Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

இயேசுவின் அப்போஸ்தலர்களிடமிருந்து விழிப்புணர்வைக் கற்றுக்கொள்ளுங்கள்

இயேசுவின் அப்போஸ்தலர்களிடமிருந்து விழிப்புணர்வைக் கற்றுக்கொள்ளுங்கள்

“என்னோடுகூட விழித்திருங்கள்.”—மத். 26:38.

1-3. இயேசு பூமியில் வாழ்ந்த கடைசி இரவன்று அப்போஸ்தலர்கள் விழிப்புடன் இருக்க எப்படித் தவறிவிட்டார்கள், அவர்கள் தங்களுடைய தவறிலிருந்து பாடம் கற்றுக்கொண்டார்கள் என்பதை எது காட்டுகிறது?

 இயேசு மானிடராய் இம்மண்ணில் வாழ்ந்த கடைசி இரவன்று அரங்கேறிய சம்பவங்களை அப்படியே கற்பனை செய்து பாருங்கள். தமக்கு மிகவும் பிடித்தமான ஓர் இடத்திற்கு... எருசலேமின் கிழக்கே வீற்றிருக்கிற கெத்செமனே தோட்டத்திற்கு... இயேசு வந்திருக்கிறார். தமது உண்மையுள்ள அப்போஸ்தலர்களுடன் இங்கு வந்திருக்கிறார். பற்பல விஷயங்கள் அவரது மனதையும் இதயத்தையும் பாறாங்கல் போல் பாரப்படுத்திக் கொண்டிருக்க... ஜெபம் செய்யத் தனிமையான ஓரிடம் அவருக்குத் தேவைப்படுகிறது.—மத். 26:36; யோவா. 18:1, 2.

2 அப்போஸ்தலர்களில் மூவர்—பேதுரு, யாக்கோபு, யோவான்—அந்தத் தோட்டத்தின் உட்பகுதிக்கு இயேசுவுடன் வருகிறார்கள். “நீங்கள் இங்கேயே இருந்து, என்னோடுகூட விழித்திருங்கள்” என்று அவர்களிடம் சொல்லிவிட்டு, ஜெபம் செய்யச் சற்றுத் தள்ளிப் போகிறார். திரும்பி வந்து பார்த்தால், அந்த நண்பர்கள் ஆழ்ந்த தூக்கத்தில்! மறுபடியும் அவர்களிடம், ‘விழிப்புடன் இருங்கள்’ எனக் கேட்டுக்கொள்கிறார். ஆனால், இன்னும் இரண்டு தடவை அவர்கள் தூங்கி விடுகிறார்கள்! பிற்பாடு அதே இரவன்று அப்போஸ்தலர்கள் அனைவரும் ஆன்மீக ரீதியிலும் விழித்திருக்கத் தவறிவிடுகிறார்கள். சொல்லப்போனால், இயேசுவை அம்போவென விட்டுவிட்டு ஓட்டம் பிடித்துவிடுகிறார்கள்!—மத். 26:38, 41, 56.

3 விழித்திருக்கத் தவறியதற்காக அப்போஸ்தலர்கள் நிச்சயமாகவே மனம் வருந்தினார்கள். விசுவாசமுள்ள அந்த மனிதர்கள் தங்களுடைய தவறிலிருந்து உடனடியாகப் பாடம் கற்றுக்கொண்டார்கள். விழிப்புடன் இருப்பதில் அவர்கள் தலைசிறந்த முன்மாதிரிகளாய் ஆனதாக அப்போஸ்தலர் புத்தகம் சொல்கிறது. அவர்களது நல்ல போக்கைக் கண்டு சக கிறிஸ்தவர்களும் அப்படியே விழிப்புடன் இருந்திருக்க வேண்டும். நாம் இப்போது வரலாற்றிலேயே மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டிய காலகட்டத்தில் வாழ்கிறோம். (மத். 24:42) விழிப்புடன் இருப்பது சம்பந்தமாக மூன்று பாடங்களை அப்போஸ்தலர் புத்தகத்திலிருந்து இப்போது நாம் சிந்திக்கலாம்.

எங்கே பிரசங்கிப்பது—வழிநடத்துதல் பெற விழிப்புடனிருத்தல்

4, 5. கடவுளுடைய சக்தி பவுலையும் அவரது பயணத் தோழர்களையும் எப்படி வழிநடத்தியது?

4 முதலாவதாக, எங்கே பிரசங்கம் செய்ய வேண்டும் என்ற விஷயத்தில் வழிநடத்துதலைப் பெற அப்போஸ்தலர்கள் விழிப்புடன் இருந்தார்கள். மிகவும் அசாதாரணமான ஒரு பயணத்தின்போது அப்போஸ்தலன் பவுலையும் அவரது பயணத் தோழர்களையும் வழிநடத்த இயேசு எப்படிக் கடவுளுடைய சக்தியைப் பயன்படுத்தினார் என்பதை ஒரு பதிவில் தெரிந்துகொள்கிறோம். (அப். 2:33) அதை இப்போது கவனிக்கலாம்.அப்போஸ்தலர் 16:6-10-ஐ வாசியுங்கள்.

5 பவுலும் சீலாவும் தீமோத்தேயுவும் கலாத்தியாவின் தென் பகுதியிலுள்ள லீஸ்திரா நகரத்தைவிட்டுச் சென்றிருந்தார்கள். சில நாட்களுக்குப்பின், மேற்கு நோக்கிச் செல்லும் ரோம நெடுஞ்சாலையை... ஆசியா மாகாணத்தில் ஜனநெருக்கடிமிக்க பகுதிக்குச் செல்லும் சாலையை... அடைந்தார்கள். கிறிஸ்துவைப் பற்றிய செய்தியை நகரங்களில் வசித்த ஆயிரமாயிரம் பேர் கேட்பதற்காக இந்தச் சாலையைத் தேர்ந்தெடுத்தார்கள். ஆனால், வழியில் ஏதோவொன்று அவர்களைத் தடுத்து நிறுத்தியது. அதைப் பற்றி 6-ஆம் வசனம் சொல்கிறது: “ஆசிய மாகாணத்தில் கடவுளுடைய வார்த்தையை அறிவிக்காதபடி கடவுளுடைய சக்தியினால் தடுக்கப்பட்டதால் பிரிகியா, கலாத்தியா பகுதிகள் வழியாக அவர்கள் போனார்கள்.” ஆசிய மாகாணத்தில் அவர்கள் பிரசங்கம் செய்வதைக் கடவுளுடைய சக்தி ஏதோவொரு விதத்தில் தடுத்தது. கடவுளுடைய சக்தியால் இயேசு தங்களை வேறொரு திசையில் வழிநடத்த விரும்பினார் என்பதை பவுலும் அவரது தோழர்களும் புரிந்துகொண்டார்கள்.

6, 7. (அ) பித்தினியாவுக்கு அருகில் பவுலுக்கும் மற்ற பயணிகளுக்கும் என்ன நேரிட்டது? (ஆ) அந்தச் சீடர்கள் எடுத்த தீர்மானம் என்ன, அதன் விளைவு என்ன?

6 ஆர்வத்துடிப்புமிக்க அந்தப் பயணிகள் எங்கே சென்றார்கள்? 7-ஆம் வசனம் சொல்கிறது: “அதன்பின், மீசியாவுக்கு வந்தபோது பித்தினியாவுக்குள் செல்ல முயன்றார்கள்; ஆனால், இயேசுவுக்கு அருளப்பட்ட கடவுளுடைய சக்தி அவர்களைப் போக விடவில்லை.” ஆசியாவில் பிரசங்கம் செய்வதிலிருந்து தடுக்கப்பட்டதால், பித்தினியாவிலிருந்த நகரங்களில் நற்செய்தியைப் பரப்ப பவுலும் அவரது தோழர்களும் வடக்கு நோக்கிச் சென்றார்கள். இருந்தாலும், அவர்கள் பித்தினியாவை நெருங்கிய சமயத்தில், அவர்களைத் தடுத்து நிறுத்த இயேசு மறுபடியும் கடவுளுடைய சக்தியைப் பயன்படுத்தினார். அப்போது, அவர்கள் குழம்பிப்போயிருக்க வேண்டும். என்ன பிரசங்கிக்க வேண்டும்... எப்படிப் பிரசங்கிக்க வேண்டும்... என்பதை அறிந்திருந்தார்கள், ஆனால் எங்கே பிரசங்கிக்க வேண்டும் என்பதை அறியாதிருந்தார்கள். வேறு வார்த்தைகளில் சொன்னால், ஆசியாவுக்குச் செல்லும் கதவை அவர்கள் தட்டினார்கள், அது திறக்கவில்லை. பித்தினியாவுக்குச் செல்லும் கதவைத் தட்டினார்கள், அதுவும் திறக்கவில்லை. அப்படியானால், தட்டுவதையே அவர்கள் நிறுத்திவிட்டார்களா? பக்திவைராக்கியத்துடன் பிரசங்கித்த அவர்களாவது அப்படிச் செய்வதாவது!

7 அந்தத் தருணத்தில் அவர்கள் எடுத்த ஒரு தீர்மானம் சற்று விநோதமாய்த் தோன்றியிருக்கலாம். 8-ஆம் வசனம் நமக்குச் சொல்கிறது: “அவர்கள் மீசியாவைக் கடந்து துரோவாவை அடைந்தார்கள்.” ஆகவே, அந்தப் பயணிகள் மேற்கே திரும்பி, 563 கிலோமீட்டர் (350 மைல்) தூரம் நடந்தே சென்றார்கள்; நகரம் நகரமாய்க் கடந்து வந்து கடைசியில் துரோவா துறைமுகத்தை... மக்கெதோனியாவுக்குச் செல்லும் இயற்கை வாயிலை.... அடைந்தார்கள். அங்கே, மூன்றாவது தடவையாக பவுலும் அவரது தோழர்களும் கதவைத் தட்டினார்கள், ஆனால் இந்தத் தடவை அது அகலத் திறந்தது! அடுத்து நடந்ததை 9-ஆம் வசனம் கூறுகிறது: “அங்கு பவுல் இரவு நேரத்தில் ஒரு தரிசனத்தைக் கண்டார்; அந்தத் தரிசனத்தில், மக்கெதோனியாவைச் சேர்ந்த ஒருவன் வந்து நின்று, ‘மக்கெதோனியாவுக்கு வந்து எங்களுக்கு உதவி செய்யுங்கள்’ என்று அவரைக் கெஞ்சிக் கேட்டான்.” ஒருவழியாக, எங்கே பிரசங்கிப்பது என்பதை பவுலும் அவரது தோழர்களும் தெரிந்துகொண்டார்கள். உடனடியாக, அவர்கள் மக்கெதோனியாவுக்குக் கப்பலேறினார்கள்.

8, 9. பவுலின் பயணத்தைப் பற்றிய பதிவிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?

8 இந்தப் பதிவிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்? பவுல் ஆசியாவுக்குக் கிளம்பிச் சென்ற பின்புதான் கடவுளுடைய சக்தி குறுக்கிட்டது. அடுத்து, பித்தினியாவை அவர் நெருங்கிய பின்புதான் இயேசு இடைமறித்தார். கடைசியாக, பவுல் துரோவாவுக்குச் சென்ற பின்புதான் மக்கெதோனியாவுக்குச் செல்ல இயேசு வழிநடத்தினார். சபையின் தலைவரான இயேசு, இதுபோலவே நம்மையும் வழிநடத்தலாம். (கொலோ. 1:18) உதாரணமாக, ஒரு பயனியராகச் சேவை செய்ய வேண்டுமென நீங்கள் நினைத்து வந்திருக்கலாம் அல்லது தேவை அதிகமுள்ள ஓரிடத்திற்குக் குடிமாறிச் செல்லத் திட்டுமிட்டு வந்திருக்கலாம். ஆனால், உங்கள் இலக்கை அடைய நடவடிக்கை எடுத்த பின்புதான் கடவுளுடைய சக்தியால் இயேசு உங்களை வழிநடத்துவார். இதை இப்படி விளக்கலாம்: கார் ஓடிக்கொண்டிருந்தால்தான் டிரைவர் அதை இடப்பக்கமோ வலப்பக்கமோ திருப்ப முடியும். அதேபோல், நாம் ஓடிக்கொண்டிருந்தால்தான், அதாவது நம்முடைய இலக்கை அடைய முயற்சி எடுத்துக்கொண்டிருந்தால்தான், இன்னுமதிக ஊழியம் செய்ய இயேசு நம்மை வழிநடத்த முடியும்.

9 ஆனால், உங்களுடைய முயற்சிக்குக் கைமேல் பலன் கிடைக்காவிட்டால்? கடவுளுடைய சக்தி உங்களை வழிநடத்தவில்லை என்று முடிவுகட்டிவிட்டு உங்கள் முயற்சிக்கு முழுக்குப்போட்டுவிட வேண்டுமா? பவுலும் தடைகளை எதிர்ப்பட்டார் என்பதை மறந்துவிடாதீர்கள். ஆனாலும், ஒரு கதவு திறக்கும்வரை அவர் தேடிக்கொண்டே இருந்தார்... தட்டிக்கொண்டே இருந்தார். அதேபோல், ‘ஊழியம் செய்வதற்கான வாய்ப்பு என்ற பெரிய கதவுக்காக’ ஊக்கமாய்த் தேடிக்கொண்டே இருந்தால் உங்களுக்கும் பலன் கிடைக்கும்.—1 கொ. 16:9.

ஜெபம் செய்ய விழிப்புடன் இருத்தல்

10. விழிப்புடனிருக்கத் தொடர்ந்து ஜெபம் செய்வது முக்கியம் என்பதை எது காட்டுகிறது?

10 விழிப்புடன் இருக்கும் விஷயத்தில் முதல் நூற்றாண்டு கிறிஸ்தவச் சகோதரர்களிடமிருந்து நாம் கற்றுக்கொள்கிற இரண்டாவது பாடத்தை இப்போது சிந்திப்போம்: அவர்கள் ஜெபம் செய்ய விழிப்புடன் இருந்தார்கள். (1 பே. 4:7) விழிப்புடனிருக்க ஜெபத்தில் உறுதியாய் இருப்பது முக்கியம். கெத்செமனே தோட்டத்தில் இயேசு கைது செய்யப்படுவதற்குச் சற்று முன்பு மூன்று அப்போஸ்தலர்களிடம் என்ன சொன்னார் என்பதை ஞாபகப்படுத்திப் பாருங்கள்; “விழிப்புடன் இருந்து, தொடர்ந்து ஜெபம் செய்யுங்கள்” என்று சொன்னார், அல்லவா?மத். 26:41.

11, 12. பேதுருவையும் மற்ற கிறிஸ்தவர்களையும் ஏரோது ஏன் மோசமாய் நடத்தினான், அவன் என்ன செய்தான்?

11 அந்தச் சமயத்தில் அங்கிருந்த பேதுரு, மற்றவர்கள் செய்யும் ஊக்கமான ஜெபம் எவ்வளவு முக்கியம் என்பதைப் பின்னர் அனுபவத்தில் அறிந்துகொண்டார். (அப்போஸ்தலர் 12:1-6-ஐ வாசியுங்கள்.) யூதர்களின் தயவைப் பெற கிறிஸ்தவர்களை ஏரோது மோசமாக நடத்தியதைப் பற்றி அப்போஸ்தலர் 12-ஆம் அதிகாரத்தின் ஆரம்ப வசனங்களில் அறிந்துகொள்கிறோம். யாக்கோபு ஓர் அப்போஸ்தலர் என்பதையும், இயேசுவுக்கு மிகவும் நெருக்கமானவர் என்பதையும் ஒருவேளை ஏரோது அறிந்திருக்கலாம். ஆகவே, யாக்கோபை “வாளால்” வெட்டிக் கொன்றான். (2-ஆம் வசனம்) அன்புள்ள அந்த அப்போஸ்தலனைச் சபை இழந்தது. சகோதரர்களுக்கு எப்பேர்ப்பட்ட ஒரு சோதனை!

12 அடுத்து ஏரோது என்ன செய்தான்? 3-ஆம் வசனம் இவ்வாறு சொல்கிறது: “அது யூதர்களுக்குச் சந்தோஷம் அளித்ததைக் கண்டு, அடுத்தபடியாக பேதுருவையும் கைது செய்யப் பார்த்தான்.” ஆனால், பேதுரு உள்ளிட்ட சில அப்போஸ்தலர்கள் முன்பு சிறைச்சாலையிலிருந்து அற்புதமாக விடுவிக்கப்பட்டிருந்தார்கள். (அப். 5:17-20) இந்த விஷயம் ஏரோதுக்குத் தெரிந்திருக்கலாம். ஆகவே, அந்தத் தந்திரக்கார அரசியல்வாதி உஷாரானான்! ஆம், பேதுருவைச் சிறையில் அடைத்து, “மாறிமாறி அவரைக் காவல்காப்பதற்காக நான்கு படைவீரர்கள் கொண்ட நான்கு குழுக்களை நியமித்தான். பஸ்கா பண்டிகை முடிந்தபின் அவரை மக்கள் முன்பாக நிறுத்தலாம் என எண்ணினான்.” (4-ஆம் வசனம்) சற்றுக் கற்பனை செய்து பாருங்கள்! ஏரோது இரண்டு படைவீரர்களுக்கு நடுவில் பேதுருவைச் சங்கிலியால் கட்டிப் போட்டான். அவர் தப்பித்துவிடாமல் இருக்க இராப்பகலாய் 24 மணிநேரமும் காவல்காப்பதற்கு 16 படைவீரர்களை நியமித்தான். பஸ்கா பண்டிகைக்குப் பிறகு பேதுருவை மக்கள் முன்பாக நிறுத்தி, அவருக்கு மரண தண்டனை விதித்து, அவர்களை மகிழ்விக்க வேண்டுமென மனக்கணக்குப் போட்டிருந்தான். இப்படிப்பட்ட பயங்கரமான சூழ்நிலையில் பேதுருவின் சக ஊழியர்கள் என்ன செய்ய முடியும்?

13, 14. (அ) பேதுரு சிறையில் அடைக்கப்பட்டபோது சபையார் என்ன செய்தார்கள்? (ஆ) பேதுருவின் சக ஊழியர்கள் செய்த காரியத்திலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?

13 என்ன செய்ய வேண்டும் என்பதைச் சபையார் நன்கு அறிந்திருந்தார்கள். 5-ஆம் வசனம் சொல்கிறது: “அதனால், பேதுருவைச் சிறையிலேயே அடைத்து வைத்திருந்தான்; அச்சமயத்தில், சபையார் அவருக்காகக் கடவுளிடம் தீவிரமாய் ஜெபம் செய்து வந்தார்கள்.” ஆம், அந்த அன்புச் சகோதரருக்காக அவர்கள் ஊக்கமாய் ஜெபித்தார்கள்... இதயத்தைக் கொட்டி மன்றாடினார்கள். ஆகவே, யாக்கோபின் மரணம் அவர்களைச் சோகக் கடலில் ஆழ்த்திவிடவில்லை, ஜெபம் வீண் என்ற முடிவுக்கு அவர்களை வரச் செய்யவுமில்லை. மாறாக, உண்மை வணக்கத்தாரின் மன்றாட்டுகளை யெகோவா உயர்வாய் மதிக்கிறார் என்பதை அவர்கள் அறிந்திருந்தார்கள். அந்த ஜெபங்கள் அவரது சித்தத்திற்கு இசைவாக இருந்தால் அவற்றிற்குப் பதிலளிப்பார் என்பதையும் அறிந்திருந்தார்கள்.எபி. 13:18, 19; யாக். 5:16.

14 பேதுருவின் சக ஊழியர்கள் செய்த காரியத்திலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்? விழிப்புடனிருப்பதற்கு, நமக்காக மட்டுமல்லாமல் நம் சகோதர சகோதரிகளுக்காகவும் ஜெபம் செய்ய வேண்டும். (எபே. 6:18) சோதனைகளில் அவதிப்படுகிற சகோதர சகோதரிகளை உங்களுக்குத் தெரியுமா? சிலர் துன்புறுத்தலை... அரசாங்கத் தடைகளை... இயற்கைப் பேரழிவுகளை... சகித்து வரலாம். அவர்களுக்காக உங்கள் உள்ளத்தைக் கொட்டி கடவுளிடம் மன்றாடலாம், அல்லவா? வெளிப்படையாகத் தெரியாத கஷ்டங்களைச் சகிக்கிற சிலரைக்கூட உங்களுக்குத் தெரிந்திருக்கலாம். குடும்பப் பிரச்சினை, மனச்சோர்வு, அல்லது ஏதோவொரு வியாதியோடு அவர்கள் போராடிக்கொண்டிருக்கலாம். ‘ஜெபத்தைக் கேட்கிறவரான’ யெகோவாவிடம் தனிப்பட்ட நபர்களின் பெயர்களைச் சொல்லி மன்றாடலாம், அல்லவா?சங். 65:2.

15, 16. (அ) சிறையிலிருந்து பேதுருவைத் தேவதூதர் எப்படி விடுவித்தார் என்பதை விவரியுங்கள். (கீழேயுள்ள படத்தைக் காண்க.) (ஆ) பேதுருவை யெகோவா விடுதலை செய்த விதத்தைச் சிந்தித்துப் பார்ப்பது ஏன் ஆறுதலாய் இருக்கிறது?

15 பேதுருவுக்கு என்ன நடந்தது? சிறையிலிருந்த அந்தக் கடைசி இரவன்று, இரண்டு படைவீரர்களுக்கு நடுவில் அவர் ஆழ்ந்து தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது, ஆச்சரியமான சம்பவங்கள் அடுத்தடுத்து நிகழ்ந்தன. (அப்போஸ்தலர் 12:7-11-ஐ வாசியுங்கள்.) நடந்ததை அப்படியே கற்பனைத் திரையில் ஓடவிடுங்கள்: திடீரெனச் சிறையறைக்குள் பிரகாசமாய் ஒளி வீசுகிறது. ஒரு தேவதூதர் அங்கே நிற்கிறார்; படைவீரர்களின் கண்களுக்கு அவர் புலப்படவில்லை; அவசர அவசரமாகப் பேதுருவை எழுப்புகிறார். பேதுருவின் கைகளில் கட்டப்பட்டிருக்கும் சங்கிலிகள் தானாகவே கழன்று கீழே விழுகின்றன! பிறகு அந்தத் தேவதூதர் பேதுருவை அந்த அறைக்கு வெளியே அழைத்து வருகிறார்; காவலுக்கு நின்றுகொண்டிருக்கும் படைவீரர்களை அவர்கள் கடந்து செல்கிறார்கள்; கடைசியாக, மாபெரும் இரும்புக் கதவை அடைய... அந்தக் கதவு “தானாகவே” திறந்துகொள்கிறது. சிறைச்சாலைக்கு வெளியே அவர்கள் வந்ததும் அந்தத் தேவதூதர் மாயமாய் மறைந்துவிடுகிறார். பேதுருவுக்கு விடுதலை!

16 யெகோவா தமது ஊழியர்களை விடுவிக்க எல்லையில்லா வல்லமை பெற்றிருப்பதைச் சிந்தித்துப் பார்க்கும்போது நம் விசுவாசம் பலப்படுகிறது, அல்லவா? யெகோவா இன்று நம்மை அற்புதமாகக் காப்பாற்றுவார் என நாம் எதிர்பார்ப்பதில்லைதான். என்றாலும், தமது மக்களின் சார்பாக அவர் தம் வல்லமையைப் பயன்படுத்துகிறார் என்பதில் நமக்கு முழு நம்பிக்கை இருக்கிறது. (2 நா. 16:9) நாம் எதிர்ப்படும் எந்தச் சோதனையையும் சமாளிப்பதற்கு வலிமைமிக்க தமது சக்தியைத் தந்து அவர் உதவுகிறார். (2 கொ. 4:7; 2 பே. 2:9) மரணம் எனும் கொடிய சிறையிலிருந்து லட்சக்கணக்கான மக்களை விடுவிக்க விரைவில் தம் மகனுக்கு யெகோவா வல்லமை அளிப்பார். (யோவா. 5:28, 29) யெகோவாவின் வாக்குறுதிகள்மீது நாம் கொண்டுள்ள விசுவாசம் இன்று சோதனைகளைச் சந்திக்கையில் நமக்கு அசாத்திய தைரியத்தைத் தரும்.

இடையூறுகளின் மத்தியிலும் முழுமையாகச் சாட்சி கொடுத்தல்

17. பக்திவைராக்கியத்தோடும் அவசர உணர்வோடும் பிரசங்கம் செய்வதில் பவுல் எப்படித் தலைசிறந்த முன்மாதிரி வைத்தார்?

17 விழிப்புடன் இருப்பதில் அப்போஸ்தலர்களிடமிருந்து நாம் கற்றுக்கொள்கிற மூன்றாவது பாடம் இதுதான்: இடையூறுகளின் மத்தியிலும் அவர்கள் முழுமையாய்ச் சாட்சி கொடுத்து வந்தார்கள். பக்திவைராக்கியத்தோடும் அவசர உணர்வோடும் பிரசங்கிப்பது விழிப்புடனிருக்க மிக முக்கியம். இந்த விஷயத்தில் அப்போஸ்தலன் பவுல் தலைசிறந்த முன்மாதிரி! அவர் தீவிரமாய் ஊழியம் செய்தார், தொலை தூரங்களுக்குப் பயணம் செய்தார், அநேக சபைகளை ஏற்படுத்தினார். எத்தனையோ கஷ்டங்களைச் சகித்தார், ஆனால் பக்திவைராக்கியத்தையும் அவசர உணர்வையும் ஒருபோதும் இழக்கவில்லை.—2 கொ. 11:23-29.

18. ரோமாபுரியில் காவலில் வைக்கப்பட்டிருந்தபோது பவுல் எப்படித் தொடர்ந்து சாட்சி கொடுத்துவந்தார்?

18 அப்போஸ்தலர் 28-ஆம் அதிகாரத்தில் பவுலைப் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ள கடைசி பதிவைச் சிந்திப்போம். நீரோ மன்னரின் முன்னிலையில் விசாரிக்கப்படுவதற்காக பவுல் ரோமாபுரிக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவர் காவலில் வைக்கப்பட்டார்; ஒருவேளை படைவீரருடன் சங்கிலியால் கட்டப்பட்டிருந்திருக்கலாம். என்றாலும், அந்த அப்போஸ்தலன் பக்திவைராக்கியத்துடன் பிரசங்கிப்பதை எந்தச் சங்கிலியாலும் தடுக்க முடியவில்லை! சாட்சி கொடுக்க அவர் தொடர்ந்து வழிகளைக் கண்டுபிடித்தார். (அப்போஸ்தலர் 28:17, 23, 24-ஐ வாசியுங்கள்.) மூன்று நாட்களுக்குப் பிறகு, சாட்சி கொடுப்பதற்காகப் பிரபலமான யூத ஆண்களை வரவழைத்தார். பின்னர், ஒரு நாள் அவர் இன்னும் பெரிய அளவில் சாட்சி கொடுத்தார். 23-ஆம் வசனம் சொல்கிறது: “[உள்ளூர் யூதர்கள்] அவரைச் சந்திக்க ஒரு நாளைக் குறித்துக்கொண்டு, அவர் தங்கியிருந்த வீட்டிற்குப் பெருங்கூட்டமாக வந்தார்கள்; அப்போது, கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றி அவர்களிடம் அவர் முழுமையாகச் சாட்சி கொடுத்தார்; அதோடு, காலையிலிருந்து மாலைவரை, மோசேயின் திருச்சட்டத்திலிருந்தும் தீர்க்கதரிசிகளின் புத்தகங்களிலிருந்தும் இயேசுவைப் பற்றிய விஷயங்களைப் பக்குவமாக எடுத்துச் சொன்னார்.”

19, 20. (அ) சாட்சி கொடுப்பதில் பவுல் ஏன் திறம்பட்டவராய் விளங்கினார்? (ஆ) நற்செய்தியை எல்லாரும் ஏற்றுக்கொள்ளாதபோதிலும் பவுல் என்ன செய்தார்?

19 சாட்சி கொடுப்பதில் பவுல் ஏன் திறம்பட்டவராய் விளங்கினார்? 23-ஆம் வசனம் அநேக காரணங்களைச் சுட்டிக்காட்டுவதைக் கவனியுங்கள். (1) கடவுளுடைய அரசாங்கத்தையும் இயேசு கிறிஸ்துவையும் பற்றிக் கற்பித்தார். (2) விஷயங்களைப் ‘பக்குவமாக எடுத்துச் சொல்லி,’ கேட்டுக்கொண்டிருந்தவர்களின் மனதைத் தொட முயன்றார். (3) வேதவசனங்களிலிருந்து நியாயங்காட்டிப் பேசினார். (4) “காலையிலிருந்து மாலைவரை” சாட்சி கொடுப்பதன் மூலம் சுயதியாக மனப்பான்மையை வெளிக்காட்டினார். பவுல் சிறந்த விதத்தில் சாட்சி கொடுத்தார், ஆனால் எல்லாருமே அதை ஏற்றுக்கொள்ளவில்லை. “சிலர் அவர் சொன்ன விஷயங்களை நம்பி ஏற்றுக்கொண்டார்கள்; மற்றவர்களோ நம்ப மறுத்தார்கள்” என 24-ஆம் வசனம் சொல்கிறது. இதனால், கருத்துவேறுபாடு உண்டாகி, எல்லாரும் களைந்து போனார்கள்.

20 நற்செய்தியை எல்லாரும் ஏற்றுக்கொள்ளாததால் பவுல் மனமுடைந்துபோனாரா? இல்லவே இல்லை! அப்போஸ்தலர் 28:30, 31 நமக்குச் சொல்கிறது: “பவுல் தன் வாடகை வீட்டில் இரண்டு வருடங்கள் தங்கியிருந்தார்; தன்னைப் பார்க்க வந்த எல்லாரையும் அன்பாக வரவேற்று, எந்தத் தடையும் இல்லாமல் கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றி அவர்களுக்குப் பிரசங்கித்து வந்தார்; அதோடு, எஜமானராகிய இயேசு கிறிஸ்துவைப் பற்றிய விஷயங்களைச் சிறிதும் தயக்கமில்லாமல் கற்பித்து வந்தார்.” கடவுளுடைய சக்தியால் எழுதப்பட்ட அப்போஸ்தலர் புத்தகம் ஊக்கமூட்டும் இந்தத் தகவலுடன் நிறைவடைகிறது.

21. வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்தபோது பவுல் வைத்த முன்மாதிரியிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?

21 பவுலின் முன்மாதிரியிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்? வீட்டுக்காவலில் இருந்தபோது பவுலால் வீட்டுக்கு வீடு ஊழியம் செய்ய முடியவில்லை. ஆனாலும் அவர் நம்பிக்கையுடன் இருந்தார், தன்னைக் காண வந்த அனைவருக்கும் சாட்சி கொடுத்தார். அதேபோல், இன்று கடவுளுடைய மக்களில் பலர் விசுவாசத்தின் நிமித்தம் அநியாயமாய்ச் சிறையில் அடைக்கப்பட்டிருந்தாலும், சந்தோஷத்தை இழந்துவிடாமல் தொடர்ந்து பிரசங்கித்து வருகிறார்கள். நம் அருமை சகோதர சகோதரிகளில் சிலர் முதுமையினாலோ உடல்நலக் குறைவினாலோ வீட்டில் அடைபட்டுக் கிடக்கிறார்கள் அல்லது மருத்துவப் பராமரிப்பு இல்லத்தில் வசிக்கிறார்கள். ஆனால், வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் டாக்டர்களிடமும் அங்கு வேலை செய்கிறவர்களிடமும் தங்களைப் பார்க்க வருகிறவர்களிடமும் மற்றவர்களிடமும் பிரசங்கிக்கிறார்கள். கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றி முழுமையாய்ச் சாட்சி கொடுக்க வேண்டுமென்பதே அவர்களுடைய உள்ளத்தில் கொழுந்துவிட்டெரியும் ஆசை. அவர்களுடைய முன்மாதிரியை நாம் எவ்வளவு உயர்வாய்க் கருதுகிறோம்!

22. (அ) அப்போஸ்தலர் புத்தகத்திலிருந்து பயனடைய எது நமக்கு உதவியாய் இருக்கிறது? (மேலே உள்ள பெட்டியைக் காண்க.) (ஆ) இந்த உலகம் அஸ்தமிக்கும் வேளைக்காகக் காத்திருக்கையில் உங்கள் தீர்மானம் என்ன?

22 அப்போஸ்தலர்களையும் முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்களையும் பற்றி அப்போஸ்தலர் புத்தகத்தில் நாம் வாசிக்கும்போது, விழிப்புணர்வைப் பற்றி அதிகம் கற்றுக்கொள்கிறோம். இந்த உலகம் அஸ்தமிக்கும் வேளைக்காக நாம் காத்திருக்கும்போது, தைரியத்துடனும் பக்திவைராக்கியத்துடனும் சாட்சி கொடுப்பதன் மூலம் அவர்களைப் பின்பற்ற உறுதிபூண்டிருப்போமாக. இன்று, கடவுளது அரசாங்கத்தைப் பற்றி ‘முழுமையாகச் சாட்சி கொடுப்பதில்’ பங்கு கொள்வதைவிட சிறந்த பாக்கியம் வேறெதுவுமில்லை!—அப். 28:23.

[கேள்விகள்]

[பக்கம் 13-ன் பெட்டி]

“அப்போஸ்தலர் புத்தகம் இனி எனக்குப் புதுப்பொலிவுடன் தெரியும்”

கடவுளது அரசைப் பற்றி ‘முழுமையாகச் சாட்சி கொடுங்கள்’ என்ற புத்தகத்தை வாசித்தபின், பயணக் கண்காணி ஒருவர் தனது உணர்ச்சிகளை இவ்வாறு வார்த்தைகளில் வடித்தார்: “அப்போஸ்தலர் புத்தகம் இனி எனக்குப் புதுப்பொலிவுடன் தெரியும். பல சந்தர்ப்பங்களில், நான் அப்போஸ்தலர் புத்தகத்தின் விவரப்பதிவுகள் வழியே ‘நடந்து’ சென்றிருக்கிறேன்; ஆனால், வெறும் மெழுகுவர்த்தியோடும் தூசிபடிந்த மூக்குக் கண்ணாடியோடும்தான் ‘நடந்து’ சென்றிருக்கிறேன். இப்போது, சூரிய ஒளியில் பட்டொளி வீசுகிற அதன் மகிமையைக் காணும் பாக்கியத்தைப் பெற்றிருப்பதாக உணருகிறேன்.”

[பக்கம் 12-ன் படம்]

மாபெரும் இரும்புக் கதவின் வழியாக பேதுருவை ஒரு தேவதூதர் அழைத்துச் சென்றார்