்சி செய்ய மனிதர்களுக்கு ஞானம் இல்லை என்பதே! மனித ஆட்சியாளர்களில் பலர், ‘சுயநலக்காரர்களாக, பண ஆசைபிடித்தவர்களாக, ஆணவமுள்ளவர்களாக, கர்வமுள்ளவர்களாக, நம்பிக்கை துரோகிகளாக, எதற்குமே ஒத்துப்போகாதவர்களாக, அவதூறு பேசுகிறவர்களாக, சுயக்கட்டுப்பாடு இல்லாதவர்களாக, கொடூரமானவர்களாக, நல்ல காரியங்களை விரும்பாதவர்களாக, காட்டிக்கொடுக்கிறவர்களாக, தலைக்கனம் பிடித்தவர்களாக’ இருக்கிறார்கள். எனவே, மனித ஆட்சி படுதோல்வி அடைந்திருப்பதில் ஆச்சரியம் ஏதுமில்லை.—2 தீ. 3:2-4.
2 ஆரம்பத்திலேயே நம்முடைய முதல் பெற்றோர் கடவுளுடைய ஆட்சியை நிராகரித்துவிட்டார்கள். சுதந்திரமாக வாழலாம் என நினைத்து அவர்கள் ஒருவேளை நிராகரித்திருக்கலாம். அப்படிச் செய்ததன் மூலம் அவர்கள் உண்மையில் சாத்தானுடைய ஆட்சிக்கே அடிபணிந்தார்கள். “இந்த உலகத்தை ஆளுகிற” சாத்தானுடைய ஆதிக்கத்தின்கீழ் மனிதர்கள் ஆறாயிரம் ஆண்டு காலமாக மோசமாய் ஆட்சி செய்துவந்திருக்கிறார்கள்; இதனால் மனிதகுலம் இன்று படுமட்டமான நிலைமைக்கு வந்திருக்கிறது. (யோவா. 12:31) இதைப் பற்றி ஒரு சரித்திர புத்தகம் (தி ஆக்ஸ்ஃபர்ட் ஹிஸ்டரி ஆஃப் த ட்வென்டியத் செஞ்சுரி) இவ்வாறு சொல்கிறது: ‘குறையில்லாத உலகத்திற்காகக் காத்திருப்பது வீண். . . . அப்படியொரு உலகம் உருவாக வாய்ப்பே இல்லை, அதை உருவாக்க எடுக்கப்பட்ட முயற்சியால் சர்வநாசமும், சர்வாதிகாரமும், போரும்தான் விளைந்திருக்கின்றன.’ மனித ஆட்சி படுதோல்வி அடைந்திருப்பதை மனிதர்களே எவ்வளவு வெளிப்படையாக ஒத்துக்கொள்கிறார்கள்!
3. நம்முடைய முதல் பெற்றோர் பாவம் செய்யாமல் இருந்திருந்தால், கடவுளுடைய ஆட்சிமுறை எப்படி இருந்திருக்கும்?
3 கடவுளுடைய ஆட்சியை, ஆம், ஒரே நல்லாட்சியை நம்முடைய முதல் பெற்றோர் நிராகரித்தது எவ்வளவு வருத்தமான விஷயம்! அப்படியே அவர்கள் நிராகரிக்காமல் இருந்திருந்தாலும், யெகோவாவுடைய ஆட்சிமுறை எப்படி இருந்திருக்கும் என்று நமக்குத் திட்டவட்டமாகத் தெரியாது. என்றாலும், அவர் முழு மனிதகுலத்தின் மீதும் அன்பான விதத்தில், பாரபட்சமற்ற விதத்தில்தான் ஆட்சி செய்திருப்பார். (அப். 10:34; 1 யோ. 4:8) கடவுள் ஒப்பற்ற ஞானம் உள்ளவர்; ஆகவே, மனிதர்கள் அவருடைய ஆட்சியின்கீழ் இருந்திருந்தால், மனித ஆட்சியால் ஏற்பட்டிருக்கிற எல்லாத் தவறுகளையும் நிச்சயமாகத் தவிர்த்திருக்க முடியும். அதுமட்டுமல்ல, அவருடைய ஆட்சி “சகல பிராணிகளின் வாஞ்சையையும் திருப்தி” செய்திருக்கும். (சங். 145:16) சுருங்கச் சொன்னால், கடவுளுடைய ஆட்சி உத்தமமான ஆட்சியாக, அதாவது பரிபூரணமான ஆட்சியாக, இருந்திருக்கும். (உபா. 32:4) அப்பேர்ப்பட்ட ஆட்சியை மனிதர்கள் நிராகரித்திருப்பது எத்தனை வருத்தமானது!
4. ஆட்சிசெய்யும் விஷயத்தில் சாத்தானால் எந்தளவு மட்டுமே செல்ல முடிந்திருக்கிறது?
4 இதை நாம் நினைவில் வைப்பது நல்லது: தங்களுக்கென்று ஆட்சியை அமைத்துக்கொள்ள மனிதர்களை யெகோவா அனுமதித்திருந்தாலும், ஆட்சிசெய்யத் தமக்கிருக்கிற உரிமையை அவர் விட்டுக்கொடுக்கவே இல்லை. ‘உன்னதமானவர் மனுஷருடைய ராஜ்யத்தில் ஆளுகை செய்கிறார்’ என்பதைப் பலம்படைத்த பாபிலோன் ராஜாவும் கடைசியில் ஒத்துக்கொள்ள வேண்டியிருந்தது. (தானி. 4:17) எதிர்காலத்தில், கடவுளுடைய அரசாங்கம் அவரது சித்தத்தை நிறைவேற்றும். (மத். 6:10) உண்மைதான், ‘இந்த உலகத்தின் கடவுளாக’ இருக்கும்படி சாத்தானை யெகோவா கொஞ்சக் காலத்திற்கு அனுமதித்திருக்கிறார்; அவன் எழுப்பியிருக்கிற விவாதங்களுக்குச் சரியான பதிலை அளிப்பதற்காகவே அவ்வாறு அனுமதித்திருக்கிறார். (2 கொ. 4:4; 1 யோ. 5:19) என்றாலும், யெகோவா வைத்திருக்கும் வரம்பை மீறிச்செல்ல சாத்தான் ஒருபோதும் அனுமதிக்கப்படவில்லை. (2 நா. 20:6; ஒப்பிடுக: யோபு 1:11, 12; 2:3-6.) கடவுளுடைய மகா விரோதியான சாத்தானுடைய ஆட்சியில்கூட, சிலர் கடவுளுக்கே கீழ்ப்பட்டு இருந்திருக்கிறார்கள்.
இஸ்ரவேலர்மீது கடவுளுடைய ஆட்சி
5. இஸ்ரவேலர் கடவுளிடம் என்ன உறுதிமொழி அளித்தார்கள்?
5 ஆபேல் காலம்தொடங்கி, இஸ்ரவேல் தேசம் உருவான காலம்வரை, விசுவாசமுள்ள பலர் யெகோவாவை வழிபட்டு, அவருடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து வந்தார்கள். (எபி. 11:4-22) மோசேயின் காலத்தில், யாக்கோபின் வம்சத்தாரோடு யெகோவா ஓர் ஒப்பந்தம் செய்தபோது அவர்கள் இஸ்ரவேல் தேசமானார்கள். தாங்களும் தங்கள் சந்ததியினரும் யெகோவாவை ராஜாவாக ஏற்றுக்கொள்வதாய் கி.மு. 1513-ல் உறுதிமொழி அளித்தார்கள்; ‘யெகோவா சொன்னவற்றையெல்லாம் செய்வோம்’ என்றார்கள்.—யாத். 19:8.
6, 7. இஸ்ரவேலர்மீது யெகோவா செலுத்திய ஆட்சி எப்படிப்பட்டதாக விளங்கியது?
6 யெகோவா இஸ்ரவேலரை ஒரு நோக்கத்தோடுதான் தம் சொந்த மக்களாகத் தேர்ந்தெடுத்தார். (உபாகமம் 7:7, 8-ஐ வாசியுங்கள்.) இஸ்ரவேல் மக்களின் நலன் மட்டுமே அந்த நோக்கத்தில் உட்பட்டிருக்கவில்லை. அதிமுக்கியத்துவம் வாய்ந்த அவருடைய பெயரும் பேரரசாட்சியும் உட்பட்டிருந்தன. யெகோவா ஒருவரே உண்மையான கடவுள் என்பதற்கு இஸ்ரவேலர் சாட்சிகளாய் இருக்க வேண்டியிருந்தது. (ஏசா. 43:10; 44:6-8) அதனால்தான், ‘நீங்கள் உங்கள் தேவனாகிய யெகோவாவுக்குப் பரிசுத்தமான ஜனங்கள்; பூமியின் மீதெங்குமுள்ள எல்லா ஜனங்களிலும் உங்களையே யெகோவா தமக்குச் சொந்த ஜனங்களாயிருக்கத் தெரிந்துகொண்டார்’ என்று அவரே அந்த மக்களிடம் சொன்னார்.—உபா. 14:2.
7 இஸ்ரவேலர்மீது யெகோவா ஆட்சிசெய்தபோது அவர்கள் அபூரணர் என்பதை மனதில் வைத்திருந்தார். என்றாலும், அவருடைய சட்டங்கள் பரிபூரண சட்டங்களாய் இருந்தன, அவருடைய குணங்களை அப்படியே படம்பிடித்துக் காட்டின. மோசேயின் மூலம் அவர் கொடுத்த கட்டளைகள் அவருடைய பரிசுத்தத்தன்மையையும், மன்னிக்கிற மனப்பான்மையையும், பொறுமையையும், நீதி தவறாமையையும் சிறப்பித்துக் காட்டின. யோசுவாவின் காலத்திலும் அவரது தலைமுறையினரின் காலத்திலும், இஸ்ரவேலர் யெகோவாவின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்தார்கள்; இதனால் சமாதானத்தையும் ஆன்மீக ஆசீர்வாதங்களையும் அனுபவித்தார்கள். (யோசு. 24:21, 22, 31) யெகோவாவின் ஆட்சிமுறையே சிறந்தது என்பதற்கு அந்தக் காலப்பகுதி அத்தாட்சி அளித்தது.
மனித ஆட்சியால் விளைகிற தீமைகள்
8, 9. இஸ்ரவேலரின் முட்டாள்தனமான வேண்டுகோள் என்ன, அதன் விளைவுகள் யாவை?
8 காலப்போக்கில் இஸ்ரவேலர் கடவுளுடைய ஆட்சியை அடிக்கடி நிராகரித்ததால் அவருடைய பாதுகாப்பை இழந்தார்கள். பிற்பாடு, தீர்க்கதரிசியான சாமுவேல் மூலம் தங்களுக்கு ஒரு காணக்கூடிய ராஜா வேண்டுமென வற்புறுத்திக் கேட்டார்கள். அவர்கள் கேட்டுக்கொண்டபடியே ஒரு ராஜாவை நியமிக்கும்படி யெகோவா சாமுவேலிடம் சொன்னார். அதேசமயம், “அவர்கள் உன்னைத் தள்ளவில்லை, நான் அவர்களை ஆளாதபடிக்கு, என்னைத்தான் தள்ளினார்கள்” என்றும் சொன்னார். (1 சா. 8:7) இஸ்ரவேலருக்கு ஒரு ராஜாவை நியமிக்கும்படி அவர் சொன்னபோதிலும், ராஜாக்களின் ஆட்சியில் விளைகிற தீமைகளைப் பற்றி அவர்களை எச்சரித்தார்.—1 சாமுவேல் 8:9-18-ஐ வாசியுங்கள்.
9 யெகோவா எச்சரித்தபடியே நடந்தது; இதை இஸ்ரவேலரின் சரித்திரம் காட்டுகிறது. இஸ்ரவேலரை ராஜாக்கள் ஆட்சி செய்யத் தொடங்கியபோது, அதுவும் அந்த ராஜாக்கள் யெகோவாவுக்கு உண்மையற்றவர்களாக ஆனபோது, பெரிய பெரிய பிரச்சினைகள் வெடித்தன. யெகோவாவை அறிந்த இஸ்ரவேல் ராஜாக்களுடைய ஆட்சியே அப்படி இருந்ததென்றால், யெகோவாவை அறியாத மனிதர்கள் காலங்காலமாகச் செலுத்திவந்திருக்கிற ஆட்சி மனிதகுலத்திற்கு நிரந்தர பலனைத் தராததில் ஆச்சரியமே இல்லை. உண்மைதான், சமாதானத்தையும் பாதுகாப்பையும் அளிப்பதற்கான தங்கள் முயற்சிகளை ஆசீர்வதிக்கும்படி சில அரசியல்வாதிகள் கடவுளிடம் வேண்டிக்கொள்கிறார்கள்; ஆனால், அவருடைய ஆட்சிக்குக் கீழ்ப்படியாத அந்த அரசியல்வாதிகளைக் கடவுள் எப்படி ஆசீர்வதிப்பார்?—சங். 2:10-12.
கடவுளுடைய ஆட்சியின்கீழ் ஒரு புதிய தேசம்
10. இஸ்ரவேல் தேசத்திற்குப் பதிலாகக் கடவுள் ஏன் ஒரு புதிய தேசத்தைத் தேர்ந்தெடுத்தார்?
10 இஸ்ரவேல் தேசம் யெகோவாவின் வணக்கத்தில் நிலைத்திருக்கவில்லை. காலப்போக்கில், அவரால் அனுப்பப்பட்ட மேசியாவை நிராகரித்தது; யெகோவாவும் அத்தேசத்தை நிராகரித்தார், அதற்குப் பதிலாகப் புதிய தேசம் ஒன்றை உருவாக்க நோக்கம் கொண்டார். அதன்படி, பரலோக நம்பிக்கையுள்ளவர்கள் அடங்கிய கிறிஸ்தவ சபையை கி.பி. 33-ஆம் ஆண்டில் உருவாக்கினார். அந்தச் சபையே யெகோவாவின் ஆட்சிக்குக் கீழ்ப்பட்டிருந்த ஒரு புதிய தேசம். அந்தத் தேசத்தை “கடவுளுடைய இஸ்ரவேலர்” என பவுல் குறிப்பிட்டார்.—கலா. 6:16.
11, 12. முன்னின்று வழிநடத்துவது சம்பந்தமாக, பூர்வ இஸ்ரவேலருக்கும் ‘கடவுளுடைய இஸ்ரவேலருக்கும்’ இடையே உள்ள ஒற்றுமைகள் யாவை?
11 பூர்வ இஸ்ரவேல் தேசத்தாருக்கும் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ‘கடவுளுடைய இஸ்ரவேலருக்கும்’ இடையே ஒற்றுமை வேற்றுமைகள் இருக்கின்றன. பூர்வ இஸ்ரவேலரை ராஜாக்கள் ஆண்டார்கள், கிறிஸ்தவ சபையையோ எந்த மனித ராஜாவும் ஆட்சி செய்வதில்லை; அதோடு, பாவநிவாரணத்திற்காக எந்த மிருக பலிகளையும் செலுத்த வேண்டியதில்லை. ஓர் ஒற்றுமை என்னவென்றால், பூர்வ இஸ்ரவேல் தேசத்தில் மூப்பர்கள் இருந்தார்கள், கிறிஸ்தவ சபையிலும் மூப்பர்கள் இருக்கிறார்கள். (யாத். 19:3-8) இந்த மூப்பர்கள் சபையின்மீது ஆதிக்கம் செலுத்துவதில்லை. மாறாக, மந்தையை அன்பாக மேய்த்து கிறிஸ்தவ நடவடிக்கைகளில் தாராளமாக ஈடுபடுகிறார்கள். சபையிலுள்ள ஒவ்வொருவரிடமும் அன்பாக நடந்துகொள்கிறார்கள், எல்லாருக்கும் மதிப்பு மரியாதை கொடுக்கிறார்கள்.—2 கொ. 1:24; 1 பே. 5:2, 3.
12 பூர்வ இஸ்ரவேலரை யெகோவா எப்படி நடத்தினார் என்பதை ‘கடவுளுடைய இஸ்ரவேலரும்’ அவர்களுடைய தோழர்களான “வேறே ஆடுகளும்” ஆழ்ந்து சிந்திப்பதன் மூலம் அவருக்கும் அவருடைய ஆட்சிமுறைக்கும் போற்றுதலை வளர்த்துக்கொள்கிறார்கள். (யோவா. 10:16) உதாரணத்திற்கு, இஸ்ரவேலை ஆண்ட ராஜாக்கள் தங்கள் குடிமக்கள்மீது நல்ல விதத்திலோ கெட்ட விதத்திலோ செல்வாக்கு செலுத்தினார்கள் என்பதைச் சரித்திரம் காட்டுகிறது. கிறிஸ்தவ மூப்பர்கள் ராஜாக்களாக இல்லாவிட்டாலும், விசுவாசத்தில் எப்போதும் நல்ல முன்மாதிரிகளாக இருக்க வேண்டும் என்ற குறிப்பையே அந்த உண்மை அவர்களுக்கு உணர்த்துகிறது.—எபி. 13:7.
இன்று யெகோவா எப்படி ஆட்சிசெய்கிறார்?
13. என்ன முக்கியமான நிகழ்ச்சி 1914-ல் நடைபெற்றது?
13 மனித ஆட்சி முடிவுக்கு வரப்போகிறது என்ற செய்தியைக் கிறிஸ்தவர்கள் இன்று உலகெங்கும் அறிவித்துவருகிறார்கள். 1914-ல், யெகோவா தம்முடைய அரசாங்கத்தைப் பரலோகத்தில் ஸ்தாபித்து, இயேசு கிறிஸ்துவை அதன் ராஜாவாக நியமித்தார். அந்தச் சமயத்தில், ‘ஜெயிக்கிறவராகவும், ஜெயித்து முடிக்கிறவராகவும் புறப்பட்டுச் செல்ல’ இயேசுவுக்கு யெகோவா அதிகாரம் அளித்தார். (வெளி. 6:2) புதிதாக நியமிக்கப்பட்ட ராஜாவிடம், “நீர் உம்முடைய சத்துருக்களின் நடுவே ஆளுகை செய்யும்” என்று அவர் சொன்னார். (சங். 110:2) ஆனால் வருத்தகரமாக, யெகோவாவின் ஆட்சிக்குக் கீழ்ப்படிய தேசங்கள் தொடர்ந்து மறுத்திருக்கின்றன. “தேவன் இல்லை” என்பதுபோல் நடந்துவந்திருக்கின்றன.—சங். 14:1.
14, 15. (அ) கடவுளுடைய அரசாங்கம் இன்று நம்மீது எவ்வாறு ஆட்சி செலுத்திவருகிறது, இதனால் என்ன கேள்விகளை நாம் கேட்டுக்கொள்ள வேண்டும்? (ஆ) கடவுளுடைய ஆட்சியே மிகச் சிறந்தது என்பது இன்றும்கூட எவ்வாறு தெரிகிறது?
14 ‘கடவுளுடைய இஸ்ரவேலரில்’ சிலர் இன்னமும் பூமியில் இருக்கிறார்கள்; இயேசுவின் சகோதரர்களான இவர்கள், “கிறிஸ்துவின் சார்பில் தூதுவர்களாய்” செயல்பட்டு வருகிறார்கள். (2 கொ. 5:20) பரலோக நம்பிக்கையுள்ளோருக்கும், பூமியில் என்றென்றும் வாழ்கிற நம்பிக்கையுள்ள லட்சக்கணக்கானோருக்கும் ஆன்மீக உணவை அளித்து அவர்களைப் பராமரிக்க உண்மையும் விவேகமும் உள்ள அடிமை வகுப்பாராக இவர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். (மத். 24:45-47; வெளி. 7:9-15) இந்த அடிமை வகுப்பார்மீது யெகோவாவின் ஆசீர்வாதம் இருக்கிறது என்பதற்கு, இன்று உண்மை வணக்கத்தாரிடையே காணப்படுகிற ஆன்மீகச் செழுமை அத்தாட்சி அளிக்கிறது.
15 எனவே, ‘கிறிஸ்தவ சபையில் எனக்கு என்னென்ன பொறுப்புகள் இருக்கின்றன என்பதை நான் நன்றாகப் புரிந்திருக்கிறேனா? யெகோவாவின் ஆட்சியை நான் முழுமையாக ஆதரிக்கிறேனா? யெகோவாவுடைய தற்போதைய அரசாங்கத்தின் குடிமகனாக(ளாக) இருப்பதில் பெருமைப்படுகிறேனா? கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றி என்னால் முடிந்தளவு அறிவித்துவரத் தீர்மானமாய் இருக்கிறேனா?’ என்ற கேள்விகளை நாம் ஒவ்வொருவரும் கேட்டுக்கொள்ள வேண்டும். என்றாலும், ஒரு தொகுதியாக நாம், ஆளும் குழுவினர் அளித்துவருகிற வழிநடத்துதலுக்கு மனமுவந்து கீழ்ப்படிகிறோம், சபை மூப்பர்களுக்கு ஒத்துழைப்புக் கொடுக்கிறோம். இதுபோன்ற காரியங்களைச் செய்வதன் மூலம் கடவுளுடைய ஆட்சியை நாம் ஏற்றுக்கொண்டிருப்பதைக் காட்டுகிறோம். (எபிரெயர் 13:17-ஐ வாசியுங்கள்.) இப்படி நாம் மனமுவந்து கீழ்ப்படிவது, இந்த உலகத்தில் காணமுடியாத ஒற்றுமையை, ஆம் உலகளாவிய ஒற்றுமையை, உருவாக்குகிறது. சமாதானத்தையும், நீதியையும் பிறப்பிக்கிறது, யெகோவாவுக்கு மகிமை சேர்க்கிறது; அதோடு, அவருடைய ஆட்சியே மிகச் சிறந்த ஆட்சி என்பதைக் காட்டுகிறது.
யெகோவாவின் ஆட்சியே வெற்றி சிறக்கும்
16. ஒவ்வொருவரும் இன்று என்ன தீர்மானத்தை எடுக்க வேண்டியிருக்கிறது?
16 ஏதேனில் எழுப்பப்பட்ட விவாதங்கள் வெகு விரைவில் தீர்க்கப்படவிருக்கின்றன. ஆகையால், மக்கள் தீர்மானம் எடுப்பதற்கு இதுவே தக்க சமயம். யெகோவாவின் ஆட்சியை ஏற்றுக்கொள்வதா அல்லது மனித ஆட்சியை விடாப்பிடியாக ஆதரிப்பதா என ஒவ்வொருவரும் தீர்மானிக்க வேண்டும். சரியான தீர்மானத்தை எடுக்க சாந்தகுணமுள்ளவர்களுக்கு உதவுகிற பாக்கியம் நமக்கு இருக்கிறது. சீக்கிரத்தில், சாத்தானுடைய செல்வாக்கின்கீழ் உள்ள மனித அரசாங்கங்கள் அர்மகெதோனில் நிரந்தரமாக அழிக்கப்படும், யெகோவாவின் அரசாங்கம் அதன் ஆட்சியைத் தொடங்கும். (தானி. 2:44; வெளி. 16:16) ஆம், மனித ஆட்சி முடிவுக்கு வரும்; பின்பு, கடவுளுடைய ஆட்சிக் கொடையின்கீழ் முழு உலகமும் தஞ்சமடையும்; யெகோவாவின் ஆட்சியே சரியானதெனச் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்படும்.—வெளிப்படுத்துதல் 21:3-5-ஐ வாசியுங்கள்.
17. எந்த ஆட்சியை ஆதரிப்பதென்ற தீர்மானத்தை எடுக்க என்னென்ன உண்மைகள் சாந்தகுணமுள்ளவர்களுக்கு உதவும்?
17 யெகோவாவின் பக்கம் வருவதற்கான தீர்மானத்தை இன்னும் எடுக்காதவர்கள் அவருடைய ஆட்சியில் மனிதர்களுக்கு கிடைக்கப்போகும் நன்மைகளைப் பற்றி ஜெபத்தோடு சிந்தித்துப் பார்க்க வேண்டும். பயங்கரவாதம் உள்ளிட்ட குற்றச்செயல்கள் எவற்றையுமே மனித ஆட்சியால் ஒழித்துக்கட்ட முடியவில்லை. கடவுளுடைய ஆட்சியோ அக்கிரமம் அனைத்தையும் பூமியிலிருந்து பூண்டோடு அழித்துவிடும். (சங். 37:1, 2, 9) மனித ஆட்சி ஓயாத போர்களுக்கே வழிவகுத்திருக்கின்றன; கடவுளுடைய ஆட்சியோ ‘பூமியின் கடைமுனைமட்டும் யுத்தங்களை ஓயப்பண்ணும்.’ (சங். 46:9) அதோடு, மனிதர்களுக்கும் மிருகங்களுக்கும் இடையே சமாதானம் தழைத்தோங்கச் செய்யும். (ஏசா. 11:6-9) மனித ஆட்சியில் வறுமையும் பசிபட்டினியும் தொடர்கதையாய் இருந்திருக்கின்றன; கடவுளுடைய ஆட்சியிலோ அவை முகவரியின்றி மறைந்துவிடும். (ஏசா. 65:21) மக்களின் நலனுக்காக அயராமல் பாடுபடுகிற ஆட்சியாளர்களால்கூட நோய்க்கும் மரணத்துக்கும் முற்றுப்புள்ளி வைக்க முடியவில்லை; கடவுளுடைய ஆட்சியிலோ வயதானவர்கள் வாலிபத்திற்குத் திரும்புவார்கள், வியாதிப்பட்டவர்கள் சுகமடைவார்கள். (யோபு 33:25; ஏசா. 35:5, 6) ஆம், முழு பூமியும் பூஞ்சோலையாகும்; அதோடு, இறந்தவர்கள் உயிர்த்தெழுப்பப்படுவார்கள்.—லூக். 23:43; அப். 24:15.
18. யெகோவாவின் ஆட்சியே மிகச் சிறந்தது என நாம் நம்புவதை எப்படி வெளிக்காட்டலாம்?
18 சாத்தான் நம்முடைய முதல் பெற்றோரைக் கடவுளிடமிருந்து பிரித்து, தன் பக்கம் சேர்த்துக்கொண்டதால் ஏற்பட்ட எல்லாத் தீமைகளையும் கடவுளுடைய ஆட்சி நீக்கிவிடும். இதைச் சற்று யோசித்துப் பாருங்கள்: கடந்த 6,000 ஆண்டுகளாகச் சாத்தான் கெடுதல் செய்து வந்திருக்கிறான்; ஆனால், கிறிஸ்துவின் மூலம் அவற்றையெல்லாம் 1,000 ஆண்டுகளுக்குள் கடவுள் சரிசெய்துவிடுவார்! கடவுளுடைய ஆட்சியே மிகச் சிறந்தது என்பதற்கு எப்பேர்ப்பட்ட உன்னத அத்தாட்சி! கடவுளுடைய சாட்சிகளாகிய நாம் அவரை நம் ஆட்சியாளராக ஏற்றுக்கொள்கிறோம். எனவே, ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும், நாம் யெகோவாவின் வணக்கத்தார் என்பதையும் அவருடைய அரசாங்கத்தின் குடிமக்கள் என்பதையும் வெளிக்காட்டுவோமாக! அவருடைய சாட்சிகளாக இருப்பதில் பெருமிதம் கொள்வோமாக! யெகோவாவின் ஆட்சியே மிகச் சிறந்தது என்பதை மற்றவர்களிடம் சொல்வதற்குக் கிடைக்கிற ஒவ்வொரு வாய்ப்பையும் பயன்படுத்திக்கொள்வோமாக!
கடவுளுடைய ஆட்சி சம்பந்தமாக, பின்வரும் வசனங்களிலிருந்து என்ன தெரிந்துகொள்கிறோம்?
[கேள்விகள்]
[பக்கம் 29-ன் படங்கள்]
யெகோவா எப்போதுமே ஆட்சி செய்து வந்திருக்கிறார்
[பக்கம் 31-ன் படம்]
யெகோவாவின் ஆட்சிக்கு மனமுவந்து கீழ்ப்படிவது உலகளாவிய ஒற்றுமையை உருவாக்குகிறது