Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

நீங்கள் மகிமை அடைவதைத் தடுக்க எதையும் அனுமதிக்காதீர்கள்

நீங்கள் மகிமை அடைவதைத் தடுக்க எதையும் அனுமதிக்காதீர்கள்

‘மனத்தாழ்மையுள்ளவனோ மகிமையடைவான்.’—நீதி. 29:23, NW.

1, 2. (அ) “மகிமை” என்ற வார்த்தைக்குப் பயன்படுத்தப்பட்டிருக்கும் மூலமொழி சொற்களின் அர்த்தம் என்ன? (ஆ) இந்தக் கட்டுரையில் என்னென்ன கேள்விகளைச் சிந்திப்போம்?

 “மகிமை” என்ற வார்த்தையைக் கேட்டதுமே எது உங்கள் ஞாபகத்திற்கு வருகிறது? நம்மை வியப்பில் ஆழ்த்தும் படைப்புகளா? (சங். 19:1) கோடீஸ்வரர்களுக்கு, அதிபுத்திசாலிகளுக்கு, சாதனையாளர்களுக்கு கொடுக்கப்படும் பேரும் புகழுமா? பைபிளில், “மகிமை” என்ற வார்த்தைக்கு பயன்படுத்தப்பட்டிருக்கும் மூலமொழி சொற்கள், கனம் என்ற அர்த்தத்தைத் தருகின்றன. முற்காலங்களில், விலையுயர்ந்த உலோகங்களால் நாணயங்கள் தயாரிக்கப்பட்டன; ஒரு நாணயம் எந்தளவு கனமாக இருந்ததோ அந்தளவு அதன் மதிப்பு அதிகமாக இருந்தது. எனவே, மகிமை என மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் வார்த்தை மதிப்புமிக்க அல்லது வியக்கவைக்கும் ஒன்றை அர்த்தப்படுத்தலாம்.

2 ஒருவருடைய பலம், பதவி, பேர்-புகழ் ஆகியவற்றைக் கண்டு நாம் வியக்கலாம். ஆனால், மனிதர்களிடம் கடவுள் எதைப் பார்க்கிறார்? மனிதர்களுக்கு கடவுள் மகிமையைக் கொடுப்பதாக பைபிள் சொல்கிறது. ‘தாழ்மைக்கும் யெகோவாவுக்கு பயப்படுதலுக்கும் வரும் பலன் ஐசுவரியமும் மகிமையும் ஜீவனுமாம்’ என்று நீதிமொழிகள் 22:4 சொல்கிறது. சீடரான யாக்கோபு எழுதினார்: “யெகோவாவுக்குமுன் உங்களைத் தாழ்த்துங்கள், அப்போது அவர் உங்களை உயர்த்துவார்.” (யாக். 4:10) மனிதர்களுக்குக் கடவுள் என்ன மகிமையைக் கொடுக்கிறார்? அந்த மகிமையை அடையாதபடி எது நம்மைத் தடுக்கலாம்? அதை அடைய மற்றவர்களுக்கு நாம் எப்படி உதவலாம்?

3-5. யெகோவா நம்மை என்ன மகிமைக்கு வழிநடத்துகிறார்?

3 தன் வலதுகையைப் பிடித்து உண்மையான மகிமைக்கு யெகோவா தன்னை வழிநடத்திச் செல்வார் என்று சங்கீதக்காரன் முழுமையாக நம்பினார். (சங்கீதம் 73:23, 24-ஐ வாசியுங்கள்.) யெகோவா இதை எப்படிச் செய்கிறார்? மனத்தாழ்மையுள்ள தம் ஊழியர்களை அநேக வழிகளில் கௌரவிப்பதன் மூலம் மகிமைக்கு வழிநடத்திச் செல்கிறார். கடவுளுடைய சித்தத்தைப் புரிந்துகொள்ளும் ஞானத்தைக் கொடுத்து அவர்களை ஆசீர்வதிக்கிறார். (1 கொ. 2:7) அவருடைய வார்த்தைக்குச் செவிகொடுத்து, அதன்படி நடக்கிறவர்களுக்கு அவரோடு நெருங்கிய நண்பராகும் பாக்கியத்தைக் கொடுத்து கௌரவிக்கிறார்.—யாக். 4:8.

4 ஊழியம் என்னும் மகத்தான பொக்கிஷத்தை யெகோவா தம் மக்களுக்குக் கொடுத்திருக்கிறார். (2 கொ. 4:1, 7) இந்த ஊழியம் மகிமைக்கு வழிநடத்தும். ஆம், ஊழியத்தின் மூலம் யெகோவாவுக்கு மகிமை சேர்ப்பவர்களையும் மற்றவர்களுக்கு உதவி செய்பவர்களையும் பற்றி யெகோவா இப்படிச் சொல்கிறார்: “என்னைக் கனம்பண்ணுகிறவர்களை நான் கனம்பண்ணுவேன்.” (1 சா. 2:30) அப்படிப்பட்டவர்கள் யெகோவாவிடம் நல்ல பெயரைச் சம்பாதிக்கிறார்கள், அவரை வழிபடும் சக ஊழியர்களின் பாராட்டையும் பெறுகிறார்கள்.—நீதி. 11:16; 22:1.

5 அப்படியென்றால், ‘யெகோவாவுக்குக் காத்திருந்து, அவருடைய வழியைக் கைக்கொள்கிறவர்களுக்கு’ எப்படிப்பட்ட எதிர்காலம் காத்திருக்கிறது? “நீ பூமியைச் சுதந்தரித்துக்கொள்வதற்கு அவர் [யெகோவா] உன்னை உயர்த்துவார்; துன்மார்க்கர் அறுப்புண்டுபோவதை நீ காண்பாய்” என்று பைபிள் வாக்குக் கொடுக்கிறது. (சங். 37:34) ஆம், புதிய பூமியில் முடிவில்லா வாழ்வு எனும் ஒப்பற்ற மகிமையைப் பெற அவர்கள் ஆவலோடு காத்திருக்கிறார்கள்.—சங். 37:29.

“மனிதர்கள் தரும் மகிமையை நான் ஏற்றுக்கொள்வதில்லை”

6, 7. இயேசுவை ஏன் அநேகர் ஏற்றுக்கொள்ளவில்லை?

6 யெகோவா நமக்குக் கொடுக்கும் மகிமையை அடையவிடாமல் எது நம்மைத் தடுக்கலாம்? யெகோவாவை நேசிக்காத மக்களுடைய கருத்துகளுக்கு நாம் அதிக முக்கியத்துவம் கொடுப்பது நம்மைத் தடுக்கலாம். இயேசுவின் காலத்தில் வாழ்ந்த தலைவர்கள் சிலரைப் பற்றி யோவான் சொல்வதைக் கவனியுங்கள்: “அநேகர் அவர்மீது விசுவாசம் வைத்தார்கள்; ஆனால், தங்களைப் பரிசேயர்கள் ஜெபக்கூடத்திலிருந்து விலக்கிவிடக் கூடாது என்பதற்காக அதை வெளிப்படையாக ஒப்புக்கொள்ளவில்லை. கடவுளிடமிருந்து வரும் மேன்மையைவிட மனிதரிடமிருந்து வரும் மேன்மையையே அவர்கள் அதிகம் விரும்பினார்கள்.” (யோவா. 12:42, 43) பரிசேயர்கள் என்ன நினைப்பார்களோ என யோசித்து அந்தத் தலைவர்கள் பயப்படாமல் இருந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்!

7 ஏன் அநேகர் தம்மை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள், தம்மீது ஏன் விசுவாசம் வைக்க மாட்டார்கள் என்பதையெல்லாம் இயேசு ஊழியத்தை ஆரம்பித்தபோதே தெளிவாகச் சுட்டிக்காட்டினார். (யோவான் 5:39-44-ஐ வாசியுங்கள்.) மேசியாவின் வருகைக்காக, இஸ்ரவேலர் பல நூறு ஆண்டுகளாக வழிமேல் விழி வைத்து காத்திருந்தார்கள். தானியேல் தீர்க்கதரிசனத்தில் சொல்லப்பட்டபடி கிறிஸ்து வருவதற்கான காலம் வந்துவிட்டது என்பதை இயேசு ஊழியம் செய்ய ஆரம்பித்தபோதே சிலர் புரிந்து கொண்டிருக்கலாம். ஏனென்றால், சில மாதங்களுக்கு முன்புதான், யோவான் ஸ்நானகர் பிரசங்கித்ததைப் பார்த்து, “இவர்தான் கிறிஸ்துவாக இருப்பாரோ?” என்று நிறைய பேர் சொன்னார்கள். (லூக். 3:15) ஆனால், அவர்கள் எதிர்பார்த்துக்கொண்டிருந்த மேசியா வந்தபோதோ திருச்சட்டங்களில் புலமை பெற்றிருந்தவர்கள் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை. அதற்கான காரணத்தை இயேசு சரியாகவே சொன்னார்: “ஒரே கடவுளிடமிருந்து வரும் மகிமையை நாடாமல் ஒருவரிடமிருந்து ஒருவருக்கு வரும் மகிமையை ஏற்றுக்கொள்கிற நீங்கள் எப்படி என்னை நம்புவீர்கள்?”

8, 9. மனிதர்கள் தரும் மகிமை கடவுள் தரும் மகிமையை அடையவிடாமல் எப்படித் தடுக்கலாம் என்பதை உதாரணத்துடன் விளக்குங்கள்.

8 மனிதர்கள் தரும் மகிமை கடவுள் தரும் மகிமையை அடையவிடாமல் எப்படித் தடுக்கலாம்? உதாரணத்திற்கு, மகிமையை ஒளிக்கு ஒப்பிடலாம். நம் பிரமாண்டமான பிரபஞ்சம் மகிமையில் ஜொலிக்கிறது. என்றைக்காவது, ஆயிரக்கணக்கான நட்சத்திரங்கள் மின்னும் இரவு வானை பார்த்து வியந்துபோயிருக்கிறீர்களா? “நட்சத்திரங்களின் மகிமை” நம்மை பிரமிக்க வைக்கிறது. (1 கொ. 15:40, 41) ஆனால், எக்கச்சக்கமான தெரு விளக்குகள் இருக்கும் ஓர் இடத்தில் நின்றுகொண்டு அதே வானத்தைப் பார்த்தால் எப்படி இருக்கும்? தெரு விளக்குகளின் பிரகாசத்தால், நட்சத்திரங்களின் ஒளி நம் கண்களுக்குச் சரியாகத் தெரியாது. அப்படியென்றால், தெருக்களிலும் கட்டிடங்களிலும் அரங்கங்களிலும் இருந்து வருகிற மின்விளக்குகளின் ஒளி, நட்சத்திரங்களின் ஒளியைவிட பிரகாசமாக, அருமையாக இருக்கிறது என்று அர்த்தமா? இல்லவே இல்லை! அவை நமக்கு மிக அருகில் இருப்பதால், நட்சத்திரங்களைப் பார்க்க முடியாதபடி அவற்றின் ஒளி நம் கண்களை மறைக்கிறது. எனவே, இரவு வானில் மின்னும் இயற்கையின் அற்புத விளக்குகளை முழுமையாக ரசிக்க வேண்டுமென்றால், செயற்கை விளக்குகள் இல்லாத ஒரு இடத்திற்குச் செல்ல வேண்டும்.

9 அதேபோல்தான், மனிதர் தரும் மகிமை நம் மனக்கண்களை மறைக்க அனுமதிக்கக்கூடாது. அப்படிச் செய்தால், யெகோவா நமக்குக் கொடுக்க விரும்பும் நிலையான மகிமையை அடையவிடாமல், அதன் அருமையை ருசிக்கவிடாமல், அது நம்மைத் தடுத்துவிடும். குடும்பத்தாரோ நண்பர்களோ என்ன நினைப்பார்கள் என்ற பயத்தில் நிறைய பேர் நற்செய்தியைக் கேட்பதில்லை. மனிதரிடமிருந்து மகிமை பெற வேண்டுமென்ற ஆசை யெகோவாவின் ஊழியர்களைக்கூட பாதிக்குமா? இளம் பிரஸ்தாபி ஒருவரை ஒரு பிராந்தியத்தில் உள்ளவர்களுக்கு நன்றாகத் தெரியுமென வைத்துக்கொள்ளுங்கள். ஆனால் அவர் ஒரு யெகோவாவின் சாட்சி என்று அவர்களுக்குத் தெரியாது. அந்த இடத்தில் அவரை ஊழியம் செய்ய நியமிக்கும்போது, அவர் பயந்து பின்வாங்குவாரா? ஒருவர் ஆன்மீக இலக்குகளை அடைய முயற்சி செய்யும்போது கேலி செய்யப்படுகிறார் என்று வைத்துக்கொள்ளுங்கள். அதற்காக, தன் தீர்மானத்தை மாற்றிக்கொள்வாரா? ஒரு கிறிஸ்தவர் பெரிய பாவம் செய்துவிட்டார் என்று வைத்துக்கொள்ளுங்கள். சபையில் பொறுப்பை இழந்துவிடுவோமோ, குடும்ப அங்கத்தினர்களுக்கு மனவேதனை ஏற்பட்டுவிடுமோ என்ற பயத்தில் தவறை மறைப்பாரா? யெகோவாவோடு வைத்திருந்த நல்லுறவை சரிசெய்ய விரும்பினால், நிச்சயம் ‘சபையின் மூப்பர்களை வரவழைத்து’ உதவி பெறுவார்.யாக்கோபு 5:14-16-ஐ வாசியுங்கள்.

10. (அ) மற்றவர்கள் நம்மைப் பற்றி என்ன நினைப்பார்கள் என்று அளவுக்குமீறி கவலைப்பட்டால் என்ன நடக்கும்? (ஆ) மனத்தாழ்மையோடு நடந்துகொள்வதால் என்ன பலன்?

10 ஆன்மீக ரீதியில் முன்னேறி வரும்போது, சக கிறிஸ்தவர் ஒருவர் நமக்கு ஏதோவொரு ஆலோசனை கொடுக்கிறார் என்று வைத்துக்கொள்ளுங்கள். அப்போது, கர்வம் கொள்ளாமல், தன்மானத்தை எப்படியாவது காப்பாற்றிக்கொள்ள நினைக்காமல், நான் செய்தது சரிதான் என்று நியாயவிவாதம் செய்யாமல், அவர் கொடுத்த எதார்த்தமான ஆலோசனையை ஏற்றுக்கொள்வது நம் முன்னேற்றத்திற்கு பேருதவியாய் இருக்கும். சக கிறிஸ்தவர்களோடு சேர்ந்து ஏதோவொரு வேலை செய்வதாக வைத்துக்கொள்ளுங்கள். உங்களுடைய திறமைக்கும் கடின உழைப்புக்கும் வேறொருவர் பாராட்டைப் பெற்றுவிடுவாரோ என்று கவலைப்படுகிறீர்களா? இதுபோன்ற ஒரு சூழ்நிலையில் நீங்கள் இருந்தால், “மனத்தாழ்மையுள்ளவனோ மகிமையடைவான்” என்பதை மறந்துவிடாதீர்கள்.—நீதி. 29:23, NW.

11. யாராவது பாராட்டும்போது நாம் எப்படி உணர வேண்டும், ஏன்?

11 கண்காணிகளும் அதற்கு ‘தகுதிபெற முயலுகிறவர்களும்’ மனித புகழை நாடக்கூடாது. (1 தீ. 3:1; 1 தெ. 2:6) ஒரு சகோதரர் செய்த வேலையை யாராவது மனமார பாராட்டும்போது அவர் என்ன செய்வார்? சவுல் ராஜாவைப்போல் தனக்கு ஒரு நினைவுச் சின்னத்தை நாட்டிக்கொள்ள மாட்டார் என்பது உண்மைதான். (1 சா. 15:12) ஆனால், யெகோவாவின் அளவற்ற கருணையால்தான் அதைச் செய்ய முடிந்தது என்று உணருவாரா? எதிர்காலத்தில்கூட கடவுளுடைய உதவியும் ஆசீர்வாதமும் இல்லாமல் எதையும் சாதிக்க முடியாது என்பதை ஒப்புக்கொள்வாரா? (1 பே. 4:11) யாராவது பாராட்டும்போது மனதுக்குள் நாம் என்ன நினைக்கிறோம் என்பதை வைத்து யாருடைய மகிமையைப் பெற ஆசைப்படுகிறோம் என்று சொல்லிவிடலாம்.—நீதி. 27:21.

“உங்கள் தகப்பனுடைய ஆசைகளின்படி செய்ய மனமுள்ளவர்களாக இருக்கிறீர்கள்”

12. இயேசு சொன்ன செய்தியைக் கேட்கவிடாமல் சில யூதர்களை எது தடுத்தது?

12 கடவுள் தரும் மகிமையை அடையவிடாமல் தடுக்கும் இன்னொரு விஷயம் நம்முடைய ஆசைகள். கெட்ட ஆசைகள், சத்தியத்தை அறவே கேட்காதபடி தடுத்துவிடும். (யோவான் 8:43-47-ஐ வாசியுங்கள்.) சில யூதர்கள் இயேசுவின் செய்திக்கு செவி கொடுக்கவில்லை. அதனால் இயேசு அவர்களிடம், “பிசாசே உங்களுக்குத் தகப்பன். உங்கள் தகப்பனுடைய ஆசைகளின்படி செய்ய மனமுள்ளவர்களாக இருக்கிறீர்கள்” என்று சொன்னார்.

13, 14. (அ) மனிதர்களின் பேச்சையும் மூளையையும் பற்றி ஆராய்ச்சியாளர்கள் என்ன சொல்கிறார்கள்? (ஆ) யாருக்குச் செவிகொடுக்க வேண்டும் என்பதை நாம் எப்படித் தீர்மானிப்போம்?

13 பொதுவாக, நாம் ஆசைப்படுவதைத்தான் கேட்க விரும்புவோம். (2 பே. 3:5, 6) தேவையில்லாத சத்தங்களைத் தவிர்க்கும் அபார திறமையோடு யெகோவா நம்மைப் படைத்திருக்கிறார். உங்களைச் சுற்றி என்னென்ன சத்தங்கள் கேட்கிறது என்று ஒரு கணம் கூர்ந்து கவனியுங்கள். அவற்றில் நிறைய ஓசைகளை சற்று முன்பு நீங்கள் கவனித்திருக்க மாட்டீர்கள். ஒரே சமயத்தில் எல்லா சத்தங்களும் காதுகளுக்கு கேட்டாலும் ஒரேயொரு சத்தத்திற்கு மட்டும் கவனம் செலுத்த நம் மூளையின் லிம்பிக் அமைப்பு (limbic system) உதவுகிறது. ஆனால், மனிதர்கள் நிறைய பேர் பேசிக்கொண்டிருக்கும்போது இதைச் செய்வது மூளைக்குக் கஷ்டம்தான் என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள். அப்படியென்றால், ஒரே நேரத்தில் இரண்டு பேர் பேசும்போது, யார் பேசுவதைக் கேட்க வேண்டும் என்பதை நீங்கள் தீர்மானிக்க வேண்டும். யார் பேசுவதைக் கேட்க விரும்புவீர்களோ அதைத்தான் கேட்பீர்கள். இயேசுவின் காலத்தில் வாழ்ந்த யூதர்கள் தங்கள் தகப்பனாகிய பிசாசின் ஆசைகளின்படி செய்ய விரும்பினார்கள். அதனால் அவர்கள் இயேசுவுக்குச் செவிகொடுக்கவில்லை.

14 ‘ஞானம் தன் வீட்டிலிருந்தும்’ ‘முட்டாள்தனம் தன் வீட்டிலிருந்தும்’ நம்மைக் கூப்பிட்டுக் கொண்டே இருக்கிறதென பைபிள் சொல்கிறது. (நீதி. 9:1-5, 13-17) இப்போது, யாருடைய அழைப்பை நாம் ஏற்றுக்கொள்வோம்? யாருடைய விருப்பத்தின்படி செய்ய விரும்புகிறோமோ அவர்களுடைய அழைப்பையே ஏற்போம். இயேசுவின் ஆடுகள் அவருடைய குரலைக் கேட்டு, அவரைப் பின்பற்றுகின்றன. (யோவா. 10:16, 27) அப்படிப்பட்டவர்கள் “சத்தியத்தின் பக்கம்” இருக்கிறார்கள். (யோவா. 18:37) அவர்களுக்கு ‘அந்நியர்களுடைய குரல் தெரியாது.’ (யோவா. 10:5) மனத்தாழ்மையுள்ள இவர்கள் மகிமை அடைவது உறுதி.—நீதி. 3:13, 16; 8:1, 18.

“இவை உங்களுக்கு மகிமை சேர்க்கும்”

15. பவுல் பட்ட பாடுகள் எப்படி மற்றவர்களுக்கு ‘மகிமை சேர்த்தது?’

15 யெகோவாவின் சித்தத்தைச் செய்ய நாம் தொடர்ந்து முயலும்போது மற்றவர்கள் மகிமை அடைவார்கள். எபேசு சபையாருக்கு பவுல் எழுதினார்: “உங்களுக்காக நான் படுகிற இந்த உபத்திரவங்களைக் கண்டு நீங்கள் மனந்தளர்ந்துவிட வேண்டாமெனக் கேட்டுக்கொள்கிறேன்; ஏனென்றால், இவை உங்களுக்கு மகிமை சேர்க்கும்.” (எபே. 3:13) பவுல் பட்ட பாடுகள் எபேசியர்களுக்கு எவ்விதத்தில் ‘மகிமை சேர்த்தது?’ கஷ்டங்களின் மத்தியிலும் அவர்களுக்குத் தொடர்ந்து சேவை செய்ய பவுல் ஆர்வமாக இருந்தார். அதன் மூலம், கிறிஸ்தவர்களாக கடவுளுக்குச் சேவை செய்வது எந்தளவு முக்கியமானது என்பதை அவர்களுக்கு நிரூபித்துக் காட்டினார். உபத்திரவங்களைக் கண்டு பவுல் மனந்தளர்ந்து போயிருந்தால், யெகோவாவோடு உள்ள நட்புறவும், ஊழியமும் நம்பிக்கையும் அப்படியொன்றும் முக்கியமானது இல்லை என்ற எண்ணத்தை அவர்களுக்கு ஏற்படுத்தியிருக்கும் அல்லவா? ஆனால் பவுல் காட்டிய சகிப்புத்தன்மை, கிறிஸ்துவின் சீடராய் இருப்பதற்காக எவ்வளவு பெரிய தியாகத்தையும் செய்யலாம் என்பதை அவர்களுக்கு உணர்த்தியது.

16. லீஸ்திராவில் பவுல் என்ன கஷ்டத்தை அனுபவித்தார்?

16 பவுலின் பக்திவைராக்கியமும் சகிப்புத்தன்மையும் மற்றவர்களுக்கு எப்படி உதவியது? அப்போஸ்தலர் 14:19, 20 சொல்கிறது: “அந்தியோகியாவிலிருந்தும் இக்கோனியாவிலிருந்தும் யூதர்கள் சிலர் வந்து, கூட்டத்தாரைத் தூண்டிவிட்டு பவுல்மீது கல்லெறிந்தார்கள்; அதன்பின், அவர் இறந்துவிட்டதாக நினைத்து [லீஸ்திரா] நகருக்கு வெளியே அவரை இழுத்துக்கொண்டுபோய்ப் போட்டார்கள். என்றாலும், சீடர்கள் அவரைச் சூழ்ந்து நின்றபோது அவர் எழுந்து நகருக்குள் போனார். அடுத்த நாள் பர்னபாவுடன் தெர்பைக்குப் புறப்பட்டுச் சென்றார்.” சாகும் நிலையில் இருந்தவர் மறுநாளே 60 மைல் (100 கி.மீ.) தூரம் பயணம் செய்வது சாதாரண விஷயமா? அதுவும், நவீன போக்குவரத்து வசதிகள் இல்லாத காலத்தில்!

17, 18. (அ) லீஸ்திராவில் பவுல் பட்ட பாடுகளை தீமோத்தேயு கூர்ந்து கவனித்தார் என்று எப்படிச் சொல்லலாம்? (ஆ) பவுலின் சகிப்புத்தன்மையைப் பார்த்து தீமோத்தேயு எப்படி நன்மை அடைந்தார்?

17 பவுலுக்கு உதவி செய்ய வந்த ‘சீடர்களில்’ தீமோத்தேயுவும் இருந்தாரா? அப்போஸ்தலர் புத்தகத்தில் அதைப் பற்றி எந்தப் பதிவும் இல்லை, இருந்தாலும், அதற்கு வாய்ப்பிருந்தது. தீமோத்தேயுவுக்கு எழுதிய இரண்டாம் கடிதத்தில் பவுல் இப்படிக் குறிப்பிட்டார்: “நீயோ என் போதனையையும், வாழ்க்கைப் பாணியையும், . . . கூர்ந்து கவனித்திருக்கிறாய்; எனக்கு ஏற்பட்ட துன்புறுத்தல்களையும், பாடுகளையும், அந்தியோகியா [நகரிலிருந்து துரத்தப்பட்டது], இக்கோனியா [நகரில் கல்லெறிய பார்த்தது], லீஸ்திரா [நகரில் கல்லெறியப்பட்டது] ஆகிய . . . பிரச்சினைகளையும், நான் அனுபவித்த கஷ்டங்களையும் நன்கு அறிந்திருக்கிறாய்; இவை எல்லாவற்றிலிருந்தும் நம் எஜமானர் என்னை விடுவித்தார்.”—2 தீ. 3:10, 11; அப். 13:50; 14:5, 19.

18 ஆம், அந்தச் சம்பவங்களை தீமோத்தேயு ‘கூர்ந்து கவனித்திருந்தார்,’ பவுல் அவற்றை எப்படிச் சகித்தார் என்பதை முழுமையாக அறிந்திருந்தார். அவை இளம் தீமோத்தேயுவின் மனதில் பசுமரத்தாணி போல பதிந்தன. லீஸ்திராவுக்கு பவுல் வந்தபோது, தீமோத்தேயு நன்கு முன்னேறி இருந்தார். ஆம், “லீஸ்திராவிலும் இக்கோனியாவிலும் இருந்த சகோதரர்களால் உயர்வாகப் பேசப்பட்டு வந்தார்.” (அப். 16:1, 2) அதற்குப் பிறகு, பெரிய பொறுப்புகளைக் கையாளும் அளவுக்கு தீமோத்தேயு தகுதி பெற்றார்.—பிலி. 2:19, 20; 1 தீ. 1:3.

19. நம்முடைய சகிப்புத்தன்மை மற்றவர்களுக்கு எப்படி நன்மையளிக்கும்?

19 கடவுளுடைய சித்தத்தைச் செய்ய நாம் விடாமுயற்சி எடுப்பது மற்றவர்களுக்கு பேருதவியாய் இருக்கும்; குறிப்பாக, இளைஞர்கள் நல்ல ஊழியர்களாக முன்னேற உதவும். ஊழியத்தில் நாம் பேசும் விதத்தை அவர்கள் கவனித்து கற்றுக்கொள்வதோடு, வாழ்க்கையில் வரும் கஷ்டநஷ்டங்களை நாம் எப்படிச் சமாளிக்கிறோம் என்பதையும் பார்த்து பயனடைவார்கள். உண்மையோடு நிலைத்திருக்கும் அனைவரும், “மீட்பையும் முடிவில்லா மகிமையையும்” பெற வேண்டும் என்பதற்காக பவுல் ‘எல்லாவற்றையும் சகித்தார்.’—2 தீ. 2:10.

வயதான கிறிஸ்தவர்களின் விடாமுயற்சியை இளைஞர்கள் பெரிதும் மதிக்கிறார்கள்

20. கடவுளிடமிருந்து வரும் மகிமையை நாம் ஏன் தொடர்ந்து நாட வேண்டும்?

20 அப்படியென்றால், “ஒரே கடவுளிடமிருந்து வரும் மகிமையை” நாட நாம் தொடர்ந்து முயற்சி செய்ய வேண்டும், அல்லவா? (யோவா. 5:44; 7:18) அதில் சந்தேகமே இல்லை! (ரோமர் 2:6, 7-ஐ வாசியுங்கள்.) அந்த மகிமையை நாடித்தேடுகிறவர்களுக்கு யெகோவா ‘முடிவில்லா வாழ்வைத் தருவார்.’ அதோடு, நாம் ‘தளர்ந்துபோகாமல் நற்செயல்களைச் செய்தால்,’ மற்றவர்களும் உறுதியோடு இருப்பார்கள், முடிவில்லா நன்மைகளைப் பெறுவார்கள். எனவே, கடவுள் தரும் மகிமையை அடையவிடாமல் தடுக்க எதையும் அனுமதிக்காதீர்கள்.