Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

தங்களையே மனப்பூர்வமாய் அர்ப்பணித்தார்கள்-மெக்சிகோவில்

தங்களையே மனப்பூர்வமாய் அர்ப்பணித்தார்கள்-மெக்சிகோவில்

ஊழியத்தில் அதிகமாக ஈடுபட, அநேக இளம் சாட்சிகள் தங்களுடைய வாழ்க்கையை எளிமையாக்கியிருக்கிறார்கள். (மத். 6:22) அவர்களைப் பார்க்கும்போது எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறது! அவர்கள் என்ன மாற்றங்களைச் செய்கிறார்கள்? என்ன சவால்களைச் சந்திக்கிறார்கள்? இப்போது மெக்சிகோவில் சேவை செய்துவரும் சிலரிடமே அதைக் கேட்டுத் தெரிந்துகொள்ளலாம்.

“கண்டிப்பா மாற்றம் செய்யணும்”

டஸ்டின்-ஜேசா

டஸ்டின்-ஜேசா தம்பதி அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள். ஜனவரி 2007-ல் திருமணம் செய்துகொண்டார்கள். திருமணம் செய்த கையோடு தங்கள் ஆசை கனவையும் நிறைவேற்றிக்கொண்டார்கள்; ஒரு பாய்மரப் படகை வாங்கி அதிலே வாழ ஆரம்பித்தார்கள். பசிபிக் பெருங்கடல் அருகே அமெரிக்காவிலுள்ள ஆரிகான் மாநிலத்தைச் சேர்ந்த அஸ்டாரியாவில் படகு வாழ்க்கை வாழ்ந்து வந்தார்கள். அது மலை காடுகள், பனிபோர்த்திய மலைகள் என எழில் கொஞ்சும் ஓர் இடம். “எந்தப் பக்கம் திரும்பினாலும் அப்பப்பா, அப்படியே மலைச்சு போயிடுவோம்!” என்று டஸ்டின் சொல்கிறார். யெகோவாவை நம்பி எளிய வாழ்க்கை வாழ்வதாக அவர்கள் நினைத்தார்கள். ‘வெறும் 26 அடி (7.9 மீட்டர்) நீள படகுல வாழ்றோம், பகுதி நேர வேலை செய்றோம், வேற்று மொழி சபைக்கு போறோம், அப்பப்போ துணை பயனியர் ஊழியம்கூட செய்றோம்’ என்று நினைத்துக்கொண்டார்கள். தாங்கள் செய்வதெல்லாம் ஒன்றுமே இல்லை என்பதைப் பிறகுதான் புரிந்துகொண்டார்கள். “சபை காரியங்கள்ல அதிகமா ஈடுபடுறதுக்கு பதிலா படக சரிசெய்றதுலயே மணிக்கணக்கா நேரம் செலவிட்டோம் . . . யெகோவாவுக்கு முதலிடம் கொடுக்கணும்னா கண்டிப்பா மாற்றம் செய்யணும்னு தெரிஞ்சுக்கிட்டோம்” என்றார் டஸ்டின்.

ஜேசா சொல்கிறார்: “கல்யாணத்துக்கு முன்னாடி மெக்சிகோல இருந்த ஆங்கில சபைக்கு போயிட்டிருந்தேன். அந்த சபைய என்னால மறக்கவே முடியாது. திரும்பவும் எப்படா அங்க போவோம்னு இருந்துது.” வெளிநாட்டில் சேவை செய்ய வேண்டும் என்ற ஆர்வத்தை வளர்க்க, அறுவடைக்குத் தயாராக இருந்த இடங்களுக்குக் குடிமாறிப் போன சகோதர சகோதரிகளின் வாழ்க்கை சரிதையை குடும்ப வழிபாட்டின்போது டஸ்டினும் ஜேசாவும் படிக்க ஆரம்பித்தார்கள். (யோவா. 4:35) “நாங்களும் அதே மாதிரி சந்தோஷமா இருக்க ஆசைப்பட்டோம்” என்கிறார் டஸ்டின். மெக்சிகோவில் புதிதாக உருவான ஒரு தொகுதிக்கு உதவி தேவைப்பட்டதை நண்பர்கள் மூலம் தெரிந்துகொண்ட டஸ்டினும் ஜேசாவும் அங்கு குடிமாறிப் போகத் தீர்மானித்தார்கள். வேலையை ராஜினாமா செய்தார்கள்... படகை விற்றார்கள்... மெக்சிகோவுக்குக் குடிமாறினார்கள்.

“வாழ்க்கையில நாங்க செஞ்ச நல்ல விஷயம் இதுதான்”

டஸ்டினும் ஜேசாவும் தெகோமான் என்ற ஊருக்கு குடித்தனம் போனார்கள். இதுவும் பசிபிக் பெருங்கடலுக்கு பக்கத்தில்தான் இருக்கிறது. ஆனால், அஸ்டாரியாவுக்கு தெற்கே சுமார் 4,345 கி.மீ தூரத்தில். “இங்க சில்லுனு காற்றும் இல்ல, ரசிக்கிறதுக்கு மலையும் இல்ல. கொளுத்துற வெயில்தான். கண்ணுக்கு எட்டுன தூரதுக்கு எலுமிச்சை மரம்தான் தெரியும்” என்கிறார் டஸ்டின். ஆரம்பத்தில் வேலை கிடைப்பது குதிரை கொம்பாக இருந்தது. பணமும் கையைக் கடிக்க, வாரா வாரம் வெறும் அரிசியும் பீன்ஸும்தான் சாப்பிட்டார்கள், அதுவும் இரண்டு வேளைதான் சாப்பிட்டார்கள். “இனி பட்டினி கிடக்க வேண்டியதுதான்னு நினைக்கிறதுக்குள்ள எங்க பைபிள் மாணாக்கர்கள் மாம்பழம், வாழைப்பழம், பப்பாளின்னு கொண்டுவர ஆரம்பிச்சிட்டாங்க; கூடைகூடையா எலுமிச்சம்பழமும் கொண்டுவந்தாங்க!” என்கிறார் ஜேசா. சீக்கிரத்தில் தைவானைச் சேர்ந்த அயல் மொழி கற்றுகொடுக்கும் பள்ளிக்காக, ஆன்லைனில் வேலை செய்யும் வாய்ப்பு அவர்களுக்குக் கிடைத்தது; அதில் கிடைக்கும் பணம் அவர்களுடைய அன்றாட தேவைக்கும் அதிகமாகவே இருந்தது.

இந்தப் புதிய வாழ்க்கையைப் பற்றி டஸ்டினும் ஜேசாவும் எப்படி உணருகிறார்கள்? “வாழ்க்கையில நாங்க செஞ்ச நல்ல விஷயம் இதுதான்” என்கிறார்கள். “யெகோவாவோட எங்களுக்கிருந்த நட்பு முன்னவிட இப்போ அதிகமாயிடுச்சு. எங்களுக்குள்ளயும் நெருக்கம் அதிகமாயிடுச்சு. எல்லாத்தையும் சேர்ந்தே செய்றோம்; ஒன்னா ஊழியத்துக்கு போறோம், பைபிள் மாணாக்கருக்கு எப்படி உதவலாம்னு பேசுறோம், கூட்டங்களுக்கு தயாரிக்கிறோம். முன்னாடி இருந்த டென்ஷன் எதுவுமே இப்ப இல்ல . . . இதுக்கு முன்னாடி முழுசா புரிஞ்சிக்காத ஒரு வசனத்த இப்போதான் சரியா புரிஞ்சுக்கிட்டோம். ‘யெகோவா நல்லவர் என்பதை ருசித்துப்பாருங்கள்’னு சங்கீதம் 34:8 சொல்லுதே, அது எவ்வளவு உண்மை!”

ஆயிரக்கணக்கில் ஆர்வமுள்ள ஊழியர்கள்—அவர்களைத் தூண்டுவது எது?

நற்செய்தி எட்ட வேண்டிய பல பகுதிகள் மெக்சிகோவில் இன்னும் இருக்கின்றன. 2,900-க்கும் அதிகமான சகோதர சகோதரிகள் அந்தப் பகுதிகளுக்குக் குடிமாறியிருக்கிறார்கள். இவர்கள் இருபதுகளிலும் முப்பதுகளிலும் இருக்கும் மணமான, மணமாகாத கிறிஸ்தவர்கள். சவால்கள் நிறைந்த இந்த வேலையில் இறங்க இவர்கள் தீர்மானித்தது ஏன்? கேட்டபோது இவர்கள் கொடுத்த காரணங்கள் மூன்று:

லெட்டிஸ்யா-எர்மிலோ

யெகோவாவிடமும் சக மனிதரிடமும் அன்பு காட்ட. 18 வயதில் ஞானஸ்நானம் எடுத்தவர் லெட்டிஸ்யா: “யெகோவாவுக்கு என்னை அர்ப்பணிச்சிருக்கறதுனால, முழு இருதயத்தோட முழு மூச்சோட அவருக்கு சேவை செய்யணும்னு புரிஞ்சுக்கிட்டேன். அதனால, முழு இருதயத்தோட யெகோவா மேல அன்பு காட்டுறதுக்கு என்னோட நேரம், சக்தி எல்லாத்தையும் ஊழியத்துல செலவிட விரும்புனேன்.” (மாற். 12:30) எர்மிலோ, 20 வயதைத் தாண்டியபோது தேவை அதிகமுள்ள இடத்திற்குக் குடிமாறினார். இப்போது லெட்டிஸ்யாவைக் கரம் பிடித்த எர்மிலோ சொல்கிறார்: “மத்தவங்க மேல இருக்கிற அன்ப காட்டுறதுக்கு ஒரு நல்ல வழி அவங்களோட ஆன்மீகப் பசிய போக்குறதுதான்னு புரிஞ்சுக்கிட்டேன்.” (மாற். 12:31) அதனால், செல்வச் செழிப்பான மான்டெர்ரி நகரில், வங்கி வேலை... சொகுசான வாழ்க்கை... என இருந்த அவர் ஒரு சிறிய ஊருக்குக் குடிமாறினார்.

எஸ்லி

நிஜமான நீடித்த சந்தோஷத்தை அனுபவிக்க. ஞானஸ்நானம் எடுத்து கொஞ்ச காலத்திற்குள் லெட்டிஸ்யா, அனுபவமுள்ள ஒரு பயனியர் சகோதரியோடு சேர்ந்து ஒரு ஒதுக்குப்புறமான ஊருக்குச் சென்று அங்கே ஒரு மாதம் ஊழியம் செய்தார். லெட்டிஸ்யா நினைவலைகளைச் சிதறவிடுகிறார்: “அந்த ஜனங்க நற்செய்திய ஆர்வமா கேட்டப்போ ரொம்ப சந்தோஷமா இருந்திச்சு. அப்படியே மலைச்சு போயிட்டேன். அந்த மாசம் முடியப்போற சமயத்துல, ‘இந்த வேலையதான் என் வாழ்க்கை பூராவும் செய்யணும்’னு என் மனசுக்குள்ள சொல்லிக்கிட்டேன்.” மணமாகாத எஸ்லியும் (தற்போது 20 வயதைக் கடந்தவர்) தேவையுள்ள இடத்துக்கு சென்று ஊழியம் செய்ய ஆசைப்பட்டார். காரணம்? அப்படி ஊழியம் செய்தவர்கள் அனுபவித்த சந்தோஷத்தைப் பார்த்ததே. உயர்நிலைப் பள்ளியில் படிக்கும்போதே, தேவை அதிகமுள்ள இடங்களில் ஆர்வமாக ஊழியம் செய்த சகோதர சகோதரிகளிடம் பேசியிருக்கிறார். “அந்த சகோதர சகோதரிகளோட சந்தோஷமான முகத்த பார்க்கும்போது என் வாழ்க்கையும் இப்படித்தான் இருக்கணும்னு நெனச்சேன்” என்று சொல்கிறார். எஸ்லியைப் போல் தீர்மானம் எடுத்த சகோதரிகள் பலர். சொல்லப்போனால், மெக்சிகோவில் 680-க்கும் மேற்பட்ட மணமாகாத சகோதரிகள் தேவை அதிகமுள்ள இடங்களில் சேவை செய்து வருகிறார்கள். சிறியோர் பெரியோர் என எல்லோருக்குமே எப்பேர்பட்ட அருமையான முன்மாதிரி!

நோக்கத்தோடு, திருப்தியோடு வாழ. உயர்நிலை பள்ளியில் படிப்பை முடித்த கையோடு கல்லூரியில் படிக்க எஸ்லிக்கு ஸ்காலர்ஷிப் கிடைத்தது. ‘கையில ஒரு “டிகிரி,” வேல, கார், உல்லாசப் பயணம்னு எல்லாரையும் போல நீயும் வாழணும்னா காலேஜுல சேரணும்’னு கூட படிக்கிறவர்கள் சொன்னார்கள். ஆனாலும் எஸ்லி, அவர்களுடைய பேச்சை சட்டை பண்ணவில்லை. “சபைல இருக்கிற என் ஃபிரெண்ட்ஸ் கொஞ்சம் பேரு படிப்புக்கும் வேலைக்கும்தான் முக்கியத்துவம் கொடுத்தாங்க. ஆன்மீக இலக்குகளுக்கு முதலிடம் கொடுக்கல. அவங்க எந்தளவுக்கு உலகத்தோடு ஒத்துபோனாங்களோ அந்தளவுக்கு பிரச்சினைகள்ல மாட்டிக்கிட்டு தவிச்சாங்க. இந்த இளம் வயசுல யெகோவாவுக்கு முழுமையா சேவை செய்யணும்னு நான் ஆசைப்பட்டேன்” என்கிறார்.

ராக்கல்-ஃபிலிப்

பள்ளியில் தொழிற்கல்வியைத் தேர்ந்தெடுத்து படித்தார். பயனியர் சேவைக்குக் கைகொடுக்கும் ஒரு வேலையைத் தேட அது அவருக்கு உதவியது. அதன் பிறகு, பிரசங்க வேலைக்கு ஆட்கள் உடனடியாகத் தேவைப்படுகிற இடத்திற்குக் குடிமாறினார். ஓட்டோமி, ட்லாப்பனெக்கோ மக்கள் பேசுகிற உள்ளூர் மொழியையும் கஷ்டப்பட்டு கற்றுக்கொண்டார். ஒதுக்குப்புற பகுதிகளில் மூன்று வருடங்கள் ஊழியம் செய்ததைப் பற்றி அவர் சொல்கிறார்: “தேவை அதிகமுள்ள இடங்கள்ல ஊழியம் செய்யும்போது மனசுக்கு ரொம்ப திருப்தியா இருக்கு, மத்தவங்களுக்குப் பிரயோஜனமா வாழ்ற மாதிரி இருக்கு. எல்லாத்துக்கும் மேல, யெகோவாகிட்ட நட்பு அதிகமாயிருக்கு.” அமெரிக்காவைச் சேர்ந்த 30 வயதைத் தாண்டிய ஃபிலிப்-ராக்கல் தம்பதி இப்படிச் சொல்கிறார்கள்: “இந்த உலகம் மாறிக்கிட்டே இருக்கு; அதனால வாழ்க்கையே நிரந்தரம் இல்லனு நிறைய பேரு நினைக்கிறாங்க. ஆனா, பைபிள் செய்திய ஆர்வமா கேட்கிற நிறைய பேர் இன்னமும் இருக்காங்க; அந்த மாதிரி இடத்துக்கு போய் ஊழியம் செய்யும்போது வாழ்க்கைக்கு ஒரு அர்த்தம் கிடைக்குது. ரொம்ப திருப்தியாவும் இருக்கு!”

சவால்களைச் சமாளிப்பது எப்படி?

வெரோனிகா

தேவை அதிகம் உள்ள இடங்களில் சேவை செய்யும்போது சவால்கள் இருக்கத்தான் செய்யும். அவற்றில் ஒன்று நம்முடைய வயிற்றுப்பிழைப்பைப் பார்த்துக்கொள்வது. இதைச் சமாளிக்க, சேவை செய்யும் இடத்தின் சூழ்நிலைக்குத் தகுந்தாற்போல் உங்களை மாற்றிக்கொள்ள வேண்டும். அனுபவமுள்ள பயனியரான வெரோனிகா இதைப் பற்றி என்ன சொல்கிறார் என்று கேட்கலாம்: “நான் சேவை செஞ்ச ஒரு இடத்துல குறைஞ்ச விலையுள்ள துரித உணவுகள தயாரிச்சு விற்றேன். இன்னொரு இடத்துல துணிமணி விற்றேன், முடி வெட்டுற வேல செஞ்சேன். இப்போ ஒரு வீட்டை சுத்தம் செய்யற வேல பாக்குறேன், அதோட புதுசா குழந்தை பெத்தவங்களுக்கு க்ளாஸ் எடுக்குறேன். பிள்ளைங்களோட எப்படி பேசுறதுனு கத்துக்கொடுக்குறேன்.”

உள்ளூர் வாசிகள் இருக்கும் ஒதுக்குப்புற இடங்களில் சேவை செய்தால், அந்த இடத்தின் கலாச்சாரம், பழக்கவழக்கங்களோடு ஒத்துப்போவது கஷ்டமாகத்தான் இருக்கும். நாவாட்டல் மொழி பேசும் இடத்தில் சேவை செய்தபோது ஃபிலிப்-ராக்கல் தம்பதிக்கும் அப்படித்தான் இருந்தது: “அவங்களோட கலாச்சாரமே வேற” என்று ஃபிலிப் சொல்கிறார். அந்தக் கலாச்சாரத்தோடு ஒத்துப்போக எது அவர்களுக்கு உதவியது? ராக்கல் சொல்கிறார்: “அந்த ஜனங்ககிட்ட இருந்த நல்ல விஷயங்களயே கவனிச்சோம். குடும்பத்துல அவங்களுக்குள்ள இருந்த பாசம், மத்தவங்ககிட்ட நேர்மையா நடந்துக்குற விதம், தாராள குணம் இதையே கவனிச்சோம் . . . அங்க வாழ்ந்தப்போ, அந்த சகோதர சகோதரிகளோட சேர்ந்து சேவை செஞ்சப்போ நிறைய கத்துக்கிட்டோம்.”

எப்படித் தயாராகலாம்?

தேவையுள்ள இடங்களில் சேவை செய்ய நீங்கள் விரும்பினால், அதற்கு எப்படித் தயாராகலாம்? இப்படிப்பட்ட சேவையில் கரைகண்டவர்களிடம் கேட்டுப் பார்க்கலாம்: குடிமாறுவதற்கு முன்பே, எளிமையாக வாழ ஆரம்பியுங்கள். இருப்பதை வைத்து திருப்தியுடன் வாழக் கற்றுக்கொள்ளுங்கள். (பிலி. 4:11, 12) வேறென்ன செய்யலாம்? லெட்டிஸ்யா சொல்கிறார்: “ரொம்ப நாளா ஒரே இடத்துல இருந்து வேல செய்ற மாதிரி கான்ட்ராக்ட் போடுற கம்பெனியில வேலைக்கு சேர மாட்டேன். அப்போதான், எப்போ, எங்க தேவை இருந்தாலும் உடனே போகலாம்.” எர்மிலோ சொல்கிறார்: “சமைக்க, துவைக்க, இஸ்திரி போட கத்துக்கிட்டேன்.” வெரோனிகா சொல்கிறார்: “வீட்ல இருக்கும்போது, வீட்டை சுத்தம் செய்வேன். குறைஞ்ச செலவுல சத்தான சாப்பாடு செய்றதுக்கு கத்துக்கிட்டேன். சேர்த்து வைக்கிறதுக்கும் கத்துக்கிட்டேன்.”

அமிலியா-லீவை

மணவாழ்வில் எட்டு வருடங்களைக் கழித்த லீவை-அமிலியா தம்பதி அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள். ஒரு விஷயத்திற்காக குறிப்பிட்டு ஜெபம் செய்தது மெக்சிகோவில் சேவை செய்ய அவர்களுக்கு எப்படி உதவியது என்று சொல்கிறார்கள். லீவை சொல்கிறார்: “ஒரு வருஷத்துக்கு வெளி நாட்டுல போய் சேவை செய்றதுக்கு எவ்ளோ பணம் தேவைப்படும்னு கணக்கு போட்டோம். சரியா அந்த தொகைய சம்பாதிக்க உதவி செய்யுங்கனு யெகோவாகிட்ட ஜெபம் செஞ்சோம்.” சில மாதத்திற்குள் ஜெபத்தில் கேட்ட தொகையை அவர்களால் சேமிக்க முடிந்தது. தாமதிக்காமல் உடனடியாக மெக்சிகோவுக்குச் சென்றார்கள். லீவை சொல்கிறார்: “நாங்க குறிப்பிட்டு கேட்டத யெகோவா நிறைவேற்றிட்டாரு, இப்போ நாங்க செய்ய வேண்டியதுதான் பாக்கி.” அமிலியா சொல்கிறார்: “ஒரு வருஷம் மட்டும்தான் சேவை செய்யலாம்னு வந்தோம். ஆனா, இப்போ இங்க வந்து ஏழு வருஷம் ஆச்சு. இப்பவும் விட்டுட்டு போறதுக்கு மனசே இல்ல! இப்படி சேவை செய்றப்போ, எங்களால யெகோவா செய்ற உதவிய கண் முன்னால பார்க்க முடியுது. யெகோவா நல்லவருங்கறத தினம் தினம் ருசிச்சு பாக்குறோம்.”

ஆடம்-ஜெனிஃபர்

ஆடம்-ஜெனிஃபர் தம்பதி அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள். மெக்சிகோவிலுள்ள ஆங்கிலப் பிராந்தியத்தில் சேவை செய்து வருகிறார்கள். இவர்களுக்கும் ஜெபம் கைகொடுத்தது. “எல்லாமே வசதியா அமையற வரைக்கும் காத்துட்டு இருக்காதீங்க. வெளி நாட்டுல சேவை செய்யணுங்கற ஆசைய யெகோவாகிட்ட சொல்லுங்க. அப்புறம் அதுக்கு தேவையான எல்லாத்தையும் செய்யுங்க. வாழ்க்கைய எளிமையா ஆக்குங்க, எங்கே சேவை செய்ய ஆசைப்படுறீங்களோ அந்த நாட்டு கிளை அலுவலகத்துக்கு அத பத்தி எழுதுங்க, அதுக்கப்புறம் எவ்வளவு செலவாகும்னு கணக்கு பாத்துட்டு கிளம்பிட வேண்டியதுதான்.” * இதைச் செய்தால் நிச்சயம் சந்தோஷமாக இருப்பீர்கள், ஆன்மீக செழிப்பையும் அனுபவிப்பீர்கள்.

^ கூடுதல் தகவலுக்கு ஆகஸ்ட் 2011 நம் ராஜ்ய ஊழியத்தில் “‘மக்கெதோனியாவுக்கு வந்து உதவி செய்ய’ முடியுமா?” என்ற கட்டுரையைப் பாருங்கள்.