Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

வேறுபாடுகளிலிருந்து கற்றுக்கொள்ளுங்கள்

வேறுபாடுகளிலிருந்து கற்றுக்கொள்ளுங்கள்

பூமியில் வாழ்ந்தவர்களில் இயேசுவே மாபெரும் போதகர் என்பதை நீங்கள் ஒத்துக்கொள்வீர்கள் அல்லவா? அவர் கற்பித்த சில முறைகளை... உதாரணத்துக்கு, கேள்விகளையும் உவமைகளையும் பயன்படுத்தும் முறைகளை... நீங்களும் முயற்சி செய்து பார்த்திருப்பீர்கள். ஆனால், வேறுபடுத்திக் காட்டும் முறையை அவர் அடிக்கடி பயன்படுத்தியதைச் சிந்தித்துப் பார்த்திருக்கிறீர்களா?

வேறுபடுத்திக் காட்டும் முறையை அநேகர் தங்கள் பேச்சில் பயன்படுத்துகிறார்கள். அதைப் பற்றி யோசிக்காமலேயே நீங்களும் பயன்படுத்தி வந்திருக்கலாம். இதுபோல் ஏதாவது நீங்கள் சொல்லியிருக்கலாம்: “எல்லா பழமும் பழுத்திடுச்சின்னு சொன்னாங்க, ஆனா சிலது மட்டும் இன்னும் காயாவே இருக்குது.” அல்லது, “ஒருகாலத்துல அவ ரொம்பவும் வெட்கப்படுவா, ஆனா இப்போ எல்லார்கிட்டயும் நல்லாப் பழகுறாளே.”

இதுபோன்ற உதாரணங்களில் முதலில் நீங்கள் ஓர் உண்மையை அல்லது ஒரு விஷயத்தைச் சொல்கிறீர்கள்; அதன்பின் ஆனால், இருந்தாலும், மாறாக, அல்லது மறுபட்சத்தில் போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்தி வேறுபடுத்திக் காட்டுகிறீர்கள். அல்லது, தகவலைச் சேர்ப்பதன் மூலம் நீங்கள் வேறுபடுத்திக் காட்டலாம். அப்படிப் பேசும்போது அது இயல்பாகத் தொனிக்கும், உங்களுடைய குறிப்பை மற்றவர்கள் புரிந்துகொள்வதற்கும் உதவும்.

சில மொழிகளில் அல்லது கலாச்சாரங்களில் இப்படி வேறுபடுத்திக் காட்டுவது வழக்கமாக இல்லாதபோதிலும்கூட, அதன் பயனை நாம் புரிந்துகொள்வது அவசியம். ஏன்? ஏனென்றால், இதற்கு அநேக உதாரணங்கள் பைபிளில் இருக்கின்றன. வேறுபடுத்திக் காட்டும் முறையை இயேசு அடிக்கடி பயன்படுத்தினார். இவற்றைக் கொஞ்சம் ஞாபகப்படுத்திப் பாருங்கள்: “‘மணத்துணைக்குத் துரோகம் செய்யக் கூடாது’ என்று சொல்லப்பட்டதை நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்கள். ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன், காம உணர்வோடு ஒரு பெண்ணைப் பார்த்துக்கொண்டே இருக்கும் எவனும் அவளுடன் ஏற்கெனவே தன் இருதயத்தில் தவறான உறவுகொண்டுவிடுகிறான்.” “‘நீ சத்தியம் பண்ணினால் அதை நிறைவேற்றாமல் இருக்கக் கூடாது; யெகோவாவிடம் நேர்ந்துகொண்டவற்றை நீ செலுத்த வேண்டும்’ என்று பூர்வகால மக்களுக்குச் சொல்லப்பட்டதை நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்கள். ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன், நீங்கள் சத்தியமே செய்ய வேண்டாம்.” “‘கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல்’ என்று சொல்லப்பட்டதை நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்கள். ஆனால் நான் சொல்கிறேன், உங்களுக்குத் தீங்கு செய்கிறவனுக்குத் தீங்கு செய்யாதீர்கள்.” “நீங்கள் விரதம் இருப்பது மனிதர்களுக்குத் தெரியாது, ஆனால் எல்லாவற்றையும் பார்க்கிற உங்கள் தகப்பனுக்குத் தெரியும்.”—மத். 5:27, 28, 33, 34, 38, 39; 6:18.

இதுபோல் வேறுபடுத்திக் காட்டும் முறைகள் மற்ற பைபிள் புத்தகங்களிலும் காணப்படுகின்றன. ஒரு குறிப்பைக் கிரகித்துக்கொள்வதற்கு அல்லது ஒன்றைச் செய்வது மற்றொன்றைவிட மேம்பட்டதென வலியுறுத்திக் காட்டுவதற்கு இவை உங்களுக்குக் கைகொடுக்கலாம். நீங்கள் ஒரு பெற்றோராக இருந்தால், இந்த உதாரணத்தைச் சிந்தித்துப் பாருங்கள்: “தகப்பன்மார்களே, உங்களுடைய பிள்ளைகளுக்கு எரிச்சலூட்டாதீர்கள்; மாறாக, யெகோவாவுக்கு ஏற்ற முறையில் அவர்களைக் கண்டித்து, அவருடைய சிந்தையை அவர்களுடைய மனதில் பதிய வைக்கும் விதத்தில் வளர்த்து வாருங்கள்.” (எபே. 6:4) ஒரு தகப்பன் (அல்லது தாய்) யெகோவாவுக்கு ஏற்ற முறையில் பிள்ளைகளைக் கண்டிக்க வேண்டும் என்று மட்டுமே அப்போஸ்தலன் பவுல் எழுதியிருந்தால், அது ஞானமானதாயும் உண்மையானதாயும் இருந்திருக்கும்தான். என்றாலும், வேறுபடுத்திக் காட்டும் முறையில் சொன்னதால்... அதாவது ‘பிள்ளைகளை எரிச்சலூட்டாதீர்கள், மாறாக யெகோவாவுடைய சிந்தையை அவர்களுடைய மனதில் பதிய வைக்கும் விதத்தில் வளர்த்து வாருங்கள்’ என்று சொன்னதால்... கருத்தை இன்னும் தெளிவாக்கியிருக்கிறார்.

தெசலோனிக்கேயருக்கு எழுதிய முதல் கடிதத்தில் பவுல் இவ்வாறு குறிப்பிட்டார்: “மற்றவர்கள் தூங்குவதுபோல் நாம் தூங்கிக்கொண்டிருக்கக் கூடாது; மாறாக, விழிப்போடும் தெளிந்த புத்தியோடும் இருக்க வேண்டும்.” (1 தெ. 5:6) வேறுபடுத்திக் காட்டும் முறை இங்கே பயன்படுத்தப்பட்டிருப்பதால், இந்தப் புத்திமதிக்குச் செவிசாய்ப்பது எவ்வளவு முக்கியம் என்பதைப் புரிந்துகொள்வீர்கள்; ஆம், உலக அழிவு வேகமாய் வந்துகொண்டிருக்கிற இந்தக் காலத்தில் இது எவ்வளவு அவசரம் என்பதை உணர்ந்துகொள்வீர்கள்.

வேறுபாடுகளிலிருந்து பயனடையுங்கள்

எபேசியர் புத்தகத்தில், வேறுபடுத்திக் காட்டும் முறையை அடிக்கடி பவுல் பயன்படுத்தியிருப்பதை நீங்கள் காணலாம். இவற்றைச் சிந்தித்துப் பார்க்கும்போது பவுல் சொல்லவந்த குறிப்பை நாம் ஒவ்வொருவரும் நன்கு புரிந்துகொள்ளலாம், நாம் என்ன செய்ய வேண்டும் என்பதையும் தெளிவாகத் தெரிந்துகொள்ளலாம்.

எபேசியர் புத்தகத்தில் கொடுக்கப்பட்டிருக்கிற சில வேறுபாடுகளை அடுத்துள்ள அட்டவணையில் நீங்கள் காணலாம். அவற்றைச் சிந்திப்பது சுவாரஸ்யமாகவும் அர்த்தமுள்ளதாகவும் இருக்கும். ஒவ்வொரு உதாரணத்தையும் வாசிக்கும்போது உங்களுடைய சொந்த வாழ்க்கையைப் பற்றி யோசித்துப் பாருங்கள். உங்களையே இவ்வாறு கேட்டுக்கொள்ளுங்கள்: ‘உண்மையில, என்னோட மனப்பான்மை எப்படி இருக்கு? இது மாதிரியான சூழ்நிலையில நான் எப்படி நடந்துப்பேன்? இந்த ரெண்டுல நான் எந்த ரகம்னு மத்தவங்க நினைப்பாங்க?’ நீங்கள் மாற்றம் செய்ய வேண்டிய ஏதாவது அம்சத்தை ஓர் உதாரணம் உங்களுக்குச் சுட்டிக்காட்டினால், அந்த மாற்றத்தைச் செய்ய முயற்சி செய்யுங்கள். அந்த உதாரணத்திலிருந்து பயனடையுங்கள்.

இந்த அட்டவணையை உங்கள் குடும்ப வழிபாட்டில்கூட பயன்படுத்திப் பாருங்கள். முதலில், உங்கள் குடும்பத்திலுள்ள எல்லோருமே இதிலுள்ள உதாரணங்களை வாசிக்க வேண்டும். பின்பு உங்களில் ஒருவர் இந்த உதாரணத்தின் முதல் பகுதியை வாசிக்க வேண்டும், மற்றவர்கள் இரண்டாம் பகுதியிலுள்ள வேறுபாட்டை ஞாபகத்துக்குக் கொண்டுவர முயற்சி செய்ய வேண்டும். அப்படிச் செய்யும்போது, இரண்டாம் பகுதியை இன்னும் நன்றாக எப்படிக் கடைப்பிடிக்கலாம் என்பதைப் பற்றிக் குடும்பமாகப் பேசி மகிழலாம். ஆம், வேறுபாடுகளை இதுபோல் ஆராய்ந்து பார்ப்பது, குடும்பத்திலும் வெளியிலும் கிறிஸ்தவ நடத்தையைக் காத்துக்கொள்ள இளையோருக்கும் முதியோருக்கும் உதவலாம்.

இரண்டாம் பாகத்திலுள்ள வேறுபாடு ஞாபகம் இருக்கிறதா?

வேறுபடுத்திக் காட்டும் முறையில் உள்ள பயனை நீங்கள் மேன்மேலும் புரிந்துகொள்ளும்போது, பைபிளில் அவற்றைக் கண்டுபிடிப்பதில் திறமைசாலியாக ஆவீர்கள்; அவை ஊழியத்தில் அதிக பிரயோஜனமாய் இருப்பதையும் காண்பீர்கள். உதாரணமாக, வீட்டுக்காரரிடம் நீங்கள் இவ்வாறு சொல்லலாம்: “ஒவ்வொருத்தருக்கு உள்ளேயும் அழியாத ஆத்துமான்னு ஒன்னு இருப்பதாக நிறைய பேர் சொல்றாங்க, ஆனால் கடவுளுடைய வார்த்தை என்ன சொல்லுதுன்னு கவனிங்க.” அல்லது, பைபிள் படிப்பின்போது நீங்கள் இவ்வாறு கேட்கலாம்: “கடவுளும் இயேசுவும் ஒன்னுதான்னு அநேகர் நம்புறாங்க, ஆனால் பைபிள் என்ன சொல்லுதுன்னு தெரியுமா? நீங்க என்ன நினைக்கிறீங்க?”

ஆம், வேறுபடுத்திக் காட்டுவது சம்பந்தமாக அறிவொளியூட்டும் பல உதாரணங்கள் பைபிளில் உள்ளன, அவை கடவுளுடைய வழியில் நடக்க நமக்குத் துணைபுரியும். அதுமட்டுமல்ல, பைபிள் சத்தியங்களை மற்றவர்களுக்குக் கற்பிக்கவும் உதவும்.