‘சத்தியத்தைப் பற்றிய முக்கிய அம்சங்களிலிருந்து’ கற்றுக்கொள்ளுங்கள்
‘அறிவையும் சத்தியத்தையும் பற்றிய முக்கிய அம்சங்களைத் திருச்சட்டத்திலிருந்து தெரிந்தவர்களாக இருக்கிறீர்கள்.’ —ரோ. 2:20.
1. திருச்சட்டத்தின் முக்கியத்துவத்தை நாம் புரிந்துகொள்வது ஏன் அவசியம்?
திருச்சட்டத்தின் பல்வேறு அம்சங்களுடைய முக்கியத்துவத்தைப் பற்றி அப்போஸ்தலன் பவுல் எழுதினார்; அப்படி அவர் எழுதியிருக்காவிட்டால் அவற்றைப் புரிந்துகொள்வது நமக்குக் கஷ்டமாக இருந்திருக்கும். உதாரணமாக, ‘உண்மை உள்ள தலைமைக் குருவாகிய’ இயேசு எவ்வாறு எல்லாக் காலத்திற்கும் ஒரே முறையாக “பிராயச்சித்த பலி” செலுத்தினார் என்பதை எபிரெயர்களுக்கு எழுதிய கடிதத்தில் பவுல் விளக்கினார்; அந்தப் பலியில் விசுவாசம் வைப்பவர்களுக்கு “நிரந்தர விடுதலையை” இயேசு பெற்றுத் தந்திருக்கிறார் என்பதையும் விளக்கினார். (எபி. 2:17; 9:11, 12) அன்றிருந்த ஆசரிப்புக் கூடாரம் ‘பரலோகக் காரியங்களின் நிழலாக’ மட்டுமே இருந்தது என அவர் விவரித்தார்; அதோடு, மோசேயின் மூலம் செய்யப்பட்ட ஒப்பந்தத்தைவிட “மேலான ஓர் ஒப்பந்தத்திற்கு” இயேசு மத்தியஸ்தராக ஆனார் எனவும் விவரித்தார். (எபி. 7:22; 8:1-5) பவுலுடைய காலத்தில், திருச்சட்டத்தைப் பற்றிய இப்படிப்பட்ட விளக்கங்கள் கிறிஸ்தவர்களுக்கு அத்தியாவசியமாக இருந்தன, இன்றும் அவ்வாறே இருக்கின்றன. கடவுள் நமக்காகச் செய்திருக்கும் ஏற்பாடுகளின் மதிப்பை இன்னும் முழுமையாகப் புரிந்துகொள்ள அவை உதவுகின்றன.
2. புறதேசத்தாருக்கு இல்லாத என்ன பாக்கியத்தை யூதக் கிறிஸ்தவர்கள் பெற்றிருந்தார்கள்?
2 ரோமாபுரியிலிருந்த சபைக்கு பவுல் கடிதம் எழுதியபோது, திருச்சட்டத்தைக் கற்றிருந்த யூதக் கிறிஸ்தவர்களிடம் சில விஷயங்களைக் குறிப்பிட்டார். திருச்சட்டத்தை அவர்கள் நன்கு அறிந்திருந்ததால், “அறிவையும் சத்தியத்தையும் பற்றிய முக்கிய அம்சங்களை”... அதாவது யெகோவாவையும் அவரது நீதியான நியமங்களையும் பற்றிய முக்கிய அம்சங்களை... தெரிந்திருக்கும் பாக்கியத்தைப் பெற்றிருந்தார்கள் என அவர் சொன்னார். யூதக் கிறிஸ்தவர்கள் திருச்சட்டத்தின் அடிப்படைச் சத்தியங்களைப் புரிந்துகொண்டு மனதார மதித்தார்கள்; அதனால், முன்பு வாழ்ந்த உண்மையுள்ள யூதர்களைப் போலவே யெகோவாவைப் பற்றிய அந்தச் சத்தியங்களை மற்றவர்களுக்குப் போதித்தார்கள்.—ரோமர் 2:17-20-ஐ வாசியுங்கள்.
இயேசுவின் பலிக்கு நிழலாக இருந்த பலிகள்
3. பூர்வகால யூதர்கள் செலுத்திய பலிகளைப் பற்றி ஆராய்வது நமக்கு எவ்வாறு பயனளிக்கும்?
3 பவுல் குறிப்பிட்ட சத்தியத்தைப் பற்றிய முக்கிய அம்சங்கள், அதாவது திருச்சட்டத்தின் அடிப்படைச் சத்தியங்கள், யெகோவாவின் நோக்கங்களைப் புரிந்துகொள்ள இன்றுகூட பெரிதும் கைகொடுக்கின்றன. திருச்சட்டத்திற்கு அடிப்படையாக அமைந்த நியமங்கள் எவ்விதத்திலும் மதிப்பையோ முக்கியத்துவத்தையோ இழக்கவில்லை. இதை மனதில் வைத்து, திருச்சட்டத்தின்படி செலுத்த வேண்டியிருந்த பலிகளையும் காணிக்கைகளையும் பற்றி இப்போது கவனிக்கலாம்; அவை எவ்வாறு மனத்தாழ்மையுள்ள யூதர்களைக் கிறிஸ்துவிடம் வழிநடத்தின என்பதை... கடவுள் எதிர்பார்த்தவற்றைப் புரிந்துகொள்ள அவர்களுக்கு உதவின என்பதை... கவனிப்போம். யெகோவா தம் ஊழியர்களிடம் எதிர்பார்க்கும் அடிப்படைக் காரியங்கள் ஒருபோதும் மாறுவதில்லை; ஆகவே, பலிகள் மற்றும் காணிக்கைகள் சம்பந்தமாக இஸ்ரவேலருக்குக் கொடுக்கப்பட்ட சட்டதிட்டங்கள் நம்முடைய பரிசுத்த சேவையின் தரத்தைச் சீர்தூக்கிப் பார்க்க நமக்கு எவ்வாறு உதவும் என்பதையும் கவனிப்போம்.—மல். 3:6.
4, 5. (அ) திருச்சட்டம் யூதர்களுக்கு எதை நினைப்பூட்டியது? (ஆ) பலிகள் எதற்கு நிழலாக இருந்தன?
4 திருச்சட்டத்தின் பல்வேறு அம்சங்கள், தாங்கள் பாவிகள் என்பதை யூதர்களுக்கு நினைப்பூட்டின. உதாரணத்திற்கு, மனித சடலத்தைத் தொட்ட எவரும் தூய்மைச் சடங்கு செய்ய வேண்டியிருந்தது. இதற்காக, பழுதற்ற சிவப்பான ஒரு பசுவைக் கொன்று நெருப்பில் சுட்டெரிக்க வேண்டியிருந்தது. அதன் சாம்பல், ‘தீட்டுக்கழிக்கும் ஜலத்தை’ தயாரிக்கப் பயன்படுத்தப்பட்டது; தீட்டுப்பட்ட ஒருவரைச் சுத்திகரிக்க, மூன்றாம் நாளிலும் ஏழாம் நாளிலும் அந்த ஜலம் அவர்மேல் தெளிக்கப்பட்டது. (எண். 19:1-13) குழந்தை பெற்ற பெண்கள் குறிப்பிட்ட காலத்திற்குத் தீட்டாயிருந்து, அதன்பின் பாவ நிவிர்த்திக்காகப் பலி செலுத்த வேண்டியிருந்தது; குழந்தை பிறக்கும்போது அபூரணமும் பாவமும் கடத்தப்படுகிறது என்பதை நினைப்பூட்டுவதற்காக இச்சட்டம் கொடுக்கப்பட்டது.—லேவி. 12:1-8.
5 வேறு பல சூழ்நிலைகளிலும் பாவங்களுக்கு நிவாரணமாக மிருக பலிகளை யூதர்கள் செலுத்த வேண்டியிருந்தது. அவர்களுக்குப் புரிந்ததோ இல்லையோ, அந்தப் பலிகளும் பிற்பாடு யெகோவாவின் ஆலயத்தில் செலுத்தப்பட்ட பலிகளும், இயேசுவின் பரிபூரண பலிக்கு ‘நிழலாக’ இருந்தன.—எபி. 10:1-10.
பலி செலுத்துவோரின் மனநிலை
6, 7. (அ) இஸ்ரவேலர் எதைக் கவனத்தில் வைத்து பலிகள் செலுத்த வேண்டியிருந்தது, அது எதைப் படம்பிடித்துக் காட்டியது? (ஆ) நாம் என்ன கேள்விகளைக் கேட்டுக்கொள்ள வேண்டும்?
6 பலி செலுத்தப்படும் மிருகங்கள் எவ்வித “பழுதுமில்லாமல்” இருக்க வேண்டும் என யெகோவா கட்டளையிட்டிருந்தார்; ஆகவே, குருடான, முடமான, காயப்பட்ட, நோயுற்ற மிருகங்களை நிராகரித்தார். (லேவி. 22:20-22) இஸ்ரவேலர் பழங்களையோ தானியங்களையோகூட யெகோவாவுக்குக் காணிக்கையாகச் செலுத்தினார்கள்; ஆனால், அவை அவர்களுடைய விளைச்சலில் ‘முதற்பலன்களாக,’ மிகச் சிறந்தவையாக இருக்க வேண்டியிருந்தது. (எண். 18:12, 29) தரம் குறைந்த காணிக்கைகளை யெகோவா ஏற்றுக்கொள்ளவில்லை. மிருக பலிகள் சம்பந்தமாகக் கொடுக்கப்பட்டிருந்த முக்கியக் கட்டளை எதைப் படம்பிடித்துக் காட்டியது? இயேசுவின் பலி மாசற்ற, களங்கமற்ற பலியாக இருக்கும் என்பதைப் படம்பிடித்துக் காட்டியது; அதோடு, மனிதர்களை மீட்க யெகோவா மிகச் சிறந்ததை, தம் உயிருக்கு உயிரானதைப் பலியாகக் கொடுப்பார் என்பதைப் படம்பிடித்துக் காட்டியது.—1 பே. 1:18, 19.
7 யெகோவா வழங்கிய எல்லா நன்மைகளுக்காகவும் ஒருவர் உண்மையிலேயே நன்றியுடன் இருந்திருந்தால், தன்னிடம் உள்ள மிகச் சிறந்ததை அவருக்குச் சந்தோஷமாக அளித்திருப்பார், அல்லவா? எந்தளவு சிறந்த பலி செலுத்துவது என்பது அவரவர் கையில் விடப்பட்டது. என்றாலும், பழுதுள்ள பலியைக் கடவுள் ஏற்றுக்கொள்ள மாட்டார் என்பதை எல்லாரும் அறிந்திருந்தார்கள்; ஆகவே, ஒருவர் பழுதுள்ள பலி செலுத்தியபோது, வெறும் கடமைக்குச் செலுத்தியதைத்தானே காட்டினார்? அதைப் பெரும் சுமையாக நினைத்துச் செலுத்தியதைத்தானே காட்டினார்? (மல்கியா 1:6-8, 13-ஐ வாசியுங்கள்.) இது, நம்முடைய சேவையைப் பற்றி இவ்வாறு கேட்டுக்கொள்ளத் தூண்ட வேண்டும்: ‘நான் எதற்காக யெகோவாவைச் சேவிக்கிறேன்? நான் ஏதாவது மாற்றங்கள் செய்ய வேண்டுமா? என்னிடமுள்ள மிகச் சிறந்ததை அவருக்குக் கொடுக்கிறேனா?’
8, 9. இஸ்ரவேலர் என்ன மனநிலையோடு பலிகள் செலுத்தினார்கள் என்பதை நாம் ஏன் சிந்தித்துப் பார்க்க வேண்டும்?
8 ஓர் இஸ்ரவேலர் யெகோவாவுக்கு நன்றி தெரிவிக்க மனப்பூர்வமாகப் பலி செலுத்தியிருந்தால் (அல்லது, யெகோவாவின் அங்கீகாரத்தைப் பெற மனப்பூர்வமாகத் தகனபலி செலுத்தியிருந்தால்) பழுதற்ற மிருகத்தைத் தேர்ந்தெடுப்பது அவருக்கு ஒரு பிரச்சினையாகவே இருந்திருக்காது. மிகச் சிறந்ததை யெகோவாவுக்குக் கொடுப்பதில் அவர் சந்தோஷம்தான் கண்டிருப்பார். இன்று கிறிஸ்தவர்கள் திருச்சட்டத்தின்படி பலிகளைச் செலுத்துவதில்லை என்றாலும் வேறு விதமான பலிகளைச் செலுத்துகிறார்கள்; ஆம், தங்கள் நேரம், சக்தி, பணம், பொருள் ஆகியவற்றை யெகோவாவின் சேவைக்காக அர்ப்பணிக்கிறார்கள். நம் நம்பிக்கையை ‘எல்லாருக்கும் அறிவிப்பதும்,’ ‘நன்மை செய்வதும், நம்மிடம் இருப்பதை மற்றவர்களோடு பகிர்ந்துகொள்வதும்’ கடவுளுக்குப் பிரியமான பலிகள் என அப்போஸ்தலன் பவுல் குறிப்பிட்டார். (எபி. 13:15, 16) இவற்றை நாம் என்ன மனநிலையோடு செய்கிறோம் என்பது, யெகோவா நமக்கு வழங்கியிருக்கும் எல்லாவற்றுக்காகவும் எந்தளவு நன்றியுடன் இருக்கிறோம் என்பதைக் காட்டுகிறது. ஆகவே, இஸ்ரவேலரைப் போலவே நாமும் என்ன மனநிலையோடும் உள்நோக்கத்தோடும் யெகோவாவைச் சேவிக்கிறோம் என்பதைச் சீர்தூக்கிப் பார்ப்பது அவசியம்.
9 சில சந்தர்ப்பங்களில், ஓர் இஸ்ரவேலர் ஏதோவொரு பாவம் செய்துவிட்டால் பாவ நிவாரண பலியையோ குற்ற நிவாரண பலியையோ செலுத்தும்படி திருச்சட்டம் கட்டளையிட்டது. அப்படிக் கட்டளையிடப்பட்டதால் அந்தப் பலியை மனப்பூர்வமாகச் செலுத்துவது அவருக்குக் கஷ்டமாக இருந்திருக்குமா? அதை வேண்டாவெறுப்போடு செலுத்தியிருப்பாரா? (லேவி. 4:27, 28) யெகோவாவுடன் நல்லுறவைக் காத்துக்கொள்ள மனமார விரும்பியிருந்தார் என்றால் நிச்சயம் வேண்டாவெறுப்போடு செலுத்தியிருக்க மாட்டார்.
10. உறவுகளில் ஏற்படும் விரிசலைச் சரிசெய்ய கிறிஸ்தவர்கள் என்ன “பலியை” செலுத்த வேண்டும்?
10 அதேபோல் இன்று, யோசிக்காமலோ அறியாமலோ கவனமில்லாமலோ ஒரு சகோதரரின் மனதை நீங்கள் புண்படுத்தியிருக்கலாம். நீங்கள் ஏதோ தவறு செய்துவிட்டதாக உங்கள் மனசாட்சி சொல்லலாம். யெகோவாவின் சேவையை முக்கியமாகக் கருதும் எவரும் அதைச் சரிசெய்ய முழுமுயற்சி எடுப்பார், அல்லவா? ஆம், மனம் புண்பட்டவரிடம் போய் உள்ளப்பூர்வமான மன்னிப்பைக் கேட்பார் அல்லது பெரிய குற்றத்தைச் செய்திருந்தால் அன்பான கிறிஸ்தவக் கண்காணிகளின் உதவியை நாடுவார், அல்லவா? (மத். 5:23, 24; யாக். ) ஆகவே, ஒரு சகோதரருக்கு எதிராக அல்லது கடவுளுக்கு எதிராகச் செய்த பாவத்தைச் சரிசெய்ய நம் பங்கில் முயற்சி தேவை; நாம் முயற்சி எடுப்பது பலி செலுத்துவதைப் போன்றது. அப்படிப்பட்ட “பலியை” நாம் செலுத்தும்போது யெகோவாவிடமும் நம் சகோதரரிடமும் மறுபடியுமாக நல்லுறவைப் பெறுகிறோம், அதோடு சுத்தமான மனசாட்சியையும் பெறுகிறோம். இது, யெகோவாவின் வழியே சிறந்த வழி என்பதை நம் மனதில் ஆணித்தரமாகப் பதிய வைக்கிறது. 5:14, 15
11, 12. (அ) சமாதான பலிகள் என்றால் என்ன? (ஆ) சமாதான பலிகள் எதைச் சுட்டிக்காட்டின?
11 திருச்சட்டத்தில் கட்டளையிடப்பட்ட சில பலிகள் சமாதான பலிகளாகக் கருதப்பட்டன. இவை, யெகோவாவுடன் சமாதானமாக இருப்பதைக் குறித்தன. சமாதான பலி செலுத்தியவரும் அவரது குடும்பத்தாரும், அதன் இறைச்சியைப் புசித்தார்கள்; ஒருவேளை, ஆலயத்தின் சாப்பாட்டு அறைகள் ஒன்றில் அதைப் புசித்திருக்கலாம். பலி செலுத்திய குருவும் ஆலயத்தில் சேவை செய்த மற்ற குருமாரும் அந்த இறைச்சியில் ஒரு பங்கைப் பெற்றார்கள். (லேவி. 3:1; 7:31-33) கடவுளுடன் நல்லுறவை அனுபவிக்க வேண்டும் என்ற ஒரே ஆசையால்தான் ஒருவர் அந்தப் பலியைச் செலுத்தினார். அவரும், அவரது குடும்பத்தாரும், குருமாரும், யெகோவாவும்கூட ஒன்றுசேர்ந்து சந்தோஷத்தோடும் சமாதானத்தோடும் உணவு அருந்துவதுபோல் அது இருந்தது.
12 ஆகவே, சமாதான பலி செலுத்துவது, யெகோவாவை விருந்துக்கு அழைப்பதுபோல் இருந்தது; ஓர் இஸ்ரவேலரின் அழைப்பை யெகோவா ஏற்றுக்கொண்டது எப்பேர்ப்பட்ட பாக்கியம்! அந்த இஸ்ரவேலர் இப்படிப்பட்ட கௌரவமிக்க விருந்தினருக்குச் சிறந்ததிலும் சிறந்ததையே அளிக்க விரும்புவார், அல்லவா? திருச்சட்டத்தின் முக்கிய அம்சங்களில் ஒன்றான சமாதான பலிகள் ஒரு விஷயத்தைச் சுட்டிக்காட்டின; அதாவது, கடவுளுடன் சமாதானத்தையும் நெருங்கிய உறவையும் அனுபவிக்க விரும்புகிற அனைவரும் இயேசுவுடைய மேலான பலியின் மூலம் அதை அனுபவிக்கலாம் என்ற உண்மையைச் சுட்டிக்காட்டின. இன்று, நம் நேரம், சக்தி, பணம், பொருள் என எல்லாவற்றையும் யெகோவாவின் சேவைக்காக மனப்பூர்வமாய்த் தியாகம் செய்யும்போது அவரது நட்பைப் பெறுவோம்.
கடவுள் ஏற்றுக்கொள்ளாத பலிகள்
13, 14. சவுல் ராஜா செலுத்த நினைத்த பலிகளை யெகோவா ஏன் ஏற்றுக்கொள்ளவில்லை?
13 இஸ்ரவேலர் நல்ல மனப்பான்மையுடன் பலிகளைச் செலுத்தியபோது யெகோவா அவற்றை ஏற்றுக்கொண்டார். ஆனால், அவர் சில பலிகளை ஏற்றுக்கொள்ளவில்லை என்பதை பைபிள் உதாரணங்கள் காட்டுகின்றன. அந்தப் பலிகளை அவர் ஏன் நிராகரித்தார்? இரண்டு சூழ்நிலைகளைக் கவனிக்கலாம்.
14 யெகோவா அமலேக்கியரைத் தண்டிக்கும் வேளை வந்துவிட்டதாக சவுல் ராஜாவிடம் சாமுவேல் தீர்க்கதரிசி தெரிவித்தார். ஆகவே, அமலேக்கியரையும் அவர்களுடைய மிருக ஜீவன்களையும் அடியோடு அழிக்கும்படி சவுலிடம் சொன்னார். சவுலோ, அமலேக்கியரை வென்ற பிறகு அவர்களுடைய ராஜாவான ஆகாகை உயிருடன் விட்டுவைத்தார். போதாததற்கு, யெகோவாவுக்குப் பலிசெலுத்துவதற்காக என்று சொல்லி மிருக ஜீவன்களில் மிகச் சிறந்ததையும் அழிக்காமல் விட்டுவைத்தார். (1 சா. 15:2, 3, 21) யெகோவா என்ன செய்தார்? கீழ்ப்படியாமல் போனதற்காக சவுலை நிராகரித்தார். (1 சாமுவேல் 15:22, 23-ஐ வாசியுங்கள்.) இதிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்? நம் பலியைக் கடவுள் ஏற்றுக்கொள்ள வேண்டுமென்றால், அவரது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிய வேண்டும்.
15. இஸ்ரவேலர் பலிகள் செலுத்திய அதேசமயத்தில் மோசமான காரியங்களையும் செய்தது எதைக் காட்டியது?
15 ஏசாயா புத்தகத்தில் இதுபோன்ற மற்றொரு உதாரணம் இருக்கிறது. ஏசாயாவின் நாட்களில், இஸ்ரவேலர் வெறும் கடமைக்காக யெகோவாவுக்குப் பலிகள் செலுத்தி வந்தார்கள். அவர்கள் மோசமான காரியங்களைச் செய்துவந்ததால், அவர்களுடைய பலிகள் வீணானவை ஆயின. ஆகவே, “எண்ணற்ற உங்கள் பலிகள் எனக்கு எதற்கு?” என்று யெகோவா கேட்டார். ‘ஆட்டுக்கடாக்களின் தகனபலிகளும், கொழுத்த மிருகங்களின் நிணமும் எனக்கு போதுமென்றாகிவிட்டன; காளைகள், ஆட்டுக்குட்டிகள், கடாக்களுடைய இரத்தத்தின்மேல் எனக்குப் பிரியமில்லை. . . . இனி வீண் காணிக்கைகளைக் கொண்டுவர வேண்டாம்; தூபங்காட்டுதல் எனக்கு அருவருப்பாயிருக்கிறது’ என்றார். ஏன் அந்தப் பலிகளை யெகோவா ஏற்றுக்கொள்ளவில்லை? அவர் இவ்வாறு சொன்னார்: “நீங்கள் மிகுதியாய் ஜெபம்பண்ணினாலும் கேளேன்; உங்கள் கைகள் இரத்தத்தினால் நிறைந்திருக்கிறது. உங்களைக் கழுவிச் சுத்திகரியுங்கள்; உங்கள் கிரியைகளின் பொல்லாப்பை என் கண்களுக்கு மறைவாக அகற்றிவிட்டு, தீமைசெய்தலை விட்டு ஓயுங்கள்.”—ஏசா. 1:11-16; பொது மொழிபெயர்ப்பு.
16. எப்படிப்பட்ட பலிகளைக் கடவுள் ஏற்றுக்கொள்கிறார்?
16 மனந்திருந்தாத பாவிகள் செலுத்திய பலிகளை யெகோவா ஏற்றுக்கொள்ளவே இல்லை. என்றாலும், அவரது கட்டளைகளின்படி நடக்க உள்ளப்பூர்வமாக முயன்றவர்களின் ஜெபங்களையும் காணிக்கைகளையும் அவர் ஏற்றுக்கொண்டார். தாங்கள் பாவிகள் என்பதையும் தங்களுக்கு மன்னிப்புத் தேவை என்பதையும் திருச்சட்டத்தின் முக்கிய அம்சங்கள் அவர்களுக்கு உணர்த்தின. (கலா. 3:19) அதை அவர்கள் உணர்ந்தபோது மனம் வருந்தினார்கள். அதேபோல் இன்றும், கிறிஸ்துவின் பலி நமக்குத் தேவை என்பதை நாம் உணர வேண்டும்; அந்தப் பலியே நம் பாவங்களை நிவிர்த்தி செய்யும். இதை நாம் புரிந்துகொண்டு மதிப்புணர்வைக் காட்டினால், யெகோவாவின் சேவைக்காக எதையெல்லாம் அர்ப்பணிக்கிறோமோ அதையெல்லாம் அவர் ‘பிரியமாக’ ஏற்றுக்கொள்வார்.—சங்கீதம் 51:17, 19-ஐ வாசியுங்கள்.
இயேசுவின் பலியில் விசுவாசம் காட்டுங்கள்!
17-19. (அ) இயேசுவின் மீட்புப்பலிக்காக நாம் எவ்வாறு யெகோவாவுக்கு நன்றி காட்டலாம்? (ஆ) அடுத்த கட்டுரை எதை விளக்கும்?
17 இஸ்ரவேலர் கடவுளுடைய நோக்கங்களின் ‘நிழலை’ மட்டுமே பார்த்தார்கள்; நாமோ நிஜத்தைப் பார்க்கிறோம். (எபி. 10:1) பலிகள் சம்பந்தப்பட்ட சட்டதிட்டங்கள் கடவுளுடன் நல்லுறவைப் பெறத் தேவையான மனப்பான்மையை வளர்த்துக்கொள்ள இஸ்ரவேலரைத் தூண்டின; ஆம், உண்மையான நன்றியுணர்வைக் காட்ட... சிறந்ததை அவருக்குத் தர வேண்டுமென்ற ஆசையை வளர்க்க... மீட்பின் அவசியத்தைப் புரிந்துகொள்ள... அந்தச் சட்டதிட்டங்கள் அவர்களைத் தூண்டின. மீட்புப்பலியின் மூலம் யெகோவா பாவத்தையும் மரணத்தையும் நிரந்தரமாக ஒழித்துக்கட்டப் போகிறார் என்பதை கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்திலிருந்து தெரிந்துகொள்கிறோம்; அந்த மீட்புப்பலியின் மூலம் அவர் நம் பாவங்களை மன்னித்து இப்போதேகூட சுத்தமான மனசாட்சியைப் பெற உதவுகிறார். இயேசுவின் மீட்புப்பலி எப்பேர்ப்பட்ட பரிசு!—கலா. 3:13; எபி. 9:9, 14.
18 மீட்புப்பலியைப் பற்றிப் புரிந்துகொண்டால் மட்டுமே அதிலிருந்து பயனடைந்துவிட மாட்டோம். “விசுவாசத்தினால் நாம் நீதிமான்களென அங்கீகரிக்கப்படுவதற்காகத் திருச்சட்டம் நம்மைக் கிறிஸ்துவிடம் வழிநடத்துகிற ஆசானாக இருந்து வந்தது” என்று அப்போஸ்தலன் பவுல் எழுதினார். (கலா. 3:24) அப்படிப்பட்ட விசுவாசத்தைச் செயல்களில் காட்டுவது அவசியம். (யாக். 2:26) திருச்சட்டத்தின் முக்கிய அம்சங்களைப் புரிந்திருந்த முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்களிடம், அதற்கேற்ப நடக்க வேண்டுமென பவுல் குறிப்பிட்டார். அப்போதுதான், மற்றவர்களுக்குக் கற்பித்த சத்தியங்களின்படியே அவர்களும் வாழ்கிறவர்களாக இருப்பார்கள்.—ரோமர் 2:21-23-ஐ வாசியுங்கள்.
19 இன்று கிறிஸ்தவர்கள் திருச்சட்டத்தைக் கடைப்பிடிக்க வேண்டியதில்லை என்றாலும், யெகோவாவுக்கு உகந்த பலிகளைக் கட்டாயம் செலுத்த வேண்டும். எப்படிச் செலுத்தலாம் என்பதை அடுத்த கட்டுரை விளக்கும்.
[கேள்விகள்]
[பக்கம் 17-ன் சிறு குறிப்பு]
யெகோவா தம் ஊழியர்களிடம் எதிர்பார்க்கும் அடிப்படைக் காரியங்கள் ஒருபோதும் மாறுவதில்லை
[பக்கம் 18-ன் படம்]
நீங்கள் எந்த மிருகத்தை யெகோவாவுக்குப் பலி செலுத்தியிருப்பீர்கள்?
[பக்கம் 19-ன் படம்]
யெகோவாவுக்கு உகந்த பலிகளைச் செலுத்தினால் நாம் அவரது அங்கீகாரத்தைப் பெறுவோம்