Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பகுத்தறியும் திறன்களைத் தொடர்ந்து பயிற்றுவியுங்கள்

பகுத்தறியும் திறன்களைத் தொடர்ந்து பயிற்றுவியுங்கள்

பகுத்தறியும் திறன்களைத் தொடர்ந்து பயிற்றுவியுங்கள்

திறம் படைத்த ஓர் உடற்பயிற்சியாளர் கை கால்களை அழகாக, விறுவிறுப்பாக அசைப்பதைப் பார்ப்பது எவ்வளவு இன்பமாய் இருக்கிறது! ஓர் உடற்பயிற்சியாளர் தனக்குப் பயிற்சி அளித்துக்கொள்வதுபோல கிறிஸ்தவர்கள் தங்களுடைய சிந்திக்கும் திறனைப் பயிற்றுவிக்கும்படி பைபிள் ஊக்குவிக்கிறது.

எபிரெயர்களுக்கு எழுதிய கடிதத்தில் அப்போஸ்தலன் பவுல் இவ்வாறு எழுதினார்: “திட உணவோ முதிர்ச்சி அடைந்தவர்களுக்கே உரியது; ஆம், நன்மை எது, தீமை எது எனக் கண்டறிய தங்களுடைய பகுத்தறியும் திறன்களைப் [மூல மொழியில் “புலனுணர்வுகளை”] பயன்படுத்தி [உடற்பயிற்சியாளரைப் போல] பயிற்றுவித்திருப்பவர்களுக்கே உரியது.” (எபி. 5:14) தேர்ச்சிபெற்ற ஓர் உடற்பயிற்சியாளர் தனது தசைகளுக்குப் பயிற்சி அளிப்பதுபோல, தங்களுடைய சிந்திக்கும் திறனைப் பயிற்றுவிக்கும்படி எபிரெய கிறிஸ்தவர்களிடம் பவுல் ஏன் சொன்னார்? நம்முடைய பகுத்தறியும் திறனை நாம் எப்படிப் பயிற்றுவிக்கலாம்?

‘போதகர்களாக இருந்திருக்க வேண்டியவர்கள்’

“மெல்கிசேதேக்கைப் போலவே தலைமைக் குருவாக” இருக்கிற இயேசுவின் ஸ்தானத்தை பவுல் விவரிக்கையில் இவ்வாறு எழுதினார்: “அவரை [இயேசுவை] பற்றிச் சொல்வதற்கு நிறைய இருக்கிறது; ஆனால், செவிகொடுத்துக் கேட்பதில் நீங்கள் மந்தமாக இருப்பதால் அதை விளக்குவது கடினம். இத்தனை காலத்திற்குள் போதகர்களாக இருந்திருக்க வேண்டிய நீங்கள், கடவுளுடைய பரிசுத்த வார்த்தைகளின் அடிப்படைக் காரியங்களைப் பற்றி ஆரம்பத்திலிருந்து மறுபடியும் கற்பிக்கப்பட வேண்டிய நிலையில் இருக்கிறீர்கள்; திட உணவு சாப்பிடுகிறவர்களாக அல்ல, பால் குடிப்பவர்களாகவே ஆகியிருக்கிறீர்கள்.”—எபி. 5:10-12.

ஆம், முதல் நூற்றாண்டு யூத கிறிஸ்தவர்கள் சிலர் சத்தியத்தை அதிகமாகப் புரிந்துகொள்ளவும், ஆன்மீக ரீதியில் முன்னேறவும் தவறினார்கள். உதாரணமாக, திருச்சட்டம் சம்பந்தமாகவும் விருத்தசேதனம் சம்பந்தமாகவும் செய்யப்பட்ட புதிய மாற்றத்தை ஏற்றுக்கொள்வது அவர்களுக்குக் கடினமாய் இருந்தது. (அப். 15:1, 2, 27-29; கலா. 2:11-14; 6:12, 13) சிலருக்கு, வாராந்தர ஓய்வு நாள், வருடாந்தர பாவ நிவாரண நாள் ஆகியவை சம்பந்தமாக தொன்றுதொட்டு செய்யப்பட்டுவந்த பழக்கவழக்கங்களை விட்டுவிடுவது கடினமாய் இருந்தது. (கொலோ. 2:16, 17; எபி. 9:1-14) ஆகவே, நன்மை எது, தீமை எது எனக் கண்டறிவதற்கு பகுத்தறியும் திறன்களைப் பயிற்றுவிக்கும்படி பவுல் அவர்களை ஊக்குவித்தார்; அதோடு, ‘முதிர்ச்சியை நோக்கி வேகமாய் முன்னேறும்படியும்’ சொன்னார். (எபி. 6:1, 2) தங்களுடைய சிந்திக்கும் திறனை எப்படிப் பயன்படுத்தினார்கள் என்பதை யோசித்துப் பார்க்க பவுல் கொடுத்த அறிவுரை அவர்களில் சிலருக்கு உதவியிருக்கும்; ஆன்மீக ரீதியில் முன்னேறுவதற்கும் உதவியிருக்கும். நம்மைப் பற்றி என்ன சொல்லலாம்?

பகுத்தறியும் திறன்களைப் பயிற்றுவியுங்கள்

ஆன்மீக ரீதியில் முதிர்ச்சி அடைவதற்கு நம்முடைய சிந்திக்கும் திறனை எப்படிப் பயிற்றுவிக்கலாம்? அதை ‘பயன்படுத்துவதன் மூலம்’ என்பதாக பவுல் சொன்னார். உடற்பயிற்சியாளர்கள் சிக்கலான அசைவுகளைக்கூட அழகாகச் செய்வதற்கு தங்களுடைய தசைகளுக்கும் உடலுக்கும் பயிற்சி அளிப்பார்கள்; அதுபோல, நாமும் நன்மை எது தீமை எது என்பதைக் கண்டறிவதற்கு நம்முடைய சிந்திக்கும் திறனைப் பயிற்றுவிப்பது அவசியம்.

“பயிற்சியே உங்களுடைய மூளைக்குக் கொடுக்க முடிந்த மிகச் சிறந்த காரியம்” என்கிறார் ஹார்வர்ட் மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த மனநல துணைப் பேராசிரியர் ஜான் ரேட்டி. “நம் மூளைக்கு அதிக வேலை கொடுக்கும்போது மூளை செல்களில் டெண்ட்ரைட்டுகள் எனப்படும் புதுப்புது நார்கள் உருவாகின்றன; இதனால் மூளையில் சினாப்ஸிஸ் எனப்படும் இணைப்புகள் அதிகமாகின்றன” என்பதாக ஜார்ஜ் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தின் முதுமை, ஆரோக்கியம், மனிதநேயம் ஆகியவற்றிற்கான மையத்தின் இயக்குநர் ஜீன் கோஹன் கூறுகிறார்.

அப்படியானால், நம்முடைய சிந்திக்கும் திறனைப் பயிற்றுவித்து கடவுளுடைய வார்த்தையைப் பற்றிய அறிவில் வளருவதே ஞானமானது. அவ்வாறு செய்வதன் மூலம், ‘பரிபூரணமான கடவுளுடைய சித்தத்தை’ செய்ய நாம் நன்கு தகுதி பெற்றவர்களாவோம்.—ரோ. 12:1, 2.

‘திட உணவின்மீது’ ஆர்வத்தை வளர்த்துக்கொள்ளுங்கள்

‘முதிர்ச்சியை நோக்கி வேகமாய் முன்னேற’ விரும்பினால், நம்மையே இவ்வாறு கேட்டுக்கொள்வது அவசியம்: ‘பைபிள் சத்தியத்தைப் புரிந்துகொள்வதில் நான் முன்னேறுகிறேனா? மற்றவர்கள் என்னை ஆன்மீக ரீதியில் முதிர்ச்சி பெற்ற ஒருவராகக் கருதுகிறார்களா?’ ஒரு தாய் தன் கைக்குழந்தைக்கு பாலையும் திரவ உணவையும் ஊட்ட விரும்புவாள். ஆனால், பல வருடங்கள் கடந்த பிறகும் அக்குழந்தை திட உணவைச் சாப்பிடுவதில்லை என்றால் அந்தத் தாய்க்கு எவ்வளவு கவலையாக இருக்கும்! அவ்வாறே, நாம் பைபிள் படிப்பு நடத்துகிற ஒருவர் யெகோவாவுக்குத் தன்னை அர்ப்பணித்து ஞானஸ்நானம் பெறுமளவுக்கு முன்னேற்றம் செய்வதைக் காணும்போது சந்தோஷப்படுகிறோம். ஆனால், அதன் பிறகு அந்த நபர் ஆன்மீக ரீதியில் முன்னேற்றம் செய்யவில்லை என்றால் நாம் எப்படி உணருவோம்? அது நம் மனதுக்கு வருத்தமாக இருக்காதா? (1 கொ. 3:1-4) அந்தப் புதிய சீடர் காலப்போக்கில் மற்றவர்களுக்கு கற்றுக்கொடுப்பவராக ஆக வேண்டுமென அவருக்குக் கற்றுக்கொடுத்தவர் எதிர்பார்க்கிறார்.

நம் பகுத்தறியும் திறன்களைப் பயன்படுத்தி ஞானமாகத் தீர்மானங்கள் எடுப்பதற்கு தியானிப்பது முக்கியம்; அதற்கு முயற்சி அவசியம். (சங். 1:1-3) முக்கியமானவற்றை ஆழ்ந்து சிந்திப்பதற்குத் தடையாக இருக்கும் கவனச் சிதறல்களுக்கு நாம் இடமளிக்கக் கூடாது; உதாரணமாக, டிவி பார்ப்பது அல்லது பொழுதுபோக்குகளில் ஈடுபடுவது போன்ற மூளைக்கு வேலை கொடுக்காத கவனச் சிதறல்களுக்கு நாம் இடமளிக்கக் கூடாது. நம்முடைய சிந்திக்கும் திறனை அதிகரிப்பதற்கு, பைபிளையும் “உண்மையும் விவேகமும் உள்ள அடிமை” அளிக்கிற பிரசுரங்களையும் படிப்பதற்கான ஆர்வத்தை வளர்த்துக்கொள்வதும் அதைத் திருப்தி செய்வதும் அவசியம். (மத். 24:45-47) பைபிளைத் தனிப்பட்ட முறையில் தவறாமல் வாசிப்பதோடுகூட குடும்ப வழிபாட்டிற்காகவும், பைபிள் விஷயங்களை ஆழ்ந்து படிப்பதற்காகவும் நேரம் ஒதுக்குவது முக்கியம்.

மெக்சிகோவில் பயணக் கண்காணியாகச் சேவை செய்கிற கெரோனிமோ, காவற்கோபுர பத்திரிகை ஒவ்வொன்றையும் கிடைத்தவுடன் படிப்பதாகக் கூறுகிறார். தன் மனைவியோடு சேர்ந்து படிப்பதற்கும் அவர் நேரம் ஒதுக்குகிறார். “நாங்கள் பைபிளை தினமும் ஒன்று சேர்ந்து படிப்பதைப் பழக்கமாகக் கொண்டிருக்கிறோம்; அதற்காக, ‘நல்ல தேசம்’ சிற்றேடு போன்ற பைபிள் படிப்புக்கு உதவுகிற பிரசுரங்களைப் பயன்படுத்துகிறோம்” என்று கெரோனிமோ சொல்கிறார். ரானல்ட் என்பவர் சபை பைபிள் வாசிப்புக்கான பகுதியைத் தவறாமல் வாசிப்பதாகக் குறிப்பிடுகிறார். அதோடு, தனிப்பட்ட படிப்புக்காக ஓரிரு நீண்ட கால புராஜெக்டுகளும் அவருக்கு இருக்கிறதாம். “இந்த விதமான படிப்பில் ஈடுபடுவது அடுத்த முறை படிக்கப் போகும் நாளை ஆர்வத்தோடு எதிர்பார்க்க என்னைத் தூண்டுகிறது” என்று ரானல்ட் கூறுகிறார்.

நம்மைப் பற்றியதென்ன? கடவுளுடைய வார்த்தையைப் படிப்பதற்கும் தியானிப்பதற்கும் போதுமான நேரத்தை ஒதுக்குகிறோமா? நம் சிந்திக்கும் திறனைப் பயிற்றுவித்து, பைபிள் நியமங்களுக்கு இசைவாக தீர்மானங்கள் எடுப்பதற்கு அனுபவத்தைப் பெறுகிறோமா? (நீதி. 2:1-7) நன்மை தீமையைக் கண்டறிவதற்கு தங்கள் பகுத்தறியும் திறன்களைப் பயிற்றுவித்ததால் அறிவையும் ஞானத்தையும் பெற்றவர்களைப் போல் நாமும் ஆன்மீக முதிர்ச்சி பெற்றவர்களாக ஆவது நம் லட்சியமாக இருக்கட்டும்!

[பக்கம் 23-ன் படம்]

நம்முடைய சிந்திக்கும் திறனை ‘பயன்படுத்துவதன் மூலம்’ அத்திறனைப் பயிற்றுவிக்கிறோம்