Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

தீர்மானங்களை ஞானமாய்ச் செய்யுங்கள்

தீர்மானங்களை ஞானமாய்ச் செய்யுங்கள்

“உன் சுயபுத்தியின்மேல் சாயாமல், உன் முழு இருதயத்தோடும் கர்த்தரில் நம்பிக்கையாயிரு.” —நீதி. 3:5.

1, 2. தீர்மானங்கள் எடுப்பது உங்களுக்குப் பிடிக்குமா, நீங்கள் எடுத்திருக்கும் சில தீர்மானங்களைப் பற்றி எப்படி உணருகிறீர்கள்?

 தீர்மானங்கள்! எத்தனை எத்தனை தீர்மானங்களை நம் அன்றாட வாழ்க்கையில் எடுக்க வேண்டியிருக்கிறது! நீங்கள் எடுக்க வேண்டிய தீர்மானங்களைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? சிலர் எல்லாவற்றையும் தாங்களே தீர்மானிக்க விரும்புகிறார்கள். தீர்மானம் எடுக்க தங்களுக்கு உரிமை இருக்கிறது எனச் சொல்கிறார்கள்; தங்களுக்காக மற்றவர்கள் தீர்மானம் எடுப்பதை விரும்புவதே இல்லை. இன்னும் சிலர், தினந்தோறும் எடுக்க வேண்டிய தீர்மானங்களைத் தவிர வேறெதையும் எடுக்கப் பயப்படுகிறார்கள். மற்றவர்கள் புத்தகங்களையோ ஆலோசகர்களையோ நாடுகிறார்கள், தங்களுக்குத் தேவையான அறிவுரையைப் பெற பணத்தையும் வாரியிறைக்கிறார்கள்.

2 நம்மில் பெரும்பாலோர் இதில் ஏதோவொரு வகையைச் சேர்ந்தவர்களாக இருப்போம். சில தீர்மானங்களை எடுக்கிற உரிமை நம் கையில் இல்லை, அவற்றைக் குறித்து நாம் ஒன்றும் செய்ய முடியாது; அதேசமயத்தில், வாழ்க்கையில் பல தீர்மானங்களை நம் சொந்த விருப்புவெறுப்புகளின்படி எடுக்க முடியும். (கலா. 6:5) ஆனாலும், நாம் எடுக்கும் எல்லாத் தீர்மானங்களும் சரியாக இருக்கும் என்றோ நல்ல பலனைத் தரும் என்றோ சொல்ல முடியாது.

3. தீர்மானங்கள் எடுப்பது சம்பந்தமாக நமக்கு என்ன உதவி இருக்கிறது, ஆனாலும் என்ன சவால் இருக்கிறது?

3 முக்கியமான கட்டங்களில் நாம் எப்படித் தீர்மானம் எடுக்க வேண்டுமென்பதற்கு யெகோவா திட்டவட்டமான அறிவுரைகளைக் கொடுத்திருக்கிறார். அதற்காக நாம் எவ்வளவு சந்தோஷப்படலாம்! யெகோவாவின் அறிவுரைகளைப் பின்பற்றினால் அவருக்குப் பிரியமான தீர்மானங்களை... நமக்கு நன்மை தரும் தீர்மானங்களை... எடுப்போம். ஆனால், சில விஷயங்களுக்கு பைபிளில் தெளிவான அறிவுரைகள் இல்லை. அப்படிப்பட்ட சந்தர்ப்பங்களில் என்ன தீர்மானம் எடுப்போம்? உதாரணத்துக்கு, திருடக் கூடாது என்று நமக்குத் தெரியும். (எபே. 4:28) ஆனால், ஒருவர் செய்தது திருட்டா இல்லையா என எதை வைத்து முடிவு செய்வது? பொருளின் மதிப்பை வைத்தா, அவருடைய உள்ளெண்ணத்தை வைத்தா, அல்லது வேறெதையாவது வைத்தா? தெளிவான எந்தச் சட்டமும் இல்லாதபட்சத்தில் நாம் எப்படித் தீர்மானம் எடுப்போம்? எது நமக்கு வழிகாட்டும்?

தெளிந்த புத்தியுடன் தீர்மானம் எடுங்கள்

4. ஒரு தீர்மானத்தை எடுக்கும்போது நமக்கு என்ன ஆலோசனை கிடைத்திருக்கலாம்?

4 நீங்கள் முக்கியமான ஒரு தீர்மானம் எடுக்கப்போவதாகச் சக கிறிஸ்தவரிடம் சொல்லும்போது, தெளிந்த புத்தியோடு தீர்மானம் எடுக்கும்படி அவர் சொல்லலாம். அது நல்ல ஆலோசனைதான். ஏனென்றால், அவசரப்பட்டு தீர்மானம் எடுக்கக் கூடாதென பைபிள் நம்மை எச்சரிக்கிறது: ‘பதறுகிறவனுடைய நினைவுகள் தரித்திரத்துக்கு ஏதுவாகும்.’ (நீதி. 21:5) ஆனால், தெளிந்த புத்தியுடன் தீர்மானம் எடுப்பது என்றால் என்ன? நிதானமாக... நியாயமாக... விவேகமாக... எல்லாவற்றையும் சீர்தூக்கிப் பார்த்து முடிவெடுப்பதா? நல்ல தீர்மானம் எடுக்க இவையெல்லாம் முக்கியம்தான். ஆனால், தெளிந்த புத்தியுடன் தீர்மானம் எடுக்க இவை மட்டுமே போதாது.—ரோ. 12:3; 1 பே. 4:7.

5. பரிபூரணமான கருத்தில் பார்த்தால், நமக்கு ஏன் தெளிந்த புத்தி இல்லை?

5 பரிபூரணமான கருத்தில் பார்த்தால், நாம் யாருமே தெளிந்த புத்தியுடன் பிறக்கவில்லை. நாம் எல்லோருமே பாவிகளாக, அபூரணர்களாக இருப்பதால் பரிபூரண உடலோ மனமோ யாருக்கும் கிடையாது. (சங். 51:5; ரோ. 3:23) அதுமட்டுமல்ல, யெகோவாவையும் அவரது நெறிமுறைகளையும் அறிந்துகொள்வதற்கு முன்பு நம்மில் பலருடைய மனக்கண்களைச் சாத்தான் ‘குருடாக்கியிருந்தான்.’ (2 கொ. 4:4; தீத். 3:3) ஆகவே, ஒருவர் தனக்கு நல்லதாக, நியாயமாக படுகிற விஷயங்களை மட்டுமே வைத்து தீர்மானம் செய்தால்... எவ்வளவுதான் யோசித்து செய்தாலும்... அது தவறாகிப்போகலாம்.—நீதி. 14:12.

6. தெளிந்த புத்தியை வளர்த்துக்கொள்ள என்ன செய்ய வேண்டும்?

6 நாம் உடலிலும் மனதிலும் பரிபூரணராக இல்லாவிட்டாலும், நம் பரலோகத் தகப்பனாகிய யெகோவா எல்லா விதத்திலும் பரிபூரணராக இருக்கிறார். (உபா. 32:4) சிந்திக்கும் முறையை நாம் மாற்றிக்கொள்ளவும் தெளிந்த புத்தியை வளர்த்துக்கொள்ளவும் அவர் நமக்கு உதவி செய்கிறார். (2 தீமோத்தேயு 1:7-ஐ வாசியுங்கள்.) கிறிஸ்தவர்களாகிய நாம் நியாயமாகச் சிந்தித்துச் செயல்பட வேண்டும். நம்முடைய யோசனைகளையும் உணர்ச்சிகளையும் கட்டுப்படுத்தி யெகோவாவைப் போல் யோசிக்கவும் உணரவும் செயல்படவும் வேண்டும்.

7, 8. மற்றவர்களால் வரும் அழுத்தங்கள் மத்தியிலும் தெளிந்த புத்தியோடு தீர்மானம் எடுக்க முடியும் என்பதற்கு ஓர் அனுபவத்தைச் சொல்லுங்கள்.

7 ஓர் உதாரணத்தைக் கவனியுங்கள். வேறு நாடுகளில் குடியேறுகிற சிலர் மத்தியில் ஒரு பழக்கம் நிலவுகிறது. அதாவது, தங்களுக்குப் பிறக்கிற குழந்தையைச் சொந்த நாட்டிலுள்ள உறவினர்களிடம் கொடுத்து வளர்க்கச் சொல்வார்கள். அவர்களோ அந்த நாட்டிலேயே தொடர்ந்து வேலை செய்து பணம் சம்பாதிப்பார்கள். * வெளிநாட்டில் வசித்த ஒரு பெண்ணுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. கிட்டத்தட்ட அந்தச் சமயத்தில்தான் அவள் பைபிளைப் படிக்க ஆரம்பித்தாள், நல்ல முன்னேற்றமும் செய்தாள். ஆனால், குழந்தையைத் தாத்தா-பாட்டியிடம் கொண்டுபோய் விடச்சொல்லி நண்பர்களும் உறவினர்களும் அவளையும் அவள் கணவரையும் வற்புறுத்த ஆரம்பித்தார்கள். என்றாலும், குழந்தையை வளர்க்கும் பொறுப்பைப் பெற்றோருக்குத்தான் கடவுள் கொடுத்திருக்கிறார் என்பதை பைபிள் படிப்பின் மூலம் அந்தப் பெண் புரிந்துகொண்டாள். (சங். 127:4; எபே. 6:4) அநேகருக்குச் சரியாகப் படுகிற பழக்கத்தை அவள் பின்பற்ற வேண்டுமா, அல்லது பணக் கஷ்டத்துக்கோ மற்றவர்களுடைய ஏச்சுப்பேச்சுக்கோ ஆளானாலும் பைபிள் சொல்கிறபடி நடக்க வேண்டுமா? நீங்கள் அவளுடைய இடத்தில் இருந்திருந்தால் என்ன செய்திருப்பீர்கள்?

8 மற்றவர்களிடமிருந்து வந்த அழுத்தத்தால் மன உளைச்சலுக்கு ஆளான அந்தப் பெண், யெகோவாவிடம் உதவி கேட்டு மன்றாடினாள். பைபிள் படிப்பு நடத்தியவரிடமும் சபையிலிருந்த மற்றவர்களிடமும் பிரச்சினையைப் பற்றிப் பேசினாள். இந்த விஷயத்தில் யெகோவாவின் கண்ணோட்டத்தைப் புரிந்துகொள்ள ஆரம்பித்தாள். அன்பும் அரவணைப்பும் தேவைப்படுகிற பச்சிளங்குழந்தைகள் பெற்றோரிடமிருந்து பிரிக்கப்படும்போது உணர்ச்சி ரீதியில் எந்தளவு பாதிக்கப்படுவார்கள் என்பதையும் சிந்தித்துப் பார்த்தாள். இந்த விஷயத்தைப் பற்றி பைபிளின் கருத்தை நன்கு சீர்தூக்கிப் பார்த்த பின்பு, குழந்தையை அனுப்புவது சரியல்ல என்ற முடிவுக்கு வந்தாள். சபையிலிருந்த சகோதர சகோதரிகள் ஓடோடி வந்து உதவியதை அவளுடைய கணவர் கவனித்தார். தன் குழந்தை ஆனந்தமாகவும் ஆரோக்கியமாகவும் வளருவதைக்கூட கவனித்தார். பின்பு, அவரும் பைபிளைப் படித்து, தன் மனைவியுடன் கூட்டங்களுக்கு வரத் தொடங்கினார்.

9, 10. தெளிந்த புத்தியோடு நடந்துகொள்வது என்றால் என்ன, நாம் எவ்வாறு தெளிந்த புத்தியோடு நடந்துகொள்ளலாம்?

9 இது ஓர் உதாரணம்தான். ஆனாலும், தெளிந்த புத்தியோடு நடந்துகொள்வது என்றால் என்ன என்பதைப் புரிந்துகொள்ள உதவுகிறது. ஆம், நமக்கோ மற்றவர்களுக்கோ நியாயமாக அல்லது வசதியாகத் தோன்றுவதைச் செய்வது அல்ல என்பதைப் புரிந்துகொள்ள உதவுகிறது. நம்முடைய அபூரண மனமும் இருதயமும், மிக வேகமாக அல்லது மிக மெதுவாக ஓடுகிற கடிகாரத்தைப் போன்றது. அதை நம்பினோம் என்றால் பெரிய பிரச்சினைகளில் மாட்டிக்கொள்வோம். (எரே. 17:9) ஆகவே, நம் மனதையும் இருதயத்தையும் கடவுளுடைய நம்பகமான நெறிமுறைகளுக்கு இசைவாக சரிசெய்துகொள்ள வேண்டும்.ஏசாயா 55:8, 9-ஐ வாசியுங்கள்.

10 நல்ல காரணத்தோடுதான் பைபிள் இவ்வாறு அறிவுரை தருகிறது: ‘உன் சுயபுத்தியின்மேல் சாயாமல், உன் முழு இருதயத்தோடும் யெகோவாவில் நம்பிக்கையாயிருந்து, உன் வழிகளிலெல்லாம் அவரை நினைத்துக்கொள்; அப்பொழுது அவர் உன் பாதைகளைச் செவ்வைப்படுத்துவார்.’ (நீதி. 3:5, 6) ‘சுயபுத்தியின்மேல் சாயாதே’ என்ற வார்த்தைகளைக் கவனியுங்கள். அதற்கு அடுத்ததாக, ‘யெகோவாவை நினைத்துக்கொள்’ என்று சொல்லப்பட்டிருக்கிறது. அவருக்குத்தான் பரிபூரணமான கருத்தில் தெளிந்த மனம் இருக்கிறது. ஆகவே, நாம் எந்தவொரு தீர்மானம் எடுப்பதற்கு முன்பும் கடவுளுடைய கருத்தைத் தெரிந்துகொள்ள பைபிளை எடுத்துப் பார்க்க வேண்டும். அதன் அடிப்படையில் தீர்மானம் எடுக்க வேண்டும். அப்போதுதான், தெளிந்த புத்தியுடன் நடந்துகொள்கிறோம்... யெகோவா யோசிக்கும் விதமாக யோசிக்கிறோம்... என்று சொல்ல முடியும்.

பகுத்தறியும் திறன்களைப் பயிற்றுவியுங்கள்

11. ஞானமான தீர்மானம் எடுக்க ஒருவர் என்ன செய்ய வேண்டும்?

11 ஞானமான தீர்மானம் எடுக்கக் கற்றுக்கொள்வதும் அதை நிறைவேற்றுவதும் அவ்வளவு சுலபம் அல்ல. அதுவும், புதிதாய்ச் சத்தியத்துக்கு வந்திருப்பவர்களுக்கு அல்லது ஆன்மீக முதிர்ச்சியை நோக்கி முன்னேற ஆரம்பித்திருப்பவர்களுக்கு இது கஷ்டம். என்றாலும், ஆன்மீக ரீதியில் குழந்தையாக இருக்கிற இவர்களால் நல்ல முன்னேற்றம் செய்ய முடியும். ஒரு குழந்தை எப்படி நடை பயில்கிறது என்பதைச் சிந்தித்துப் பாருங்கள். சிறுசிறு அடிகளாக எடுத்து வைத்துத்தான், அதுவும் திரும்பத்திரும்ப நடந்து பார்த்துத்தான், நடை பயில்கிறது. ஆன்மீக ரீதியில் குழந்தைகளாக இருக்கிறவர்களும் ஞானமான தீர்மானங்களை எடுப்பதற்கு அதுபோலத்தான் செய்ய வேண்டும். ஆன்மீக முதிர்ச்சியுள்ளவர்கள் ‘நன்மை எது, தீமை எது எனக் கண்டறிய தங்களுடைய பகுத்தறியும் திறன்களைப் பயன்படுத்திப் பயிற்றுவித்திருக்கிறார்கள்’ என்று அப்போஸ்தலன் பவுல் குறிப்பிட்டார். “பயன்படுத்தி,” “பயிற்றுவி” என்ற இரண்டு வார்த்தைகளுமே நாம் திரும்பத்திரும்ப முயற்சி செய்துகொண்டே இருக்க வேண்டும் என்பதைக் காட்டுகின்றன. ஆகவே, ஞானமான தீர்மானம் எடுக்க புதியவர்கள் தொடர்ந்து முயற்சி செய்ய வேண்டும்.எபிரெயர் 5:13, 14-ஐ வாசியுங்கள்.

அன்றாட விஷயங்களில் சரியான தீர்மானம் எடுக்கும்போது நம் பகுத்தறியும் திறன்களைப் பயிற்றுவிக்கிறோம் (பாரா 11)

12. ஞானமான தீர்மானங்களை எடுக்க நாம் எப்படிக் கற்றுக்கொள்ளலாம்?

12 முன்பே பார்த்தபடி, சிறிய விஷயமாக இருந்தாலும்சரி பெரிய விஷயமாக இருந்தாலும்சரி, எத்தனையோ விஷயங்களில் ஒவ்வொரு நாளும் நாம் தீர்மானம் எடுக்க வேண்டியிருக்கிறது. நம்முடைய 40 சதவீத செயல்கள் தீர யோசித்துச் செய்யப்படாமல் ஊறிப்போன பழக்கங்களால் செய்யப்படுகின்றன என ஓர் ஆராய்ச்சி காட்டுகிறது. உதாரணத்துக்கு, என்ன டிரஸ் போடுவது எனத் தினமும் காலையில் தீர்மானிக்க வேண்டும். இது ஒரு சின்ன விஷயம்... இதைப் பற்றியெல்லாம் அதிகம் யோசிக்க வேண்டியதில்லை... என்று நீங்கள் நினைக்கலாம், அதுவும் அவசரத்தில் இருக்கும்போது. ஆனால், யெகோவாவின் ஊழியர்களுக்குப் பொருத்தமான உடையைத்தான் உடுத்துகிறீர்களா என்பதைச் சிந்தித்துப் பார்ப்பது முக்கியம். (2 கொ. 6:3, 4) துணி வாங்கக் கடைக்குப் போகும்போது லேட்டஸ்ட் ஸ்டைலைப் பற்றி நீங்கள் யோசிக்கலாம். ஆனால், அது அடக்கமாக இருக்கிறதா, உங்கள் பட்ஜெட்டுக்கு ஒத்துவருகிறதா என்றும் யோசித்துப் பார்க்கிறீர்களா? இப்படிப்பட்ட சிறு விஷயங்களில் நல்ல தீர்மானம் எடுப்பது நம் பகுத்தறியும் திறன்களைப் பயிற்றுவிக்க உதவும். அதுமட்டுமல்ல, பெரிய விஷயங்களில்கூட சரியான தீர்மானத்தை எடுக்க உதவும்.—லூக். 16:10; 1 கொ. 10:31.

சரியானதைச் செய்வதற்கு விருப்பத்தை வளர்த்துக்கொள்ளுங்கள்

13. எடுத்த தீர்மானத்தை அப்படியே நிறைவேற்ற எது கைகொடுக்கும்?

13 சரியான தீர்மானம் எடுக்க வேண்டியது ஒரு சவால் என்றால், எடுத்த தீர்மானத்தை அப்படியே நிறைவேற்றுவது மற்றொரு சவால். உதாரணமாக, புகைபிடிப்பதை நிறுத்த வேண்டுமெனச் சிலர் விரும்புகிறார்கள், ஆனால் அந்த விருப்பம் அந்தளவுக்குப் பலமாக இருப்பதில்லை. எடுத்த தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டுமென்ற மனவுறுதி தேவை. நம்முடைய மனபலம் உடல் தசையைப் போன்றது எனச் சிலர் நினைக்கிறார்கள். எந்தளவுக்கு அதைப் பயன்படுத்துகிறோமோ அந்தளவுக்கு அது வலுவடைகிறது. அதை எப்போதாவது மட்டுமே பயன்படுத்தினால் பலவீனமாகிவிடும் அல்லது தளர்ந்துவிடும். எனவே, நாம் எடுத்த தீர்மானத்தை அப்படியே நிறைவேற்றுவதற்கான மன விருப்பத்தை வளர்த்துக்கொள்ள எது கைகொடுக்கும்? உதவிக்காக யெகோவாவைச் சார்ந்திருப்பது கைகொடுக்கும்.பிலிப்பியர் 2:13-ஐ வாசியுங்கள்.

14. எதைச் செய்ய வேண்டுமோ அதைச் செய்ய பவுலுக்கு எப்படிப் பலம் கிடைத்தது?

14 இதைத் தன்னுடைய சொந்த அனுபவத்தில் பவுல் அறிந்துகொண்டார். அவர் ஒருமுறை இப்படிப் புலம்பினார்: “நன்மை செய்யும் விருப்பம் எனக்குள் இருக்கிறது, ஆனால் நன்மை செய்யத்தான் எனக்கு முடியவில்லை.” அவர் என்ன செய்ய விரும்பினார் அல்லது என்ன செய்ய வேண்டும் என்பது அவருக்குத் தெரிந்திருந்தது, ஆனால் அதைச் செய்ய விடாமல் ஏதோவொன்று சிலசமயங்களில் அவரைத் தடுத்தது. அதனால் அவர் இவ்வாறு ஒத்துக்கொண்டார்: “கடவுளுடைய சட்டத்தைக் குறித்து என் உள்ளத்தின் ஆழத்தில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். ஆனால், என் மனதின் சட்டத்திற்கு விரோதமாய்ப் போராடுகிற வேறொரு சட்டம் என் உடலுறுப்புகளில் இருப்பதைக் காண்கிறேன்; என் உடலுறுப்புகளில் உள்ள பாவத்தின் சட்டமாகிய அது என்னைச் சிறைபிடித்து வைத்திருக்கிறது.” என்றாலும், அவர் நம்பிக்கையற்ற நிலையில் இருந்தாரா? இல்லவே இல்லை. “எஜமானராகிய இயேசு கிறிஸ்துவின் மூலம் கடவுளுக்கு நன்றி!” என்று சொன்னார். (ரோ. 7:18, 22-25) “என்னைப் பலப்படுத்துகிற கடவுள் மூலமாக எல்லாவற்றையும் செய்ய எனக்குப் பலம் உண்டு” என்றும் மற்றொரு இடத்தில் எழுதினார்.—பிலி. 4:13.

15. நாம் ஏன் சரியான தீர்மானமெடுத்து அதை அப்படியே நிறைவேற்ற வேண்டும்?

15 நாம் கடவுளைப் பிரியப்படுத்த வேண்டுமென்றால் சரியான தீர்மானமெடுத்து அதை அப்படியே நிறைவேற்றுவது அவசியம். கர்மேல் மலையில் பாகால் பக்தர்களிடமும் விசுவாசதுரோக இஸ்ரவேலர்களிடமும் எலியா சொன்ன வார்த்தைகளை ஞாபகப்படுத்திப் பாருங்கள்; ‘நீங்கள் எந்தமட்டும் இரண்டு நினைவுகளால் குந்திக்குந்தி நடப்பீர்கள்; யெகோவா தெய்வமானால் அவரைப் பின்பற்றுங்கள்; பாகால் தெய்வமானால் அவனைப் பின்பற்றுங்கள்’ என்று அவர் சொன்னார். (1 இரா. 18:21) என்ன செய்ய வேண்டுமென்பதை இஸ்ரவேல் மக்கள் அறிந்திருந்தார்கள்; ஆனால் அவர்கள் “குந்திக்குந்தி” நடந்தார்கள், அதாவது இருமனதாய் இருந்தார்கள். இதற்கு நேர்மாறாக, சில வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த யோசுவா சிறந்த முன்மாதிரி வைத்தார். அவர் இஸ்ரவேலரிடம் இவ்வாறு சொன்னார்: ‘யெகோவாவைச் சேவிக்கிறது உங்கள் பார்வைக்கு ஆகாததாய்க் கண்டால், பின்னை யாரைச் சேவிப்பீர்கள் என்று இன்று தெரிந்துகொள்ளுங்கள்; . . . நானும் என் வீட்டாருமோவென்றால், யெகோவாவையே சேவிப்போம்.’ (யோசு. 24:15) அவர் மனவுறுதியுடன் செயல்பட்டதால் என்ன பலன் கிடைத்தது? யோசுவாவும் அவருடன் நிலைத்திருந்தவர்களும் வாக்குப்பண்ணப்பட்ட தேசத்திற்குள்... ‘பாலும் தேனும் ஓடுகிற தேசத்திற்குள்’... நுழையும் பாக்கியத்தைப் பெற்றார்கள்.—யோசு. 5:6.

ஞானமான தீர்மானமெடுங்கள், ஆசீர்வாதம் பெறுங்கள்

16, 17. கடவுளுடைய சித்தத்துக்கு இசைவாக தீர்மானம் எடுப்பதால் கிடைக்கும் நன்மைகளை உதாரணத்தோடு விளக்குங்கள்.

16 நவீனகால உதாரணம் ஒன்றைக் கவனியுங்கள். புதிதாய் ஞானஸ்நானம் பெற்ற சகோதரர் ஒருவர் திருமணமானவர். அவருக்கு மூன்று சிறுபிள்ளைகள். ஒருநாள் அவருடைய சக பணியாளர் அவரிடம், அதிக சம்பளமும் நிறைய சலுகைகளும் கொடுக்கிற வேறொரு கம்பெனியில் சேர்ந்துகொள்ளலாமென ஆலோசனை சொன்னார். இந்த விஷயத்தைப் பற்றி நம்முடைய சகோதரர் யோசித்துப் பார்த்தார், ஜெபம் செய்தார். இப்போதுள்ள வேலையில் நல்ல சம்பளம் கிடைக்காவிட்டாலும் சனி ஞாயிறுகளில் விடுமுறை கிடைக்கும் என்பதால்தான் அதை அவர் தேர்ந்தெடுத்திருந்தார். அவரால் குடும்பத்துடன் கூட்டங்களுக்குச் செல்ல முடிந்தது, ஊழியத்திலும் கலந்துகொள்ள முடிந்தது. ஆனால், புதிய வேலையைத் தேர்ந்தெடுத்தால் இதையெல்லாம் செய்ய முடியாது... குறைந்தபட்சம் சில காலத்திற்காவது செய்ய முடியாது... என்பதை அவர் சிந்தித்துப் பார்த்தார். இதுபோன்ற சூழ்நிலையில் நீங்கள் என்ன செய்திருப்பீர்கள்?

17 ஆன்மீகப் பலன்களா அதிக சம்பளமா என்பதைச் சீர்தூக்கிப் பார்த்து, அந்தப் புதிய வேலையை வேண்டாமென அவர் நிராகரித்துவிட்டார். அப்படியொரு தீர்மானம் எடுத்ததற்காக அவர் வருத்தப்பட்டாரா? துளிகூட இல்லை! அதிக சம்பளத்தைவிட ஆன்மீக ஆசீர்வாதங்கள்தான் தனக்கும் தன் குடும்பத்துக்கும் முக்கியமென உணர்ந்தார். பத்து வயதான அவரது மூத்த மகள் தன் பெற்றோரிடம், “எனக்கு உங்கள பிடிச்சிருக்கு, சகோதர சகோதரிகள பிடிச்சிருக்கு, யெகோவாவை ரொம்பவே பிடிச்சிருக்கு. என்னோட வாழ்க்கைய யெகோவாவுக்கு அர்ப்பணிச்சு ஞானஸ்நானம் எடுக்க விரும்புறேன்” என்று சொன்னாள். இதைக் கேட்டபோது அவரும் அவருடைய மனைவியும் உச்சி குளிர்ந்துபோனார்கள். தன்னுடைய தகப்பன் சிறந்த முன்மாதிரி வைத்ததை... யெகோவாவின் வழிபாட்டுக்கு முதலிடம் கொடுத்ததை... பார்த்து அந்தப் பெண் எவ்வளவாய் பயனடைந்திருக்கிறாள்!

ஞானமான தீர்மானங்கள் எடுங்கள், கடவுளுடைய மக்களோடு சந்தோஷமாக இருங்கள் (பாரா 18)

18. அனுதினமும் ஞானமான தீர்மானங்களை எடுப்பது ஏன் முக்கியம்?

18 இஸ்ரவேலரை மோசே வனாந்தரத்தில் வழிநடத்தியது போல யெகோவாவின் மக்களைப் பெரிய மோசே இயேசு கிறிஸ்து இந்தச் சாத்தானிய உலகத்தில் பல பத்தாண்டுகளாய் வழிநடத்தி வந்திருக்கிறார். பெரிய யோசுவாவாகிய இயேசு இந்தப் பொல்லாத உலகை அழித்து நீதி தவழும் புதிய பூமிக்குள் தம் சீடர்களை வழிநடத்த தயாராய் இருக்கிறார். (2 பே. 3:13) ஆகவே, நம் பழைய யோசனைகளுக்கும் பழக்கவழக்கங்களுக்கும் நெறிமுறைகளுக்கும் லட்சியங்களுக்கும் திரும்பிப்போவதற்கு இது காலமல்ல, நமக்காகக் கடவுள் வைத்திருக்கிற சித்தத்தை இன்னும் தெளிவாய் உணர்ந்துகொள்வதற்குரிய காலம். (ரோ. 12:2; 2 கொ. 13:5) கடவுள் தரும் ஆசீர்வாதங்களை என்றென்றும் பெற நீங்கள் தகுதியுள்ளவர் என்பதை அனுதினமும் உங்கள் தீர்மானங்கள் காட்டுவதாக!எபிரெயர் 10:38, 39-ஐ வாசியுங்கள்.

^ இந்தப் பழக்கம் கடைப்பிடிக்கப்படுவதற்கு இன்னொரு காரணம், தாத்தா-பாட்டிமார் தங்கள் பேரக்குழந்தைகளை நண்பர்களிடமும் உறவினர்களிடமும் காட்டிப் பெருமைப்படுவதற்காகும்.