Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

சபையில் நல்ல மனப்பான்மை பளிச்சிட . . .

சபையில் நல்ல மனப்பான்மை பளிச்சிட . . .

சபையில் நல்ல மனப்பான்மை பளிச்சிட . . .

“நல்ல மனப்பான்மையை வெளிக்காட்டுகிற உங்கள்மீது நம் எஜமானராகிய இயேசு கிறிஸ்துவின் அளவற்ற கருணை இருப்பதாக.” —பிலி. 4:23.

சபையின் நல்ல மனப்பான்மையை எப்படிக் காக்கலாம்:

நம் சகோதரர்களோடு பழகும்போது?

பக்திவைராக்கியத்துடன் ஊழியம் செய்வதன் மூலம்?

பெரிய பாவத்தைத் தெரியப்படுத்துவதன் மூலம்?

1. பிலிப்பியிலும் தியத்தீராவிலும் இருந்த கிறிஸ்தவர்கள் எதற்காகப் பாராட்டப்பட்டார்கள்?

 முதல் நூற்றாண்டில், பிலிப்பியில் வசித்த கிறிஸ்தவர்கள் ஏழைகளாக இருந்தார்கள். என்றாலும், தாராள மனம் படைத்தவர்களாக, சக விசுவாசிகள்மீது ஆழ்ந்த அன்பு காட்டுகிறவர்களாக இருந்தார்கள். (பிலி. 1:3-5, 9; 4:15, 16) ஆகவே, அப்போஸ்தலன் பவுல் அவர்களுக்கு எழுதிய கடிதத்தின் முடிவில், “நல்ல மனப்பான்மையை வெளிக்காட்டுகிற உங்கள்மீது நம் எஜமானராகிய இயேசு கிறிஸ்துவின் அளவற்ற கருணை இருப்பதாக” என்று குறிப்பிட்டார். (பிலி. 4:23) தியத்தீராவிலிருந்த கிறிஸ்தவர்களும் அதேபோல் நல்ல மனப்பான்மையைக் காட்டினார்கள்; அதனால்தான், இயேசு கிறிஸ்து அவர்களிடம் இப்படிச் சொன்னார்: ‘உங்கள் செயல்களும், உங்கள் அன்பும், உங்கள் விசுவாசமும், உங்கள் ஊழியமும், உங்கள் சகிப்புத்தன்மையும் எனக்குத் தெரியும்; முன்பைவிட இப்போது நீங்கள் அதிகமான செயல்களைச் செய்கிறீர்கள் என்பதும் எனக்குத் தெரியும்.’—வெளி. 2:19.

2. நம் மனப்பான்மை எப்படி நம் சபையின் மனப்பான்மையைப் பாதிக்கிறது?

2 அதேபோல் இன்று யெகோவாவின் சாட்சிகளுடைய ஒவ்வொரு சபையிலும் ஒவ்வொரு விதமான மனப்பான்மை பளிச்சிடுவதைக் காண முடிகிறது. சில சபைகள் அன்பும் பாசமும் காட்டுவதில் பேர்பெற்றிருக்கின்றன. மற்றவை, பிரசங்க வேலையில் பக்திவைராக்கியத்துடன் ஈடுபடுவதிலும், முழுநேர ஊழியத்தை உயர்வாய் மதிப்பதிலும் பேர்பெற்று விளங்குகின்றன. நாம் தனிப்பட்டவர்களாக நல்ல மனப்பான்மையை வளர்த்துக்கொள்ளும்போது சபையின் ஒற்றுமைக்கும் ஆன்மீக முன்னேற்றத்திற்கும் துணைபுரிகிறோம். (1 கொ. 1:10) மறுபட்சத்தில், நாம் கெட்ட மனப்பான்மையைக் காட்டினால், சபையில் உள்ளவர்கள் ஆன்மீக ரீதியில் மந்தமாகிவிடுவதற்கு... ஊழியத்தில் ஆர்வத்தை இழந்துவிடுவதற்கு... குற்றங்களைக் கண்டும்காணாமல் விட்டுவிடுவதற்கு... நாம் காரணமாகிவிடலாம். (1 கொ. 5:1; வெளி. 3:15, 16) உங்கள் சபையில் எப்படிப்பட்ட மனப்பான்மை பளிச்சிடுகிறது? சபையில் நல்ல மனப்பான்மையை ஊக்குவிக்க உங்கள் பங்கில் என்ன செய்யலாம்?

நல்ல மனப்பான்மையை ஊக்குவியுங்கள்

3, 4. நாம் யெகோவாவை எப்படி ‘மகா சபையிலே துதிக்கலாம்’?

3 ‘மகா சபையிலே உம்மை [யெகோவாவை] துதிப்பேன்; திரளான ஜனங்களுக்குள்ளே உம்மைப் புகழுவேன்’ எனச் சங்கீதக்காரர் பாடினார். (சங். 35:18) சக வணக்கத்தாருடன் இருந்த சமயங்களில் அவர் யெகோவாவைத் துதித்தார். காவற்கோபுர படிப்பு போன்ற சபைக் கூட்டங்களில் பதில்கள் சொல்வதன் மூலம் நம் பக்திவைராக்கியத்தையும் விசுவாசத்தையும் காட்ட வாய்ப்புகள் கிடைக்கின்றன. ஆகவே, ‘முடிந்தளவு நிறையப் பதில்கள் சொல்கிறேனா? நன்றாகத் தயாரித்துச் சென்று அர்த்தமுள்ள பதில்களைச் சொல்கிறேனா?’ என்று நம்மையே கேட்டுக்கொள்ள வேண்டும். அதோடு, குடும்பத் தலைவர்கள் இவ்வாறு கேட்டுக்கொள்ள வேண்டும்: ‘என் பிள்ளைகள் முன்கூட்டியே பதில்களைத் தயார் செய்யவும் சொந்த வார்த்தைகளில் சொல்லவும் உதவுகிறேனா?’

4 நமக்கு உறுதியான உள்ளம் இருப்பதை, அதாவது சரியானதைச் செய்ய உறுதிபூண்டிருக்கும் உள்ளம் இருப்பதை, கூட்டங்களில் நாம் பாடும் விதத்தின் மூலம் காட்டலாம். “என் உள்ளம் உறுதியாயிருக்கின்றது; கடவுளே! என் உள்ளம் உறுதியாயிருக்கின்றது; நான் பாடுவேன்; உம்மைப் புகழ்ந்து பாடுவேன்” என்று தாவீது சொன்னார். (சங். 57:7, பொது மொழிபெயர்ப்பு) கிறிஸ்தவக் கூட்டங்களில், உறுதியான உள்ளத்துடன் யெகோவாவைப் ‘புகழ்ந்து பாட’ அருமையான வாய்ப்புகள் கிடைக்கின்றன. அங்கு பாடப்படும் சில பாடல்கள் நமக்குச் சரியாகத் தெரியாவிட்டால், குடும்ப வழிபாட்டின்போது ஏன் அவற்றைப் பழகிப் பார்க்கக் கூடாது? ‘வாழும் நாளெல்லாம் யெகோவாவைப் போற்றிப் பாடவும் உயிர் உள்ளவரை அவருக்குப் புகழ் சேர்க்கவும்’ நாம் தீர்மானமாய் இருப்போமாக!—சங். 104:33, பொ.மொ.

5, 6. உபசரிக்கும் குணத்தையும் தாராள மனப்பான்மையையும் நாம் எவ்வாறு காட்டலாம், இது சபையை எப்படி உந்துவிக்கும்?

5 சபையில் அன்பான மனப்பான்மையை வளர்ப்பதற்கு இன்னொரு வழி, சகோதர சகோதரிகளை உபசரிப்பதாகும். எபிரெயர்களுக்கு பவுல் எழுதிய கடிதத்தின் கடைசி அதிகாரத்தில், “தொடர்ந்து சகோதர அன்பைக் காட்டுங்கள். உபசரிக்கும் குணத்தைக் காட்ட மறந்துவிடாதீர்கள்” என்று அறிவுறுத்தினார். (எபி. 13:1, 2) பயணக் கண்காணிகளையும் அவர்களுடைய மனைவிகளையும் நம் சபையிலுள்ள முழுநேர ஊழியர்களையும் சாப்பாட்டுக்கு அழைப்பது அவர்களை உபசரிப்பதற்கான மிகச் சிறந்த வழியாகும். சிலசமயங்களில், விதவைகளையோ, ஒற்றைப் பெற்றோர் குடும்பங்களையோ, மற்றவர்களையோ நாம் சாப்பாட்டுக்கு அல்லது குடும்ப வழிபாட்டுக்கு அழைக்கலாம்.

6 தீமோத்தேயுவிடம் பவுல் இவ்வாறு கூறினார்: “நன்மை செய்கிறவர்களாகவும், நற்செயல்களில் செல்வந்தர்களாகவும், தாராளமாகக் கொடுக்கிறவர்களாகவும், தங்களிடம் உள்ளதைப் பகிர்ந்துகொள்ள மனமுள்ளவர்களாகவும் இருக்க வேண்டுமென்றும் [மற்றவர்களுக்கு] கட்டளையிடு; இவ்விதத்தில் எதிர்காலத்திற்கென்று நல்ல அஸ்திவாரத்தை அமைத்து, அதைப் பொக்கிஷமாகப் பாதுகாக்க வேண்டுமென்று கட்டளையிடு; இப்படிச் செய்யும்போது, உண்மையான வாழ்வைக் கண்டிப்பாக அவர்கள் அடைவார்கள்.” (1 தீ. 6:17-19) தாராள மனப்பான்மையை வளர்த்துக்கொள்ளும்படி பவுல் தன் சக வணக்கத்தாரை ஊக்குவித்தார். பணக் கஷ்டத்தில் இருக்கும் சமயங்களில்கூட நாம் தாராள மனப்பான்மையைக் காட்ட முடியும். இதற்கு ஒரு வழி: வெளி ஊழியத்திற்கும் கூட்டங்களுக்கும் சகோதர சகோதரிகளை நம்மோடு அழைத்துச் செல்வதாகும். அதற்கு அவர்கள் எப்படித் தங்களுடைய நன்றியுணர்வைக் காட்டி, சபையில் நல்ல மனப்பான்மையை ஊக்குவிக்கலாம்? ஏறிக்கொண்டே போகும் பயணச் செலவுக்குத் தங்களால் முடிந்த தொகையைக் கொடுக்கலாம். நம் சகோதர சகோதரிகள்மீது அன்பும் அக்கறையும் காட்ட இன்னொரு வழி: அவர்களோடு இன்னுமதிக நேரம் செலவிடுவதாகும். “நம்முடைய விசுவாசக் குடும்பத்தாருக்கு” நாம் ஏராளமான நன்மைகள் செய்யும்போது... நம் நேரத்தையும் உடைமைகளையும் அவர்களுடன் பகிர்ந்துகொள்ளும்போது... அவர்கள் மீதுள்ள அன்பு பெருகும்; அதுமட்டுமல்ல, நல்ல மனப்பான்மையைக் காட்ட சபையில் உள்ளவர்களும் உந்துவிக்கப்படுவார்கள்.—கலா. 6:10.

7. மற்றவர்களுடைய சொந்த விஷயங்களை ரகசியமாக வைத்துக்கொள்வது எப்படிச் சபையின் நல்ல மனப்பான்மையைக் காக்கும்?

7 சகோதர சகோதரிகள் மத்தியிலுள்ள பாசப் பிணைப்பைப் பலப்படுத்துகிற இன்னும் இரண்டு விஷயங்கள்: நண்பர்களாய் இருப்பது, ரகசியத்தைக் காப்பது. (நீதிமொழிகள் 18:24-ஐ வாசியுங்கள். *) நாம் உண்மையான நண்பர்களாக இருந்தால், நம் நண்பர்கள் நம்மிடம் சொல்லும் சொந்த விஷயங்களை மற்றவர்களிடம் சொல்ல மாட்டோம். நாம் ரகசியம் காப்போம் என்ற நம்பிக்கையில் நம் சகோதரர்கள் தங்கள் எண்ணங்களையும் உணர்ச்சிகளையும் மனம்திறந்து சொல்லும்போது, நம்மிடையே உள்ள பாசப் பிணைப்பு இன்னும் பலமாகிறது. ஆகவே, ரகசியம் காக்கிற நம்பகமான நண்பராய் இருப்போமாக; இவ்வாறு, சபையில் உள்ள அனைவரும் ஒரே குடும்பம்போல் பாசமாய்ப் பிணைந்திருக்க உதவுவோமாக.—நீதி. 20:19.

ஊழியத்தில் பக்திவைராக்கியத்துடன் ஈடுபடுங்கள்

8. லவோதிக்கேயா சபையினர் என்ன அறிவுரை பெற்றார்கள், ஏன்?

8 லவோதிக்கேயா சபையிடம் இயேசு இவ்வாறு கூறினார்: “உன் செயல்களை நான் அறிந்திருக்கிறேன்; நீ குளிர்ச்சியாகவும் இல்லை, சூடாகவும் இல்லை. நீ குளிர்ச்சியாகவோ சூடாகவோ இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்! ஆனால், நீ சூடாகவும் இல்லாமல் குளிர்ச்சியாகவும் இல்லாமல் வெதுவெதுப்பாக இருப்பதால், என் வாயிலிருந்து உன்னைத் துப்பிவிடப்போகிறேன்.” (வெளி. 3:15, 16) லவோதிக்கேயா சபையினர் ஊழியத்தில் பக்திவைராக்கியத்துடன் ஈடுபடவில்லை. இதனால், அவர்களிடையே இருந்த உறவும் பாதிக்கப்பட்டிருக்கலாம். “என் பாசத்திற்குரிய அனைவரையும் நான் கடிந்துகொண்டு திருத்துவேன். ஆகவே, பக்திவைராக்கியத்தோடு இரு, மனந்திரும்பு” என்று இயேசு அவர்களுக்கு அன்போடு அறிவுரை வழங்கினார்.—வெளி. 3:19.

9. நாம் ஊழியத்தில் பக்திவைராக்கியத்துடன் ஈடுபடுவது எவ்வாறு சபைக்குப் பயனளிக்கிறது?

9 சபையில் நல்ல மனப்பான்மை பளிச்சிட வேண்டுமென்றால், நாம் வெளி ஊழியத்தில் பக்திவைராக்கியத்துடன் ஈடுபட வேண்டும். சபையின் நோக்கமே, பிராந்தியத்திலுள்ள நல்மனமுள்ளோரைத் தேடிக் கண்டுபிடித்து சத்தியத்தைப் போதிப்பதுதான். ஆகவே, சீடராக்கும் வேலையில் இயேசுவைப் போலவே நாமும் மிகுந்த ஆர்வத்தோடு ஈடுபட வேண்டும். (மத். 28:19, 20; லூக். 4:43) ஊழியத்தில் எந்தளவு பக்திவைராக்கியம் காட்டுகிறோமா அந்தளவு “கடவுளுடைய சக வேலையாட்களாக” ஒன்றுபட்டிருப்போம். (1 கொ. 3:9) மற்றவர்களோடு சேர்ந்து வெளி ஊழியம் செய்யும்போது, அவர்கள் தங்களுடைய நம்பிக்கையைப் பற்றி ஆணித்தரமாகப் பேசுவதையும் யெகோவாவின் மீதும் சத்தியத்தின் மீதும் அன்பு காட்டுவதையும் கண்ணாரக் காண்கிறோம்; இதனால், அவர்கள் மீதுள்ள நம் அன்பும் மதிப்பும் அதிகரிக்கிறது. அதோடு, நாம் அனைவரும் “ஒருமனப்பட்டு” ஊழியம் செய்யும்போது சபையில் ஒற்றுமை ஓங்குகிறது.செப்பனியா 3:9-ஐ வாசியுங்கள்.

10. நம் ஊழியத்தின் தரத்தை உயர்த்த நாம் எடுக்கும் முயற்சிகள் மற்றவர்கள்மீது என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்?

10 நம் ஊழியத்தின் தரத்தை உயர்த்த நாம் எடுக்கும் முயற்சிகள் மற்றவர்கள் மீதும் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தும். நாம் சந்திக்கும் நபர்கள்மீது அதிக அக்கறை காட்டி அவர்களுடைய இருதயத்தைத் தொட கடினமாக உழைத்தால், ஊழியத்தில் நம் உற்சாகம் அதிகரிக்கும். (மத். 9:36, 37) அந்த உற்சாகம் நம்முடன் இருப்பவர்களையும் தொற்றிக்கொள்ளும். பிரசங்கிக்க இயேசு தமது சீடர்களைத் தனியாக அனுப்பாமல் இரண்டு இரண்டு பேராக அனுப்பினார். (லூக். 10:1) இது அவர்களுக்கு உற்சாகத்தையும் பயிற்சியையும் அளித்தது; அதுமட்டுமல்லாமல், இன்னுமதிக பக்திவைராக்கியத்துடன் ஊழியம் செய்யத் தூண்டியது. பக்திவைராக்கியமிக்க சகோதர சகோதரிகளுடன் சேர்ந்து ஊழியம் செய்ய நாம் அதிக ஆசைப்படுகிறோம், அல்லவா? அவர்களுடைய உற்சாகம் நம்மையும் தொற்றிக்கொண்டு, ஊழியத்தில் தொடர்ந்து ஈடுபட உந்துவிக்கிறது.—ரோ. 1:12.

முறுமுறுக்காதீர்கள், பெரிய பாவங்களை மறைக்காதீர்கள்

11. மோசேயின் காலத்தில் இஸ்ரவேலர் சிலர் எப்படிப்பட்ட மனப்பான்மையைக் காட்டினார்கள், அதன் விளைவு என்ன?

11 இஸ்ரவேலரை யெகோவா ஒரு தேசமாக்கிய சில வாரங்களிலேயே அவர்கள் முறுமுறுக்க ஆரம்பித்துவிட்டார்கள். இதன் விளைவு? யெகோவாவுக்கும் அவரது பிரதிநிதிகளுக்கும் எதிராகக் கலகம் செய்தார்கள். (யாத். 16:1, 2) ஆகவே, எகிப்தைவிட்டு வந்த இஸ்ரவேலரில் கொஞ்சம் பேரே வாக்குப்பண்ணப்பட்ட தேசத்திற்குள் செல்ல அனுமதிக்கப்பட்டார்கள். சொல்லப்போனால், மோசேயும்கூட அங்கு செல்ல அனுமதிக்கப்படவில்லை; ஏனென்றால், இஸ்ரவேலர் கெட்ட மனப்பான்மையைக் காட்டியபோது அவர் சரியாக நடந்துகொள்ளவில்லை. (உபா. 32:48-52) இன்று, கெட்ட மனப்பான்மையை நாம் எவ்வாறு தவிர்க்கலாம்?

12. முறுமுறுக்கும் மனப்பான்மை நமக்கு வந்துவிடாதபடி எப்படிப் பார்த்துக்கொள்ளலாம்?

12 முறுமுறுக்கும் மனப்பான்மை நமக்கு வந்துவிடாதபடி நாம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். மனத்தாழ்மையையும் அதிகாரத்திற்கு மதிப்புமரியாதையையும் காட்டுவது இந்த மனப்பான்மையைத் தவிர்க்க நமக்கு உதவும். அதோடு, நம் சகவாசத்தை ஞானமாகத் தேர்ந்தெடுப்பதுகூட உதவும். நாம் கெட்ட பொழுதுபோக்கைத் தேர்ந்தெடுத்தால், அல்லது பள்ளியிலோ வேலை செய்யுமிடத்திலோ யெகோவாவுக்குக் கீழ்ப்படியாதவர்களோடு அதிக நேரம் செலவிட்டால், விபரீதங்கள் விளையலாம். முறுமுறுக்கிறவர்களோடு அல்லது மனம்போல் நடக்கிறவர்களோடு ஒட்டி உறவாடாமல் இருப்பது நல்லது.—நீதி. 13:20.

13. முறுமுறுக்கும் கெட்ட குணம், சபையில் என்ன ஆன்மீகக் கேடுகளை விளைவிக்கலாம்?

13 முறுமுறுக்கும் கெட்ட குணம், சபையில் ஆன்மீகக் கேடுகளை விளைவிக்கலாம் . உதாரணத்திற்கு, அந்தக் குணம் சபையின் சமாதானத்தையும் ஒற்றுமையையும் குலைத்துப்போடலாம். மேலும், சக வணக்கத்தாரைப் பற்றிக் குறைகூறுவது அவர்களுக்கு வேதனையைத் தரலாம்; அதோடு, அவர்களைப் பற்றிக் கோள்சொல்வது, சபித்துப் பேசுவது போன்ற பாவங்களைச் செய்ய நம்மை வழிநடத்தலாம். (லேவி. 19:16; 1 கொ. 5:11) முதல் நூற்றாண்டு சபையில் முறுமுறுத்துக்கொண்டிருந்த சிலர், ‘தலைமை ஸ்தானத்தில் உள்ளவர்களை அவமதித்தார்கள், மகிமையானவர்களைப் பழித்துப் பேசினார்கள்.’ (யூ. 8, 16) இப்படி, சபையில் பொறுப்பான ஸ்தானத்தில் இருந்தவர்களுக்கு எதிராக முறுமுறுத்தவர்கள் கடவுளுடைய அங்கீகாரத்தைப் பெறவே இல்லை.

14, 15. (அ) பெரிய பாவத்தைக் கண்டும்காணாமல் விட்டுவிட்டால் முழு சபையும் எப்படிப் பாதிக்கப்படலாம்? (ஆ) ஒருவர் ரகசியமாகப் பாவம் செய்வது நமக்குத் தெரியவந்தால் என்ன செய்ய வேண்டும்?

14 ஒருவர் ரகசியமாக ஏதோவொரு பெரிய பாவத்தைச் செய்வது உங்களுக்குத் தெரியவரலாம்; உதாரணமாக, அவர் மதுபானத்தை மிதமீறிக் குடிப்பது, ஆபாசக் காட்சிகளைப் பார்ப்பது, அல்லது ஒழுக்கக்கேடான வாழ்க்கை வாழ்வது உங்களுக்குத் தெரியவரலாம். அப்போது என்ன செய்வீர்கள்? (எபே. 5:11, 12) அப்படிப்பட்ட பாவங்களை நாம் கண்டும்காணாமல் விட்டுவிட்டால், சபையில் யெகோவா தமது சக்தியைப் பொழிய மாட்டார்; அதோடு, முழு சபையின் சமாதானமும் குலைந்துவிடும். (கலா. 5:19-23) பழைய புளித்த மாவை எறிந்துவிடும்படி கொரிந்தியக் கிறிஸ்தவர்களுக்கு பவுல் அறிவுறுத்தினார். அதேபோல் இன்றும், சபையைத் தீய செல்வாக்குகள் பாதிக்காதபடி நாம் பார்த்துக்கொள்ள வேண்டும்; அப்போதுதான் சபையின் நல்ல மனப்பான்மையைக் காக்க முடியும். சபையில் சமாதானம் பூத்துக் குலுங்க உங்கள் பங்கில் என்ன செய்யலாம்?

15 முன்பு குறிப்பிட்டபடி, சில விஷயங்களை நாம் ரகசியமாக வைத்துக்கொள்ள வேண்டும்; அதுவும் ஒருவர் நம்மை நம்பி மனம்திறந்து சொல்லும் விஷயங்களை மற்றவர்களிடம் சொல்லக் கூடாது. ஒருவரைப் பற்றிய ரகசிய விஷயங்களை மற்றவர்களிடம் சொல்வது தவறானது, அன்பற்றது. என்றாலும், ஒருவர் ஏதோவொரு பெரிய பாவத்தைச் செய்துவிட்டால் அது சபையிலுள்ள மூப்பர்களின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட வேண்டும்; வேதவசனங்களின்படி, தேவையான நடவடிக்கை எடுக்க அவர்களுக்குத்தான் பொறுப்பு இருக்கிறது. (லேவியராகமம் 5:1-ஐ வாசியுங்கள்.) ஆகவே, ஒரு சகோதரரோ சகோதரியோ ஒரு பெரிய பாவத்தைச் செய்துவிட்டதை நாம் அறியவரும்போது, மூப்பர்களிடம் அதைத் தெரிவிக்கும்படியும் அவர்களுடைய உதவியைக் கேட்கும்படியும் அந்த நபரிடம் சொல்ல வேண்டும். (யாக். 5:13-15) கொஞ்ச நாளாகியும் அவர் அப்படிச் செய்யாவிட்டால், நாமே மூப்பர்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும்.

16. யாரேனும் பெரிய பாவத்தைச் செய்தால் நாம் மூப்பர்களுக்குத் தெரியப்படுத்துவதன் மூலம் எவ்வாறு சபையைப் பாதுகாக்கலாம்?

16 கிறிஸ்தவச் சபை ஆன்மீக ரீதியில் நமக்கு ஒரு புகலிடமாக இருக்கிறது; ஆகவே, யாரேனும் பெரிய பாவத்தைச் செய்தால் நாம் மூப்பர்களுக்குத் தெரியப்படுத்துவதன் மூலம் சபையைப் பாதுகாக்க வேண்டும். மூப்பர்களின் உதவியுடன் அந்த நபர் தனது குற்றத்தை உணர்ந்து, மனந்திருந்தி, சிட்சையை ஏற்றுக்கொண்டால், அதற்குமேலும் அவர் சபையின் நல்ல மனப்பான்மையைக் குலைக்க மாட்டார். ஆனால், அவர் மனந்திரும்பாமலும் மூப்பர்களுடைய அன்பான அறிவுரையை ஏற்றுக்கொள்ளாமலும் போனால்? சபைநீக்கம் செய்யப்படுவார்; இவ்விதத்தில் சபையிலுள்ள தீய செல்வாக்கு ‘ஒழிக்கப்படும்,’ அதன் நல்ல மனப்பான்மை காக்கப்படும். (1 கொரிந்தியர் 5:5-ஐ வாசியுங்கள்.) ஆம், சபையின் மனப்பான்மையைக் காக்க நாம் அனைவருமே நடவடிக்கை எடுக்க வேண்டும், மூப்பர்களோடு ஒத்துழைக்க வேண்டும், சக விசுவாசிகளின் நலனைப் பாதுகாக்கப் பாடுபட வேண்டும்.

“ஒற்றுமையை” ஊக்குவியுங்கள்

17, 18. ‘ஒற்றுமையைக் காத்துக்கொள்ள’ நமக்கு எது உதவும்?

17 இயேசுவின் ஆரம்பகால சீடர்கள் சபையில் ஒற்றுமையை வளர்த்தார்கள்; அதற்காக, ‘அப்போஸ்தலர்கள் கற்றுக்கொடுத்த விஷயங்களுக்கு முழு கவனம் செலுத்தினார்கள்.’ (அப். 2:42) வேதவசனங்களிலிருந்து மூப்பர்கள் தந்த அறிவுரைகளையும் ஆலோசனைகளையும் அவர்கள் உயர்வாய் மதித்தார்கள். அதேபோல் இன்றும், அடிமை வகுப்பாரோடு மூப்பர்கள் ஒத்துழைப்பதால் ஒற்றுமையுடன் இருக்கத் தேவையான உதவியையும் உற்சாகத்தையும் சபையிலுள்ள அனைவருமே பெறுகிறார்கள். (1 கொ. 1:10) யெகோவாவின் அமைப்பு தருகிற பைபிள் அறிவுரையை நாம் கேட்டு நடந்தால்... மூப்பர்களின் பேச்சுக்குக் கட்டுப்பட்டு நடந்தால்... ‘கடவுளுடைய சக்தி அருளும் ஒற்றுமையைக் காத்துக்கொள்வதற்கும் சமாதானத்தோடு வாழ்வதற்கும் ஊக்கமாய் முயற்சி செய்கிறோம்’ என்பதைக் காட்டுவோம்.—எபே. 4:3.

18 ஆக, நம் சபையில் நல்ல மனப்பான்மை பளிச்சிட முழுமூச்சோடு பாடுபடுவோமாக. அப்போது, ‘நல்ல மனப்பான்மையை வெளிக்காட்டுகிற நம்மீது நம் எஜமானராகிய இயேசு கிறிஸ்துவின் அளவற்ற கருணை இருக்கும்’ என்பது உறுதி.—பிலி. 4:23.

[அடிக்குறிப்பு]

^ பாரா. 7 நீதிமொழிகள் 18:24 (பொ.மொ.): “கேடு வருவிக்கும் நண்பர்களுமுண்டு; உடன் பிறந்தாரைவிட மேலாக உள்ளன்பு காட்டும் தோழருமுண்டு.”

[கேள்விகள்]

[பக்கம் 19-ன் படம்]

நன்கு தயாரித்து, அர்த்தமுள்ள பதில்களைச் சொல்வதன் மூலம் சபையில் நல்ல மனப்பான்மையை ஊக்குவிக்கிறீர்களா?

[பக்கம் 20-ன் படம்]

ராஜ்ய பாடல்களைப் பழகிப் பார்ப்பதன் மூலம் சபையில் நல்ல மனப்பான்மை பளிச்சிட உதவுங்கள்