Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

நாத்தான் உண்மை வணக்கத்திற்குத் தோள்கொடுத்தவர்

நாத்தான் உண்மை வணக்கத்திற்குத் தோள்கொடுத்தவர்

நாத்தான் உண்மை வணக்கத்திற்குத் தோள்கொடுத்தவர்

அதிகாரத்தில் இருக்கும் ஒருவரிடம் போய், ‘நீங்கள் செய்வது பெரிய தப்பு, உங்களைத் திருத்திக்கொள்ள வேண்டும்’ எனச் சொல்வது சுலபமே இல்லை. அதுவும், செய்த தவறை மூடி மறைக்க அவர் கொலையே செய்திருக்கிறார் என்பது தெரிய வந்தால் நீங்கள் அவரிடம் போய் பேசுவீர்களா?

பூர்வ இஸ்ரவேலை ஆண்ட தாவீது ராஜா வேறொருவரின் மனைவியான பத்சேபாளுடன் உறவு கொண்டதால் அவள் கர்ப்பமானாள். அந்தப் பாவத்தை மறைக்க தாவீது அவளது கணவரைக் கொன்றுவிட்டு, அவளைத் தன் மனைவியாக்கிக் கொண்டார். மாதங்கள் உருண்டோடின, அவர் இரட்டை வாழ்க்கை வாழ்ந்து வந்தார்; எதுவுமே நடக்காததுபோல் தன் ராஜாங்க வேலைகளைக் கவனித்துவந்தார். ஆனால், யெகோவா அவரது பாவங்களைக் கண்டும்காணாமல் விட்டுவிடவில்லை. தாவீதுக்கு அவரது குற்றத்தை உணர்த்த நாத்தான் தீர்க்கதரிசியை அனுப்பினார்.

நாத்தானுடைய இடத்தில் உங்களை வைத்துப் பாருங்கள். தாவீது செய்த குற்றத்தைப் பற்றி அவரிடம் சொல்வது எவ்வளவு கஷ்டமாக இருந்திருக்கும், அல்லவா? ஆனாலும், அவரது பாவங்களைச் சுட்டிக்காட்ட நாத்தானை எது தூண்டியது? யெகோவாவின் மீது வைத்திருந்த பற்றுறுதியும், தெய்வீகத் தராதரங்களைக் கடைப்பிடிப்பதில் காட்டிய பக்திவைராக்கியமும் ஆகும். தாவீது ராஜாவின் தவறை நாத்தானால் எப்படி உணர்த்த முடிந்தது?

சாதுரியமாய்ப் புரியவைத்தார்

இப்போது, 2 சாமுவேல் 12:1-25 வசனங்களைக் கொஞ்சம் வாசித்துப் பார்க்கலாமா? நீங்கள் நாத்தானின் இடத்திலிருந்து தாவீதிடம் இந்தக் கதையைச் சொல்வதாகக் கற்பனை செய்துகொள்ளுங்கள்: “ஒரு நகரில் இரு மனிதர் இருந்தனர்; ஒருவன் செல்வன். மற்றவனோ ஏழை. செல்வனிடம் ஆடு, மாடுகள் ஏராளமாய் இருந்தன. ஏழையிடம் ஓர் ஆட்டுக்குட்டி தவிர வேறு ஒன்றுமே இல்லை. அவன் அதை விலைக்கு வாங்கியிருந்தான். அது அவனோடும் அவன் குழந்தைகளோடும் இருந்து வளர்ந்து பெரியதாகியது. அவனது உணவை உண்டு, அவனது கிண்ணத்திலிருந்து நீர் குடித்து, அவனது மடியில் உறங்கி, அவனுக்கு ஒரு மகளைப் போலவே அது இருந்தது. வழிப்போக்கன் ஒருவன் செல்வனிடம் வந்தான். தன்னிடம் வந்த வழிப்போக்கனுக்கு உணவு தயார் செய்ய தன் ஆடுமாடுகளின்று ஒன்றை எடுப்பதை விட்டு, அந்த ஏழையின் ஆட்டுக்குட்டியை எடுத்து வழிப்போக்கனுக்கு உணவு தயார் செய்தான்.”—2 சா. 12:1-4, பொது மொழிபெயர்ப்பு.

முன்பு மேய்ப்பராக இருந்த தாவீது இது நிஜக் கதை என்றே நினைத்துவிட்டார். இதைப் பற்றி ஒரு விளக்கவுரையாளர் இவ்வாறு சொல்கிறார்: “ஒருவேளை, அபலைகளுக்காக தாவீதிடம் வந்து நீதி கேட்பது நாத்தானின் வழக்கமாக இருந்திருக்கலாம்; ஆகவே, இப்போதும் அதற்காகவே அவர் வந்திருப்பதாக தாவீது நினைத்திருக்கலாம்.” இது உண்மையோ இல்லையோ, ராஜாவின் குற்றத்தைச் சுட்டிக்காட்ட நாத்தானுக்குத் தைரியமும் கடவுள்மீது பற்றுறுதியும் தேவைப்பட்டன. நாத்தான் சொன்னதைக் கேட்டு தாவீது கொதித்தெழுந்தார். ‘யெகோவா மேல் ஆணை! இதைச் செய்தவன் கட்டாயம் சாகவேண்டும்’ என்றார். அப்போது நாத்தான், “நீயே அம்மனிதன்” என்று சொல்லி உண்மையை உடைத்தார்.—2 சா. 12:5-7, பொ.மொ.

இந்தப் பிரச்சினையை நாத்தான் ஏன் இப்படிக் கையாண்டார் என்பதைக் கவனியுங்கள். மோகத்தில் மயங்கியிருக்கும் ஒருவருக்குத் தான் செய்வது சரியா தவறா என்று யோசித்துப் பார்ப்பதுகூட கஷ்டம். அதோடு, தவறு சுட்டிக்காட்டப்படும்போது உடனே நியாயப்படுத்திப் பேசுவதுதான் மனித இயல்பு. அதனால்தான் நாத்தான் முதலில் ஒரு கதையைச் சொன்னார்; அதைக் கேட்ட தாவீது தன்னை அறியாமல் தன்னையே கண்டனம் செய்துகொண்டார். நாத்தான் குறிப்பிட்ட அந்தச் செல்வன் மன்னிக்க முடியாத குற்றம் செய்திருந்தான் என்பது தாவீதுக்குத் தெளிவாகத் தெரிந்தது. அவர் வாயாலேயே தண்டனைத் தீர்ப்பு வழங்கினார்; அதன் பிறகுதான் அந்தக் குற்றவாளி வேறு யாருமில்லை, தாவீதே என்பதை நாத்தான் அவரது முகத்திற்கு நேராகச் சொன்னார். அதைக் கேட்டதும், தான் மகா பெரிய பாவம் செய்துவிட்டதை தாவீது உணர்ந்தார், சிட்சையை ஏற்றுக்கொள்வதற்கான மனப்பக்குவத்தைப் பெற்றார். பத்சேபாளுடன் தகாத உறவு கொண்டதன் மூலம் தான் யெகோவாவை “அசட்டை” செய்ததை ஒப்புக்கொண்டார்; அதற்குரிய சிட்சையை ஏற்றுக்கொண்டார்.—2 சா. 12:9-14; சங். 51, மேற்குறிப்பு.

இதிலிருந்து நாம் என்ன தெரிந்துகொள்ளலாம்? சரியான முடிவுக்கு வர மாணாக்கர்களுக்கு உதவுவதே பைபிளைக் கற்பிப்போரின் குறிக்கோள். தாவீதின்மேல் நாத்தான் மதிப்புமரியாதை வைத்திருந்தார், ஆகவே அவரிடம் சாதுரியமாகப் பேசினார். நீதி நியாயத்தை தாவீது நெஞ்சார நேசித்ததை நாத்தான் அறிந்திருந்தார். அப்படிப்பட்ட குணமுள்ளவரின் இதயத்தைத் தொடும் விதத்தில் கதையைச் சொன்னார். நாமும் யெகோவாவின் கண்ணோட்டத்தைப் புரிந்துகொள்ள நேர்மையுள்ளோருக்கு உதவலாம். எப்படி? நீதி நியாயத்தைப் பற்றி ஏற்கெனவே அவர்கள் ஓரளவு அறிந்திருப்பதால் அதன்படி நடக்க அவர்களுக்கு நாம் உதவலாம்; அதேசமயத்தில், ஒழுக்கத்திலோ ஆன்மீகத்திலோ நாம் அவர்களைவிட மேலானவர்கள்போல் துளியும் காட்டிக்கொள்ளக் கூடாது. ஏனென்றால், எது சரி எது தவறு என்பதை நம் கருத்துகளின் அடிப்படையில் நாம் தீர்மானிப்பதில்லை, பைபிளின் அடிப்படையிலேயே தீர்மானிக்கிறோம்.

எல்லாவற்றையும்விட கடவுள்மீது இருந்த பற்றுறுதியே மாபெரும் ராஜாவைக் கண்டிக்க நாத்தானுக்கு உதவியது. (2 சா. 12:1) அதேபோன்ற பற்றுறுதி நமக்கு இருந்தால், யெகோவாவுடைய நீதியான நெறிமுறைகளை உறுதியாய் ஆதரிக்கத் தைரியத்தைப் பெறுவோம்.

உண்மை வணக்கத்தை ஊக்குவித்தார்

நாத்தானும் தாவீதும் நல்ல நண்பர்களாக இருந்ததாய்த் தெரிகிறது. அதன் காரணமாகவே, தன் மகன்களில் ஒருவருக்கு நாத்தான் என்ற பெயரை தாவீது சூட்டினார். (1 நா. 3:1, 5) நாத்தானைப் பற்றி பைபிள் முதன்முறையாகக் குறிப்பிடுகையில் அவர் தாவீதுடன் இருந்ததாகச் சொல்கிறது. இருவரும் யெகோவாவை நேசித்தார்கள். நாத்தானின் அபிப்பிராயங்களை தாவீது மதித்தார்; அதனால்தான், யெகோவாவுக்கு ஓர் ஆலயத்தைக் கட்ட ஆசைப்படுவதைப் பற்றி நாத்தானிடம் மனம்திறந்து சொன்னார். “பாரும், கேதுருமரங்களால் செய்யப்பட்ட வீட்டிலே நான் வாசம்பண்ணும்போது, தேவனுடைய பெட்டி திரைகளின் நடுவே வாசமாயிருக்கிறதே” என்றார். அப்போது நாத்தான் தாவீதிடம், ‘நீர் போய் உம்முடைய இருதயத்தில் உள்ளபடியெல்லாம் செய்யும்; யெகோவா உம்மோடு இருக்கிறாரே’ என்றார்.—2 சா. 7:2, 3.

யெகோவாவை உண்மையோடு வழிபட்டுவந்த நாத்தான், தாவீதின் திட்டத்தை மகிழ்ச்சியோடு வரவேற்றார்; ஆம், சரித்திரத்திலேயே முதன்முறையாக உண்மை வணக்கத்திற்கென ஒரு நிரந்தர ஆலயத்தைக் கட்ட தாவீதுக்கு முழு ஆதரவு தருவதாகக் குறிப்பிட்டார். என்றாலும், அந்தச் சந்தர்ப்பத்தில் நாத்தான் யெகோவாவின் அபிப்பிராயத்தைக் கேட்டுச் சொல்வதற்குப் பதிலாகத் தன்னுடைய சொந்த அபிப்பிராயத்தைத் தெரிவித்தார். ஆனால், வேறொரு செய்தியை தாவீதிடம் சொல்லுமாறு அந்த இரவே நாத்தானுக்குக் கடவுள் கட்டளையிட்டார்; அதாவது, தாவீது ஆலயத்தைக் கட்ட மாட்டார், அவரது மகன்களில் ஒருவரே கட்டுவார் எனச் சொல்லுமாறு நாத்தானுக்குக் கட்டளையிட்டார். என்றாலும், தாவீதுடன் ஓர் ஒப்பந்தம் செய்வதாகவும், அதனால் அவரது சிம்மாசனம் “என்றென்றைக்கும் நிலைபெற்றிருக்கும்” என்பதாகவும் நாத்தான் மூலம் கடவுள் சொன்னார்.—2 சா. 7:4-16.

ஆலயத்தைக் கட்டுவது சம்பந்தமாக நாத்தான் நினைத்தது ஒன்று, யெகோவா நினைத்ததோ வேறொன்று. என்றாலும், மனத்தாழ்மைமிக்க அந்தத் தீர்க்கதரிசி முறுமுறுக்காமல் யெகோவாவின் நோக்கத்தை ஏற்றுக்கொண்டு அதை ஆதரித்தார். எப்பேர்ப்பட்ட சிறந்த முன்மாதிரி! கடவுள் நம்மை ஏதோவொரு விதத்தில் திருத்தும்போது நாம் நாத்தானைப் போல் நடந்துகொள்ளலாம், அல்லவா? கடவுளுடைய தயவை நாத்தான் இழக்கவில்லை என்பது, ஒரு தீர்க்கதரிசியாக அவர் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டதிலிருந்து தெரிகிறது. சொல்லப்போனால், ஆலயச் சேவைக்காக 4,000 இசைக் கலைஞர்களை நியமிக்க யெகோவா நாத்தானையும் தரிசனம் பெற்றவராகிய காத்தையும் தமது சக்தியால் தூண்டினார்.—1 நா. 23:1-5; 2 நா. 29:25.

அரசதிகாரத்திற்குத் துணைநின்றார்

தாவீதுக்குப் பிறகு சாலொமோனே ராஜாவாய் ஆக வேண்டுமென நாத்தான் அறிந்திருந்தார். ஆகவே, அரியணையை அபகரிக்க அதோனியா முயன்றபோது நாத்தான் உறுதியுடன் செயல்பட்டார். இச்சந்தர்ப்பத்திலும் அவர் சாதுரியத்தையும் பற்றுறுதியையும் காட்டினார். முதலில் பத்சேபாளிடம் சென்று, சாலொமோனை ராஜாவாக்கப்போவதாக தாவீது கொடுத்திருந்த வாக்கை அவருக்கு நினைப்பூட்டச் சொன்னார். அதன்பின், நாத்தானே தாவீதிடம் சென்று, அதோனியாவை அவர் ராஜாவாகத் தேர்ந்தெடுத்திருப்பது உண்மையா எனக் கேட்டார். அவசரமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை உணர்ந்த தாவீது, சாலொமோனை ராஜாவாக அபிஷேகம் செய்யும்படியும் அதை எல்லாருக்கும் அறிவிக்கும்படியும் நாத்தானிடமும் மற்ற உண்மை ஊழியர்களிடமும் கட்டளையிட்டார். இவ்வாறு, ஆட்சியைப் பிடிக்க முயன்ற அதோனியாவின் திட்டம் முறியடிக்கப்பட்டது.—1 இரா. 1:5-53.

மனத்தாழ்மையுடன் சரித்திரத்தைப் பதிவு செய்தார்

நாத்தானும் காத்தும் 1 சாமுவேல் 25-31 அதிகாரங்களையும் 2 சாமுவேல் புத்தகம் முழுவதையும் எழுதியதாக நம்பப்படுகிறது. கடவுளுடைய சக்தியின் தூண்டுதலால் இப்புத்தகங்களில் எழுதப்பட்டுள்ள சரித்திர விவரங்களைப் பற்றி இவ்வாறு சொல்லப்பட்டிருக்கிறது: “தாவீது ராஜாவின் செயல்கள், தொடக்கமுதல் இறுதிவரை, ஞானதிருஷ்டிக்காரரான சாமுவேலின் குறிப்பேட்டிலும், தீர்க்கதரிசியான நாத்தானின் குறிப்பேட்டிலும் தரிசனம் பெற்றவரான காத்தின் குறிப்பேட்டிலும் எழுதப்பட்டுள்ளன.” (1 நா. 29:29, NW) ‘சாலொமோனுடைய செயல்களை’ பற்றியும் நாத்தான் பதிவு செய்திருப்பதாகச் சொல்லப்பட்டிருக்கிறது. (2 நா. 9:29) அப்படியென்றால், தாவீதின் மரணத்திற்குப் பின்பும் அரச விவகாரங்களில் நாத்தான் தொடர்ந்து ஈடுபட்டு வந்திருக்க வேண்டும்.

நாத்தானைப் பற்றிய விவரங்கள் பெரும்பாலும் அவராலேயே எழுதப்பட்டிருக்கலாம். இருந்தாலும், தன்னைப் பற்றிய பல விஷயங்களை அவர் குறிப்பிடாதது அவரது பண்பைப் பறைசாற்றுகிறது. ஆம், தனக்குப் பேரும் புகழும் சம்பாதிக்க விரும்பாமல் மனத்தாழ்மையுடன் சரித்திர விவரங்களைப் பதிவு செய்திருப்பதைக் காட்டுகிறது. பைபிளில் அவருக்கு “எந்தவொரு அறிமுகமும் வம்சாவளியும் இல்லை” என ஓர் அகராதி சொல்கிறது. நாத்தானின் பரம்பரையைப் பற்றியோ சொந்த வாழ்க்கையைப் பற்றியோ நமக்கு எதுவுமே தெரியாது.

யெகோவாவின் மீது பற்றுறுதி காட்டினார்

நாத்தானைப் பற்றி பைபிள் தரும் தகவல் துளிகளிலிருந்து, அவர் மனத்தாழ்மையுள்ளவர்... தெய்வீக ஏற்பாடுகளைப் பக்திவைராக்கியத்துடன் ஆதரித்தவர்... என்பது தெள்ளத்தெளிவாகத் தெரிகிறது. யெகோவா அவருக்குப் பெரிய பொறுப்புகளை அளித்திருந்தார். யெகோவாவின் மீது அவர் காட்டிய பற்றுறுதி, தெய்வீக சட்டதிட்டங்கள்மீது காட்டிய மதிப்பு போன்றவற்றைத் தியானித்துப் பாருங்கள். அந்தப் பண்புகளை நீங்களும் வெளிக்காட்ட முயலுங்கள்.

முறைகேடான உறவுகொள்ளும் ராஜாக்களை நீங்கள் கண்டிக்கவோ ஆட்சியைக் கைப்பற்ற முயலுகிறவர்களின் சதியை முறிக்கவோ வேண்டியிருக்காதுதான். என்றாலும், கடவுளுடைய உதவியுடன் நீங்கள் அவருக்குப் பற்றுறுதி காட்டலாம்... அவரது நீதியான தராதரங்களை உறுதியாய் ஆதரிக்கலாம்... சத்தியத்தைத் தைரியமாகவும் அதேசமயத்தில் சாதுரியமாகவும் மற்றவர்களுக்குப் புரிய வைக்கலாம்... உண்மை வணக்கத்தை ஊக்குவிக்கலாம்.

[பக்கம் 25-ன் படம்]

அரசதிகாரத்திற்குத் துணைநின்ற நாத்தான், பத்சேபாளிடம் சாதுரியமாகப் பேசினார்