ஆரான் பழங்கால வர்த்தக மையம்
ஆரான் பழங்கால வர்த்தக மையம்
பைபிளைப் படித்திருக்கிறவர்களுக்கு, ஆரான் என்ற பெயரைச் சொன்னதும் உண்மையுள்ள முற்பிதாவான ஆபிரகாமைப் பற்றித்தான் நினைவுக்கு வரும். அவர், தன்னுடைய மனைவி சாராள், தன்னுடைய அப்பா தேரா, அண்ணன் மகன் லோத்து ஆகியோருடன் ஊர் என்ற தேசத்திலிருந்து கானான் தேசத்திற்குப் பயணிக்கையில் ஆரான் என்ற இடத்தில் சிறிது காலம் தங்கினார்கள். அங்கே, ஆபிரகாம் நிறையச் சொத்துக்களைச் சேர்த்தார். அவருடைய அப்பா இறந்த பிறகு, உண்மைக் கடவுள் வாக்குறுதி அளித்திருந்த தேசத்திற்குப் பயணத்தைத் தொடர்ந்தார். (ஆதி. 11:31, 32; 12:4, 5; அப். 7:2-4) பின்னொரு சமயம், ஈசாக்குக்குப் பெண் பார்ப்பதற்காக வயதில் மூத்த தன்னுடைய ஊழியக்காரனை ஆரானுக்கு அல்லது பக்கத்து ஊருக்கு ஆபிரகாம் அனுப்பினார். ஆபிரகாமின் பேரனான யாக்கோபும்கூட அங்கு பல வருடங்கள் வாழ்ந்தார்.—ஆதி. 24:1-4, 10; 27:42-45; 28:1, 2, 10.
யூதாவின் ராஜாவான எசேக்கியாவுக்கு அசீரிய ராஜாவான சனகெரிப் இறுதி எச்சரிக்கை விடுத்தபோது, அசீரிய ராஜாக்கள் முறியடித்த ‘தேசங்களில்’ ஆரானும் ஒன்று எனக் குறிப்பிட்டான். “ஆரான்” என இங்கு சொல்லப்பட்டிருப்பது, அந்த நகரத்தை மட்டுமல்ல, அந்த நகரமிருந்த மாகாணத்தையும் குறித்தது. (2 இரா. 19:11, 12) தீருவுடன் சேர்ந்து வர்த்தகத்தில் ஈடுபட்ட முக்கியத் தேசங்களில் ஆரானும் ஒன்று என எசேக்கியேலின் தீர்க்கதரிசனம் குறிப்பிடுகிறது.—எசே. 27:1, 2, 23.
ஆரான் இப்போது, கிழக்கு துருக்கியிலுள்ள ஷான்லயூர்ஃபா என்ற இடத்திற்கு அருகிலிருக்கும் சிறிய ஊராக மட்டுமே உள்ளது. ஆனால், ஒரு காலத்தில் அந்தப் பழங்கால நகரம் உண்மையிலேயே வர்த்தக மையமாகக் கொடிகட்டிப் பறந்தது. பைபிளில் குறிப்பிடப்பட்டுள்ள அதே பெயரிலேயே இன்றும் அழைக்கப்பட்டு வருகிற வெகுசில இடங்களில் ஆரானும் ஒன்று. அசீரிய மொழியில் இது காரானு என அழைக்கப்படுகிறது; இதன் அர்த்தம் “சாலை” அல்லது “வணிகரின் சாலை” என்பதாகும். பெரிய பெரிய நகரங்களுக்கு இடையே உள்ள முக்கிய வியாபார மார்க்கத்தில் ஆரான் அமைந்திருந்ததை இது காட்டுகிறது. பாபிலோனின் ராஜாவான நபோனிடஸின் தாய் ஆரானிலிருந்த சீன் (சந்திரக் கடவுள்) கோவிலில் பூசாரியாய் இருந்ததாக அங்கு தோண்டியெடுக்கப்பட்ட கல்வெட்டுகள் காட்டுகின்றன. நபோனிடஸ் அந்தக் கோயிலைப் புதுப்பித்துக் கட்டியதாகச் சிலர் சொல்கிறார்கள். அதன் பிறகு, ஆரானில் எத்தனையோ வல்லரசுகள் வந்துபோயிருக்கின்றன.
இன்றைய ஆரானுக்கும் அன்றைய ஆரானுக்கும் பெரிய வித்தியாசம் இருக்கிறது. அன்றைய ஆரான், குறிப்பாகச் சில காலப்பகுதிகளில் பெரும் வளர்ச்சியடைந்த முக்கிய நகரமாக இருந்தது. ஆனால், இன்றைய ஆரானில் கவிகை வடிவிலுள்ள கூரைகளைக் கொண்ட சில வீடுகள் மட்டுமே உள்ளன. இந்த ஊரைச் சுற்றிலும் பண்டைய நாகரிகங்களின் இடிபாடுகள் காணப்படுகின்றன. கடவுள் இந்தப் பூமியைப் புதிதாக்கும்போது ஆரானில் ஒருசமயம் வாழ்ந்த ஆபிரகாம், சாராள், லோத்து உட்பட அநேகர் உயிர்த்தெழுப்பப்படுவார்கள். அப்போது, பழங்கால வர்த்தக மையமாய்த் திகழ்ந்த ஆரானைப் பற்றி அவர்கள் இன்னும் நிறைய விஷயங்களை நமக்குச் சொல்வார்கள்.
[பக்கம் 20-ன் படம்]
ஆரானில் இடிபாடுகள்
[பக்கம் 20-ன் படம்]
கவிகை வடிவ கூரைகளைக் கொண்ட வீடுகள்
[பக்கம் 20-ன் படம்]
இன்றைய ஆரான்