Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

‘ஒவ்வொரு நாளும் யெகோவா எனக்காக பாரத்தைச் சுமக்கிறார்’

‘ஒவ்வொரு நாளும் யெகோவா எனக்காக பாரத்தைச் சுமக்கிறார்’

சமாளிக்கவே முடியாது என நினைக்குமளவுக்கு உடல்நிலை படுமோசமாக இருந்தபோதும் நம் பரலோகத் தகப்பனின் அன்பையும் அரவணைப்பையும் என் வாழ்க்கை முழுவதிலும் கண்டேன். கடந்த 20 வருடங்களுக்கு மேலாக மிகுந்த சந்தோஷத்தோடு பயனியர் சேவை செய்து வருகிறேன்.

நான் 1956-ல் முதுகெலும்புப் பிளவு (spina bifida) என்ற உடல்நலப் பிரச்சினையோடு பிறந்தேன். முதுகெலும்பிலுள்ள நரம்பு குழாய் முழுமையாக மூடாததால் சரியாக நடக்க முடியாமல் போய்விட்டது, கூடவே இன்னும் சில மோசமான உடல்நலப் பிரச்சினைகளும் வந்தன.

நான் பிறப்பதற்குக் கொஞ்சம் காலத்திற்கு முன்பு ஒரு மிஷனரி தம்பதி என் பெற்றோருக்கு பைபிள் படிப்பை நடந்த ஆரம்பித்திருந்தார்கள். நான் குழந்தையாக இருந்தபோது எங்கள் சொந்த ஊரான நமிபியாவைச் சேர்ந்த உசாகோஸில் அங்கங்கே சில பிரஸ்தாபிகளே இருந்தார்கள். அங்கு சபை இல்லாததால் கூட்டங்களில் படிக்க வேண்டிய விஷயங்களைக் குடும்பமாகச் சிந்தித்தோம். ஏழு வயது இருக்கும்போது எனக்கு ஒரு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது; சிறுநீர் கழிப்பதற்காக என் உடம்பில் செயற்கை திறப்பு ஒன்று போடப்பட்டது. 14 வயதானபோது காக்காய்வலிப்பும் வந்தது. பள்ளிக்கூடம் வெகு தூரத்தில் இருந்ததாலும் எனக்கு விசேஷ கவனிப்பு தேவைப்பட்டதாலும் பள்ளிப் படிப்பைத் தொடர முடியவில்லை.

இருந்தாலும் யெகோவாவோடுள்ள என் பந்தத்தைப் பலப்படுத்திக்கொள்ளத் தீர்மானித்தேன். என் தாய் மொழியான ஆப்பிரிக்கான்ஸில் நிறைய பிரசுரங்கள் அப்போது இல்லை; எல்லாமே ஆங்கிலத்தில்தான் இருந்தன. அதனால், அவற்றைப் படிக்க ஆங்கிலம் கற்றுக்கொண்டேன். பிரஸ்தாபி ஆனேன்; பிறகு 19 வயதில் ஞானஸ்நானம் எடுத்தேன். அடுத்த நான்கு வருடங்களில் நிறைய உடல்நல பிரச்சினைகள் வந்தன, மனதளவிலும் ரொம்பவே கஷ்டப்பட்டேன். எங்கள் ஊரிலிருந்த எல்லோரையும் எனக்கு நன்றாகத் தெரிந்திருந்ததால் அவர்கள் ஏதாவது சொல்லிவிடுவார்களோ என்று பயந்து ஊழியத்தில் அதிகம் ஈடுபடவில்லை.

நான் 20 வயதைக் கடந்த பிறகு நமிபியாவிலிருந்து தென் ஆப்பிரிக்காவுக்குக் குடிமாறினோம். அங்குதான் முதல் முறையாக ஒரு சபைக்குப் போனேன். எவ்வளவு சந்தோஷமாக இருந்தது! மறுபடியும் ஒரு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது, மலம் கழிப்பதற்காக பெருங்குடல் பகுதியில் செயற்கை திறப்பு போடப்பட்டது.

சில காலத்திற்குப் பிறகு பயனியர் ஊழியம் பற்றி வட்டாரக் கண்காணி ஒருவர் கொடுத்த பேச்சைக் கேட்டேன். அவர் சொன்ன குறிப்புகள் என் இதயத்தைத் தொட்டன. பயனியர் ஊழியம் செய்யுமளவுக்கு நல்ல ஆரோக்கியம் எனக்கு இல்லை என்பது தெரியும், இருந்தாலும் எனக்கு வந்த கஷ்டங்களிலும் யெகோவா எப்படி உதவியிருக்கிறார் என்பதை அனுபவத்தில் உணர்ந்திருக்கிறேன். அதனால் ஒழுங்கான பயனியருக்காக விண்ணப்பித்தேன். என்னுடைய உடல்நல பிரச்சினைகளின் காரணமாக என் விண்ணப்பத்தை ஏற்றுக்கொள்ள மூப்பர்கள் யோசித்தார்கள்.

ஆனால், ஊழியத்தில் என்னாலான சிறந்ததைச் செய்யத் தீர்மானித்தேன். என் அம்மாவும் மற்றவர்களும் கைகொடுத்ததால் ஆறு மாத காலத்தில் பயனியர் ஊழியத்திற்கான மணி நேரத்தை எட்டினேன். பயனியர் ஊழியம் செய்யத் தீர்மானமாய் இருந்ததை இது காட்டியது; என் உடல்நல பிரச்சினைகளை என்னால் சமாளிக்க முடியும் என்பதையும் காட்டியது. மறுபடியும் விண்ணப்பித்தேன். இந்த முறை ஏற்றுக்கொள்ளப்பட்டது. செப்டம்பர் 1, 1988-ல் ஒரு ஒழுங்கான பயனியர் ஆனேன்.

ஒரு பயனியராக எனக்கு எப்போதும் யெகோவாவின் ஆதரவு இருப்பதை உணர்ந்திருக்கிறேன். என்னுடைய கஷ்டங்களைப் பற்றி யோசிக்காமல் புதியவர்களுக்குச் சத்தியத்தைக் கற்றுக்கொடுப்பதில் குறியாய் இருந்தேன். அது என் மனதுக்கு ஆறுதல் அளித்தது, யெகோவாவோடு உள்ள பந்தத்தைப் பலப்படுத்தவும் உதவியது. நிறையப் பேர் யெகோவாவுக்குத் தங்களை அர்ப்பணித்து ஞானஸ்நானம் எடுக்க உதவியதை நினைத்து சந்தோஷக் கடலில் மிதக்கிறேன்.

என் உடல்நிலை இன்னமும் மோசமாகத்தான் இருக்கிறது. ஆனால், ‘ஒவ்வொரு நாளும் யெகோவா எனக்காக பாரத்தைச் சுமக்கிறார்.’ (சங். 68:19, NW) நான் ஏதோ வேண்டா வெறுப்போடு வாழாமல், யெகோவாவின் உதவியால் வாழ்க்கையை ருசித்து மகிழ்கிறேன்!