உண்மைக் கிறிஸ்தவர்கள் பைபிளை உயர்வாய் மதிக்கிறார்கள்
“உங்களுடைய வார்த்தையே சத்தியம்.” —யோவா. 17:17.
1. யெகோவாவின் சாட்சிகளுக்கும் மற்ற மதத்தினருக்கும் உள்ள முக்கிய வித்தியாசத்தை உங்கள் அனுபவத்திலிருந்து சொல்லுங்கள்.
யெகோவாவின் சாட்சிகளோடு நீங்கள் முதன்முறையாக அனுபவித்த சுவாரஸ்யமான உரையாடலைப் பற்றிச் சிந்தித்துப் பாருங்கள். எது உங்கள் நினைவுக்கு வருகிறது? ‘நான் கேட்ட எல்லாக் கேள்விகளுக்கும் பைபிளிலிருந்து பதிலைக் காட்டினார்கள், அது எனக்கு ரொம்பப் பிடித்திருந்தது’ என்றுதான் அநேகர் சொல்வார்கள். பூமி எப்படி இருக்க வேண்டுமென்பது கடவுளுடைய நோக்கம்... நாம் சாகும்போது என்ன நடக்கிறது... இறந்தவர்களுக்கு என்ன எதிர்பார்ப்பு இருக்கிறது... என்பதையெல்லாம் தெரிந்துகொண்டபோது நாம் எவ்வளவாய்ப் பூரித்துப்போனோம்!
2. நீங்கள் பைபிளை மதிக்க ஆரம்பித்ததற்கான சில காரணங்கள் யாவை?
2 வாழ்க்கை, மரணம், எதிர்காலம் பற்றிய கேள்விகளுக்கு பைபிள் பதில் அளிப்பதோடு மற்ற விதங்களிலும் பயனுள்ளதாய் இருக்கிறதென அதைப் படிக்கப் படிக்க நாம் புரிந்துகொண்டோம். இந்த உலகத்திலேயே பைபிள் மட்டும்தான் மிகப் பயனுள்ள புத்தகம் என்பதையும் உணர்ந்துகொண்டோம். அதனால் அதை மதிக்க ஆரம்பித்தோம். அதன் ஆலோசனைகள் எல்லாக் காலத்துக்கும் பொருந்துபவை; அவற்றைக் கவனமாகக் கடைப்பிடிப்பவர்கள் வாழ்வில் வெற்றி காண்பார்கள், சந்தோஷத்தை அடைவார்கள். (சங்கீதம் 1:1-3-ஐ வாசியுங்கள்.) உண்மைக் கிறிஸ்தவர்கள் பைபிளை ‘மனிதருடைய வார்த்தையாக அல்லாமல் கடவுளுடைய வார்த்தையாக ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள்; அது உண்மையிலேயே கடவுளுடைய வார்த்தைதான்.’ (1 தெ. 2:13) சரித்திரத்தின் பக்கங்களைச் சற்றுப் புரட்டினால், கடவுளுடைய வார்த்தையை உயர்வாய் மதிப்பவர்களுக்கும் அதை மதிக்காதவர்களுக்கும் இடையிலான வித்தியாசம் பளிச்செனத் தெரியும்.
சிக்கலான பிரச்சினை தீர்க்கப்படுகிறது
3. முதல் நூற்றாண்டு கிறிஸ்தவச் சபையின் ஒற்றுமையை அச்சுறுத்திய பிரச்சினை என்ன, அதைத் தீர்ப்பது ஏன் கஷ்டமாக இருந்தது?
3 விருத்தசேதனம் செய்யப்படாத புறதேசத்தாரில் கொர்நேலியு என்பவர் மீதுதான் கடவுளுடைய சக்தி முதன்முதலாகப் பொழியப்பட்டது; அதன் பிறகு எழுந்த ஒரு பிரச்சினை, 13 ஆண்டுகளாகக் கிறிஸ்தவச் சபையின் ஒற்றுமையை அச்சுறுத்தி வந்தது. புறதேசத்தைச் சேர்ந்த ஆண்கள் ஞானஸ்நானம் பெறுவதற்கு முன்பு யூத முறைமைப்படி விருத்தசேதனம் செய்துகொள்ள வேண்டுமா என்ற கேள்வி எழுந்தது. யூதர்களுக்கு இது மிகச் சிக்கலான ஒரு கேள்வியாக இருந்தது. ஏனென்றால், திருச்சட்டத்தைக் கடைப்பிடித்துவந்த அவர்கள் புறதேசத்தாரின் வீட்டிற்குள்கூட போக மாட்டார்கள்; அப்படியிருக்கும்போது, புறதேசத்தாரைச் சகோதரர்களாக ஏற்றுக்கொள்ளும் பேச்சிற்கே இடமில்லை. அதோடு, யூத மதத்தைவிட்டுக் கிறிஸ்தவர்களாக மாறியவர்கள் ஏற்கெனவே அதற்காகக் கடுமையாய்த் துன்புறுத்தப்பட்டு வந்தார்கள். இப்படிப்பட்ட நிலையில், விருத்தசேதனம் செய்யப்படாத புறதேசத்தாரை அந்தக் கிறிஸ்தவர்கள் தங்கள் சகோதரர்களாக ஏற்றிருந்தார்கள் என்றால், துன்புறுத்தல் இன்னும்தான் அதிகமாகியிருக்கும்; யூத மதத்தினருக்கும் கிறிஸ்தவர்களுக்கும் இடையே இன்னும்தான் விரிசல் ஏற்பட்டிருக்கும்.—கலா. 2:11-14.
4. பிரச்சினையைத் தீர்க்க யார் ஒன்றுகூடினார்கள், இது சம்பந்தமாக என்ன கேள்விகள் மற்றவர்களின் மனதில் எழும்பியிருக்கலாம்?
4 கி.பி. 49-ல், எருசலேமிலிருந்த அப்போஸ்தலர்களும் மூப்பர்களும் (இவர்கள் எல்லாரும் விருத்தசேதனம் செய்யப்பட்ட யூதர்கள்) ‘இந்த விஷயத்தைப் பற்றிக் கலந்துபேச ஒன்றுகூடினார்கள்.’ (அப். 15:6) ஆனால், அவர்கள் ஏதோ உப்புச்சப்பில்லாத விஷயங்களைப் பேசி வீண் விதண்டாவாதம் செய்யவில்லை, பைபிள் போதனைகளைப் பற்றியே உற்சாகமாகக் கலந்து பேசினார்கள். இரு சாராரும் தங்கள் கருத்துகளை வெளிப்படையாகச் சொன்னார்கள். என்றாலும், மற்றவர்களின் மனதில் இதுபோன்ற கேள்விகள் எழும்பியிருக்கலாம்: தனிப்பட்டவர்களின் விருப்புவெறுப்புகளுக்கோ இனவேறுபாடுகளுக்கோ அன்று முக்கியத்துவம் கொடுக்கப்படுமா? பொறுப்புள்ள அந்த மூப்பர்கள், இஸ்ரவேலில் மத நிலவரம் சற்று முன்னேறும்வரை தீர்மானத்தைத் தள்ளிப்போடுவார்களா? அல்லது, எப்படியாவது ஒரு தீர்மானத்திற்கு வர வேண்டும் என்பதற்காக அரைமனதோடு முடிவு எடுப்பார்களா?
5. கி.பி. 49-ல் எருசலேமில் நடந்த கூட்டத்திற்கும், பிற்காலத்தில் நடந்த சர்ச் ஆலோசனைக் கூட்டங்களுக்கும் இடையிலான முக்கிய வித்தியாசங்கள் யாவை?
5 சர்ச் ஆலோசனைக் கூட்டங்களின்போது, ஏதோவொரு தீர்மானம் எடுக்க வேண்டும் என்பதற்காகச் சில குருமார்கள் ஒரு கருத்தை அரைமனதோடு ஆதரிப்பது சகஜம்; அதேபோல், மற்றவர்களைத் தங்கள் பக்கம் சாய வைப்பதும் சகஜம். என்றாலும், அன்று எருசலேமில் நடந்த கூட்டத்தில் அப்படிப்பட்ட எதுவும் நடக்கவில்லை. சொல்லப்போனால், ஒருமனதாகத் தீர்மானம் எடுக்கப்பட்டது. அது எப்படி? ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கருத்து இருந்தபோதிலும், அனைவருமே கடவுளுடைய வார்த்தையை உயர்வாய் மதித்தார்கள்; பிரச்சினைக்குத் தீர்வுகாண அதைப் பயன்படுத்தினார்கள்.—சங்கீதம் 119:97-101-ஐ வாசியுங்கள்.
6, 7. விருத்தசேதன பிரச்சினையைத் தீர்க்க வேதவசனங்கள் எவ்வாறு பயன்படுத்தப்பட்டன?
6 ஆமோஸ் 9:11, 12-ல் உள்ள வார்த்தைகள் அந்தப் பிரச்சினையைத் தீர்க்கக் கைகொடுத்தன. அந்த வசனங்கள் அப்போஸ்தலர் 15:16, 17-ல் மேற்கோள் காட்டப்பட்டுள்ளன: “நான் மறுபடியும் வந்து, கீழே விழுந்திருக்கும் தாவீதின் கூடாரத்தைத் திரும்ப எடுத்துக் கட்டுவேன்; சேதமடைந்தவற்றைச் சரிசெய்து, அதை மீண்டும் நேராக நிறுத்துவேன்; இவர்களில் மீந்திருக்கிற ஆட்கள், என் பெயரால் அழைக்கப்படுகிற சகல தேசத்து மக்களோடும் சேர்ந்து யெகோவாவாகிய என்னை ஊக்கமாய்த் தேடுவதற்காக அப்படி நிறுத்துவேன் என்று யெகோவா சொல்கிறார்.”
7 ‘ஆனால், புறதேசத்தைச் சேர்ந்த விசுவாசிகள் விருத்தசேதனம் செய்யத் தேவையில்லையென இந்த வசனம் சொல்லவில்லையே’ எனச் சிலர் ஆட்சேபிக்கலாம். அது உண்மைதான். என்றாலும், யூதக் கிறிஸ்தவர்களுக்கு அந்த வசனங்களிலிருந்த குறிப்பு புரிந்திருக்கும். ஏனென்றால், விருத்தசேதனம் செய்யப்பட்ட புறதேசத்தாரை வேறு ‘தேசத்து மக்களாக’ அவர்கள் கருதவில்லை, சகோதரர்களாகவே கருதினார்கள். (யாத். 12:48, 49) உதாரணத்திற்கு, செப்டுவஜென்ட்டின் பாக்ஸ்டர் மொழிபெயர்ப்பில் எஸ்தர் 8:17 இவ்வாறு வாசிக்கிறது: “புறதேசத்தாரில் அநேகர் விருத்தசேதனம் செய்துகொண்டு யூதர்களாக மாறினார்கள்.” முன்பு நாம் பார்த்த வசனத்தில், “இவர்களில் மீந்திருக்கிற ஆட்கள்” எனச் சொல்லப்படுவது இஸ்ரவேலரில் மீந்திருந்த ஆட்களைக் குறிக்கிறது; யூதர்களும், விருத்தசேதனம் செய்துகொண்டு யூத மதத்திற்கு மாறியவர்களும் இவர்களில் அடங்குவார்கள்; இவர்கள் “சகல தேசத்து மக்களோடும்” சேர்ந்து, அதாவது விருத்தசேதனம் செய்யப்படாத புறதேசத்தாரோடு சேர்ந்து, கடவுளுடைய பெயரால் அழைக்கப்படுகிற மக்களாக ஆவார்கள் என வேதவசனங்கள் முன்னறிவித்தன. ஆகவே, பிரச்சினைக்கான தீர்வு வேதவசனங்களில் தெளிவாக இருந்தது. ஆம், கிறிஸ்தவர்களாக மாற விரும்பிய புறதேசத்தார் விருத்தசேதனம் செய்ய வேண்டிய தேவை இருக்கவில்லை.
8. அன்று தீர்மானம் எடுப்பதற்கும் அதை ஆதரிப்பதற்கும் யூதக் கிறிஸ்தவர்களுக்கு ஏன் தைரியம் தேவைப்பட்டது?
8 ‘ஒருமனதாகத் தீர்மானமெடுக்க’ கடவுளுடைய வார்த்தையும் அவரது சக்தியும் அந்த யூதக் கிறிஸ்தவர்களை வழிநடத்தின. (அப். 15:26) அவர்கள் எடுத்த தீர்மானத்தின் காரணமாக எல்லாச் சபைகளிலுமிருந்த யூதக் கிறிஸ்தவர்கள் இன்னுமதிக துன்புறுத்தலுக்கு ஆளாக வாய்ப்பிருந்தது; என்றாலும், பைபிளின் அடிப்படையில் எடுக்கப்பட்ட அந்தத் தீர்மானத்திற்கு உண்மையுள்ளவர்கள் முழு ஆதரவு காட்டினார்கள்.—அப். 16:4, 5.
நேர்மாறானோர்
9. உண்மை மதம் கறைபடுத்தப்பட்டதற்கான ஒரு முக்கியக் காரணம் என்ன, எந்த முக்கியக் கோட்பாடு திரித்துக் கூறப்பட்டது?
9 அப்போஸ்தலர்களின் மரணத்திற்குப் பிறகு, உண்மை மதம் பொய்ப் போதனைகளால் கறைபடுத்தப்படும் என பவுல் முன்னறிவித்தார். (2 தெசலோனிக்கேயர் 2:3, 7-ஐ வாசியுங்கள்.) பொறுப்புள்ள ஸ்தானங்களில் இருந்த சிலர்கூட “பயனளிக்கும் போதனைகளை” பொறுத்துக்கொள்ள மாட்டார்கள் எனக் குறிப்பிட்டார். (2 தீ. 4:3) அன்றிருந்த மூப்பர்களிடம், “உங்கள் மத்தியிலிருந்தே சிலர் தோன்றி சீடர்களைத் தங்கள் பக்கம் இழுத்துக்கொள்வதற்காக உண்மைகளைத் திரித்துக் கூறுவார்கள்” என அவர் எச்சரித்தார். (அப். 20:30)உண்மைகள் திரித்துக் கூறப்பட்டதற்கான ஒரு முக்கியக் காரணத்தைப் பற்றி த நியூ என்ஸைக்ளோப்பீடியா பிரிட்டானிக்கா இவ்வாறு விவரிக்கிறது: “கிரேக்க தத்துவங்களைப் பயின்றிருந்த கிறிஸ்தவர்கள் சிலர் அந்தத் தத்துவங்களின் அடிப்படையில் தங்கள் மத நம்பிக்கைகளை விளக்க ஆரம்பித்தார்கள்; அதனால், தங்கள் அறிவை நினைத்துப் பெருமிதப்பட்டார்கள். அதோடு, கல்வி பயின்ற புறதேசத்தாரைக் கிறிஸ்தவர்களாக மாற்ற அது உதவியாக இருக்குமென நினைத்தார்கள்.” அவர்கள் திரித்துக் கூறிய ஒரு முக்கியக் கோட்பாடு, இயேசு கிறிஸ்து சம்பந்தப்பட்டதாகும். பைபிள் அவரைக் கடவுளுடைய மகன் எனக் குறிப்பிடுகிறது; கிரேக்க தத்துவத்தை விரும்பியவர்களோ அவர் கடவுள் என்று அடித்துச் சொன்னார்கள்.
10. கிறிஸ்து உண்மையில் யார் என்ற விவாதத்திற்கு எவ்வாறு தீர்வு கண்டிருக்க முடியும்?
10 சர்ச் ஆலோசனைக் கூட்டங்கள் பலவற்றில் இந்த விஷயம் விவாதிக்கப்பட்டது. அங்கு கூடியவர்கள் வேதவசனங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்திருந்தால் பிரச்சினைக்கு எளிதில் தீர்வு கண்டிருக்க முடியும். ஆனால், பெரும்பாலோர் அப்படிச் செய்யவில்லை; சொல்லப்போனால், ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்கு முன்பாகவே ஒரு முடிவை எடுத்திருந்தார்கள்; தாங்கள் பிடித்த முயலுக்கு மூன்றே கால் என்றிருந்தார்கள். இந்தக் கூட்டங்களில் எடுக்கப்பட்ட தீர்மானங்களில் வேதவசனங்களைப் பற்றி எதுவுமே குறிப்பிடப்படவில்லை.
11. திருச்சபைத் தந்தைகள் என அழைக்கப்படுவோரின் கருத்துகளுக்கு எந்தளவு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது, ஏன்?
11 ஏன் வேதவசனங்கள் அலசி ஆராயப்படவில்லை? அறிஞர் சார்ல்ஸ் ஃப்ரீமான் இவ்வாறு பதிலளிக்கிறார்: இயேசுதான் கடவுள் என்று நம்பியவர்களால், “தகப்பனாகிய கடவுளுக்குத் தாம் கீழ்ப்பட்டவர் என இயேசுவே பல முறை சொன்னதை மறுத்துப் பேச முடியவில்லை.” ஆகவே, சுவிசேஷங்களுக்குப் பதிலாக சர்ச்சின் பாரம்பரியங்களும் மனித கருத்துகளும் ஏற்றுக்கொள்ளப்பட்டன. இன்றுவரை, குருமார்களில் பலர் திருச்சபைத் தந்தைகள் என அழைக்கப்படுவோரின் கருத்துகளைத்தான் கடவுளுடைய வார்த்தைக்கும் மேலாக மதிக்கிறார்கள்! இறையியல் படிப்பவரிடம் திருத்துவக் கோட்பாட்டைப் பற்றி எப்போதாவது பேசியிருந்தீர்கள் என்றால், நீங்களே இதைக் கவனித்திருப்பீர்கள்.
12. பேரரசர் எந்தளவு செல்வாக்கு செலுத்தினார்?
12 ஆலோசனைக் கூட்டங்களில் நடந்த விவாதங்களில் ரோமப் பேரரசர்கள் பெரும் செல்வாக்கு செலுத்தினார்கள். உதாரணத்திற்கு, நைசியாவில் நடந்த ஆலோசனைக் கூட்டம் சம்பந்தமாகப் பேராசிரியர் ரிச்சர்ட் ஈ. ரூபன்ஸ்டைன் இவ்வாறு எழுதினார்: “கனவிலும் நினைத்துப் பார்த்திராத அளவுக்கு [பிஷப்புகளை] செல்வச்செழிப்பில் மிதக்க வைத்திருந்தார் கான்ஸ்டன்டைன். இந்தப் புதிய பேரரசர் ஒரே வருடத்திற்குள் அவர்களுடைய சர்ச்சுகள் எல்லாவற்றையும் திருப்பிக் கொடுத்திருந்தார் அல்லது மறுபடியும் கட்டிக் கொடுத்திருந்தார்; அதோடு, அவர்களிடமிருந்து பறிக்கப்பட்டிருந்த பதவிகளையும் பட்டங்களையும் திருப்பிக் கொடுத்திருந்தார். . . . புறமத பூசாரிகளுக்குக் கொடுக்கப்பட்டிருந்த சலுகைகளைக் கிறிஸ்தவக் குருமாருக்கு மாற்றிக் கொடுத்திருந்தார்.” இதன் காரணமாக, “நைசியாவில் நடந்த விவாதங்களில் கான்ஸ்டன்டைனின் குரலே ஓங்கியிருந்தது; சொல்லப்போனால், அவரே தீர்மானங்களை எடுத்தார் அல்லது மாற்றினார்.” இதை சார்ல்ஸ் ஃப்ரீமான் இவ்வாறு உறுதிப்படுத்தினார்: “பேரரசர் இனிமேல் சர்ச்சுக்குக் கூடுதல் அதிகாரம் வழங்குவதோடு அதன் கோட்பாடுகளைப் பற்றிய விவாதங்களில் தலையிடவும் முடியும் என்பதற்கு அந்தக் கூட்டம் ஒரு முன்னோடியாக அமைந்தது.”—யாக்கோபு 4:4-ஐ வாசியுங்கள்.
13. பைபிளிலுள்ள தெளிவான போதனைகளை சர்ச் குருமார் ஏன் ஏற்றுக்கொள்ளவில்லை?
13 இயேசு கிறிஸ்து உண்மையில் யார் என்பதைத் தீர்மானிப்பது சர்ச் குருமாருக்குத்தான் சிரமமாக இருந்ததே தவிர, பொது மக்களுக்குச் சிரமமாக இருக்கவில்லை. இவர்கள் பேரரசரிடமிருந்து பொன்னையும் பொருளையும் எதிர்பார்க்கவில்லை, சர்ச்சில் உயர் பதவியை நாடவில்லை; ஆகவே, இவர்களால் வேதவசனங்களிலுள்ள உண்மைகளைப் பரந்த கண்ணோட்டத்துடன் அலசி ஆராய முடிந்தது. அப்படித்தான் செய்தார்கள். அக்காலத்து இறையியல் வல்லுநரும் நைசாவைச் சேர்ந்தவருமான கிரெகரி பொது மக்களைப் பற்றி ஏளனமாகக் குறிப்பிட்டார்; துணி வியாபாரிகளும் காசு மாற்றுகிறவர்களும் மளிகைக் கடைக்காரர்களும் வேலைக்காரர்களும் மத விஷயங்களைப் பற்றிப் பேசியதைக் கிண்டல் செய்தார்; குமாரனும் தகப்பனும் வேறு வேறு, குமாரனைவிடத் தகப்பன் பெரியவர், குமாரன் படைக்கப்பட்டவர் என்றெல்லாம் பொது மக்கள் பேசியதை அவர் விரும்பவில்லை. ஆம், பொது மக்களில் அநேகர் இப்படிப்பட்ட சத்தியங்களை பைபிளிலிருந்து விளக்கினார்கள். இதைத்தான் கிரெகரியும் சர்ச் குருமாரும் செய்யத் தவறிவிட்டார்கள். அவர்கள் பொது மக்களின் பேச்சைக் கேட்டிருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்!
‘கோதுமையும்,’ ‘களைகளும்’ சேர்ந்து வளர்கின்றன
14. பரலோக நம்பிக்கையுள்ள உண்மைக் கிறிஸ்தவர்களில் சிலர் முதல் நூற்றாண்டு முதற்கொண்டு இந்தப் பூமியில் இருந்து வந்திருக்கிறார்கள் என எப்படித் தெரிந்துகொள்கிறோம்?
14 பரலோக நம்பிக்கையுள்ள உண்மைக் கிறிஸ்தவர்களில் சிலர் முதல் நூற்றாண்டு முதற்கொண்டு இந்தப் பூமியில் இருந்து வருவார்கள் என இயேசு ஓர் உவமையில் சுட்டிக்காட்டினார். ‘களைகளுக்கு’ நடுவே உள்ள ‘கோதுமைக்கு’ அவர்களை அவர் ஒப்பிட்டார். (மத். 13:30) யார் அல்லது எந்தத் தொகுதியினர் பரலோக நம்பிக்கையுள்ளவர்களாக இருந்தார்கள் என நம்மால் உறுதியாகச் சொல்ல முடியாதுதான்; ஆனால், கடவுளுடைய வார்த்தையைத் தைரியமாக ஆதரித்துப் பேசி சர்ச்சின் வேதப்பூர்வமற்ற போதனைகளை அம்பலமாக்கிய சிலர் எல்லாக் காலத்திலுமே இருந்து வந்திருக்கிறார்கள். ஒருசில உதாரணங்களைப் பார்க்கலாம்.
15, 16. ஆரம்ப காலத்தில் பைபிளுக்கு மதிப்புக் கொடுத்த சிலர் யாவர்?
15 சிலை வழிபாடு செய்வது, புனிதர்களுக்கு சர்ச்சுகளை அர்ப்பணிப்பது, பைபிளுக்கு முரணான சடங்குகளையும் பழக்கவழக்கங்களையும் சர்ச்சுகள் கடைப்பிடிப்பது ஆகியவற்றை பிரான்சிலுள்ள லயான்ஸைச் சேர்ந்த தலைமை பிஷப் அகோபார்ட் (கி.பி. 779-840) கண்டனம் செய்தார். அவரது காலத்தைச் சேர்ந்த பிஷப் கிளாடியஸும் சர்ச்சின் பாரம்பரியத்தை நிராகரித்தார்; புனிதர்களிடம் ஜெபம் செய்வதையும் புனிதப் பொருள்களைப் பூஜிப்பதையும் எதிர்த்தார். 11-வது நூற்றாண்டில், பிரான்சிலுள்ள டூர்ஸைச் சேர்ந்த உதவி குரு பெரென்காரியஸ், அப்பமும் திராட்சமதுவும் கிறிஸ்துவின் உடலாகவும் இரத்தமாகவும் மாறுகிறதென்ற கத்தோலிக்கப் போதனையை நிராகரித்ததால் திருச்சபையிலிருந்து விலக்கப்பட்டார். சர்ச்சின் பாரம்பரியத்தைவிட பைபிளே உயர்ந்தது என இவர் நம்பினார்.
16 பன்னிரண்டாம் நூற்றாண்டில் பைபிள் சத்தியத்தை நேசித்த இருவர் புரூஸைச் சேர்ந்த பீட்டரும், லோஸானைச் சேர்ந்த ஹென்றியும் ஆவர். குழந்தை ஞானஸ்நானம், அப்பமும் திராட்சமதுவும் கிறிஸ்துவின் உடலாகவும் இரத்தமாகவும் மாறுகிறதென்ற கோட்பாடு, இறந்தவர்களுக்காக ஜெபம் செய்வது, சிலுவை வழிபாடு ஆகியவை பைபிளுக்கு முரணாக இருப்பதை பீட்டர் உணர்ந்தார்; ஆகவே, குருமார் பதவியை ராஜினாமா செய்தார். 1140-ல், அவர் தன் மத நம்பிக்கைகளுக்காக உயிர்த்தியாகம் செய்தார். துறவியாக இருந்த ஹென்றி, சர்ச்சில் நடந்த மோசமான காரியங்களுக்கும் பைபிளுக்கு முரணான சடங்காச்சாரங்களுக்கும் எதிராகப் பேசினார். அதனால், 1148-ல் கைது செய்யப்பட்டார், மீதமுள்ள வாழ்வைச் சிறையிலேயே கழித்தார்.
17. வால்டோவும் அவரைப் பின்பற்றியவர்களும் என்ன முக்கியமான காரியங்களைச் செய்தார்கள்?
17 சர்ச்சைக் கண்டித்துத் துணிவுடன் பேசியதற்காக புரூஸைச் சேர்ந்த பீட்டர் உயிருடன் எரிக்கப்பட்ட காலக்கட்டத்தில், இன்னொருவர் பிறந்தார்; அவர்தான் பிற்பாடு பைபிள் சத்தியத்தைப் பரப்புவதில் பெரும் பங்காற்றினார். அவரது கடைசி பெயர், வால்டெஸ், அல்லது வால்டோ. * இவர் புரூஸைச் சேர்ந்த பீட்டரையும், லோஸானைச் சேர்ந்த ஹென்றியையும் போல் படித்தவர் அல்ல, ஒரு பாமரர். ஆனாலும், கடவுளுடைய வார்த்தையை உயர்வாய் மதித்தார்; அதனால், தன்னுடைய சொத்தையெல்லாம் துறந்து, தென்கிழக்கு பிரான்சில் பொதுவாகப் பேசப்பட்ட ஒரு மொழியில் பைபிளின் சில பகுதிகளை மொழிபெயர்க்க ஏற்பாடு செய்தார். பைபிள் செய்தியைத் தங்கள் தாய்மொழியிலேயே கேட்டுப் பூரித்துப்போன வேறு சிலரும் தங்கள் சொத்துபத்துக்களையெல்லாம் தானம் செய்துவிட்டு, அச்செய்தியை மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ள தங்கள் வாழ்வை அர்ப்பணித்தார்கள். இதைக் கண்டு சர்ச் கொதித்தெழுந்தது. 1184-ல், வைராக்கியமிக்க இந்த ஆண்களையும் பெண்களையும் திருச்சபையிலிருந்து போப் விலக்கினார்; வால்டென்ஸ்கள் எனப் பிற்பாடு அழைக்கப்பட்ட அந்த நபர்களை பிஷப் நாடுகடத்தினார். ஆனால் அது, மற்ற பகுதிகளிலும் பைபிள் செய்தி பரவுவதற்குக் காரணமானது. இறுதியில், வால்டோ, புரூஸைச் சேர்ந்த பீட்டர், லோஸானைச் சேர்ந்த ஹென்றி ஆகியோரைப் பின்பற்றியவர்களும் சர்ச்சை எதிர்த்த மற்றவர்களும் ஐரோப்பாவின் பல பகுதிகளில் இருந்தார்கள். அதற்குப் பின்வந்த நூற்றாண்டுகளில், ஜான் வைக்ளிஃப் (சுமார் 1330-1384), வில்லியம் டின்டேல் (சுமார் 1494-1536), ஹென்றி க்ரூ (1781-1862), ஜார்ஜ் ஸ்டார்ஸ் (1796-1879) ஆகியோரும் பைபிள் சத்தியத்தை ஆதரித்தார்கள்.
“கடவுளுடைய வார்த்தைக்கு விலங்கிட முடியாது”
18. 19-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பைபிள் மாணாக்கர்கள் எப்படி பைபிளைப் படித்தார்கள், அது ஏன் சிறந்த பலன் தந்தது?
18 எதிரிகள் எவ்வளவுதான் முயன்றபோதிலும் பைபிள் சத்தியம் பரவுவதை அவர்களால் தடுக்க முடியவில்லை. “கடவுளுடைய வார்த்தைக்கு விலங்கிட முடியாது” என 2 தீமோத்தேயு 2:9 சொல்கிறது. 1870-ல், நேர்மை மனம்படைத்த பைபிள் மாணாக்கர்கள் சத்தியத்தைத் தேட ஆரம்பித்தார்கள். அவர்கள் எப்படி ஆராய்ந்து படித்தார்கள்? அவர்களில் ஒருவர் ஏதாவது கேள்வி கேட்பார். பின்பு எல்லாரும் அதைப் பற்றிக் கலந்து பேசுவார்கள். அது சம்பந்தப்பட்ட எல்லா வசனங்களையும் எடுத்துப் பார்ப்பார்கள். எல்லா வசனங்களும் ஒத்துப்போவதை உறுதி செய்துகொண்ட பிறகு, ஒரு முடிவெடுத்து, அதை எழுத்தில் பதிவு செய்து வைப்பார்கள். 1800-களின் பிற்பகுதியில் வாழ்ந்த நம் “ஆன்மீக மூதாதையரான” அந்த பைபிள் மாணாக்கர்கள், முதல் நூற்றாண்டைச் சேர்ந்த அப்போஸ்தலர்களையும் மூப்பர்களையும் போலவே நடந்துகொண்டார்கள்; ஆம், தங்கள் நம்பிக்கைகள் கடவுளுடைய வார்த்தையில் உறுதியாக வேரூன்றியிருக்கும்படி பார்த்துக்கொண்டார்கள்; இதை அறிவது உங்களுக்கு நம்பிக்கையூட்டுகிறது, அல்லவா?
19. இந்த ஆண்டிற்கான வருடாந்தர வசனம் என்ன, அது ஏன் பொருத்தமானது?
19 இன்றும் நம் நம்பிக்கைகளுக்கு அஸ்திபாரமாக விளங்குவது பைபிளே. இதை மனதில் வைத்துத்தான், யெகோவாவின் சாட்சிகளுடைய ஆளும் குழுவினர் 2012-ஆம் ஆண்டிற்கான வருடாந்தர வசனத்தைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்; “உங்களுடைய வார்த்தையே சத்தியம்” என்று இயேசு நம்பிக்கையுடன் கூறிய வார்த்தைகளே அந்த வசனம். (யோவா. 17:17) கடவுளுடைய அங்கீகாரத்தைப் பெற விரும்புகிற ஒவ்வொருவரும் சத்தியத்தில் நடக்க வேண்டும்; ஆகவே, நாம் அனைவரும் தொடர்ந்து கடவுளுடைய வார்த்தையின் வழிநடத்துதலைப் பெற முயலுவோமாக!
[அடிக்குறிப்பு]
^ பாரா. 17 வால்டெஸ் சிலசமயங்களில் பியர் வால்டெஸ் என்றோ பீட்டர் வால்டோ என்றோ அழைக்கப்பட்டிருக்கிறார், ஆனால் அவரது முதல் பெயர் திட்டவட்டமாகத் தெரியவில்லை.
[கேள்விகள்]
[பக்கம் 8-ன் சிறு குறிப்பு]
2012-ன் வருடாந்தர வசனம்: “உங்களுடைய வார்த்தையே சத்தியம்.”—யோவா. 17:17
[பக்கம் 7-ன் படம்]
வால்டோ
[பக்கம் 7-ன் படம்]
வைக்ளிஃப்
[பக்கம் 7-ன் படம்]
டின்டேல்
[பக்கம் 7-ன் படம்]
க்ரூ
[பக்கம் 7-ன் படம்]
ஸ்டார்ஸ்