Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

“இவையெல்லாம் எப்போது நடக்கும்?”

“இவையெல்லாம் எப்போது நடக்கும்?”

“உங்களுடைய பிரசன்னத்திற்கும் இந்தச் சகாப்தத்தின் இறுதிக்கட்டத்திற்கும் அடையாளம் என்ன?”—மத். 24:3.

1. அப்போஸ்தலர்களைப் போல நாமும் எதைப் பற்றி அறிந்துகொள்ள ஆவலோடு இருக்கிறோம்?

 இயேசுவின் பூமிக்குரிய வாழ்க்கை முடிவுக்கு வரும் சமயம் அது; அவருடைய சீடர்கள் தங்களுடைய எதிர்காலத்தைப் பற்றி அறிய ஆவலாய் இருந்தார்கள். எனவே, அவர் மரிப்பதற்கு சில நாட்களுக்கு முன், சீடர்களில் நான்கு பேர் இப்படிக் கேட்டார்கள்: “இவையெல்லாம் எப்போது நடக்கும், உங்களுடைய பிரசன்னத்திற்கும் இந்தச் சகாப்தத்தின் இறுதிக்கட்டத்திற்கும் அடையாளம் என்ன?” (மத். 24:3; மாற். 13:3) அப்போது, இயேசு விரிவான ஒரு தீர்க்கதரிசனத்தைச் சொன்னார்; முக்கியமான பல சம்பவங்களை அதில் குறிப்பிட்டார். அதை மத்தேயு 24, 25 அதிகாரங்களில் காணலாம். எதிர்காலத்தைப் பற்றி அறிந்துகொள்ள நாமும் ஆவலோடு இருப்பதால், அந்தத் தீர்க்கதரிசனம் நமக்கும் பிரயோஜனமுள்ளது.

2. (அ) பல வருடங்களாக ஆராய்ந்ததில் எதைப் பற்றிய சரியான புரிந்துகொள்ளுதல் நமக்குக் கிடைத்திருக்கிறது? (ஆ) என்ன மூன்று கேள்விகளைச் சிந்திப்போம்?

2 பல வருடங்களாக, யெகோவாவின் ஊழியர்கள் கடைசி நாட்கள் பற்றிய இயேசுவின் தீர்க்கதரிசனத்தை ஜெபம்செய்து ஆராய்ந்து வந்திருக்கிறார்கள். அந்தத் தீர்க்கதரிசனம் நிறைவேறும் காலகட்டத்தைச் சரியாகப் புரிந்துகொள்ள முயன்றிருக்கிறார்கள். அதன் பலனாக நம்முடைய புரிந்துகொள்ளுதல் எவ்வாறு தெளிவாகியிருக்கிறது என்பதை அறிய மூன்று கேள்விகளை இப்போது சிந்திப்போம். “மிகுந்த உபத்திரவம்” எப்போது ஆரம்பமாகும்? “செம்மறியாடுகளையும் வெள்ளாடுகளையும்” இயேசு எப்போது நியாயந்தீர்ப்பார்? இயேசு எப்போது ‘வருவார்’?—மத். 24:21; 25:31-33.

மிகுந்த உபத்திரவம் எப்போது ஆரம்பமாகும்?

3. மிகுந்த உபத்திரவத்தின் காலகட்டத்தைப் பற்றி முன்பு என்ன நினைத்துக்கொண்டிருந்தோம்?

3 முதல் உலகப் போர் 1914-ல் வெடித்தபோது மிகுந்த உபத்திரவம் ஆரம்பமானது என பல வருடங்களாக நினைத்தோம். பரலோக நம்பிக்கையுள்ள மீதியானோர் சகல தேசத்தாருக்கும் நற்செய்தியைப் பிரசங்கிப்பதற்காக 1918-ல் யெகோவா ‘அந்நாட்களைக் குறைத்தார்’ என்றும் நினைத்தோம். அப்போதுதான் அந்தப் போர் முடிவடைந்தது. (மத். 24:21, 22) அந்தப் பிரசங்க வேலை முடிந்தபின் சாத்தானுடைய ஆட்சி வீழ்த்தப்படும் என்று எதிர்பார்த்தோம். எனவே, மிகுந்த உபத்திரவம் மூன்று கட்டங்களாக அரங்கேறும் என எண்ணினோம். அதாவது ஓர் ஆரம்பமிருக்கும் (1914-1918), இடையில் குறுக்கிடப்படும் (1918-லிருந்து), அர்மகெதோன் யுத்தத்தோடு முடிவடையும் என எண்ணினோம்.

4. கடைசி நாட்கள் பற்றிய இயேசுவின் தீர்க்கதரிசனத்தைப் பற்றி என்ன புரிந்துகொண்டோம்?

4 மேலுமான ஆராய்ச்சியில், கடைசி நாட்கள் பற்றிய தீர்க்கதரிசனத்தின் சில விஷயங்களுக்கு இரண்டு நிறைவேற்றங்கள் இருப்பதைப் புரிந்துகொண்டோம். (மத். 24:4-22) முதல் நிறைவேற்றம், யூதாவில் முதல் நூற்றாண்டின்போது நிறைவேறியது. இரண்டாவது, நம் நாளில் உலகளவில் நிறைவேறப்போகிறது. இந்தப் புரிந்துகொள்ளுதல் சில விஷயங்களைத் தெளிவாக்கியது. *

5. (அ) 1914-ல் எது ஆரம்பமானது? (ஆ) வேதனைகள் நிறைந்த அந்தக் காலப்பகுதி முதல் நூற்றாண்டின் எந்தக் காலப்பகுதியோடு ஒத்திருக்கிறது?

5 உதாரணத்திற்கு, மிகுந்த உபத்திரவத்தின் முதற்கட்டம் 1914-ல் ஆரம்பிக்கவில்லை என்பதைப் புரிந்துகொண்டோம். ஏனென்றால் தேசங்களுக்கிடையே போர் மூளும்போது அல்ல, பொய் மதங்கள் தாக்கப்படும்போதே மிகுந்த உபத்திரவம் ஆரம்பமாகும் என்று பைபிள் சொல்கிறது. எனவே, 1914-ல் அரங்கேறிய சம்பவங்கள் மிகுந்த உபத்திரவம் ஆரம்பமானதை அல்ல, ‘வேதனைகள் ஆரம்பமானதையே’ சுட்டிக்காட்டுகின்றன. (மத். 24:8) இந்த ‘வேதனைகள்’ கி.பி. 33 முதல் 66 வரை எருசலேமிலும் யூதேயாவிலும் நடந்த வேதனையான சம்பவங்களுக்கு ஒத்திருக்கின்றன.

6. மிகுந்த உபத்திரவம் ஆரம்பமாவதை எப்படித் தெரிந்துகொள்ளலாம்?

6 மிகுந்த உபத்திரவம் ஆரம்பமாவதை எப்படித் தெரிந்துகொள்ளலாம்? “தானியேல் தீர்க்கதரிசியின் மூலம் சொல்லப்பட்டபடி, ‘பாழாக்கும் அருவருப்பு’ பரிசுத்தமான இடத்தில் நிற்பதை நீங்கள் பார்க்கும்போது, (வாசிப்பவர் பகுத்தறிந்துகொள்ளட்டும்,) யூதேயாவில் உள்ளவர்கள் மலைகளுக்குத் தப்பியோட வேண்டும்” என்று இயேசு முன்னறிவித்தார். (மத். 24:15, 16) ‘பரிசுத்தமான இடத்தில் நிற்பதன்’ முதல் நிறைவேற்றம் எப்போது நடந்தது? யூதர்கள் பரிசுத்தமாகக் கருதிய எருசலேமையும் அதன் ஆலயத்தையும் ரோமப்படை அதாவது பாழாக்கும் அருவருப்பு கி.பி. 66-ல் தாக்கியபோது நடந்தது. பெரியளவில் எப்போது நிறைவேறும்? போலி கிறிஸ்தவர்கள் பரிசுத்தமாகக் கருதும் கிறிஸ்தவமண்டலத்தையும் மகா பாபிலோனின் பாகமான பிற மதங்களையும், இன்றைய ‘பாழாக்கும் அருவருப்பான’ ஐக்கிய நாட்டுச் சங்கம் தாக்கும்போது நிறைவேறும். இதே தாக்குதலைப் பற்றித்தான் வெளிப்படுத்துதல் 17:16-18 வசனங்களும் விவரிக்கின்றன. இந்தச் சம்பவமே மிகுந்த உபத்திரவத்தின் ஆரம்பம்.

7. (அ) முதல் நூற்றாண்டில் கிறிஸ்தவர்கள் எப்படித் ‘தப்பிப்பிழைத்தார்கள்’? (ஆ) வரவிருக்கும் மிகுந்த உபத்திரவத்தில் என்ன நடக்கும்?

  7 “அந்நாட்கள் குறைக்கப்படும்” என்றும் இயேசு முன்னறிவித்தார். இதன் முதல் நிறைவேற்றம், கி.பி. 66-ல் ரோமப்படை தாக்குதலை நிறுத்தியபோது நடந்தது. அப்போது, எருசலேமிலும் யூதேயாவிலும் இருந்த பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்கள் அங்கிருந்து ஓடினார்கள். “தப்பிப்பிழைக்க,” அதாவது உயிரைப் பாதுகாக்க அது அவர்களுக்கு வாய்ப்பளித்தது. (மத்தேயு 24:22-ஐ வாசியுங்கள்; மல். 3:17) அப்படியானால், வரவிருக்கும் மிகுந்த உபத்திரவத்தில் நாம் எதை எதிர்பார்க்கலாம்? பொய் மதத்தின் மீதான ஐக்கிய நாட்டு சங்கத்தின் தாக்குதலை யெகோவா ‘குறைப்பார்,’ அதாவது நிறுத்துவார். பொய் மதத்தோடு சேர்ந்து உண்மை மதமும் அழிய யெகோவா ஒருபோதும் விடமாட்டார். கடவுளுடைய மக்கள் நிச்சயம் காப்பாற்றப்படுவார்கள்.

8. (அ) மிகுந்த உபத்திரவத்தின் முதற்கட்டத்திற்குப் பிறகு என்ன சம்பவங்கள் நடக்கும்? (ஆ) 1,44,000 பேரில் கடைசி நபர் எப்போது பரலோகத்திற்குச் செல்வார்? (குறிப்பைப் பாருங்கள்.)

  8 மிகுந்த உபத்திரவத்தின் முதற்கட்டத்திற்குப் பிறகு என்ன நடக்கும்? அர்மகெதோன் யுத்தம் துவங்கும்வரை இடைப்பட்ட ஒரு காலப்பகுதி இருக்குமென இயேசு குறிப்பிட்டிருந்தார். அந்தக் காலப்பகுதியில் என்ன சம்பவங்கள் நடக்கும்? எசேக்கியேல் 38:14-16 மற்றும் மத்தேயு 24:29-31 (வாசியுங்கள்) இதற்குப் பதிலளிக்கின்றன. * பிறகு, மிகுந்த உபத்திரவத்தின் உச்சக்கட்டமான அர்மகெதோன் யுத்தத்தைப் பார்ப்போம். கி.பி. 70-ல் நடந்த எருசலேமின் அழிவோடு இது ஒத்திருக்கிறது. (மல். 4:1) அர்மகெதோன் யுத்தத்தோடு முடிவடையும் அந்த மிகுந்த உபத்திரவம் தனித்தன்மை வாய்ந்ததாக இருக்கும்; ‘உலகத்தின் ஆரம்பம்முதல் இதுவரை வந்திராத’ ஒரு நிகழ்வாக இருக்கும். (மத். 24:21) பிறகு கிறிஸ்துவின் ஆயிர வருட ஆட்சி ஆரம்பமாகும்.

9. மிகுந்த உபத்திரவத்தைப் பற்றிய தீர்க்கதரிசனம் நம்மை எப்படிப் பலப்படுத்துகிறது?

9 மிகுந்த உபத்திரவத்தைப் பற்றிய தீர்க்கதரிசனம் நம்மைப் பலப்படுத்துகிறது. எப்படி? எப்பேர்ப்பட்ட கஷ்டங்கள் வந்தாலும், யெகோவாவின் மக்கள் ஒரு தொகுதியாக மிகுந்த உபத்திரவத்தைத் தப்பிப்பிழைப்பார்கள் என்ற உறுதியை அளிக்கிறது. (வெளி. 7:9, 14) அதைவிட முக்கியமாக, நம்மை மகிழ்ச்சியில் ஆழ்த்துவது என்னவென்றால், அர்மகெதோன் யுத்தத்தின் மூலம் யெகோவா தமது உன்னத ஆட்சியுரிமையை நிரூபிப்பார், தமது புனிதப் பெயரைப் பரிசுத்தப்படுத்துவார்.—சங். 83:17; எசே. 38:23.

செம்மறியாடுகளையும் வெள்ளாடுகளையும் இயேசு எப்போது நியாயந்தீர்ப்பார்?

10. செம்மறியாடுகளையும் வெள்ளாடுகளையும் நியாயந்தீர்ப்பது எப்போது நிறைவேறும் என்று நாம் முதலில் நினைத்தோம்?

10 இயேசு சொன்ன தீர்க்கதரிசனத்தின் மற்றொரு அம்சம், செம்மறியாடுகளையும் வெள்ளாடுகளையும் நியாயந்தீர்ப்பது. இது எப்போது நிறைவேறும் என்று பார்க்கலாம். (மத். 25:31-46) 1914 தொடங்கி கடைசி நாட்கள் முழுவதுமாக, மக்களை செம்மறியாடுகளாகவோ வெள்ளாடுகளாகவோ இயேசு நியாயந்தீர்ப்பார் என்று நாம் முதலில் நினைத்தோம். நற்செய்திக்கு செவிசாய்க்காமல் மிகுந்த உபத்திரவம் ஆரம்பமாவதற்கு முன்பே மரிப்பவர்கள் வெள்ளாடுகள் என்றும் அவர்களுக்கு உயிர்த்தெழுதல் நம்பிக்கையே இல்லை என்றும் நினைத்தோம்.

11. செம்மறியாடுகளையும் வெள்ளாடுகளையும் நியாயந்தீர்ப்பது ஏன் 1914-ல் ஆரம்பித்திருக்காது?

11 காவற்கோபுர பத்திரிகை, 1990-களின் மத்திபத்தில் மத்தேயு 25:31-ஐ மறுபரிசீலனை செய்தது. அந்த வசனம் இப்படிச் சொல்கிறது: “மனிதகுமாரன் தம்முடைய மகிமையில் எல்லாத் தேவதூதர்களோடும் வரும்போது, தம் மகிமையுள்ள சிம்மாசனத்தில் அமருவார்.” இயேசு, 1914-ல் கடவுளுடைய அரசாங்கத்தின் ராஜாவானார்; ஆனாலும் ‘எல்லாத் தேசத்தாரையும்’ நியாயந்தீர்க்க ‘தம் மகிமையுள்ள சிம்மாசனத்தில் அமரவில்லை’ என்று அந்தப் பத்திரிகை குறிப்பிட்டது. (மத். 25:32; தானியேல் 7:17-ஐ ஒப்பிடுங்கள்.) செம்மறியாடுகள்-வெள்ளாடுகள் பற்றிய உவமையில் இயேசு ஒரு நியாயாதிபதியாகவே விவரிக்கப்படுகிறார். (மத்தேயு 25:31-34, 41, 46-ஐ வாசியுங்கள்.) இயேசு, 1914-ல் எல்லாத் தேசத்தார்மீதும் நியாயாதிபதியாக செயல்பட ஆரம்பிக்காததால் செம்மறியாடுகளையும் வெள்ளாடுகளையும் நியாயந்தீர்ப்பது அந்த வருடத்தில் ஆரம்பித்திருக்காது. * அப்படியானால் எப்போது ஆரம்பிக்கும்?

12. (அ) இயேசு எப்போது முதன்முறையாக எல்லாத் தேசத்தார்மீதும் நியாயாதிபதியாகச் செயல்படுவார்? (ஆ) மத்தேயு 24:30, 31 மற்றும் மத்தேயு 25:31-33, 46-ல் என்ன சம்பவங்கள் விவரிக்கப்பட்டுள்ளன?

  12 பொய் மதங்கள் அழிக்கப்பட்ட பிறகு இயேசு முதன்முறையாக எல்லாத் தேசத்தார்மீதும் நியாயாதிபதியாகச் செயல்படுவார் என்று கடைசி நாட்கள் பற்றிய தீர்க்கதரிசனம் உறுதிப்படுத்துகிறது. அந்தச் சமயத்தில் நடக்கும் சில சம்பவங்களைப் பற்றி மத்தேயு 24:30, 31 பதிவு செய்துள்ளது; அதை நாம்  8-வது பாராவில் பார்த்தோம். அதிலுள்ள சம்பவங்கள் செம்மறியாடுகள்-வெள்ளாடுகள் பற்றிய உவமையில் இயேசு சொன்ன சம்பவங்களோடு ஒத்திருப்பதைக் கவனிக்க முடிகிறது. உதாரணத்திற்கு, மனிதகுமாரன் மகிமையோடும் தேவதூதர்களோடும் வருவார்; எல்லாத் தேசத்தாரும் கோத்திரத்தாரும் சேர்க்கப்படுவார்கள்; செம்மறியாடுகளாக நியாயந்தீர்க்கப்படுபவர்கள் “நிரந்தர வாழ்வை” பெறப்போவதால் தங்கள் ‘தலைகளை உயர்த்துவார்கள்.’ * வெள்ளாடுகளாக நியாயந்தீர்க்கப்படுபவர்கள் தங்களுக்கு ‘நிரந்தர அழிவு’ காத்திருப்பதை அறிந்து ‘அழுது அங்கலாய்ப்பார்கள்.’—மத். 25:31-33, 46.

13. (அ) இயேசு, மக்களை எப்போது செம்மறியாடுகளாக அல்லது வெள்ளாடுகளாக நியாயந்தீர்ப்பார்? (ஆ) இதைப் புரிந்துகொள்வதால் ஊழியத்தை நாம் எப்படிக் கருதுவோம்?

 13 அப்படியென்றால் நாம் என்ன முடிவுக்கு வரலாம்? மிகுந்த உபத்திரவத்தின்போது இயேசு வருகையில் எல்லாத் தேசத்து மக்களையும் செம்மறியாடுகளாகவோ வெள்ளாடுகளாகவோ நியாயந்தீர்ப்பார். அதற்குப்பின், மிகுந்த உபத்திரவத்தின் உச்சக்கட்டமான அர்மகெதோன் யுத்தத்தில் வெள்ளாடுகளைப் போன்றவர்கள் ‘நிரந்தரமாக அழிக்கப்படுவார்கள்.’ இதைப் புரிந்துகொள்வதால் நாம் ஊழியத்தை எப்படிக் கருதுவோம்? நம்முடைய பிரசங்க வேலையை மிக முக்கியமான வேலையாகக் கருதுவோம். மக்கள் தங்களுடைய மனதை மாற்றிக்கொண்டு “வாழ்வுக்கு வழிநடத்தும்” குறுகலான பாதையில் நடக்க ஆரம்பிப்பதற்கு, மிகுந்த உபத்திரவம் ஆரம்பமாகும்வரை நேரம் இருக்கிறது. (மத். 7:13, 14) இன்று மக்கள், செம்மறியாடுகளை அல்லது வெள்ளாடுகளைப் போன்ற மனப்பான்மையைக் காட்டலாம். ஆனாலும், மிகுந்த உபத்திரவத்தின் சமயத்தில்தான் அவர்கள் இறுதி நியாயத்தீர்ப்பைப் பெறுவார்கள். எனவே, கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய செய்தியை முடிந்தவரை எல்லா மக்களிடமும் பிரசங்கிப்போமாக. அப்போதுதான் அந்தச் செய்தியைக் ஏற்றுக்கொள்ள அவர்களுக்கும் ஒரு வாய்ப்பு கிடைக்கும்.

மக்கள் தங்களுடைய மனதை மாற்றிக்கொள்ள மிகுந்த உபத்திரவம் ஆரம்பமாகும்வரை நேரம் இருக்கிறது ( பாரா 13)

இயேசு எப்போது வருவார்?

14, 15. இயேசு எதிர்காலத்தில் ஒரு நியாயாதிபதியாக வருவதைக் குறிக்கிற நான்கு வசனங்கள் யாவை?

14 இயேசுவின் தீர்க்கதரிசனத்தை கூடுதலாக ஆராய்வதால், மற்ற முக்கியமான சம்பவங்கள் நடைபெறும் காலகட்டத்தைப் பற்றிய நம்முடைய புரிந்துகொள்ளுதலிலும் மாற்றங்கள் செய்ய வேண்டியிருக்குமா? இந்தத் தீர்க்கதரிசனமே இதற்குப் பதிலளிக்கிறது. அதை இப்போது பார்க்கலாம்.

15 மத்தேயு 24:29–25:46-லுள்ள தீர்க்கதரிசன பகுதியில், கடைசி நாட்களிலும் வரவிருக்கும் மிகுந்த உபத்திரவத்திலும் நடக்கும் சம்பவங்களுக்கே இயேசு அதிக கவனம் செலுத்தினார். அதில், தம்முடைய ‘வருகையை’ பற்றி இயேசு எட்டு முறை குறிப்பிட்டார். மிகுந்த உபத்திரவத்தைப் பற்றி அவர் இப்படிச் சொல்கிறார்: “மனிதகுமாரன் . . . மேகங்கள்மீது வருவதை அவர்கள் பார்ப்பார்கள்.” “உங்கள் எஜமானர் எந்த நாளில் வருகிறார் என்பது உங்களுக்குத் தெரியாது.” “நீங்கள் நினைக்காத நேரத்தில் மனிதகுமாரன் வரப்போகிறார்.” செம்மறியாடுகள்-வெள்ளாடுகள் பற்றிய உவமையில், “மனிதகுமாரன் தம்முடைய மகிமையில் . . . வரும்போது” என்று இயேசு சொன்னார். (மத். 24:30, 42, 44; 25:31) இந்த நான்கு வசனங்களும் எதிர்காலத்தில் இயேசு ஒரு நியாயாதிபதியாக வருவதையே சுட்டிக்காட்டுகின்றன. மற்ற நான்கு வசனங்கள் எங்கே காணப்படுகின்றன?

16. இயேசுவின் வருகையைப் பற்றிக் குறிப்பிடுகிற வேறு வசனங்கள் யாவை?

16 உண்மையும் விவேகமுள்ள அடிமையைப் பற்றி இயேசு சொல்கிறார்: “எஜமான் வரும்போது அப்படி உணவளிப்பவனாகக் காணப்படுகிற அடிமையே சந்தோஷமானவன்.” கன்னிகைகளைப் பற்றிய உவமையில் இயேசு இப்படிச் சொல்கிறார்: “அவர்கள் அதை வாங்கப் போனபோதோ மணமகன் வந்துவிட்டார்.” தாலந்து பற்றிய உவமையில், ‘வெகு காலத்திற்குப்பின் அந்த அடிமைகளுடைய எஜமான் திரும்பி வந்ததாக’ இயேசு சொன்னார். அதே உவமையில், “நான் திரும்பி வந்ததும் எனக்குச் சேர வேண்டியதை வட்டியோடு வாங்கியிருப்பேனே” என்று அந்த எஜமான் சொல்கிறார். (மத். 24:46; 25:10, 19, 27) இந்த நான்கு வசனங்களும் சொல்கிறபடி இயேசு எப்போது வருவார்?

17. மத்தேயு 24:46-ல் சொல்லப்பட்டுள்ள வருகையைப் பற்றி என்ன குறிப்பிட்டிருந்தோம்?

17 இயேசு, 1918-ல் வந்ததையே கடைசியில் பார்த்த நான்கு வசனங்களும் குறிக்கின்றன என்று நம்முடைய பிரசுரங்களில் முன்பு குறிப்பிட்டிருந்தோம். உதாரணத்திற்கு, “உண்மையும் விவேகமும் உள்ள அடிமை” பற்றிய இயேசுவின் வார்த்தைகளைக் கவனியுங்கள். (மத்தேயு 24:45-47-ஐ வாசியுங்கள்.) 46-வது வசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ‘வருகை,’ பரலோக நம்பிக்கையுள்ளவர்களின் ஆன்மீக நிலையைச் சோதனையிட 1918-ல் இயேசு வந்ததோடும் பிறகு 1919-ல் எஜமானரின் உடமைகள் எல்லாவற்றின்மீதும் உண்மையும் விவேகமும் உள்ள அடிமையை நியமித்ததோடும் சம்பந்தப்பட்டிருக்கிறது என நினைத்தோம். (மல். 3:1) இயேசுவின் தீர்க்கதரிசனத்தை மேலுமாக ஆராய்ந்தபோது, அதன் சில அம்சங்கள் நிறைவேறும் காலப்பகுதியைப் பற்றி நாம் இதுவரை புரிந்துகொண்டிருந்ததில் மாற்றம் தேவை என்பதை அறிந்துகொண்டோம். அதை இப்போது கவனிக்கலாம்.

18. இயேசுவின் தீர்க்கதரிசனத்தை முழுமையாக ஆராயும்போது அவருடைய வருகையைப் பற்றி என்ன புரிந்துகொள்கிறோம்?

 18 மத்தேயு 24:46-க்கு முன் உள்ள வசனங்களில், ‘வருகையை’ குறிக்கும் எல்லா வார்த்தைகளும் மிகுந்த உபத்திரவத்தின்போது நியாயத்தீர்ப்பை அறிவிக்கவும் அதைச் செயல்படுத்தவும் இயேசு வரும் காலத்தையே குறிக்கின்றன. (மத். 24:30, 42, 44) அதோடு,  பாரா 12-ல் பார்த்தபடி, மத்தேயு 25:31-ல் சொல்லப்பட்டுள்ள “வரும்போது” என்ற வார்த்தையும் மிகுந்த உபத்திரவத்தின் சமயத்தில் நியாயந்தீர்ப்பதற்காக இயேசு வரும் காலத்தையே குறிக்கிறது. எனவே, மத்தேயு 24:46, 47-ல், தம்முடைய உடமைகள் எல்லாவற்றையும் கவனித்துக்கொள்ள உண்மையும் விவேகமும் உள்ள அடிமையை நியமிக்க இயேசு வருவதும்கூட எதிர்காலத்தில் மிகுந்த உபத்திரவத்தின்போது அவர் வரும் காலப்பகுதியையே குறிக்க வேண்டும். அப்படியானால், அந்த எட்டு வசனங்களிலும் தம்முடைய வருகையைப் பற்றி இயேசு சொன்னது, எதிர்காலத்தில் மிகுந்த உபத்திரவத்தின்போது நியாயந்தீர்க்க அவர் வரும் காலத்தையே குறிக்கின்றன; இயேசுவின் தீர்க்கதரிசனத்தை முழுமையாக ஆராயும்போது இது தெளிவாகிறது.

19. இந்தக் கட்டுரையில் என்ன மூன்று விஷயங்களைக் கற்றுக்கொண்டோம், அடுத்து வரும் கட்டுரைகளில் என்ன கேள்விகளுக்கான பதில்களைத் தெரிந்துகொள்வோம்?

19 நாம் என்ன கற்றுக்கொண்டோம் என மறுபார்வை செய்யலாம். இந்தக் கட்டுரையின் ஆரம்பத்தில் மூன்று கேள்விகள் கேட்கப்பட்டன. மிகுந்த உபத்திரவம் 1914-ல் ஆரம்பிக்கவில்லை; மகா பாபிலோனை ஐக்கிய நாட்டு சங்கம் தாக்கும்போதே ஆரம்பமாகும் என்று பார்த்தோம். பிறகு, செம்மறியாடுகளையும் வெள்ளாடுகளையும் இயேசு நியாயந்தீர்ப்பது 1914-ல் ஆரம்பிக்கவில்லை, மிகுந்த உபத்திரவத்தின் சமயத்தில்தான் நடக்கும் என்றும் பார்த்தோம். கடைசியாக, இயேசு தம்முடைய உடமைகள் எல்லாவற்றையும் கவனித்துக்கொள்ள உண்மையும் விவேகமும் உள்ள அடிமையை நியமிக்க 1919-ல் வரவில்லை; மாறாக, மிகுந்த உபத்திரவத்தின்போதே அது நடக்கும் என்றும் பார்த்தோம். எனவே, ஆரம்பத்தில் கேட்கப்பட்ட அந்த மூன்று கேள்விகளுக்கும் பதில் ஒன்றுதான்—வரவிருக்கும் மிகுந்த உபத்திரவத்தின்போது. இந்தப் புரிந்துகொள்ளுதல் உண்மையும் விவேகமும் உள்ள அடிமை பற்றிய உவமையின் புரிந்துகொள்ளுதலில் என்ன மாற்றத்தை ஏற்படுத்துகிறது? அதோடு, இந்த முடிவு காலத்தில் நிறைவேறி வருகிற இயேசுவின் மற்ற உவமைகளைப் பற்றிய புரிந்துகொள்ளுதலிலும் என்ன மாற்றம் தேவைப்படுகிறது? இந்த முக்கியமான கேள்விகளுக்கு அடுத்து வரும் கட்டுரைகள் பதிலளிக்கும்.

 

^ பாரா 4: கூடுதல் விவரங்களுக்கு, காவற்கோபுரம், பிப்ரவரி 15, 1994, பக்கங்கள் 8-21 மற்றும் மே 1, 1999, பக்கங்கள் 8-20-ஐப் பாருங்கள்.

^ பாரா 8: இந்த வசனங்களில் சொல்லப்பட்டுள்ள சம்பவங்களில் ஒன்று, ‘தேர்ந்தெடுக்கப்பட்டவர்களை கூட்டிச்சேர்ப்பது.’ (மத். 24:31) ஆகவே, மிகுந்த உபத்திரவத்தின் முதல் கட்டத்திற்கு பின்னும் உயிரோடிருக்கிற பரலோக நம்பிக்கையுள்ளவர்கள், அர்மகெதோன் யுத்தம் ஆரம்பிப்பதற்கு முன் மரித்து பரலோகத்திற்கு உயிர்த்தெழுப்பப்படுவார்கள் எனத் தெரிகிறது. ஆங்கில காவற்கோபுரம், ஆகஸ்ட் 15, 1990, பக்கம் 30, “வாசகர்களிடமிருந்து வரும் கேள்விகள்” என்ற கட்டுரையில் சொல்லப்பட்டுள்ள தகவலை இது மாற்றீடு செய்கிறது.

^ பாரா 11: காவற்கோபுரம், அக்டோபர் 15, 1995, (ஆங்கிலம்) பக்கங்கள் 18-28-ஐப் பாருங்கள்.

^ பாரா 12: இதற்கு இணையான பதிவை லூக்கா 21:28-ல் பாருங்கள்.