Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

வாழ்க்கை சரிதை

“உமது வலப்பக்கத்தில் எப்போதும் பேரின்பம் உண்டு”

“உமது வலப்பக்கத்தில் எப்போதும் பேரின்பம் உண்டு”

லோயிஸ் டீடர் சொன்னபடி

‘இந்தத் தீர்மானத்தை நான் எடுத்திருக்கவே கூடாது’ என்று நினைத்து எப்போதாவது வருத்தப்பட்டிருக்கிறீர்களா? என்னுடைய 50 ஆண்டு கால முழுநேர சேவையில் நான் ஒருநாள்கூட இதுபோல் வருத்தப்பட்டதில்லை; யெகோவாவின் வலப்பக்கத்தில் இருந்ததால் எந்தத் துன்பத்தையும் அனுபவித்ததாக எனக்கு நினைவே இல்லை. அதற்கான காரணத்தைச் சொல்கிறேன்.

நான் 1939-ல் பிறந்தேன். கனடாவில், சஸ்காட் செவன் மாகாணத்திலுள்ள ஒரு நாட்டுப்புறத்தில் வளர்ந்தேன்; எனக்கு மூன்று அக்கா, ஒரு தங்கை, ஒரு தம்பி. புல்வெளி நிறைந்த பண்ணையில் வாழ்க்கை சந்தோஷமாக இருந்தது. ஒருநாள் யெகோவாவின் சாட்சிகள் அப்பாவை வந்து சந்தித்தார்கள்; அவர்களிடம் கடவுளுடைய பெயர் என்னவென்று கேட்டேன். அவருடைய பெயர் யெகோவா என்பதை சங்கீதம் 83:17-லிருந்து காட்டினார்கள். அது கடவுளையும் பைபிளையும் பற்றித் தெரிந்துகொள்ள என்னைத் தூண்டியது.

அந்தக் காலத்தில், பண்ணையில் இருந்த பிள்ளைகள் சுமார் 13 வயதுவரை ஒரேவொரு வகுப்பறை மட்டுமே இருந்த நாட்டுப்புறப் பள்ளிகளில் படித்தார்கள். பல மைல் தூரத்திலிருந்த அந்தப் பள்ளிகளுக்குப் பிள்ளைகள் குதிரையில் சென்றார்கள் அல்லது நடந்து சென்றார்கள். அங்கிருந்த குடும்பங்கள் பள்ளி ஆசிரியரைத் தங்கள் வீட்டில் மாறி மாறி தங்க வைத்துக் கவனித்துக்கொண்டன. எங்களுடைய முறை வந்தபோது புதிய ஆசிரியரான ஜான் டீடர் எங்கள் வீட்டில் ஒரு வருடம் தங்கினார்.

அந்த இளம் ஆசிரியருக்கும் பைபிள்மீது ஆர்வம் இருந்தது... முதலில் எனக்குத் தெரியவில்லை. அப்பா ஆதரித்த பொதுவுடைமைக் கொள்கையைப் பற்றி அவரிடம் ஒருமுறை புகழ்ந்து பேசினேன். அப்போது ஜான் மெதுவாக, “மனிதனை ஆட்சி செய்ய கடவுளுக்குத்தான் உரிமை இருக்கிறது, எந்த மனிதனுக்கும் இல்லை” என்றார். அதுமுதல் பல சுவாரசியமான விஷயங்களைப் பற்றிப் பேசினோம்.

ஜான் 1931-ல் பிறந்ததால், போரினால் விளையும் துன்ப துயரங்களைப் பற்றிக் கேள்விப்பட்டிருந்தார். 1950-ல் கொரியப் போர் மூண்டது. அப்போது, கிறிஸ்தவர்கள் போரில் பங்குகொள்ளலாமா எனப் பல்வேறு மதகுருமார்களிடம் கேட்டார். அதில் தவறில்லை என அவர்கள் எல்லாருமே சொன்னார்கள். பின்னர், அதே கேள்வியை யெகோவாவின் சாட்சிகளிடம் கேட்டார். முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்கள் போரில் கலந்துகொள்ளாததை அவர்கள் பைபிளிலிருந்து காட்டினார்கள். 1955-ல் ஜான் ஞானஸ்நானம் பெற்றார். மறுவருடம் நான் ஞானஸ்நானம் பெற்றேன். உயிரையும் சக்தியையும் யெகோவாவின் சேவையில் அர்ப்பணிக்க இருவருக்குமே விருப்பம் இருந்ததைப் புரிந்துகொண்டோம். (சங். 37:3, 4) 1957, ஜூலை மாதம் நாங்கள் திருமணம் செய்துகொண்டோம்.

பல முறை எங்கள் திருமண நாளின்போது மாவட்ட மாநாட்டில்தான் இருந்தோம். திருமணத்திற்கு மதிப்புக்கொடுத்த ஆயிரக்கணக்கானோருடன் இருந்ததில் சந்தோஷப்பட்டோம். 1958-ல் முதன்முறையாக ஒரு சர்வதேச மாநாட்டில் கலந்துகொள்ள வாய்ப்புக் கிடைத்தது. சஸ்காட் செவனிலிருந்து நியு யார்க் சிட்டிக்கு ஐந்து பேர் காரில் புறப்பட்டோம். ஒரு வாரத்திற்குப் பகலில் பயணம் செய்தோம், இரவில் கூடாரம் போட்டுத் தங்கினோம். ஒருநாள்... பென்ஸில்வேனியாவில், பெத்லகேம் நகரத்திலுள்ள ஒரு சகோதரரை வழியில் சந்தித்தபோது இரவு அவருடைய வீட்டில் எங்களைத் தங்கச் சொன்னார். எங்களுக்கு ஒரே சந்தோஷம்! அவருடைய தயவால் நியு யார்க் சிட்டிக்குப் பளிச்செனச் சென்றோம். யெகோவாவின் சேவையில் கிடைக்கும் பேரானந்தத்தை அந்தப் பிரமாண்டமான மாநாடு எங்கள் மனதில் பதித்தது! சங்கீதக்காரன் எழுதியதுபோல், “[யெகோவாவின்] வலப்பக்கத்தில் எப்போதும் பேரின்பம் உண்டு.”—சங். 16:11, பொது மொழிபெயர்ப்பு.

பயனியர் ஊழியம்

ஒரு வருடம் கழித்து 1959-ல் பயனியர் ஊழியம் செய்ய ஆரம்பித்தோம். சஸ்காட் செவனில் புல்வெளி போர்த்திய ஒரு குன்றின் உச்சியில் சிறிய டிரெய்லர் வண்டியில் குடியிருந்தோம். அங்கிருந்து பல மைல் தூரம்வரை பார்க்க முடிந்தது; அந்தப் பகுதிகளில் சில, நாங்கள் ஊழியம் செய்ய வேண்டிய பிராந்தியங்கள்.

ஒருநாள் கிளை அலுவலகத்திலிருந்து கடிதம் வந்தது. அதை எடுத்துக்கொண்டு, டிராக்டரைப் பழுதுபார்த்துக்கொண்டிருந்த ஜானிடம் ஓடினேன். ஒன்டாரியோவில், ரெட் லேக் நகரத்தில் விசேஷ பயனியர்களாகச் சேவை செய்வதற்கான அழைப்புதான் அது. அந்த இடம் எங்கிருக்கிறது என்பதைக் கண்டுபிடிக்க உடனடியாக வரைபடத்தை எடுத்துப் பார்த்தோம்.

அதுவரை நாங்கள் வசித்த புல்வெளிப் பகுதிக்கும் இந்தக் காட்டு பகுதிக்கும் எவ்வளவு வித்தியாசம்! இங்கு பெரிய்...ய காடுகள் இருந்தன. தங்கச் சுரங்கங்களுக்குப் பக்கத்தில் சிறிய ஊர்கள் இருந்தன. முதல் நாள் நாங்கள் வீடு தேடிக்கொண்டிருந்தபோது ஒரு பெண்ணிடம் பேசியதைப் பக்கத்து வீட்டு சிறுமி கேட்டாள். அவள் ஓடிப்போய் அவளுடைய அம்மாவிடம் அதைச் சொல்ல, அன்று இரவு அவர்களுடைய வீட்டிலேயே தங்க இடங்கொடுத்தார்கள். அழுக்கான ஒரு கிடங்கில் படுத்துத் தூங்கினோம். மறுநாள், இரண்டு அறைகள் உள்ள ஒரு மர வீட்டைக் கண்டுபிடித்தோம். அதில் குழாய் வசதிகளோ மேஜை நாற்காலிகளோ இருக்கவில்லை; கதகதப்பூட்ட சூட்டடுப்பு மட்டுமே இருந்தது. பழைய பொருள்கள் விற்கும் கடைக்குப் போய் ஒருசில பொருள்களை வாங்கினோம், திருப்தியாய் வாழ்ந்தோம்.

209 கிலோமீட்டர் (130 மைல்) தூரம்வரை ஒரு சபைகூட இல்லை. தங்கச் சுரங்கங்களில் வேலை செய்த பலர் ஐரோப்பாவிலிருந்து வந்தவர்கள். அவர்களுடைய மொழியில் பைபிள் கிடைக்குமாவெனக் கேட்டார்கள். விரைவிலேயே 30 பைபிள் படிப்புகளை நடத்தினோம். அவர்கள் ஆர்வமாகப் படித்தார்கள். ஆறு மாதங்களுக்குள் ஒரு சிறிய சபை உருவானது.

நாங்கள் ஒரு பெண்ணுக்கு பைபிள் படிப்பு நடத்தி வந்தோம். அவளுடைய கணவரோ அந்தப் படிப்பை நிறுத்துவதற்கு ஒரு பாதிரியை அழைத்து வந்தார். அந்தப் பாதிரி, ‘திரித்துவத்தையும் சேர்த்துக் கத்துக்கொடுங்க’ என்று சொன்னார். அந்தப் பெண் ஒரு கத்தோலிக்க பைபிளை அவரிடம் கொடுத்து அவர் சொல்வதையெல்லாம் அதிலிருந்து நிரூபிக்கும்படி கேட்டாள். அவரோ அதை மேஜைமீது தூக்கியெறிந்துவிட்டு, எதையும் நிரூபிக்க தனக்கு அவசியம் இல்லையெனச் சொன்னார். அவர் போகும்போது, ‘முதல்ல இவங்கள வீட்டைவிட்டுத் துரத்துங்க, இனி உள்ளே சேர்க்காதீங்க’ என்று உக்ரேனியன் மொழியில் கத்தினார். ஜானுக்கு அந்த மொழி புரியும் என்பது அவருக்குத் தெரியவில்லை.

வட்டார வேலையில் ஜான் பயிற்சி பெற வேண்டியிருந்ததால் சீக்கிரத்திலேயே ரெட் லேக் நகரத்தை விட்டுப் புறப்பட்டோம். சுமார் ஒரு வருடத்திற்குப் பிறகு, ஒரு மாவட்ட மாநாட்டில் ஜான் ஞானஸ்நானப் பேச்சுக் கொடுத்தபோது, ஞானஸ்நானம் எடுப்பவர்கள் மத்தியில் அந்தப் பெண்ணின் கணவரும் இருந்தார்! எப்படி? அன்று பாதிரி கத்திவிட்டுப் போனதுமுதல் அவர் பைபிளை ஆராய்ந்து படிக்க ஆரம்பித்ததே அதற்குக் காரணம்.

பயண வேலையில் மும்முரமாக...

வட்டார வேலையில் பல குடும்பங்களுடன் தங்கும் வாய்ப்பு எங்களுக்குக் கிடைத்தது. அந்தச் சகோதர சகோதரிகள் எங்களைத் தங்கள் வீட்டில் தங்க வைத்து, கூடப் பிறந்தவர்களைப் போல் பார்த்துக்கொண்டார்கள். அதனால் நெருங்கிய நண்பர்களானோம். குளிர்காலத்தில் வயதான சகோதரி ஒருவரின் வீட்டின் மாடி அறையில் தங்கினோம்; அங்கு ஹீட்டர் வசதி இல்லை. விடியற்காலையில் அந்தச் சகோதரி மெல்ல எங்கள் அறைக்குள் வந்து அங்கிருந்த சிறிய அடுப்பில் நெருப்பை மூட்டினார். கொஞ்ச நேரத்திலேயே எங்களுக்காக ஒரு பாத்திரத்தையும் சுடுதண்ணீரையும் கொண்டு வந்து கொடுத்தார். அவரது அமைதியான, கனிவான சுபாவத்தைக் கண்டு நிறையக் கற்றுக்கொண்டேன்.

பயண வேலை யெகோவாவிடம் நெருங்கி வர எனக்கு உதவியது. ஆல்பர்ட்டா மாகாணத்திலிருந்த ஒரு வட்டாரத்தின் வடகோடியில் ஒரு சுரங்க நகரம் இருந்தது. அங்கே ஒரு சகோதரி வசித்து வந்தார். சத்தியத்தில் அவர் தனியாக இருந்தார். அவரை யெகோவாவின் அமைப்பு எப்படிக் கவனித்துக்கொண்டது? பெரிய நகரத்திலுள்ள சபைகளைச் சந்திக்கப் போவதைப் போல நாங்கள் ஆறு மாதத்திற்கு ஒரு முறை விமானத்தில் அங்கு சென்றோம். ஒரு வாரம் அந்தச் சகோதரியுடன் சேர்ந்து ஊழியம் செய்தோம், கூட்டங்களை நடத்தினோம். யெகோவா தமது ஒவ்வொரு ஆட்டுக் குட்டியையும் கரிசனையோடு கவனித்துக்கொள்கிறார் என்பதற்கு இது ஓர் அருமையான உதாரணம்!

எங்களுக்குத் தங்க இடமளித்த பலருடன் கடிதத்தொடர்பு வைத்திருந்தோம். கடிதம் என்றவுடன் ஜான் எனக்கு ஆரம்பத்தில் கொடுத்த ஒரு பரிசுதான் நினைவுக்கு வருகிறது. அது, கடிதம் எழுதுவதற்குரிய பேப்பர்கள் கொண்ட கலர் பெட்டி. நண்பர்களுக்குக் கடிதம் எழுத அந்த பேப்பர்களைப் பயன்படுத்தினோம். இப்படிக் கடிதம் எழுதுவதில் அதிக சந்தோஷப்பட்டோம். அந்த கலர் பெட்டியை இன்னும் பொக்கிஷமாய்ப் பாதுகாக்கிறேன்.

டோரான்டோவில் வட்டார வேலை செய்துகொண்டிருந்த சமயத்தில், கனடா பெத்தேலிலிருந்து ஒரு சகோதரர் ஃபோன் செய்து... பெத்தேலில் சேவை செய்ய வர முடியுமா என்று கேட்டார். மறுநாளே பதிலைத் தெரிந்துகொள்ள விரும்பினார். சம்மதம் தெரிவித்தோம்.

பெத்தேல் சேவை

ஒவ்வொரு முறை புதிய நியமிப்புகள் கிடைத்தபோதும் யெகோவாவின் வலப்பக்கத்திலிருந்து வரும் பேரின்பத்தை வெவ்வேறு விதத்தில் ருசிக்க முடிந்தது. 1977-ல் பெத்தேல் சேவைக்குச் சென்றபோதும் அதை ருசிக்க முடிந்தது. அங்கு பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்கள் சிலருடன் பழகினோம்; அவர்களுடைய வித்தியாசமான சுபாவங்களை மட்டுமல்ல, கடவுளுடைய வார்த்தையின் மீது அவர்கள் வைத்திருந்த உயர்ந்த மதிப்பையும் பார்த்தோம்.

பெத்தேல் வாழ்க்கை எங்களுக்குப் பிடித்திருந்தது. உதாரணத்திற்கு, எங்கள் உடைகளைப் பெட்டியில் வைப்பதற்குப் பதிலாக அலமாரியில் வைத்தோம், வாராவாரம் “ஒரே” சபைக்குச் சென்றோம். எனக்குக் கொடுக்கப்பட்ட வேலை தவிர, பெத்தேலைப் பார்க்க வருபவர்களுக்கு அதைச் சுற்றிக் காட்டுவதும் எனக்கு எப்போதும் சந்தோஷத்தை அளித்தது. பெத்தேலில் செய்யப்படுகிற வேலைகளைப் பற்றி அவர்களுக்கு விளக்கினேன், அவர்கள் சொல்லும் குறிப்புகளைக் கேட்டேன், அவர்களுடைய கேள்விகளுக்குப் பதிலளித்தேன்.

வருடங்கள் வேகமாக உருண்டோடின. 1997-ல் நியு யார்க், பேட்டர்ஸனில் கிளை அலுவலகக் குழுவினருக்கான பள்ளியில் கலந்துகொள்ள ஜான் அழைக்கப்பட்டார். அதன் பிறகு, உக்ரேனுக்குச் செல்ல முடியுமாவென அமைப்பு கேட்டது. அதைக் குறித்துக் கவனமாகச் சிந்திக்கும்படி... ஜெபிக்கும்படி... கேட்டுக்கொள்ளப்பட்டோம். உக்ரேனுக்குச் செல்வதென அன்று மாலையே தீர்மானம் எடுத்தோம்.

உக்ரேனில் மற்றொரு புதிய வாழ்க்கை

1992-ல் ரஷ்யாவிலுள்ள செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கிலும் 1993-ல் உக்ரேனிலுள்ள கீவ்விலும் நடைபெற்ற பெரிய சர்வதேச மாநாடுகளில் கலந்துகொண்டோம். இந்த மாநாடுகள் கிழக்கு ஐரோப்பிய சகோதரர்கள் மத்தியில் சிநேகத்தை வளர்த்தன. உக்ரேனுக்கு மாறி வந்ததும், அங்கே விவ் நகரில் ஒரு பழைய வீட்டில் இரண்டாவது மாடியில் தங்கினோம். ஜன்னல்களைத் திறந்தால் ஒரு சிறிய தோட்டம் தெரியும்; அதில், ஒரு பெரிய சேவலையும் கோழி தன் குஞ்சுகளுடன் மேய்வதையும் பார்க்க முடிந்தது. சொல்லப்போனால், சஸ்காட் செவன் பண்ணையில் இருப்பதைப் போலவே உணர்ந்தோம். அந்த வீட்டில் 12 பேர் தங்கியிருந்தோம். பெத்தேலில் வேலை செய்ய தினமும் காலையில் நகரத்தின் வழியே வண்டியில் சென்றோம்.

உக்ரேனில் எங்கள் வாழ்க்கை எப்படியிருந்தது? அங்குள்ள சகோதர சகோதரிகள் பலர் சோதனைகளையும் தடையுத்தரவுகளையும் சிறைவாசங்களையும் சந்தித்தவர்கள். கூட்டங்களில் அவர்கள் பக்கத்தில் உட்கார்ந்தபோது தூசிபோல உணர்ந்தோம். அவர்கள் விசுவாசத்தில் உறுதியாக இருந்தார்கள். அவர்களைப் பாராட்டியபோது, “யெகோவாவுக்காக எல்லாவற்றையும் தாங்கிக்கொண்டோம்” என்றார்கள். யெகோவா எப்போதும் அவர்களோடு இருந்ததாகவே உணர்ந்தார்கள். இன்றும்கூட, அவர்கள் காட்டும் தயவுக்கு நன்றி சொன்னால், “யெகோவாவுக்கு நன்றி சொல்லுங்கள்” என்பார்கள். எல்லா நன்மையான காரியங்களையும் யெகோவாதான் வழங்குகிறார் என்பதைச் சொல்லாமல் சொல்கிறார்கள்.

உக்ரேனில் கூட்டங்களுக்குப் பலர் நடந்தே செல்கிறார்கள். ஒரு மணிநேரமோ அதற்கும் கூடுதலாகவோ நடக்க வேண்டியிருப்பதால், உரையாடவும் உற்சாகப்படுத்தவும் அவர்களுக்கு நிறைய நேரம் கிடைக்கிறது. விவ் நகரத்தில் 50-க்கும் மேற்பட்ட சபைகள் உள்ளன. அவற்றில் 21 சபைகள் ஒரு பெரிய ராஜ்ய மன்ற கட்டிடத்தை உபயோகிக்கின்றன. ஞாயிற்றுக்கிழமைகளில், கூட்டங்களுக்காகச் சகோதரர்கள் தொடர்ந்து வந்துகொண்டே இருப்பதைக் காண்பது கண்கொள்ளாக் காட்சி.

சீக்கிரத்திலேயே அங்குள்ள சகோதர சகோதரிகளுடன் நெருங்கிப் பழக ஆரம்பித்தோம். அவர்கள் கனிவாக நடந்துகொள்வார்கள், மற்றவர்களை நன்கு கவனித்துக்கொள்வார்கள். அப்போதும் சரி இப்போதும் சரி, மொழியைப் புரிந்துகொள்ள நான் கஷ்டப்படுகையில் அவர்கள் பொறுமையாக நடந்துகொள்கிறார்கள். அது அவர்களுடைய வார்த்தைகளில் மட்டுமல்ல கண்களிலும் தெரியும்.

2003 கீவ் சர்வதேச மாநாட்டின்போது ஒரு சம்பவம் நடந்தது. அது, யெகோவாவின் சாட்சிகள் ஒருவர்மீது ஒருவர் எந்தளவு நம்பிக்கை வைத்திருக்கிறார்கள் என்பதைச் சுட்டிக்காட்டியது. நாங்கள் நிலத்தடி மெட்ரோ ரயிலைப் பிடிக்கப் போய்க்கொண்டிருந்தோம். அப்போது, அந்தக் கூட்டத்தில் ஒரு சிறுமி எங்களிடம் வந்து, “நானும் என் பாட்டியும் வந்தோம், இப்போது பாட்டி எங்கே என்று தெரியவில்லை” எனப் பதட்டப்படாமல் சொன்னாள். அவள் எங்களுடைய பேட்ஜ் கார்டைப் பார்த்து நாங்கள் யெகோவாவின் சாட்சிகள் என்று புரிந்துகொண்டாள். அவள் ரொம்பத் தைரியமாக இருந்தாள், அழவே இல்லை. வட்டாரக் கண்காணி ஒருவரின் மனைவி மாநாட்டு அரங்கத்திற்கு அவளை அன்போடு அழைத்துச் சென்று சகோதரர்களிடம் ஒப்படைத்தார். கொஞ்ச நேரத்திற்குள் சிறுமி அவளுடைய பாட்டியிடம் சேர்க்கப்பட்டாள். ஆயிரக்கணக்கானோர் அலைமோதிய இடத்தில் அந்தச் சிறுமிக்கு இருந்த அபார நம்பிக்கையைக் கண்டு மலைத்துப்போனேன்.

உக்ரேனில் புதிய கிளை அலுவலகத்தின் அர்ப்பண நிகழ்ச்சியில் கலந்துகொள்ள 2001, மே மாதம் பல நாடுகளிலிருந்து சகோதர சகோதரிகள் வந்திருந்தார்கள். ஒரு ஸ்டேடியத்தில் ஞாயிற்றுக்கிழமை காலையில் விசேஷப் பேச்சு கொடுக்கப்பட்டது. அதற்குப் பிறகு புதிய பெத்தேலைக் காண சகோதரர்கள் கடலெனத் திரண்டு வந்தார்கள். தெருவில் அவர்கள் அமைதியாகவும் நேர்த்தியாகவும் நடந்துவந்த காட்சி இன்னமும் என் கண்முன்னே நிற்கிறது! அந்தச் சகோதரர்களைப் பார்த்து நெகிழ்ந்துபோனேன். அது கடவுளுக்குச் சேவை செய்வதால் கிடைக்கும் பேரின்பத்தை இன்னும் உயர்வாய் மதிக்க என்னைத் தூண்டியது.

திடீர் திருப்பம்

2004-ல் ஜானுக்குப் புற்றுநோய் இருப்பது தெரியவந்தபோது வேதனை அடைந்தோம். சிகிச்சைக்காக கனடாவுக்குப் போனோம். முதன்முறையாக கீமோதெரப்பி அவருக்குக் கொடுக்கப்பட்டபோது அதைத் தாங்கும் சக்தி அவரது உடலுக்கு இருக்கவில்லை; சில வாரங்கள் அவசர சிகிச்சைப் பிரிவில் இருந்தார். நல்லவேளை அவருக்கு நினைவு திரும்பியது. அவரால் பேச முடியாவிட்டாலும் தன்னைப் பார்க்க வந்தவர்களுக்கு எப்போதும் கண்களால் நன்றிசொன்னார்.

ஆனால் அவர் வியாதியிலிருந்து மீளவில்லை, அந்த வருடமே இறந்துபோனார். அது எனக்குப் பெரும் இழப்பு. ஏனென்றால், நானும் ஜானும் யெகோவாவின் சேவையில் கைகோர்த்து அளவிலா ஆனந்தத்தைப் பகிர்ந்துகொண்டோம். அவர் இல்லாமல் என்ன செய்வேன்? மீண்டும் உக்ரேனுக்கே திரும்பிப் போனேன். பெத்தேல் குடும்பத்தாரும் சபையாரும் என்னை அன்போடு கவனித்துக்கொள்கிறார்கள். அவர்களுக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்.

கடவுளுடைய சேவையில் நாங்கள் எடுத்த தீர்மானங்களுக்காக ஒருநாள்கூட வருத்தப்பட்டதில்லை. பேரின்பத்தை ருசித்திருக்கிறோம், உயிர் நண்பர்களைப் பெற்றிருக்கிறோம். இன்றைக்கல்ல, நாளைக்கல்ல என்றைக்குமே யெகோவாவின் நல்மனதைப் பற்றிக் கற்றுக்கொண்டே இருக்கலாம். ‘அவரது வலப்பக்கத்தில் எப்போதும் பேரின்பம்’ கண்டிருப்பதால், அவருக்குச் சதா காலமும் சேவை செய்யவே ஆசைப்படுகிறேன்.

[பக்கம் 6-ன் சிறு குறிப்பு]

“கடவுளுடைய சேவையில் நாங்கள் எடுத்த தீர்மானங்களுக்காக ஒருநாள்கூட வருத்தப்பட்டதில்லை”

[பக்கம் 3-ன் படம்]

எங்கள் திருமணத்தின்போது

[பக்கம் 4-ன் படம்]

ஒன்டாரியோவில், ரெட் லேக் நகரத்தில் விசேஷ பயனியராகச் சேவை செய்தபோது

[பக்கம் 5-ன் படம்]

2002-ல் உக்ரேனில் ஜானுடன்