Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

நேர்மையற்ற உலகில் நேர்மையாய் வாழ வழி

நேர்மையற்ற உலகில் நேர்மையாய் வாழ வழி

நேர்மையற்ற உலகில் நேர்மையாய் வாழ வழி

நாம் சுவாசிக்கிற காற்றைப் போல நேர்மையற்ற போக்கு இந்த உலகில் எங்கும் காணப்படுகிறது. மக்கள் பொய் பேசுகிறார்கள், பணம் பறிக்கிறார்கள், திருடுகிறார்கள், கடனைத் திருப்பிக் கொடுக்காமல் ஏமாற்றுகிறார்கள், மோசடி வியாபாரத்தைப் பற்றித் தம்பட்டம் அடிக்கிறார்கள். நாம் இத்தகைய சூழலில் வாழ்வதால், நேர்மையாய் இருக்க வேண்டுமென்ற நம் தீர்மானத்தை உரசிப் பார்க்கும் சந்தர்ப்பங்களை அடிக்கடி சந்திக்கிறோம். நேர்மை வழியிலிருந்து ஒருபோதும் விலகாதிருக்க என்ன செய்யலாம்? இதற்கு உதவும் மூன்று முக்கிய அம்சங்களை இப்போது சிந்திப்போம். அவை: தேவபயம், நல்மனசாட்சி, மனத்திருப்தி.

நியாயமான தேவபயம்

“கர்த்தர் நம்முடைய நியாயாதிபதி, கர்த்தர் நம்முடைய நியாயப்பிரமாணிகர், கர்த்தர் நம்முடைய ராஜா” என்று ஏசாயா தீர்க்கதரிசி எழுதினார். (ஏசா. 33:22) ஆம், யெகோவாவின் அதிகாரத்தை உணரும்போது தேவபயம் தானாகப் பிறக்கிறது; இது, நேர்மை வழியிலிருந்து ஒருபோதும் விலகாதிருக்க மனோபலத்தைக் கொடுக்கிறது. “கர்த்தருக்குப் பயப்படுகிறதினால் மனுஷர் தீமையை விட்டு விலகுவார்கள்” என்று நீதிமொழிகள் 16:6 சொல்கிறது. இது, கடவுள் கொடூரமானவர் என்று நினைத்து அஞ்சி நடுங்குவதால் வருகிற பயமல்ல; மாறாக, நம்முடைய நலனில் ஆழ்ந்த அக்கறையுள்ள பரலோகத் தகப்பனின் மனதைப் புண்படுத்திவிடக்கூடாது என்ற நியாயமான பயமாகும்.—1 பே. 3:12.

இத்தகைய பயத்தால் விளையும் நன்மையைப் பின்வரும் உண்மை சம்பவம் விளக்குகிறது. ரிச்சர்ட்டும் அவருடைய மனைவி ஹெலனும் சுமார் 700 அமெரிக்க டாலர் மதிப்புள்ள பணத்தை வங்கியிலிருந்து எடுத்தார்கள். * ஹெலன் அந்தப் பணத்தை எண்ணிப் பார்க்காமல் அப்படியே தன் பர்ஸில் வைத்துக்கொண்டார். வீட்டுக்கு வரும் வழியில் கொஞ்சம் பணத்தைச் செலவு செய்தார்கள்; அதன் பிறகும் எடுத்த பணம் குறையாமல் பர்ஸில் அப்படியே இருந்ததைப் பார்த்து ஆச்சரியப்பட்டார்கள். “வங்கி கேஷியர் அதிகப் பணம் கொடுத்திருக்க வேண்டும்” என்பதை அவர்கள் புரிந்துகொண்டார்கள். அவர்களுக்கு அதிக செலவு இருந்ததால் அந்தக் கூடுதல் பணத்தைத் திருப்பிக் கொடுக்காமல் தாங்களே வைத்துக்கொள்ள ஆசைப்பட்டார்கள். “அந்தப் பணத்தைத் திருப்பிக் கொடுக்க மனோபலத்தைத் தரும்படி யெகோவாவிடம் ஜெபம் செய்தோம். நீதிமொழிகள் 27:11-க்கு இணங்க, யெகோவாவைப் பிரியப்படுத்த வேண்டுமென்ற ஆசையே அதைத் திருப்பிக் கொடுக்க எங்களைத் தூண்டியது” என்று ரிச்சர்ட் சொல்கிறார்.

பைபிளால் பயிற்றுவிக்கப்பட்ட மனசாட்சி

பைபிளைப் படிப்பதன் மூலமும், நாம் கற்றுக்கொண்டவற்றைக் கடைப்பிடிக்க முயலுவதன் மூலமும் நம்முடைய மனசாட்சியைப் பயிற்றுவிக்கலாம். அப்போது ‘உயிருள்ளதும், வல்லமையுள்ளதுமான’ “கடவுளுடைய வார்த்தை” நம்முடைய மனதை மட்டுமல்ல நம்முடைய இருதயத்தையும் சென்றெட்டும். இது, “எல்லாவற்றிலும் நேர்மையாக நடக்க” நம்மைத் தூண்டும்.—எபி. 4:12; 13:18.

யோஹான் என்பவரின் அனுபவத்தை எடுத்துக்கொள்வோம். அவர் பெரும் கடனுக்குள் மூழ்கிவிட்டார்; சுமார் 5,000 அமெரிக்க டாலர் மதிப்புள்ள தொகையை அடைக்க வேண்டியிருந்தது. அந்தக் கடனை அடைக்காமலேயே வேறொரு நகரத்திற்குக் குடிமாறிச் சென்றார். எட்டு வருடங்களுக்குப் பிறகு யோஹான் பைபிள் சத்தியத்தைக் கற்றார்; பைபிளால் பயிற்றுவிக்கப்பட்ட அவருடைய மனசாட்சி உறுத்தியதால் தனக்குக் கடன் கொடுத்தவரைத் தொடர்புகொண்டு, வாங்கிய பணத்தைத் திருப்பிக் கொடுக்கத் தீர்மானித்தார். கொஞ்ச வருமானத்தில் தன் மனைவியையும் நான்கு பிள்ளைகளையும் யோஹான் கவனிக்க வேண்டியிருந்ததால், அவர் தவணை முறையில் மாதாமாதம் பணத்தை அடைக்கக் கடன் கொடுத்தவர் ஒப்புக்கொண்டார்.

மனத்திருப்தி

“தேவபக்தியோடுகூட, போதுமென்ற மனம் உள்ளவர்களுக்கே அது மிகுந்த ஆதாயம் தரும். . . . நமக்கு உண்ண உணவும் உடுத்த உடையும் இருக்க இடமும் இருந்தால், அதுவே போதும் என்று திருப்தியுடன் வாழ வேண்டும்” என்று அப்போஸ்தலன் பவுல் எழுதினார். (1 தீ. 6:6-8) ஞானமான இந்த அறிவுரையை மனதில் வைப்பது, பேராசையைத் தூண்டுகிற நேர்மையற்ற வியாபாரங்களில் அல்லது திடீர் பணக்காரர் ஆவதற்கான திட்டங்களில் சிக்கிக்கொள்ளாதிருக்க நமக்கு உதவும். (நீதி. 28:20) பவுலின் புத்திமதியைப் பின்பற்றுவது, நம்முடைய அடிப்படைத் தேவைகளைக் கடவுள் பூர்த்திசெய்வார் என்ற நம்பிக்கையோடு அவருடைய அரசாங்கத்திற்கு முதலிடம் கொடுக்கவும் உதவும்.—மத். 6:25-34.

என்றாலும், ‘செல்வத்திற்கு வஞ்சக சக்தி’ இருப்பதால் பேராசை எனும் வலையில் சிக்கிவிடாதபடி எப்போதும் கவனமாய் இருக்க வேண்டும். (மத். 13:22) ஆகானின் உதாரணத்தை எடுத்துக்கொள்ளுங்கள். இஸ்ரவேலர் அற்புதமாய் யோர்தான் நதியைக் கடந்து வந்ததை அவன் கண்கூடாகப் பார்த்திருந்தான். என்றாலும் அவன் பேராசையின் கண்ணியில் சிக்கியதால், கொஞ்சம் வெள்ளியையும் தங்கத்தையும் விலையுர்ந்த ஒரு சால்வையையும் எரிகோ பட்டணத்தின் கொள்ளையிலிருந்து திருடினான். விளைவு? தன் உயிரையே இழந்தான். (யோசு. 7:1, 20-26) எனவே பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு, “விழித்திருங்கள், எல்லா விதமான பேராசையைக் குறித்தும் எச்சரிக்கையாய் இருங்கள்” என்று இயேசு சொன்னதில் ஆச்சரியமேதும் இல்லை.—லூக். 12:15.

வேலை செய்யுமிடத்தில் நேர்மையாய் இருங்கள்

எல்லாக் காரியங்களிலும் நேர்மையாய் இருக்க வேண்டுமென்ற நம் தீர்மானத்திற்குச் சோதனையாய் அமையும் சில சூழ்நிலைகளை இப்போது சிந்திக்கலாம். உதாரணத்திற்கு, வேலை செய்யுமிடத்தில் ‘திருடுவது’ சர்வசாதாரணமாக இருந்தாலும் நாம் அவ்வாறு செய்யாதிருப்பது நேர்மையாய் இருப்பதைக் காட்டும். (தீத். 2:9, 10) சுரேந்திரன் என்பவர் ஓர் அரசு அலுவலகத்தில் வேலை செய்கிறார்; தன் பயணச் செலவுகளை உண்மையாய் அறிக்கை செய்தார். மற்றவர்களோ செலவைக் கூடுதலாகக் காட்டினார்கள். அவர்கள் அப்படிச் செய்வதற்கு அந்தத் துறையின் மேலதிகாரியே துணைபோனார். சொல்லப்போனால், சுரேந்திரன் நேர்மையாய் இருப்பதை அவர் கண்டித்தார்; வேலை விஷயமாக அவரை வெளியூர்களுக்கு அனுப்புவதையும் நிறுத்தினார். கொஞ்ச நாட்களுக்குப் பிறகு, அந்த அலுவலகத்தின் கணக்குகள் தணிக்கை செய்யப்பட்டன; அப்போது நேர்மையாய் நடந்துகொண்டதற்காக சுரேந்திரன் பாராட்டைப் பெற்றார். பதவி உயர்வையும் பெற்றார்.

ஆன்ட்ரூ என்பவர் சேல்ஸ்மேனாக வேலை பார்த்து வந்தார்; வாடிக்கையாளர்களின் கணக்கில் சேவைக்கான கட்டணத்தை இரண்டு முறை எழுதும்படி அவருடைய முதலாளி சொன்னார். பைபிள் நியமங்களுக்கு இசைய நடப்பதற்குத் தேவையான தைரியத்தைத் தரும்படி அவர் யெகோவாவிடம் ஜெபித்தார். (சங். 145:18-20) முதலாளி சொல்கிறபடி தன்னால் ஏன் செய்ய முடியாதென்பதைச் சொல்லிப் பார்த்தார்; அதனால் எந்தப் பிரயோஜனமும் இருக்கவில்லை. எனவே கைநிறையச் சம்பளம் கிடைத்த அந்த வேலையை விட்டுவிட்டார். என்றாலும் சுமார் ஒரு வருடத்திற்குப் பிறகு, அந்த முதலாளி இவரை மீண்டும் வேலைக்கு அழைத்தார்; இப்போதெல்லாம் வாடிக்கையாளர்களிடம் கூடுதலாக எந்தத் தொகையும் வசூலிப்பதில்லை என்று சொன்னார். ஆன்ட்ரூ மேனேஜராக பதவி உயர்வு பெற்றார்.

கடனைத் திரும்பச் செலுத்துங்கள்

“யாருக்கும் எதிலும் கடன்படாதீர்கள்” என்று அப்போஸ்தலன் பவுல் கிறிஸ்தவர்களுக்கு அறிவுரை கூறினார். (ரோ. 13:8) ‘கடன் கொடுத்தவர் வசதியானவர், அவருக்கு இந்தப் பணம் தேவைப்படாது’ என்று நாமே முடிவுசெய்து, அதைத் திரும்பக் கொடுக்காமல் இருந்துவிடக் கூடாது. ஏனென்றால், “துன்மார்க்கன் கடன்வாங்கிச் செலுத்தாமற்போகிறான்” என்று பைபிள் சொல்கிறது.—சங். 37:21.

‘எதிர்பாராத சம்பவம்’ காரணமாக கடனைத் திரும்பச் செலுத்த முடியாமல் போனால் என்ன செய்வது? (பிர. 9:11, NW) பிரான்சிஸ் என்பவர் தான் அடமானம் வைத்திருந்ததை மீட்க, ஆல்ஃப்ரெட் என்பவரிடமிருந்து சுமார் 7,000 அமெரிக்க டாலர் மதிப்புள்ள தொகையைக் கடனாக வாங்கினார். ஆனால், அவருடைய வியாபாரத்தில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக சொன்ன தேதியில் கடனைத் திரும்பச் செலுத்த முடியாமல் போனது. உடனே பிரான்சிஸ் அவரிடம் அதைக் குறித்துப் பேசினார்; பல தவணைகளில் அந்தத் தொகையைத் திரும்பிச் செலுத்திவிடுவதாகச் சொன்னபோது ஆல்ஃப்ரெட்டும் ஒப்புக்கொண்டார்.

கபட நாடகமாடுவதைத் தவிருங்கள்

முதல் நூற்றாண்டு கிறிஸ்தவ சபையிலிருந்த அனனியா, சப்பீராள் தம்பதியரின் மோசமான உதாரணத்தைச் சிந்தித்துப் பாருங்கள். நிலத்தை விற்று அதன் தொகையில் கொஞ்சத்தை மட்டும் கொண்டு வந்து அப்போஸ்தலர்களிடம் கொடுத்துவிட்டு, விற்ற முழுப் பணத்தையும் தந்துவிட்டதாகச் சொன்னார்கள். மற்றவர்களுக்கு முன் தங்களைத் தாராளப் பிரபுக்களாகக் காட்டிக்கொள்ள ஆசைப்பட்டார்கள். என்றாலும், கடவுளுடைய சக்தியின் உதவியோடு அவர்களுடைய கபட நாடகத்தை அப்போஸ்தலன் பேதுரு வெட்டவெளிச்சமாக்கினார்; யெகோவா அவர்களைச் சாகடித்தார்.—அப். 5:1-11.

அனனியா, சப்பீராளுக்கு எதிர்மாறாக பைபிள் எழுத்தாளர்கள் நேர்மையானவர்களாக, ஒளிவுமறைவற்றவர்களாக இருந்தார்கள். தன் கோபத்தைக் கட்டுப்படுத்தத் தவறியதால் வாக்குப்பண்ணப்பட்ட தேசத்திற்குள் நுழைய முடியாமல் போனதைப் பற்றி மோசே வெளிப்படையாய் எழுதினார். (எண். 20:7-13) அதேபோல், நினிவே வாசிகளிடம் போய் பிரசங்கித்ததற்கு முன்பும் பின்பும் தான் செய்த தவறுகளைப் பற்றி யோனா ஒளிவுமறைவின்றி எழுதிவைத்தார்.—யோனா 1:1-3; 4:1-3.

பெரிய நஷ்டமே ஏற்பட்டாலும் உண்மையைச் சொல்ல தைரியம் தேவை என்பதைப் பள்ளியில் படிக்கும் 14 வயது நான்ஸியின் அனுபவம் காட்டுகிறது. பரிட்சை பேப்பர் கையில் கிடைத்தபோது தான் எழுதியிருந்த தவறான பதிலுக்கு ஆசிரியர் மார்க் கொடுத்திருந்ததை அவள் கவனித்தாள். அதை ஆசிரியரிடம் சொன்னால் தன்னுடைய மார்க் ரொம்பவே குறைந்துபோகும் என்பதை அவள் அறிந்திருந்தபோதிலும் அதை அவரிடம் சொல்லத் தயங்கவில்லை. “நான் நேர்மையாக இருந்தால்தான் யெகோவாவைப் பிரியப்படுத்த முடியுமென்று அப்பா அம்மா அடிக்கடி சொல்வார்கள். அதைப் பற்றி டீச்சரிடம் சொல்லாமல் இருந்திருந்தால் என் மனசாட்சி உறுத்திக்கொண்டே இருந்திருக்கும்” என்று நான்ஸி சொன்னாள். அவளுடைய நேர்மையை ஆசிரியர் பாராட்டினார்.

நேர்மை—யெகோவாவுக்குப் புகழ் சேர்க்கிற பண்பு

ஆவணங்களும், சுமார் 35 அமெரிக்க டாலருக்குச் சமமான பணமும் இருந்த ஒரு பர்ஸை 17 வயது மிஷல் கண்டெடுத்தாள். அதை உரிமையாளரிடம் ஒப்படைக்க பள்ளி அதிகாரிகள் மூலம் ஏற்பாடு செய்தாள். ஒரு மாதத்திற்குப் பிறகு, அவளுடைய வகுப்பார் முன்நிலையில் பள்ளி துணை-முதல்வர் ஒரு கடிதத்தை வாசித்தார்; அதில், மிஷலின் நேர்மையைப் புகழ்ந்தும், அவளை ஒழுக்கமாக, கடவுள் பக்தியுள்ள பிள்ளையாக வளர்த்ததற்கு அவளுடைய பெற்றோரைப் பாராட்டியும் எழுதியிருந்தது. ஆம், அவளுடைய ‘நற்செயல்கள்’ யெகோவாவை மகிமைப்படுத்தின.—மத். 5:14-16.

‘சுயநலக்காரர்களாக, பண ஆசைபிடித்தவர்களாக, ஆணவமுள்ளவர்களாக, கர்வமுள்ளவர்களாக, நம்பிக்கை துரோகிகளாக’ இருப்போர் மத்தியில் வாழ்வதால் நேர்மையாய் நடக்க பெருமுயற்சி அவசியம். (2 தீ. 3:2) என்றாலும், நியாயமான தேவபயம், பைபிளால் பயிற்றுவிக்கப்பட்ட மனசாட்சி, மனத்திருப்தி இருந்தால்தான் நேர்மையற்ற உலகில் எப்போதும் நேர்மையாய் வாழ முடியும். அதோடு ‘நீதியுள்ள, நீதியின்மேல் பிரியப்படுகிற’ யெகோவாவுடன் இன்னும் நெருங்கிய பந்தத்தை வளர்த்துக்கொள்ளவும் முடியும்.—சங். 11:7.

[அடிக்குறிப்பு]

^ பாரா. 5 சில பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.

[பக்கம் 7-ன் படங்கள்]

நியாயமான தேவபயம், நேர்மையாய் நடக்க வேண்டுமென்ற நம் தீர்மானத்தைப் பலப்படுத்தும்

[பக்கம் 8-ன் படம்]

நம்முடைய நேர்மையான நடத்தை யெகோவாவை மகிமைப்படுத்துகிறது