Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

ஆரம்பகால கிறிஸ்தவமும் ரோமக் கடவுட்களும்

ஆரம்பகால கிறிஸ்தவமும் ரோமக் கடவுட்களும்

ஆரம்பகால கிறிஸ்தவமும் ரோமக் கடவுட்களும்

பித்தினியாவின் ஆளுநர் இளைய பிளைனி, ரோமப் பேரரசர் டிராஜனுக்கு ஒரு கடிதம் எழுதி அனுப்பினார்; அதில், “கிறிஸ்தவர்கள் என்ற குற்றச்சாட்டோடு என்னிடம் கொண்டுவரப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தினேன்; ‘நீங்கள் கிறிஸ்தவர்களா?’ என்று அவர்களிடமே கேட்டேன்; அவர்கள் ‘ஆம்’ என்று கூறியபோது, மீண்டும் அதே கேள்வியை இரண்டு, மூன்று முறை கேட்டேன்; கிறிஸ்தவர்கள் என்று சொன்னால் அவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்று மிரட்டியும்கூட பார்த்தேன். தாங்கள் கிறிஸ்தவர்கள்தான் என அவர்கள் ஆணித்தரமாகச் சொல்லியதால் அவர்களுக்கு மரண தண்டனை விதித்தேன்” என்று குறிப்பிட்டிருந்தார். கிறிஸ்துவைச் சபித்து, கிறிஸ்தவத்தை நிராகரித்தவர்களையும், பேரரசருடைய சிலையை வணங்கியவர்களையும், நீதிமன்றத்திற்கு பிளைனி கொண்டுவந்திருந்த தெய்வச் சிலைகளை வணங்கியவர்களையும் விடுதலை செய்ததாக அவர் அதில் குறிப்பிட்டிருந்தார்.

எனவே, ரோமப் பேரரசரையும் பல்வேறு கடவுட்களின் உருவச் சிலைகளையும் வணங்க மறுத்ததற்காக, ஆரம்பகால கிறிஸ்தவர்கள் துன்புறுத்தப்பட்டார்கள் என்பது இதிலிருந்து தெளிவாகிறது. ரோமப் பேரரசு முழுவதிலும் இருந்த மற்ற மதங்களைப் பற்றி என்ன சொல்லலாம்? என்னென்ன கடவுட்கள் வணங்கப்பட்டன, அந்தக் கடவுட்களை ரோமர்கள் எவ்வாறு கருதினார்கள்? ரோமர்களின் கடவுட்களுக்குப் பலிசெலுத்த மறுத்த கிறிஸ்தவர்கள் ஏன் துன்புறுத்தப்பட்டார்கள்? இந்தக் கேள்விகளுக்கான பதில்கள், நம்முடைய உத்தமத்தைக் குலைத்துப்போடுகிற பிரச்சினைகளை எதிர்ப்படும்போது நாம் என்ன செய்ய வேண்டுமென்பதைத் தெரிந்துகொள்ள நமக்கு உதவும்.

ரோமப் பேரரசில் மதங்கள்

பூர்வ ரோமப் பேரரசு முழுக்க மொழிகளுக்கும் கலாச்சாரங்களுக்கும் பஞ்சமே இருக்கவில்லை, அதேபோல் கடவுட்களுக்கும் பஞ்சமே இருக்கவில்லை. யூத மதத்தை ரோமர்கள் விநோதமான ஒரு மதமாகக் கருதியபோதிலும், அதை அங்கீகாரம் பெற்ற மதமாக (ரிலிஜியோ லைக்கிட்டாவாக) ஏற்றுக்கொண்டு ஆதரித்தார்கள். எருசலேம் ஆலயத்தில் ஒரு நாளைக்கு இரண்டு முறை ரோமப் பேரரசருக்காகவும் ரோமப் பேரரசுக்காகவும் பலிகள் செலுத்தப்பட்டன; இரண்டு ஆட்டுக்குட்டிகளும் ஒரு காளையும் என்ற கணக்கில் பலி செலுத்தப்பட்டன. அந்தப் பலிகள் ஒரேவொரு கடவுளைச் சாந்தப்படுத்துகிறதா, நிறையக் கடவுட்களைச் சாந்தப்படுத்துகிறதா என்றெல்லாம் ரோமர்கள் கவலைப்படவில்லை. ரோமப் பேரரசரிடம் யூதர்கள் பற்றுள்ளவர்களாக இருக்கிறார்கள் என்பதற்கு அந்தப் பலிகள் அத்தாட்சி அளித்ததால், அதுவே அவர்களுக்குப் போதுமானதாக இருந்தது.

ரோமிலிருந்த மதப்பிரிவுகளில் புறமத நம்பிக்கைகள் பல்வேறு விதங்களில் கொடிகட்டிப் பறந்தன. கிரேக்க புராணக் கதைகளுக்கு அமோக வரவேற்பு இருந்தது, குறிசொல்லும் பழக்கம் சர்வசாதாரணமாகக் காணப்பட்டது. கிழக்கத்திய நாடுகளிலிருந்து வந்த ‘விசித்திர’ மதங்கள், ஆத்துமா அழியாது என்றும், தெய்வங்களிடமிருந்து நேரடியாகத் தகவல்களைப் பெற முடியும் என்றும், சடங்கு சம்பிரதாயங்கள் மூலம் கடவுளை அணுக முடியும் என்றும் பக்தர்களுக்கு ஆசை வார்த்தைகள் கூறின. இந்த மதங்கள் ரோமப் பேரரசெங்கும் பரவின. எகிப்திய கடவுளான சிராபிஸ், அதன் தேவியான ஐசிஸ், சீரியர்களின் மீன் தேவியான ஆட்டார்காட்டிஸ், பெர்சியர்களின் சூரியக் கடவுளான மித்ரா ஆகியோரை வணங்கிய மதப்பிரிவுகள் முதல் நூற்றாண்டுகளின்போது பிரபலமாக இருந்தன.

கிறிஸ்தவ மதம் ஆரம்பமான காலத்தில் வேறு மதங்களும் இருந்தன என்பதை அப்போஸ்தலர் புத்தகம் தெளிவாகக் காட்டுகிறது. உதாரணமாக, சீப்புருவில் ஆட்சிசெய்த ரோம மாநில ஆளுநருடன் ஒரு யூத மந்திரவாதியும் இருந்தான். (அப். 13:6, 7) லீஸ்திராவில் இருந்த மக்கள், பவுலையும் பர்னபாவையும் கிரேக்க கடவுட்களான ஹெர்மஸ், சீயுஸ் எனத் தவறாக நினைத்துக்கொண்டார்கள். (அப். 14:11-13) பவுல் பிலிப்பியில் இருந்தபோது, குறிசொல்லும் ஒரு வேலைக்காரப் பெண்ணை எதிர்ப்பட்டார். (அப். 16:16-18) அத்தேனே நகரத்தில் இருந்த மக்களிடம் பேசியபோது, ‘மற்ற மக்களைவிட எல்லா விதத்திலும் தெய்வங்கள்மீது பயபக்தியுள்ளவர்களாக இருக்கிறீர்கள்’ என அவர் கூறினார். ‘அறியப்படாத கடவுளுக்கு’ என்று பொறிக்கப்பட்டிருந்த ஒரு பலிபீடத்தை அங்கு பார்த்ததாகவும் அவர் குறிப்பிட்டார். (அப். 17:22, 23) எபேசுவில் வசித்தவர்கள் அர்த்தமி தேவியை வணங்கினார்கள். (அப். 19:1, 23, 24, 34) மெலித்தா தீவில் வாழ்ந்தவர்கள், பாம்பு கடித்தும் பவுலுக்கு எந்தத் தீங்கும் ஏற்படாததைக் கண்டபோது அவர் ஒரு கடவுள் என்று சொன்னார்கள். (அப். 28:3-6) இத்தனை வணக்கமுறைகள் இருந்ததால், கிறிஸ்தவர்கள் தங்களுடைய சுத்தமான வணக்க முறை கறைபட்டுவிடாதபடி ஜாக்கிரதையாக இருக்க வேண்டியிருந்தது.

ரோமர்களின் மதம்

ரோமப் பேரரசு விரிவடைந்தபோது, ரோமர்களுக்குப் புதிய புதிய கடவுட்கள் அறிமுகமாயின; தங்களுக்குப் பரிச்சயமான கடவுட்கள்தான் வெவ்வேறு ரூபத்தில் இருப்பதாக நம்பி, அவற்றை அவர்கள் ஏற்றுக்கொண்டார்கள். தாங்கள் கைப்பற்றிய நாடுகளில் கடைப்பிடிக்கப்பட்ட மதங்களை ஒழித்துவிடுவதற்குப் பதிலாக, அவற்றை ஏற்றுக்கொண்டு ஆதரித்தார்கள். ரோம சமுதாயம் எப்படி ஒரு கதம்ப சமுதாயமாக இருந்ததோ, அப்படியே ரோம மதமும் ஒரு கதம்ப மதமாக இருந்தது. ரோம மதத்தில் ஒரே கடவுளைத்தான் வணங்க வேண்டுமென்ற கட்டாயம் இருக்கவில்லை. ஒரே சமயத்தில் மக்கள் எத்தனை கடவுட்களை வேண்டுமானாலும் வணங்க முடிந்தது.

ரோமர்களின் பூர்வீக தெய்வங்களில் மிகப் பெரிய தெய்வமாகக் கருதப்பட்டவர் யூப்பித்தர். அவருக்கு ஆப்டிமஸ் மாக்ஸிமஸ் என்ற பெயரும் உண்டு; மிகச் சிறந்தது, மிக உயர்ந்தது என்பதே இதன் அர்த்தம். காற்றிலும் மழையிலும் மின்னலிலும் இடியிலும் அவர் வெளிப்படுவார் என மக்கள் நம்பினார்கள். அவருடைய சகோதரியும் மனைவியுமான ஜூனோ (சந்திரக் கடவுளாகக் கருதப்பட்டவள்) பெண்களின் காவல் தெய்வமாகக் கருதப்பட்டாள். யூப்பித்தருடைய மகள் மினர்வா கைவேலைகளின், தொழில்களின், கலைகளின், போர்களின் தெய்வமாக வணங்கப்பட்டாள்.

ரோமக் கடவுட்களின் பட்டியல் நீண்டுகொண்டே போனது. லாரெஸ்ஸும், பினாட்டெஸ்ஸும் குல தெய்வங்களாக இருந்தன. வெஸ்டா, அடுப்படியின் தெய்வமாக இருந்தது. இருமுகங்கள் கொண்ட ஜானெஸ், எல்லாத் தொடக்கங்களுக்கும் கடவுளாக வணங்கப்பட்டது. ஒவ்வொரு தொழிலுக்கும் ஒவ்வொரு இஷ்ட தெய்வம் இருந்தது. கருத்துகள், எண்ணங்கள் போன்றவற்றுக்கும்கூட தனித்தனி கடவுட்கள் இருந்தன. பேக்ஸ், சமாதானத்தின் கடவுளாக, சாலுஸ் ஆரோக்கியத்தின் கடவுளாக, புடிசிட்டியா தன்னடக்கம் மற்றும் ஒழுக்கத்தின் கடவுளாக, ஃபிடிஸ் கற்பின் கடவுளாக, வெர்டுஸ் தைரியத்தின் கடவுளாக, வாலுப்டஸ் இன்பத்தின் கடவுளாக இருந்தன. ரோமர்களுடைய பொது வாழ்க்கையிலும் சரி அந்தரங்க வாழ்க்கையிலும் சரி, கடவுட்கள் விதித்தபடிதான் எல்லாம் நடக்குமென நம்பப்பட்டது. எனவே, ஒரு காரியம் சித்திபெற வேண்டுமென்பதற்காக, அதற்குரிய கடவுளுக்குப் பூஜை புனஸ்காரம் செய்யப்பட்டன, பலிகள் செலுத்தப்பட்டன, பண்டிகைகள் கொண்டாடப்பட்டன.

கடவுட்களுடைய விருப்பத்தை அறிந்துகொள்வதற்கு சகுனம் பார்ப்பது ஒரு வழியாக இருந்தது. பலி செலுத்தப்பட்ட மிருகங்களின் உள்ளுறுப்புகளை ஆராய்வதன் மூலமே முக்கியமாகச் சகுனம் பார்க்கப்பட்டது. அந்த உறுப்புகளின் நிலையையும் தோற்றத்தையும் வைத்து, ஒரு காரியம் கடவுட்களுக்குப் பிடிக்குமா பிடிக்காதா எனக் கணிக்கப்பட்டது.

கி.மு. இரண்டாம் நூற்றாண்டின் பிற்பகுதிக்குள், கிரேக்கர்களின் முக்கியக் கடவுட்கள் தங்களுடைய முக்கியக் கடவுட்களுக்கு இணையாய் இருப்பதாக ரோமர்கள் கண்டுகொண்டார்கள்; உதாரணத்திற்கு, யூப்பித்தருக்கு இணையாய் சீயுஸ்ஸும், ஜூனோவுக்கு இணையாய் ஹிராவும் இருப்பதாகக் கண்டுகொண்டார்கள். கிரேக்க கடவுட்களைப் பற்றிய புராணக் கதைகளையும் ரோமர்கள் ஏற்றுக்கொண்டார்கள். மனிதர்களைப் போலவே குற்றங்குறைகளுடன் இருந்த கடவுட்களை அந்தப் புராணங்கள் மெச்சிப் பேசவில்லை. உதாரணமாக, சீயுஸ் கற்பழிப்பவனாக, மனிதர்களோடும் பிற தெய்வங்களோடும் உடலுறவு வைத்துக்கொண்டவனாக, குழந்தைகளைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்கிற காமக்கொடூரனாகச் சித்தரிக்கப்பட்டான். இந்தக் கடவுட்களுடைய வெட்கங்கெட்ட செயல்கள் பூர்வ அரங்குகளில் காட்டுக்கூச்சலோடு கைதட்டி வரவேற்கப்பட்டன; அவற்றின் பக்தர்களும் அவற்றைப் போலவே கீழ்த்தரமாக நடந்துகொள்ள ஆரம்பித்ததில் ஆச்சரியமே இல்லை!

மெத்தப் படித்தவர்கள் அப்படிப்பட்ட புராணக் கதைகளை நேரடியான கருத்தில் எடுத்துக்கொள்ளவில்லை. அவற்றுக்கு அடையாள அர்த்தம் இருப்பதாக அவர்களில் சிலர் சொல்லிக்கொண்டார்கள். இதனால்தான், “சத்தியமா, அது என்ன?” என்ற கேள்வியை பொந்தியு பிலாத்து கேட்டார். (யோவா. 18:38) இதிலிருந்து, “எந்த விஷயத்தையும் இதுதான் சத்தியம் என்று வரையறுக்க முடியாதென அறிஞர்கள் பொதுவாக நம்பியதை ”நம்மால் நன்றாகவே புரிந்துகொள்ள முடிகிறது.

பேரரசர் வழிபாடு

பேரரசர் அகஸ்டஸின் ஆட்சியில்தான் (கி.மு. 27–கி.பி. 14) பேரரசர் வழிபாடு ஆரம்பமானது. முக்கியமாக, கிரேக்க மொழி பேசப்பட்ட கிழக்கத்திய மாகாணங்களில் வாழ்ந்தவர்கள் அகஸ்டஸுக்கு ரொம்பவே நன்றியுள்ளவர்களாக இருந்தார்கள்; ஏனென்றால், நீண்ட காலப் போருக்குப்பின் அவருடைய ஆட்சிக் காலம்தான் பொற்காலமாகத் திகழ்ந்தது. இப்படி, நல்லாட்சி செய்கிற ஒருவரின் ஆட்சியில் தொடர்ந்து சமாதானத்தையும் பாதுகாப்பையும் அனுபவிக்க வேண்டுமென மக்கள் விரும்பினார்கள். மத வேறுபாடுகளைக் களைந்தெறிகிற, நாட்டுப்பற்றை ஊட்டிவளர்க்கிற, “ஓர் இரட்சகரின்” கீழ் உலகத்தை ஒன்றிணைக்கிற ஆட்சிக்காக அவர்கள் ஏங்கினார்கள். விளைவு? ரோமப் பேரரசர் கடவுளுக்குச் சமமானவராகக் கருதப்பட்டார்.

அகஸ்டஸ் உயிரோடு இருந்தபோது, யாரும் தன்னைக் கடவுளென அழைக்க அனுமதிக்கவில்லை; என்றபோதிலும், ரோமா தியா என்ற தேவியாக உருவகப்படுத்தப்பட்ட ரோமப் பேரரசை வணங்கும்படி மக்களை அவர் கட்டாயப்படுத்தினார். அவர் இறந்த பிறகே கடவுளாக ஆக்கப்பட்டார். ரோம மாகாணங்களில் வசித்த மக்களிடையே நிலவிய மதப் பற்றும் நாட்டுப் பற்றும், பேரரசையும் பேரரசர்களையும் வணங்கும்படி அவர்களைத் தூண்டிவிட்டன. புதிதாகத் தோன்றிய இந்தப் பேரரசர் வழிபாடு மளமளவென்று எல்லா மாகாணங்களிலும் பரவியது; ரோமப் பேரரசுக்கு மரியாதையையும் தேசப்பற்றையும் காண்பிக்க அது வழிவகுத்தது.

டொமீஷியன்தான் (ஆட்சிக் காலம், கி.பி. 81-96) தன்னை வழிபட வேண்டுமென வற்புறுத்திய முதல் ரோமப் பேரரசர். அவருடைய ஆட்சிக் காலத்திற்குள், யூதர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் இடையே இருந்த வித்தியாசத்தை ரோமர்கள் கண்டுகொண்டார்கள்; இந்தப் புதிய மதப்பிரிவை எதிர்க்க ஆரம்பித்தார்கள். அநேகமாக இவருடைய ஆட்சியின்போதுதான் அப்போஸ்தலன் யோவான் “இயேசுவைக் குறித்துச் சாட்சி கொடுத்ததற்காக” பத்மு தீவுக்கு நாடுகடத்தப்பட்டார்.—வெளி. 1:9.

அந்தச் சமயத்தில் அவர் வெளிப்படுத்துதல் புத்தகத்தை எழுதினார். பேரரசர் வழிபாட்டின் மையமாக இருந்த பெர்கமு நகரில் கிறிஸ்தவரான அந்திப்பா கொல்லப்பட்டது பற்றி அதில் குறிப்பிட்டார். (வெளி. 2:12, 13) அந்தச் சமயத்திற்குள், பேரரசர் வழிபாட்டில் உட்பட்டிருந்த சடங்குகளைச் செய்யும்படி இந்த ஏகாதிபத்திய அரசு கிறிஸ்தவர்களைக் கட்டாயப்படுத்த ஆரம்பித்திருக்கலாம். அப்படி இல்லாவிட்டாலும் சரி, அத்தகைய சடங்குகளைச் செய்யும்படி பித்தினியாவிலிருந்த கிறிஸ்தவர்களை கி.பி. 112-ஆம் ஆண்டு வாக்கில் பிளைனி கட்டாயப்படுத்தி வந்தார்; இக்கட்டுரையின் ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்டிருந்த அவருடைய கடிதத்திலிருந்து இது தெரிகிறது.

கிறிஸ்தவர்களிடம் பிளைனி விசாரணை நடத்திய விதத்தை டிராஜன் பாராட்டினார், ரோமக் கடவுட்களை வணங்க மறுத்த கிறிஸ்தவர்களுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டுமென்றும் வலியுறுத்தினார். “என்றாலும், குற்றம்சாட்டப்படுகிற ஒருவர் தான் கிறிஸ்தவர் இல்லை எனச் சொன்னால், நம்முடைய கடவுட்களிடம் வேண்டிக்கொள்வதன் மூலம் அதை உறுதிப்படுத்தினால், (அவர்மீது எந்தவொரு குற்றச்சாட்டு இருந்தாலும்) மனந்திரும்பிய அவரை மன்னித்து விட்டுவிட வேண்டும்” என்று டிராஜன் எழுதினார்.

ஒரேவொரு கடவுளை மட்டுமே வணங்க வேண்டும் என்ற கொள்கையை உடைய ஒரு மதத்தை ரோமர்களால் ஜீரணிக்க முடியவில்லை. ஒரு கடவுளை மட்டுமே வணங்க வேண்டுமென ரோமர்களின் கடவுட்கள் எதிர்பார்க்காதபோது, கிறிஸ்தவர்களின் கடவுள் மட்டும் ஏன் அதை எதிர்பார்க்க வேண்டும்? பேரரசர்களை வணங்குவது அந்நாட்டுக்கே ஆதரவு காட்டுவதைக் குறித்தது. ஆகையால், அவர்களை வணங்க மறுத்தது தேசத் துரோகச் செயலாகக் கருதப்பட்டது. பெரும்பாலான கிறிஸ்தவர்களை அதற்கு அடிபணிய வைக்க முடியாது என்பதை பிளைனி கண்டுகொண்டார். பேரரசரை வணங்குவது யெகோவாவுக்குத் துரோகம் செய்வதாக இருக்குமென அந்தக் கிறிஸ்தவர்கள் நினைத்தார்கள்; பேரரசரை வணங்குவதைவிடச் சாவதே மேல் என அவர்களில் ஏராளமானோர் முடிவுசெய்தார்கள்.

இந்த விஷயங்களையெல்லாம் நாம் ஏன் இப்போது சிந்தித்துக்கொண்டிருக்கிறோம்? தேசியச் சின்னங்களை வணங்கும்படி குடிமக்களிடம் சில நாடுகள் எதிர்பார்க்கின்றன. கிறிஸ்தவர்களான நாம், அரசாங்க அதிகாரிகளுக்கு நிச்சயமாகவே மதிப்பு மரியாதை காட்டுகிறோம். (ரோ. 13:1) ஆனால், “உருவ வழிபாட்டிலிருந்து விலகி ஓடுங்கள்,” “உருவச் சிலைகளுக்கு விலகி உங்களைக் காத்துக்கொள்ளுங்கள்” என்று பைபிள் சொல்வதாலும், யெகோவா தேவன் தனிப்பட்ட பக்தியை எதிர்பார்ப்பதாலும் கொடி வணக்க நிகழ்ச்சிகளின்போது செய்யப்படுகிற சடங்குகளில் நாம் கலந்துகொள்வதில்லை. (1 கொ. 10:14; 1 யோ. 5:21; நாகூ. 1:2) இயேசுவும்கூட இவ்வாறு சொன்னார்: “உன் கடவுளாகிய யெகோவாவை வணங்கி, அவர் ஒருவருக்கே பரிசுத்த சேவை செய்ய வேண்டும்.” (லூக். 4:8) எனவே, நாம் வணங்குகிற கடவுளாகிய யெகோவாவுக்குத் தொடர்ந்து உத்தமத்தைக் காட்டுவோமாக!

[பக்கம் 5-ன் சிறுகுறிப்பு]

உண்மைக் கிறிஸ்தவர்கள் யெகோவாவை மட்டுமே வணங்குகிறார்கள்

[பக்கம் 3-ன் படங்கள்]

பூர்வ கிறிஸ்தவர்கள் ரோமப் பேரரசரையோ உருவச் சிலைகளையோ வணங்க மறுத்தார்கள்

பேரரசர் டொமீஷியன்

சீயுஸ்

[படங்களுக்கான நன்றி]

பேரரசர் டொமீஷியன்: Todd Bolen/Bible Places.com; சீயுஸ்: Photograph by Todd Bolen/Bible Places.com, taken at Archaeological Museum of Istanbul

[பக்கம் 4-ன் படம்]

எபேசுவிலிருந்த கிறிஸ்தவர்கள் பிரபலமான அர்த்தமி தேவியை வணங்க மறுத்தார்கள்.—அப். 19:23-41