Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

வாழ்க்கை சரிதை

நோக்கத்தோடு வாழ்கிறோம்

நோக்கத்தோடு வாழ்கிறோம்

என் மகன் க்யேரி 1958-ல் பிறந்தான். பிறந்த உடனே அவனுக்கு ஏதோவொரு வியாதி இருப்பது எனக்குத் தெரியவந்தது. ஆனால், அது என்ன வியாதி என்பதைக் கண்டுபிடிக்க டாக்டர்களுக்கு பத்து மாதங்கள் எடுத்தன. லண்டனில் இருந்த நிபுணர்கள் ஐந்து வருடங்கள் கழித்தே அதை ஊர்ஜிதப்படுத்தினார்கள். க்யேரி பிறந்து ஒன்பது வருடங்கள் கழித்து என் மகள் லவீஸ் பிறந்தாள். அவளுக்கும் அதே வியாதிக்கான அறிகுறிகள் கொஞ்சம் அதிகமாகவே இருந்தன. எப்பேர்ப்பட்ட பேரிடி!

“உங்க ரெண்டு பிள்ளைகளுக்கும் எல்.எம்.பீ.பீ ஸின்ட்ரோம் (LMBB Syndrome) * இருக்கு; சொல்ல கஷ்டமாதான் இருக்கு, அத குணப்படுத்த முடியாது,” என்று டாக்டர்கள் வருத்தத்தோடு சொன்னார்கள். இந்த அரிய மரபணு கோளாறு பற்றி அந்தச் சமயத்தில் அவ்வளவாக யாருக்கும் தெரியாது. நோயின் அறிகுறிகள்: உடல்பருமன், கூடுதலான கை/கால் விரல்கள், தாமதமான வளர்ச்சி, உடல் ஒத்திசைவின்மை, சர்க்கரை வியாதி, மூட்டழற்சி, சிறுநீரக இயக்கத்தில் குறைபாடு; அதோடு, கண் பார்வை மங்கி கடைசியில் பார்வையே பறிபோகும். அதனால், என் பிள்ளைகளைக் கவனித்துக்கொள்வது கஷ்டமாகத்தான் இருந்தது. பிரிட்டனில், 1,25,000 பேரில் ஒருவருக்கு இந்த வியாதி இருப்பதாகவும் அநேகருக்கு அதன் அறிகுறிகள் மிகக் குறைவாக இருப்பதாகவும் சமீபத்தில் ஓர் ஆய்வு குறிப்பிட்டது.

யெகோவாவே எங்கள் ‘தஞ்சம்’

திருமணமான புதிதில், ஒரு யெகோவாவின் சாட்சி என்னை சந்தித்துப் பேசினார். அவர் சொன்னது சத்தியம்தான் என்பதை உடனே புரிந்துகொண்டேன். ஆனால், என் கணவருக்கு அதில் துளியும் ஆர்வம் இல்லை. அவருடைய வேலை காரணமாக இடம் மாறிக்கொண்டே இருந்தோம். அதனால், என்னால் கூட்டங்களில் கலந்துகொள்ள முடியவில்லை. இருந்தாலும், பைபிளை தினமும் வாசிப்பேன், தவறாமல் யெகோவாவிடம் ஜெபம் செய்வேன். “சிறுமைப்பட்டவனுக்குக் கர்த்தர் அடைக்கலமானவர்; நெருக்கப்படுகிற காலங்களில் அவரே தஞ்சமானவர். கர்த்தாவே, உம்மைத் தேடுகிறவர்களை நீர் கைவிடுகிறதில்லை” என்ற வசனத்தை வாசித்தபோது மிகவும் ஆறுதலாக இருந்தது.—சங். 9:9, 10.

க்யேரிக்கு கண் பார்வை மங்கலாக இருந்ததால், இங்கிலாந்தின் மேற்குக் கடற்கரையோரம் இருந்த ஊனமுற்றோருக்கான விடுதி வசதியுடன்கூடிய பள்ளியில் சேர்க்கப்பட்டான். அப்போது அவனுக்கு ஆறு வயது. பள்ளியில் அவனுக்கு வரும் பிரச்சினைகளைப் பற்றி அடிக்கடி ஃபோனில் சொல்லுவான். ஃபோன் மூலமாகவே முக்கியமான பைபிள் நியமங்களைப் பற்றி அவனிடம் பேசுவேன். லவீஸ் பிறந்து சில வருடங்களுக்குள் எனக்கு மல்ட்டிப்பிள் ஸ்க்லரோஸிஸ் (மத்திப நரம்பு மண்டலத்தில் ஏற்படும் கோளாறு) மற்றும் ஃபைப்ரோமையால்ஜியா (தசைநார் வலி) நோய்களால் படுத்துவிட்டேன். க்யேரிக்கு 16 வயதானபோது அந்தப் பள்ளியிலிருந்து வீட்டுக்கு வந்துவிட்டான். அவனுடைய பார்வை இன்னும் மங்கிக்கொண்டே வந்தது. கடைசியில் 1975-ல், அரசாங்கம் அவனை கண் பார்வை இல்லாதவன் என்று பதிவு செய்தது. 1977-ல் என் கணவர் எங்களை விட்டுப் போய்விட்டார்.

க்யேரி பள்ளியிலிருந்து திரும்பிவந்தவுடன் ஒரு அருமையான சபையோடு சேர்ந்து ஆன்மீகக் காரியங்களில் ஈடுபட ஆரம்பித்தோம். 1974-ல் நான் ஞானஸ்நானம் எடுத்தேன். டீன்-ஏஜ் பருவ மாற்றங்களை க்யேரி புரிந்துகொண்டு அதைச் சமாளிக்க ஒரு மூப்பர் உதவினார். அவர் செய்த உதவியை என்னால் மறக்கவே முடியாது. மற்ற சகோதர சகோதரிகள் வீட்டு வேலைகளில் எனக்கு உதவினார்கள். பிற்பாடு, எங்களுக்கு உதவுவதற்காக ஐந்து சகோதர சகோதரிகளுக்கு அரசாங்கம் நிதியுதவி அளித்தது. இது எப்பேர்ப்பட்ட ஆசீர்வாதம்!

க்யேரி ஆன்மீக ரீதியில் நன்கு முன்னேறி, 1982-ல் ஞானஸ்நானம் எடுத்தான். துணைப் பயனியர் ஊழியம் செய்ய மிகவும் ஆசைப்பட்டான். நானும் அவனோடு சேர்ந்து துணைப் பயனியர் ஊழியம் செய்யத் தீர்மானித்தேன். எனவே, இருவரும் சேர்ந்து பல வருடங்கள் துணைப் பயனியர் ஊழியம் செய்தோம். சில வருடங்களுக்குப் பிறகு, “க்யேரி, நீங்க ஏன் ஒரு ஒழுங்கான பயனியர் ஆக கூடாது?” என்று எங்கள் வட்டாரக் கண்காணி கேட்டது என் மகனை சந்தோஷக் கடலில் ஆழ்த்தியது. க்யேரிக்கு அப்படிப்பட்ட உற்சாகம்தான் தேவைப்பட்டது. 1990-ல் ஒழுங்கான பயனியர் ஆனான்.

க்யேரிக்கு இரண்டு முறை இடுப்புமாற்று சிகிச்சை செய்யப்பட்டது; முதல்முறை 1999-லும், இரண்டாவதுமுறை 2008-லும் செய்யப்பட்டது. ஆனால், லவீஸின் உடல்நிலை அதைவிட படுமோசமாக இருந்தது. அவளுக்குப் பிறக்கும்போதே கண் பார்வை சுத்தமாக இல்லை. அவளுடைய ஒரு காலில் ஆறு விரல்களைப் பார்த்ததுமே இவளுக்கும் எல்.எம்.பீ.பீ ஸின்ட்ரோம் இருப்பதைத் தெரிந்துகொண்டேன். உள் உறுப்புகளில் பிரச்சினைகள் இருப்பது பரிசோதனையில் தெரியவந்தது. அவளுக்கு ஐந்து முறை சிறுநீரக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதுபோல பல அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டன. க்யேரியைப் போலவே இவளுக்கும் சர்க்கரை வியாதி இருக்கிறது.

அறுவை சிகிச்சை செய்யும்போது என்னென்ன பிரச்சினைகள் வரும் என்பதை முன்பே அறிந்த லவீஸ், அறுவை சிகிச்சை செய்யப்போகும் டாக்டர்களிடமும் மயக்கமருந்து டாக்டர்களிடமும் மருத்துவமனை நிர்வாகிகளிடமும் இரத்தத்தை ஏன் ஏற்றுக்கொள்வதில்லை என்பதைச் சொல்லிவிடுவாள். அதனால், அவளுக்கு உதவும் எல்லோரோடும் அவளால் நல்ல நட்பை வைத்துக்கொள்ள முடிகிறது.

நோக்கத்தோடு வாழ்ந்தோம்

எங்கள் வீடு ஆன்மீகக் காரியங்களின் மையமாக இருந்தது. இன்றைக்கு இருக்கும் நவீன எலக்ட்ரானிக் சாதனங்கள் வருவதற்குமுன் பல மணி நேரம் க்யேரிக்கும் லவீஸுக்கும் நானே வாசித்துக் காட்டுவேன். இப்போதோ, சிடி-களும் டிவிடி-களும் www.pr418.com-ல் இருக்கும் ரெக்காடிங்குகளும் பெரிதும் கைகொடுக்கின்றன. இவற்றைப் பயன்படுத்தி வாராந்தர பைபிள் வாசிப்பு பகுதியை அவரவருக்கு வசதியான நேரங்களில் கேட்டு மகிழ்கிறோம். அதனால், எங்களால் கூட்டங்களில் நல்ல பதில்களைச் சொல்ல முடிகிறது.

யெகோவா தந்திருக்கும் வாக்குறுதிகளுக்காக நாங்கள் மிகவும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்

க்யேரி சில நேரங்களில் பதில்களை மனப்பாடம் செய்து சொல்வான். தேவராஜ்ய ஊழியப் பள்ளியில் பேச்சு கொடுக்கும்போது மனதிலிருந்து பேசுவான். 1995-ல் உதவி ஊழியனாக நியமிக்கப்பட்டான். ராஜ்ய மன்றத்திற்கு வருபவர்களை வரவேற்பது, “சவுண்ட்” இலாகாவிற்கு உதவுவது போன்ற வேலைகளில் சுறுசுறுப்புடன் ஈடுபடுவான்.

சகோதரர்கள் க்யேரியை ஊழியத்திற்கு சக்கர நாற்காலியில் கூட்டிக்கொண்டு போவார்கள். ஏனென்றால், க்யேரிக்கு மூட்டு அழற்சி இருக்கிறது. ஆர்வம் காட்டிய ஒருவருக்கு பைபிள் படிப்பு நடத்த சகோதரர் ஒருவர் க்யேரிக்கு உதவினார். 25 வருடங்களாக செயலற்ற பிரஸ்தாபியாக இருந்த ஒருவருக்கு க்யேரி உதவினான். இப்போது அந்த இருவரும் கூட்டங்களுக்கு வருகிறார்கள்.

ஒன்பது வயதில் லவீஸ் தன் பாட்டியிடமிருந்தும் உதவ வந்த ஒரு சகோதரியிடமிருந்தும் பின்னல் வேலையைக் கற்றுக்கொண்டாள். நான் ‘எம்ப்ராய்டரி’ கற்றுக்கொடுத்தேன். பின்னல் வேலை அந்தளவு பிடித்துவிட்டதால் சபையிலிருக்கிற குழந்தைகளுக்கும் வயதானவர்களுக்கும் போர்வை பின்னிக் கொடுக்கிறாள். சின்ன சின்ன ‘ஸ்டிக்கர்’ படங்களை வைத்து ‘கிரீட்டிங் கார்டுகளையும்’ செய்கிறாள். அந்த ‘கார்டுகளை’ எல்லோரும் பொக்கிஷமாக நினைக்கிறார்கள். டீன்-ஏஜில் காலெடுத்து வைத்ததும் ‘டைப்பிங்’ கற்றுக்கொண்டாள். இப்போது, விசேஷமாக தயாரிக்கப்பட்ட ஒரு பேசும் கணினியைப் பயன்படுத்தி ஈ-மெயில் மூலம் நண்பர்களைத் தவறாமல் தொடர்புகொள்கிறாள். லவீஸ் 17 வயதில் ஞானஸ்நானம் எடுத்தாள். விசேஷ ஊழிய மாதங்களில் குடும்பமாக துணைப் பயனியர் ஊழியம் செய்வோம். ‘குருடரின் கண்கள் திறக்கப்படும்,’ ‘வியாதிப்பட்டிருக்கிறேன் என்று நகரவாசிகள் சொல்வதில்லை’ போன்ற வாக்குறுதிகளை லவீஸ் முழுமையாக நம்புகிறாள். (ஏசா. 33:24; 35:5) அதை மற்றவர்களிடம் சொல்ல க்யேரியைப் போல அவளும் வசனங்களை மனப்பாடம் செய்துகொள்கிறாள்.

யெகோவா தந்திருக்கும் வாக்குறுதிகளுக்காக நாங்கள் மிகவும் நன்றிக்கடன் பட்டிருக்கிறோம். சகோதர சகோதரிகளின் உதவியை எங்களால் மறக்கவே முடியாது, அவர்கள் மட்டும் இல்லையென்றால் எங்களால் எந்த வேலையையும் செய்திருக்க முடியாது. அவர்கள் செய்த எல்லாவற்றிற்கும் நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். மிக முக்கியமாக யெகோவா தேவன் செய்திருக்கும் உதவியால் நோக்கத்தோடு வாழ்கிறோம்.

^ லாரன்ஸ்-மூன்-பார்டே-பீடில் ஸின்ட்ரோம் என்ற இந்த வியாதிக்கு அதைக் கண்டுபிடித்த நான்கு டாக்டர்களின் பெயரே சூட்டப்பட்டது. அப்பா-அம்மா இருவருக்குமே ஒடுங்கிய மரபணு இருந்தால் இந்த ஒடுங்கிய மரபணு கோளாறு பிள்ளைகளுக்கும் வந்துவிடும். இன்று இந்த நோய் பார்டே-பீடில் ஸின்ட்ரோம் என்றே அழைக்கப்படுகிறது. இதைக் குணப்படுத்தவே முடியாது.