Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

வரலாற்றுச் சுவடுகள்

பழமையான பொக்கிஷங்களை பாதுகாத்தல்

பழமையான பொக்கிஷங்களை பாதுகாத்தல்

யெகோவாவின் மக்களுடைய சரித்திரம் சுவையான நீண்ட கால சரித்திரம். அதைப் பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை நம் பிரசுரங்களிலிருந்து தெரிந்துகொள்கிறோம்; அதோடு, புகைப்படங்கள்... கடிதங்கள்... தனிநபர்களின் பதிவுகள்... நம் வழிபாட்டுடனும் ஊழியத்துடனும் வரலாற்றுடனும் சம்பந்தப்பட்ட பொருள்கள்... ஆகியவற்றிலிருந்து தெரிந்துகொள்கிறோம். ஆனால், இவற்றையெல்லாம் பாதுகாப்பதாலும் கடந்த காலத்தைத் திரும்பிப் பார்ப்பதாலும் என்ன பலன்? பூர்வ இஸ்ரவேலருடைய உதாரணத்தை எடுத்துக்கொள்ளுங்கள். அவர்களுடைய குடும்பத் தலைவர்கள் தங்களுடைய பிள்ளைகளுக்கு யெகோவாவின் சட்டதிட்டங்களைப் பற்றியும் அவர் செய்த அற்புதங்களைப் பற்றியும் சொல்லிக்கொடுக்க வேண்டியிருந்தது; அதன் பலனாக, அவர்களுடைய பிள்ளைகள் ‘யெகோவாமேல் நம்பிக்கை வைத்தார்கள்.’—சங். 78:1-7.

சரித்திரப் பதிவுகளை அலசுவது, யெகோவாவுடைய நோக்கத்தை நிறைவேற்றுவதில் நீண்ட காலமாகவே உதவியாய் இருந்திருக்கிறது. உதாரணத்திற்கு, எருசலேம் ஆலயத்தின் கட்டுமானப் பணியை எதிரிகள் தடுத்து நிறுத்தப் பார்த்தார்கள்; அதனால், மேதியர்களின் தலைநகரான அக்மேதாவின் ஆவணக் காப்பகத்திலிருந்த பதிவுகள் அலசி ஆராயப்பட்டன; அப்போது கிடைத்த ஓர் ஆவணம், ஆலயத்தைக் கட்டுவதற்கு கோரேசு ராஜா அதிகாரப்பூர்வ அனுமதி அளித்திருந்ததை வெட்டவெளிச்சமாக்கியது. (எஸ்றா 6:1-4, 12) அதன்பின், அந்த ஆலயம் கடவுளுடைய நோக்கத்திற்கு இசைய மீண்டும் கட்டி முடிக்கப்பட்டது. பிற்பாடு, சுவிசேஷ எழுத்தாளரான லூக்காவும் சரித்திரப் பதிவுகளைப் பயன்படுத்தி, ‘எல்லா விஷயங்களையும் தொடக்கத்திலிருந்தே துல்லியமாய் ஆராய்ந்தார்.’—லூக். 1:1-4.

நம்முடைய தேவராஜ்ய சரித்திரத்தில் ஆளும் குழுவினர் மிகுந்த ஆர்வம் காட்டுகிறார்கள். அந்தச் சரித்திர விவரங்களைத் தொகுத்து பாதுகாத்து வைப்பதன் அவசியத்தை... அவற்றை வழிவழியாக எல்லாருக்கும் தெரியப்படுத்துவதன் அவசியத்தை... பற்றி ஆளும் குழுவின் அங்கத்தினர் ஒருவர் இவ்வாறு சொன்னார்: “நாம் கடந்து வந்த பாதையைத் திரும்பிப் பார்க்கும்போதுதான் நாம் போய்க்கொண்டிருக்கிற பாதையில் நம்பிக்கையுடன் நடைபோட முடியும்.” இதற்காக, வரலாற்றுத் தகவல் இலாகா (Writing Archives) ஒன்றை நியு யார்க், புருக்லினிலுள்ள தலைமை அலுவலகம் சமீபத்தில் ஏற்படுத்தியது; இது எழுத்து இலாகாவின் மேற்பார்வையில் செயல்படுகிறது.

நம்முடைய ‘குடும்ப ஆல்பமும்,’ ‘பரம்பரைச் சொத்தும்’

நாட்கள் செல்லச் செல்ல, கடந்த காலம் மங்கிக்கொண்டே வருகிறது; நம்மில் பெரும்பாலோர், நம் குடும்பத்தில் நடந்த நிகழ்ச்சிகளைப் பற்றிய பதிவுகளை இன்னும் முழுமையாகப் பாதுகாத்து வைத்திருக்கலாமே என நினைக்கலாம். நம் அமைப்பின் சுவையான சரித்திரத்தை எழுத்திலோ படத்திலோ பேணிப் பாதுகாக்க வரலாற்றுத் தகவல் இலாகா இப்போது மிகக் கடினமாக உழைத்து வருகிறது. அந்த இலாகா பத்திரமாகச் சேகரித்து வைத்திருக்கும் புகைப்படங்கள் நம் ‘குடும்ப ஆல்பம்’ போன்று இருக்கின்றன. நம்முடைய ஆரம்பகாலப் பிரசுரங்கள், மெய்சிலிர்க்க வைக்கும் சுய சரிதைகள், மதிப்புமிக்க ஞாபகார்த்தப் பொருள்கள் ஆகியவற்றையும் அந்த இலாகா பொக்கிஷமாக பாதுகாத்து வைத்திருக்கிறது. இவை நம் ‘பரம்பரைச் சொத்து’ போன்று இருக்கின்றன; நம் ஆன்மீகக் குடும்பம் கடந்து வந்த பாதையைப் பற்றி நன்கு தெரிந்துகொள்ளவும், எதிர்காலத்தில் அது போகப் போகிற பாதையை நம்பிக்கையுடன் எதிர்நோக்கியிருக்கவும் இவை உதவுகின்றன.

வரலாற்றுத் தகவல் இலாகாவின் பொக்கிஷங்களை “வரலாற்றுச் சுவடுகள்” என்ற புதிய கட்டுரையின் மூலம் பார்வையிட உங்களை அழைக்கிறோம். இந்தக் கட்டுரை காவற்கோபுர பத்திரிகையின் படிப்பு இதழில் அவ்வப்போது வெளிவரும். உதாரணத்திற்கு, வரவிருக்கும் இதழில், படங்களுடன்கூடிய விவரப்பதிவு பின்வரும் கேள்விகளுக்குப் பதிலளிக்கும்: “உதயம் வண்டி” என்றால் என்ன? யார் அதைப் பயன்படுத்தினார்கள்? எப்போது? எதற்காக?

குடும்ப ஆல்பத்தைப் போல் இருக்கிற இந்தப் பொக்கிஷங்கள் நம்மையும் நம் ஆன்மீக மூதாதையரையும் பற்றி அதிக விவரங்களை அளிக்கின்றன; ஆம், நமக்குமுன் வாழ்ந்தவர்களின் விசுவாசத்தையும் தைரியத்தையும் பற்றி... நம் அன்பான பரலோகத் தகப்பனைச் சேவிக்கையில் அவர்கள் பெற்ற சந்தோஷங்களையும் சந்தித்த சவால்களையும் பற்றி... கடவுள் தம் மக்களுக்கு உற்ற துணையாக இருந்து வழிநடத்தியதைப் பற்றி... அவை நம் கண்முன் நிறுத்துகின்றன. (உபா. 33:27) நம் அமைப்பின் வரலாற்றைப் பாதுகாக்கத் தொடர்ந்து எடுக்கப்படும் முயற்சிகளை யெகோவா ஆசீர்வதிப்பார் என்றும், அதன் மூலம் இன்னும் அதிக ஒற்றுமையுடனும் பலத்துடனும் அவரது சித்தத்தைச் செய்வோம் என்றும் நம்பிக்கையுடன் இருக்கிறோம்.

[பக்கம் 31-ன் பெட்டி/படம்]

விரிவான விளக்கம்

நம் பிரசுரங்களையும், டிவிடிக்களையும், பைபிள் சார்ந்த மற்றவற்றையும் தயாரிக்கும்போது நம் எழுத்தாளர்களும் கலைஞர்களும் ஆராய்ச்சியாளர்களும் இந்த வரலாற்றுச் சுவடுகளைப் பயன்படுத்துகிறார்கள். ஆகவே, கிளை அலுவலகங்கள், பெத்தேல் இலாகாக்கள், சபைகள், தனிநபர்கள், பொது நிறுவனங்கள் போன்றவற்றிலிருந்து பலதரப்பட்ட சரித்திரப் பதிவுகளைச் சேகரிக்கவும் பாதுகாக்கவும் வரலாற்றுத் தகவல் இலாகா மிகுந்த சிரத்தை எடுக்கிறது. அது செய்யும் பணிகளைச் சற்றுக் கவனியுங்கள்:

சேகரிப்பும் ஆராய்ச்சியும்: தனிச்சிறப்புவாய்ந்த பொருள்கள் வரலாற்றுப் பொக்கிஷங்களில் தொடர்ந்து சேகரிக்கப்படுகின்றன. இவை, பற்பல ஆண்டுகளாக யெகோவாவுக்கு உண்மையுடன் சேவை செய்து வந்திருக்கும் குடும்பத்தாரிடமிருந்து நன்கொடையாக அல்லது கடனாகப் பெறப்படுகின்றன. இவற்றை ஆராய்வதும் ஒப்பிட்டுப் பார்ப்பதும், நம் வரலாற்றையும் அந்தச் சமயத்தில் வாழ்ந்தவர்களையும் பற்றி நன்கு புரிந்துகொள்ள உதவுகின்றன.

வகைப்படுத்துவது: வரலாற்றுத் தகவல் இலாகாவின் கையிருப்பில் ஆயிரக்கணக்கான பொருள்கள் உள்ளன; அவற்றில் சில ஒரு நூற்றாண்டுக்கும் மேல் பழமையானவை. அவை விதவிதமான வடிவங்களிலும் அளவுகளிலும் தோற்றங்களிலும் இருப்பதால் பிற்பாடு எடுத்து ஆராய்வதற்கு வசதியாக அவற்றை மிகக் கவனமாய் வகைப்படுத்துவது அவசியம்.

பழுதுபார்ப்பதும் பாதுகாப்பதும்: சேதமடைந்த புத்தகங்களும் பொருள்களும் நவீன முறைகளைக் கொண்டு பழுதுபார்க்கப்பட்டு பாதுகாக்கப்படுகின்றன. ஆவணங்கள், புகைப்படங்கள், செய்தித்தாள் துண்டுகள், படக்காட்சிகள், ஒலிப்பதிவுகள் ஆகிய அனைத்தும் கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்படுகின்றன. ஆகவே, அவற்றைக் கையில் எடுத்துப் பார்த்து மேலும் சேதப்படுத்தாமல் கம்ப்யூட்டரிலேயே பார்த்துக்கொள்ள முடியும்.

சேமிப்பதும் தேவைக்கேற்ப எடுத்துப் பார்ப்பதும்: இந்தச் சரித்திரச் சுவடுகள் தொலைந்துபோகாமல் இருப்பதற்காகவும் வெளிச்சத்தினாலோ ஈரப்பதத்தினாலோ சேதமடையாமல் இருப்பதற்காகவும் அவை ஒழுங்காகவும் பத்திரமாகவும் பாதுகாத்து வைக்கப்படுகின்றன. நம்முடைய இந்தப் பழமையான பொக்கிஷங்களைத் தேவைக்கேற்ப எடுத்துப் பார்க்கவும் ஆராயவும் உதவியாக, அவை தகவல் வங்கியில் வைக்கப்பட்டு வருகின்றன.

[பக்கம் 32-ன் படங்கள்]

1. “ஃபோட்டோ டிராமா ஆஃப் கிரியேஷன்” திரைப்படத்தின் போஸ்டர். 2. சந்தா பதிவேடு. 3. சவுண்ட் கார். 4. ஏப்ரல் 15, 1912 காவற்கோபுரத்தின் அட்டை. 5. ஜே. எஃப். ரதர்ஃபார்டுக்குப் பிடிவாரண்ட். 6. WBBR மைக். 7. ஃபோனோகிராஃப். 8. புத்தக சூட்கேஸ். 9. சொந்த டைரி. 10. ஜே. எஃப். ரதர்ஃபார்டுக்கு அனுப்பப்பட்ட தந்தி.