யெகோவாவின் சேவையில் ஆனந்தம் காண்கிறேன்
யெகோவாவின் சேவையில் ஆனந்தம் காண்கிறேன்
ஃபிரெட் ரஸ்க் சொன்னபடி
“என் தகப்பனும் என் தாயும் என்னைக் கைவிட்டாலும், கர்த்தர் என்னைச் சேர்த்துக்கொள்ளுவார்” என்று சங்கீதம் 27:10-ல் தாவீது சொன்ன வார்த்தைகள் எந்தளவு உண்மையானவை என்பதை என் வாழ்க்கையின் ஆரம்பக் கட்டத்திலேயே ருசித்தேன். எப்படியென உங்களுக்குச் சொல்கிறேன்.
அமெரிக்காவில், ஜார்ஜியா மாகாணத்தில் என் தாத்தாவுக்குப் பண்ணை இருந்தது; அதில் பருத்தி விளைந்தது; 1930-களில் மாபெரும் பொருளாதார மந்தம் நிலவிய காலத்தில் நான் அங்குதான் வளர்ந்து வந்தேன். என் அம்மாவும் பச்சிளங்குழந்தையாக இருந்த என் தம்பியும் இறந்தபோது என் அப்பா நிலைகுலைந்து போனார். அதனால் என்னை என் தாத்தாவின் வீட்டில் விட்டுவிட்டு, வேலை தேடி ரொம்பத் தூரத்திலிருந்த ஒரு நகரத்திற்குக் குடிமாறிப் போனார். பின்னர், என்னையும் அங்கு கூட்டிக்கொண்டு போக அவர் பல முறை முயற்சி செய்தார். ஆனால், அது முடியாமலே போனது.
பாட்டி இறந்துவிட்டதால், தாத்தாவின் வீட்டில் எல்லாப் பொறுப்புகளையும் என்னுடைய பெரிய அத்தைகள்தான் கவனித்து வந்தார்கள். என் தாத்தாவுக்கு அந்தளவு கடவுள் பக்தி இல்லை. ஆனால், அத்தைமார் மதத்தில் அதிக ஈடுபாடுள்ளவர்களாய் இருந்தார்கள்; அவர்கள் சதர்ன் பாப்டிஸ்ட் பிரிவைச் சேர்ந்தவர்கள். சர்ச்சுக்குப் போகாவிட்டால் அடி விழுமென அவர்கள் பயமுறுத்தியதால் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் வேண்டாவெறுப்போடு அங்கு போனேன். எனவே, சிறுவயதிலிருந்தே எனக்கு மதத்தில் துளிகூட ஈடுபாடு இல்லை. ஆனால், பள்ளிக்கூடம் போகவும், விளையாட்டுகளில் கலந்துகொள்ளவும் எனக்கு விருப்பமிருந்தது.
என் வாழ்க்கையை மாற்றிய ஒரு சந்திப்பு
1941-ல், அதாவது எனக்கு 15 வயதாக இருந்தபோது, ஒருநாள் மதியவேளையில் ஒரு வயதானவரும் அவருடைய மனைவியும் எங்கள் வீட்டுக்கு வந்தார்கள். “இவர் உன்னுடைய அங்கிள் தல்மஜ் ரஸ்க்” என்று சொல்லி வீட்டிலிருந்தவர்கள் எனக்கு அவரை அறிமுகம் செய்து வைத்தார்கள். இப்படி ஒரு அங்கிள் இருப்பதே எனக்கு அப்போதுதான் தெரிந்தது; அவர்கள் இருவரும் யெகோவாவின் சாட்சிகள் என்றும் தெரிந்துகொண்டேன். பூமியில் மனிதர்கள் என்றென்றும் வாழ வேண்டும் என்பதே கடவுளுடைய நோக்கம் என்று அவர்கள் விளக்கினார்கள்; நான் சர்ச்சில் கேட்ட விஷயத்திற்கும் இதற்கும் ரொம்ப வித்தியாசம் இருந்தது. என்னைவிட மூன்றே வயது மூத்தவரான என் சின்ன அத்தை மேரிக்கு அது மிகவும் பிடித்துப்போனது; பைபிளையும், அதை விளக்கும் புத்தகங்களையும் அவர் பெற்றுக்கொண்டார். ஆனால், வீட்டிலிருந்த மற்றவர்கள் ஆர்வம் காட்டவே இல்லை; சொல்லப்போனால், அவர்கள் இருவரையும் கேலி செய்தார்கள். அதற்குப் பிறகு அவர்களை எங்கள் வீட்டுப் படியேற விடவே இல்லை.
சீக்கிரத்திலேயே, பைபிள் சத்தியத்தை மேரி அத்தை புரிந்துகொண்டார்; 1942-ல் ஞானஸ்நானம் பெற்று யெகோவாவின் சாட்சிகளில் ஒருவரானார். “ஒரு மனிதனுக்கு அவனுடைய வீட்டாரே எதிரிகளாக இருப்பார்கள்” என்று இயேசு சொல்லியிருந்த வார்த்தைகள் எவ்வளவு உண்மையானவை என்பதை அவருடைய அனுபவத்தில் கண்டார். (மத். 10:34-36) வீட்டிலிருந்தவர்கள் அவரைக் கடுமையாய் எதிர்த்தார்கள். என் பெரிய அத்தைகளில் ஒருவருக்கு அந்த ஊரில் அதிக செல்வாக்கு இருந்தது; அவர் மேயருடன் சேர்ந்துகொண்டு சதிசெய்து தல்மஜ் அங்கிளைக் கைதுசெய்ய வைத்தார். விற்பனை உரிமை இல்லாமல் பிரசுரங்களை விற்றதாகக் குற்றம் சாட்டப்பட்டு, அங்கிள் சிறையில் தள்ளப்பட்டார்.
நீதிபதியாகவும் இருந்த அந்த மேயர் நகர நீதிமன்றத்தில் இவ்வாறு சொன்னதாக எங்கள் ஊர் செய்தித்தாளில் வெளியானது: “இந்த ஆள் விநியோகிக்கிற புத்தகங்கள் . . . விஷத்தைப் போல ஆபத்தானவை.” என் அங்கிள் மேல்முறையீடு செய்து, வெற்றியும் பெற்றார்; அதற்குள் அவர் பத்து நாட்களைச் சிறையில் கழிக்க வேண்டியிருந்தது.
மேரி அத்தை அளித்த உதவி
புதிதாகத் தெரிந்துகொண்ட சத்தியத்தைப் பற்றி மேரி அத்தை என்னிடம் பேசியதோடு அக்கம்பக்கத்தில் இருந்தவர்களிடமும் பேசினார். புதிய உலகம் (ஆங்கிலம்) என்ற புத்தகத்தைப் பெற்றுக்கொண்ட ஓர் ஆளுக்கு அவர் பைபிள் படிப்பு நடத்தப் போனபோது நானும் அவருடன் போனேன். * அந்தப் புத்தகத்தை அவர் விடியவிடிய படித்துக்கொண்டிருந்ததாக அவருடைய மனைவி சொன்னார். பொதுவாக, மத சம்பந்தமான எந்த விஷயத்திலும் சட்டென எனக்கு ஆர்வம் ஏற்பட்டுவிடாது; ஆனால், என் அத்தையிடமிருந்து தெரிந்துகொண்ட விஷயங்கள் எனக்குப் பிடித்திருந்தன. யெகோவாவின் சாட்சிகள் கடவுளுடைய மக்கள் என்பதைத் தெரிந்துகொண்டேன்; என்றாலும், அதை அவர்கள் போதித்த பைபிள் விஷயங்களை வைத்துத் தெரிந்துகொள்ளவில்லை, அவர்கள் சந்தித்த எதிர்ப்பை வைத்தே தெரிந்துகொண்டேன்.
உதாரணத்திற்கு, ஒருநாள் நானும் மேரி அத்தையும் தோட்டத்திலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தோம். குப்பைக்கூளங்களை எரிக்கும் இடத்தில் மேரி அத்தையுடைய பைபிள் பிரசுரங்கள், ஃபோனோகிராஃப் பெட்டி, பைபிள் செய்தி அடங்கிய ரெக்கார்டுகள் என எல்லாவற்றையும் என்னுடைய மற்ற அத்தைகள் எரித்துவிட்டதைப் பார்த்தோம். எனக்குக் கோபம் தலைக்கேறியது. அதைக் கண்ட ஒரு அத்தை, “நாங்கள் இப்படிச் செய்ததற்கு நீயே ஒருநாள் எங்களுக்கு நன்றி சொல்வாய்” என்றார்.
மேரி அத்தை சத்தியத்திற்காக உறுதியாய் நின்றதாலும் அக்கம்பக்கத்தாரிடம் தொடர்ந்து பிரசங்கித்து வந்ததாலும் 1943-ல் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார். அந்தச் சமயத்திற்குள், கடவுளுடைய பெயர் யெகோவா, அவர் அன்பானவர், இரக்கமுள்ளவர், எரிநரகத்தில் யாரையும் வதைக்கிறவர் அல்ல போன்ற விஷயங்களை நான் கற்றுக்கொண்டு பூரித்துப்போனேன். அதுவரை சபைக் கூட்டத்திற்கே நான் போனது கிடையாது; இருந்தாலும் யெகோவாவுக்கென அன்பான ஓர் அமைப்பு இருக்கிறதெனத் தெரிந்துகொண்டேன்.
பின்னர் ஒருநாள் தோட்டத்தில் புல் வெட்டிக் கொண்டிருந்த சமயத்தில் ஒரு கார் மெதுவாக என் பக்கம் வந்தது; அதில் இரண்டு பேர் உட்கார்ந்திருந்தார்கள், அதில் ஒருவர் என்னைப் பார்த்து, “ஃபிரெட் என்பவர் நீங்கள்தானா?” என்று கேட்டார். அவர்கள் யெகோவாவின் சாட்சிகள் என்பதைத் தெரிந்துகொண்டவுடன், “காரில் ஏறிக்கொள்கிறேன், மறைவான இடத்திற்குப் போனதும் பேசலாம்” என்றேன். அவர்கள் என்னை வந்து சந்திக்க மேரி அத்தை ஏற்பாடு செய்திருந்தார். அவர்களில் ஒருவருடைய பெயர் ஷில்ட் டூட்ஜியன். அவர் பயணக் கண்காணியாகச் சேவை செய்து வந்தார்; உற்சாகத்தையும் ஆன்மீக உதவியையும் அவர் சரியான நேரத்தில் எனக்கு அளித்தார். யெகோவாவின் சாட்சிகளுடைய நம்பிக்கைகளை நான் ஆதரித்ததால், குடும்பத்தாரின் ஒட்டுமொத்த எதிர்ப்பும் என் பக்கம் திரும்பியது.
வர்ஜீனியாவில் வசித்துவந்த மேரி அத்தை எனக்குக் கடிதம் எழுதினார். யெகோவாவுக்குச் சேவை செய்ய நான் முடிவு செய்திருந்தால் தன்னுடன் வந்து தங்கிக்கொள்ளும்படி அதில் குறிப்பிட்டிருந்தார். உடனடியாக வர்ஜீனியாவுக்குச் செல்லத் தீர்மானித்தேன். 1943, அக்டோபர் மாதத்தில் ஒரு வெள்ளிக்கிழமை மாலை வேளையில், எனக்குத் தேவையான சில பொருள்களை ஒரு பெட்டியில் போட்டு, சற்றுத் தொலைவிலிருந்த ஒரு மரத்தில்
கட்டி வைத்தேன். சனிக்கிழமை அந்தப் பெட்டியை எடுத்துக்கொண்டு, யார் கண்ணிலும் படாமல் பக்கத்து வீட்டின் வழியாகச் சென்று வண்டி ஏறினேன். ரோநோக் என்ற நகரத்திற்குச் சென்றேன்; அங்கு எட்னா ஃபால்ஸ் என்பவரின் வீட்டில் மேரி அத்தையைச் சந்தித்தேன்.ஆன்மீக வளர்ச்சியும் ஞானஸ்நானமும் பெத்தேலும்
சகோதரி எட்னா பரலோக நம்பிக்கை உள்ளவர், கனிவுள்ளம் கொண்டவர்; உபசரிப்பதில் நவீன நாளைய லீதியாள் என்றே அவரைச் சொல்லலாம். அவர் பெரிய வீட்டை வாடகைக்கு எடுத்திருந்தார்; அதில் மேரி அத்தை தவிர, அவரது அண்ணியும் அண்ணியின் இரண்டு மகள்களும்கூட தங்கியிருந்தார்கள். அந்த மகள்களுடைய பெயர் கிளாடிஸ் க்ரெகரி, கிரேஸ் க்ரெகரி. இவர்கள் இருவரும் பின்னர் மிஷனரிகள் ஆனார்கள். இப்போது கிளாடிஸுக்கு 90 வயதுக்கும் மேலாகிவிட்டது, இன்னமும் ஜப்பான் கிளை அலுவலகத்தில் உண்மையோடு சேவை செய்து வருகிறார்.
எட்னாவின் வீட்டில் தங்கியிருந்த காலத்தில் தவறாமல் சபைக் கூட்டங்களில் கலந்துகொண்டேன், ஊழியத்திலும் பயிற்சி பெற்றேன். பைபிளைப் படிப்பதற்கும் கூட்டங்களில் கலந்துகொள்வதற்கும் எந்தத் தடையும் இல்லாதிருந்தது; அது, யெகோவாவைப் பற்றி நன்கு அறிந்துகொள்ள வேண்டுமென்ற என் ஆர்வப் பசிக்குத் தீனி போட்டதுபோல் இருந்தது. ஜூன் 14, 1944-ல் ஞானஸ்நானம் பெற்றேன். மேரி அத்தை, கிளாடிஸ், கிரேஸ் ஆகிய மூவரும் பயனியர் ஊழியம் செய்ய ஆரம்பித்தார்கள்; வர்ஜீனியாவின் வட பகுதிக்குச் சென்று ஊழியம் செய்தார்கள். அங்கே லிஸ்பர்க் என்ற இடத்தில் சபை உருவாக முக்கியக் காரணமாய் இருந்தார்கள். 1946-ன் ஆரம்பத்தில், அருகிலிருந்த ஒரு இடத்தில் நான் பயனியர் ஊழியம் செய்யத் துவங்கினேன். அந்த வருடம் கோடைகாலத்தில் ஒஹாயோ, கிளீவ்லாண்ட்டில் ஆகஸ்ட் 4-11 வரை நடைபெற்ற சர்வதேச மாநாட்டில் கலந்துகொள்ள நாங்கள் எல்லாரும் சேர்ந்து பயணித்தோம்; அந்த மாநாட்டை என்னால் மறக்கவே முடியாது!
அமைப்பை அப்போது முன்நின்று வழிநடத்தி வந்த சகோதரர் நேதன் நார், புருக்லின் பெத்தேலில் செய்யப்படவிருந்த விரிவாக்கத்தைப் பற்றி அந்த மாநாட்டில் சொன்னார். புதிதாக ஒரு குடியிருப்பு கட்டடத்தைக் கட்டப்போவதைப் பற்றியும், அச்சகத்தைப் பெரிதாக்கப்போவதைப் பற்றியும் சொன்னார். அதற்காக அநேக வாலிபர்கள் தேவைப்பட்டார்கள். நானும் அங்கு போய் யெகோவாவுக்குச் சேவை செய்வதெனத் தீர்மானித்தேன். எனவே, அதற்கான விண்ணப்பத்தைப் பூர்த்திசெய்து கொடுத்தேன். சில மாதங்களுக்குள்ளாகவே எனக்கு அழைப்பு வந்தது; டிசம்பர் 1, 1946-ல் பெத்தேலுக்குச் சென்றேன்.
சுமார் ஒரு வருடத்திற்குப் பிறகு அஞ்சல் இலாகாவில் பணிபுரிந்துகொண்டிருந்தபோது, அச்சகத்தை மேற்பார்வை செய்துவந்த சகோதரர் மாக்ஸ் லார்ஸன் என் மேஜை அருகே வந்து நின்றார். ஊழிய இலாகாவில் சேவை செய்ய நான் நியமிக்கப்பட்டிருப்பதாக அவர் சொன்னார். அந்த இலாகாவின் கண்காணியாக இருந்த டி. ஜே. சல்லிவன் என்பவரிடமிருந்து நிறைய விஷயங்களைக் கற்றுக்கொண்டேன்; பைபிள் நியமங்களைக் கடைப்பிடிக்க வேண்டிய விதத்தையும் கடவுளுடைய அமைப்பு செயல்பட்டு வரும் விதத்தையும் பற்றி நிறையக் கற்றுக்கொண்டேன்.
என்னைப் பார்ப்பதற்குப் பல முறை என்னுடைய அப்பா பெத்தேலுக்கு வந்தார். ஆரம்பத்தில் அவருக்குக் கடவுள் பக்தி இல்லாதிருந்தாலும் பின்னர் கடவுள்மீது ஈடுபாடுள்ளவராக மாறினார். கடைசியாக 1965-ல் பெத்தேலுக்கு வந்து என்னைச் சந்தித்தார்; அப்போது, “நீ வேண்டுமானால் இனி என்னை வந்து பார். நான்
இனி உன்னைப் பார்க்க இங்கு வரவே மாட்டேன்” என்று சொன்னார். அவர் இறப்பதற்குள்ளாகச் சில தடவை அவரைப் போய்ப் பார்த்துவிட்டு வந்தேன். இறந்த பிறகு பரலோகத்திற்குப் போகப் போவதாக அவர் நம்பினார். அவர் யெகோவாவுடைய நினைவில் இருக்க வேண்டுமென்பதே என் ஆசை; அப்படி இருந்தார் என்றால், பரலோகத்தில் அல்ல, வரவிருக்கும் பூஞ்சோலை பூமியில் முடிவில்லா வாழ்வை அவர் அனுபவிப்பார்.மறக்க முடியாத மற்ற மாநாடுகளும் கட்டுமானப் பணிகளும்
ஆன்மீக வளர்ச்சிக்கு எப்போதும் மாநாடுகள் மைல்கல்லாகவே இருந்திருக்கின்றன—முக்கியமாக 1950-களில் நியு யார்க், யாங்கி ஸ்டேடியத்தில் நடைபெற்ற சர்வதேச மாநாடுகள். 1958-ல் யாங்கி ஸ்டேடியத்திலும் போலோ கிரவுண்டிலும் நடைபெற்ற மாநாட்டில் ஒருநாள் 2,53,922 பேர் கலந்துகொண்டார்கள்; அவர்கள் 123 நாடுகளிலிருந்து வந்திருந்தார்கள். அந்த மாநாட்டில் நிகழ்ந்த ஒரு சம்பவத்தை நான் மறக்கவே மாட்டேன். மாநாட்டு அலுவலகத்தில் சகோதரர்களுக்கு நான் ஒத்தாசை செய்துகொண்டிருந்தபோது சகோதரர் நார் வேக வேகமாக வந்தார். “சகோதரர் ஃபிரெட், பயனியர்களுக்குப் பேச்சுக் கொடுக்க ஒரு சகோதரரை நியமிக்க எப்படியோ மறந்துவிட்டேன். பக்கத்தில் வாடகைக்கு எடுத்திருக்கும் மன்றத்தில் அவர்கள் எல்லாரும் இப்போது வந்து காத்திருக்கிறார்கள். நீங்கள் சீக்கிரம் போய் ஒரு நல்ல பேச்சைக் கொடுக்க முடியுமா? பேச வேண்டிய விஷயத்தைப் பற்றிப் போகும்போதே யோசித்துக்கொள்ளுங்கள்” என்று சொன்னார். மூச்சிரைக்க அங்கு போய்ச் சேர்ந்தேன்; அதற்குள் எத்தனையோ முறை ஜெபம் செய்துவிட்டேன்.
1950-1970 வரையான வருடங்களில் நியு யார்க் நகரில் புற்றீசல்போல் எக்கச்சக்கமான சபைகள் உருவாயின; அதனால் ராஜ்ய மன்றங்களை வாடகைக்கு எடுப்பது கஷ்டமாகிவிட்டது. எனவே, 1970 முதல் 1990-க்குள்ளாக மன்ஹாட்டன் பகுதியில் மூன்று கட்டடங்கள் விலைக்கு வாங்கப்பட்டு, கூட்டங்கள் நடத்துவதற்கு ஏற்ப மாற்றியமைக்கப்பட்டன. இந்தப் பணியில் கட்டடக் குழுக்களின் சேர்மனாக நியமிக்கப்பட்டிருந்தேன். அப்போது, இந்தக் கட்டடங்களுக்காகப் பணத்தைத் திரட்டுவதிலும், இவற்றைக் கட்டி முடிப்பதிலும் சேர்ந்து செயல்பட்ட சபைகள்மீது யெகோவா அளவில்லா ஆசீர்வாதங்களைப் பொழிந்ததைப் பார்த்தேன்; நெஞ்சைவிட்டு நீங்காத அனுபவங்களைப் பெற்றேன். அந்தக் கட்டடங்கள் இன்றுவரை உண்மை வணக்கத்தின் மையங்களாகத் திகழ்கின்றன.
வாழ்க்கையில் மாற்றங்கள்
1957-ல் ஒருநாள் பெத்தேல் குடியிருப்பு கட்டடத்திற்கும் அச்சகத்திற்கும் இடையே உள்ள பூங்கா வழியாக நடந்து சென்றுகொண்டிருந்தேன். அப்போது மழை வர ஆரம்பித்தது. புதிதாக பெத்தேலுக்கு வந்திருந்த... பொன்னிற முடியுடைய... ஓர் அழகிய பெண் எனக்கு முன்பாகப் போய்க் கொண்டிருந்ததைப் பார்த்தேன். அவளிடம் குடை இல்லாததால் என் குடையில் அவளையும் அழைத்துச் சென்றேன். அப்படித்தான் மார்ஜ்ரியைச் சந்தித்தேன். 1960-ல் அவளைக் கரம்பிடித்ததிலிருந்து “மழையோ வெயிலோ,” யெகோவாவின் சேவையில் நாங்கள் இருவரும் ஒன்றாகச் சேர்ந்து சந்தோஷமாய் நடக்கிறோம். செப்டம்பர் 2010-ல் எங்களுடைய 50-வது திருமண நாளைக் கொண்டாடினோம்.
1960-ல் தேன்நிலவு முடித்துக்கொண்டு திரும்பியதும் சகோதரர் நார் ஒரு சந்தோஷமான செய்தியைச் சொன்னார்; கிலியட் பள்ளியின் போதகராக நான் நியமிக்கப்பட்டிருப்பதைத் தெரிவித்தார். எப்பேர்ப்பட்ட பாக்கியம்! 1961 முதல் 1965 வரை, கிளை அலுவலகக் கண்காணிகளுக்கு பல மாத விசேஷப் பயிற்சி கொடுக்கப்பட்டது; அதற்காக ஐந்து வகுப்புகள் நடத்தப்பட்டன. 1965-ன் இலையுதிர் காலத்தில், மிஷனரிகளுக்குப் பயிற்சி அளிப்பதற்கு மீண்டும் கவனம் செலுத்தப்பட்டு, ஐந்து மாத வகுப்புகள் நடத்தப்பட்டன.
1972-ல், புதிய நியமிப்பைப் பெற்றேன்; கடிதத் தொடர்பு இலாகாவில் கண்காணியாகச் சேவை செய்ய நியமிக்கப்பட்டேன். பல்வேறு கேள்விகளுக்குப் பதில்களையும் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளையும் கண்டுபிடிக்க ஆராய்ச்சி செய்ததால், பைபிள் போதனைகளை இன்னும் நன்கு அறிந்துகொள்ள முடிந்தது; அதோடு, நம்முடைய கடவுளின் உயர்ந்த நெறிமுறைகளைப் பின்பற்ற மற்றவர்களுக்கு இன்னும் நன்கு உதவவும் முடிந்தது.
பிறகு 1987-ல், புதிதாகத் துவங்கப்பட்ட மருத்துவத் தகவல் சேவை என்ற இலாகாவில் பணிபுரிய நியமிக்கப்பட்டேன். மருத்துவமனை தொடர்பு ஆலோசனைக் குழுக்களில் செயல்பட்ட மூப்பர்களுக்குக் கருத்தரங்குகளை ஏற்பாடு செய்ய வேண்டியிருந்தது; மருத்துவர்களையும் நீதிபதிகளையும் சமூக சேவகர்களையும் அணுகி, இரத்தம் சம்பந்தமான நம் நிலைநிற்கையை விளக்க அந்தக் கருத்தரங்குகள் மூப்பர்களுக்குப் பயிற்சி அளித்தன. சாட்சிகளாக இருக்கும் பிள்ளைகளுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளிக்கையில், பெற்றோரின் அனுமதியைப் பெறாமல் பெரும்பாலும் நீதிமன்ற அனுமதியுடன் இரத்தமேற்றினார்கள்; இது பெரிய பிரச்சினையாக இருந்தது.
இரத்தத்திற்குப் பதிலாக மாற்று மருந்துகளை உபயோகிக்கும்படி டாக்டர்களிடம் சொன்னபோது, அத்தகைய மருந்துகள் இல்லை என்றோ அவற்றின் விலை அதிகம் என்றோ அவர்கள் பெரும்பாலும் பதிலளித்தார்கள். அப்படிப் பதிலளிக்கும் டாக்டரிடம் “தயவுசெய்து உங்கள் கையை நீட்டுங்கள்” என்று சொல்வேன். அவர் கையை நீட்டியபோது, “மிகச் சிறந்த மாற்று மருந்து உங்கள் கையில்தான் இருக்கிறது என்று உங்களுக்கே தெரியும்” எனச் சொல்லிப் பாராட்டுவேன். இது, கத்தியைக் கவனமாகப் பயன்படுத்தினால் முடிந்தவரை இரத்தம் வீணாகாதபடி பார்த்துக்கொள்ள முடியும் என்பதை அந்த டாக்டருக்கு நினைப்பூட்டியது.
இரத்தம் சம்பந்தமான நம் நிலைநிற்கையை டாக்டர்களுக்கும் நீதிபதிகளுக்கும் விளக்க கடந்த இருபது வருடங்களாக எடுக்கப்பட்ட முயற்சிகளை யெகோவா பெருமளவு ஆசீர்வதித்திருக்கிறார். நம்முடைய நிலைநிற்கையை அவர்கள் நன்கு புரிந்துகொண்டபோது, அவர்களுடைய மனநிலையில் பெரும் மாற்றம் ஏற்பட்டது. இரத்தத்திற்குப் பதிலாகப் பயன்படுத்தப்படுகிற மாற்று மருந்துகள் பயனுள்ளதென மருத்துவ ஆராய்ச்சி நிரூபித்திருப்பதை அவர்கள் தெரிந்துகொண்டார்கள்; அதோடு, சாட்சிகளாக இருக்கிற நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்க பல டாக்டர்களும் மருத்துவமனைகளும் தயாராக இருப்பதையும் அவர்கள் அறிந்துகொண்டார்கள்.
1996 முதற்கொண்டு நானும் மார்ஜ்ரியும் நியு யார்க், பாட்டர்சனிலுள்ள உவாட்ச்டவர் கல்வி மையத்தில் சேவை செய்து வருகிறோம். அது புருக்லினுக்கு வடக்கே சுமார் 110 கிலோமீட்டர் (70 மைல்) தொலைவில் உள்ளது. இங்கே, ஊழிய இலாகாவில் கொஞ்சக் காலம் சேவை செய்தேன்; பின்னர், கிளை அலுவலகக் கண்காணிகளுக்கும் பயணக் கண்காணிகளுக்கும் கற்பிப்பதில் கொஞ்சக் காலம் ஈடுபட்டேன். கடந்த 12 வருடங்களாகக் கடிதத் தொடர்பு இலாகாவின் கண்காணியாக மீண்டும் சேவை செய்து வருகிறேன். இந்த இலாகா, புருக்லினிலிருந்து பாட்டர்சனுக்கு மாற்றப்பட்டிருக்கிறது.
முதுமையின் சவால்கள்
எனக்குக் கிட்டத்தட்ட 85 வயதாகிவிட்டதால் பெத்தேலில் என் பொறுப்புகளைச் செய்வது மிகவும் கஷ்டமாகிவிட்டது. பத்து ஆண்டுகளுக்கும் மேலாகப் புற்றுநோயுடன் போராடி வருகிறேன். யெகோவா எப்படி எசேக்கியாவின் ஆயுளைக் கூட்டினாரோ அப்படித்தான் எனக்கும் செய்திருப்பதாக நினைக்கிறேன். (ஏசா. 38:5) என்னுடைய மனைவிக்கும் உடல்நலம் சரியில்லை; அவள் அல்ஸைமர் வியாதியால் அவதிப்படுகிறாள்; அதைச் சமாளிக்க இருவருமே போராடுகிறோம். அவள் யெகோவாவுக்குச் சிறந்த ஊழியக்காரியாகவும், இளைஞர்களுக்கு நல்ல வழிகாட்டியாகவும், எனக்கு உண்மைத் தோழியாகவும், உத்தமத் துணைவியாகவும் இருந்திருக்கிறாள். எப்போதும் பைபிளைக் கருத்தூன்றிப் படித்து வந்தாள், அதை மற்றவர்களுக்குத் திறமையாகக் கற்பித்தாள், அவளுடைய ஆன்மீகப் பிள்ளைகளில் பலர் இன்றும் எங்களோடு தொடர்புகொள்கிறார்கள்.
மேரி அத்தை மார்ச் 2010-ல் இறந்துவிட்டார்; அப்போது அவருக்கு 87 வயது. அவர் பைபிளை மற்றவர்களுக்குக் கற்பிப்பதில் தேர்ந்தவராக இருந்தார்; சத்தியத்தை ஏற்றுக்கொள்ள அநேகருக்கு உதவினார். பல வருடங்கள் முழுநேர ஊழியம் செய்தார். பைபிளிலிருந்து சத்தியத்தைக் கற்றுக்கொள்வதற்கும் அவரைப் போலவே நானும் அன்பான கடவுளான யெகோவாவுக்கு ஊழியனாவதற்கும் அவர் உதவியதற்காக ரொம்பவே நன்றியுள்ளவனாக இருக்கிறேன். இஸ்ரேலில் முன்பு மிஷனரியாகச் சேவை செய்த அவருடைய கணவர் அடக்கம் செய்யப்பட்ட இடத்திற்குப் பக்கத்திலேயே அவரும் அடக்கம் செய்யப்பட்டார். அவர்கள் இருவரும் யெகோவாவின் நினைவில் இருக்கிறார்கள் என்றும் உயிர்த்தெழுப்பப்படுவார்கள் என்றும் நம்புகிறேன்.
கடந்த 67 வருடங்களுக்கும் மேலாக யெகோவாவுக்குச் சேவை செய்ததை நினைத்துப் பார்க்கையில், அவர் வாரிவாரி வழங்கியிருக்கும் ஆசீர்வாதங்களுக்கு நன்றியுள்ளவனாக இருக்கிறேன். யெகோவாவின் சித்தத்தைச் செய்வதிலேயே ஆனந்தம் காண்கிறேன்! அவருடைய அளவற்ற கருணையின்மீது அசைக்க முடியாத நம்பிக்கை வைத்திருக்கிறேன்; அதனால், அவருடைய மகன் வாக்குறுதி அளித்திருக்கிறதைப் பெற ஆவலோடு எதிர்பார்க்கிறேன்: “என் பெயரை முன்னிட்டு வீடுகளையோ சகோதரர்களையோ சகோதரிகளையோ தகப்பனையோ தாயையோ பிள்ளைகளையோ நிலங்களையோ தியாகம் செய்கிற எவரும், பல மடங்காக அவற்றைப் பெற்றுக்கொள்வார்கள், முடிவில்லா வாழ்வையும் பெற்றுக்கொள்வார்கள்.”—மத். 19:29.
[அடிக்குறிப்பு]
^ பாரா. 11 1942-ல் வெளியிடப்பட்டது, தற்போது அச்சிடப்படுவதில்லை.
[பக்கம் 19-ன் படம்]
1928-ல், அமெரிக்கா, ஜார்ஜியா மாகாணத்திலுள்ள என் தாத்தாவுடைய பண்ணையில்
[பக்கம் 19-ன் படம்]
மேரி அத்தையும் தல்மஜ் அங்கிளும்
[பக்கம் 20-ன் படம்]
மேரி அத்தை, கிளாடிஸ், கிரேஸ்
[பக்கம் 20-ன் படம்]
ஜூன் 14, 1944-ல் என்னுடைய ஞானஸ்நானத்தின்போது
[பக்கம் 20-ன் படம்]
பெத்தேலில் ஊழிய இலாகாவில் பணியாற்றியபோது
[பக்கம் 21-ன் படம்]
1958-ல் யாங்கி ஸ்டேடியத்தில் நடந்த சர்வதேச மாநாட்டில் மேரி அத்தையுடன்
[பக்கம் 21-ன் படம்]
மார்ஜ்ரியைக் கரம்பிடித்தபோது
[பக்கம் 21-ன் படம்]
2008-ல் மார்ஜ்ரியுடன்