Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

யெகோவா பற்றுமாறாதவர், மன்னிப்பவர்

யெகோவா பற்றுமாறாதவர், மன்னிப்பவர்

“ஆண்டவரே, நீர் நல்லவரும், மன்னிக்கிறவரும், உம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவர்மேலும் கிருபை [“பற்றுமாறா அன்பு,” NW] மிகுந்தவருமாயிருக்கிறீர்.” —சங். 86:5.

1, 2. (அ) உண்மையாய் இருக்கிற, மன்னிக்கிற நண்பர்களை நாம் ஏன் விரும்புகிறோம்? (ஆ) என்ன கேள்விகளுக்குப் பதில்களைத் தெரிந்துகொள்ளப் போகிறோம்?

 உண்மையான நண்பர் என்று யாரைச் சொல்வீர்கள்? “என்னை பொறுத்தவரை உண்மையான ஒரு ஃபிரெண்ட் எப்பவுமே உதவ தயாரா இருப்பாங்க, ஏதாவது தப்பு செய்யும்போது மன்னிப்பாங்க” என்கிறார் ஆஷ்லி என்ற சகோதரி. உண்மையாய் இருக்கிற, மன்னிக்கிற நண்பர்களை எல்லோருக்கும் பிடிக்கும். அவர்களோடு இருக்கும்போது பயம் இருக்காது, அன்பு காட்ட ஓர் உள்ளம் இருக்கிறது என்ற உணர்வும் பிறக்கும்.—நீதி. 17:17.

2 நமக்கிருக்கும் நண்பர்களிலேயே பற்றுமாறா அன்பையும் மன்னிக்கும் குணத்தையும் காட்டுவதில் யெகோவாதான் சிகரமாய்த் திகழ்கிறார். அதனால்தான் சங்கீதக்காரன் இப்படிச் சொன்னார்: “ஆண்டவரே, நீர் நல்லவரும், மன்னிக்கிறவரும், உம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவர்மேலும் கிருபை [“பற்றுமாறா அன்பு,” NW] மிகுந்தவருமாயிருக்கிறீர்.” (சங். 86:5) பற்றுமாறாதிருப்பது, மன்னிப்பது என்றால் என்ன? இந்த அருமையான குணங்களை யெகோவா எப்படி வெளிக்காட்டுகிறார்? அவரைப் போல நாமும் இந்தக் குணங்களை எப்படி வெளிக்காட்டலாம்? இவற்றிற்கானப் பதில்களைத் தெரிந்துகொள்ளும்போது, நம்முடைய மிகச் சிறந்த நண்பரான யெகோவாமீதுள்ள அன்பு இன்னும் ஆழமாகும். நம் சகோதர சகோதரிகளோடும் நெருங்கிய நண்பர்களாவோம்.—1 யோ. 4:7, 8.

யெகோவா பற்றுமாறாதவர்

3. பற்றுமாறாதிருப்பது என்றால் என்ன?

3 பற்றுமாறாதவர் உண்மைத்தன்மையை, பயபக்தியைக் காட்டுவார்; என்ன நடந்தாலும் விட்டுப்பிரிய மாட்டார். அடிக்கடி “கட்சி” மாறிக்கொண்டிருக்க மாட்டார். மாறாக, ஒருவரை (அல்லது ஒரு பொருளை) அன்போடு பற்றிக்கொண்டு, கஷ்டமான சூழ்நிலையிலும் விட்டுவிலகாமல் இருப்பார். இப்படி ‘பற்றுமாறாமல்’ நடந்துகொள்வதில் யெகோவாவுக்கு நிகர் யெகோவாவே.—வெளி. 16:5.

4, 5. (அ) பற்றுமாறா அன்பை யெகோவா எப்படிக் காட்டுகிறார்? (ஆ) யெகோவா காட்டிய பற்றுமாறா அன்பைப் பற்றிச் சிந்தித்துப் பார்க்கும்போது நாம் எப்படி ஊக்கம் பெறுவோம்?

4 யெகோவா தாம் பற்றுமாறாதவர் என்பதை எப்படி வெளிக்காட்டுகிறார்? தம் உண்மையுள்ள ஊழியர்களை ஒருபோதும் கைவிடுவதில்லை. அப்படிப்பட்ட ஊழியர்களில் ஒருவரான தாவீது ராஜா யெகோவாவின் பற்றுமாறா அன்புக்குக் கண்கண்ட சாட்சி. (சங்கீதம் 101:6-ஐ வாசியுங்கள்.) கஷ்ட காலங்களில் யெகோவா தாவீதைப் பற்றுமாறா அன்போடு வழிநடத்தினார், பாதுகாத்தார், விடுவித்தார். (2 சா. 22:1) யெகோவா தாம் பற்றுமாறாதவர் என்பதை வெறும் சொல்லில் மட்டுமல்ல செயலிலும் காண்பிப்பவர் என்பதை தாவீது தன் சொந்த அனுபவத்தில் கண்டார். தாவீதிடம் யெகோவா ஏன் பற்றுமாறாதவராய் நடந்துகொண்டார்? ஏனென்றால், தாவீது ‘பற்றுமாறாதவராய்’ இருந்தார். தம் ஊழியர்கள் பற்றுமாறா அன்பைக் காட்டும்போது யெகோவாவின் உள்ளம் பூரிக்கிறது; அதற்குக் கைமாறாக அவர்களிடம் பற்றுமாறா அன்பைப் பொழிகிறார்.—நீதி. 2:6-8.

5 யெகோவா தம்முடைய ஊழியர்களிடம் பற்றுமாறா அன்பை எப்படிக் காண்பித்திருக்கிறார் என்பதைச் சிந்தித்துப் பார்க்கும்போது ஊக்கம் பெறுவோம். ரீட் என்ற சகோதரர் சொல்கிறார்: “தாவீதோட கஷ்டகாலங்கள்ல யெகோவா அவருக்கு எப்படியெல்லாம் உதவுனாருன்னு படிக்கும்போது ரொம்பவே ஆறுதலா இருக்கும். தாவீது மலை குகைன்னு உயிரை கையில பிடிச்சிட்டு ஓடின சமயங்களிலெல்லாம் யெகோவா அவருக்குத் துணையா இருந்தார். அதைப் படிக்கும்போது அப்படியே மெய்சிலிர்த்துபோகும்! எப்படிப்பட்ட சூழ்நிலையா இருந்தாலும் சரி, நிலைமை எவ்வளவு மோசமானாலும் சரி, நான் யெகோவாவுக்கு பற்றுமாறாதவனா இருக்கிறவரைக்கும் அவர் என்கூட இருப்பாருன்னு தெரிஞ்சிக்கிட்டேன்.” நிச்சயம் நீங்களும் இதே போல்தான் உணருவீர்கள்.—ரோ. 8:38, 39.

6. வேறென்ன விதங்களில் யெகோவா பற்றுமாறா அன்பைக் காட்டுகிறார், இதனால் அவருடைய உண்மை ஊழியர்கள் எப்படி நன்மை அடைகிறார்கள்?

6 யெகோவா, பற்றுமாறா அன்பை இன்னும் வேறு என்னென்ன விதங்களில் காட்டுகிறார்? ஒன்று, அவர் வகுத்த நெறிகளை அவரே பின்பற்றுகிறார். “உங்கள் முதுமைவரைக்கும் நான் அப்படியே இருப்பேன்” என்று யெகோவா உறுதியளிக்கிறார். (ஏசா. 46:4) நன்மை, தீமை விஷயங்களில் தாம் வகுத்திருக்கும் என்றும் மாறாத நெறிகளின் அடிப்படையில்தான் அவர் எப்போதும் தீர்மானங்களை எடுக்கிறார். (மல். 3:6) அதோடு, யெகோவா தாம் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதன் மூலமும் பற்றுமாறாதவர் என்பதைக் காட்டுகிறார். (ஏசா. 55:11) யெகோவா இப்படிப் பற்றுமாறாதவராக இருப்பதால் அவருடைய உண்மையுள்ள ஊழியர்கள் அனைவரும் நன்மை அடைகிறார்கள். எப்படி? யெகோவாவின் நெறிகளைக் கடைப்பிடிக்கக் கடும்முயற்சி செய்யும்போது, அவர் கொடுத்த வாக்கின்படி நம்மை நிச்சயம் ஆசீர்வதிப்பார்.—ஏசா. 48:17, 18.

யெகோவாவைப் போல பற்றுமாறாதவராக இருங்கள்

7. யெகோவாவைப் போல பற்றுமாறா அன்பைக் காட்டுவதற்கு ஒரு வழி என்ன?

 7 யெகோவாவைப் போல நாமும் எப்படி பற்றுமாறாதவராக இருக்கலாம்? ஒரு வழி, பிரச்சினையில் சிக்கித் தவிப்பவர்களுக்கு உதவிக்கரம் நீட்டுவது. (நீதி. 3:27) உதாரணத்திற்கு, நோய், குடும்பத்தாரிடமிருந்து எதிர்ப்பு, பலவீனங்கள் போன்றவற்றால் சபையில் யாராவது சோர்ந்துபோய் இருக்கிறார்களா? “நல்வார்த்தைகளையும் ஆறுதலான வார்த்தைகளையும்” சொல்லி அவர்களை ஏன் உற்சாகப்படுத்தக் கூடாது? (சக. 1:13) * இப்படிச் செய்வதன் மூலம், நீங்கள் அவருக்குப் பற்றுமாறாத, உண்மையான நண்பன் என்பதைக் காட்டலாம். ஆம், ‘சகோதரனிலும் அதிக சொந்தமாய்ச் சிநேகிப்பவன்’ என்பதைக் காட்டலாம்.—நீதி. 18:24.

8. மண வாழ்க்கையில் அல்லது சகோதர சகோதரிகளிடத்தில் எப்படிப் பற்றுமாறா அன்பைக் காட்டலாம்?

8 நம்முடைய அன்பானவர்களிடம் எப்போதும் உண்மையாய் இருப்பதன் மூலமும் யெகோவாவைப் போல பற்றுமாறாதவராக இருக்கலாம். ஒருவேளை, நாம் மணமானவராக இருந்தால், மணத்துணைக்கு உண்மையாக இருக்க வேண்டுமென்பது நமக்குத் தெரியும். (நீதி. 5:15-18) எனவே, மணத்துணைக்குத் துரோகம் செய்ய வழிநடத்தும் முதல் படியைக்கூட நாம் தவிர்ப்போம். (மத். 5:28) அதோடு, நம் சகோதர சகோதரிகளிடம் பற்றுமாறா அன்பைக் காட்டினால் அவர்களைப் பற்றித் தவறாக எதுவும் பேச மாட்டோம், பொய்களைப் பரப்ப மாட்டோம். அப்படிப்பட்ட வீண் பேச்சுகளைக் கேட்கவும் மாட்டோம்.—நீதி. 12:18.

9, 10. (அ) முக்கியமாக நாம் யாருக்கு உண்மையாய் இருக்க வேண்டும்? (ஆ) யெகோவாவின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவது ஏன் எப்போதுமே சுலபமாக இருக்காது?

9 எல்லாவற்றிற்கும் மேலாக, எப்போதும் யெகோவாவுக்கு உண்மையாய் இருக்க வேண்டும். எப்படி? காரியங்களை யெகோவா பார்க்கிற விதமாகப் பார்க்க முயற்சி செய்ய வேண்டும்; அதாவது, அவர் விரும்புவதை விரும்பி, அவர் வெறுப்பதை வெறுக்க வேண்டும். அதை நம் செயலிலும் காட்ட வேண்டும். (சங்கீதம் 97:10-ஐ வாசியுங்கள்.) நம்முடைய எண்ணங்களும் உணர்ச்சிகளும் எந்தளவுக்கு யெகோவாவின் எண்ணங்களுக்கும் உணர்ச்சிகளுக்கும் இசைவாக இருக்கிறதோ அந்தளவுக்கு அவருடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவோம்.—சங். 119:104.

10 யெகோவாவின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவது எப்போதும் சுலபமில்லைதான். அப்படிப் பற்றுமாறாதவராய் நிலைத்திருக்க கடுமையாக முயற்சி செய்ய வேண்டும். ஒரு மணமாகாத சகோதரி, யெகோவாவை வழிபடுகிற ஒரு ஏற்ற துணைக்காகக் காத்துக்கொண்டிருக்கலாம். (1 கொ. 7:39) அப்போது, கூட வேலைபார்ப்பவர்கள் அடிக்கடி சத்தியத்தில் இல்லாத சில ஆண்களை அறிமுகப்படுத்தி வைக்கலாம். அந்தச் சகோதரியும் தனிமையில் வாடிக்கொண்டிருக்கலாம். இருந்தாலும், யெகோவாவுக்கு உண்மையாய் இருக்க திடத் தீர்மானமாய் இருக்கிறார். இவரைப் போன்ற கிறிஸ்தவர்கள் பற்றுமாறா அன்புக்கு இலக்கணமாய்த் திகழ்கிறார்கள்! இக்கட்டான சூழ்நிலையிலும் யெகோவாவுக்கு உண்மையுள்ளவர்களாய் இருப்பவர்களுக்கு அவர் நிச்சயம் பலன் அளிப்பார்.—எபி. 11:6.

“சகோதரனிலும் அதிக சொந்தமாய்ச் சிநேகிப்பவனுமுண்டு.” —நீதி. 18:24 ( பாரா 7)

“ஒருவரையொருவர் தாராளமாக மன்னியுங்கள்.”—எபே. 4:32 ( பாரா 16)

யெகோவா மன்னிக்கிறவர்

11. மன்னிப்பது என்றால் என்ன?

11 யெகோவாவிடம் நம்மை ஈர்க்கும் பண்புகளில் மற்றொன்று அவர் மன்னிக்க மனமுள்ளவராய் இருப்பது. மன்னிப்பது என்றால் என்ன? பொதுவாக, தகுந்த காரணம் இருக்கும்போது ஒருவர் செய்தத் தவறை மன்னிப்பதை இது அர்த்தப்படுத்துகிறது. அதற்காக, அது ஒன்றும் தவறே இல்லை என்றோ அப்படி ஒன்று நடக்கவே இல்லை என்றோ விட்டுவிடுவதை அர்த்தப்படுத்தாது. மாறாக, மனதில் வன்மம் வைத்துக்கொள்ளாதிருப்பதைக் குறிக்கிறது. உள்ளப்பூர்வமாக மனந்திரும்பும் ஒருவரை யெகோவா ‘மன்னிக்கத் தயாராய் இருக்கிறார்’ என்று பைபிள் சொல்கிறது.—சங். 86:5, NW.

12. (அ) யெகோவா எப்படி மன்னிக்கிறார்? (ஆ) பாவங்களை “துடைத்தழிப்பது” என்றால் என்ன?

12 யெகோவா எப்படி மன்னிக்கிறார்? அவர் ‘தாராளமாய் மன்னிக்கிறார்’; முழுமையாக, நிரந்தரமாக மன்னிக்கிறார். (ஏசா. 55:7) அவர் முழுமையாக மன்னிக்கிறார் என்று நமக்கு எப்படித் தெரியும்? அப்போஸ்தலர் 3:19-ல் (வாசியுங்கள்) இருக்கும் நம்பிக்கையூட்டும் வார்த்தைகளைக் கவனியுங்கள். “மனந்திரும்பி உங்கள் வழியை மாற்றிக்கொள்ளுங்கள்” என்று அப்போஸ்தலன் பேதுரு கூடிவந்திருந்தோரிடம் சொன்னார். தவறு செய்த ஒருவர் உள்ளப்பூர்வமாக மனந்திரும்பும்போது, தான் செய்த தவறை நினைத்து மிகவும் வருந்துகிறார். அதோடு, அந்தத் தவறை மீண்டும் செய்யாதிருக்க உறுதிபூண்டிருக்கிறார். (2 கொ. 7:10, 11) அப்படி உண்மையிலேயே மனந்திரும்பும்போது, தன் ‘வழியை மாற்றிக்கொள்கிறார்’; அதாவது தவறான வழியை விட்டுவிட்டு கடவுளுக்குப் பிடித்தமான வழியில் நடக்க ஆரம்பிக்கிறார். பேதுரு சொல்வதைக் கேட்டுக்கொண்டிருந்தவர்கள், அப்படி உள்ளப்பூர்வமாக மனந்திரும்பினால் என்ன பலன்களை அனுபவிப்பார்கள்? அவர்களுடைய பாவங்கள் “துடைத்தழிக்கப்படும்” என்று பேதுரு சொன்னார். எனவே, யெகோவா மன்னிக்கும்போது சிலேட்டிலுள்ள எழுத்துகளைச் சுத்தமாக அழித்துவிடுவது போல தவறுகளைத் துடைத்தழித்துவிடுகிறார். ஆம், அவர் முழுமையாக மன்னிக்கிறார்.—எபி. 10:22; 1 யோ. 1:7.

13. “அவர்கள் பாவங்களை இனி நினையாதிருப்பேன்” என்ற வார்த்தைகள் நமக்கு என்ன உறுதியை அளிக்கிறது?

13 யெகோவா நிரந்தரமாக மன்னிக்கிறார் என்பது நமக்கு எப்படித் தெரியும்? பரலோக நம்பிக்கையுள்ளவர்களோடு செய்யப்பட்ட புதிய ஒப்பந்தத்தைப் பற்றிய எரேமியாவின் தீர்க்கதரிசனத்தைக் கவனியுங்கள். மீட்புபலியில் விசுவாசம் வைப்பவர்கள் இந்த ஒப்பந்தத்தின் மூலம் மன்னிப்பைப் பெறுகிறார்கள். (எரேமியா 31:34-ஐ வாசியுங்கள்.) “நான் அவர்கள் அக்கிரமத்தை மன்னித்து, அவர்கள் பாவங்களை இனி நினையாதிருப்பேன்” என்று யெகோவா சொல்கிறார். ஒருமுறை மன்னித்துவிட்டால் பிற்பாடு அதே பாவங்களை மீண்டும் நினைத்துப்பார்த்து, திரும்பத் திரும்ப குற்றப்படுத்தவோ தண்டிக்கவோ மாட்டார். மாறாக, அவற்றை மன்னித்து, தமக்குப் பின்னால் ஒரேயடியாகத் தூக்கிப் போட்டுவிடுகிறார்!—ரோ. 4:7, 8.

14. யெகோவாவின் மன்னிக்கும் குணத்தைத் தியானித்துப் பார்ப்பது நமக்கு எப்படி ஆறுதல் அளிக்கிறது? உதாரணம் கொடுங்கள்.

14 யெகோவாவின் மன்னிக்கும் குணத்தைத் தியானித்துப் பார்ப்பது நமக்கு ஆறுதல் அளிக்கும். இந்த உதாரணத்தைக் கவனியுங்கள்: அநேக வருடங்களுக்கு முன் ஒரு சகோதரி சபை நீக்கம் செய்யப்பட்டார். பல வருடங்களுக்கு பின் அவர் மீண்டும் சபையில் சேர்த்துக்கொள்ளப்பட்டார். அவர் சொல்கிறார்: “யெகோவா என்னை மன்னிச்சுட்டாருன்னு எனக்கு நானே சொல்லிக்குவேன், மத்தவங்ககிட்டயும் சொல்வேன். ஆனாலும், கடவுள் என்கிட்டயிருந்து விலகியே இருக்கிறார்னும், மத்தவங்ககிட்ட நெருக்கமா பாசமாக இருக்கிற மாதிரி என்கிட்ட இல்லன்னும் என் மனசு சொல்லும்.” இருந்தாலும், யெகோவாவின் மன்னிக்கும் குணத்தை படம்பிடித்துக் காட்டும் சொல் ஓவியங்களை பைபிளிலிருந்து வாசித்துத் தியானித்துப் பார்த்தபோது அவர் ஆறுதல் அடைந்தார். “யெகோவா என்கிட்ட எவ்ளோ அன்பா, பாசமா இருக்கிறார்ன்னு அப்போதான் புரிஞ்சுக்கிட்டேன்” என்று அவர் சொல்கிறார். “யெகோவா நம்முடைய பாவங்களை மன்னிக்கும்போது, நம்முடைய மீதமுள்ள வாழ்நாள் காலமெல்லாம் இத்தகைய பாவக் கறைகளை நாம் சுமப்போம் என எண்ண வேண்டிய அவசியமில்லை” என்ற குறிப்புதான் அவரை மிகவும் கவர்ந்தது. * அவர் சொல்கிறார்: “யெகோவா என்னையெல்லாம் முழுசா மன்னிக்க மாட்டாரு, அதனால, சாகும்வரை இந்த பாரத்தை சுமந்தாகணும்னு நினைச்சேன். எல்லாம் சரியாகறதுக்கு கொஞ்சம் காலம் எடுக்கும்ன்னு தெரிஞ்சுகிட்டேன். யெகோவாகிட்ட நெருங்கி வர முடியும்னு இப்போ புரிய ஆரம்பிச்சிருக்கு, என் மனபாரமும் குறைஞ்சிட்டே வருது.” யெகோவா அன்பானவர், மன்னிக்கிறவர் என்பதை அறியும்போது எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறது!—சங். 103:9.

யெகோவாவைப் போல மன்னியுங்கள்

15. யெகோவாவைப் போல நாம் எப்படி மன்னிக்கலாம்?

15 தகுந்த காரணம் இருக்கும்போது மற்றவர்களை மன்னித்தால் நாம் யெகோவாவைப் பின்பற்றுகிறோம் என்று அர்த்தம். (லூக்கா 17:3, 4-வாசியுங்கள்.) நாம் செய்த தவறுகளை யெகோவா மன்னித்து மறந்துவிடுகிறார் என்பதை நினைவில் வையுங்கள். அதேபோல் நாமும் மற்றவர்கள் செய்த தவறுகளை மன்னித்து மறந்துவிட வேண்டும். அதை மீண்டும் கிளறக்கூடாது.

16. (அ) மன்னிப்பது என்பது குற்றத்தைக் கண்டும் காணாமல் விட்டுவிடுவதை அல்லது அநியாயமாக நடத்த அனுமதிப்பதை அர்த்தப்படுத்துகிறதா? விளக்குங்கள். (ஆ) கடவுள் நம்மை மன்னிக்க வேண்டுமானால் நாம் என்ன செய்ய வேண்டும்?

 16 மன்னிப்பது என்பது குற்றத்தைக் கண்டும் காணாமல் விட்டுவிடுவதையோ மற்றவர்கள் நம்மை அநியாயமாக நடத்த அனுமதிப்பதையோ அர்த்தப்படுத்தாது. மாறாக, மனதில் வன்மம் வைத்துக்கொள்ளாதிருப்பதையே குறிக்கிறது. முக்கியமான ஒரு விஷயத்தை மறந்துவிடக் கூடாது: கடவுள் நம்மை மன்னிக்க வேண்டுமானால் நாம் மற்றவர்களை மன்னிக்க வேண்டும். (மத். 6:14, 15) ‘நாம் மண்ணென்று நினைவுகூர்ந்து’ யெகோவா நம்மை மன்னிக்கிறாரே! (சங். 103:14) அப்படியென்றால், நாமும் மற்றவர்களுடைய குறைகளைப் பெரிதுபடுத்தாமல் இதயப்பூர்வமாக மன்னிக்க வேண்டும், அல்லவா?—எபே. 4:32; கொலோ. 3:13.

மன்னிப்பு கேட்டு மனதார ஜெபம் செய்வோமாக! ( பாரா 17)

17. நம்மைப் புண்படுத்திய சக கிறிஸ்தவர் ஒருவரை மன்னிக்க எது நமக்கு உதவும்?

 17 மன்னிப்பது எப்போதுமே சுலபமல்ல. முதல் நூற்றாண்டில் வாழ்ந்த பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்கள் சிலருக்கிடையிலும்கூட பிரச்சினைகள் இருந்தன. அதைச் சமாளிக்க அவர்களுக்கு உதவியும் தேவைப்பட்டது. (பிலி. 4:2) சக கிறிஸ்தவர் நம்மைப் புண்படுத்திவிட்டால், அவரை மன்னிக்க எது நமக்கு உதவும்? யோபுவின் உதாரணத்தைக் கவனியுங்கள். நண்பர்கள் என்று சொல்லிக்கொண்டு எலிப்பாசும், பில்தாதும், சோப்பாரும் அவர்மேல் பொய்க் குற்றச்சாட்டுகளை அள்ளி வீசினார்கள். அதைக் கேட்டு யோபுவின் மனம் அப்படியே நொறுங்கிப்போனது. (யோபு 10:1; 19:2) கடைசியில், யெகோவா அந்தப் போலி நண்பர்களைக் கடிந்துகொண்டார். செய்த தவறுக்காக யோபுவிடம் போய் பலி செலுத்தும்படி அவர்களிடம் சொன்னார். (யோபு 42:7-9) யோபுவையும் ஒரு காரியம் செய்யச் சொன்னார். அது என்ன? அவரைக் குற்றஞ்சாட்டியவர்களுக்காக ஜெபம் செய்யும்படிச் சொன்னார். யெகோவா சொன்னபடியே யோபு செய்தார். மன்னிக்கும் குணத்தைக் காட்டியதற்காக யெகோவா அவரை ஆசீர்வதித்தார். (யோபு 42:10, 12, 16, 17-ஐ வாசியுங்கள்.) இதிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்? நம்மைப் புண்படுத்தியவருக்காக ஊக்கமாக ஜெபம் செய்யும்போது, அவர்மேல் இருக்கும் கோபம் தணிந்துவிடும்.

யெகோவாவின் குணங்களைத் தொடர்ந்து மதித்துணருங்கள்

18, 19. யெகோவாவின் குணங்கள்மீது நம் மதித்துணர்வை அதிகரிக்க என்ன செய்ய வேண்டும்?

18 யெகோவாவின் அருமையான குணங்களைப் பற்றித் தெரிந்துகொண்டது உண்மையிலேயே நம்மை உற்சாகப்படுத்தியது. யெகோவா அணுகத்தக்கவர், பாரபட்சமற்றவர், தாராள குணமுடையவர், நியாயமானவர், பற்றுமாறா அன்புடையவர், மன்னிப்பவர் என்றெல்லாம் கற்றுக்கொண்டோம். நாம் கற்றுக்கொண்டது கைமண்ணளவுதான். அவரைப் பற்றி கல்லாத உலகளவு விஷயங்களை முடிவில்லா வாழ்வில் கற்றுக்கொள்ளும்போது சந்தோஷத்தின் எல்லைக்கே போய்விடுவோம். (பிர. 3:11, NW) அப்போஸ்தலன் பவுல் சொல்லும் இந்த வார்த்தைகளை நாமும் எதிரொலிப்போம்: “ஆ! கடவுளுடைய ஆசீர்வாதங்கள் எவ்வளவு மகத்தானவை! அவருடைய ஞானமும் அறிவும் எவ்வளவு ஆழமானவை!” அவருடைய அன்பைப் பற்றியும் இப்போது நாம் சிந்தித்த ஆறு பண்புகளைப் பற்றியும்கூட இன்னும் கற்றுக்கொண்டே இருக்கலாம்.—ரோ. 11:33.

19 யெகோவாவிடம் நம்மை ஈர்க்கும் அருமையான பண்புகளைத் தொடர்ந்து மதித்துணர்வோமாக! அந்தக் குணங்களைப் பற்றித் தெரிந்துகொண்டு, தியானித்துப் பார்த்து, வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் கடைப்பிடிப்போமாக! (எபே. 5:1) இப்படிச் செய்யும்போது நிச்சயமாக சங்கீதக்காரனைப் போலவே சொல்வோம்: “எனக்கோ, தேவனை அண்டிக்கொண்டிருப்பதே நலம்.”—சங். 73:28.

^ இதைப் பற்றி அதிகம் தெரிந்துகொள்ள காவற்கோபுரம் ஜனவரி 15, 1995-ல் வந்த “சமீபத்தில் யாரையாவது உற்சாகப்படுத்தினீர்களா?” கட்டுரையையும் ஏப்ரல் 1, 1995-ல் வந்த “அன்புக்கும் நற்பணிகளுக்கும் தூண்டியெழுப்புவது—எப்படி?” கட்டுரையையும் பாருங்கள்.