Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

“எங்கள கொஞ்சம் ஃபோட்டோ எடுக்கறீங்களா?”

“எங்கள கொஞ்சம் ஃபோட்டோ எடுக்கறீங்களா?”

“எங்கள கொஞ்சம் ஃபோட்டோ எடுக்கறீங்களா?”

மாவட்ட மாநாட்டின் இரண்டாம் நாள் நிகழ்ச்சிக்குப் பிறகு, மெக்சிகோ பெத்தேலில் சேவை செய்கிற ஹோஸ்வே என்ற சகோதரர் கெரேடாரோ நகரத்தைச் சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது, “எங்கள கொஞ்சம் ஃபோட்டோ எடுக்கறீங்களா?” என்று ஜாவ்யர்-மாரூ தம்பதியர் ஹோஸ்வேயிடம் கேட்டார்கள்; அவர்கள் கொலம்பியாவிலிருந்து வந்த சுற்றுலா பயணிகள். ஹோஸ்வேயும் அவருடன் சென்ற அவருடைய நண்பர்களும் மிக நேர்த்தியாக உடை உடுத்தி, மாநாட்டு பேட்ஜை அணிந்திருந்தார்கள்; அதைப் பார்த்த அந்தத் தம்பதியர், “நீங்க ஏதாவது பட்டமளிப்பு விழாவுக்குப் போயிட்டு வர்றீங்களா? இல்ல, வேற ஏதாவது விசேஷ நிகழ்ச்சிக்குப் போயிட்டு வர்றீங்களா?” என்று கேட்டார்கள். யெகோவாவின் சாட்சிகளுடைய மாநாட்டில் கலந்துகொள்ள வந்திருப்பதாக ஹோஸ்வே சொன்னார்; அதோடு, ஞாயிற்றுக்கிழமை மாநாட்டுக்கு அவர்களை அழைத்தார்.

மாநாட்டில் கலந்துகொள்வதற்கு ஏற்ற உடை அந்தத் தம்பதியரிடம் இல்லாததால் அங்கு செல்ல ரொம்பவே தயங்கினார்கள். இருந்தாலும், ஹோஸ்வே தன்னுடைய பெயரையும், பெத்தேல் ஃபோன் நம்பரையும் அவர்களிடம் கொடுத்தார்.

நான்கு மாதங்களுக்குப் பிறகு மெக்சிகோ சிட்டியிலிருந்து ஜாவ்யர் தொடர்புகொண்டபோது ஹோஸ்வேக்கு ஒரே ஆச்சரியம்! ஜாவ்யர் தன் மனைவியுடன் மாநாட்டில் கலந்துகொண்டதாகச் சொன்னார்; அதோடு, இருவரும் யெகோவாவின் சாட்சிகளிடம் பைபிளைப் படிக்க விரும்புவதாகவும் சொன்னார். சீக்கிரத்திலேயே அவர்களுக்கு பைபிள் படிப்பு ஆரம்பிக்கப்பட்டது; அவர்களும் உடனடியாகக் கூட்டங்களில் கலந்துகொள்ள ஆரம்பித்தார்கள். பத்து மாதங்களுக்குப் பிறகு பிரஸ்தாபிகளாய் ஆனார்கள். அவர்கள் கனடாவிலுள்ள டோரான்டோவுக்குக் குடிமாறிச் செல்ல வேண்டியிருந்தது; என்றாலும், தொடர்ந்து ஆன்மீக முன்னேற்றம் செய்து, ஞானஸ்நானம் பெற்றார்கள்.

சத்தியத்தை ஏற்றுக்கொண்டதற்கான காரணத்தை விளக்கி ஹோஸ்வேக்கு ஜாவ்யர் ஒரு கடிதம் எழுதினார். “கடவுளுடைய வழிநடத்துதல் இருந்தால் வாழ்க்கை எவ்வளவு நன்றாக இருக்குமென அந்த மாநாட்டுக்கு முன்புதான் நானும் என் மனைவியும் பேசிக்கொண்டிருந்தோம். நீங்கள் ஜம்மென்று உடை உடுத்தியிருந்ததை நாங்கள் பார்த்தபோது, மிக முக்கியமான நிகழ்ச்சிக்குப் போய்விட்டு வருகிறீர்கள் என்று நினைத்தோம். மாநாட்டுக்கு நாங்கள் போனபோது ஒருவர் எங்களை அன்புடன் அழைத்துச் சென்று உட்கார வைத்தார், பக்கத்தில் உட்கார்ந்திருந்தவர்கள் பைபிளை எங்களுக்குக் காட்டினார்கள், எல்லாரும் நல்ல விதமாக நடந்துகொண்டார்கள்; இதெல்லாம் எனக்கு ரொம்பப் பிடித்திருந்தது. சுற்றுலா பயணிகள் மாதிரி நாங்கள் டிரஸ் பண்ணியிருந்தாலும் யாரும் எங்களைப் பார்த்து முகத்தைச் சுளிக்கவில்லை” என்று அதில் குறிப்பிட்டிருந்தார்.

சாலொமோன் ராஜாவின் வார்த்தைகள் ஹோஸ்வேயின் விஷயத்தில் எவ்வளவு உண்மையாய் இருந்தன! “காலையிலே உன் விதையை விதை; மாலையிலே உன் கையை நெகிழவிடாதே; அதுவோ, இதுவோ, எது வாய்க்குமோ என்றும், இரண்டும் சரியாய்ப் பயன்படுமோ என்றும் நீ அறியாயே” என சாலொமோன் எழுதினார். (பிர. 11:6) வாய்ப்புகளைப் பயன்படுத்தி மாநாட்டுக்கோ பொதுப் பேச்சுக்கோ மற்றவர்களை அழைப்பதன் மூலம் சத்திய விதையை நீங்கள் விதைக்க முடியுமா? ஜாவ்யர்-மாரூ தம்பதியரைப் போல, கடவுளுடைய வழிநடத்துதலுக்காக ஏங்கும் ஆட்களைச் சத்தியத்திடம் ஈர்க்க யெகோவா உங்களைப் பயன்படுத்தலாம்.—ஏசா. 55:1.

[பக்கம் 32-ன் படம்]

இடமிருந்து வலம்: மெக்சிகோ கிளை அலுவலகத்தில், அலெஜான்ட்ரோ வெகுலின், மாரூ பினிடா, அலெஜான்ட்ரோ பினிடா, ஜாவ்யர் பினிடா, ஹோஸ்வே ராமிரெஸ்