Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

ஆன்மீக ரீதியில் திடமாய் இருங்கள் நோயுற்ற உறவினரைக் கவனிக்கையில்

ஆன்மீக ரீதியில் திடமாய் இருங்கள் நோயுற்ற உறவினரைக் கவனிக்கையில்

ஆன்மீக ரீதியில் திடமாய் இருங்கள் நோயுற்ற உறவினரைக் கவனிக்கையில்

யெகோவாவின் சாட்சியான கிம் என்பவருடைய முதுகெலும்பின் அருகில் ஒரு கட்டி இருப்பது தெரிந்தது; டாக்டர் பரிசோதித்ததில் அது புற்றுக் கட்டி என்பது கண்டுபிடிக்கப்பட்டது. * “அந்தக் கட்டியை ஆபரேஷன் செய்து எடுத்த பிறகு, ரேடியோதெரபியும் கீமோதெரபியும் கிம்முக்கு அளிக்கப்பட்டது. அந்தச் சிகிச்சையின் பக்க விளைவால் அவர் ரொம்பவே பலவீனமாகி விட்டார். எழுந்து நடமாடுவதற்குக்கூட தெம்பில்லாமல் போய்விட்டது” என்கிறார் அவருடைய கணவர் ஸ்டீவ்.

தன்னுடைய அருமை மனைவி உடலை உருக்கும் வியாதியினால் அவதிப்படுவதைப் பார்த்து ஸ்டீவ் எந்தளவுக்கு வேதனைப்பட்டிருப்பார் என உங்களால் யோசித்துப் பார்க்க முடிகிறதா? மெல்ல மெல்ல உடலைச் சீரழிக்கும் வியாதியாலோ வயோதிகத்தின் உபாதைகளாலோ கஷ்டப்படுகிற நெருங்கிய குடும்ப அங்கத்தினர் உங்களுக்கு இருக்கலாம். (பிர. 12:1-7) அப்படியானால், அன்புக்குரிய அவரை நன்கு கவனிப்பதற்கு முதலாவது உங்களைக் கவனித்துக்கொள்வது முக்கியம். நீங்கள் ஆன்மீக ரீதியில் பலவீனமாகிவிட்டால், உங்கள் மன பலமும் உடல் பலமும்கூட பாதிக்கப்பட ஆரம்பிக்கலாம்; அதனால், அவருடைய தேவைகளைக் கவனிக்க முடியாமல் போகலாம். நோயுற்ற அல்லது வயதான உங்கள் குடும்ப அங்கத்தினரை கவனித்துக்கொண்டே ஆன்மீகக் காரியங்களில் எப்படிச் சமநிலையுடன் ஈடுபடலாம்? வியாதிப்பட்டவருக்குச் சபையிலுள்ளவர்கள் ஏதாவது செய்ய முடியுமா?

சமநிலையைக் காப்பது எப்படி?

வியாதிப்பட்டவரைக் கவனித்துக்கொள்கிற அதே சமயத்தில், உங்களுடைய ஆன்மீக ஆரோக்கியத்தையும் உடல் ஆரோக்கியத்தையும் காத்துக்கொண்டு சமநிலையுடன் இருப்பதற்கு சூழ்நிலைக்குத் தக்கவாறு உங்களை மாற்றிக்கொள்வது அவசியம், நேரத்தையும் சக்தியையும் விரயமாக்காதிருப்பதும் அவசியம். “தாழ்ந்த சிந்தையுள்ளவர்களிடத்தில் ஞானம் உண்டு” என நீதிமொழிகள் 11:2 குறிப்பிடுகிறது. “தாழ்ந்த சிந்தை” என இந்த வசனத்தில் கொடுக்கப்பட்டிருப்பது, ஒருவருடைய வரம்புகளை அறிந்திருப்பதைக் குறிக்கிறது. உங்களுடைய சக்திக்கு மிஞ்சியதைச் செய்து அதனால் பாதிக்கப்படாமல் இருப்பதற்காக உங்களுடைய அட்டவணையையும் பொறுப்புகளையும் ஆராய்ந்து பார்க்க வேண்டியிருக்கலாம்.

ஸ்டீவ், ஞானத்தோடும் தாழ்ந்த சிந்தையோடும் தன்னுடைய வேலைகளைச் சீர்தூக்கிப் பார்த்தார். அவர் வெளியில் வேலை பார்த்ததோடு அயர்லாந்திலுள்ள யெகோவாவின் சாட்சிகளுடைய ஒரு சபையின் மூப்பர் குழுவின் ஒருங்கிணைப்பாளராகவும் ஊழியக் கண்காணியாகவும் இருந்தார். உள்ளூர் மருத்துவமனை தொடர்பு ஆலோசனைக் குழுவின் அங்கத்தினராகவும் இருந்தார். “அவளை அம்போவென விட்டுவிட்டு இந்தப் பொறுப்புகளுக்குத்தான் நான் அதிக முக்கியத்துவம் கொடுப்பதாக கிம் ஒருபோதும் குறைபட்டுக்கொண்டதே இல்லை. ஆனாலும் என்னுடைய சக்திக்கு மிஞ்சினதையே நான் செய்துகொண்டிருக்கிறேன் என்று எனக்குத் தெரியும்” என ஸ்டீவ் குறிப்பிடுகிறார். இந்தச் சூழ்நிலையை அவர் எப்படிச் சரிசெய்தார்? “நான் ஜெபத்தோடு யோசித்துப் பார்த்த பிறகு, ஒருங்கிணைப்பாளர் என்ற பொறுப்பிலிருந்து விலகத் தீர்மானித்தேன். நான் தொடர்ந்து மூப்பராகச் சேவை செய்தபோதிலும், சபைப் பொறுப்புகள் சிலவற்றை மற்றவர்களிடம் ஒப்படைத்தேன்; அதனால், கிம்முடன் நேரம் செலவிடவும் அவளைக் கவனிக்கவும் முடிந்தது” என்று அவர் கூறுகிறார்.

போகப் போக, கிம்மின் உடல்நிலை தேறியது. ஸ்டீவ்வும் கிம்மும் தங்களுடைய சூழ்நிலையைத் திரும்பவும் சீர்தூக்கிப் பார்த்தார்கள். தன் மனைவியின் ஆதரவோடு, ஸ்டீவ் சபையில் தனக்கிருந்த முன்னாள் பொறுப்புகளை மீண்டும் ஏற்றுக்கொண்டார். “வியாதியின் காரணமாக முன்பு போல் எல்லாவற்றையும் செய்ய முடியாததால் எங்களால் முடிந்ததை மட்டுமே செய்ய நாங்கள் கற்றுக்கொண்டோம். யெகோவா செய்த உதவிக்காக அவருக்கும் சுகவீனத்தின் மத்தியிலும் குறைகூறாமல் என்னை ஆதரித்ததற்காக என் மனைவிக்கும் நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்” என்று ஸ்டீவ் சொல்கிறார்.

பயணக் கண்காணியான ஜெரி மற்றும் அவருடைய மனைவி மரீயாவின் அனுபவத்தையும் சிந்தியுங்கள். வயதான பெற்றோரைக் கவனிப்பதற்காக, தங்களுடைய இலக்குகளில் சில மாற்றங்களை அவர்கள் செய்ய வேண்டியிருந்தது. “எனக்கும் என் கணவருக்கும் வெளிநாட்டில் மிஷனரிகளாகச் சேவை செய்ய வேண்டுமென்ற இலக்கு இருந்தது. ஆனால், ஜெரி அவருடைய அம்மா அப்பாவுக்கு ஒரே பிள்ளையாக இருந்ததால் அவர்களைக் கவனிக்க வேண்டியிருந்தது. ஆகவே, அயர்லாந்தில் தங்கி அவர்களைக் கவனிக்கத் தீர்மானித்தோம். அதனால், ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டிருந்த அவருடைய அப்பாவை இறக்கும் வரையில் எங்களால் கவனித்துக்கொள்ள முடிந்தது. இப்போது ஒவ்வொரு நாளும் அவருடைய அம்மாவிடம் பேசிக்கொள்கிறோம்; அவருக்கு உதவி தேவைப்படும்போது எளிதில் செல்ல முடிந்த தூரத்தில் இருக்கிறோம். ஜெரியின் அம்மா போகிற சபையில் உள்ளவர்கள் நன்கு உதவி செய்பவர்கள், ஆதரவு கொடுப்பவர்கள்; அதனால் பயண வேலையில் தொடர்ந்து ஈடுபட முடிகிறது” என மரீயா சொல்கிறார்.

மற்றவர்கள் உதவுவது எப்படி?

சபையிலுள்ள விதவைகளுக்கு எப்படிப்பட்ட பொருளுதவி அளிக்கப்பட வேண்டும் என்பதைப் பற்றி பேசுகையில் அப்போஸ்தலன் பவுல் இவ்வாறு எழுதினார்: “ஒருவன் தன்னை நம்பியிருப்பவர்களை, முக்கியமாகத் தன் குடும்ப அங்கத்தினர்களை, கவனிக்கவில்லை என்றால் அவன் விசுவாசத்தை நிராகரித்தவனாகவும் விசுவாசத்தில் இல்லாதவனைவிட மோசமானவனாகவும் இருப்பான்.” தங்களுடைய செயல்கள் ‘கடவுளுடைய பார்வையில் தகுந்ததாய்’ இருப்பதற்கு, வயதான பெற்றோருக்கும் தாத்தா பாட்டிகளுக்கும் பண உதவி அளிக்க வேண்டுமென சக கிறிஸ்தவர்களுக்கு பவுல் நினைப்பூட்டினார். (1 தீ. 5:4, 8) என்றாலும், சபையிலுள்ள மற்றவர்களால் உதவ முடியும், உதவவும் வேண்டும்.

சுவீடனில் வசிக்கிற வயதான ஹோக்கன், இங்கர் தம்பதியரை எடுத்துக்கொள்ளுங்கள். “என் மனைவிக்குப் புற்றுநோய் வந்திருப்பதாக டாக்டர் சொன்னபோது எங்கள் இருவர்மீதும் இடி விழுந்ததைப் போல் இருந்தது. இங்கர் எப்போதும் ஆரோக்கியமாகவும் பலமாகவும்தான் இருந்திருந்தாள். இப்போதோ, சிகிச்சைக்காக நாங்கள் தினமும் ஆஸ்பத்திரிக்குப் போக வேண்டியதாயிற்று. சிகிச்சையின் பக்க விளைவுகள் அவளை இன்னும் பலவீனமாக்கின. இந்தக் காலப்பகுதியில் இங்கர் வீட்டிலேயே இருந்தாள், நானும் அவளோடு இருந்து கவனிக்க வேண்டியிருந்தது” என ஹோக்கன் சொல்கிறார். அந்தத் தம்பதியருக்குச் சபையார் எப்படி உதவினார்கள்?

ஃபோன் மூலமாகக் கூட்டங்களின் நிகழ்ச்சியை அத்தம்பதியர் கேட்பதற்குச் சபை மூப்பர்கள் ஏற்பாடு செய்தார்கள். அதுபோக, சகோதர சகோதரிகள் அவர்களை நேரில் சந்தித்தார்கள், ஃபோனில் பேசினார்கள். கடிதங்களையும் கார்டுகளையும்கூட அனுப்பினார்கள். “சகோதரர்கள் எல்லாருடைய ஆதரவும் யெகோவாவின் உதவியும் இருப்பதை நாங்கள் உணர்ந்தோம். ஆன்மீக ரீதியில் பலமுள்ளவர்களாய் இருக்க இந்தக் கவனிப்பு எங்களுக்கு அத்தியாவசியமாக இருந்தது. கடவுளுடைய தயவால் இங்கர் குணமானாள்; நாங்கள் திரும்பவும் ராஜ்ய மன்றத்தில் நடக்கும் கூட்டங்களில் கலந்துகொள்ள முடிகிறது” என ஹோக்கன் கூறுகிறார். சபையார் தங்கள் மத்தியிலுள்ள நோயுற்றவர்களுக்கும் வயதானவர்களுக்கும் தங்களால் முடிந்த உதவியைச் செய்யும்போது ‘எல்லாக் காலத்திலும் சிநேகிக்கிற சிநேகிதனாகவும் இடுக்கணில் உதவுவதற்காகப் பிறந்திருக்கிற சகோதரனாகவும்’ அவர்கள் இருப்பார்கள்.—நீதி. 17:17.

உங்கள் முயற்சிகளை யெகோவா மதிக்கிறார்

குடும்பத்திலுள்ள வியாதிப்பட்டவரைக் கவனிப்பது பெருங்கஷ்டமாக இருக்கலாம். ஆனாலும், “சிறுமைப்பட்டவன்மேல் சிந்தையுள்ளவன் பாக்கியவான்; தீங்குநாளில் கர்த்தர் அவனை விடுவிப்பார்” என தாவீது ராஜா எழுதினார்.—சங். 41:1.

வியாதியில் கஷ்டப்படுகிறவர்களைக் கவனிப்பவர்கள் ஏன் சந்தோஷமாக இருக்கலாம்? “ஏழைக்கு இரங்குகிறவன் கர்த்தருக்குக் கடன்கொடுக்கிறான்; அவன் கொடுத்ததை அவர் திரும்பக் கொடுப்பார்” என நீதிமொழிகள் 19:17 குறிப்பிடுகிறது. நோயால் துன்புறுகிற உண்மை ஊழியர்கள்மீது கடவுள் விசேஷித்த அக்கறை காட்டுகிறார்; அவர்களுக்கு இரங்கி உதவி செய்கிறவர்களை அவர் ஆசீர்வதிக்கிறார். “படுக்கையின்மேல் வியாதியாய்க் கிடக்கிற அவனைக் கர்த்தர் தாங்குவார்; அவனுடைய வியாதியிலே அவன் படுக்கை முழுவதையும் மாற்றிப்போடுவீர்” என சங்கீதக்காரனாகிய தாவீது பாடினார். (சங். 41:3) அன்புடன் உதவி செய்வோருக்கு ஏதாவது கஷ்டம் வந்தால் அல்லது ஏதாவது விபரீதம் சம்பவித்தால் யெகோவா அவருக்கு உதவுவார்.

குடும்பத்திலுள்ள சுகவீனரைக் கவனிப்பதற்காக எடுக்கும் முயற்சிகளை யெகோவா தேவன் பார்க்கிறார், அதை மதிக்கிறார் என்பதை அறிவது எவ்வளவு சந்தோஷத்தை அளிக்கிறது! அப்படிப்பட்ட உதவியை அளிப்பதற்கு நம் பங்கில் அதிக முயற்சி தேவைப்பட்டாலும் “இப்படிப்பட்ட பலிகளின்மேல் தேவன் பிரியமாயிருக்கிறார்” என பைபிள் உறுதி அளிக்கிறது.—எபி. 13:16.

[அடிக்குறிப்பு]

^ பாரா. 2 பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.

[பக்கம் 18-ன் படங்கள்]

ஆன்மீக சமநிலையைக் காத்துக்கொள்ளுங்கள், மற்றவர்களின் உதவியை ஏற்றுக்கொள்ளுங்கள்