Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்

வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்

வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்

உருவ வழிபாட்டை யெகோவா தடைசெய்திருக்க, பொன் கன்றுக்குட்டியை உண்டாக்கினதற்காக ஆரோனை அவர் ஏன் தண்டிக்கவில்லை?

ஆரோன் ஒரு பொன் கன்றுக்குட்டியை உண்டாக்கினதாக யாத்திராகமம் 32-ஆம் அதிகாரம் குறிப்பிடுகிறது; அது, உருவ வழிபாடு சம்பந்தமாகக் கடவுள் கொடுத்த சட்டத்தை மீறுவதாக இருந்தது. (யாத். 20:3-5) அதனால், ‘ஆரோன்மேல் கர்த்தர் மிகவும் கோபங்கொண்டு, அவனை அழிக்கவேண்டும் என்றிருந்தார்; அப்பொழுது [மோசே] ஆரோனுக்காகவும் விண்ணப்பம் பண்ணினார்.’ (உபா. 9:19, 20) நீதிமானாய் இருந்த மோசே, ஆரோனுக்காகச் செய்த ஜெபம் ‘மிகவும் வல்லமையுள்ளதாய்’ இருந்ததா? (யாக். 5:16) ஆம். மோசே செய்த அப்படிப்பட்ட விண்ணப்பத்தின் நிமித்தமும், குறைந்தபட்சம் வேறு இரண்டு காரணங்களின் நிமித்தமும் யெகோவா மோசேயின் ஜெபத்திற்குப் பதிலளித்ததாகத் தெரிகிறது; ஆரோனை யெகோவா தண்டிக்கவில்லை.

முதல் காரணம், ஆரோன் அதுவரையில் விசுவாசத்தோடு நடந்துகொண்டதாகும். பார்வோனிடம் போவதற்கும் இஸ்ரவேலரை எகிப்திலிருந்து விடுவிப்பதற்கும் மோசேக்குப் பொறுப்பளிக்கப்பட்டபோது, அவருடன் செல்வதற்கும் அவர் சார்பாகப் பேசுவதற்கும் ஆரோனை யெகோவா நியமித்தார். (யாத். 4:10-16) இவர்கள் இருவரும் கீழ்ப்படிதலோடு அந்தக் கல்நெஞ்சனான எகிப்து ராஜாவிடம் பலமுறை சென்றார்கள். ஆகவே, எகிப்தில் இருந்தபோது ஆரோன் யெகோவாவுக்கு உண்மையோடும் உறுதியோடும் சேவை செய்தார் என்பது தெளிவாகிறது.—யாத். 4:21.

ஆனால், ஆரோன் ஒரு பொன் கன்றுக்குட்டியை உண்டாக்குவதற்கு எது வழிநடத்தியது என்பதையும் கவனியுங்கள். மோசே 40 நாட்களாக சீனாய் மலையில் இருந்தார். “மோசே மலையிலிருந்து இறங்கிவரத் தாமதிக்கிறதை ஜனங்கள் கண்டபோது” ஒரு விக்கிரகத்தை உண்டாக்கும்படி அவர்கள் ஆரோனை வற்புறுத்தினார்கள். அவர்களோடு ஒத்துப்போய் அவரும் பொன்னினால் ஒரு கன்றுக்குட்டியை உண்டாக்கினார். (யாத். 32:1-6) அவர் ஜனங்களின் வற்புறுத்தலுக்கு இணங்கிவிட்டதாகத் தெரிகிறது. என்றாலும், அவர் பிற்பாடு நடந்துகொண்ட விதம் இந்த உருவ வழிபாட்டுக்கு அவர் ஆதரவு காட்டவில்லை என்பதைத் தெளிவுபடுத்தியது. உதாரணமாக, இந்தப் பிரச்சினைக்கு மோசே சரியான தீர்வைக் கொண்டுவந்தபோது ஆரோன் உட்பட, லேவியின் புத்திரர் எல்லாரும் யெகோவாவின் பக்கம் உறுதியாக நின்றார்கள். இந்த உருவ வழிபாட்டிற்கு முக்கியப் பொறுப்பாளிகளாய் இருந்த மூவாயிரம் பேரோ கொல்லப்பட்டார்கள்.—யாத். 32:25-29.

அதன் பிறகு, ஜனங்களிடம் மோசே “நீங்கள் மகா பெரிய பாவஞ்செய்தீர்கள்” என்று சொன்னார். (யாத். 32:30) ஆகவே, இந்தத் தவறுக்கு ஓரளவு துணைபோனவர்கள் ஆரோன் மட்டுமே அல்ல என்பது புரிகிறது. ஆரோனும் ஜனங்களும் யெகோவாவின் மிகுந்த இரக்கத்திலிருந்து பயனடைந்தார்கள்.

இந்தச் சம்பவத்திற்குப் பிறகு, ஆரோனைப் பிரதான ஆசாரியராக நியமிக்கும்படி மோசேக்கு யெகோவா கட்டளையிட்டார். “ஆரோனுக்குப் பரிசுத்த வஸ்திரங்களை உடுத்தி, எனக்கு ஆசாரிய ஊழியம்செய்யும்படிக்கு அவனை அபிஷேகம்பண்ணி, அவனைப் பரிசுத்தப்படுத்துவாயாக” என்று மோசேயிடம் கடவுள் சொன்னார். (யாத். 40:12, 13) ஆரோன் செய்த தவறை யெகோவா மன்னித்தார் என்பதை இது காட்டுகிறது. மனதளவில் ஆரோன், உண்மை வழிபாட்டை எதிர்த்து கலகம் செய்தவராக அல்ல அதைப் பற்றுறுதியோடு ஆதரித்தவராக இருந்தார்.