Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

நான் பெற்ற அளவிலா ஆசீர்வாதங்கள்

நான் பெற்ற அளவிலா ஆசீர்வாதங்கள்

நான் பெற்ற அளவிலா ஆசீர்வாதங்கள்

ஆர்தர் போனோ சொன்னபடி

வருடம் 1951. நானும் என் மனைவி ஈடித்தும் மாவட்ட மாநாடுக்குப் போயிருந்தோம். அப்போது, மிஷனரி சேவையில் விருப்பம் உள்ளவர்களுக்காக ஒரு கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டதைக் கேட்டோம்.

“நாமும் போய் என்ன சொல்லுகிறார்கள் என்று கேட்போமே!” என்று ஆர்வம்பொங்க சொன்னேன்.

“நாம் அந்தக் கூட்டத்துக்குப் போக முடியாதே” என்று ஈடித் சொன்னாள்.

“என்னதான் சொல்கிறார்கள் என்று சும்மா போய் கேட்போமே, ஈடித்” என்றேன்.

கூட்டத்திற்குப் பிறகு, கிலியட் பள்ளிக்கான விண்ணப்பப் படிவங்கள் கொடுக்கப்பட்டன.

“நாமும் இதைப் பூர்த்தி செய்யலாம்” என்று அவசரப்படுத்தினேன்.

“நம்ம குடும்பத்தைப் பற்றி யோசித்து பார்த்தீங்களா?” என்று கேட்டாள் ஈடித்.

அந்த மாநாடு முடிந்து கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்களுக்குப் பிறகு நாங்கள் கிலியட் பள்ளியில் கலந்துகொண்டோம்; அதற்குப் பின் தென் அமெரிக்காவிலுள்ள ஈக்வடாரில் சேவை செய்வதற்கு நியமிக்கப்பட்டோம்.

அந்த மாநாட்டில் எனக்கும் என் மனைவிக்கும் இடையே நடந்த உரையாடலிலிருந்து நான் எப்படிப்பட்டவன் என்று உங்களுக்குப் புரிந்திருக்கும். நான் கொஞ்சம் அவசரக்குடுக்கை, நினைத்ததை அப்போதே செய்து முடிக்க வேண்டுமென்று ஆசைப்படுபவன். ஆனால் ஈடித் அமைதியானவள், அடக்கமானவள். அமெரிக்கா, பென்ஸில்வேனியாவிலுள்ள எலிசபெத் என்ற சிறிய ஊர்தான் அவள் வளர்ந்த இடம்; அவள் அந்த ஊரைவிட்டு வேறெங்கும் போனது கிடையாது, மற்ற ஊர் ஆட்களோடு பழகினதும் கிடையாது. அதனால், குடும்பத்தாரை விட்டு தூரமாகப் போவது அவளுக்குக் கஷ்டமாக இருந்தது. ஆனாலும், வெளிநாட்டில் சேவை செய்வதற்குக் கிடைத்த நியமிப்பை அவள் மனமார ஏற்றுக்கொண்டாள். 1954-ல் நாங்கள் ஈக்வடாரில் கால் பதித்தோம்; அன்றிலிருந்து இன்றுவரை இங்கே மிஷனரிகளாகச் சேவை செய்துவருகிறோம். அந்தச் சேவையில் நாங்கள் பெற்ற ஆசீர்வாதங்கள்தான் எத்தனை, எத்தனை! அவற்றில் சில ஆசீர்வாதங்களைப் பற்றித் தெரிந்துகொள்ள விரும்புகிறீர்களா?

ஒளிரும் நினைவுகள்

முதன்முதலில் தலைநகரான கவிடோவுக்கு நியமிக்கப்பட்டோம்; இது ஆண்டிஸ் மலைத்தொடரில் சுமார் 2,850 மீட்டர் (9,000 அடி) உயரத்தில் உள்ளது. கடலோரத்தில் அமைந்துள்ள குயாகுவில் என்ற நகரிலிருந்து டிரெயினிலும் ட்ரக்கிலுமாக கவிடோவுக்குப் போய்ச்சேர இரண்டு நாட்கள் பிடித்தன; இப்போதெல்லாம், விமானத்தில் 30 நிமிடங்களிலேயே போய்விடலாம்! கவிடோவில் நான்கு வருடங்கள் சேவை செய்தோம்; அவை நெஞ்சைவிட்டு நீங்கா வருடங்கள். பிறகு, 1958-ல் இன்னொரு ஆசீர்வாதத்தைப் பெற்றோம்; ஆம், வட்டார ஊழியம் செய்வதற்கு அழைக்கப்பட்டோம்.

அச்சமயத்தில், அந்த நாட்டில் இரண்டு சிறிய வட்டாரங்களே இருந்தன. அதனால், சபைகளைச் சந்தித்த வாரங்கள் போக, மற்ற சமயங்களில் அங்கிருந்த சிறிய கிராமங்களுக்குச் சென்று பிரசங்கித்தோம்; அங்கு சாட்சிகள் யாரும் இருக்கவில்லை. அந்தக் கிராமங்களில் இருந்த வீடுகள் ஒரு அறையைக் கொண்ட சின்னஞ்சிறிய வீடுகளாக இருந்தன; அவற்றில் ஒரு கட்டிலைத் தவிர வேறொன்றும் இருக்காது, ஜன்னலும் இருக்காது. நாங்கள் ஒரு மரப்பெட்டியை எடுத்துச் செல்வோம்; அதில் ஒரு மண்ணெண்ணெய் ஸ்டவ், ஒரு பாத்திரம், தட்டுகள், சாமான்கள் கழுவுவதற்கான ஒரு பேஸின், போர்வைகள், ஒரு கொசுவலை, துணிமணிகள், பழைய நியூஸ்பேப்பர்கள், இன்னும் சில பொருள்கள் இருக்கும். எலி தொல்லையைக் கொஞ்சம் சமாளிக்க சுவரிலுள்ள ஓட்டைகளில் நியூஸ்பேப்பரை வைத்து அடைப்போம்.

நாங்கள் இப்படி இருட்டைந்துபோன அறைகளில் தங்கியிருந்தாலும் தினமும் இரவில் கட்டிலில் உட்கார்ந்து, மண்ணெண்ணெய் ஸ்டவ்வில் சமைத்த எளிய உணவைச் சாப்பிட்டுக்கொண்டே பேசிய விஷயங்கள் இன்றும் மனதில் பிரகாசமாக ஒளிர்கின்றன. என்னுடைய அவசர புத்தி காரணமாக, அடிக்கடி யோசிக்காமல் கொள்ளாமல் எதையாவது பேசிவிடுவேன்; அதனால், சில சமயங்களில் அமைதியான அந்த இரவு வேளைகளை நல்ல சந்தர்ப்பமாகப் பயன்படுத்தி, சகோதரர்களிடம் நான் எப்படி இன்னும் நல்ல விதமாகப் பேசியிருக்கலாமென என் மனைவி எடுத்துச் சொல்வாள். அவள் சொன்னதைக் கேட்டு நடந்ததால், வட்டாரச் சந்திப்பின்போது சபையாரை இன்னும் நன்றாக உற்சாகப்படுத்த முடிந்தது. அதுமட்டுமல்ல, யாராவது ஒருவரைப் பற்றி நான் ஏதாவது மோசமாகப் பேசினால், அவள் பதில் சொல்லாமல் அமைதியாக இருந்துவிடுவாள். அதனால் சகோதரர்களிடமுள்ள நல்ல குணங்களையே எப்போதும் பார்க்கக் கற்றுக்கொண்டேன். ஆனால், இரவில் பெரும்பாலும், காவற்கோபுர கட்டுரைகளிலிருந்து கற்றுக்கொண்ட விஷயங்களை... அன்றைய தினத்தில் ஊழியத்தில் கிடைத்த அனுபவங்களை... பற்றியே பேசினோம். அவையெல்லாம் சுவையான அனுபவங்கள்!

கார்லோசைக் கண்டுபிடித்த கதை

மேற்கு ஈக்வடாரிலுள்ள ஹிபிஹாப்பா என்ற ஊரில் இருந்தபோது சத்தியத்திடம் ஆர்வம் காட்டிய கார்லோஸ் மெஹீயா என்பவரைச் சந்திக்கும்படி எங்களிடம் சொல்லப்பட்டது; அவருடைய விலாசம் கொடுக்கப்படவில்லை. நாங்கள் வாடகைக்கு இருந்த அறையைவிட்டு காலையில் கிளம்பினோம்; அவரைத் தேடி எந்தப் பக்கம் போவதென்று தெரியாமல் கால்போன போக்கில் நடக்க ஆரம்பித்தோம். இரவு நல்ல மழை பெய்திருந்ததால், மண் ரோடெல்லாம் சேறும் சகதியும் குண்டும் குழியுமாக இருந்தது; அதனால், குழிக்குள் கால் மாட்டிக்கொள்ளாதபடி தாண்டித் தாண்டிப் போக வேண்டியிருந்தது. நான் முன்னால் நடக்க, என் மனைவி பின்னால் வந்துகொண்டிருந்தாள்; திடீரென பின்னாலிருந்து “ஐயோ” என்ற அபயக் குரல் கேட்டது. திரும்பிப் பார்த்தால், முழங்கால் அளவுக்குச் சேறு நிரம்பியிருந்த குழியில் ஈடித்! அந்தக் காட்சி பார்ப்பதற்கு வேடிக்கையாக இருந்தது; அவளுடைய கண்ணில் மட்டும் நீர் பூக்காதிருந்திருந்தால் நான் சத்தம்போட்டு சிரித்திருப்பேன்.

அவளை எப்படியோ குழிக்குள்ளிலிருந்து வெளியே இழுத்துவிட்டேன், ஆனால் அவளுடைய ஷூக்கள் சேற்றுக்குள் மாட்டிக்கொண்டன. ஒரு சிறுவனும் சிறுமியும் இதைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள்; “சேற்றிலிருந்து ஷூக்களை எடுத்துத் தந்தால் கொஞ்சம் பணம் தருகிறேன்” என்று அவர்களிடம் சொன்னேன். அவர்கள் சட்டென ஷூக்களை மீட்டுத் தந்தார்கள், ஆனால் ஈடித் தன்னுடைய கால்களையும் ஷூக்களையும் கழுவ வேண்டியிருந்தது. இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த அந்தப் பிள்ளைகளின் அம்மா எங்களை வீட்டிற்கு அழைத்து, கால்களைக் கழுவ என் மனைவிக்கு உதவினார்; அந்தப் பிள்ளைகளோ சேறு மண்டியிருந்த ஷூக்களைக் கழுவிக் கொடுத்தார்கள். அங்கிருந்து நாங்கள் கிளம்புவதற்குள் ஒரு நல்ல காரியம் நடந்தது. கார்லோஸ் மெஹீயா என்பவருடைய வீடு எங்கே இருக்கிறதென்று தெரியுமா என அந்தப் பெண்ணிடம் கேட்டேன். அவருடைய முகத்தில் ஒரே ஆச்சரியம்! “அவர் என் கணவர்தான்” என்று சொன்னார். சீக்கிரத்தில் பைபிள் படிப்பு ஆரம்பிக்கப்பட்டது, கடைசியில் அந்தக் குடும்பத்திலுள்ள எல்லாரும் ஞானஸ்நானம் பெற்றார்கள். பல வருடங்களுக்குப் பிறகு, கார்லோசும் அவருடைய மனைவியும் அவர்களுடைய பிள்ளைகளில் இருவரும் விசேஷ பயனியர்கள் ஆனார்கள்.

சவால்மிக்க பயணங்கள் —உபசரித்த உள்ளங்கள்

வட்டார ஊழியத்தில் பயணம்தான் அதிக சவாலாக இருந்தது. நாங்கள் பஸ்களில், டிரெயின்களில், ட்ரக்குகளில், சிறிய படகுகளில், சிறிய விமானங்களில் பயணித்தோம். ஒரு சமயம், கொலம்பிய எல்லைக்கு அருகே மீனவர் குடியிருக்கிற கிராமங்களில் பிரசங்கிப்பதற்காக மாவட்டக் கண்காணி ஜான் மக்லெனாக்கனும் அவருடைய மனைவி டாரதியும் எங்களுடன் வந்தார்கள். நாங்கள் மோட்டர் பொருத்தப்பட்ட ஒரு சிறிய படகில் பயணித்தோம். படகின் அதே அளவிலுள்ள சுறாக்கள் எங்களோடு சேர்ந்து பயணித்தன! எங்களுடைய படகை ஓட்டியவர் அனுபவசாலியாக இருந்தும்கூட அவற்றின் அளவைப் பார்த்து பயந்துவிட்டார்; அதனால், படகைச் சட்டென கரையோரமாகச் செலுத்தினார்.

வட்டார ஊழியத்தில் பல சவால்களைச் சந்தித்தபோதிலும், நிறைய நன்மைகளையும் அடைந்தோம். அருமையான, உபசரிக்கும் குணமுடைய சகோதரர்களோடு பழக முடிந்தது. நாங்கள் எங்கெல்லாம் தங்கினோமோ அந்தக் குடும்பத்தார் ஒரு வேளை மட்டுமே சாப்பிட்டார்கள், ஆனால் எங்களை மூன்று வேளையும் சாப்பிடும்படி வற்புறுத்துவார்கள். அல்லது, அவர்களிடம் இருக்கிற ஒரே கட்டிலையும் எங்களுக்குத் தந்துவிட்டு அவர்கள் தரையில் படுத்துக்கொள்வார்கள். “வாழ்வதற்குக் கொஞ்சம் பொருள்களே போதுமானது என்பதை இந்த அன்பான சகோதர சகோதரிகளிடமிருந்து புரிந்துகொண்டேன்” என்று என் மனைவி அடிக்கடி சொல்வாள்.

‘நாங்கள் எதையும் நழுவவிட விரும்பவில்லை’

1960-ல் நாங்கள் இன்னொரு ஆசீர்வாதத்தைப் பெற்றோம்; குயாகுவிலுள்ள கிளை அலுவலகத்தில் சேவை செய்ய அழைக்கப்பட்டோம். நான் அங்கே நிர்வாக வேலைகளைக் கவனித்துக்கொண்டேன்; ஈடித்தோ கிளை அலுவலகத்திற்கு அருகிலுள்ள சபையோடு சேர்ந்து ஊழியத்தில் ஈடுபட்டாள். அலுவலக வேலை செய்ய எனக்குத் தகுதியிருந்ததாக நான் நினைத்ததே கிடையாது; அதனால், எனக்கும் அந்த வேலைக்கும் பொருத்தமே இல்லாதது போல தோன்றியது. ஆனால் எபிரெயர் 13:21 குறிப்பிடுகிறபடி, ‘நல்ல காரியங்கள் எல்லாவற்றையும்’ செய்வதற்கான தகுதியைக் கடவுளே நமக்குத் தருகிறார். இரண்டு வருடங்களுக்குப் பிறகு, நியு யார்க், புருக்லினிலுள்ள பெத்தேலில் பத்து மாத கிலியட் பயிற்சிப் பள்ளி நடக்கவிருந்தது; அதில் கலந்துகொள்வதற்கு அழைக்கப்பட்டேன். அந்தச் சமயத்தில், அவ்வாறு சென்ற சகோதரர்களின் மனைவிகள் தங்களுடைய ஊழியத்தைத் தொடர்ந்து செய்யும்படி எதிர்பார்க்கப்பட்டார்கள். புருக்லினிலிருந்து என் மனைவிக்கு ஒரு கடிதம் வந்தது. அந்தப் பத்து மாதமும் கணவனைவிட்டுப் பிரிந்திருக்க முடியுமா என்பதை நன்கு யோசித்து முடிவுசெய்யும்படி அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

“இது சுலபமே இல்லை என்று எனக்கு நன்றாகவே தெரியும்; ஆனால், என்ன கஷ்டம் வந்தாலும் யெகோவா நிச்சயம் உதவுவார் என்று எங்களுக்குத் தெரியும். . . . நாங்கள் எந்தவொரு விசேஷித்த வாய்ப்பையும் நழுவவிட அல்லது எங்களுடைய பொறுப்புகளைக் கையாளுவதற்கு அதிக தகுதியைப் பெறுவதற்கான எந்தவொரு சந்தர்ப்பத்தையும் நழுவவிட விரும்பவில்லை” என்று ஈடித் பதில் எழுதினாள். நான் புருக்லினில் இருந்த சமயத்தில் ஈடித்திடமிருந்து வாரம் ஒரு கடிதம் வரும்.

உண்மை ஊழியர்களோடு சேர்ந்து ஊழியம்

1966-ல் உடல்நல பிரச்சினைகள் காரணமாக, நானும் ஈடித்தும் கவிடோவுக்குத் திரும்பிச் சென்றோம்; அங்கிருந்த சகோதர சகோதரிகளோடு சேர்ந்து மீண்டும் மிஷனரி சேவையைத் துவங்கினோம். அவர்கள் எப்பேர்ப்பட்ட உத்தமசீலர்கள்!

உதாரணத்திற்கு, உண்மையுள்ள ஒரு சகோதரியைச் சத்தியத்தில் இல்லாத அவருடைய கணவர் எப்போதும் அடிப்பார். ஒரு நாள் காலை ஆறு மணிக்கு, அந்தச் சகோதரியை அவருடைய கணவன் மீண்டும் அடித்ததாகச் செய்தி வந்தது. நான் அந்தச் சகோதரியின் வீட்டிற்கு விரைந்தேன். அவரைப் பார்த்ததும், என்னால் தாங்கவே முடியவில்லை. அவர் கட்டிலில் படுத்திருந்தார்; உடம்பெல்லாம் வீக்கமும் காயமுமாக இருந்தது. துடைப்பக்கட்டையின் பிடி இரண்டாக உடையும் வரையில் கணவர் அவரை அடித்திருக்கிறார். கொஞ்சம் நேரம் கழித்து அந்தச் சகோதரியின் வீட்டிற்குத் திரும்பவும் போனபோது கணவர் இருந்தார்; அவர் செய்தது மகா கோழைத்தனம் என்று சொன்னேன். அவர் தன்னை மன்னிக்கும்படி திரும்பத் திரும்பக் கேட்டுக்கொண்டார்.

1970-களின் ஆரம்பத்தில் என்னுடைய உடல்நிலை கொஞ்சம் சரியானதும் வட்டார ஊழியத்தில் மீண்டும் இறங்கினேன். இப்பார்ரா என்ற நகரம் எங்களுடைய வட்டாரத்தின் பாகமாக இருந்தது. நான் 1950-களின் இறுதியில் அங்கு சென்றிருந்தபோது ஒரு மிஷனரியும் அந்த ஊரைச் சேர்ந்த ஒரு சகோதரரும் மட்டுமே அங்கு சாட்சிகளாக இருந்தார்கள். அதன் பிறகு நிறையப் புதியவர்கள் அந்தச் சபைக்கு வர ஆரம்பித்திருந்தார்கள்; ஆகவே, அவர்களைச் சந்திக்க நாங்கள் ஆவலாக இருந்தோம்.

நாங்கள் அங்கு கலந்துகொண்ட முதல் கூட்டத்தில் சகோதரர் ரோட்ரிகோ வாக்கா மேடையில் நின்று சபையாருடன் ஒரு பகுதியைக் கலந்தாலோசித்தார். அவர் கேள்வி கேட்டபோதெல்லாம் சபையார் கை தூக்குவதற்குப் பதிலாக “யோ, யோ!” (“நான், நான்!”) என்று சொன்னார்கள். நானும் ஈடித்தும் ஆச்சரியத்தோடு ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டோம். ‘இது என்ன வினோதமாக இருக்கிறதே!’ என்று நினைத்தேன். சகோதரர் வாக்காவுக்குக் கண் பார்வை இல்லை என்பது அப்புறம்தான் எங்களுக்குத் தெரிந்தது; ஆனால், சபையாரின் குரலை வைத்து அவர்களை அவர் அடையாளம் கண்டுகொள்வாராம். இவரல்லவா மந்தையை நன்கு அறிந்து வைத்திருக்கிற ஒரு மேய்ப்பர்! இது, நல்ல மேய்ப்பரையும் ஆடுகளையும் பற்றி யோவான் 10:3, 4, 14-ல் இயேசு சொன்னதை எனக்கு நினைப்பூட்டியது. இன்று இப்பார்ராவில் ஆறு ஸ்பானிஷ் மொழி சபைகளும் ஒரு கச்சுவா மொழி சபையும் ஒரு சைகை மொழி சபையும் உள்ளன. சகோதரர் வாக்கா மூப்பராகவும் விசேஷ பயனியராகவும் உண்மையோடு சேவை செய்து வருகிறார். *

யெகோவா தந்த ஆசீர்வாதங்களுக்கு நன்றி

1974-ல் நாங்கள் மீண்டும் பெத்தேலுக்கு அழைக்கப்பட்டோம்; அது எங்களுக்குக் கிடைத்த மற்றொரு ஆசீர்வாதம். அங்கு எனக்கு நிர்வாக வேலைகளைக் கவனிக்கும் பொறுப்பு மீண்டும் கொடுக்கப்பட்டது; பிற்பாடு, கிளை அலுவலகக் குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டேன். முதலில் ஈடித் கிச்சனில் வேலை செய்தாள், பிறகு அலுவலகத்தில் வேலை செய்ய ஆரம்பித்தாள்; அவள் இன்று வரையாக அஞ்சல் பணிகளைக் கவனித்து வருகிறாள்.

இத்தனை வருடங்களில், கிலியட் பயிற்சிப் பெற்ற நூற்றுக்கணக்கான மிஷனரிகளை வரவேற்கும் பாக்கியத்தைப் பெற்றிருக்கிறோம்; சபையார் ஆன்மீக ரீதியில் முன்னேறுவதற்கும் பக்திவைராக்கியத்துடன் செயல்படுவதற்கும் அவர்கள் பெரும் உதவியாய் இருந்திருக்கிறார்கள். இந்த நாட்டில் சேவை செய்வதற்கு, 30-க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து ஆயிரக்கணக்கான சகோதர சகோதரிகள் வந்திருப்பதும்கூட எங்களுக்கு உற்சாகத்தை அளிக்கிறது. அவர்களுடைய சுயதியாக மனப்பான்மை எங்களது நெஞ்சை எவ்வளவாய் நெகிழ வைக்கிறது! தேவை அதிகமுள்ள இடங்களில் சேவை செய்வதற்காகச் சிலர் தங்களுடைய வீட்டையும் தொழிலையும் விற்று இங்கு வந்திருக்கிறார்கள். தொலைதூர பகுதிகளில் ஊழியம் செய்வதற்காக அவர்கள் சொந்தமாக வண்டி வாங்கினார்கள், புதிய சபைகளை உருவாக்கினார்கள், ராஜ்ய மன்றங்களைக் கட்டுவதற்கு உதவினார்கள். இங்கு பயனியர் ஊழியம் செய்வதற்காகப் பிற நாடுகளிலிருந்து மணமாகாத சகோதரிகள் எக்கச்சக்கமானோர் வந்திருக்கிறார்கள்; அவர்களுடைய பக்திவைராக்கியத்தையும் திறமையையும் என்னவென்று சொல்வது!

கடவுளைச் சேவித்து வந்த இத்தனை வருடங்களில் நான் பெற்ற ஆசீர்வாதங்கள் எத்தனை, எத்தனை! யெகோவாவுக்கும் எனக்கும் இடையே உள்ள உறவே நான் பெற்ற ஆசீர்வாதங்களில் தலைசிறந்தது. எனக்கு “ஏற்ற துணையை” தந்திருப்பதற்கும் யெகோவாவுக்கு நன்றியுள்ளவனாய் இருக்கிறேன். (ஆதி. 2:18) எங்களுடைய 69 வருட மண வாழ்க்கையைத் திரும்பிப் பார்க்கையில், “மனைவியைக் கண்டடைகிறவன் நன்மையானதைக் கண்டடைகிறான்” என்று நீதிமொழிகள் 18:22-ல் சொல்லப்பட்டுள்ள வார்த்தைகள் என் ஞாபகத்துக்கு வருகின்றன. ஈடித்தின் துணை எனக்கு எப்போதுமே இன்பமாக இருந்திருக்கிறது. நிறைய விஷயங்களில் அவள் எனக்கு உதவியாய் இருந்திருக்கிறாள். அவளுடைய அம்மாவுக்குப் பாசமுள்ள மகளாகவும் இருந்திருக்கிறாள். நாங்கள் ஈக்வடாருக்கு வந்ததிலிருந்து 97 வயதில் அவளுடைய அம்மா இறக்கும்வரையில் அவருக்கு வாரம் ஒரு கடிதம் எழுதினாள்; 1990-ல் அவளுடைய அம்மா இறந்துவிட்டார்.

எனக்கு இப்போது 90 வயது, ஈடித்துக்கு 89. சுமார் 70 பேர் யெகோவாவைப் பற்றித் தெரிந்துகொள்வதற்கு எங்களால் உதவ முடிந்ததை நினைக்கும்போது உள்ளத்தில் மகிழ்ச்சி வெள்ளம் கரைபுரண்டோடுகிறது. 60 வருடங்களுக்கு முன் கிலியட் பள்ளிக்கான விண்ணப்பப் படிவங்களைப் பூர்த்தி செய்ததை நினைத்து சந்தோஷப்படுகிறோம். நாங்கள் எடுத்தத் தீர்மானத்தால் வாழ்க்கை முழுக்க நிறைய ஆசீர்வாதங்களைப் பெற்றிருக்கிறோம்.

[அடிக்குறிப்பு]

^ பாரா. 29 சகோதரர் வாக்காவின் வாழ்க்கை சரிதையை செப்டம்பர் 8, 1985 தேதியிட்ட ஆங்கில விழித்தெழு!-வில் காணலாம்.

[பக்கம் 29-ன் படம்]

1958-ல் கிலியட் வகுப்பில் படித்த சக மிஷனரிகளுடன் நியு யார்க், யாங்கி ஸ்டேடியத்தில்

[பக்கம் 31-ன் படம்]

1959-ல் வட்டார ஊழியத்தின்போது சாட்சிகளின் ஒரு குடும்பத்தைச் சந்திக்கையில்

[பக்கம் 32-ன் படம்]

2002-ல் ஈக்வடார் கிளை அலுவலகத்தில்