Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

வரலாற்றுச் சுவடுகள்

‘எல்லாருடைய கவனமும் என்மீது திரும்பியது’

‘எல்லாருடைய கவனமும் என்மீது திரும்பியது’

அமெரிக்கா, கன்டக்கியிலுள்ள லூயிவில் நகரத்தில், ஷார்லட் வைட் என்ற முழுநேர ஊழியர் ஒரு வண்டியில் தன் சூட்கேஸைத் தள்ளிக்கொண்டு வந்தபோது பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்.

வருடம் 1908. எல்லாருடைய பார்வையும் சகோதரி வைட்மீது பதிந்தது. காரணம்? புத்தம் புதிய கண்டுபிடிப்புடன்... “உதயம் வண்டியுடன்”... அவர் வலம் வந்தார். “ஊரெங்கும் அதே பேச்சுதான், எல்லாருடைய கவனமும் என்மீது திரும்பியது” என அவர் சொன்னார்.

அன்று பைபிள் மாணாக்கர்கள் என்று அழைக்கப்பட்ட யெகோவாவின் சாட்சிகள் வேதவசனங்களை அலசி ஆராய்ந்து கற்றுக்கொண்ட அருமையான சத்தியங்களை மற்றவர்களோடு பகிர்ந்துகொண்டார்கள். ஆயிரமாண்டு உதயம் என்ற ஆங்கில புத்தகத்தின் (பிற்பாடு, வேதாகமத்தில் படிப்புகள் என்றும் அழைக்கப்பட்டது) தொகுதிகளைப் படித்து அநேகர் பைபிளைக் கற்றுக்கொண்டார்கள். விருப்பமும் வாய்ப்பும் கொண்ட கிறிஸ்தவர்கள் எட்டுத் திக்கிலும் சென்று... பட்டணங்கள், கிராமங்கள், நாட்டுப்புறங்கள் எங்கும் சென்று... ஆர்வமுள்ளோருக்கு அவற்றை அளித்தார்கள். அவை, “பைபிள் மாணாக்கரின் உதவிக் கரங்கள்” என அப்போது அழைக்கப்பட்டன.

1908-ல், சகோதரி வைட்டும் பக்திவைராக்கியமிக்க மற்ற ஊழியர்களும் அந்தப் புத்தகத்தின் ஆறு தொகுதிகளை (துணியால் பைண்டிங் செய்யப்பட்டது) 1.65 அமெரிக்க டாலருக்கு அளித்திருப்பார்கள். உதயம் புத்தகங்களை முதல் சந்திப்பிலேயே கொடுப்பதற்குப் பதிலாக, ஆர்டர்கள் வாங்கிக்கொண்டு பின்பு இன்னொரு நாளில் (பொதுவாக, சம்பள நாளில்) அதை எடுத்துச் சென்று கொடுத்தார்கள்; அச்சு செலவுக்காகக் கட்டணத்தையும் பெற்றுக்கொண்டார்கள். அவற்றைப் பெற்றுக்கொண்டவர்கள் கொடுத்த குறைந்த கட்டணத்தைப் பற்றி ஊழியத்தை எதிர்த்த ஒருவர் கேலிகூட செய்தார்!

மலீன்டா கீஃபர் என்ற சகோதரி ஒரு வாரத்தில் 200 முதல் 300 புத்தகங்களுக்கு ஆர்டர் வாங்கினார்! ஆனால், உதயம் புத்தகங்கள் இப்படிப் பஞ்சாய்ப் பறந்தபோதிலும் அவற்றைத் தூக்கிச்செல்வது பஞ்சுபோல் இருக்கவில்லை. ஆறாவது தொகுதியில் மட்டுமே 740 பக்கங்கள்! காவற்கோபுரம் குறிப்பிட்டபடி, “ஐம்பது புத்தகங்களின் எடை நாற்பது பவுண்டு” (18 கிலோகிராம்); ஆகவே, அவற்றைத் தூக்கிச் செல்வது “பெரும் பாடாக இருந்தது,” முக்கியமாகச் சகோதரிகளுக்கு.

இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்காக இரண்டு சக்கரங்கள் கொண்ட ஒரு மடக்கு வண்டியைச் சகோதரர் ஜேம்ஸ் கோல் கண்டுபிடித்தார். அந்த வண்டியின் மீது ஒரு சூட்கேஸை வைத்துத் திருகாணிகளால் பொருத்த முடிந்தது. பெரிய அட்டைப்பெட்டிகளில் புத்தகங்களை வைத்துத் தூக்கிச் செல்லும் பிரச்சினை ஓய்ந்ததால், “இனி என் தோள்பட்டை முறியாது” எனச் சகோதரர் ஜேம்ஸ் குறிப்பிட்டார். 1908-ல், ஒஹாயோவிலுள்ள சின்சினாட்டி நகரில் நடந்த பைபிள் மாணாக்கர்களின் மாநாட்டில் அவர் இந்தப் புதிய கண்டுபிடிப்பை அறிமுகப்படுத்தியபோது கூடிவந்தவர்கள் அளவில்லா ஆனந்தம் அடைந்தார்கள். வண்டியின் குறுக்குச் சட்டத்தின் ஒவ்வொரு முனையிலும் இருந்த பட்டன்களில் “உதயம் வண்டி” என்று பொறிக்கப்பட்டிருந்தது; ஏனென்றால், அது முக்கியமாகச் சுமந்து சென்றதெல்லாம் ஆயிரமாண்டு உதயம் புத்தகங்களைத்தான். இந்த வண்டியை ஒருசில தடவை ஓட்டிப் பார்த்தால் போதும், பழக்கமாகிவிடும். அதன்பின், டஜன்கணக்கான புத்தகங்களை அதில் வைத்து ஒரே கையில்கூட ஓட்டிச் சென்றுவிடலாம். அதன் உயரத்தை ஏற்றி இறக்க முடியும், அதை மண் ரோடுகளில்கூட ஓட்டிச் செல்ல முடியும். நாள் முழுவதும் ஊழியம் செய்த பிறகு, அதன் ரப்பர் சக்கரங்களை சூட்கேஸின் பக்கவாட்டில் மடக்கி வைத்துவிட்டு, காலி சூட்கேஸைக் கையில் தூக்கிக்கொண்டு வீடு திரும்ப முடியும்—நடந்தோ, டிராம் வண்டியிலோ.

முழுநேர ஊழியம் செய்த சகோதரிகள் இந்த “உதயம் வண்டியை” இலவசமாகப் பெற்றார்கள். மற்றவர்களுக்கு 2.50 அமெரிக்க டாலருக்கு விற்கப்பட்டது. படத்தில் குறியிட்டுக் காட்டப்பட்டுள்ள சகோதரி கீஃபர் இந்த வண்டியை ஓட்டுவதில் மிகவும் கெட்டிக்காரியாக இருந்ததால், ஒரே கையில் அதைத் தள்ளிக்கொண்டு, இன்னொரு கையில் வேறொரு பையைச் சுமந்து செல்வார்; அந்தப் பையிலும் புத்தகங்களை அடைத்து வைத்துச் செல்வார். அமெரிக்கா, பென்ஸில்வேனியாவிலுள்ள ஒரு நகரத்தில் அநேகர் ஆர்வம் காட்டியதால் புத்தகங்களை சப்ளை செய்யும் நாளில் மூன்று அல்லது நான்கு முறை மேம்பாலத்தில் ஏறி இறங்குவார்.

1987-ல், சூட்கேஸுகளைத் தள்ளிச் செல்லும் வண்டியை ஒரு விமானி கண்டுபிடித்தார்; அதைத்தான் இன்று விமான நிலையங்களிலும் ரயில் நிலையங்களிலும் சர்வ சாதாரணமாகப் பார்க்கிறோம். ஆனால், சுமார் நூறு வருடங்களுக்கு முன்பாகவே, பக்திவைராக்கியமிக்க பைபிள் மாணாக்கர்கள் சத்தியத்தைப் பரப்ப “உதயம் வண்டிகளை” தள்ளிச் சென்றார்கள்; அதை எல்லாரும் வாய் பிளக்க பார்ப்பதைக் கண்டு அவர்கள் எவ்வளவாய்ப் பூரித்துப் போயிருப்பார்கள்!

[பக்கம் 32-ன் சிறு குறிப்பு]

புத்தகங்களை சப்ளை செய்யும் நாளில் சகோதரி கீஃபர் மூன்று அல்லது நான்கு முறை மேம்பாலத்தில் ஏறி இறங்குவார்

[பக்கம் 32-ன் சிறு குறிப்பு]

“உதயம்” புத்தகங்களைத் தூக்கிச் செல்லும் பிரச்சினையை இது தீர்த்து வைத்தது