Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்

வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்

வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்

ஆபாசத்தைப் பார்க்கும் பழக்கத்தில் ஒரு கிறிஸ்தவர் ஊறிப்போய்விட்டால் அவர் சபைநீக்கம் செய்யப்படுவாரா?

▪ ஆம், அவர் சபைநீக்கம் செய்யப்படலாம். ஆபாசமானவற்றை வாசிப்பதையோ பார்ப்பதையோ ஒருவர் அடியோடு வெறுத்தொதுக்குவது ஏன் அவசியம் என்பதை இது அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. பத்திரிகைகளில், திரைப்படங்களில், வீடியோக்களில், இன்டர்நெட்டில் என... ஆபாசம் எதில் வெளிவந்தாலும் அவற்றை அறவே தவிர்க்க வேண்டும்.

இன்று உலகெங்கும் ஆபாசம் மலிந்து கிடக்கிறது. எப்போதையும்விட இப்போது ஆபாச விஷயங்கள் இன்டர்நெட்டில் குவிந்து கிடக்கின்றன; இதனால், இந்தக் கொடிய கொள்ளைநோய்க்குப் பலியாவோரின் எண்ணிக்கை ராக்கெட் வேகத்தில் அதிகரித்திருக்கிறது. இளைஞர்களிலும் சரி பெரியவர்களிலும் சரி, சிலர் ஆபாச வெப் சைட்டுகளை எதேச்சையாகப் பார்க்க நேர்ந்திருக்கிறது. இன்னும் சிலர் தெரிந்தே இத்தகைய வெப் சைட்டுகளுக்குச் சென்றிருக்கிறார்கள்; வீட்டிலோ வேலை செய்யும் இடத்திலோ யாருக்கும் தெரியாமல் அவர்களால் ஆபாசமானவற்றை வாசிக்க அல்லது பார்க்க முடிவதால் கட்டுப்பாடு அற்றவர்களாக இருக்கிறார்கள். கிறிஸ்தவர்கள் இந்த விஷயத்திற்கு ஏன் அதீத கவனம் செலுத்த வேண்டும்?

இதற்கு அடிப்படைக் காரணம், இயேசு கொடுத்த பின்வரும் எச்சரிக்கையில் காணப்படுகிறது: “காம உணர்வோடு ஒரு பெண்ணைப் பார்த்துக்கொண்டே இருக்கும் எவனும் அவளுடன் ஏற்கெனவே தன் இருதயத்தில் தவறான உறவுகொண்டுவிடுகிறான்.” (மத். 5:28) திருமணமானவர்கள் இயல்பாக உடலுறவுகொள்வது முறையானது, சந்தோஷம் தருகிறது என்பது உண்மைதான். (நீதி. 5:18, 19; 1 கொ. 7:2-5) ஆனால், ஆபாசம் அப்படிப்பட்டதல்ல. அது, முறைகேடான உறவைச் சித்தரிக்கிறது, இயேசு எச்சரித்த ஒழுக்கக்கேடான எண்ணங்களைத் தூண்டிவிடுகிறது. பளிச்சென்று சொன்னால், ஆபாசமானவற்றை வாசிப்பதோ பார்ப்பதோ பின்வரும் பைபிள் அறிவுரைக்கு நேர்மாறானது: “பாலியல் முறைகேடு, அசுத்தமான நடத்தை, காமப்பசி, தீய ஆசை, ஏதோவொன்றை ஆராதிப்பதற்குச் சமமான பேராசை ஆகியவற்றைத் தூண்டுகிற உங்கள் உடலுறுப்புகளை மரத்துப்போகச் செய்யுங்கள்.”—கொலோ. 3:5.

ஒரு கிறிஸ்தவர் ஓரிரு முறை ஆபாசத்தைப் பார்த்திருந்தால்? அவருடைய சூழ்நிலை சங்கீதக்காரனான ஆசாப் ஒரு சந்தர்ப்பத்தில் சந்தித்த ஆபத்தான சூழ்நிலைக்கு ஒப்பாக இருக்கிறது. “என் கால்கள் சற்றே நிலைதடுமாறலாயின; நான் அடிசறுக்கி விழப்போனேன்” என்று அவர் சொன்னார். அதனால் சமாதானத்தை இழந்து, “நாள்தோறும் நான் வதைக்கப்படுகின்றேன்; காலைதோறும் கண்டிப்புக்கு ஆளாகின்றேன்” என்றார். (சங். 73:2, 14, பொது மொழிபெயர்ப்பு) அப்படியென்றால், ஆண்கள் மற்றும் பெண்களின் நிர்வாணக் காட்சிகள் அல்லது ஆணும் பெண்ணும் பாலியல் முறைகேட்டில் ஈடுபடும் காட்சிகள் போன்ற ஆபாசங்களைப் பார்க்கிற ஒரு கிறிஸ்தவர் எப்படிச் சுத்தமான மனசாட்சியையும் கடவுளுடன் சமாதான உறவையும் அனுபவிக்க முடியும்?

இத்தகைய ஆபாச வலையில் சிக்கிக்கொண்டிருக்கிற ஒரு கிறிஸ்தவர் புத்தி தெளிந்து ஆன்மீக உதவியை நாட வேண்டும். பின்வருமாறு சொல்லப்பட்டுள்ளபடி, அத்தகைய உதவி சபையில் கிடைக்கும்: “ஒருவன் தெரியாமல் ஏதோவொரு தவறைச் செய்துவிட்டாலும்கூட, ஆன்மீகத் தகுதிகளையுடைய நீங்கள் சாந்தமாக அப்படிப்பட்டவனைச் சரிப்படுத்த முயலுங்கள்; அதேசமயத்தில், நீங்களும் எந்தத் தவறும் செய்துவிடாதபடி கவனமாயிருங்கள்.” (கலா. 6:1) ஓரிரு கிறிஸ்தவ மூப்பர்கள் அவருக்குத் தேவையான உதவியை அளித்து, ஜெபமும் செய்யலாம்; ஏனென்றால், ‘விசுவாசத்தோடு ஏறெடுக்கப்படுகிற ஜெபம் சுகமில்லாதவனைச் சுகப்படுத்தும் . . . அவன் பாவங்கள் செய்திருந்தால், அவை மன்னிக்கப்படும்.’ (யாக். 5:13-15) ஆபாசம் எனும் சகதியிலிருந்து வெளிவர உதவியை நாடியிருப்பவர்கள், கடவுளிடம் அண்டி வருவதே சிறந்தது என்பதை உணர்ந்திருக்கிறார்கள்; ஆசாபும் அப்படித்தான் உணர்ந்தார்.—சங். 73:28.

என்றாலும், ‘அசுத்தமான நடத்தை, பாலியல் முறைகேடு, வெட்கங்கெட்ட நடத்தை’ போன்ற பாவத்தைச் செய்த சிலர் மனந்திரும்பாததைப் பற்றி அப்போஸ்தலன் பவுல் சொன்னார். * (2 கொ. 12:21) “அசுத்தமான நடத்தை” என மொழிபெயர்க்கப்பட்டுள்ள கிரேக்க வார்த்தை, ‘கீழ்த்தரமான அசுத்தத்தைக் குறிக்கிறது’ என மார்வன் ஆர். வின்சன்ட் என்ற பேராசிரியர் எழுதினார். நிர்வாணக் காட்சிகள் அல்லது ஆணும் பெண்ணும் பாலியல் முறைகேட்டில் ஈடுபடும் காட்சிகள் போன்றவற்றைவிட படுமோசமான ஆபாசங்கள் இருப்பது வருந்தத்தக்க விஷயம். ஓரினச்சேர்க்கை (ஆண் ஆணுடனோ பெண் பெண்ணுடனோ கொள்ளும் உறவு), கும்பலாக உறவுகொள்வது, மிருகங்களுடன் உறவு கொள்வது, பிள்ளைகளை ஆபாசப்படுத்துவது, கும்பலாகக் கற்பழிப்பது, பெண்களிடம் மிருகத்தனமாக நடந்துகொள்வது, கட்டிப்போட்டு உறவுகொள்வது, சித்திரவதை செய்வதில் இன்பம் காண்பது போன்ற கீழ்த்தரமான, அருவருப்பான ஆபாசங்கள் இருக்கின்றன. பவுலுடைய காலத்தில் ‘மனம் இருளடைந்திருந்த’ சிலர், ‘ஒழுக்க உணர்வு துளிகூட இல்லாமல், எல்லாவித அசுத்தமான செயல்களையும் பேராசையோடு செய்வதற்காக வெட்கங்கெட்ட நடத்தைக்குத் தங்களை ஒப்படைத்திருந்தார்கள்.’—எபே. 4:18, 19.

கலாத்தியர் 5:19-ல்கூட பவுல் ‘அசுத்தமான நடத்தையை’ பற்றிக் குறிப்பிட்டார். “அது முக்கியமாக இயல்புக்கு மாறான எல்லா விதமான காமத்தையும்” அர்த்தப்படுத்தலாம் என்று பிரிட்டிஷ் அறிஞர் ஒருவர் சொன்னார். மேற்குறிப்பிடப்பட்ட அருவருப்பான, இழிவான ஆபாசங்கள் ‘இயல்புக்கு மாறான காமம்’ என்பதையும் கீழ்த்தரமானவை என்பதையும் எந்தக் கிறிஸ்தவர்தான் ஒத்துக்கொள்ளாதிருப்பார்? இத்தகைய அசுத்தமான காரியங்களை “செய்து வருகிறவர்கள் கடவுளுடைய அரசாங்கத்திற்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்” என்று பவுல் முடிவாக கலாத்தியர் 5:19-21-ல் சொன்னார். ஆகவே, அருவருப்பான, இழிவான ஆபாசங்களைப் பார்ப்பதைப் பழக்கமாக்கியிருந்தவர்... ஒருவேளை கொஞ்ச காலமாகவே அவற்றைப் பார்த்து வந்திருந்தவர்... மனந்திருந்தி மாற்றங்களைச் செய்யாதிருந்தவர்... கிறிஸ்தவச் சபையில் தொடர்ந்து இருக்க அனுமதிக்கப்படவில்லை. சபையின் தூய்மையையும் நல்ல சிந்தையையும் தக்கவைத்துக் கொள்வதற்காக அவர் சபைநீக்கம் செய்யப்பட வேண்டியிருந்தது.—1 கொ. 5:5, 11.

அருவருப்பான ஆபாசங்களைப் பார்த்து வந்த சிலர் மூப்பர்களிடம் சென்று, தேவையான ஆன்மீக உதவியைப் பெற்று, பெரும் மாற்றங்களைச் செய்திருப்பது சந்தோஷமான விஷயம். இது சம்பந்தமாக, பூர்வ சர்தை சபைக்கு அவர் இவ்வாறு அறிவுரை கொடுத்தார்: “சாகப்போகும் நிலையில் இருந்தவற்றைப் பலப்படுத்து; நீ கற்றுக்கொண்டவற்றையும் கேட்டறிந்தவற்றையும் எப்போதும் நினைவில் வை; அவற்றைக் கடைப்பிடித்துக்கொண்டே இரு; மனந்திரும்பு; நீ விழித்துக்கொள்ளாவிட்டால் . . . எந்த நேரத்தில் உன்னிடம் வருவேன் என்பது உனக்குத் தெரியப்போவதில்லை.” (வெளி. 3:2, 3) மனந்திரும்புவதும் அழிவெனும் நெருப்பிலிருந்து வெளியே இழுத்துக் காப்பாற்றப்படுவதும் சாத்தியமே.—யூ. 22, 23.

அழிவுக்கு அழைத்துச் செல்லும் ஆபாசத்தின் பக்கமே தலைவைக்காதிருக்க நாம் ஒவ்வொருவரும் திடத்தீர்மானமாய் இருப்பது எவ்வளவு மேலானது! ஆம், எல்லா விதமான ஆபாசத்தையும் அறவே தவிர்க்க நாம் உறுதிபூண்டிருக்க வேண்டும்!

[அடிக்குறிப்பு]

^ பாரா. 8 ‘அசுத்தமான நடத்தை, பாலியல் முறைகேடு [வேசித்தனம்], வெட்கங்கெட்ட நடத்தை [காமவிகாரம்]’ போன்றவற்றிற்கு இடையே உள்ள வித்தியாசங்களைப் புரிந்துகொள்ள ஜூலை 15, 2006 தேதியிட்ட காவற்கோபுரத்தில் பக்கங்கள் 29-31-ஐப் பாருங்கள்.

[பக்கம் 30-ன் சிறு குறிப்பு]

ஆபாச வலையில் சிக்கிக்கொண்டிருக்கிற ஒரு கிறிஸ்தவர் புத்தி தெளிந்து ஆன்மீக உதவியை நாட வேண்டும்