Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

உங்களுக்குத் தெரியுமா?

உங்களுக்குத் தெரியுமா?

கி.பி. 70-க்கு பிறகு எருசலேம் ஆலயம் திரும்பக் கட்டப்பட்டதா?

யெகோவாவுடைய ஆலயம், ஒரு கல்லின் மேல் ஒரு கல் இல்லாதபடி முழுமையாக அழிக்கப்படும் என இயேசு சொன்னார். டைட்டஸின் தலைமையில் வந்த ரோம படை கி.பி. 70-ல் எருசலேமை அழித்தபோது இந்தத் தீர்க்கதரிசனம் நிறைவேறியது. (மத். 24:2) பல வருடங்களுக்குப் பிறகு, பேரரசன் ஜூலியன் அதைத் திரும்பக் கட்ட திட்டமிட்டார்.

ரோம சாம்ராஜ்யத்தின் கடைசி புறமத பேரரசன் என ஜூலியன் அழைக்கப்பட்டார். இவர் மகா கான்ஸ்டன்டைன் என்பவருடைய ஒன்றுவிட்ட சகோதரனின் மகன். தன் காலத்தில் இருந்த போலிக் கிறிஸ்தவர்களிடம் அவர் கல்வி கற்றார். ஆனால், கி.பி. 361-ல் அவர் பேரரசனானபோது, அந்தப் போலி கிறிஸ்தவத்தையும் அதன் கல்வியையும் நிராகரித்தார். அதனால், சரித்திர புத்தகங்கள் அவரை “விசுவாசதுரோகி” என்று குறிப்பிடுகின்றன.

ஜூலியன் கிறிஸ்தவத்தை அறவே வெறுத்தார். ஒருவேளை, அவருக்கு ஆறு வயது இருக்கும்போது அதன் பிரதிநிதிகள் அவருடைய அப்பாவையும் உறவினர்களையும் அடியாட்கள் வைத்து கொலை செய்தது அதற்கு ஒரு காரணமாக இருக்கலாம். தங்களுடைய ஆலயத்தைத் திரும்பக் கட்டும்படி யூதர்களைத் தூண்டிவிட்டது ஜூலியன்தான் என சர்ச் சரித்திராசிரியர்கள் சொல்கிறார்கள். அப்படிச் செய்தால் இயேசுவை ஒரு போலி தீர்க்கதரிசி என முத்திரை குத்திவிடலாம் என்று அவர் நினைத்தார். *

ஆலயத்தைத் திரும்பக் கட்ட ஜூலியன் திட்டமிட்டது உண்மைதான். ஆனால், அவர் அதைக் கட்ட ஆரம்பித்தாரா, அப்படிக் கட்ட ஆரம்பித்திருந்தாலும், எதனால் அந்த வேலை நின்று போனது என்றெல்லாம் சரித்திராசிரியர்கள் சந்தேகிக்கிறார்கள். எதுவானாலும் சரி, அவர் பதவியேறி இரண்டு வருடங்களுக்குள் கொல்லப்பட்டார். அத்துடன் அவருடைய திட்டமும் சமாதியானது.

ஆலயம் இருந்த இடமும் இயேசுவின் காலத்திலிருந்த ஆலயத்தின் மாதிரிப் படமும்

^ ஆலயம் ஒருபோதும் திரும்பக் கட்டப்படாது என்று இயேசு சொல்லவில்லை, அது அழிக்கப்படும் என்றே சொன்னார். கி.பி. 70-ல் அது நடந்தது.