Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அருமையான ஆலோசனை வழங்க...

அருமையான ஆலோசனை வழங்க...

அருமையான ஆலோசனை வழங்க...

யாராவது உங்களிடம் ஆலோசனை கேட்டிருக்கிறார்களா? உதாரணமாக, ‘நான் என்ன செய்ய வேண்டும்? இந்த பார்ட்டிக்குப் போகலாமா? இந்த வேலையைத் தேர்ந்தெடுக்கலாமா? இவரைக் காதலிக்கலாமா?’ என்றெல்லாம் கேட்டிருக்கிறார்களா?

நண்பர்களோடு, குடும்பத்தினரோடு, அல்லது யெகோவாவோடு தங்களுக்குள்ள உறவைப் பாதிக்கும் விஷயங்களில் தீர்மானம் எடுப்பதற்கு உதவும்படி சிலர் உங்களிடம் கேட்கலாம். எதன் அடிப்படையில் நீங்கள் அவர்களுக்கு ஆலோசனை சொல்வீர்கள்? வழக்கமாக நீங்கள் எப்படி மற்றவர்களுக்கு ஆலோசனை சொல்வீர்கள்? சின்ன விஷயமாக இருந்தாலும்சரி பெரிய விஷயமாக இருந்தாலும்சரி, “நல்லவர்கள் பதில் சொல்லுமுன் சிந்திக்கிறார்கள்” என்று நீதிமொழிகள் 15:28 (ஈஸி டு ரீட் வர்ஷன்) சொல்கிறது. ஆலோசனை கொடுப்பதற்கு உதவும் ஐந்து பைபிள் நியமங்களை இங்கே கவனியுங்கள்.

1 சூழ்நிலையைப் புரிந்துகொள்ளுங்கள்.

“காரியத்தைக் கேட்குமுன் உத்தரம் சொல்லுகிறவனுக்கு, அது புத்தியீனமும் வெட்கமுமாயிருக்கும்.”நீதி. 18:13.

நல்ல ஆலோசனை கொடுக்க வேண்டுமானால், உதவி கேட்டு வருபவருடைய சூழ்நிலைகளையும் எண்ணங்களையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும். இந்த உதாரணத்தைக் கவனியுங்கள்: ஒருவர் உங்களிடம் ஃபோன் பண்ணி, ‘உங்க வீட்டுக்கு எப்படி வரணும், எந்த வழியில வந்தா சுலபமா இருக்கும்?’ என்று கேட்கிறார். அவர் எங்கு இருக்கிறார் என்று தெரிந்து கொள்வதற்கு முன்பே அவருக்கு வழி சொல்ல முடியுமா? முடியாது, இல்லையா? அதேபோல், சரியான ஆலோசனை சொல்வதற்கு முன்பு ஒருவருடைய சூழ்நிலைகளையும் எண்ணங்களையும் முழுமையாகத் தெரிந்துகொள்ள வேண்டும். அப்படித் தெரிந்துகொள்ளாமல் நீங்கள் ஆலோசனை கொடுத்தால் அது பிரயோஜனமாக இருக்குமா? ஒருவருடைய சூழ்நிலையைப் பற்றி முழுமையாகத் தெரிந்துகொள்ளாமல் ஆலோசனை கொடுத்தால் அவர் இன்னும் குழம்பித்தான் போவார்.—லூக். 6:39.

அவர் எந்தளவு ஆராய்ச்சி செய்திருக்கிறார் என்பதை முதலில் அறிந்துகொள்ளுங்கள். ஆலோசனை கேட்டு வருபவரிடம் இதுபோன்ற கேள்விகளைக் கேட்பதும் நல்லது: “எந்த பைபிள் நியமம் உங்களுக்கு உதவும்னு நினைக்கிறீங்க?” “இதிலுள்ள நல்லது, கெட்டதை யோசித்துப் பார்த்தீங்களா?” “இந்த விஷயத்த பத்தி நீங்க ஏற்கெனவே ஆராய்ச்சி செஞ்சிருக்கீங்களா?” “இது சம்பந்தமா உங்க சபை மூப்பர்கள், அப்பா-அம்மா, உங்களுக்கு பைபிள் படிப்பு நடத்துபவர்... எல்லாரும் என்ன சொன்னாங்க?”

அவர் சொல்கிற பதில்களிலிருந்து அவர் ஏற்கெனவே எந்தளவு முயற்சி எடுத்திருக்கிறார் என்பதை நீங்கள் தெரிந்துகொள்ளலாம். அதுமட்டுமல்ல, மற்றவர்கள் ஏற்கெனவே என்ன சொல்லியிருக்கிறார்கள் என்பதைப் பொறுத்து அவருக்கு ஆலோசனை கொடுக்கலாம். அதோடு, அவர் வெறுமனே ‘தன்னுடைய காதுகளுக்கு இனிமையாகத் தொனிக்கும் விஷயங்களை’ சொல்லும் ஒருவரைத் தேடி வருகிறாரா என்பதையும் நீங்கள் பகுத்துணரலாம்.—2 தீ. 4:3.

2 அவசரப்பட்டு எதையும் சொல்லாதீர்கள்.

‘ஒவ்வொருவரும் கேட்பதற்குத் தீவிரமாகவும், பேசுவதற்கு நிதானமாகவும் இருக்க வேண்டும்.’யாக். 1:19.

அவருக்கு உதவிசெய்ய வேண்டுமென்ற எண்ணத்தில் அவசரப்பட்டு ஏதாவது ஆலோசனை கொடுத்துவிடலாம். ஆனால், அது ஞானமான செயலா? முக்கியமாக, நாம் தீர அலசி ஆராயாத ஒரு விஷயத்தின்பேரில் சட்டென ஆலோசனை வழங்குவது சரியா? “தன் வார்த்தைகளில் பதறுகிற மனுஷனைக் கண்டாயானால், அவனை நம்புவதைப் பார்க்கிலும் மூடனை நம்பலாம்” என்று நீதிமொழிகள் 29:20 சொல்கிறது.

நீங்கள் முழுக்க முழுக்கக் கடவுளுடைய சிந்தையின் அடிப்படையில் அறிவுரை வழங்குகிறீர்களா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள நேரமெடுத்துக் கொள்ளுங்கள். ‘நான் கொடுக்கும் அறிவுரையில் “இந்த உலகத்தின் சிந்தை” கலந்திருக்கிறதா?’ என்று உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள். (1 கொ. 2:12, 13) ஆலோசனை கொடுக்க நல்லெண்ணம் மட்டும் இருந்தால் போதாது என்பதை நினைவில் வையுங்கள். இயேசு படப்போகும் பாடுகளைப் பற்றி பேதுரு கேட்டதும், “எஜமானே, இந்தக் கஷ்டங்கள் உங்களுக்கு வேண்டாம்! இதெல்லாம் உங்களுக்கு நடக்கவே நடக்காது” என்று கூறினார். பேதுருவின் பதிலிலிருந்து நாம் என்ன தெரிந்துகொள்ளலாம்? கவனமாக இல்லாவிட்டால், நல்லெண்ணம் கொண்ட நபரும்கூட, ‘கடவுளுடைய சிந்தனைகளை அல்ல, மனிதருடைய சிந்தனைகளை’ ஊக்குவிக்கலாம். (மத். 16:21-23) ஆகவே, பேசுவதற்கு முன்னால் யோசிப்பது எவ்வளவு முக்கியம்! கடவுளுடைய ஞானத்தோடு ஒப்பிடும்போது நம்முடைய ஞானம் ஒன்றுமே இல்லை!—யோபு 38:1-4; நீதி. 11:2.

3 தாழ்மையுடன் பைபிளைப் பயன்படுத்துங்கள்.

“நான் எதையும் சுயமாகச் செய்வதில்லை . . . தகப்பன் எனக்குக் கற்றுக்கொடுத்தபடியே இந்த விஷயங்களைப் பேசுகிறேன்.”யோவா. 8:28.

“நான் மட்டும் உங்க இடத்துல இருந்தேன்னா . . .” என்று நீங்கள் சொல்வது உண்டா? ஒருவர் கேட்கும் கேள்விக்கு உங்களுக்கு நன்றாகப் பதில் தெரிந்திருந்தாலும்கூட, இயேசு காண்பித்த தாழ்மையையும் அடக்கத்தையும் பின்பற்றுவது நல்லது. எந்த மனிதனைவிடவும் மகா ஞானம் படைத்தவராக... அனுபவம் மிக்கவராக... அவர் இருந்தார்; ஆனாலும், “நான் சொந்தமாகப் பேசவில்லை, நான் எதைப் பேச வேண்டுமென்றும் எதைக் கற்பிக்க வேண்டுமென்றும் என்னை அனுப்பிய தகப்பனே எனக்குக் கட்டளையிட்டிருக்கிறார்” என்றார். (யோவா. 12:49, 50) இயேசுவின் போதனைகளும் அறிவுரைகளும் எப்போதும் அவரது தகப்பனுடைய சித்தத்தைச் சார்ந்தே இருந்தன.

உதாரணமாக இயேசுவைக் கைதுசெய்ய வந்தபோது... அவர்களை “வாளினால் வெட்டலாமா?” என்று சீடர்கள் அவரிடம் கேட்டார்கள். (லூக். 22:49) அதற்குள் ஒரு சீடர் வாளை உருவி ஒருவனைத் தாக்கிவிட்டார். அப்படிப்பட்ட சந்தர்ப்பத்திலும்கூட, இயேசு நேரமெடுத்து யெகோவாவின் சித்தத்தைப் பற்றிச் சீடர்களுக்கு விளக்கியதாக மத்தேயு 26:52-54-ல் வாசிக்கிறோம். ஆதியாகமம் 9:6-லுள்ள நியமங்களையும் சங்கீதம் 22, ஏசாயா 53-லுள்ள தீர்க்கதரிசனங்களையும் அறிந்திருந்ததால், ஞானமான வழிநடத்துதலை இயேசுவால் கொடுக்க முடிந்தது. அது உயிர்களைக் காப்பாற்றியது, யெகோவாவையும் பிரியப்படுத்தியது.

4 அமைப்பின் உபகரணங்களைப் பயன்படுத்துங்கள்.

“ஏற்ற வேளையில் தன் வீட்டாருக்கு உணவளிப்பதற்காக எஜமான் நியமித்த உண்மையும் விவேகமும் உள்ள அடிமை யார்?”மத். 24:45.

காலத்துக்கேற்ற ஆன்மீக உணவை வழங்க நம்பிக்கைக்குரிய ஓர் அடிமை வகுப்பாரை இயேசு நியமித்திருக்கிறார். முக்கியமான விஷயங்களின் பேரில் நீங்கள் ஆலோசனையோ அறிவுரையோ கொடுக்கும்போது, பைபிள் சார்ந்த பிரசுரங்களை அலசி ஆராய்கிறீர்களா?

ஆங்கிலத்திலுள்ள உவாட்ச் டவர் பப்ளிகேஷன்ஸ் இன்டெக்ஸிலும், உவாட்ச்டவர் லைப்ரரியிலும் * எக்கச்சக்கமான தகவல்கள்... தெளிவான தகவல்கள்... சுலபமாகக் கிடைக்கின்றன. இந்தத் தகவல் களஞ்சியத்தைப் பயன்படுத்தாமல் விட்டுவிடுவது எப்பேர்ப்பட்ட தவறு! ஆலோசனை தேடுகிறவருக்கு உதவ ஆயிரக்கணக்கான தலைப்புகளில் ஏராளமான கட்டுரைகள் அவற்றில் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. பைபிள் நியமங்களைக் கண்டுபிடிக்க... பைபிளின் அடிப்படையில் சிந்தித்துப் பார்க்க... பிறருக்கு உதவி செய்வதில் நீங்கள் திறமைசாலியா? நாம் எங்கே இருக்கிறோம் என்பதை அறியவும் சேர வேண்டிய இடத்தை அடையவும் நமக்குக் கைகொடுக்கும் கருவிதான் GPS (Global Positioning System); இதைப் போலவே, நமக்கும் அருமையான ஆராய்ச்சிக் கருவிகள் இருக்கின்றன. இவற்றைக் கொண்டு நீங்கள் மற்றவர்களுக்கு உதவலாம். ஆம், இருக்கிற பாதையைக் கண்டறிய... வாழ்வுக்கான பாதையில் நிலைத்திருக்க... நீங்கள் மற்றவர்களுக்கு உதவலாம்.

இன்டெக்ஸை அல்லது உவாட்ச்டவர் லைப்ரரியைப் பயன்படுத்த பிரஸ்தாபிகளுக்கு மூப்பர்கள் பலர் பயிற்சி அளித்திருக்கிறார்கள். இவ்வாறு, வேதவசனங்களின் அடிப்படையில் சிந்தித்துப் பார்க்கச் சகோதர சகோதரிகளுக்கு உதவி செய்திருக்கிறார்கள். இவ்விதத்தில், பிரச்சினைகளுக்குத் தீர்வு காண பிரஸ்தாபிகளுக்கு துணை செய்திருக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல், ஆராய்ச்சி செய்யும் பழக்கத்தை வளர்த்துக்கொள்ளவும் யெகோவா செய்திருக்கும் ஆன்மீக ஏற்பாடுகள்மீது சார்ந்திருக்கவும் அவர்களுக்குக் கற்றுக்கொடுத்திருக்கிறார்கள். இதனால், ‘நன்மை எது, தீமை எது எனக் கண்டறிய தங்களுடைய பகுத்தறியும் திறன்களைப் பயன்படுத்திப் பயிற்றுவித்துக்கொள்ள’ பிரஸ்தாபிகளால் முடிந்திருக்கிறது.—எபி. 5:14.

5 மற்றவர்களுக்காகத் தீர்மானம் செய்யாதீர்கள்.

“ஒவ்வொருவனும் தன்தன் பாரத்தைச் சுமக்கட்டும்.”கலா. 6:5.

கடைசியில், எந்த அறிவுரையை அல்லது ஆலோசனையைப் பின்பற்றுவது என்பதை அவரவர்தான் தீர்மானிக்க வேண்டும். பைபிள் நியமங்களின்படி நடப்போமா இல்லையா என்பதைத் தீர்மானிக்க நம் ஒவ்வொருவருக்கும் யெகோவா சுதந்திரம் அளித்திருக்கிறார். (உபா. 30:19, 20) சில விஷயங்களில் பல்வேறு பைபிள் நியமங்கள் உட்பட்டிருக்கலாம். ஆலோசனை கேட்டு வருகிறவர்தான் கடைசியில் தீர்மானத்தை எடுக்க வேண்டும். ஆலோசனை கேட்பவருடைய வயதைப் பொறுத்து அல்லது அவர் கேட்கிற விஷயத்தைப் பொறுத்து, நம்மை நாமே இவ்வாறு கேட்டுக்கொள்ளலாம்: ‘இந்தக் கேள்விக்குப் பதிலளிக்க எனக்கு உண்மையிலேயே அதிகாரம் இருக்கிறதா?’ சில விஷயங்களை மூப்பர்களிடம் போய்க் கேட்கச் சொல்வதுதான் சிறந்தது. அல்லது, கேள்வி கேட்பவர் இளைஞராக இருந்தால், அவருடைய பெற்றோரை அணுகச் சொல்வதுதான் நல்லது.

[அடிக்குறிப்பு]

^ பாரா. 20 சிடி-ராமில் உவாட்ச் டவர் லைப்ரரி தற்போது 39 மொழிகளில் கிடைக்கிறது. உவாட்ச் டவர் பப்ளிகேஷன்ஸ் இன்டெக்ஸ் தற்போது 45-க்கும் அதிகமான மொழிகளில் கிடைக்கிறது.

[பக்கம் 8-ன் பெட்டி/படம்]

குடும்ப வழிபாட்டில் ஆராய்ச்சி செய்ய...

யாராவது உங்களிடம் எந்த விஷயத்தைப் பற்றியாவது சமீபத்தில் கேள்வி கேட்டிருந்தால், அதற்கு உங்கள் குடும்ப வழிபாட்டின்போது ஏன் பதிலைக் கண்டுபிடிக்கக் கூடாது? கேள்வி கேட்பவருக்கு உதவும் கட்டுரைகளையும் நியமங்களையும் எப்படிக் கண்டுபிடிப்பீர்கள்? உதாரணத்திற்கு, ஒரு சகோதரரோ சகோதரியோ ஒருவரைக் காதலித்துக் கல்யாணம் செய்வதைப் பற்றி ஆலோசனை கேட்டால் என்ன சொல்வீர்கள்? இன்டெக்ஸ் அல்லது உவாட்ச்டவர் லைப்ரரியைப் பயன்படுத்தி, நேரடியாகச் சம்பந்தப்பட்ட தலைப்பின்கீழ் முதலில் பாருங்கள். உதாரணத்திற்கு, இன்டெக்ஸில் “காதல் சந்திப்பு” அல்லது “திருமணம்” என்ற முக்கியத் தலைப்புகளில் பாருங்கள். பிறகு, உபதலைப்புகளின்கீழ் பொருத்தமான கட்டுரைகளைத் தேடுங்கள். மேலும், முக்கியத் தலைப்புகளைப் பார்க்கும்போது, “இவற்றையும் பார்க்கவும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ள தலைப்புகளையும் அலசுங்கள்; நீங்கள் தேடும் விஷயத்திற்கு நேரடியாகச் சம்பந்தப்பட்ட கட்டுரைகள் அவற்றில் இருக்கலாம்.

[பக்கம் 9-ன் பெட்டி]

யெகோவா தமது அமைப்பின் மூலம் பல ஏற்பாடுகளைச் செய்திருப்பதால் நாம் மிகச் சிறந்த அறிவுரைகளைப் பெறுகிறோம், வழங்குகிறோம். “ஞானிகளின் வார்த்தைகள் தாற்றுக்கோல்களைப் போல் இருக்கின்றன; பொன்மொழிகளில் பேரின்பம் காண்கிறவர்கள் மரத்தில் அடிக்கப்படும் ஆணிகளைப் போல் இருக்கிறார்கள்; இவை ஒரே மேய்ப்பரால் அளிக்கப்பட்டவை” என்று பிரசங்கி 12:11 (NW) கூறுகிறது. அன்புடன் கொடுக்கப்படும் சிறந்த அறிவுரைகள், “தாற்றுக்கோல்களை” போல... அதாவது, மாட்டை ஓட்டுவதற்காகப் பயன்படுத்தப்படும் கூர்மையான இரும்பு முனை கொண்ட தடிகளைப் போல... நல்லவர்களை நல் வழியில் நடத்துகின்றன. ஒரு கட்டமைப்பில் ‘அடிக்கப்படும் ஆணிகள்’ அதை உறுதிப்படுத்தும். அவ்வாறே, பொன்னான அறிவுரைகள் ஒருவரை உறுதிப்படுத்தி நிலையான பலன்களைத் தரும். ஞானிகள், ‘ஒரே மேய்ப்பராகிய’ யெகோவாவின் ஞானத்தைப் பறைசாற்றும் ‘பொன்மொழிகளில் பேரின்பம் காண்கிறார்கள்.’

ஆலோசனை வழங்கும்போது இந்த மேய்ப்பரைப் பின்பற்றுங்கள். நம்மால் முடிந்தபோதெல்லாம் மற்றவர்கள் சொல்வதைக் காதுகொடுத்துக் கேட்டு பயனுள்ள அறிவுரைகளைக் கொடுப்பது எப்பேர்ப்பட்ட பாக்கியம்! பைபிள் நியமங்களின் அடிப்படையில் நாம் அறிவுரைகள் கொடுக்கும்போது அவை சிறந்தவையாக இருக்கும்... கேட்போருக்கு நீடித்த நன்மை அளிக்கும்.