Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

ரோம மெய்க்காவலர்களுக்கு சத்தியம் சென்றெட்டுகிறது

ரோம மெய்க்காவலர்களுக்கு சத்தியம் சென்றெட்டுகிறது

அது கி.பி. 59-ஆம் ஆண்டு. பயணத்தில் களைத்துப்போயிருந்த படைவீரர்கள், பார்ட்டா கபேனா நுழைவாயில் வழியாக ஏராளமான கைதிகளை ரோமாபுரிக்குள் அழைத்து வருகிறார்கள். பாலடைன் குன்றில் பேரரசர் நீரோவின் மாளிகை இருக்கிறது. தங்கள் மேலங்கிகளுக்குள் வாளை மறைத்து வைத்திருக்கும் ரோம மெய்க்காவலர்கள் அந்த மாளிகையைக் காவல் காக்கிறார்கள். * படை அதிகாரியான யூலியு, கைதிகளை அழைத்துக்கொண்டு ரோம அரங்கையும் வைமனல் குன்றையும் கடந்து வருகிறார். பின்னர், ரோம கடவுட்களுக்கான பலிபீடங்கள் நிறைந்த ஒரு தோட்டத்தையும் ராணுவப் பயிற்சிகள் நடக்கிற மைதானத்தையும் கடந்து வருகிறார்.

கி.பி. 51-ல் கட்டப்பட்ட கிலவுதியுவின் வளைவில் இருந்ததாகக் கருதப்படுகிற ரோம மெய்க்காவலர்களின் புடைப்புச் சித்திரம்

அந்தக் கைதிகளில் அப்போஸ்தலன் பவுலும் இருக்கிறார். பல மாதங்களுக்கு முன்பு புயலில் சிக்கித் தத்தளித்த கப்பலில் அவர் இருந்தபோது ஒரு தேவதூதர் அவரிடம், “நீ ரோம அரசன்முன் நிற்க வேண்டும்” என்று சொல்லியிருந்தார். (அப். 27:24) அது இப்போது நிஜமாகப்போகிறதா? ரோம சாம்ராஜ்யத்தின் தலைநகரத்தைச் சுற்றி பவுல் தன் கண்களைச் சுழலவிடுகிறபோது, எருசலேமிலிருந்த அன்டோனியா கோட்டையில் எஜமானராகிய இயேசு சொன்ன வார்த்தைகள் அவருடைய மனதில் ஒலிக்கின்றன: “தைரியமாயிரு! எருசலேமில் நீ என்னைப் பற்றி முழுமையாகச் சாட்சி கொடுத்து வந்திருப்பது போல், ரோமாபுரியிலும் சாட்சி கொடுக்க வேண்டும்.”—அப். 23:10, 11.

பவுல் ஒரு கணம் நின்று, காஸ்ட்ரா ப்ரைடோரியாமீது தன் கண்களைப் பதிக்கிறார். மேல் மாடங்களையும் கோபுரங்களையும் உடைய, செங்கற்களாலான பிரமாண்டமான கோட்டை அது. ரோம மெய்க்காவலர்களுக்கும் நகர காவல் படையினருக்குமான குடியிருப்பு அது. 12 படைத்தொகுதிகளாலான * ரோம மெய்க்காவலர்கள், நகர காவல் படையினர், குதிரைப் படையினர் எனப் பல்லாயிரக்கணக்கானோர் தங்குமளவுக்குப் பரந்துவிரிந்த கோட்டை அது. ரோமப் பேரரசு பலம் படைத்த பேரரசு என்பதை காஸ்ட்ரா ப்ரைடோரியா மக்களுக்கு நினைப்பூட்டுகிறது. ரோம மாகாணங்களில் உள்ள கைதிகளுக்கு ரோம மெய்க்காவலர்களே பொறுப்பாளிகள் என்பதால், யூலியு தன் வசமுள்ள கைதிகளைப் பத்திரமாக ரோமாபுரிக்குள் அழைத்து வருகிறார். ஆபத்துமிக்க, பல மாத பிரயாணத்திற்குப் பிறகு கைதிகளை ஒருவழியாகக் கொண்டுவந்து சேர்த்திருக்கிறார்.—அப். 27:1-3, 43, 44.

“எந்தத் தடையும் இல்லாமல்” பவுல் பிரசங்கிக்கிறார்

தன்னோடு கப்பலில் பயணிக்கிற எல்லோருமே கப்பற்சேதத்திலிருந்து தப்பிப்பிழைப்பார்கள் என்ற அறிவிப்பைத் தரிசனங்களின் மூலம் பவுல் பெற்றிருந்தார். விஷப் பாம்பு கடித்தும் அவருக்கு எந்தத் தீங்கும் ஏற்படவில்லை. மெலித்தா தீவில் நோய்வாய்ப்பட்டிருந்த ஆட்களை அவர் குணப்படுத்தியிருந்தார்; அதனால், அங்கிருந்தவர்கள் அவரை ஒரு கடவுள் என்று சொல்ல ஆரம்பித்திருந்தார்கள். இந்த விஷயங்களெல்லாம், மூடநம்பிக்கையில் ஊறிப்போயிருந்த ரோம மெய்க்காவலர்கள் மத்தியில் பரவியிருந்திருக்கும்.

“மூன்று சத்திரம்,” “அப்பியு சந்தைவெளி” ஆகிய இடங்கள் வரைக்கும் வந்திருந்த ரோமாபுரி சகோதரர்களை பவுல் ஏற்கெனவே சந்தித்திருந்தார். (அப். 28:15) ஆனாலும், ஒரு கைதியாக இருந்த அவரால், எப்படி ரோமாபுரியில் நற்செய்தியை அறிவிக்க முடிந்திருக்கும்? (ரோ. 1:14, 15) அன்றைய கைதிகள் ரோம மெய்க்காவலர்களின் தலைவரிடம் ஒப்படைக்கப்பட்டதாகச் சிலர் நம்புகிறார்கள். அது உண்மை என்றால், ரோம மெய்க்காவலர்களின் தலைவரும் பேரரசருக்கு அடுத்த ஸ்தானத்தில் இருந்ததாகக் கருதப்படுகிறவருமான ஆஃப்ரனையஸ் பரோஸ் என்பவரிடம் பவுல் கொண்டுசெல்லப்பட்டிருக்கலாம். * எப்படியிருந்தாலும், படை அதிகாரிகளுடைய காவலில் பவுல் இருக்கவில்லை. மாறாக, ரோம மெய்க்காவலர் படைத்தொகுதியைச் சேர்ந்த ஒரு வீரருடைய காவலில் இருந்தார். தனியாக ஒரு வீடு எடுத்துத் தங்க அனுமதிக்கப்பட்டார். அந்த வீட்டில் ஆட்கள் அவரை வந்து பார்ப்பதற்கும், “எந்தத் தடையும் இல்லாமல்” அவர்களிடம் பிரசங்கிப்பதற்கும்கூட அனுமதிக்கப்பட்டார்.—அப். 28:16, 30, 31.

பவுல் ‘சிறியோருக்கும் பெரியோருக்கும் சாட்சி கொடுக்கிறார்’

காஸ்ட்ரா ப்ரைடோரியாவின் இன்றுள்ள மதிற்சுவர்கள்

பரோஸ், அப்போஸ்தலன் பவுலை பேரரசர் நீரோ முன் நிறுத்துவதற்கு முன்பே தன் மாளிகையில் வைத்தோ மெய்க்காவலர்களுடைய குடியிருப்பில் வைத்தோ அவரை விசாரணை செய்திருக்க வேண்டும். ‘சிறியோருக்கும் பெரியோருக்கும் சாட்சி கொடுக்க’ கிடைத்த இந்த அருமையான வாய்ப்பை பவுல் நழுவவிடவில்லை. (அப். 26:19-23) பவுலைக் குறித்து பரோஸ் என்ன முடிவுக்கு வந்திருந்தாலும் சரி, மெய்க்காவலர் குடியிருப்பு வளாகத்திலிருந்த சிறையில் அவர் அடைக்கப்படவில்லை. *

பவுலின் வாடகை வீடு பெரியதாக இருந்தது; அவரைச் சந்திக்க வந்த ‘பிரபலமான யூத ஆண்களுக்கும்,’ ‘பெருங்கூட்டமாக வந்த’ மற்றவர்களுக்கும் சாட்சி கொடுக்க அது வசதியாக இருந்தது. இப்படி அவர் கடவுளுடைய அரசாங்கத்தையும் இயேசுவையும் பற்றி “காலையிலிருந்து மாலைவரை” ‘முழுமையாகச் சாட்சி கொடுத்ததை’ அங்கிருந்த ரோம மெய்க்காவலர்களும் நிச்சயம் கேட்டிருப்பார்கள்.—அப். 28:17, 23.

பவுல் சொல்லச் சொல்ல இன்னொருவர் கடிதம் எழுதுவதை காவலர்கள் பார்த்தார்கள், கேட்டார்கள்

பேரரசர் மாளிகையில் பணிபுரிந்த ரோம மெய்க்காவலர்கள் தினமும் எட்டாம் மணிநேரத்தில் மாற்றப்பட்டார்கள். பவுலைக் காவல்காத்த வீரரும் தினமும் மாற்றப்பட்டார். அவர் இரண்டு ஆண்டுகள் வீட்டுக்காவலில் இருந்தபோது எபேசு, பிலிப்பி, கொலோசெ கிறிஸ்தவர்களுக்கும், எபிரெய கிறிஸ்தவர்களுக்கும் கடிதம் எழுத பிறரைப் பயன்படுத்தினார்; அச்சமயத்தில், அவரைக் காவல்காத்த வீரர்கள் அவர் உரக்கச் சொன்ன விஷயங்களைக் கேட்டார்கள்; அதோடு, அவர் பிலேமோனுக்குக் கைப்பட கடிதம் எழுதியதையும் பார்த்தார்கள். பவுல் காவலில் இருந்த சமயத்தில், எஜமானைவிட்டு ஓடிவந்திருந்த அடிமையான ஒநேசிமுவிடம் அவர் தனிப்பட்ட அக்கறை காட்டினார்; அவனும் பவுலுக்கு ‘பிள்ளை போலானான்’; அவனுடைய எஜமானிடமே பவுல் அவனைத் திரும்ப அனுப்பி வைத்தார். (பிலே. 10) தன்னைக் காவல் காத்துவந்த வீரர்களிடமும்கூட அவர் தனிப்பட்ட அக்கறை காட்டினார். (1 கொ. 9:22) அவர் பயன்படுத்திய ஓர் அருமையான உதாரணத்தில் வீரர்கள் அணிந்திருந்த முழு கவசத்தைப் பற்றி எழுதினார்; ஒருவேளை அந்தக் கவசத்தைப் பற்றிய விவரங்களை அவர்களிடமிருந்தே அவர் கேட்டுத் தெரிந்துகொண்டிருக்கலாம்.—எபே. 6:13-17.

‘கடவுளுடைய வார்த்தையைப் பயமில்லாமல் அறிவியுங்கள்’

பவுல் சிறையில் அடைக்கப்பட்டதால்தான், ரோம மெய்க்காவலர்களுக்கும் மற்ற எல்லோருக்கும் ‘நற்செய்தி பரவியது.’ (பிலி. 1:12, 13) ரோம சாம்ராஜ்யத்தில் இருந்த ஆட்களுடனும், பேரரசருடனும், பேரரசரின் வீட்டாருடனும் காஸ்ட்ரா ப்ரைடோரியாவில் குடியிருந்தவர்களுக்குத் தொடர்பு இருந்தது. பேரரசருடைய வீட்டாரில் அவரது குடும்ப அங்கத்தினர்கள், வேலையாட்கள், அடிமைகள் என ஏராளமானோர் இருந்தார்கள்; இவர்களில் சிலர் கிறிஸ்தவர்களானார்கள். (பிலி. 4:22) பவுல் நற்செய்தியைத் தைரியமாய் அறிவித்து வந்ததை ரோமாபுரியிலிருந்த சகோதரர்கள் பார்த்தபோது, “கடவுளுடைய வார்த்தையைப் பயமில்லாமல்” பேச ஊக்கம் பெற்றார்கள்.—பிலி. 1:14.

நாம் எந்தச் சூழ்நிலையில் சாட்சி கொடுத்தாலும் சரி, நற்செய்திக்குச் செவிசாய்ப்பவர்கள் இருப்பார்கள்

ரோமாபுரியில் பவுல் சாட்சி கொடுத்ததைப் பற்றி வாசிக்கும்போது, “சாதகமான காலத்திலும் சரி பாதகமான காலத்திலும் சரி,” ‘கடவுளுடைய வார்த்தையைப் பிரசங்கிக்க’ நாமும்கூட ஊக்கம் பெறுகிறோம். (2 தீ. 4:2) நம்மில் சிலர் வீட்டைவிட்டு வெளியே போக முடியாத நிலையில் அல்லது மருத்துவமனையில் இருக்கலாம், ஏன் நம்முடைய விசுவாசத்தின் நிமித்தம் சிறையில்கூட இருக்கலாம். எப்படிப்பட்ட சூழ்நிலையில் இருந்தாலும் சரி, ஆட்கள் நம்மைச் சந்திக்க அல்லது நமக்குச் சேவை செய்ய வருகிற சந்தர்ப்பங்களில் நாம் அவர்களுக்குத் தைரியமாய்ச் சாட்சி கொடுக்க வேண்டும்; அப்படிச் செய்தால் “கடவுளுடைய வார்த்தைக்கு விலங்கிட முடியாது” என்பதை நாம் கண்ணாரக் காண்போம்!—2 தீ. 2:8, 9.

^ “ரோம மெய்க்காவலர்கள்—நீரோவின் நாட்களில்” என்ற பெட்டியைப் பாருங்கள்.

^ ரோமப் படைத்தொகுதி ஒன்றில் 1,000 வீரர்கள்வரை இருந்தார்கள்.

^ “செக்ஸ்டஸ் ஆஃப்ரனையஸ் பரோஸ்” என்ற பெட்டியைப் பாருங்கள்.

^ காலிகுலா என்பவர் சீக்கிரத்தில் ரோமப் பேரரசரானால் நன்றாக இருக்குமென்று ஏரோது அகிரிப்பா சொன்னதைக் கேள்விப்பட்ட பேரரசரான திபேரியு, கி.பி. 36-37-ல் ஏரோதுவை இந்தச் சிறையில்தான் அடைத்துவைத்தார். ஆனால், காலிகுலா பேரரசரானபோது ஏரோதுவை ராஜாவாக்கினார்.—அப். 12:1.