Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

படிப்பை ரசிக்க... பலனை ருசிக்க...

படிப்பை ரசிக்க... பலனை ருசிக்க...

படிப்பை ரசிக்க... பலனை ருசிக்க...

பைபிள் படிப்பை நாம் எப்படி இன்னும் நன்றாக அனுபவித்து மகிழலாம்? படிப்பிலிருந்து எப்படி இன்னும் அதிக பலன் பெறலாம்? தனிப்பட்ட பைபிள் படிப்பிலிருந்து மிகுந்த பயனடைய உதவும் மூன்று முக்கியப் படிகளை இப்போது சுருக்கமாய்ச் சிந்திக்கலாம்.

1 ஜெபம் செய்யுங்கள்: எடுக்க வேண்டிய முதல் படி ஜெபம் செய்வதாகும். (சங். 42:8) ஏன்? கடவுளுடைய வார்த்தையைப் படிப்பதை நம் வழிபாட்டின் ஒரு பாகமாய்க் கருத வேண்டும். ஆகவே, சரியான மனநிலையும் கடவுளது சக்தியும் பெற அவரிடம் மன்றாட வேண்டும். (லூக். 11:13) நெடுங்காலமாய் மிஷனரி சேவை செய்யும் பார்பரா இவ்வாறு கூறுகிறார்: “பைபிளை வாசிப்பதற்கும் கருத்தூன்றிப் படிப்பதற்கும் முன்பு நான் எப்போதும் ஜெபம் செய்வேன். அதற்குப்பின், யெகோவா என்னோடு இருப்பது போலவும் அந்தப் படிப்பை ஆசீர்வதிப்பது போலவும் உணருகிறேன்.” படிப்பதற்கு முன்பு ஜெபம் செய்யும்போது நமக்குமுன் வைக்கப்பட்டுள்ள அபரிமிதமான ஆன்மீக உணவை முழுமையாக ஏற்றுக்கொள்ள நம்முடைய மனமும் இருதயமும் பக்குவமடைகின்றன.

2 தியானம் செய்யுங்கள்: நேரம் இல்லாததால் சிலர் கடவுளுடைய வார்த்தையை மேலோட்டமாய் மட்டுமே படிக்கிறார்கள். அதனால், பைபிளை ஆழமாய்ப் படிப்பதால் கிடைக்கும் பயன்களைத் தவறவிடுகிறார்கள். படிப்பிலிருந்து அதிக பலனடைய வேண்டுமானால் தியானம் செய்வதற்கு நேரத்தை ஒதுக்குவது முக்கியமென கார்லோஸ் என்பவர் உணர்ந்திருக்கிறார்; இவர் 50 ஆண்டுகளுக்கும் அதிகமாய் யெகோவாவுக்குச் சேவை செய்துவருகிறார். இவர் சொல்கிறார்: “இப்போது பைபிளிலிருந்து சில பக்கங்கள்தான் ஒவ்வொரு முறையும் வாசிக்கிறேன், சுமார் இரண்டு பக்கங்களை ஒவ்வொரு நாளும் வாசிக்கிறேன். அதனால், நான் வாசித்தவற்றைத் தியானம் செய்வதற்கு அதிக நேரம் செலவிட முடிகிறது, முக்கியமான பாடங்களைக் கற்றுக்கொள்ள முடிகிறது.” (சங். 77:12) தியானிப்பதற்கு நேரம் செலவிடும்போது கடவுளுடைய சித்தத்தைப் பற்றிய நம்முடைய அறிவையும் புரிந்துகொள்ளுதலையும் மெருகூட்டுகிறோம்.—கொலோ. 1:9-11.

3 வாழ்வில் கடைப்பிடியுங்கள்: ஒரு செயல் நடைமுறையில் எந்தளவுக்குப் பயனை அளிக்கும் என்பதை நாம் புரிந்துகொண்டால், அதிலிருந்து அதிக நன்மையடைவோம். பைபிள் படிப்பைப் பொறுத்ததில் இது நூற்றுக்கு நூறு உண்மை. “அன்றாடப் பிரச்சினைகளைச் சமாளிக்கப் படிப்பு எனக்கு உதவுகிறது, மற்றவர்களுக்கு உதவ என்னைத் தயார்படுத்துகிறது” என்று சொல்கிறார் காப்ரியெல்; இவர் தவறாமல் பைபிள் படிக்கும் பழக்கத்தை உடைய ஓர் இளம் சகோதரர். “நான் கற்றுக்கொள்கிற எல்லாவற்றையும் வாழ்க்கையில் கடைப்பிடிக்க முயற்சி செய்கிறேன்” என்றும் அவர் கூறுகிறார். (உபா. 11:19; யோசு. 1:8) ஆம், நாம் படிப்பதற்கும் கடைப்பிடிப்பதற்கும் ஏராளமான விஷயங்கள் கடவுளுடைய வார்த்தையாகிய பைபிளில் இருக்கின்றன.—நீதி. 2:1-5.

சுருக்கம்: ஞானத்தின் ஊற்றாய் விளங்கும் யெகோவா தருகிற அறிவெனும் புதையலை நாம் தோண்டிப் பார்ப்பது எப்பேர்ப்பட்ட பாக்கியம்! (ரோ. 11:33) ஆகவே, அடுத்த முறை நீங்கள் பைபிள் படிக்கும்போது, முதலில் யெகோவாவிடம் ஜெபம் செய்யுங்கள், சரியான மனநிலையையும் அவரது சக்தியையும் தரும்படி மன்றாடுங்கள். பின்பு, அவ்வப்போது சற்று நிறுத்தி, நீங்கள் வாசிக்கும் விஷயத்தைத் தியானம் செய்யுங்கள். அதோடு, நீங்கள் கற்றுக்கொண்டவற்றை அன்றாட வாழ்வில் கடைப்பிடியுங்கள். இந்த முக்கியப் படிகளை எடுக்கும்போது, உங்கள் பைபிள் படிப்பை இன்னும் அதிகமாய் ரசிப்பீர்கள்... இன்னும் அதிக பலனையும் ருசிப்பீர்கள்.