Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கடவுளது வார்த்தையைத் தைரியமாய் அறிவித்தார்கள்!

கடவுளது வார்த்தையைத் தைரியமாய் அறிவித்தார்கள்!

கடவுளது வார்த்தையைத் தைரியமாய் அறிவித்தார்கள்!

எதிர்ப்பின் மத்தியிலும் தைரியம், இன்னும் சொல்லப்போனால் துணிவு. இந்தப் பண்புகளைத்தான் உண்மைக் கிறிஸ்தவர்கள் வெளிக்காட்டுகிறார்கள்; கடவுளது அரசைப் பற்றி ‘முழுமையாகச் சாட்சி கொடுங்கள்,’ யெகோவாவின் சாட்சிகள்—கடவுளுடைய ராஜ்யத்தை அறிவிப்போர் (ஆங்கிலம்) போன்ற பிரசுரங்கள் இவற்றையே படம்பிடித்துக் காட்டுகின்றன. முதல் நூற்றாண்டில் வாழ்ந்த நமது சக விசுவாசிகளைப் போல், யெகோவாவின் வார்த்தையைத் தைரியத்துடன் பேச அவரது சக்திக்காகவும் உதவிக்காகவும் நாம் ஜெபிக்கிறோம்.—அப். 4:23-31.

முதல் உலகப் போர் நடந்த சமயத்தில் நாம் செய்துவந்த பிரசங்க வேலையைப் பற்றிச் சகோதரர் ஒருவர் இவ்வாறு எழுதினார்: “வேதாகமத்தில் படிப்புகள் என்ற புத்தகத்தின் ஏழாவது தொகுதியை, அதாவது நிறைவேறித்தீர்ந்த இரகசியம் (ஆங்கிலம்) என்ற புத்தகத்தை, கடவுளுடைய ஊழியர்கள் ஊக்கமாய் விநியோகித்துக் கொண்டிருந்தார்கள். அது வரலாறு காணாத அளவுக்கு அதிகமாய் விநியோகிக்கப்பட்டது. 1918-ல் ராஜ்ய செய்தி எண் 1 வெளியிடப்பட்டது. அடுத்து, ராஜ்ய செய்தி எண் 2 வெளிவந்தது; இது, நிறைவேறித்தீர்ந்த இரகசியம் புத்தகத்தை ஏன் அதிகாரிகள் முடக்கினார்கள் என்பதை விளக்கியது. இதற்குப்பின், ராஜ்ய செய்தி எண் 3 களமிறங்கியது. இந்தப் பிரசுரங்கள் உண்மையுள்ள அடிமை வகுப்பாரால் பரந்த அளவில் விநியோகிக்கப்பட்டன. ராஜ்ய செய்தியை மக்களிடம் கொண்டுசேர்க்க விசுவாசமும் தைரியமும் தேவைப்பட்டன.”

இன்று புதிய பிரஸ்தாபிகள் ஊழியம் செய்வதற்குப் பொதுவாகப் பயிற்சி பெறுகிறார்கள், ஆனால் அந்தக் காலத்தில் இதெல்லாம் கிடையாது. 1922-ல் முதன்முதலாக வெளி ஊழியத்தில் கலந்துகொண்டபோது ஏற்பட்ட அனுபவத்தைப் பற்றி அமெரிக்காவில் வசித்துவந்த போலந்து நாட்டுச் சகோதரர் இப்படி எழுதினார்: “பிரசுரங்களை எப்படிக் கொடுப்பது என்று எனக்குத் தெரியாது, ஆங்கிலமும் அரைகுறைதான்; ஆனாலும், நான் மட்டும் தனியாக ஒரு டாக்டருடைய கிளினிக் முன்னால் நின்றுகொண்டு கதவைத் தட்டினேன். ஒரு நர்ஸ் வந்து கதவைத் திறந்தார். அந்த அனுபவத்தை என்னால் மறக்கவே முடியாது, அப்போது எனக்கு வியர்க்க விறுவிறுத்தது. என்னுடைய பையைத் திறந்தபோது, அதிலிருந்த புத்தகங்களெல்லாம் அந்த நர்ஸுடைய காலடியில் கொட்டின. அப்போது என்ன பேசினேன் என்று எனக்குத் தெரியாது, ஆனால் அவருக்கு ஒரு பிரசுரத்தைக் கொடுத்தேன். அங்கிருந்து கிளம்புவதற்குள், எனக்குத் தைரியம் வந்திருந்தது, யெகோவாவின் ஆசீர்வாதத்தையும் உணர்ந்தேன். அன்றைக்கு அந்தக் கடைத் தெருவில் அநேக சிறுபுத்தகங்களை விநியோகித்தேன்.”

“1933 வாக்கில், ராஜ்ய செய்தியைப் பரப்ப சகோதரர்கள் அநேகர் சவுண்டு கார்களை (ஒலிபெருக்கிப் பொருத்தப்பட்ட கார்களை) பயன்படுத்தினார்கள்” என்கிறார் ஒரு சகோதரி. ஒரு சமயம், இவரும் வேறொரு தம்பதியினரும் அமெரிக்கா, கலிபோர்னியாவிலுள்ள மலைப்பிரதேசத்தில் ஊழியம் செய்துகொண்டிருந்தார்கள். “அந்தச் சகோதரர் சவுண்டு காரை எடுத்துக்கொண்டு மலை உச்சிக்குச் சென்றுவிட்டார், நாங்களோ மலையடிவாரத்திலேயே இருந்தோம்” என்று அந்தச் சகோதரி சொன்னார். அதோடு, “பதிவு செய்யப்பட்ட செய்தியை அவர் ஒலிபரப்ப ஆரம்பித்தபோது, பரலோகத்திலிருந்து சத்தம் வருவது போலவே இருந்தது. அந்த ஊர் மக்கள் அந்தச் சகோதரரைத் தேடித் தேடிப் பார்த்தார்கள், ஆனால் அவர்களால் கண்டுபிடிக்கவே முடியவில்லை. ஒலிபரப்பு முடிந்தவுடன், நாங்கள் மக்களைச் சந்தித்து அவர்களுக்குச் சாட்சி கொடுத்தோம். இதுபோல் நான் இன்னும் இரண்டு முறை சவுண்டு கார் ஊழியத்தில் ஈடுபட்டேன். பெரும்பாலான ஆட்களுக்குச் செய்தியைக் கேட்க இஷ்டமே இல்லை; ஆனாலும் வேறு வழியில்லாமல் கேட்டார்கள், ஏனென்றால் சவுண்டு காரிலிருந்து ஒலித்த பேச்சுகள் அவர்களுடைய வீடுகளில் அவ்வளவு சத்தமாகக் கேட்டன. சரியான நேரத்தில் சரியான முறையை ஊழியத்தில் யெகோவா பயன்படுத்த வைத்தார்; இதை எங்களால் எப்போதுமே பார்க்க முடிந்தது. இந்த முறையைப் பயன்படுத்தி ஊழியம் செய்ய எங்களுடைய தைரியத்தையெல்லாம் ஒன்றுதிரட்ட வேண்டியிருந்தது, ஆனால் எப்போதும் பலன் கிடைத்தது, யெகோவாவின் பெயர் மகிமைப்படுத்தப்பட்டது” என்றார்.

1930-கள் முதல் 1940-களின் ஆரம்பம் வரை, ஃபோனோகிராப்ஃபும் பதிவு செய்யப்பட்ட பைபிள் பேச்சுகளும் ஊழியத்தில் பயன்படுத்தப்பட்டன. கிறிஸ்தவப் பெண்மணி ஒருவர் தன் கடந்தகால நினைவுகளை நம் கண்முன் கொண்டுவந்து நிறுத்துகிறார்: “ஓர் இளம் சகோதரி ஃபோனோகிராப்ஃபைப் பயன்படுத்தி வீட்டுக்கு வீடு ஊழியம் செய்துகொண்டிருந்தார். ஒரு வீட்டில் அதைப் போட்டுக் காட்ட ஆரம்பித்ததும், அந்த வீட்டுக்காரருக்குக் கோபம் தலைக்கேறியது; உடனே திண்ணையிலிருந்த அந்த ஃபோனோகிராப்ஃபை எட்டி உதைத்தார். ஆனால், அதிலிருந்த எந்த ரெக்கார்டும் உடையவில்லை. பக்கத்தில் நிறுத்தப்பட்டிருந்த லாரியில் உட்கார்ந்து மதிய சாப்பாடு சாப்பிட்டுக்கொண்டிருந்த மூன்று பேர் அங்கு நடந்ததைப் பார்த்தார்கள்; தங்களுக்கு அந்த ரெக்கார்டைப் போட்டுக் காட்டச் சொல்லி அந்தச் சகோதரியைக் கேட்டார்கள்; அவரிடமிருந்து பிரசுரங்களையும் வாங்கிக்கொண்டார்கள். சற்றுமுன் அந்த வீட்டுக்காரர் மோசமாக நடந்திருந்தாலும், இந்த மூவர் ஆர்வமாய்க் கேட்டது அவருடைய மனதுக்குச் சந்தோஷத்தைத் தந்தது.” இப்படிப்பட்ட கஷ்டங்களைச் சகிக்க தைரியம் தேவைப்பட்டது.

அதே சகோதரி மேலும் கூறினார்: “1940-ல், தெரு ஊழியத்தில் பத்திரிகைகளை விநியோகிக்கத் தொடங்கியது என் நினைவுக்கு வருகிறது. அதற்கு முன்பு, அணிவகுப்புகள் நடத்தினோம். அதாவது, ‘மதம் ஒரு கண்ணி, மோசடி,’ ‘கடவுளையும் கிறிஸ்து ராஜாவையும் சேவியுங்கள்’ என்றெல்லாம் எழுதப்பட்ட வாசகங்களைக் கையில் பிடித்துக்கொண்டு சகோதர சகோதரிகள் எல்லாரும் நடைபாதையில் வரிசையாகப் போனோம். அதேசமயத்தில், மக்களுக்குத் துண்டுப்பிரதிகளை இலவசமாகக் கொடுத்துக்கொண்டு சென்றோம். ஊழியத்தின் இந்த அம்சங்களில் ஈடுபடுவதற்குத் தைரியம் தேவைப்பட்டது. ஆனால், பொது மக்களுக்கு யெகோவாவின் பெயரையும் அவரது ஜனங்களையும் பற்றி விளம்பரப்படுத்த அவை உதவின.”

மற்றொரு சகோதரி கூறினார்: “சின்னச்சின்ன ஊர்களில் பத்திரிகை ஊழியம் செய்வது ரொம்பக் கஷ்டமாக இருந்தது, முக்கியமாக யெகோவாவின் சாட்சிகளுக்கு எதிர்ப்பு பலமாக இருந்த சமயத்தில் கஷ்டமாக இருந்தது. . . . பத்திரிகைகளைக் கையில் பிடித்துக்கொண்டு தெருமுனையில் நிற்பதற்கும் வாசகங்களைச் சத்தமாகச் சொல்வதற்கும் உண்மையிலேயே தைரியம் தேவைப்பட்டது. இருந்தாலும், ஒரு சனிக்கிழமைகூட நாங்கள் தவற மாட்டோம். சிலசமயங்களில் மக்கள் அன்பாகக் கேட்பார்கள். மற்ற சமயங்களில் முரட்டு ஆட்கள் கூடிவிடுவார்கள்; அப்படிப்பட்ட ஆட்களிடமிருந்து தப்பிப்பதற்காக நாங்கள் சில சந்தர்ப்பங்களில் நழுவிச்செல்ல வேண்டியிருக்கும்.”

இரண்டாம் உலகப் போரின் சமயத்தில் துன்புறுத்தல் வந்தபோதிலும், யெகோவாவின் சாட்சிகள் தங்களுடைய ஊழியத்தைத் தைரியத்துடன் செய்தார்கள். டிசம்பர் 1, 1940 முதல் ஜனவரி 12, 1941 வரை 43 நாட்களாகச் செய்யப்பட்ட விசேஷ ஊழியத்தின்போது அமெரிக்காவிலிருந்த சுமார் 50,000 பிரஸ்தாபிகள் ஏறக்குறைய எண்பது லட்சம் சிறுபுத்தகங்களை விநியோகித்தார்கள்; அந்தக் காலம் “‘தைரியத்தை’ பறைசாற்றும் காலம்” என்றழைக்கப்பட்டது.

கடவுளுடைய அமைப்பிலுள்ள வயதானவர்கள் பலருடைய மனதில், தைரியத்தோடு எதிர்ப்பட வேண்டியிருந்த கடந்தகால சவால்கள் பசுமையாக இருக்கின்றன. பல ஆண்டுகளாக அவர்கள் அடிக்கடி பயன்படுத்திய வாசகத்தில்... இறுதிவரை போராடுவோம் என்ற வாசகத்தில்... அவர்களுடைய தைரியம் பளிச்சிட்டதைச் சிலர் நினைத்துப்பார்க்கிறார்கள். இந்தப் பொல்லாத உலகிற்கு முடிவு வரும்முன் கடவுளுடைய செய்தி வேறு என்னென்ன விதங்களில் அறிவிக்கப்படும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். என்றாலும், கடவுளுடைய உதவியுடன் அவரது வார்த்தையை விசுவாசத்தோடும் தைரியத்தோடும் நாம் தொடர்ந்து பறைசாற்றுவோம்.

[பக்கம் 9-ன் சிறு குறிப்பு]

பிரசங்க வேலையில் ஈடுபட எப்போதுமே தைரியம் தேவைப்பட்டிருக்கிறது