Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

யெகோவாவின் சக்தியைத் துக்கப்படுத்தாதீர்கள்!

யெகோவாவின் சக்தியைத் துக்கப்படுத்தாதீர்கள்!

யெகோவாவின் சக்தியைத் துக்கப்படுத்தாதீர்கள்!

“நீங்கள் . . . முத்திரையாகப் பெற்றிருக்கிற கடவுளுடைய சக்தியைத் துக்கப்படுத்தாமல் இருங்கள்.” —எபே. 4:30.

1. லட்சோப லட்சம் பேருக்கு யெகோவா என்ன பாக்கியத்தைக் கொடுத்திருக்கிறார், என்ன செய்ய அவர்கள் கடமைப்பட்டிருக்கிறார்கள்?

 தொல்லை மிகுந்த இவ்வுலகில், லட்சோப லட்சம் பேருக்கு யெகோவா ஓர் அருமையான பாக்கியத்தைக் கொடுத்திருக்கிறார். அது என்ன? தம்முடைய ஒரே மகனான இயேசு கிறிஸ்துவின் மூலம் தம்மிடம் நெருங்கி வர வழிசெய்திருக்கிறார். (யோவா. 6:44) அவருக்கு உங்களையே அர்ப்பணித்து, அந்த அர்ப்பணத்திற்கிசைய வாழ்ந்துவருகிறீர்கள் என்றால், பாக்கியம் பெற்ற அப்படிப்பட்டவர்களில் நீங்களும் ஒருவர். கடவுளுடைய சக்தியின் பெயரில் நீங்கள் ஞானஸ்நானம் பெற்றிருப்பதால் அந்தச் சக்தியின் வழிநடத்துதலுக்கு ஏற்ப நடக்கக் கடமைப்பட்டிருக்கிறீர்கள்.—மத். 28:19.

2. என்ன கேள்விகளை இப்போது நாம் சிந்திப்போம்?

2 “கடவுளுடைய சக்திக்கென்று விதைக்கிற” நாம் புதிய சுபாவத்தை அணிந்துகொள்கிறோம். (கலா. 6:8; எபே. 4:17-24) என்றாலும், அந்தச் சக்தியை நாம் துக்கப்படுத்தாமல் இருக்க வேண்டுமென அப்போஸ்தலன் பவுல் நமக்கு அறிவுரை அளிக்கிறார். (எபேசியர் 4:25-32-ஐ வாசியுங்கள்.) இப்போது நாம் அவருடைய புத்திமதியைக் கவனமாக ஆராய்வோம். கடவுளுடைய சக்தியைத் துக்கப்படுத்தாமல் இருங்கள் என பவுல் சொன்னபோது, எதை அர்த்தப்படுத்தினார்? யெகோவாவுக்குத் தன்னை அர்ப்பணித்த ஒரு நபர் எப்படியெல்லாம் அவருடைய சக்தியைத் துக்கப்படுத்தக்கூடும்? யெகோவாவின் சக்தியை நாம் எப்படித் துக்கப்படுத்தாமல் இருக்கலாம்? இக்கேள்விகளுக்குப் பதில்களை இப்போது நாம் சிந்திப்போம்.

பவுல் எதை அர்த்தப்படுத்தினார்

3. எபேசியர் 4:30-ல் உள்ள வார்த்தைகளின் அர்த்தத்தை விளக்குங்கள்.

3 எபேசியர் 4:30-ல் உள்ள பவுலின் வார்த்தைகளை முதலாவது கவனியுங்கள். “நீங்கள் மீட்புவிலையினால் விடுவிக்கப்படும் நாளுக்கென்று முத்திரையாகப் பெற்றிருக்கிற கடவுளுடைய சக்தியைத் துக்கப்படுத்தாமல் இருங்கள்” என்று அவர் எழுதினார். தன்னுடைய சக விசுவாசிகள் கடவுளோடு தங்களுக்குள்ள பந்தத்தைக் கெடுத்துக்கொள்ளக்கூடாதென பவுல் நினைத்தார். கடவுளுடைய சக்தி எனும் முத்திரையைக் கொண்டே ‘மீட்புவிலையினால் விடுவிக்கப்படும் நாளுக்கென்று அவர்கள் முத்திரையிடப்பட்டிருந்தார்கள்.’ இன்றும்கூட அந்தச் சக்தி ஒரு முத்திரையாக இருக்கிறது, அதாவது உத்தமத்தைக் காத்துக்கொள்கிற பரலோக நம்பிக்கையுள்ளோர் “பெறப்போகும் ஆஸ்திக்கு உத்தரவாதமாக” இருக்கிறது. (2 கொ. 1:22) அவர்கள் பெற்ற அந்த முத்திரை, அவர்கள் கடவுளுடைய சொத்தாக இருக்கிறார்கள் என்பதையும், பரலோக வாழ்க்கையை ஆஸ்தியாகப் பெறப்போகிறார்கள் என்பதையுமே குறிக்கிறது. இறுதி முத்திரையைப் பெறுகிறவர்களின் எண்ணிக்கை 1,44,000 ஆகும்.—வெளி. 7:2-4.

4. கடவுளுடைய சக்தியைத் துக்கப்படுத்தாமல் இருப்பது ஏன் முக்கியம்?

4 ஒரு கிறிஸ்தவருடைய வாழ்க்கையில் கடவுளுடைய சக்தியின் செல்வாக்கு இல்லாமல்போவதற்கு முதல் காரணம், அவர் அந்தச் சக்தியைத் துக்கப்படுத்திவிடுவதே. தாவீதின் வார்த்தைகள் இதைக் காட்டுகின்றன; பத்சேபாளோடு பாவம் செய்த பின்பு கனத்த நெஞ்சத்தோடு யெகோவாவிடம் அவர் இவ்வாறு கெஞ்சினார்: “உமது சமுகத்தை விட்டு என்னைத் தள்ளாமலும், உமது பரிசுத்த ஆவியை [அதாவது, உமது சக்தியை] என்னிடத்திலிருந்து எடுத்துக்கொள்ளாமலும் இரும்.” (சங். 51:11) பரலோக நம்பிக்கையுள்ளோரில் ‘சாகும்வரை உண்மையுள்ளவர்களாய்’ இருப்பவர்கள் மட்டுமே பரலோகத்தில் சாவாமையுள்ள வாழ்க்கையை ‘கிரீடமாக’ பெறுவார்கள். (வெளி. 2:10; 1 கொ. 15:53) பூமிக்குரிய நம்பிக்கையுள்ளோருக்கும் கடவுளுடைய சக்தி தேவை; ஆம், கடைசிவரை உத்தமத்தைக் காத்துக்கொள்வதற்கும், கிறிஸ்துவின் மீட்புப் பலியில் விசுவாசம் வைத்து முடிவில்லா வாழ்வெனும் அன்பளிப்பைப் பெற்றுக்கொள்வதற்கும் அந்தச் சக்தி அவர்களுக்குத் தேவை. (யோவா. 3:36; ரோ. 5:8; 6:23) எனவே, யெகோவாவின் சக்தியைத் துக்கப்படுத்தாதபடி நாம் எல்லாருமே கவனமாக இருக்க வேண்டும்.

கடவுளுடைய சக்தியை நாம் எப்படித் துக்கப்படுத்தக்கூடும்?

5, 6. யெகோவாவின் சக்தியை ஒரு கிறிஸ்தவர் எப்படித் துக்கப்படுத்திவிடக்கூடும்?

5 ஞானஸ்நானம் பெற்ற கிறிஸ்தவர்களான நாம், கடவுளுடைய சக்தியைத் துக்கப்படுத்தாமல் இருக்க முடியும். எப்படி? ‘கடவுளுடைய சக்தி வழிநடத்துகிறபடி நடந்துகொண்டே இருந்தால்’ துக்கப்படுத்த மாட்டோம்; அப்போதுதான், பாவ இச்சைகளில் சிக்கிக்கொள்ள மாட்டோம், கெட்ட குணங்களையும் வெளிக்காட்ட மாட்டோம். (கலா. 5:16, 25, 26) ஆனால், வாழ்க்கையில் ஏதோவொரு கட்டத்தில் கடவுளுடைய சக்தியை நாம் துக்கப்படுத்திவிடக்கூடும்; எப்படி? அந்தச் சக்தியின் தூண்டுதலால் எழுதப்பட்ட வார்த்தை கண்டனம் செய்கிற செயல்களில் நமக்கே தெரியாமல் நாம் படிப்படியாக ஈடுபடுவதன் மூலமாகும்.

6 கடவுளுடைய சக்தியின் வழிநடத்துதலை நாம் தொடர்ந்து புறக்கணித்தால், அதைத் துக்கப்படுத்திவிடுவோம், அதன் ஊற்றுமூலரான யெகோவாவையும் துக்கப்படுத்திவிடுவோம். எனவே, நாம் எப்படியெல்லாம் நடந்துகொள்ள வேண்டும் என்பதைத் தெரிந்துகொள்ள இப்போது எபேசியர் 4:25-32-ஐ ஆராய்ந்து பார்ப்போம்; கடவுளுடைய சக்தியைத் துக்கப்படுத்தாமல் இருக்க அது நமக்கு உதவும்.

கடவுளுடைய சக்தியை எப்படித் துக்கப்படுத்தாமல் இருக்கலாம்?

7, 8. நாம் ஏன் உண்மையாய் இருக்க வேண்டும்?

7 நாம் உண்மையாய் இருக்க வேண்டும். எபேசியர் 4:25-ல் பவுல் இவ்வாறு எழுதினார்: “பொய்யைக் களைந்திருக்கிற நீங்கள் ஒவ்வொருவரும் சக மனிதர்களிடம் எப்போதும் உண்மை பேசுங்கள்; நாம் ஒரே உடலின் உறுப்புகளாக இருக்கிறோமே.” நாம் “ஒரே உடலின் உறுப்புகளாக” ஒன்றுபட்டுச் செயல்படுவதால், நம்முடைய சக வணக்கத்தாரை மோசடி செய்யவோ, வேண்டுமென்றே அவர்களை ஏமாற்றவோ முயலக் கூடாது; ஏனென்றால், இது பொய் சொல்வதற்குச் சமம். இப்படிப்பட்ட பழக்கங்களில் ஊறிப்போயிருப்பவர்களுக்கு என்ன நேரிடலாம்? கடவுளோடு வைத்திருக்கும் பந்தத்தை இழக்க நேரிடலாம்.நீதிமொழிகள் 3:32-ஐ வாசியுங்கள்.

8 வஞ்சனையான வார்த்தைகளும் செயல்களும் சபையின் ஒற்றுமையைக் குலைத்துவிடக்கூடும். ஆகவே, உண்மையுள்ள தானியேல் தீர்க்கதரிசியைப் போலவே நாம் இருக்க வேண்டும்; அவரிடம் எந்தவொரு குற்றத்தையும் மற்றவர்களால் பார்க்க முடியவில்லை. (தானி. 6:4) பரலோக நம்பிக்கையுள்ளோருக்கு பவுல் கொடுத்த அறிவுரையை நாம் நினைவில் வைத்திருக்க வேண்டும்; உண்மையுள்ளவர்களாய், ‘கிறிஸ்துவுடைய உடலின்’ உறுப்புகளாக இருக்கிற அவர்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் சொந்தமானவர்களாக இருக்கிறார்கள், ஆகவே, அவர்கள் ஒன்றுபட்டவர்களாக இருக்க வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார். (எபே. 4:11, 12) பூஞ்சோலை பூமியில் வாழ்கிற நம்பிக்கையுள்ள நாமும் உண்மை பேசுவதன் மூலம் உலகளாவிய சகோதரத்துவத்தின் ஒற்றுமைக்குப் பங்களிக்க வேண்டும்.

9. நாம் எபேசியர் 4:26, 27-க்கு ஏற்ப நடப்பது ஏன் முக்கியம்?

9 கடவுளோடுள்ள நம் பந்தத்தை பிசாசு கெடுத்துப்போடாதபடி நாம் அவனை எதிர்த்து நிற்க வேண்டும். (யாக். 4:7) கடவுளுடைய சக்தி, சாத்தானை எதிர்த்து நிற்கவும் நமக்கு உதவுகிறது. உதாரணமாக, கோபாவேசத்தைத் தவிர்ப்பதன் மூலம் நாம் அவனை எதிர்த்து நிற்கலாம். “நீங்கள் கடுங்கோபம் கொண்டாலும் பாவம் செய்யாதிருங்கள்; சூரியன் அஸ்தமிப்பதற்கு முன்பு உங்கள் எரிச்சல் தணியட்டும்; பிசாசுக்கு இடம் கொடுக்காதீர்கள்” என்று பவுல் எழுதினார். (எபே. 4:26, 27) நியாயமான காரணங்களுக்காக நமக்குக் கோபம் வந்தாலும், உடனடியாக நாம் மனதிற்குள் ஜெபம் செய்ய வேண்டும்; ‘குளிர்ந்த மனமுள்ளவர்களாக’ இருப்பதற்கும், கடவுளுடைய சக்தியைத் துக்கப்படுத்தாத விதத்தில் சுயக்கட்டுப்பாட்டோடு நடந்துகொள்வதற்கும் அந்த ஜெபம் நமக்கு உதவும். (நீதி. 17:27) ஆகவே, நமக்குள் பொங்கியெழுகிற எரிச்சல் குபுகுபுவென பற்றியெரிய நாம் அனுமதிக்காதிருப்போமாக; ஆம், ஏதோவொரு பொல்லாத காரியத்தைச் செய்யும்படி சாத்தான் விரிக்கிற வலையில் நாம் விழுந்துவிடாதிருப்போமாக. (சங். 37:8, 9) மனஸ்தாபங்கள் ஏற்படும்போது இயேசுவின் அறிவுரைப்படி உடனடியாக அவற்றைத் தீர்த்துக்கொள்வது சாத்தானை எதிர்த்து நிற்பதற்கு ஒரு வழியாகும்.—மத். 5:23, 24; 18:15-17.

10, 11. நாம் ஏன் திருடவோ ஏமாற்றவோ கூடாது?

10 எந்தச் சூழ்நிலையிலும் நாம் திருடவோ ஏமாற்றவோ கூடாது. திருடுவது பற்றி பவுல் இவ்வாறு எழுதினார்: “திருடன் இனி திருடாமல், இல்லாதவர்களுக்குக் கொடுக்கும்படி தானே தன் கையால் பாடுபட்டு நேர்மையாக உழைக்கட்டும்.” (எபே. 4:28) ஒரு கிறிஸ்தவர் திருடினால், ‘கடவுளின் பெயருக்கு அவமானத்தையே’ உண்டாக்குவார். (நீதி. 30:7-9, NW) எனவே, வறுமையைக் காரணங்காட்டிக்கூட நாம் திருடக் கூடாது. கடவுள்மீதும் சக மனிதர்மீதும் அன்பு காட்டுகிற மக்கள், திருடுவது சரியென்று ஒருபோதும் சொல்ல மாட்டார்கள்.—மாற். 12:28-31.

11 நாம் என்னென்ன செய்யக் கூடாது என்பதை மட்டுமே பவுல் சொல்லவில்லை, என்னென்ன செய்ய வேண்டும் என்பதையும் அவர் சொன்னார். கடவுளுடைய சக்தி வழிநடத்துகிறபடி நாம் நடந்துகொண்டே இருந்தால், நம்முடைய குடும்பத்தைப் பராமரிப்பதற்காகவும், ‘இல்லாதவர்களுக்குக் கொடுப்பதற்காகவும்’ கடினமாக உழைப்போம். (1 தீ. 5:8) இயேசுவும் அவருடைய அப்போஸ்தலர்களும் ஏழைகளுக்கு உதவுவதற்காகப் பணத்தை ஒதுக்கிவைத்தார்கள், ஆனால் இயேசுவைக் காட்டிக்கொடுத்த யூதாஸ் இஸ்காரியோத்து அந்தப் பணத்திலிருந்து கொஞ்சத்தைத் திருடினான். (யோவா. 12:4-6) நிச்சயமாகவே அவன் கடவுளுடைய சக்தியினால் வழிநடத்தப்படவில்லை. கடவுளுடைய சக்தியினால் வழிநடத்தப்படுகிற நாமோ பவுலைப் போலவே ‘எல்லாவற்றிலும் நேர்மையாக நடக்கிறோம்.’ (எபி. 13:18) இவ்வாறு யெகோவாவின் சக்தியைத் துக்கப்படுத்தாமல் இருக்கிறோம்.

கடவுளுடைய சக்தியைத் துக்கப்படுத்தாமல் இருக்க உதவும் பிற வழிகள்

12, 13. (அ) எபேசியர் 4:29 சொல்கிறபடி, எப்படிப்பட்ட பேச்சை நாம் தவிர்க்க வேண்டும்? (ஆ) நம்முடைய பேச்சு எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும்?

12 நம்முடைய பேச்சைக் குறித்து நாம் கவனமாக இருக்க வேண்டும். பவுல் இவ்வாறு சொன்னார்: “கெட்ட வார்த்தை ஒன்றும் உங்கள் வாயிலிருந்து வர வேண்டாம்; கேட்கிறவர்களுக்குப் பிரயோஜனம் உண்டாகும்படி, அவர்களைப் பலப்படுத்துகிற நல்ல வார்த்தைகளையே சூழ்நிலைக்கு ஏற்றவாறு பேசுங்கள்.” (எபே. 4:29) இந்த வசனத்திலும், நாம் என்ன செய்யக் கூடாது என்பதை மட்டுமே பவுல் சொல்லவில்லை, என்ன செய்ய வேண்டும் என்பதையும் சொல்கிறார். எனவே, ‘கேட்கிறவர்களுக்குப் பிரயோஜனம் உண்டாகும்படி, அவர்களைப் பலப்படுத்துகிற நல்ல வார்த்தைகளை’ கடவுளுடைய சக்தி வழிநடத்துகிறபடி பேச நாம் தூண்டப்படுகிறோம். அதோடு, “கெட்ட வார்த்தை” ஒன்றும் நம் வாயிலிருந்து வராதபடி பார்த்துக்கொள்கிறோம். “கெட்ட” என்பதற்கான கிரேக்க வார்த்தை, கெட்டுப்போன பழத்தையோ, மீனையோ, இறைச்சியையோ விவரிக்கப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அழுகிப்போன உணவுப் பதார்த்தங்களைக் கண்டு நாம் எப்படி முகம் சுளிப்போமோ, அப்படியே யெகோவா வெறுக்கிற பேச்சுகளை வெறுத்து ஒதுக்குகிறோம்.

13 நம்முடைய பேச்சு கண்ணியமாகவும், தயவாகவும், “சுவையாகவும்” இருக்க வேண்டும். (கொலோ. 3:8-10; 4:6) நாம் வித்தியாசமானவர்கள் என்பதை நம் பேச்சு மற்றவர்களுக்கு வெளிப்படுத்த வேண்டும். ஆகையால், அவர்களை ‘பலப்படுத்துகிற’ நல்ல விஷயங்களையே பேசுவோமாக! ‘என் கன்மலையும் என் மீட்பருமாகிய யெகோவாவே, என் வாயின் வார்த்தைகளும், என் இருதயத்தின் தியானமும், உமது சமுகத்தில் பிரீதியாயிருப்பதாக’ என்று சொன்ன சங்கீதக்காரனைப் போலவே நாமும் சொல்வோமாக!—சங். 19:14.

14. எபேசியர் 4:30, 31-ல் சொல்லப்பட்டதற்கு இசைய எவற்றை நாம் அறவே தவிர்க்க வேண்டும்?

14 மனக்கசப்பையும், சினத்தையும், கடுங்கோபத்தையும், பழிப்பேச்சையும், மற்ற எல்லா விதமான துர்குணத்தையும் நாம் அறவே தவிர்க்க வேண்டும். கடவுளுடைய சக்தியைத் துக்கப்படுத்தாமல் இருக்கும்படி பவுல் நம்மை எச்சரித்த பின்பு, “எல்லா விதமான மனக்கசப்பையும், சினத்தையும், கடுங்கோபத்தையும், கூச்சலையும், பழிப்பேச்சையும், மற்ற எல்லா விதமான துர்குணத்தையும் உங்களைவிட்டு நீக்கிப்போடுங்கள்” என்றும் எழுதினார். (எபே. 4:30, 31) அபூரண மனிதர்களான நாம் எல்லாருமே, நம்முடைய சிந்தனைகளையும் செயல்களையும் கட்டுப்படுத்த கடுமையாக உழைக்க வேண்டும். “மனக்கசப்பையும், சினத்தையும், கடுங்கோபத்தையும்” கட்டுப்படுத்தாமல் விட்டுவிட்டோம் என்றால், கடவுளுடைய சக்தியை நாம் துக்கப்படுத்திவிடுவோம். அவ்வாறே, மற்றவர்கள் நமக்கு எதிராகச் செய்கிற தவறுகளைக் கணக்கில் வைத்தோம் என்றால், மனதில் வன்மத்தை வளர்த்தோம் என்றால், நம்மைப் புண்படுத்தியவரோடு சமரசமாக மறுத்தோம் என்றால், கடவுளுடைய சக்தியைத் துக்கப்படுத்திவிடுவோம். பைபிள் தருகிற ஆலோசனைகளை நாம் புறக்கணிக்க ஆரம்பித்துவிட்டால்கூட, கடவுளுடைய சக்திக்கு எதிராகப் பாவம் செய்யத் தூண்டுகிற குணங்களை வளர்த்துக்கொள்வோம்; இதனால் விபரீதமான விளைவுகள் ஏற்படலாம்.

15. நமக்கு ஏதாவது அநியாயம் இழைக்கப்பட்டால், நாம் என்ன செய்ய வேண்டும்?

15 நாம் கருணையையும் கரிசனையையும் மன்னிக்கிற குணத்தையும் காட்ட வேண்டும். “ஒருவருக்கொருவர் கருணையும் கரிசனையும் காட்டுங்கள்; கிறிஸ்துவின் மூலம் கடவுள் உங்களைத் தாராளமாக மன்னித்ததுபோல், நீங்களும் ஒருவரையொருவர் தாராளமாக மன்னியுங்கள்” என்று பவுல் எழுதினார். (எபே. 4:32) நமக்கு இழைக்கப்பட்ட ஏதோவொரு அநியாயத்தின் காரணமாக நம் மனம் ரணமாகியிருந்தாலும்கூட, கடவுளைப் போலவே மன்னிக்கிற குணத்தைக் காட்டுவோமாக. (லூக். 11:4) இந்தச் சூழ்நிலையைக் கற்பனை செய்துகொள்ளுங்கள்: சக விசுவாசி ஒருவர் உங்களைப் பற்றி மற்றவர்களிடம் தவறாகப் பேசியிருக்கிறார். இதைப் பற்றி விசாரிக்க நீங்கள் அவரை அணுகுகிறீர்கள். அப்போது அவர் உண்மையிலேயே மனம் வருந்தி, உங்களிடம் மன்னிப்புக் கேட்கிறார். நீங்களும் மன்னித்துவிடுகிறீர்கள்; ஆனால், நீங்கள் வேறொரு காரியத்தையும் செய்ய வேண்டும். லேவியராகமம் 19:18 இப்படிச் சொல்கிறது: ‘பழிக்குப்பழி வாங்காமலும், உன் ஜனப்புத்திரர்மேல் பொறாமைகொள்ளாமலும், உன்னில் நீ அன்புகூருவதுபோல் பிறனிலும் அன்புகூர வேண்டும்; நான் யெகோவா.’

விழிப்புடன் இருப்பது அவசியம்

16. யெகோவாவின் சக்தியைத் துக்கப்படுத்தாதபடி இருக்க, சில மாற்றங்களைச் செய்ய வேண்டியிருக்கலாம் என்பதை ஓர் உதாரணத்துடன் விளக்குங்கள்.

16 நாம் தனியாக இருக்கும் சமயங்களில்கூட, கடவுளுக்குப் பிடிக்காத சில காரியங்களைச் செய்யத் தூண்டப்பட்டுவிடுவோம். ஒரு சூழ்நிலையைக் கற்பனை செய்துகொள்ளுங்கள்: ஒரு சகோதரர் ஆட்சேபணைக்குரிய இசையைக் கேட்டு வந்திருக்கிறார். “உண்மையும் விவேகமும் உள்ள அடிமை” வகுப்பார் வெளியிட்டிருக்கிற பிரசுரங்களில் கொடுக்கப்பட்டுள்ள ஆலோசனைகளைப் புறக்கணித்து வந்திருக்கிறார். காலப்போக்கில், அவருடைய மனசாட்சி உறுத்த ஆரம்பிக்கிறது. (மத். 24:45) இந்தப் பிரச்சினையைக் குறித்து அவர் ஜெபம் செய்கிறார். எபேசியர் 4:30-ல் உள்ள பவுலின் வார்த்தைகளை நினைத்துப் பார்க்கிறார். கடவுளுடைய சக்தியைத் துக்கப்படுத்திவிடக் கூடாது எனத் தீர்க்கமாக முடிவு செய்கிறார், ஆட்சேபணைக்குரிய எந்த இசையையும் கேட்கப்போவதில்லை எனத் தீர்மானிக்கிறார். இப்படிப்பட்ட மனப்பான்மையைக் காட்டுகிற அந்தச் சகோதரரை யெகோவா ஆசீர்வதிப்பார். ஆகையால், கடவுளுடைய சக்தியைத் துக்கப்படுத்தாதபடி எப்போதும் கவனமாய் இருப்போமாக!

17. நாம் விழிப்புள்ளவர்களாகவும் ஜெப சிந்தையுள்ளவர்களாகவும் இல்லையென்றால், நமக்கு என்ன ஏற்பட்டுவிடலாம்?

17 நாம் விழிப்புள்ளவர்களாகவும் ஜெப சிந்தையுள்ளவர்களாகவும் இல்லையென்றால், அசுத்தமான, தவறான பழக்கவழக்கங்களில் ஈடுபட்டு, கடவுளுடைய சக்தியைத் துக்கப்படுத்திவிடுவோம். நம்முடைய பரலோகத் தகப்பனின் சக்தி அவருடைய சுபாவத்திற்கு இசைவான பண்புகளைப் பிறப்பிப்பதால், அதை நாம் துக்கப்படுத்தும்போது, உண்மையில் அவரை நாம் துக்கப்படுத்துகிறோம்; அப்படிப்பட்ட பாவத்தைச் செய்ய நாம் ஒருபோதும் விரும்ப மாட்டோம். (எபே. 4:30) சாத்தானின் வல்லமையினால்தான் இயேசு அற்புதங்களைச் செய்கிறார் என முதல் நூற்றாண்டு வேத அறிஞர்கள் அவர்மேல் குற்றம் சாட்டினார்கள்; இப்படி, தங்கள் வாயினால் பாவம் செய்தார்கள். (மாற்கு 3:22-30-ஐ வாசியுங்கள்.) ‘கடவுளுடைய சக்திக்கு விரோதமாக நிந்தனை செய்த’ அவர்கள் மன்னிக்க முடியாத பாவத்திற்கு ஆளானார்கள். அதே கதி நமக்கும் ஏற்படாதவாறு பார்த்துக்கொள்வோமாக!

18. நாம் மன்னிக்க முடியாத பாவத்தைச் செய்யவில்லை என எதை வைத்துத் தீர்மானிக்கலாம்?

18 மன்னிக்க முடியாத பாவத்தைச் செய்வது பற்றி நாம் யோசித்துப் பார்க்கக்கூட விரும்ப மாட்டோம், அல்லவா? அப்படியென்றால், கடவுளுடைய சக்தியைத் துக்கப்படுத்தாமல் இருப்பது சம்பந்தமாக பவுல் கொடுத்த அறிவுரையை நாம் நினைவில் வைத்திருக்க வேண்டும். ஆனால், நாம் மோசமான ஒரு தவறைச் செய்திருந்தால் என்ன செய்வது? செய்த தவறிலிருந்து நாம் மனந்திரும்பி, மூப்பர்களுடைய உதவியைப் பெற்றிருந்தால், கடவுள் நம்மை மன்னித்துவிட்டார் என்றும், அவருடைய சக்திக்கு எதிராக நாம் பாவம் செய்யவில்லை என்றும் நம்பலாம். கடவுளுடைய உதவியோடு, நாம் எவ்விதத்திலும் அவரது சக்தியைத் துக்கப்படுத்திவிடாமல் இருக்க முடியும்.

19, 20. (அ) நாம் தவிர்க்க வேண்டிய சில காரியங்கள் யாவை? (ஆ) நாம் என்ன செய்யத் தீர்மானமாய் இருக்க வேண்டும்?

19 கடவுள் தம்முடைய சக்தியின் மூலம் தம் மக்கள் மத்தியில் அன்பும் சந்தோஷமும் ஐக்கியமும் தழைத்தோங்கும்படி செய்கிறார். (சங். 133:1-3) எனவே, கடவுளுடைய சக்தியினால் நியமிக்கப்படுகிற மேய்ப்பர்களைப் பற்றி நாம் இல்லாததையும் பொல்லாததையும் பேசி, அவர்கள் மீதுள்ள மதிப்பைக் குலைத்துப்போடக் கூடாது; அப்போதுதான் கடவுளுடைய சக்தியை நாம் துக்கப்படுத்தாமல் இருப்போம். (அப். 20:28; யூ. 8) சபையில் ஒற்றுமையை வளர்ப்போம், ஒருவருக்கொருவர் மதிப்புமரியாதை காட்டுவோம். அதோடு, கூட்டுச்சேர்ந்துகொண்டு கடவுளுடைய மக்களிடையே பூசல்களை உண்டாக்க மாட்டோம். பவுல் இவ்வாறு எழுதினார்: “சகோதரர்களே, நீங்கள் எல்லாரும் முரண்பாடில்லாமல் பேச வேண்டுமென்றும், உங்களுக்குள் பிரிவினைகள் இல்லாமல் ஒரே மனதுடனும் ஒரே யோசனையுடனும் முழுமையாக ஒன்றுபட்டிருக்க வேண்டுமென்றும் நம் எஜமானராகிய இயேசு கிறிஸ்துவின் பெயரில் நான் உங்களைக் கேட்டுக்கொள்கிறேன்.”—1 கொ. 1:10.

20 தம்முடைய சக்தியை நாம் துக்கப்படுத்திவிடாமல் இருப்பதற்கு யெகோவா நமக்கு உதவ விரும்புகிறார், அவரால் நமக்கு உதவவும் முடியும். ஆகவே, அவருடைய சக்தியைக் கேட்டு நாம் தொடர்ந்து ஜெபம் செய்வோமாக! அந்தச் சக்தியைத் துக்கப்படுத்தாமல் இருக்கத் தீர்மானமாய் இருப்போமாக! ‘கடவுளுடைய சக்திக்கென்று விதைத்துக்கொண்டே’ இருப்போமாக! அதன் வழிநடத்துதலை இன்றும் என்றும் ஊக்கமாய் நாடிக்கொண்டே இருப்போமாக!

உங்கள் பதில்?

• கடவுளுடைய சக்தியைத் துக்கப்படுத்துவது எதை அர்த்தப்படுத்துகிறது?

• ஞானஸ்நானம் பெற்ற ஒருவர் யெகோவாவின் சக்தியை எப்படித் துக்கப்படுத்தக்கூடும்?

• கடவுளுடைய சக்தியைத் துக்கப்படுத்தாமல் இருக்க நமக்கு உதவுகிற சில வழிகள் யாவை?

[கேள்விகள்]

[பக்கம் 30-ன் படம்]

சச்சரவுகளைச் சட்டென்று தீர்த்துக்கொள்ளுங்கள்

[பக்கம் 31-ன் படம்]

உங்கள் பேச்சு எந்தப் பழம்போல் இருக்கிறது?