Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

யெகோவாவின் நினைப்பூட்டுதல்கள் நம்பகமானவை

யெகோவாவின் நினைப்பூட்டுதல்கள் நம்பகமானவை

“யெகோவாவின் நினைப்பூட்டுதல் நம்பகமானது, அனுபவமில்லாதவரை ஞானியாக்குகிறது.” —சங். 19:7, NW.

1. நம்முடைய கூட்டங்களில் என்ன விஷயங்களைப் பற்றி அடிக்கடி படிக்கிறோம், இதனால் நாம் எப்படி நன்மை அடைகிறோம்?

 காவற்கோபுர படிப்புக்காகத் தயாரிக்கும்போது, ‘இதே விஷயத்தை இதற்குமுன் படித்திருக்கிறோமே’ என எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? நீங்கள் சில காலமாகவே யெகோவாவின் சாட்சிகளுடைய கூட்டங்களுக்கு வருகிறவர் என்றால் சில விஷயங்கள் திரும்பத் திரும்ப கலந்தாலோசிக்கப்படுவதை கவனித்திருப்பீர்கள். உதாரணமாக, அன்பு, விசுவாசம் போன்ற குணங்களையும் கடவுளுடைய அரசாங்கம், மீட்கும் பொருள், பிரசங்க வேலை போன்ற விஷயங்களையும் பற்றி அடிக்கடி படிக்கிறோம். இவற்றைப் பற்றி மீண்டும் மீண்டும் படிப்பது நம்முடைய விசுவாசத்தைப் பலப்படுத்துகிறது, ‘தேவ வார்த்தையைக் கேட்கிறவர்களாக மட்டுமல்லாமல், அந்த வார்த்தையின்படி செய்கிறவர்களாகவும் இருக்க’ உதவுகிறது.—யாக். 1:22.

2. (அ) கடவுளுடைய நினைப்பூட்டுதல்கள் எதையெல்லாம் குறிக்கின்றன? (ஆ) கடவுளுடைய சட்டங்கள் எப்படி மனிதனுடைய சட்டங்களிலிருந்து வேறுபடுகின்றன?

2 “நினைப்பூட்டுதல்” என மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் எபிரெய பெயர்ச்சொல் பொதுவாக, கடவுள் தம்முடைய மக்களுக்குக் கொடுத்த சட்டங்களை, கட்டளைகளை, நெறிமுறைகளை குறிக்கிறது. மனித சட்டங்களை அடிக்கடி மாற்றியமைக்க வேண்டியிருக்கும் அல்லது திருத்த வேண்டியிருக்கும்; ஆனால், கடவுளுடைய சட்டங்களை எப்போதும் நம்பலாம். பண்டைய காலத்தில் கடவுள் கொடுத்த சில சட்டங்களை நாம் இன்று பின்பற்றுவதில்லை என்பது உண்மைதான். அதற்காக, அந்தச் சட்டங்களில் குறை இருக்கிறது என்று அர்த்தமில்லை. ஏனென்றால், “உம்முடைய நினைப்பூட்டுதல்கள் என்றைக்கும் நீதியானவை” என சங்கீதக்காரன் பாடினார்.—சங். 119:144, NW.

3, 4. (அ) யெகோவாவின் நினைப்பூட்டுதல்களில் எதுவும் உட்படுகிறது? (ஆ) இஸ்ரவேலர்கள் அதற்குக் கீழ்ப்பட்டிருந்தால் எப்படிப் பயனடைந்திருப்பார்கள்?

3 சிலசமயம் யெகோவாவின் நினைப்பூட்டுதல்களில் எச்சரிக்கைகளும் இருப்பதைக் கவனிக்கிறோம். தீர்க்கதரிசிகள் மூலம் இஸ்ரவேலர்களை கடவுள் அடிக்கடி எச்சரித்தார். உதாரணத்திற்கு, வாக்குப்பண்ணப்பட்ட தேசத்திற்குள் இஸ்ரவேலர் நுழைவதற்கு சற்றுமுன் “உங்கள் இருதயம் வஞ்சிக்கப்படாமலும், நீங்கள் வழிவிலகி அந்நிய தேவர்களைச் சேவித்து அவர்களை நமஸ்கரியாமலும் இருக்கும்படி எச்சரிக்கையாயிருங்கள். இல்லாவிடில் கர்த்தருடைய கோபம் உங்கள்மேல்” மூளும் என்று சொல்லி மோசே அவர்களை எச்சரித்தார். (உபா. 11:16, 17) கடவுள், தம்முடைய மக்களுக்குக் கொடுத்த ஏராளமான மற்ற நினைப்பூட்டுதல்களைப் பற்றியும் பைபிளில் வாசிக்கிறோம்.

4 இஸ்ரவேலர்கள் தமக்குப் பயப்படவும் கீழ்ப்படியவும் தமது பெயரைப் பரிசுத்தப்படுத்தவும் வேண்டுமென யெகோவா பலமுறை அவர்களுக்கு நினைப்பூட்டினார். (உபா. 4:29-31; 5:28, 29) அந்த நினைப்பூட்டுதல்களுக்கு அவர்கள் கீழ்ப்படிந்திருந்தால், நிச்சயம் அநேக ஆசீர்வாதங்களைப் பெற்றிருப்பார்கள்.—லேவி. 26:3-6; உபா. 28:1-4.

கடவுளின் நினைப்பூட்டுதல்களுக்கு இஸ்ரவேலர்கள் பிரதிபலித்த விதம்

5. எசேக்கியா ராஜாவுக்காக யெகோவா ஏன் போரிட்டார்?

5 இஸ்ரவேலர்களின் காலம் முழுவதிலும், கடவுள் தாம் கொடுத்த வாக்குறுதிக்கு உண்மையாக நடந்துகொண்டார். உதாரணத்திற்கு, எசேக்கியா ராஜாவை வீழ்த்துவதற்கு அசீரிய ராஜாவான சனகெரிப் யூதாமீது படையெடுத்து வந்தபோது, யெகோவா தம் மக்களுக்கு உதவ ஒரு தூதனை அனுப்பினார். அந்தத் தூதன் அசீரிய படையிலிருந்த “சகல பராக்கிரமசாலிகளையும்” ஒரே இரவில் அழித்துப்போட்டார். சனகெரிப் பெருத்த அவமானத்தோடு வீடு திரும்பினான். (2 நா. 32:21; 2 இரா. 19:35) எசேக்கியா ராஜாவுக்காகக் கடவுள் ஏன் போரிட்டார்? ஏனென்றால், எசேக்கியா ‘கர்த்தரை விட்டுப் பின்வாங்காமல் அவரைச் சார்ந்திருந்து, . . . அவருடைய கற்பனைகளைக் கைக்கொண்டு நடந்தார்.’—2 இரா. 18:1, 5, 6.

யெகோவாவின் நினைப்பூட்டுதல்கள் உண்மை வழிபாட்டின் சார்பாகச் செயல்பட யோசியாவைத் தூண்டின (பாரா 6)

6. யெகோவாமீது தனக்கிருந்த நம்பிக்கையை யோசியா ராஜா எப்படிக் காட்டினார்?

6 யெகோவாவின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து நடந்த மற்றொருவர் யோசியா ராஜா. அவர் தன்னுடைய எட்டு வயதிலிருந்தே ‘கர்த்தருடைய பார்வைக்குச் செம்மையானதைச் செய்து, . . . வலது இடதுபுறமாக விலகாமல் நடந்தார்.’ (2 நா. 34:1, 2) இஸ்ரவேல் தேசத்திலிருந்த எல்லா உருவச்சிலைகளையும் அகற்றினார்; மக்கள் மீண்டும் யெகோவாவை வழிபட உதவினார். இவ்வாறு யெகோவாமீதுள்ள நம்பிக்கையைச் செயலில் காட்டினார். இப்படிச் செய்ததால், யோசியா மட்டுமல்ல, முழு தேசத்தாரும் யெகோவாவின் ஆசீர்வாதத்தைப் பெற்றார்கள்.2 நாளாகமம் 34:31-33-ஐ வாசியுங்கள்.

7. இஸ்ரவேலர்கள் யெகோவாவின் நினைப்பூட்டுதல்களுக்குக் கீழ்ப்படியாமல்போனபோது என்ன நடந்தது?

7 வருத்தகரமாக, யெகோவாவின் மக்கள் எல்லாச் சமயத்திலும் அவருடைய நினைப்பூட்டுதல்கள்மீது முழு நம்பிக்கை வைக்கவில்லை. அவர்கள் அநேக முறை யெகோவாவுக்குக் கீழ்ப்படியாமல் போனார்கள். அவர்களுடைய விசுவாசம் மங்கியபோது, பொய் ‘போதனைகளாகிய பலவித காற்றினால் இங்குமங்கும் அடித்துச் செல்லப்பட்டார்கள்.’ (எபே. 4:13, 14) கடவுளுடைய நினைப்பூட்டுதல்கள்மீது அவர்கள் நம்பிக்கை வைக்காமல்போனபோது, கடவுள் எச்சரித்திருந்தபடி அவருடைய ஆசீர்வாதத்தை இழந்தார்கள்.—லேவி. 26:23-25; எரே. 5:23-25.

8. இஸ்ரவேலர்களுடைய உதாரணத்திலிருந்து நாம் எப்படிப் பயனடையலாம்?

8 இஸ்ரவேலர்களுடைய உதாரணத்திலிருந்து நாம் எப்படிப் பயனடையலாம்? அவர்களைப் போலவே, இன்றுள்ள கடவுளுடைய ஊழியர்கள் ஆலோசனையையும் புத்திமதிகளையும் பெறுகிறார்கள். (2 பே. 1:12) கடவுளுடைய வார்த்தையை வாசிக்கும்போதெல்லாம் அதிலுள்ள விஷயங்கள் நமக்கு நினைப்பூட்டுதலாக இருக்கின்றன. சுயமாகத் தெரிவு செய்யும் திறன் நமக்கு இருப்பதால், யெகோவாவின் அறிவுரைகளுக்குக் கீழ்ப்படிவதா அல்லது நமக்குச் சரியெனத் தோன்றுவதைச் செய்வதா என நாம் தீர்மானிக்கலாம். (நீதி. 14:12) யெகோவாவுடைய நினைப்பூட்டுதல்கள்மீது நாம் ஏன் நம்பிக்கை வைக்கலாம் என்றும் அதற்குக் கீழ்ப்படிவதால் எப்படி நன்மை அடையலாம் என்றும் இப்போது சிந்திக்கலாம்.

வாழ்வு பெற கடவுளுக்குக் கட்டுப்பட்டு நடங்கள்

9. இஸ்ரவேலர்கள் வனாந்தரத்தில் இருந்தபோது யெகோவா அவர்களுக்கு ஆதரவாக இருந்ததை எப்படி நினைப்பூட்டினார்?

9 இஸ்ரவேலர்கள் ‘பயங்கரமான வனாந்தர வழியாக’ 40 வருட பயணத்தை ஆரம்பித்த சமயத்தில், யெகோவா அவர்களை எப்படி வழிநடத்துவார், காப்பாற்றுவார், பராமரிப்பார் போன்ற விவரங்களைக் கொடுக்கவில்லை. இருந்தாலும், அவர்கள் தம்மீது நம்பிக்கை வைத்து தம்முடைய அறிவுரைகளுக்குக் கீழ்ப்படிந்தால் நன்மை அடைவார்கள் என்பதைப் பல விதங்களில் மெய்ப்பித்துக் காட்டினார். வாழ்வுக்கே வழியில்லாத அந்த வனாந்தரத்தில், யெகோவா இஸ்ரவேலர்களுக்கு ஆதரவாக இருந்ததை நினைப்பூட்ட பகலில் மேகஸ்தம்பத்தையும் இரவில் அக்கினிஸ்தம்பத்தையும் பயன்படுத்தி வழிநடத்தினார். (உபா. 1:19; யாத். 40:36-38) அவர்களுடைய அடிப்படைத் தேவைகளையும் கவனித்துக்கொண்டார். “அவர்கள் வஸ்திரங்கள் பழமையாய்ப் போகவுமில்லை, அவர்கள் கால்கள் வீங்கவுமில்லை.” சொல்லப்போனால், ‘அவர்களுக்கு ஒன்றும் குறைவுபடவில்லை.’—நெ. 9:19-21.

10. இன்று தம்முடைய மக்களை யெகோவா எப்படி வழிநடத்துகிறார்?

10 இன்று கடவுளுடைய ஊழியர்களான நாம் நீதியுள்ள புதிய உலகிற்குள் நுழையும் தருவாயில் இருக்கிறோம். ‘மிகுந்த உபத்திரவத்தை’ தப்பிப்பிழைப்பதற்குத் தேவையான எல்லாவற்றையும் யெகோவா கொடுக்கிறார் என்பதில் நமக்கு நம்பிக்கை இருக்கிறதா? (மத். 24:21, 22; சங். 119:40, 41) புதிய உலகத்திற்குள் நம்மை வழிநடத்த யெகோவா மேகஸ்தம்பத்தையோ அக்கினிஸ்தம்பத்தையோ பயன்படுத்துவதில்லை என்பது உண்மைதான். ஆனால், தம்முடைய அமைப்பைப் பயன்படுத்தி நமக்கு நினைப்பூட்டுதல்களைக் கொடுத்து வருகிறார். உதாரணத்திற்கு, தம்மோடுள்ள பந்தத்தைப் பலப்படுத்திக்கொள்வதற்காகத் தனிப்பட்ட பைபிள் வாசிப்பு... குடும்ப வழிபாடு... கூட்டங்களிலும் ஊழியத்திலும் தவறாமல் கலந்துகொள்வது... போன்றவற்றைப் பற்றி அடிக்கடி நினைப்பூட்டுகிறார். இந்த அறிவுரைகளைப் பின்பற்ற நாம் மாற்றங்களைச் செய்திருக்கிறோமா? இப்படிச் செய்வது புதிய உலகில் கால் பதிப்பதற்குத் தேவையான விசுவாசத்தை வளர்த்துக்கொள்ள உதவும்.

நம் ராஜ்ய மன்றங்களைப் பாதுகாப்பாகவும் நல்ல நிலையிலும் வைக்க யெகோவாவின் நினைப்பூட்டுதல்கள் உதவுகின்றன (பாரா 11)

11. நம்முடைய நலனில் அக்கறையாக இருப்பதை கடவுள் எவ்விதங்களில் காட்டுகிறார்?

11 கடவுளோடுள்ள பந்தத்தைப் பலப்படுத்துவதற்கு மட்டுமல்லாமல் அன்றாட வாழ்க்கையில் சரியான தீர்மானங்கள் எடுப்பதற்கும் தேவையான வழிநடத்துதலைக் கடவுளுடைய அமைப்பு கொடுத்து வருகிறது. உதாரணத்திற்கு, பொருள் சம்பந்தப்பட்ட விஷயங்களில் சமநிலையுடன் இருக்கவும் வீண் கவலைகளைக் குறைப்பதற்காக எளிய வாழ்க்கை வாழவும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறோம். ஆடை அலங்காரம் செய்வது, நல்ல பொழுதுபோக்குகளைத் தேர்ந்தெடுப்பது, எந்தளவு கல்வியைப் பெறுவதென தீர்மானிப்பது போன்ற விஷயங்களின் பேரிலும் ஆலோசனைகளைப் பெற்றிருக்கிறோம். நம்முடைய ராஜ்ய மன்றங்கள், வீடு மற்றும் வாகனங்களைப் பாதுகாப்பாக வைப்பது, அவசரநிலை ஏற்பட்டால் அதற்குத் தயாராக இருப்பது பற்றியும் நினைப்பூட்டப்பட்டிருக்கிறோம். நம்முடைய நலனில் கடவுள் அக்கறையாக இருக்கிறார் என்பதை இவை காட்டுகின்றன.

விசுவாசத்தில் நிலைத்திருக்க ஆரம்பகால கிறிஸ்தவர்களுக்கு உதவிய நினைப்பூட்டுதல்கள்

12. (அ) இயேசு எந்த விஷயத்தைப் பற்றி தம் சீடர்களிடம் அடிக்கடி பேசினார்? (ஆ) மனத்தாழ்மை பற்றிய என்ன பாடம் பேதுருவின் மனதில் ஆழமாய்ப் பதிந்தது, இயேசுவின் முன்மாதிரியிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்?

12 முதல் நூற்றாண்டில், கடவுளுடைய ஊழியர்கள் அடிக்கடி நினைப்பூட்டுதல்களைப் பெற்றார்கள். மனத்தாழ்மையை வளர்த்துக்கொள்வதன் அவசியத்தைப் பற்றி இயேசு தம்முடைய சீடர்களிடம் அடிக்கடி பேசினார். அதைப் பற்றி வெறுமென பேசுவதோடு நிறுத்திக்கொள்ளாமல், செயலில் காட்டினார். பூமியில் அவருடைய கடைசி நாளன்று, தம்முடைய அப்போஸ்தலர்களுடன் பஸ்கா பண்டிகைக்காகக் கூடிவந்திருந்தார். அப்போஸ்தலர்கள் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, இயேசு எழுந்துபோய் அவர்களுடைய பாதங்களைக் கழுவினார். இது, வேலைக்காரர் செய்யும் ஒரு வேலை. (யோவா. 13:1-17) இதை இயேசு செய்ததன்மூலம், மறக்கமுடியாத ஒரு வலிமையான பாடத்தை அப்போஸ்தலர்களுக்குக் கற்றுக்கொடுத்தார். அதனால்தான், சுமார் 30 வருடங்களுக்குப் பின் அப்போஸ்தலன் பேதுருவால் தன்னுடைய சக கிறிஸ்தவர்களுக்கு மனத்தாழ்மையைப் பற்றி ஆலோசனை கொடுக்க முடிந்தது. (1 பே. 5:5) இயேசுவின் முன்மாதிரி, மற்றவர்களிடம் மனத்தாழ்மையுடன் நடந்துகொள்ள நம்மையும் தூண்ட வேண்டும்.—பிலி. 2:5-8.

13. முக்கியமான எந்தக் குணத்தை வளர்த்துக்கொள்வது பற்றி இயேசு தம் சீடர்களிடம் பேசினார்?

13 உறுதியான விசுவாசம் எவ்வளவு முக்கியம் என்பதைப் பற்றியும் இயேசு தம்முடைய சீடர்களோடு அடிக்கடி பேசினார். பேய் பிடித்திருந்த ஒரு சிறுவனைச் சீடர்களால் குணப்படுத்த முடியாமல் போனபோது அவர்கள் இயேசுவிடம், “எங்களால் ஏன் அந்தப் பேயை விரட்ட முடியவில்லை?” என்று கேட்டார்கள். அதற்கு இயேசு, “உங்களுக்குக் கடுகளவு விசுவாசம் இருந்தால், . . . உங்களால் முடியாத காரியம் ஒன்றுமே இருக்காது” என்று பதிலளித்தார். (மத். 17:14-20) அவர் தம்முடைய ஊழியக் காலம் முழுவதிலும், விசுவாசத்தின் முக்கியத்துவத்தை சீடர்களுக்குக் கற்றுக்கொடுத்தார். (மத்தேயு 21:18-22-ஐ வாசியுங்கள்.) மாநாடுகளிலும் கூட்டங்களிலும் தவறாமல் கலந்துகொண்டு அங்கே கிடைக்கும் சிறந்த போதனைகள் மூலம் நம் விசுவாசத்தைப் பலப்படுத்திக்கொள்கிறோமா? இவை நமக்கு மனமகிழ்ச்சியைத் தருவதோடு, யெகோவாமீதுள்ள நம்பிக்கையை வெளிக்காட்டுவதற்கான தருணங்களாகவும் இருக்கின்றன.

14. இன்று கிறிஸ்துவைப் போன்ற அன்பை வளர்த்துக்கொள்வது ஏன் முக்கியம்?

14 ஒருவர்மீது ஒருவர் அன்பு காட்டுவதன் அவசியத்தைப் பற்றி கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தில் நிறைய நினைப்பூட்டுதல்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. “உன்மீது நீ அன்பு காட்டுவதுபோல் சக மனிதர்மீதும் அன்பு காட்ட வேண்டும்” என்பதே இரண்டாவது தலைசிறந்த கட்டளை என்று இயேசு சொன்னார். (மத். 22:39) இயேசுவின் ஒன்றுவிட்ட சகோதரனாகிய யாக்கோபு இந்த அன்பை “ராஜ சட்டம்” என்று அழைத்தார். (யாக். 2:8) அப்போஸ்தலன் யோவான் இப்படி எழுதினார்: “அன்புக் கண்மணிகளே, நான் உங்களுக்கு எழுதுவது ஒரு புதிய கட்டளை அல்ல, ஆரம்பத்திலிருந்து நீங்கள் பெற்ற பழைய கட்டளைதான்.” (1 யோ. 2:7, 8) யோவான் எதை “பழைய கட்டளை” என்று சொன்னார்? அன்பு காட்டுவது பற்றிய கட்டளையையே சொன்னார். பல பத்தாண்டுகளுக்கு முன்பே இயேசு இந்தக் கட்டளையைக் கொடுத்திருந்ததால்தான் “ஆரம்பத்திலிருந்து நீங்கள் பெற்ற பழைய” கட்டளை என்று யோவான் குறிப்பிட்டார். அதேசமயம் இதை “புதிய கட்டளை” என்றும் சொன்னார்; அதாவது, புதிய சூழ்நிலைகளைச் சீடர்கள் எதிர்ப்படும்போது சுயதியாக அன்பைக் காட்ட வேண்டியிருக்கும் என்றார். சக மனிதர்மீது அன்பு காட்டுவதைத் தடுக்கும் சுயநல மனப்பான்மை இந்த உலகத்தில் பரவலாகக் காணப்படுகிறது; இயேசுவின் சீடர்களான நாம் மேலே சொல்லப்பட்ட எச்சரிப்புக்கு எவ்வளவு நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்!

15. பூமியில் இயேசுவுக்கு இருந்த மிக முக்கியமான வேலை என்ன?

15 மக்கள் ஒவ்வொருவர்மீதும் இயேசுவுக்கு அக்கறை இருந்தது. அதனால்தான் வியாதிப்பட்டிருந்தவர்களைக் குணப்படுத்தினார், இறந்தவர்களை உயிர்த்தெழுப்பினார். இருந்தாலும், பிரசங்கித்து கற்றுக்கொடுப்பதே அவருடைய மிக முக்கியமான வேலையாக இருந்தது. அது மக்களுக்கு நீண்டகால நன்மைகளைத் தந்தது. எப்படி? அவர் அன்று குணப்படுத்திய... உயிர்த்தெழுப்பிய... எல்லோருமே பிற்பாடு வயதாகி இறந்தார்கள்; ஆனால், அவர் பிரசங்கித்த செய்தியை ஏற்றுக்கொண்டவர்களுக்கு முடிவில்லா வாழ்வைப் பெறும் வாய்ப்பு இருந்தது.—யோவா. 11:25, 26.

16. பிரசங்க வேலையும் சீடராக்கும் வேலையும் இன்று எந்தளவுக்குச் செய்யப்பட்டு வருகிறது?

16 முதல் நூற்றாண்டில் இயேசு ஆரம்பித்து வைத்த பிரசங்க வேலை இன்று பெரியளவில் செய்யப்பட்டு வருகிறது. இயேசு தம் சீடர்களுக்கு இந்தக் கட்டளையைக் கொடுத்தார்: ‘புறப்படுங்கள், எல்லாத் தேசத்தாரையும் சீடர்களாக்குங்கள்.’ (மத். 28:19) அவர்கள் இதைச் செய்தார்கள், நாமும் செய்கிறோம்! 230-க்கும் அதிகமான நாடுகளில் 70 லட்சத்திற்கும் அதிகமான யெகோவாவின் சாட்சிகள் கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய செய்தியை மிகுந்த ஆர்வத்தோடு பிரசங்கித்து வருகிறார்கள், லட்சக்கணக்கானோருக்குத் தவறாமல் பைபிள் படிப்பு நடத்தி வருகிறார்கள். நாம் கடைசி நாட்களில் வாழ்கிறோம் என்பதற்கு இந்தப் பிரசங்க வேலையே மாபெரும் அத்தாட்சி.

யெகோவாவை என்றென்றும் நம்புங்கள்

17. பவுலும் பேதுருவும் என்ன ஆலோசனை கொடுத்தார்கள்?

17 ஆரம்பகால கிறிஸ்தவர்கள் விசுவாசத்தில் உறுதியாய் நிலைத்திருக்க நினைப்பூட்டுதல்கள் அவர்களுக்கு நிச்சயம் உதவின. ரோமில் கைதியாக இருந்த அப்போஸ்தலன் பவுல் தீமோத்தேயுவிடம் இப்படிச் சொன்னார்: “என்னிடமிருந்து நீ கேட்டறிந்த பயனளிக்கும் வார்த்தைகளை மாதிரியாக வைத்து பின்பற்றிக்கொண்டே இரு.” (2 தீ. 1:13) இது தீமோத்தேயுவுக்கு எவ்வளவு உற்சாகத்தை அளித்திருக்குமென சிந்தித்துப் பாருங்கள். சகிப்புத்தன்மை, சகோதர பாசம், சுயக்கட்டுப்பாடு போன்ற பண்புகளை வளர்த்துக்கொள்ளும்படி சக கிறிஸ்தவர்களை அப்போஸ்தலன் பேதுரு உற்சாகப்படுத்திய பிறகு இப்படிச் சொன்னார்: “இவ்விஷயங்களை நீங்கள் அறிந்தவர்களாகவும் கற்றுக்கொண்ட சத்தியத்தில் உறுதிப்பட்டவர்களாகவும் இருக்கிறபோதிலும், இவற்றை உங்களுக்கு நினைப்பூட்ட எப்போதும் தயாராயிருக்கிறேன்.”—2 பே. 1:5-8, 12.

18. முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்கள் நினைப்பூட்டுதல்களை எப்படிக் கருதினார்கள்?

18 ஆம், ‘பரிசுத்த தீர்க்கதரிசிகள் பூர்வ காலத்தில் சொன்ன வார்த்தைகளையே’ பவுலும் பேதுருவும் தங்களுடைய கடிதங்களில் எழுதினார்கள். (2 பே. 3:2) இப்படிப்பட்ட ஆலோசனையைப் பெற்றபோது முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்கள் எரிச்சலடைந்தார்களா? இல்லை. இது ‘நம்முடைய எஜமானரும் மீட்பருமான இயேசு கிறிஸ்துவின் அளவற்ற கருணையிலும் அவரைப் பற்றிய அறிவிலும் பெருகிக்கொண்டே இருக்க’ கடவுள் செய்திருக்கும் ஓர் அன்பான ஏற்பாடு என்பதை அறிந்திருந்தார்கள்.—2 பே. 3:18.

19, 20. யெகோவாவின் நினைப்பூட்டுதல்கள்மீது நாம் ஏன் நம்பிக்கை வைக்க வேண்டும், அதனால் எப்படிப் பயனடைகிறோம்?

19 இன்று, யெகோவா தம்முடைய வார்த்தையாகிய பைபிளின் மூலம் தரும் நினைப்பூட்டுதல்களை நம்புவதற்கு ஏராளமான காரணங்கள் இருக்கின்றன. (யோசுவா 23:14-ஐ வாசியுங்கள்.) ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக அபூரண மனிதர்களோடு கடவுள் நடந்துகொண்ட விதத்தைப் பற்றி நாம் அதில் வாசிக்கிறோம். நம்முடைய நன்மைக்காகவே யெகோவா அதைப் பதிவு செய்து வைத்திருக்கிறார். (ரோ. 15:4; 1 கொ. 10:11) பைபிள் தீர்க்கதரிசனங்கள் நிறைவேறுவதை நாம் பார்த்திருக்கிறோம். தீர்க்கதரிசனங்கள், பல வருடங்களுக்கு முன்பு சொல்லப்படும் நினைப்பூட்டுதல்களைப்போல் இருக்கின்றன. உதாரணத்திற்கு, “கடைசி நாட்களில்” லட்சக்கணக்கானோர் யெகோவாவை வணங்குவார்கள் என்று சொல்லப்பட்டுள்ள தீர்க்கதரிசனம் இன்று நிறைவேறி வருகிறது. (ஏசா. 2:2, 3) இந்த உலகம் நாளுக்கு நாள் மோசமாகிக்கொண்டே வருவதும் பைபிள் தீர்க்கதரிசனத்தின் நிறைவேற்றம்தான். ஏற்கெனவே பார்த்தபடி, உலகம் முழுவதும் செய்யப்பட்டு வரும் பிரசங்க வேலையும் இயேசு சொன்ன தீர்க்கதரிசனத்தின் நிறைவேற்றமே.—மத். 24:14.

20 மனித சரித்திரம் முழுவதிலும் யெகோவா நம்முடைய நம்பிக்கைக்குப் பாத்திரர் என்பதை நிரூபித்துக் காட்டியிருக்கிறார். இதிலிருந்து பயனடைகிறோமா? அதற்கு அவருடைய நினைப்பூட்டுதல்கள்மீது நம்பிக்கை வைக்க வேண்டும். ரோசெலன் இதைத்தான் செய்தார். அவர் சொல்கிறார்: “நான் யெகோவாமேல முழு நம்பிக்கை வைக்க ஆரம்பிச்சப்போ அவர் தன்னோட அன்பான கையால என்னை தாங்கி பலப்படுத்துறத முழுசா உணர முடிஞ்சுது.” நாமும் யெகோவாவின் நினைப்பூட்டுதல்களை கடைப்பிடிப்பதன் மூலம் பயனடைவோமாக!