இருதயத்தின் நோக்கங்கள்‐ஜாக்கிரதை!
‘எல்லாவற்றைப் பார்க்கிலும் இருதயமே மிகவும் தந்திரமுள்ளது; ஆசைப்படுவதை அடைய எதையும் செய்யக்கூடியது’ என்று பைபிள் சொல்கிறது. (எரே. 17:9, NW) நம் இருதயம் ஏதோவொன்றுக்காக ஆலாய்ப்பறக்கும்போது அதை அடைவதற்கு நாம் எத்தனையோ சாக்குப்போக்குகளைச் சொல்கிறோம், அல்லவா?
“இருதயத்திலிருந்தே கெட்ட எண்ணம், கொலை, மணத்துணைக்குத் துரோகம், பாலியல் முறைகேடு, திருட்டு, பொய்சாட்சி, நிந்தனை ஆகிய எல்லாத் தீமைகளும் வெளிவருகின்றன” என்று பைபிள் நம்மை எச்சரிக்கிறது. (மத். 15:19) அடையாளப்பூர்வ இருதயம் நம்மை ஏமாற்றிவிடலாம்; கடவுளுடைய சித்தத்திற்கு விரோதமாக ஏதோவொரு காரியத்தைச் செய்ய நம்மைத் தூண்டிவிடலாம். நம் இருதயம் நம்மை வஞ்சிக்கிறது என்பதை அறியாமலேயே நாமும் அந்தத் தவறைச் செய்துவிடலாம். அப்படியானால், தவறு செய்வதற்கு முன்பே நம்முடைய இருதயத்தின் நோக்கங்களை அறிந்துகொள்ள நாம் என்னவெல்லாம் செய்ய வேண்டும்?
உங்கள் நோக்கங்களை அறிந்துகொள்ள...
பைபிளைத் தினமும் வாசியுங்கள், தியானியுங்கள்.
“கடவுளுடைய வார்த்தை உயிருள்ளது, வல்லமையுள்ளது; இருபுறமும் கூர்மையான எந்த வாளையும்விடக் கூர்மையானது; அகத்தையும் புறத்தையும் . . . பிரிக்குமளவுக்கு ஊடுருவக்கூடியது” என்று அப்போஸ்தலன் பவுல் எழுதினார். ‘இருதயத்தின் எண்ணங்களையும் நோக்கங்களையும் பகுத்தறியும்’ சக்தி பைபிளுக்கு இருக்கிறது. (எபி. 4:12) பைபிளின் அடிப்படையில் நம்மையே சீர்தூக்கிப் பார்ப்பது, நம்முடைய இருதயத்தின் நோக்கங்களை அறிந்துகொள்ள பெருமளவு உதவும். அப்படியானால், பைபிளைத் தினமும் வாசித்து, தியானித்து, யெகோவாவின் எண்ணங்களையும் கருத்துகளையும் புரிந்துகொள்வது எவ்வளவு முக்கியம்!
பைபிள் தரும் அறிவுரைகளை ஏற்றுக்கொண்டு, அதன் நியமங்களைப் பின்பற்றுவது நம்முடைய மனசாட்சியை, அதாவது “சாட்சி சொல்கிற” உள்ளுணர்வை, பயிற்றுவிக்கிறது. (ரோ. 9:1) மனசாட்சியின் குரலுக்குச் செவிகொடுத்தால், செய்த தவறைச் சரியென நாம் வாதிட மாட்டோம். அறிவுரைகள் மட்டுமல்ல, ‘நமக்கு எச்சரிக்கையாக இருக்கிற’ உதாரணங்களும் பைபிளில் இருக்கின்றன. (1 கொ. 10:11) அவற்றிலிருந்து பாடம் கற்றுக்கொள்வது தவறான பாதையைத் தவிர்க்க நமக்கு உதவும். அப்படியானால், நாம் ஒவ்வொருவரும் என்ன செய்ய வேண்டும்?
உங்கள் இருதயத்தின் நோக்கங்களை அறிந்துகொள்ள உதவும்படி கடவுளிடம் ஜெபம் செய்யுங்கள்.
யெகோவா ‘இருதயத்தைச் சோதிக்கிறார்.’ (1 நா. 29:17) அவர் “நம் இருதயத்தைவிட உயர்ந்தவராகவும், எல்லாவற்றையும் அறிந்தவராகவும் இருக்கிறார்.” (1 யோ. 3:20) அவரை நாம் ஏமாற்ற முடியாது. நம்முடைய கவலைகளை, உணர்ச்சிகளை, ஆசைகளை ஜெபத்தில் அவரிடம் மனந்திறந்து சொல்லும்போது நம்முடைய இருதயத்தின் நோக்கங்களை அறிந்துகொள்ள அவர் நமக்கு உதவுவார். “சுத்த இருதயத்தை” நம்மில் உருவாக்கும்படியும் நாம் அவரிடம் கேட்கலாம். (சங். 51:10) எனவே, இருதயத்தின் நோக்கங்களை அறிந்துகொள்வதில் ஜெபம் வகிக்கிற பங்கை நாம் சாதாரணமாய் எடைபோட்டுவிடக் கூடாது.
சபைக் கூட்டங்களில் கூர்ந்து கவனியுங்கள்.
சபைக் கூட்டங்களில் கூர்ந்து கவனிப்பது நம்முடைய சுபாவத்தை, அதாவது இருதயத்தை, நேர்மையாய் ஆராய்ந்து பார்க்க உதவுகிறது. ஒவ்வொரு கூட்டத்திலும் நாம் புதிய புதிய தகவல்களைப் பெறாவிட்டாலும், அவற்றில் தவறாமல் கலந்துகொள்ளும்போது நம் இருதயத்தின் நோக்கங்களை ஆராய உதவுகிற பைபிள் நியமங்களை நன்கு புரிந்துகொள்ள முடிகிறது. நம் சகோதர சகோதரிகள் சொல்கிற பதில்களும் நம்முடைய சுபாவத்தைச் செதுக்கிச் சீராக்க உதவுகிறது. (நீதி. 27:17) சபைக் கூட்டங்களுக்குப் போகாமல், சகோதர சகோதரிகளின் கூட்டுறவைத் தவிர்ப்பது நமக்கு ஆபத்தையே விளைவிக்கும். அதுமட்டுமல்ல, ‘தன்னலத்தை நாடும்படி’ செய்துவிடும். (நீதி. 18:1, பொது மொழிபெயர்ப்பு) எனவே, நம்மை நாமே இவ்வாறு கேட்டுக்கொள்வது நல்லது: ‘எல்லாக் கூட்டங்களிலும் தவறாமல் கலந்துகொள்கிறேனா? அவற்றிலிருந்து பயனடைகிறேனா?’—எபி. 10:24, 25.
நம் இருதயம் நம்மை எங்கே வழிநடத்தும்?
தந்திரமிக்க நம் இருதயம் வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களில் நம்மைத் தவறாக வழிநடத்திவிடலாம். நான்கு அம்சங்களை இப்போது சிந்திப்போம்: பொருள்களைச் சேர்ப்பது, மதுபானங்களைப் பயன்படுத்துவது, நண்பர்களைத் தேர்ந்தெடுப்பது, பொழுதுபோக்கைத் தெரிவுசெய்வது.
பொருள்களைச் சேர்ப்பது.
நம்முடைய சரீரத் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டுமென்று ஆசைப்படுவது இயல்புதான். ஆனால், பேராசைப்படுவது தவறு என்பதைச் சுட்டிக்காட்டும் ஓர் உவமையை இயேசு சொன்னார். அதில், ஒரு பணக்காரனைப் பற்றிக் குறிப்பிட்டார். அவனுடைய களஞ்சியங்கள் நிரம்பி வழிந்தன. அவனுடைய நிலம் இன்னும் அதிகமதிகமாக விளைச்சலைத் தந்தது. அவற்றையெல்லாம் சேர்த்து வைக்க அவனுக்கு இடமில்லாமல்போனது. அதனால், தன்னுடைய களஞ்சியங்களை இடித்துவிட்டு இன்னும் பெரிய களஞ்சியங்களைக் கட்ட அவன் திட்டமிட்டான். “எனக்குரிய எல்லாத் தானியங்களையும் பொருள்களையும் சேர்த்து வைப்பேன்; அதன்பின் என்னிடம் ‘உயிரே, பல வருடங்களுக்குத் தேவையான நல்லநல்ல பொருள்களை உனக்காகச் சேகரித்து வைத்திருக்கிறேன்; அதனால் நீ ஓய்வெடு, சாப்பிட்டுக் குடித்துச் சந்தோஷமாக இரு’ என்று சொல்வேன் எனத் தனக்குள் கூறிக்கொண்டான்.” மறுக்க முடியாத ஓர் உண்மையை அவன் புரிந்துகொள்ளத் தவறினான்: அன்றிரவு அவனுடைய உயிர் எடுக்கப்படவிருந்தது!—லூக். 12:16-20.
பொருள்களை இப்போது சேர்த்து வைத்தால்தான் கடைசி காலத்தில் வசதியாய், நிம்மதியாய் வாழ முடியுமென நாமும்கூட நினைக்கலாம்; அதற்காக, சபைக் கூட்டம் நடக்கிற நாட்களில்கூட ‘ஓவர்டைம்’ செய்ய ஆரம்பித்துவிடலாம், கிறிஸ்தவப் பொறுப்புகளைத் தவிர்க்கவும் ஆரம்பித்துவிடலாம். ஆனால், இத்தகைய மனப்பான்மை நமக்கு வந்துவிடாதபடி நாம் ஜாக்கிரதையாய் இருக்க வேண்டும், அல்லவா? ஒருவேளை நாம் வாலிப வயதில் இருக்கலாம், முழுநேர சேவையே சிறந்ததென நினைக்கலாம். இருந்தாலும், “காசுபணம் சேர்த்துவிட்டு பிறகு பயனியர் ஊழியம் செய்யலாம்” என்று
யோசித்து, முழுநேர சேவையைத் தள்ளிப்போடுகிறோமா? கடவுளுடைய பார்வையில் செல்வந்தராக ஆவதற்கு நம்மால் முடிந்த அனைத்தையும் இன்றே நாம் செய்ய வேண்டும், அல்லவா? நாளைக்கு உயிருடன் இருப்போமா இல்லையோ யாருக்குத் தெரியும்!மதுபானங்களைப் பயன்படுத்துவது.
“குடிகாரரோடு சேராதே” என்று நீதிமொழிகள் 23:20 (பொ.மொ.) சொல்கிறது. மதுபானங்கள்மேல் தீரா ஆசை கொண்டுள்ள ஒருவர், குடிப்பது தவறில்லையென நினைக்கலாம். “போதை ஏறுவதற்காக நான் குடிக்கவில்லை, ‘ரிலாக்ஸ்’ செய்வதற்காகவே குடிக்கிறேன்” என்று அவர் சொல்லலாம். இப்படி ‘ரிலாக்ஸ்’ செய்வதற்காக நாம் குடிக்கிறோம் என்றால் நம்முடைய இருதயத்தின் நோக்கத்தை ஆராய்ந்தறிய வேண்டிய சமயம் இதுவே.
நண்பர்களைத் தேர்ந்தெடுப்பது.
பள்ளியிலோ, வேலை செய்யுமிடத்திலோ, ஊழியத்திலோ வெளியாட்களுடன் நாம் பேசிப் பழக வேண்டியிருக்கும், அதைத் தவிர்க்க முடியாதுதான். ஆனால், அவர்களுடன் கூடிக்குலவுவதையோ, நெருங்கிய நண்பர்கள் ஆவதையோ நம்மால் தவிர்க்க முடியும். அவர்களிடம் எத்தனையோ நல்ல குணங்கள் இருக்கின்றன என்று சொல்லி, அவர்களுடன் சகவாசம் வைத்துக்கொள்கிறோமா? “ஏமாந்துவிடாதீர்கள்; கெட்ட சகவாசம் நல்ல பழக்கவழக்கங்களைக் கெடுத்துவிடும்” என்று பைபிள் எச்சரிக்கிறது. (1 கொ. 15:33) ஒரு துளி விஷம் சுத்தமான தண்ணீரைப் பாழ்ப்படுத்திவிடும். அதுபோல, வெளியாட்களின் சகவாசம் நம்முடைய ஆன்மீகத்தைப் பாழ்ப்படுத்திவிடும்; அதன்பின், உடையிலும் பேச்சிலும் நடத்தையிலும் அவர்களை நாம் பின்பற்ற ஆரம்பித்துவிடுவோம்.
பொழுதுபோக்கைத் தெரிவுசெய்வது.
பட்டனைத் தட்டினால் போதும் விதவிதமான, வகைவகையான பொழுதுபோக்குகள் நம் கண்முன் வரிசை கட்டும்—அந்தளவு நவீன தொழில்நுட்பம் வளர்ந்திருக்கிறது. மலிந்து கிடக்கும் அந்தப் பொழுதுபோக்குகளில் பெரும்பாலானவை கிறிஸ்தவர்களுக்குத் தகாதவை. ‘எல்லா விதமான அசுத்தத்தை . . . பற்றிய பேச்சுக்கூட உங்கள் மத்தியில் இருக்கக் கூடாது’ என்று பவுல் எழுதினார். (எபே. 5:3) அசுத்தமான காரியங்களைப் பார்ப்பதற்கோ கேட்பதற்கோ நம்முடைய இருதயம் நம்மைத் தூண்டினால் என்ன செய்வது? ‘எல்லோருக்கும் கொஞ்சம் பொழுதுபோக்கு தேவை, எப்படிப்பட்ட பொழுதுபோக்கைத் தேர்ந்தெடுப்பதென்பது அவரவர் விருப்பம்’ என்று நாம் நினைக்கலாம். ஆனாலும், பவுலுடைய அறிவுரையை ஏற்றுக்கொண்டு, எந்தவொரு அசுத்தமான காரியத்தையும் நாம் பார்க்காமலும் கேட்காமலும் இருக்க வேண்டும்.
மாற நினைத்தால் மாறலாம்
தந்திரமிக்க இருதயத்தின் பேச்சைக் கேட்பதும், தவறான நடத்தையை நியாயப்படுத்துவதும் நம் பழக்கமாகிவிட்டதென்றால் கவலை வேண்டாம், நம்மால் மாற்றங்களைச் செய்ய முடியும். (எபே. 4:22-24) இதற்கு இரண்டு அனுபவங்களைப் பார்க்கலாம்.
மிகல் * என்ற சகோதரர் பொருள் சேர்ப்பது சம்பந்தமாகத் தன் எண்ணத்தை மாற்றிக்கொள்ள வேண்டியிருந்தது. அவர் இவ்வாறு சொல்கிறார்: “அதிநவீன தொழில்நுட்ப சாதனங்களை வாங்குவதற்கும் சொகுசாக வாழ்வதற்குமே முக்கியத்துவம் கொடுக்கிற ஒரு நாட்டைச் சேர்ந்தவர்கள் நானும் என் மனைவியும் மகனும்! அதனால், நானும் ஒரு கட்டத்தில், ஆசைப்பட்டதையெல்லாம் வாங்கிக் குவிப்பதிலேயே மூழ்கிப்போனேன், பொருளாசையில் சிக்க மாட்டேன் என்ற நினைப்பில்! ஆனால், ஆசைக்கு ஓர் எல்லை இல்லை என்பதைச் சீக்கிரத்திலேயே புரிந்துகொண்டேன். என்னுடைய எண்ணங்களையும் இருதயத்தின் நோக்கங்களையும் குறித்து யெகோவாவிடம் ஜெபம் செய்தேன். நாங்கள் மூவரும் அவருக்கு முழுமூச்சோடு சேவை செய்ய விரும்புவதை அவரிடம் தெரிவித்தேன். பிறகு, வாழ்க்கையை எளிமையாக்கி, தேவை அதிகமுள்ள இடத்திற்குச் சென்று ஊழியம் செய்ய நாங்கள் தீர்மானித்தோம். சீக்கிரத்திலேயே, பயனியர் ஊழியம் செய்ய ஆரம்பித்தோம். நிறைவான, சந்தோஷமான வாழ்க்கைக்கு எக்கச்சக்கமான பொருள்கள் தேவையில்லை என்பதைப் புரிந்துகொண்டோம்.”
கெட்ட சகவாசத்தைத் தவிர்க்க சுய பரிசோதனை தனக்கு எப்படி உதவியது என்பதை லீ என்ற சகோதரர் சொல்கிறார்: “வியாபாரம் சம்பந்தமாக வெளிநாட்டவர்களை அடிக்கடி சந்தித்துப் பேச வேண்டியிருந்தது. அத்தகைய சந்திப்புகளின்போது மதுபானங்கள் மனம்போல் பரிமாறப்படும் என்பது எனக்குத் தெரியும், ஆனாலும் அவற்றில் கலந்துகொள்ள மனம் துடித்தது. கிட்டத்தட்ட வெறிக்குமளவுக்கு பல முறை நான் குடித்திருக்கிறேன். பிறகு அதை நினைத்து வேதனைப்பட்டிருக்கிறேன். எனவே, என் இருதயத்தை நானே சீர்தூக்கிப் பார்க்க வேண்டியிருந்தது. யெகோவாவை நேசிக்காத ஆட்களுடன் சகவாசம் வைத்துக்கொள்வதையே என் மனம் விரும்புகிறது என்பதை பைபிளின் அறிவுரைகளும் மூப்பர்களின் ஆலோசனைகளும் எனக்குத் தெளிவுபடுத்தின. இப்போதெல்லாம், வியாபார விஷயங்களை ஃபோனிலேயே முடித்துக்கொள்கிறேன், அவர்களுடன் சகவாசம் வைத்துக்கொள்வதைப் பெருமளவு தவிர்க்கிறேன்.”
நம்முடைய இருதயத்தின் நோக்கங்களை அறிந்துகொள்ள நாம் அதை நேர்மையாய் ஆராய்ந்து பார்க்க வேண்டும். அப்படிச் செய்வதற்கு, ஜெபத்தில் யெகோவாவின் உதவியை நாட வேண்டும். ஏனென்றால், ‘இருதயத்தின் அந்தரங்கங்களை அவர் அறிந்திருக்கிறார்.’ (சங். 44:21) அதோடு, அவர் நமக்குத் தம்முடைய வார்த்தையைக் கொடுத்திருக்கிறார்; முகம் பார்க்கும் கண்ணாடி போல் அது நம் இருதயத்தைப் படம்பிடித்துக் காட்டும். (யாக். 1:22-25) பைபிள் பிரசுரங்கள், சபைக் கூட்டங்கள் மூலமாக நாம் பெறுகிற நினைப்பூட்டுதல்களும் அறிவுரைகளும்கூட அதிக பயனுள்ளவையாய் இருக்கும். இப்படி யெகோவா செய்திருக்கிற ஏற்பாடுகளையெல்லாம் நாம் பயன்படுத்திக்கொண்டால் நம்முடைய இருதயத்தை நம்மால் பாதுகாக்க முடியும், நீதியின் பாதையில் தொடர்ந்து நடக்கவும் முடியும்.
^ பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.