Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கடவுள் வழிநடத்துவதை உணர்கிறீர்களா?

கடவுள் வழிநடத்துவதை உணர்கிறீர்களா?

கடவுள் வழிநடத்துவதை உணர்கிறீர்களா?

இஸ்ரவேலரும் சரி எகிப்தியரும் சரி, இதுபோன்ற ஒன்றைப் பார்த்ததே கிடையாது. இஸ்ரவேலர் எகிப்திலிருந்து வெளியேறியபோது, மேக ஸ்தம்பம் அவர்களுக்கு மேலாக இருந்தது, இரவும் பகலும் அது அவர்களை விட்டு விலகவில்லை. இரவிலோ அது அக்கினி ஸ்தம்பமாக மாறியது. அது எவ்வளவு பிரமிப்பூட்டுவதாய் இருந்திருக்கும்! சரி, அது எங்கிருந்து வந்தது? எதற்காக வந்தது? அது சுமார் 3,500 வருடங்களுக்கு முன் நடந்த சம்பவமாக இருந்தாலும், ‘அக்கினியும் மேகமுமான ஸ்தம்பத்தை’ இஸ்ரவேலர் கருதிய விதத்திலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?—யாத். 14:24.

அந்த ஸ்தம்பம் எங்கிருந்து வந்தது, எதற்காக வந்தது என்பதைக் கடவுளுடைய வார்த்தை தெரிவிக்கிறது: “அவர்கள் இரவும் பகலும் வழிநடக்கக்கூடும்படிக்கு, கர்த்தர் பகலில் அவர்களை வழிநடத்த மேக ஸ்தம்பத்திலும், இரவில் அவர்களுக்கு வெளிச்சங்காட்ட அக்கினி ஸ்தம்பத்திலும் அவர்களுக்கு முன் சென்றார்.” (யாத். 13:21, 22) ஆம், எகிப்தை விட்டு வெளியேறியபோதும் வனாந்தர பயணத்தின்போதும் அந்த ஸ்தம்பத்தைப் பயன்படுத்தி யெகோவா தேவன் தம்முடைய மக்களை வழிநடத்தினார். அது வழிகாட்டிய பாதையில் செல்ல அவர்கள் எப்போதும் தயாராய் இருக்க வேண்டியிருந்தது. துரத்திக்கொண்டு வந்த எகிப்திய சேனைகள் கடவுளுடைய மக்களைத் தாக்கவிருந்த சமயத்தில், அவர்களைப் பாதுகாப்பதற்காக அந்த ஸ்தம்பம் எகிப்தியருக்கும் இஸ்ரவேலருக்கும் இடையே நின்றது. (யாத். 14:19, 20) அந்த ஸ்தம்பம் இஸ்ரவேலரை வாக்குப்பண்ணப்பட்ட தேசத்திற்கு நேர்வழிப் பாதையில் அழைத்துச் செல்லாவிட்டாலும், அவர்கள் அதைப் பின்பற்றினால்தான் அங்கு போய்ச்சேர முடியும்.

அந்த ஸ்தம்பம், யெகோவா தம் மக்களோடு இருந்ததை உறுதிப்படுத்தியது. அது யெகோவாவுக்கு அடையாளமாக இருந்தது; சில சமயங்களில், அவர் அதன் நடுவேயிருந்து பேசினார். (எண். 14:14; சங். 99:7) இஸ்ரவேலரை வழிநடத்த மோசேயை யெகோவா நியமித்திருந்ததை அந்த ஸ்தம்பம் அடையாளம் காட்டியது. (யாத். 33:9) அவ்வாறே, மோசேக்குப் பின் யோசுவாவை யெகோவா நியமித்ததையும் அது உறுதிப்படுத்தியது; அதன் பிறகு, அந்த ஸ்தம்பத்தைப் பற்றி பைபிள் குறிப்பிடுவதில்லை. (உபா. 31:14, 15) இஸ்ரவேலர் கடவுளுடைய வழிநடத்துதலை உணர்ந்துகொண்டு அதைப் பின்பற்றி நடந்தால் மட்டுமே அவர்களுடைய விடுதலைப் பயணம் வெற்றி சிறக்கும்.

அவர்கள் உணராமல் போனார்கள்

இஸ்ரவேலர் அந்த ஸ்தம்பத்தை முதன்முறையாகப் பார்த்தபோது வாயடைத்துப் போயிருப்பார்கள். அந்த அற்புத ஸ்தம்பம் எப்போதும் அவர்கள் கண் முன்னே இருந்ததால், யெகோவாமீது அவர்களுக்கு இன்னும் அதிக நம்பிக்கை ஏற்பட்டிருக்க வேண்டும்; ஆனால் அவர்கள் அதற்கு நேர்மாறாக நடந்துகொண்டது வருத்தத்திற்குரிய விஷயம். அவர்கள் பல முறை கடவுளுடைய வழிநடத்துதலை ஏற்றுக்கொள்ள மறுத்தார்கள். எகிப்திய படைவீரர்கள் அவர்களைத் துரத்திக்கொண்டு வந்தபோது, தங்களைக் காப்பாற்ற யெகோவாவுக்குச் சக்தியிருப்பதை மறந்துவிட்டார்கள். போதாக்குறைக்கு, கடவுளுடைய ஊழியனான மோசே தங்களைச் சாகடிக்கவே அழைத்து வந்ததாகக் குற்றஞ்சாட்டினார்கள். (யாத். 14:10-12) சிவந்த சமுத்திரத்தைக் கடந்து வந்த பிறகும்கூட, சாப்பிட உணவும் குடிக்கத் தண்ணீரும் இல்லையென நினைத்துக்கொண்டு மோசேக்கும் ஆரோனுக்கும் யெகோவாவுக்கும் எதிராக முறுமுறுத்தார்கள். (யாத். 15:22-24; 16:1-3; 17:1-3, 7) சில வாரங்களுக்குப் பிறகு, ஒரு பொன் கன்றுக்குட்டியைச் செய்யும்படி ஆரோனைக் கட்டாயப்படுத்தினார்கள். கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்! முகாமின் ஒரு பக்கத்தில் அந்த ஸ்தம்பம் இருந்ததைக் கண்டார்கள்; அது தங்களை எகிப்திலிருந்து வழிநடத்தி வந்தவருக்கு மாபெரும் அத்தாட்சியாக இருந்தது. முகாமின் மறுபக்கத்திலோ உயிரற்ற ஓர் உருவச் சிலையை வழிபட ஆரம்பித்தார்கள். அதுவும், “இஸ்ரவேலரே, உங்களை எகிப்துதேசத்திலிருந்து அழைத்துக்கொண்டுவந்த உங்கள் தெய்வங்கள் இவைகளே” என்று சொல்லி அதை வழிபட்டார்கள். எப்பேர்ப்பட்ட “பெரும் இறைநிந்தனை” இது!—யாத். 32:4; நெ. 9:18, பொது மொழிபெயர்ப்பு.

யெகோவாவின் வழிநடத்துதலுக்குத் துளிகூட மதிப்பு காட்டவில்லை என்பதை இஸ்ரவேலரின் கலகத்தனம் தெளிவுபடுத்தியது. அவர்களுடைய பார்வையில் எந்தக் கோளாறும் இருக்கவில்லை, ஆனால் அவர்களுடைய மனக்கண்தான் குருடாகியிருந்தது. அவர்கள் அந்த ஸ்தம்பத்தைப் பார்த்தார்கள், ஆனால் அதன் மூலம் யெகோவா தங்களை வழிநடத்துகிறார் என்பதை மறந்துவிட்டார்கள். அவர்களுடைய செயல்கள் ‘இஸ்ரவேலின் பரிசுத்தரை உண்மையாகவே புண்படுத்திய’ போதிலும், வாக்குப்பண்ணப்பட்ட தேசத்தைச் சென்றெட்டும் வரையில் அந்த ஸ்தம்பத்தின் மூலம் யெகோவா தொடர்ந்து இரக்கத்தோடு அவர்களை வழிநடத்தினார்.—சங். 78:40-42, ஈஸி டு ரீட் வர்ஷன்; 52-54; நெ. 9:19.

இன்றும் கடவுள் வழிநடத்துவதை உணருங்கள்

இன்றும்கூட யெகோவா தம் மக்களை வழிநடத்தி வருகிறார் என்பதைக் கண்கூடாகப் பார்க்க முடிகிறது. வாக்குப்பண்ணப்பட்ட தேசத்திற்குச் செல்லும் வழியை இஸ்ரவேலர் தாங்களாகவே தேடிக் கண்டுபிடிக்கும்படி யெகோவா விட்டுவிடவில்லை; அவ்வாறே, வாக்குப்பண்ணப்பட்ட புதிய உலகிற்குச் செல்லும் வழியை நாமாகவே தேடிக் கண்டுபிடிக்கும்படியும் அவர் விட்டுவிடவில்லை. இயேசு கிறிஸ்து சபையின் தலைவராக நியமிக்கப்பட்டிருக்கிறார். (மத். 23:10; எபே. 5:23) அவர் உண்மையுள்ள அடிமை வகுப்பாருக்கு ஓரளவு அதிகாரத்தை அளித்திருக்கிறார். அதனால், பரலோக நம்பிக்கையுள்ள இந்த வகுப்பார் கிறிஸ்தவச் சபையில் கண்காணிகளை நியமிக்கிறார்கள்.—மத். 24:45-47; தீத். 1:5-9.

உண்மையுள்ள இந்த அடிமை வகுப்பாரை, அதாவது நிர்வாக வகுப்பாரை, நாம் எப்படி அடையாளம் கண்டுகொள்ள முடியும்? இயேசு அவர்களைப் பற்றி விவரிப்பதைக் கவனியுங்கள்: “தன் வீட்டுப் பணியாளர்களுக்குப் போதுமான உணவை ஏற்ற வேளையில் அளித்து வருவதற்காக எஜமான் நியமிக்கப்போகிற உண்மையும் விவேகமும் உள்ள நிர்வாகி யார்? எஜமான் வரும்போது அப்படிச் செய்கிறவனாகக் காணப்படுகிற அடிமையே சந்தோஷமானவன்!”—லூக். 12:42, 43.

ஆகவே, இந்த நிர்வாக வகுப்பார் ‘உண்மையுள்ளவர்களாக’ இருக்கிறார்கள்; அதனால் யெகோவாவுக்கு, இயேசுவுக்கு, பைபிள் சத்தியங்களுக்கு, அல்லது கடவுளுடைய மக்களுக்கு அவர்கள் துரோகம் செய்வதுமில்லை, அவர்களை உதறித்தள்ளுவதுமில்லை. அவர்கள் ‘விவேகமுள்ளவர்களாயும்’ இருக்கிறார்கள்; அதனால், ‘கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய நற்செய்தியை’ அறிவிக்கிற... ‘எல்லாத் தேசத்தாரையும் சீடர்களாக்குகிற...’ மிக முக்கியமான வேலையை முன்யோசனையோடு வழிநடத்துகிறார்கள். (மத். 24:14; 28:19, 20) இவர்கள், “ஏற்ற வேளையில்” ஆரோக்கியமான சத்துள்ள ஆன்மீக உணவைக் கீழ்ப்படிதலோடு அளித்து வருகிறார்கள். இவர்களை யெகோவா ஆதரிக்கிறார் என்பதற்கு அத்தாட்சிகள் ஏராளம் இருக்கின்றன; அவரை வழிபடுவோர் அதிகரித்து வருவது, இவர்கள் எடுக்கும் முக்கிய தீர்மானங்களில் அவருடைய வழிநடத்துதல் இருப்பது, பைபிள் சத்தியங்களை இவர்கள் நன்றாக புரிந்துகொள்வது, எதிரிகளால் பூண்டோடு அழிக்கப்படாமல் யெகோவா இவர்களைப் பாதுகாப்பது, இருதயத்திலும் மனதிலும் சமாதானம் காண்பது என அத்தாட்சிகள் ஏராளம் இருக்கின்றன.—ஏசா. 54:17; பிலி. 4:7.

கடவுளுடைய வழிநடத்துதலுக்குக் கீழ்ப்படியுங்கள்

கடவுளுடைய வழிநடத்துதலை மதிக்கிறோம் என்பதை எப்படிக் காட்டலாம்? ‘உங்களைத் தலைமைதாங்கி நடத்துகிறவர்களுக்குக் கீழ்ப்படிந்து, அடிபணிந்து நடங்கள்’ என்று அப்போஸ்தலன் பவுல் சொன்னார். (எபி. 13:17) அப்படிச் செய்வது எப்போதுமே எளிதாக இருக்காது. உதாரணத்திற்கு, நீங்கள் மோசேயின் காலத்தில் வாழ்வதாகக் கற்பனை செய்துகொள்ளுங்கள். சில நாட்கள் நடந்து சென்ற பிறகு, அந்த ஸ்தம்பம் ஓர் இடத்தில் நிற்கிறது. எத்தனை நாட்களுக்கு அது அங்கேயே தங்கியிருக்கும்? ஒரு நாளா, ஒரு வாரமா, பல மாதங்களா? ‘எல்லா மூட்டை முடிச்சுகளையும் பிரிப்பதா, வேண்டாமா?’ என்று நீங்கள் யோசிக்கிறீர்கள். முதலில், அத்தியாவசியமான பொருள்களை மட்டும் வெளியே எடுக்கிறீர்கள். சில நாட்களுக்குப் பிறகு, வேறு சில பொருள்களுக்காகத் தேடித் தேடி, எரிச்சலடைந்து கடைசியில் எல்லா மூட்டை முடிச்சுகளையுமே பிரிக்க ஆரம்பிக்கிறீர்கள். இப்படி எல்லாவற்றையும் பிரித்து முடிக்கும் நேரத்தில் அந்த ஸ்தம்பம் மேலே எழும்புவதைப் பார்க்கிறீர்கள்; திரும்பவும் மூட்டைக் கட்ட வேண்டுமே என யோசிக்கிறீர்கள்! அது ஒன்றும் இலேசுப்பட்ட வேலை அல்ல. இருந்தாலும், இஸ்ரவேலர் ‘உடனடியாகப் பிரயாணம் பண்ண’ வேண்டியிருந்தது.—எண். 9:17-22.

அப்படியானால், கடவுள் தரும் வழிநடத்துதலுக்கு நாம் எப்படிப் பிரதிபலிக்கிறோம்? அதை ‘உடனடியாக’ பின்பற்ற முயலுகிறோமா? அல்லது, நாம் வழக்கமாக செய்கிற முறையிலேயே காரியங்களைச் செய்கிறோமா? உதாரணத்திற்கு, பைபிள் படிப்புகள் நடத்துவது... வேற்றுமொழி ஆட்களிடம் பிரசங்கிப்பது... குடும்ப வழிபாட்டைத் தவறாமல் நடத்துவது... மருத்துவமனை தொடர்பு ஆலோசனைக் குழுவோடு ஒத்துழைப்பது... மாநாடுகளில் தகுந்த விதத்தில் நடந்துகொள்வது... சம்பந்தமாகச் சமீபத்தில் கொடுக்கப்பட்ட அறிவுரைகளைத் தெரிந்து வைத்திருக்கிறோமா? ஆலோசனையை ஏற்றுக்கொள்ளும்போதும் கடவுளுடைய வழிநடத்துதலை மதிக்கிறோம் என்பதைக் காட்டுகிறோம். முக்கியமான தீர்மானங்களை எடுக்கையில், நம்முடைய சொந்த ஞானத்தைச் சார்ந்திருக்காமல் யெகோவாவும் அவருடைய அமைப்பும் தருகிற வழிநடத்துதலை நாடுகிறோம். கடும் புயல் தாக்குகையில் ஒரு பிள்ளை பாதுகாப்புக்காகப் பெற்றோரிடம் செல்வதுபோல, இந்த உலகில் பிரச்சினைகள் புயல்போல் தாக்குகையில் பாதுகாப்புக்காக நாம் யெகோவாவுடைய அமைப்பின் உதவியை நாடுகிறோம்.

மோசேயைப் போலவே இன்றும் கடவுளுடைய அமைப்பின் பூமிக்குரிய பாகத்தை வழிநடத்துகிறவர்கள் அபூரணர்தான். என்றாலும், மோசேயைக் கடவுள் நியமித்தார் என்பதற்கும் அவருக்குக் கடவுளுடைய ஆதரவு இருந்தது என்பதற்கும் அத்தாட்சியாக அந்த ஸ்தம்பம் எப்போதும் அவர்கள் முன் இருந்தது. அதுமட்டுமல்ல, எப்போது கிளம்புவதென ஒவ்வொரு இஸ்ரவேலனும் தன் விருப்பப்படி தீர்மானிக்க முடியாதிருந்ததையும் கவனியுங்கள். மாறாக, ‘கர்த்தர் மோசேயைக்கொண்டு கட்டளையிட்டபடியே’ அவர்கள் கிளம்பினார்கள். (எண். 9:23) ஆகவே, எப்போது கிளம்புவதென மோசேதான் அறிவித்திருக்க வேண்டும்; ஏனென்றால் அவர் மூலமாகவே கடவுள் அவர்களை வழிநடத்தினார்.

அதேபோல இன்றும் நாம் செயல்படுவதற்கான சமயம் வரும்போதெல்லாம் நிர்வாக வகுப்பார் அதைத் தெளிவாக அறிவிக்கிறார்கள். அவர்கள் அதை எப்படிச் செய்கிறார்கள்? காவற்கோபுரம், நம் ராஜ்ய ஊழியம் ஆகியவற்றில் வெளிவரும் கட்டுரைகள் வாயிலாக, புதிய பிரசுரங்கள், மாநாடுகளில் கொடுக்கப்படும் பேச்சுகள் வாயிலாக அதை அறிவிக்கிறார்கள். பயணக் கண்காணிகள், கடிதங்கள், பொறுப்புகளைக் கையாளும் சகோதரர்களுக்கான பயிற்சிப் பள்ளிகள் ஆகியவற்றின் மூலமாகவும் சபைக்கு ஆலோசனை தரப்படுகிறது.

கடவுளுடைய வழிநடத்துதலை நீங்கள் தெளிவாக உணருகிறீர்களா? பயங்கரமான ‘வனாந்தரத்தைப்’ போலிருக்கிற சாத்தானுடைய இந்தப் பொல்லாத உலகின் கடைசி நாட்களில் பயணிக்கையில் நம்மை... தமது மக்களை... தமது அமைப்பின் மூலம் யெகோவா வழிநடத்துகிறார். அதனால்தான், அவருடைய அமைப்பில் ஐக்கியம், அன்பு, பாதுகாப்பு நிலவுகின்றன.

இஸ்ரவேலர் வாக்குப்பண்ணப்பட்ட தேசத்தை அடைந்ததும் யோசுவா இவ்வாறு சொன்னார்: “உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்காகச் சொன்ன நல்வார்த்தைகளிலெல்லாம் ஒரு வார்த்தையும் தவறிப்போகவில்லை என்பதை உங்கள் முழு இருதயத்தாலும் உங்கள் முழு ஆத்துமாவாலும் அறிந்திருக்கிறீர்கள்; அவைகளெல்லாம் உங்களுக்கு நிறைவேறிற்று.” (யோசு. 23:14) இன்றுள்ள கடவுளுடைய மக்களும் வாக்குப்பண்ணப்பட்ட புதிய உலகை அடைவது உறுதி. ஆனால், நாம் ஒவ்வொருவரும் அங்கு இருப்போமா என்பது கடவுளுடைய வழிநடத்துதலுக்கு நாம் தாழ்மையோடு கீழ்ப்படிவதையே பெரிதும் சார்ந்திருக்கிறது. ஆகவே, யெகோவா வழிநடத்தி வருவதை எப்போதும் உணருவோமாக!

[பக்கம் 5-ன் படங்கள்]

இன்று யெகோவாவின் அமைப்பு நம்மை வழிநடத்துகிறது

மாநாட்டு வெளியீடுகள்

தேவராஜ்ய பள்ளிகள்

வெளி ஊழியக் கூட்டங்களில் பயிற்சி