Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

யெகோவாவுக்கு முழுமூச்சோடு பலிகள் செலுத்துங்கள்

யெகோவாவுக்கு முழுமூச்சோடு பலிகள் செலுத்துங்கள்

“நீங்கள் எதைச் செய்தாலும், அதை . . . யெகோவாவுக்கென்றே முழுமூச்சோடு செய்யுங்கள்.”—கொலோ. 3:23.

1-3. (அ) இயேசு தம் உயிரைப் பலியாகக் கொடுத்திருப்பதால், இனி நாம் யெகோவாவுக்கு எவ்வித பலியும் செலுத்த வேண்டியதில்லையா? விளக்குங்கள். (ஆ) பலிகள் சம்பந்தமாக இன்று என்ன கேள்வி எழும்புகிறது?

 முதல் நூற்றாண்டில், இயேசுவின் மீட்புப்பலி திருச்சட்டத்திற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்ததாக யெகோவா தம் மக்களுக்குத் தெரிவித்தார். (கொலோ. 2:13, 14) நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக யூதர்கள் செலுத்திவந்த பலிகள் இனிமேலும் தேவைப்படவில்லை; அவற்றால் இனிமேலும் எவ்வித பலனும் இருக்கவில்லை. திருச்சட்டம் “கிறிஸ்துவிடம் வழிநடத்துகிற ஆசானாக” இருந்து, அதன் நோக்கத்தை நிறைவேற்றி முடித்திருந்தது.—கலா. 3:24.

2 என்றாலும், கிறிஸ்தவர்கள் எவ்வித பலிகளையும் செலுத்த வேண்டியதில்லை எனச் சொல்ல முடியாது. அவர்கள் ‘கடவுளுக்குப் பிரியமான ஆன்மீகப் பலிகளை இயேசு கிறிஸ்துவின் மூலம் செலுத்துவது’ அவசியமென அப்போஸ்தலன் பேதுரு குறிப்பிட்டார். (1 பே. 2:5) ஒரு கிறிஸ்தவரின் வாழ்க்கை, சொல்லப்போனால் அவரது வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சமும், கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு “பலி”யைப் போல் இருப்பதாக பவுலும் குறிப்பிட்டார்.—ரோ. 12:1.

3 ஆகவே, நாம் யெகோவாவுக்காக எவற்றையாவது கொடுப்பதன் மூலம் அல்லது தியாகம் செய்வதன் மூலம் அவருக்குப் பலிகள் செலுத்துகிறோம். பலிகள் சம்பந்தமாக இஸ்ரவேலரிடம் என்ன எதிர்பார்க்கப்பட்டது என்பதை நாம் அறிந்திருக்கிறோம்; அதை வைத்துப் பார்க்கும்போது, இன்று நாம் செலுத்தும் எல்லாப் பலிகளும் யெகோவாவுக்கு உகந்ததாக இருக்கின்றனவா என எவ்வாறு உறுதி செய்துகொள்ள முடியும்?

அன்றாட வாழ்வில்

4. அன்றாட வாழ்வில் நாம் செய்யும் காரியங்கள் சம்பந்தமாக எதை நினைவில் வைக்க வேண்டும்?

4 அன்றாட வாழ்வில் நாம் செய்யும் காரியங்களை யெகோவாவுக்குப் பலிகள் செலுத்துவதோடு சம்பந்தப்படுத்திப் பார்ப்பது நமக்குக் கஷ்டமாக இருக்கலாம். மேலோட்டமாகப் பார்த்தால், வீட்டு வேலை, பள்ளிப் படிப்பு, உத்தியோகம், கடைக்குப் போவது போன்றவற்றிற்கும் கடவுளுடைய சேவைக்கும் சிறிதும் சம்பந்தம் இல்லாததுபோல் தோன்றலாம். என்றாலும், உங்கள் வாழ்வை யெகோவாவுக்கு அர்ப்பணித்திருக்கிறீர்கள் என்றால், அல்லது சீக்கிரத்தில் அர்ப்பணிக்கப்போகிறீர்கள் என்றால், அன்றாடக் காரியங்களில் என்ன மனநிலையோடு ஈடுபடுகிறீர்கள் என்பது முக்கியம். நாம் ஒவ்வொரு நாளும்... 24 மணிநேரமும்... கிறிஸ்தவர்களாக இருக்கிறோம். நம் வாழ்வின் ஒவ்வொரு அம்சத்திலும் பைபிள் நியமங்களைக் கடைப்பிடிக்க வேண்டும். ஆகவே, “நீங்கள் எதைச் செய்தாலும், அதை மனிதர்களுக்கென்று செய்யாமல், யெகோவாவுக்கென்றே முழுமூச்சோடு செய்யுங்கள்” என்று பவுல் ஊக்குவித்தார்.கொலோசெயர் 3:18-24-ஐ வாசியுங்கள்.

5, 6. அன்றாட வாழ்க்கையில் நம் நடத்தை மற்றும் உடை சம்பந்தமாக எதை மனதில் வைக்க வேண்டும்?

5 ஒரு கிறிஸ்தவரின் அன்றாட அலுவல்கள் அவரது பரிசுத்த சேவையின் பாகம் அல்ல என்பது உண்மைதான். இருந்தாலும், “யெகோவாவுக்கென்றே முழுமூச்சோடு செய்யுங்கள்” என பவுல் குறிப்பிட்டதைச் சிந்திக்கும்போது, நம் முழு வாழ்க்கைப் போக்கையும் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும் எனப் புரிகிறது. அப்படியானால், இதை எப்படி நம் சொந்த வாழ்வில் பொருத்தலாம்? எல்லா நேரங்களிலும் நாம் பண்போடு நடந்துகொள்கிறோமோ, கண்ணியமாக உடை உடுத்துகிறோமா? அல்லது, அன்றாடம் நாம் நடந்துகொள்ளும் விதமோ உடுத்தும் விதமோ நாம் யெகோவாவின் சாட்சிகள் எனச் சொல்லிக்கொள்ள முடியாதளவுக்கு இருக்கிறதா? அப்படிப்பட்ட நிலை ஒருபோதும் ஏற்படாதபடி பார்த்துக்கொள்வோமாக! யெகோவாவின் பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தும் எதையும் நாம் செய்யாதிருப்போமாக!—ஏசா. 43:10; 2 கொ. 6:3, 4, 9.

6 எல்லாவற்றையும் “யெகோவாவுக்கென்றே முழுமூச்சோடு” செய்ய நாம் ஆசைப்பட்டால், நம் சிந்தையும் செயலும் எப்படி இருக்க வேண்டும் என்பதை இப்போது பார்க்கலாம். அப்படிப் பார்க்கும்போது, இஸ்ரவேலர் யெகோவாவுக்குச் செலுத்திய பலிகள் சிறந்ததிலும் சிறந்ததாக இருக்க வேண்டியிருந்ததை நினைவில் வைப்போமாக.—யாத். 23:19.

உங்கள் வாழ்வை எப்படிப் பாதிக்கிறது?

7. கிறிஸ்தவர்களாக நம்மைக் கடவுளுக்கு அர்ப்பணிப்பதில் என்ன உட்பட்டிருக்கிறது?

7 யெகோவாவுக்கு உங்களை அர்ப்பணித்த சமயத்தைச் சிந்தித்துப் பாருங்கள்; எவ்வித தயக்கமும் இல்லாமல் அந்தத் தீர்மானத்தை நீங்கள் எடுத்தீர்கள், அல்லவா? உங்கள் வாழ்வின் ஒவ்வொரு அம்சத்திலும் யெகோவாவுக்கு முதலிடம் கொடுப்பீர்கள் எனச் சொல்லாமல் சொன்னீர்கள், அல்லவா? (எபிரெயர் 10:7-ஐ வாசியுங்கள்.) அது நிச்சயமாகவே ஒரு நல்ல தீர்மானம். ஒரு விஷயத்தில் யெகோவாவின் சித்தம் என்ன என்பதைத் தெரிந்துகொண்டு அதற்கேற்ப செயல்பட முயலும்போது நல்ல பலன்கள் கிடைப்பதை நீங்கள் நிச்சயம் அனுபவத்தில் கண்டிருப்பீர்கள். (ஏசா. 48:17, 18) யெகோவாவுடைய மக்கள் பரிசுத்தமாகவும் சந்தோஷமாகவும் இருக்கிறார்கள்; ஏனென்றால், தங்களுக்குப் போதிக்கிற யெகோவாவுடைய குணங்களையே அவர்களும் வெளிக்காட்டுகிறார்கள்.—லேவி. 11:44; 1 தீ. 1:11.

8. இஸ்ரவேலர் செலுத்திய பலிகளை யெகோவா பரிசுத்தமாய்க் கருதியதிலிருந்து நாம் என்ன பாடம் கற்றுக்கொள்கிறோம்?

8 இஸ்ரவேலர் செலுத்திய பலிகளை யெகோவா பரிசுத்தமாய்க் கருதினார். (லேவி. 6:25; 7:1) “பரிசுத்தமானது” என்பதற்கான எபிரெய வார்த்தை கடவுளுக்கென்றே விலக்கி வைக்கப்பட்டிருப்பதை, ஒதுக்கப்பட்டிருப்பதை, புனிதமாக்கப்பட்டிருப்பதைக் குறிக்கிறது. நம் பலிகள் யெகோவாவுக்கு உகந்ததாக இருக்க வேண்டுமென்றால், அவை உலகக் காரியங்களால் கறைபடியாதவையாக, அவற்றிலிருந்து விலக்கப்பட்டவையாக இருக்க வேண்டும். யெகோவா வெறுக்கிற எதையும் நாம் நேசிக்க முடியாது. (1 யோவான் 2:15-17-ஐ வாசியுங்கள்.) அப்படியென்றால், அவருடைய பார்வையில் நம்மை அசுத்தமாக்கும் எவ்விதக் காரியங்களிலும் நாம் ஈடுபடக் கூடாது. (ஏசா. 2:4; வெளி. 18:4) அதுமட்டுமல்ல, அசுத்தமான அல்லது ஒழுக்கக்கேடான காரியங்கள்மீது நம் கண்களை அலைபாயவிடக் கூடாது; அவற்றை நம் மனதில் கற்பனை செய்து பார்க்கவும் கூடாது.—கொலோ. 3:5, 6.

9. கிறிஸ்தவர்கள் மற்றவர்களுக்கு நன்மை செய்வது ஏன் முக்கியம்?

9 “நன்மை செய்யவும், உங்களிடம் இருப்பதை மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ளவும் மறந்துவிடாதீர்கள்; இப்படிப்பட்ட பலிகளில் கடவுள் பிரியமாயிருக்கிறார்” என்று பவுல் தன் சக விசுவாசிகளை ஊக்கப்படுத்தினார். (எபி. 13:16) ஆகவே, நாம் வழக்கமாக மற்றவர்களுக்கு நன்மை செய்வதைப் பிரியமான பலியாக யெகோவா கருதுகிறார். மற்றவர்கள்மீது அன்பும் அக்கறையும் காட்டுவது உண்மைக் கிறிஸ்தவர்களின் அடையாளமாக இருக்கிறது.—யோவா. 13:34, 35; கொலோ. 1:10.

வழிபாட்டில் பலிகள்

10, 11. நம் ஊழியத்தையும் வழிபாட்டையும் யெகோவா எப்படிக் கருதுகிறார், இது நம்மை என்ன செய்யத் தூண்ட வேண்டும்?

10 நாம் செய்யும் மிக முக்கியமான நன்மைகளில் ஒன்று, ‘நம்முடைய நம்பிக்கையைப் பற்றி எல்லாருக்கும் அறிவிப்பதாகும்.’ சாட்சி கொடுக்கக் கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்பையும் நீங்கள் பயன்படுத்திக்கொள்கிறீர்களா? இந்த முக்கியமான ஊழியத்தைப் பற்றி பவுல் குறிப்பிடுகையில், “உதடுகளின் கனியைப் பலி செலுத்துவோமாக; அதாவது, கடவுளுடைய பெயரை எல்லாருக்கும் அறிவிப்பதன் மூலம் அவருக்குப் புகழ்ச்சிப் பலியைச் செலுத்துவோமாக” என்றார். (எபி. 10:23; 13:15; ஓசி. 14:2) நற்செய்தியை நாம் எவ்வளவு நேரம் அறிவிக்கிறோம், எவ்வளவு திறம்பட அறிவிக்கிறோம் என்பது முக்கியம்; இது சம்பந்தமாக நம்மைச் சிந்திக்க வைக்கவே ஊழியக் கூட்டத்திற்கான அநேக பகுதிகள் தயாரிக்கப்படுகின்றன. சுருங்கச் சொன்னால், வெளி ஊழியமும் சந்தர்ப்ப சாட்சியும் ‘புகழ்ச்சிப் பலியாக’... நம் வணக்கத்தின் பாகமாக... இருக்கின்றன; ஆகவே, இந்தப் பலி மிகச் சிறந்த பலியாக இருக்க வேண்டும். நம் ஒவ்வொருவரது சூழ்நிலைகளும் வேறுபடுகின்றன என்றாலும், நற்செய்தியை அறிவிக்க நாம் எவ்வளவு நேரம் செலவிடுகிறோம் என்பது ஆன்மீகக் காரியங்களை எந்தளவு உயர்வாய் மதிக்கிறோம் என்பதைக் காட்டுகிறது.

11 கிறிஸ்தவர்கள் தனிப்பட்ட விதமாகவோ ஒன்றுசேர்ந்தோ கடவுளை வழிபட தவறாமல் நேரம் ஒதுக்குகிறார்கள். அப்படிச் செய்யும்படி யெகோவா எதிர்பார்க்கிறார். இப்போது நாம் ஓய்வுநாளை அனுசரிக்கவோ பண்டிகைகளுக்காக எருசலேமுக்குப் போகவோ வேண்டியதில்லை என்பது உண்மைதான். என்றாலும், அவற்றிற்கு ஒப்பான வேறு காரியங்களை இன்று நாம் செய்ய வேண்டியிருக்கிறது. வீணான காரியங்களை விட்டுவிட்டு பைபிளைப் படிக்கவும், ஜெபம் செய்யவும், கிறிஸ்தவக் கூட்டங்களுக்குச் செல்லவும் நேரம் ஒதுக்க வேண்டுமெனக் கடவுள் நம்மிடம் எதிர்பார்க்கிறார். கிறிஸ்தவக் கணவன்மார் தங்கள் குடும்பத்தாரோடு சேர்ந்து குடும்ப வழிபாட்டில் ஈடுபட வேண்டும். (1 தெ. 5:17; எபி. 10:24, 25) ஆக, ‘என்னால் இன்னும் நன்றாக யெகோவாவுக்குச் சேவை செய்ய முடியுமா?’ என நம்மையே கேட்டுக்கொள்வது நல்லது.

12. (அ) பூர்வ இஸ்ரவேலில் எரிக்கப்பட்ட தூபப்பொருளுக்கு ஒப்பாக இன்று எது இருக்கிறது? (ஆ) நம் ஜெபங்கள் எப்படித் தூபப்பொருள்போல் இருக்க வேண்டும்?

12 ‘என் விண்ணப்பம் உமக்கு முன்பாகத் தூபமாக இருக்கக்கடவது’ என தாவீது ராஜா யெகோவாவிடம் சொன்னார். (சங். 141:2) உங்கள் ஜெபத்தைப் பற்றிக் கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள்: எவ்வளவு அடிக்கடி ஜெபம் செய்கிறீர்கள்? எதைப் பற்றி ஜெபம் செய்கிறீர்கள்? வெளிப்படுத்துதல் புத்தகம் ‘பரிசுத்தவான்களின் ஜெபங்களை’ தூபப்பொருளுக்கு ஒப்பிட்டுப் பேசுகிறது; யெகோவாவுக்குப் பிரியமான ஜெபங்கள் நறுமணப் புகைபோல் அவரிடம் எழும்புவதாக அது குறிப்பிடுகிறது. (வெளி. 5:8) பூர்வ இஸ்ரவேலில், யெகோவாவின் தூபபீடத்தின்மீது தவறாமல் எரிக்கப்பட்ட தூபப்பொருள் கவனமாகவும் சரியாகவும் தயாரிக்கப்பட வேண்டியிருந்தது. யெகோவாவின் அறிவுரைகளுக்கு ஏற்ப தூபம் காட்டப்பட்டபோதுதான் அது ஏற்றுக்கொள்ளப்பட்டது. (யாத். 30:34-37; லேவி. 10:1, 2) அதேபோல், யெகோவாவின் அறிவுரைகளுக்கு ஏற்ப நாம் ஜெபம் செய்யும்போதுதான் அவர் அதைப் பிரியமாக ஏற்றுக்கொள்வார்.

கொடுப்பதும் பெறுவதும்

13, 14. (அ) பிலிப்பியர்களும் எப்பாப்பிரோதீத்துவும் பவுலுக்கு என்ன உதவி செய்தார்கள், அதை பவுல் எப்படிக் கருதினார்? (ஆ) பிலிப்பியர்களையும் எப்பாப்பிரோதீத்துவையும் நாம் எவ்வாறு பின்பற்றலாம்?

13 உலகளாவிய வேலைக்காக நாம் தரும் நன்கொடை, கொஞ்சமோ அதிகமோ, அது ஒரு பலிபோல் இருக்கிறது. (மாற். 12:41-44) முதல் நூற்றாண்டில், ரோமாபுரியிலிருந்த பவுலுக்குத் தேவையானதை எப்பாப்பிரோதீத்துவின் மூலம் பிலிப்பி சபையினர் அனுப்பி வைத்தார்கள். அவர்கள் தந்த பண முடிப்பை அவர் எடுத்துச் சென்றார். பிலிப்பியர்கள் பவுலுக்கு உதவியது அது முதன்முறை அல்ல. பவுல் பொருளாதாரத் தேவைகளைப் பற்றிக் கவலைப்படாமல் அதிக நேரத்தை ஊழியத்தில் செலவிட வேண்டும் என்பதற்காக அவர்கள் அன்போடு அவருக்கு உதவினார்கள். அவர்களுடைய அன்பளிப்பை பவுல் எப்படிக் கருதினார்? ‘கடவுளுக்கு அது நறுமணம் வீசுகிற காணிக்கையாகவும், அவர் பிரியத்தோடு ஏற்றுக்கொள்கிற பலியாகவும் இருக்கிறது’ எனக் குறிப்பிட்டார். (பிலிப்பியர் 4:15-19-ஐ வாசியுங்கள்.) பிலிப்பியர் செய்த அன்பான உதவியை பவுல் நெஞ்சாரப் பாராட்டினார், யெகோவாவும் அவ்வாறே பாராட்டினார்.

14 அதேபோல் இன்று, உலகளாவிய வேலைக்காக நாம் நன்கொடைகள் தருவதை யெகோவா பெரிதும் பாராட்டுகிறார். அதோடு, வாழ்க்கையில் அவருடைய சேவைக்குத் தொடர்ந்து முதலிடம் தந்தால் நம்முடைய ஆன்மீகத் தேவைகளையும் சரீரத் தேவைகளையும் அவர் கவனித்துக்கொள்வதாக வாக்குறுதி தருகிறார்.—மத். 6:33; லூக். 6:38.

உங்கள் நன்றியைக் காட்டுங்கள்

15. என்ன காரணங்களுக்காக நீங்கள் யெகோவாவுக்கு நன்றி காட்டுகிறீர்கள்?

15 யெகோவாவுக்கு நாம் நன்றி காட்ட எத்தனை எத்தனையோ காரணங்கள் உண்டு; அவற்றைப் பட்டியலிட ஆரம்பித்தால் நேரம் போதாது. உயிர் என்ற பரிசுக்காக ஒவ்வொரு நாளும் நாம் அவருக்கு நன்றி சொல்ல வேண்டாமா? உயிர் வாழத் தேவையான உணவு, உடை, உறைவிடம் ஆகியவற்றையும் சுவாசத்தையும் அவர் நம் அனைவருக்கும் தருகிறார். அதோடு, திருத்தமான அறிவின் அடிப்படையில் நாம் பெற்றுள்ள விசுவாசம் நமக்கு நம்பிக்கை அளிக்கிறது. யெகோவா படைப்பாளராக இருப்பதாலும் அள்ளி வழங்குபவராக இருப்பதாலும் அவரை நாம் வழிபடுவதும் அவருக்குப் புகழ்ச்சிப் பலியைச் செலுத்துவதும் வெகு பொருத்தமானது.வெளிப்படுத்துதல் 4:11-ஐ வாசியுங்கள்.

16. கிறிஸ்துவின் மீட்புப்பலிக்கு நாம் எவ்வாறு நன்றி காட்டலாம்?

16 சென்ற கட்டுரையில் நாம் பார்த்தபடி, மனிதருக்குக் கடவுள் தந்திருக்கும் விலைமதிப்புள்ள ஒரு பரிசு கிறிஸ்துவின் மீட்புப்பலியாகும். இது, கடவுள் நம்மீது வைத்திருக்கும் அன்பின் மிகச் சிறந்த வெளிக்காட்டாகும். (1 யோ. 4:10) இதற்கு நாம் எப்படி நன்றி காட்டலாம்? பவுல் இவ்வாறு எழுதினார்: “கிறிஸ்துவின் அன்பு எங்களைத் தூண்டியெழுப்புகிறது; ஏனென்றால், எல்லாருக்காகவும் அவர் ஒருவரே இறந்தார்; . . . அவர் எல்லாருக்காகவும் இறந்திருப்பதால், வாழ்கிறவர்கள் இனி தங்களுக்காக வாழாமல் தங்களுக்கென்று இறந்து உயிர்த்தெழுந்தவருக்காகவே வாழ வேண்டுமென உணர்ந்திருக்கிறோம்.” (2 கொ. 5:14, 15) பவுல் சொல்லவந்த குறிப்பு இதுதான்: கடவுளுடைய அளவற்ற கருணைக்கு நாம் நன்றியுள்ளவர்களாக இருந்தால், அவரையும் அவரது மகனையும் மகிமைப்படுத்தும் விதத்தில் வாழ்வோம். கடவுள்மீதும் கிறிஸ்துமீதும் நமக்கு அன்பும் மதிப்பும் இருப்பதை எப்படிக் காட்டலாம்? அவர்களுக்குக் கீழ்ப்படிவதன் மூலமும், பிரசங்கித்துச் சீடராக்கும் வேலையில் ஆர்வத்துடன் ஈடுபடுவதன் மூலமுமாகும்.—1 தீ. 2:3, 4; 1 யோ. 5:3.

17, 18. சிலர் எவ்வாறு தங்கள் புகழ்ச்சிப் பலியை அதிகரித்திருக்கிறார்கள்? ஓர் உதாரணம் தருக.

17 உங்களுடைய புகழ்ச்சிப் பலியை அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறதா? பலர், யெகோவா தங்களுக்காகச் செய்திருக்கும் எல்லா நன்மைகளையும் சிந்தித்துப் பார்த்து, பிரசங்க வேலையிலும் மற்ற ஆன்மீகக் காரியங்களிலும் அதிக நேரம் ஈடுபட உந்துவிக்கப்பட்டிருக்கிறார்கள். சிலர் வருடந்தோறும் ஓரிரு மாதங்களுக்குத் துணைப் பயனியர் ஊழியம் செய்கிறார்கள்; வேறு சிலர், ஒழுங்கான பயனியர்களாக ஆகியிருக்கிறார்கள். இன்னும் சிலர், ராஜ்ய மன்றம், மாநாட்டு மன்றம் போன்றவற்றின் கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டிருக்கிறார்கள். நம் நன்றியைக் காட்ட இவையெல்லாம் சிறந்த வழிகள், அல்லவா? பரிசுத்த சேவையின் இந்த அம்சங்களில் சரியான மனநிலையோடு ஈடுபட்டால், அதாவது நன்றியுணர்வோடும் மதிப்புணர்வோடும் ஈடுபட்டால், இவற்றைக் கடவுள் பிரியத்துடன் ஏற்றுக்கொள்கிறார்.

18 அநேக கிறிஸ்தவர்கள் யெகோவாவுக்கு நன்றிக்கடன்பட்டிருப்பதாக உணர்ந்திருக்கிறார்கள், அதனால் அவருக்கு அதிக சேவை செய்யத் தூண்டப்பட்டிருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்களில் ஒருவர்தான் மோரேனா. அந்தப் பெண் கத்தோலிக்கராக வளர்க்கப்பட்டதால் தன் கேள்விகளுக்குக் கத்தோலிக்க மதக் கோட்பாடுகளில் விடை தேடினார், ஆசிய தத்துவங்களிலும் விடை தேடினார். ஆனால், இரண்டிலும் ஏமாற்றமே மிஞ்சியது. யெகோவாவின் சாட்சிகளோடு பைபிளைப் படிக்க ஆரம்பித்த பிறகுதான் அவரது ஆன்மீகத் தாகம் தணிந்தது. அவருடைய எல்லாக் கேள்விகளுக்கும் பைபிளிலிருந்து பதில்களைப் பெற உதவியதற்காக யெகோவாவுக்கு மிகுந்த நன்றி சொன்னார்; அந்தப் பதில்கள் அவரது வாழ்வுக்கு ஒரு பிடிப்பைத் தந்தன; அதற்கு நன்றியாக, தன் சக்தியையெல்லாம் யெகோவாவின் சேவைக்கு அர்ப்பணிக்கத் தீர்மானித்தார். ஞானஸ்நானம் எடுத்த உடனேயே தொடர்ந்து துணைப் பயனியர் ஊழியத்தில் ஈடுபட்டார்; அதன்பின், சந்தர்ப்ப சூழ்நிலை வாய்த்ததும் ஒழுங்கான பயனியராக ஆனார். இது நடந்தது 30 ஆண்டுகளுக்கு முன்பு; இப்போதும் மொரேனா முழுநேர ஊழியராக இருக்கிறார்.

19. யெகோவாவுக்குச் செலுத்தும் பலிகளை நீங்கள் எவ்வாறு அதிகரிக்கலாம்?

19 யெகோவாவின் ஊழியர்களில் அநேகர் சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக முழுநேர ஊழியத்தில் ஈடுபட முடியாமல் இருப்பது உண்மைதான். ஆனால், யெகோவாவின் சேவையில் எந்தளவு ஈடுபட முடிந்தாலும் சரி, நம் அனைவராலுமே அவருக்குப் பிரியமான ஆன்மீகப் பலிகளைச் செலுத்த முடியும். நம் நடத்தையைப் பொறுத்ததில், நாம் எல்லா நேரங்களிலும் யெகோவாவைப் பிரதிநிதித்துவம் செய்கிறோம் என்பதை மனதில் வைத்து, அவரது நெறிமுறைகளைக் கவனமாகக் கடைப்பிடிக்க வேண்டும். நம் விசுவாசத்தைப் பொறுத்ததில், கடவுளுடைய நோக்கங்கள் நிறைவேறும் என்பதில் முழு நம்பிக்கை வைக்கிறோம். நன்மை செய்வதைப் பொறுத்ததில், எல்லாருக்கும் நற்செய்தியை அறிவிக்கிறோம். யெகோவா நமக்காகச் செய்திருக்கும் எல்லாவற்றையும் மதித்துணர்ந்து... நன்றி பொங்கும் இதயத்துடன்... அவருக்குத் தொடர்ந்து முழுமூச்சோடு பலிகள் செலுத்துவோமாக.

[கேள்விகள்]

[பக்கம் 25-ன் சிறு குறிப்பு]

யெகோவா செய்திருக்கும் நன்மைகளைச் சிந்திக்கையில் அவருக்கு இன்னும் அதிகமாகப் புகழ்ச்சிப் பலியைச் செலுத்தத் தூண்டப்படுகிறீர்களா?

[பக்கம் 23-ன் படம்]

சாட்சி கொடுக்கக் கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்பையும் நீங்கள் பயன்படுத்திக்கொள்கிறீர்களா?