உங்களுக்கு நினைவிருக்கிறதா?
சமீபத்தில் வெளியான காவற்கோபுர பத்திரிகைகளை நீங்கள் வாசித்து மகிழ்ந்தீர்களா? பின்வரும் கேள்விகளுக்கு உங்களால் பதிலளிக்க முடியுமா என்று பாருங்கள்:
பிப்ளியோமான்ஸி என்றால் என்ன, கிறிஸ்தவர்கள் இதை நம்பலாமா?
“பிப்ளியோமான்ஸி” என்ற வார்த்தையின் அர்த்தம், தெய்வீக வழிநடத்துதல் கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு கண்ணை மூடிக்கொண்டு பைபிளைத் திறந்து முதலில் தென்படும் வசனத்தை வாசிப்பதாகும். கிறிஸ்தவர்கள் அப்படிச் செய்வதில்லை. மாறாக, திருத்தமான அறிவை அடையவும் கடவுளுடைய வழிநடத்துதலைப் பெறவும் பைபிளை ஆழ்ந்து படிக்கிறார்கள்.—12/15, பக்கம் 3.
கடவுளுடைய நிர்வாகிகளான நாம் என்ன நியமங்களைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்? (1 பே. 4:10)
கிறிஸ்தவர்களாக நாம் எல்லோருமே கடவுளுக்குச் சொந்தமானவர்கள், அவருக்குக் கணக்குக் கொடுக்க வேண்டியவர்கள். நாம் எல்லோருமே ஒரே நெறிமுறைகளைப் பின்பற்றுகிறோம். அதனால் நாம் உண்மையுள்ளவர்களாக, நம்பிக்கைக்குரியவர்களாக இருக்க வேண்டும்.—12/15, பக்கங்கள் 10-12.
‘உலகம் ஒழிந்துபோகும்’ என்பதன் அர்த்தம் என்ன?
உலகம் ஒழிந்துபோகும் என்றால், கடவுளுடைய சித்தத்தின்படி வாழாத மனித சமுதாயம் அழிந்துவிடும் என்று அர்த்தம். (1 யோ. 2:17) அப்படியென்றால், பூமி அழியாது, நல்ல ஜனங்களும் அழிய மாட்டார்கள்.—1/1, பக்கங்கள் 5-7.
ஆபேல் இறந்துவிட்டாலும் இன்னமும் பேசுகிறார், எப்படி? (எபி. 11:4)
அவர் விசுவாசத்தைக் காட்டியதால் இன்னும் வாழ்ந்துகொண்டிருக்கிறார் என்றே சொல்லலாம். விசுவாசத்திற்கு மிகச் சிறந்த முன்னோடியான அவரைப் பற்றித் தெரிந்துகொண்டு, பின்பற்ற முயற்சி செய்தால் அவரே நம்மிடம் நேரடியாகப் பேசுவது போல் இருக்கும்.—1/1, பக்கம் 12.
கடவுளிடமிருந்து நம்மைத் தூர விலக்கிவிடும் எந்த அம்சங்களைக் குறித்து நாம் கவனமாய் இருக்க வேண்டும்?
சில அம்சங்கள்: நம் வேலை, பொழுதுபோக்கு, சபைநீக்கம் செய்யப்பட்ட உறவினரோடு பந்தம், நவீன தொழில்நுட்பம், ஆரோக்கியம் பற்றிய கவலை, பண மோகம், நம் கருத்துகள் அல்லது பதவி குறித்த தற்பெருமை.—1/15, பக்கங்கள் 12-21.
மோசேயின் மனத்தாழ்மையிலிருந்து என்ன கற்றுக்கொள்ளலாம்?
எல்லா அதிகாரமும் தனக்கே இருக்க வேண்டும் என்ற எண்ணம் மோசேயின் மனதில் எட்டிக்கூட பார்க்கவில்லை. அதிகாரம் இருக்கிறது, திறமை இருக்கிறது என்பதற்காக தலைக்கனம் நமக்குள் தலைக்காட்ட அனுமதிக்கக் கூடாது. மாறாக, யெகோவாமேல் நம்பிக்கை வைக்க வேண்டும். (நீதி. 3:5, 6)—4/1, பக்கம் 5.
இஸ்ரவேலர் ‘இருதயத்திலே விருத்தசேதனமில்லாமல்’ இருந்தது எதை அர்த்தப்படுத்தியது? (எரே. 9:26)
அவர்களுடைய இருதயத்தில் முரட்டுத்தனமும் கலகத்தனமும் குடிகொண்டிருந்தது. யெகோவாவின் கட்டளைகளுக்கு விரோதமான எண்ணத்தை, ஆசையை, உள்நோக்கத்தை அவர்கள் விட்டுவிட வேண்டியிருந்தது. (எரே. 5:23, 24)—3/15, பக்கங்கள் 9-10.
யெகோவாவுடைய அமைப்பின் பூமிக்குரிய பாகத்தில் உட்பட்டிருப்பவை யாவை?
ஆளும் குழு, கிளை அலுவலகக் குழு, பயணக் கண்காணிகள், மூப்பர் குழுக்கள், சபைகள், பிரஸ்தாபிகள்.—4/15, பக்கம் 29.
குற்றவாளிகளை இஸ்ரவேலர்கள் கழுமரத்தில் அறைந்து கொன்றார்களா?
இல்லை. பூர்வ காலத்திலிருந்த நிறைய தேசத்தார் அப்படிச் செய்தார்கள், ஆனால் இஸ்ரவேலர்கள் அப்படிச் செய்யவில்லை. எபிரெய வேதாகமம் எழுதப்பட்ட காலத்தில், குற்றவாளிகளை முதலில் கல்லெறிந்து கொலை செய்தார்கள். (லேவி. 20:2, 27) அதன் பிறகே கம்பத்திலோ மரத்திலோ தொங்க விட்டார்கள். மற்றவர்களுக்கு இது ஓர் எச்சரிக்கையாக இருந்தது.—5/15, பக்கம் 13.