Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

எப்போதும் அவசர உணர்வுடன் இருங்கள்

எப்போதும் அவசர உணர்வுடன் இருங்கள்

எப்போதும் அவசர உணர்வுடன் இருங்கள்

“கடவுளுடைய வார்த்தையை . . . அவசர உணர்வுடன் பிரசங்கி.”—2 தீ. 4:2.

விளக்க முடியுமா?

முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்கள் ஏன் அவசர உணர்வுடன் பிரசங்கித்தார்கள்?

எப்போதும் அவசர உணர்வுடன் இருக்க நாம் என்ன செய்ய வேண்டும்?

பிரசங்கிக்கும் வேலை இன்றைக்கு ஏன் அதிக அவசரமான வேலை?

1, 2. “அவசர உணர்வுடன் பிரசங்கி” என்ற கட்டளை சம்பந்தமாக என்ன கேள்விகள் எழும்புகின்றன?

 உயிர் காக்கும் வேலையில் ஈடுபடுவோர் எப்போதும் ஓர் அவசர உணர்வுடன் செயல்படுவார்கள். உதாரணமாக, தீயணைப்பு படைவீரர்கள் அவசரநிலை ஏற்படும்போது விரைந்து செல்வார்கள்; ஏனென்றால், உயிர்கள் ஆபத்தில் இருக்கலாம் என்பதை அவர்கள் அறிந்திருக்கிறார்கள்.

2 யெகோவாவின் சாட்சிகளாகிய நாமும் ஒருவிதத்தில் உயிர் காக்கும் வேலையில் ஈடுபடுகிறோம். அதனால்தான், நற்செய்தியை அறிவிக்கும் வேலையைப் பொறுப்புடன் செய்கிறோம். அதற்காக நாம் அரக்கப் பரக்கச் செயல்படுவதில்லை. அப்படியானால், “கடவுளுடைய வார்த்தையை . . . அவசர உணர்வுடன் பிரசங்கி” என எந்த அர்த்தத்தில் பவுல் சொன்னார்? (2 தீ. 4:2) எப்படி அவசர உணர்வுடன் நாம் பிரசங்கிக்கலாம்? நாம் செய்ய வேண்டிய வேலை ஏன் மிகவும் அவசரமான வேலை?

பிரசங்க வேலை ஏன் அவசரமான வேலை?

3. நற்செய்தியை மக்கள் ஏற்றுக்கொண்டால் அல்லது ஏற்றுக்கொள்ளாவிட்டால் என்ன ஆகும்?

3 பிரசங்க வேலை எப்படி உயிர்களைப் பாதுகாக்கிறது என்பதை நீங்கள் யோசித்துப் பார்த்தால் மற்றவர்களுக்கு நற்செய்தியை அறிவிப்பதன் அவசரத்தன்மையைப் புரிந்துகொள்ளலாம். (ரோ. 10:13, 14) பைபிளில் கடவுள் இவ்வாறு சொல்கிறார்: ‘சாகவே சாவாய் என்று நான் துன்மார்க்கனுக்குச் சொல்லும்போது, அவன் தன் பாவத்தைவிட்டுத் திரும்பி, நியாயமும் நீதியுஞ்செய்தால் . . . அவன் சாகாமல் பிழைக்கவே பிழைப்பான். அவன் செய்த எல்லாப் பாவங்களும் அவனுக்கு விரோதமாக நினைக்கப்படுவதில்லை.’ (எசே. 33:14-16) நற்செய்தியைப் பிரசங்கிப்பவர்களைப் பற்றி பைபிள் இவ்வாறு சொல்கிறது: “நீயும் மீட்படைவாய், உன் போதனைக்குச் செவிகொடுப்பவர்களையும் மீட்படையச் செய்வாய்.”—1 தீ. 4:16; எசே. 3:17-21.

4. விசுவாசதுரோகம் தலைதூக்கும் காலம் நெருங்கியபோது ஏன் அவசர உணர்வுடன் பிரசங்கிக்க வேண்டியிருந்தது?

4 அவசர உணர்வுடன் பிரசங்கிக்க வேண்டுமென தீமோத்தேயுவிடம் பவுல் சொன்னதற்குரிய காரணத்தைப் புரிந்துகொள்ள 2 தீமோத்தேயு 4:2-ன் சூழமைவைச் சிந்தித்துப் பாருங்கள்: “கடவுளுடைய வார்த்தையைப் பிரசங்கி; சாதகமான காலத்திலும் சரி பாதகமான காலத்திலும் சரி, அவசர உணர்வுடன் பிரசங்கி; கற்பிக்கும் கலையைப் பயன்படுத்தி நீடிய பொறுமையோடு கடிந்துகொள், கண்டித்துப் பேசு, அறிவுரை கூறு. ஏனென்றால், ஒரு காலம் வரும்; அப்போது, பயனளிக்கும் போதனைகளை அவர்கள் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள்; ஆனால், தங்கள் காதுகளுக்கு இனிமையாகத் தொனிக்கும் விஷயங்களைக் கேட்பதற்காக, தங்கள் விருப்பத்திற்கேற்ப தங்களுக்கென்று போதகர்களைத் திரட்டிக்கொள்வார்கள்; அதோடு, சத்தியத்தைக் காதுகொடுத்துக் கேட்காமல் கட்டுக்கதைகளின் பக்கம் சாய்ந்து விடுவார்கள்.” (2 தீ. 4:2-4) விசுவாசதுரோகம் தலைதூக்கும் என்று இயேசு ஏற்கெனவே சொல்லியிருந்தார். (மத். 13:24, 25, 38) அதற்கான காலம் நெருங்கியபோது, கிறிஸ்தவர்கள் பொய் போதனைகளால் வஞ்சிக்கப்படாதிருக்க ‘கடவுளுடைய வார்த்தையை’ சபைக்குள்ளும் அவசர உணர்வுடன் தீமோத்தேயு ‘பிரசங்கிக்க’ வேண்டியிருந்தது. உயிர்கள் ஆபத்தில் இருந்தன. இன்றைய நிலை என்ன?

5, 6. நாம் ஊழியத்தில் சந்திப்போர் நம்பும் பிரபலமான கருத்துகள் யாவை?

5 இப்போது, விசுவாசதுரோகம் வளர்ந்து எங்கும் பரவியிருக்கிறது. (2 தெ. 2:3, 8) இன்றைக்கு மக்களின் காதுகளுக்கு இனிமையாகத் தொனிக்கும் விஷயங்கள் என்ன? அநேக இடங்களில், மத போதனைக்கு இணையாகப் பரிணாமப் போதனைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. பரிணாமம் பொதுவாக விஞ்ஞான ரீதியில் விளக்கப்பட்டாலும், அது கிட்டத்தட்ட ஒரு மதத்தைப் போலவே ஆகியிருக்கிறது; கடவுளையும் மற்றவர்களையும் பற்றிய மக்களின் கண்ணோட்டத்தை மாற்றியிருக்கிறது. மற்றொரு பிரபலமான போதனை என்னவென்றால், ‘கடவுளுக்கு நம்மீது அக்கறையே இல்லை, அதனால் நாமும் அவரைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டிய அவசியமில்லை.’ கோடானு கோடி மக்களை ஆன்மீகத் தூக்கத்தில் ஆழ்த்தும் இந்தப் போதனைகள் அந்தளவுக்கு வசீகரமாய் இருக்கக் காரணம் என்ன? இந்த இரண்டு போதனைகளுமே ஒரே கருத்தைத்தான் தெரிவிக்கின்றன; அதாவது, ‘உங்களுக்கு எது இஷ்டமோ அதைச் செய்யுங்கள். நீங்கள் யாருக்கும் பதில் சொல்ல வேண்டியதில்லை’ என்பதைத்தான் தெரிவிக்கின்றன. இது, பலருடைய காதுகளுக்கு உண்மையிலேயே இனிமையாகத் தொனித்திருக்கிறது.சங்கீதம் 10:4-ஐ வாசியுங்கள்.

6 மக்களின் காதுகளுக்கு இனிமையாகத் தொனிக்கிற வேறு விஷயங்களும் இருக்கின்றன. ‘நீங்கள் என்ன செய்தாலும் பரவாயில்லை, தேவன் உங்களிடம் அன்பாகவே இருப்பார்’ என்பதைக் கேட்பதற்குத்தான் சர்ச்சுகளுக்குச் சிலர் போகிறார்கள். பூசைகள், ஆராதனைகள், பண்டிகைகள், உருவச்சிலைகள் போன்றவையெல்லாம் கடவுளுடைய ஆசீர்வாதத்தைத் தேடித் தரும் என்று சொல்லி மக்களுடைய காதுகளுக்கு மதகுருமார்கள் இனிமையூட்டுகிறார்கள். சர்ச்சுக்குப் போகும் ஆட்கள் தங்களுடைய ஆபத்தான நிலையைப் புரிந்துகொள்ளாமல் இருக்கிறார்கள். (சங். 115:4-8) என்றாலும், பைபிள் சத்தியத்தைப் புரிந்துகொண்டு ஆன்மீகத் தூக்கத்திலிருந்து எழ அவர்களுக்கு நாம் உதவினால், கடவுளுடைய அரசாங்கத்தின் மூலம் கிடைக்கும் நன்மைகளை அவர்கள் அனுபவிக்கலாம்.

அவசர உணர்வுடன் பிரசங்கிப்பது என்றால் என்ன?

7. அவசர உணர்வை நாம் எப்படிக் காட்டலாம்?

7 ஓர் அறுவை சிகிச்சை நிபுணர் தனது வேலைக்குக் கூர்ந்த கவனம் செலுத்த வேண்டும், ஏனென்றால் உயிர்கள் ஆபத்தில் இருக்கின்றன. ஊழியத்தின் மீது முழுக் கவனத்தைச் செலுத்துவதன் மூலம் நாமும் அவசர உணர்வைக் காட்டலாம்; உதாரணத்திற்கு, மக்களுடைய ஆர்வத்தைத் தூண்டுகிற விஷயங்களை... அவர்கள் எதிர்ப்படுகிற பிரச்சினைகளை... கேட்கிற கேள்விகளை... பற்றி நாம் சிந்தித்துப் பார்ப்பதன் மூலம் அவசர உணர்வைக் காட்டலாம். ஆட்கள் எப்போது ஆர்வமாகக் கேட்பார்களோ அப்போது போய்ப் பார்ப்பதற்காக நம்முடைய அட்டவணையை மாற்றியமைத்துக் கொள்வதன் மூலமும் அவசர உணர்வைக் காட்டலாம்.—ரோ. 1:15, 16; 1 தீ. 4:16.

8. அவசர உணர்வுடன் செயல்படுவது எதையும் குறிக்கிறது?

8 முக்கியமான காரியங்களுக்கு முதலிடம் கொடுப்பதும்கூட அவசர உணர்வைக் காட்டுவதைக் குறிக்கிறது. (ஆதியாகமம் 19:15-ஐ வாசியுங்கள்.) உதாரணமாக, மருத்துவப் பரிசோதனை முடிவுகள் வந்தவுடன் டாக்டர் உங்களை அழைத்து இப்படிச் சொல்வதாகக் கற்பனை செய்துகொள்ளுங்கள்: “உங்க நிலைமை ரொம்ப மோசமா இருக்கு... அவசரமாய் உங்களுக்கு சிகிச்சைய ஆரம்பிக்கணும், ஒரு மாசத்திற்குள் ஆரம்பிக்கணும்.” அவசரநிலை ஏற்படும்போது தீயணைப்பு படைவீரர் விரைந்தோடுவதைப் போல்... நீங்கள் டாக்டருடைய கிளினிக்கிலிருந்து விரைந்தோடிப் போய் எதையும் செய்ய மாட்டீர்கள். ஆனால், அவர் சொல்கிற ஆலோசனைகளைக் கவனமாய்க் கேட்டுக்கொள்வீர்கள், வீட்டுக்குப் போவீர்கள், அடுத்து என்ன செய்ய வேண்டுமென்பதைக் குறித்து தீவிரமாய் யோசித்துப் பார்ப்பீர்கள்.

9. பவுல் எபேசுவில் இருந்தபோது அவசர உணர்வுடன் ஊழியம் செய்தாரென ஏன் சொல்லலாம்?

9 ஆசிய மாகாணத்தில் நற்செய்தியை அறிவித்ததைப் பற்றி எபேசுவிலிருந்த மூப்பர்களிடம் பவுல் சொன்ன விஷயங்களிலிருந்து ஊழியத்தில் அவர் காட்டிய அவசர உணர்வை நாம் புரிந்துகொள்ளலாம். (அப்போஸ்தலர் 20:18-21-ஐ வாசியுங்கள்.) அவர் அங்கு போய்ச் சேர்ந்த முதல் நாளிலிருந்தே நற்செய்தியை வீட்டுக்கு வீடு பிரசங்கிப்பதில் மும்முரமாய் ஈடுபட்டார். அதோடு, இரண்டு வருடங்களாக “திரன்னு பள்ளி அரங்கத்தில் தினந்தோறும் பேச்சுகள் கொடுத்து வந்தார்.” (அப். 19:1, 8-10) அவருக்கு அவசர உணர்வு இருந்ததால்தான் இதையெல்லாம் செய்தார். ‘அவசர உணர்வுடன் பிரசங்கியுங்கள்’ என்ற அறிவுரையைக் கேட்டு நாம் திக்குமுக்காட வேண்டியதில்லை. என்றாலும், நம் வாழ்க்கையில் பிரசங்க வேலைக்கு முதலிடம் கொடுக்க வேண்டும்.

10. சுமார் 100 வருடங்களுக்கு முன்பே கிறிஸ்தவர்கள் அவசர உணர்வுடன் செயல்பட்டதற்காக நாம் ஏன் சந்தோஷப்படலாம்?

10 1914-க்கு முன்பு சிறு தொகுதியாய் இருந்த பைபிள் மாணாக்கர்கள் அவசர உணர்வுடன் ஊழியம் செய்வதில் சிறந்த முன்மாதிரிகளாய் விளங்கினார்கள். அவர்கள் சில ஆயிரம் பேர் மட்டுமே இருந்தபோதிலும், காலத்தின் அவசரத்தன்மையைப் புரிந்துகொண்டு நற்செய்தியை ஊக்கமாய் அறிவித்து வந்தார்கள். நூற்றுக்கணக்கான செய்தித்தாள்கள், கலர் ஸ்லைடுகள், “ஃபோட்டோ டிராமா ஆஃப் கிரியேஷன்” என்ற இயங்கு திரைப்படம் ஆகியவற்றின் மூலம் பைபிள் செய்தியை அறிவித்தார்கள். இதனால், லட்சோப லட்சம் பேர் நற்செய்தியை அறிந்துகொண்டார்கள். பைபிள் மாணாக்கர்களுக்கு அவசர உணர்வு இல்லாமல் இருந்திருந்தால், நம்மில் எத்தனை பேர் நற்செய்தியைக் கேட்டிருப்போம்?சங்கீதம் 119:60-ஐ வாசியுங்கள்.

அவசர உணர்வை இழக்காமல் ஜாக்கிரதையாய் இருங்கள்

11. சிலர் ஏன் அவசர உணர்வை இழந்துவிட்டார்கள்?

11 கவனச்சிதறல்கள் காரணமாகப் பிரசங்க வேலையின் முக்கியத்துவத்தை ஒருவர் மறந்துவிடலாம். சொந்த விஷயங்களில்... அநாவசியமான காரியங்களில்... நம்மை மூழ்கடிப்பதற்கு சாத்தானின் உலகம் சுறுசுறுப்பாய்ச் செயல்பட்டு வருகிறது. (1 பே. 5:8; 1 யோ. 2:15-17) ஒருகாலத்தில் யெகோவாவின் ஊழியத்திற்கு முதலிடம் கொடுத்துவந்த சிலர் பின்னர் அவசர உணர்வை இழந்துவிட்டார்கள். உதாரணமாக, தேமா என்பவன் பவுலோடு ‘சக வேலையாளாக’ இருந்தான், ஆனால் உலக ஆசையால் அவனுடைய கவனம் சிதறிவிட்டது. கஷ்ட காலத்தில், தனது சகோதரரான பவுலுக்குத் தொடர்ந்து உற்சாகம் அளிப்பதற்குப் பதிலாக அவரைவிட்டுப் பிரிந்து போய்விட்டான்.—பிலே. 23, 24; 2 தீ. 4:10.

12. இப்போது நமக்கு என்ன வாய்ப்பு இருக்கிறது, பிற்பாடு என்னென்ன வாய்ப்புகள் இருக்கும்?

12 நாம் எப்போதும் அவசர உணர்வுடன் இருக்க... இந்த உலகத்தை அனுபவிக்க வேண்டுமென்ற ஆசையை எதிர்த்துப் போராடுவது அவசியம். ‘உண்மையான வாழ்வைக் கண்டிப்பாக அடைவதற்கு’ நாம் பாடுபட வேண்டும். (1 தீ. 6:18, 19) கடவுளுடைய ஆட்சியில் முடிவில்லாமல் வாழும்போது மனதிற்கு மகிழ்வூட்டும் காரியங்களைச் செய்ய எண்ணற்ற வாய்ப்புகள் இருக்கும் என்பது உங்களுக்கே தெரியும். ஆனால், விரைவில் வரப்போகும் அர்மகெதோனைத் தப்பிப்பிழைக்க மற்றவர்களுக்கு உதவ இப்போது நமக்குள்ள வாய்ப்பு இனி ஒருபோதும் கிடைக்காது.

13. நாம் எப்போதும் அவசர உணர்வுடன் இருக்க என்ன செய்யலாம்?

13 நம்மைச் சுற்றியிருக்கும் பெரும்பாலோர் ஆன்மீக ரீதியில் தூங்கிக்கொண்டிருக்கிறார்கள். ஆகவே, நாம் எப்போதும் அவசர உணர்வுடன் இருக்க என்ன செய்யலாம்? நாமும் ஒருகாலத்தில் ஆன்மீக ரீதியில் உறங்கிக் கொண்டிருந்தோம். ஆனால், இப்போது விழித்தெழுந்துவிட்டோம்; பவுல் கூறியபடி, கிறிஸ்து நம்மீது ஒளி வீசியிருக்கிறார். இப்போது, அந்த ஒளியை நாம் ஏந்திச் செல்லும் பாக்கியத்தைப் பெற்றிருக்கிறோம். (எபேசியர் 5:14-ஐ வாசியுங்கள்.) அதைக் குறிப்பிட்ட பிறகு பவுல் இவ்வாறு எழுதினார்: “நீங்கள் ஞானமற்றவர்களாக நடக்காமல், ஞானமுள்ளவர்களாக நடப்பதற்கு மிகுந்த கவனம் செலுத்துங்கள்; பொன்னான நேரத்தை நன்றாகப் பயன்படுத்திக்கொள்ளுங்கள். ஏனென்றால், நாட்கள் பொல்லாதவையாக இருக்கின்றன.” (எபே. 5:15, 16) அதனால், ஆன்மீக ரீதியில் விழிப்புடன் இருக்க உதவும் காரியங்களுக்கு ‘பொன்னான நேரத்தை நன்றாகப் பயன்படுத்திக்கொள்வோமாக.’

முக்கியமான காலகட்டத்தில் வாழ்கிறோம்

14-16. நற்செய்தியை அறிவிப்பது இன்றைக்கு ஏன் மிக அவசரம்?

14 கடவுளுடைய மக்கள் எப்போதுமே அவசர உணர்வுடன் ஊழியம் செய்து வந்திருக்கிறார்கள். இப்போதோ அவர்கள் இன்னும் அதிக அவசர உணர்வுடன் அதைச் செய்கிறார்கள். பைபிளில் முன்னறிவிக்கப்பட்டபடியே அநேக சம்பவங்கள் 1914 முதல் நடந்தேறிவருகின்றன. (மத். 24:3-51) சரித்திரத்தில் என்றுமே மக்களுடைய உயிர் இந்தளவு ஆபத்தில் இருந்ததில்லை. சமீப காலத்தில் ஒப்பந்தங்கள் பல கையெழுத்தானாலும், வல்லரசுகளின் வசம் சுமார் 2,000 அணு ஆயுத ஏவுகணைகள் தயார் நிலையில் இருக்கின்றன. அணு ஆயுதப் பொருள்கள் நூற்றுக்கணக்கான தடவை “காணாமல் போய்விட்டதாக” அதிகாரிகள் அறிக்கை செய்திருக்கிறார்கள். அவற்றில் சில பயங்கரவாதிகள் கைகளில் இருக்கின்றனவா? பயங்கரவாதிகள் போரில் குதித்தால் எளிதில் மனிதர்களைப் பூண்டோடு அழித்துவிட முடியுமெனச் சிலர் சொல்கிறார்கள். ஆனால், மனித வாழ்வுக்குப் போர் மட்டுமே அச்சுறுத்தலாக இல்லை.

15 21-ஆம் நூற்றாண்டில் வாழும் மக்களின் உடல்நலத்திற்கு, “வானிலை மாற்றமே மாபெரும் அச்சுறுத்தல்” என த லான்செட் பத்திரிகையும் லண்டன் யூனிவர்சிட்டி காலேஜும் சேர்ந்து 2009-ல் ஓர் அறிக்கை வெளியிட்டன. “அடுத்த பத்தாண்டுகளில், வானிலை மாற்றம் பெருவாரியான மக்களின் ஆரோக்கியத்தைப் பாதிக்கும், லட்சோபலட்சம் மக்களின் உயிருக்கும் உடல்நலத்திற்கும் பேராபத்தை உண்டாக்கும்” என்று அந்த அறிக்கை குறிப்பிட்டது. கடல்மட்ட உயர்வு, வறட்சிகள், வெள்ளங்கள், கொள்ளைநோய்கள், சூறாவளிகள், உணவு பற்றாக்குறை காரணமாக வரும் சண்டைகள் ஆகியவற்றால் பல இடங்கள் அழியலாம். ஆம், போர்களும் பேரழிவுகளும் மனித வாழ்வை அச்சுறுத்துகின்றன.

16 அணு ஆயுதப் போர் பற்றிய அச்சுறுத்தல் கடைசி நாட்களுக்கான ‘அடையாளத்தின்’ நிறைவேற்றத்திற்கு வழிவகுக்கலாம் எனச் சிலர் நினைக்கலாம். என்றாலும், பெரும்பாலோர் அந்த அடையாளத்தின் உண்மையான அர்த்தத்தைப் புரிந்துகொள்வதில்லை. கிறிஸ்துவின் பிரசன்னம் நிஜம்... இந்த உலகிற்கு அழிவு வேகமாக நெருங்கி வருகிறது... என்பதற்கான அடையாளம் பல பத்தாண்டுகளாகவே தெள்ளத்தெளிவாகத் தெரிகிறது. (மத். 24:3) அந்த அடையாளத்தின் பல அம்சங்கள் இன்றைக்கு மிகப் பளிச்செனத் தெரிகின்றன. ஆன்மீகத் தூக்கத்திலிருக்கும் மக்கள் விழித்தெழ இதுவே நேரம். அவர்களைத் தட்டியெழுப்ப நம் ஊழியம் உதவும்.

17, 18. (அ) இந்தக் கடைசி நாட்களில் நாம் எதை உணர்ந்திருக்க வேண்டும்? (ஆ) நற்செய்தியில் ஆர்வம் காட்ட எது மக்களைத் தூண்டலாம்?

17 யெகோவா மீதுள்ள நம் அன்பை நிரூபிப்பதற்கும்... கடைசி நாட்களில் செய்யப்பட வேண்டிய பிரசங்க வேலையைச் செய்து முடிப்பதற்கும்... கொஞ்ச காலமே மீந்திருக்கிறது. முதல் நூற்றாண்டில் ரோமாபுரியில் வாழ்ந்த கிறிஸ்தவர்களுக்கு பவுல் சொன்ன வார்த்தைகள் நமக்கும்கூட ஆழ்ந்த அர்த்தமுள்ளவை. ‘எப்படிப்பட்ட காலத்தில் வாழ்கிறீர்களென்று, அதாவது தூக்கத்திலிருந்து எழ வேண்டிய நேரம் வந்துவிட்டதென்று, நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். . . . நாம் கிறிஸ்தவர்களான சமயத்தில் இருந்ததைவிட இப்போது மீட்பு வெகு அருகில் இருக்கிறது’ என்று பவுல் சொன்னார்.—ரோ. 13:11.

18 கடைசி நாட்களில் நடக்குமென முன்னறிவிக்கப்பட்ட சம்பவங்கள் நடப்பதைக் கண்டு ஆன்மீகத் தேவையின் அவசியத்தைச் சிலர் உணருகிறார்கள். வேறு சிலர், மனித அரசாங்கங்கள் தோல்வி அடைந்திருப்பதைப் பார்த்து நற்செய்தியில் ஆர்வம் காட்டுகிறார்கள். அந்த அரசாங்கங்களால், பொருளாதார சீர்குலைவை... அணு ஆயுத அச்சுறுத்தலை... வன்முறைமிக்க செயல்களை... சுற்றுச்சூழல் நாசத்தை... தடுத்து நிறுத்த முடியவில்லை. இன்னும் சிலர் தங்களுடைய சொந்த குடும்பத்தில் ஏற்படும் உடல்நலப் பிரச்சினைகள்... விவாகரத்து... அன்பானவரின் மரணம்... போன்ற சம்பவங்களைக் கண்டு நற்செய்தியில் ஆர்வம் காட்டுகிறார்கள். ஊழியத்தில் பங்குகொள்ளும்போது இப்படிப்பட்ட மக்களுக்கு நாம் உதவுகிறோம்.

அவசர உணர்வினால் தூண்டப்படுதல்

19, 20. வாழ்க்கைப் பாணியை மாற்றிக்கொள்ள அவசர உணர்வு பலரை எப்படித் தூண்டியிருக்கிறது?

19 ஊழியத்தில் அதிகமாய் ஈடுபடும்படி அவசர உணர்வு அநேகரைத் தூண்டியிருக்கிறது. உதாரணமாக, “உங்கள் கண்களை எளிமையாக வையுங்கள்” என்ற 2006 விசேஷ மாநாட்டு தின நிகழ்ச்சியில் சொல்லப்பட்ட விஷயங்களைக் கேட்டபின் ஈக்வடார் நாட்டைச் சேர்ந்த இளம் தம்பதியினர் தங்களுடைய வாழ்க்கையை எளிமையாக்கத் தீர்மானித்தார்கள். தங்களுக்குத் தேவையில்லாத பொருள்கள் எவையென ஒரு பட்டியல் போட்டார்கள்; பிற்பாடு மூன்று படுக்கை அறைகள் கொண்ட அபார்ட்மென்ட்டைக் காலி செய்துவிட்டு ஒரேவொரு படுக்கை அறை கொண்ட அபார்ட்மென்ட்டிற்கு மூன்றே மாதத்திற்குள் குடிமாறினார்கள்... சில பொருள்களை விற்றார்கள்... கடன்களை அடைத்தார்கள். சீக்கிரத்தில் துணை பயனியர் ஊழியம் செய்ய ஆரம்பித்தார்கள், பின்பு வட்டாரக் கண்காணியின் ஆலோசனைப்படி தேவை அதிகமுள்ள ஒரு சபைக்கு மாறிச் சென்றார்கள்.

20 வட அமெரிக்காவைச் சேர்ந்த சகோதரர் ஒருவர் இவ்வாறு எழுதுகிறார்: “2006-ஆம் ஆண்டில் நடந்த ஒரு மாநாட்டில் நானும் என் மனைவியும் கலந்துகொண்டபோது, நாங்கள் ஞானஸ்நானம் எடுத்து 30 வருடங்கள் ஆகியிருந்தன. மாநாடு முடிந்து வீடு திரும்பும்போது, வாழ்க்கையை எளிமையாக்குவது சம்பந்தமாகக் கொடுக்கப்பட்ட அறிவுரையை எப்படிப் பின்பற்றலாமென பேசிக்கொண்டே வந்தோம். (மத். 6:19-22) எங்களுக்குச் சொந்தமாக மூன்று வீடுகள்... நிலம்... சொகுசு கார்கள்... ஒரு மோட்டர் படகு... ஒரு நடமாடும் வீடு... இருந்தன. நாங்கள் எவ்வளவு முட்டாளாக இருந்தோம் என்பதை உணர்ந்து, முழுநேர ஊழியத்தை எங்கள் இலக்காக வைக்கத் தீர்மானித்தோம். 2008-ஆம் ஆண்டில், எங்கள் மகளுடன் சேர்ந்து ஒழுங்கான பயனியர் சேவை செய்ய ஆரம்பித்தோம். நம் சகோதர சகோதரிகளுடன் இன்னும் அதிக நெருக்கமாகச் சேவை செய்வதில் அளவில்லா ஆனந்தம் அடைந்தோம்! தேவை அதிகமுள்ள இடங்களுக்குச் சென்று எங்களால் சேவை செய்ய முடிந்திருக்கிறது. அதோடு, யெகோவாவுக்கென நிறையச் செய்தது அவரிடம் இன்னும் நெருங்கிவரச் செய்திருக்கிறது. முக்கியமாக, கடவுளுடைய வார்த்தையில் உள்ள சத்தியத்தைக் கேட்டு மக்கள் புரிந்துகொள்ளும்போது அவர்களுடைய கண்கள் பிரகாசமாவதைப் பார்க்கும் பாக்கியத்தைப் பெற்றிருக்கிறோம்.”

21. எதைப் பற்றித் தெரிந்துவைத்திருப்பது நம்மைச் செயல்படத் தூண்டுகிறது?

21 இந்தப் பொல்லாத உலகத்திற்கு விரைவில் என்ன நடக்கும் என்பது நமக்குத் தெரியும்; ஆம், ‘தேவபக்தி இல்லாதவர்கள் நியாயந்தீர்க்கப்பட்டு அழிந்துபோகிற நாளுக்கென்று ஒதுக்கப்பட்டிருக்கிறார்கள்’ என்பது நமக்குத் தெரியும். (2 பே. 3:7) இதைத் தெரிந்துவைத்திருப்பது, மிகுந்த உபத்திரவத்தையும் புதிய உலகத்தையும் பற்றிப் பக்திவைராக்கியத்துடன் அறிவிப்பதற்கு நம்மைத் தூண்டுகிறது. மக்கள் மனதில் உண்மையான நம்பிக்கையை விதைக்க நாம் எப்போதும் மிகவும் அவசர உணர்வுடன் செயல்பட வேண்டும். அவசரமாய் செய்யப்பட வேண்டிய இந்த வேலையில் முழுமையாக ஈடுபடுவதன் மூலம் கடவுள் மீதும் சக மனிதர் மீதும் உண்மையான அன்பைக் காட்டுகிறோம்.

[கேள்விகள்]