Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

மலைகளின் நிழலில் யெகோவா அவர்களைப் பாதுகாத்தார்

மலைகளின் நிழலில் யெகோவா அவர்களைப் பாதுகாத்தார்

அதிகாலை நேரம். கதவைத் திறந்த அந்தப் பெண்ணின் கண்களில் ஒரு ‘பார்சல்’ தென்படுகிறது. அதைக் கையில் எடுத்து சுற்றும் முற்றும் பார்க்கிறாள். தெரு வெறிச்சோடிக் கிடக்கிறது. இரவில் யாரோ ஒருவர் அதை வைத்துவிட்டு போயிருக்க வேண்டும். மெதுவாக அதைத் திறந்து பார்த்தவள், சட்டென வீட்டிற்குள் சென்று கதவை அடைக்கிறாள். தடை செய்யப்பட்ட பைபிள் பிரசுரங்கள் அதில் இருந்தன! அப்படியே நெஞ்சோடு அணைத்துக்கொண்டு மனதுக்குள் ஜெபிக்கிறாள்; மதிப்புமிக்க ஆன்மீக உணவுக்காக யெகோவாவுக்கு நன்றி சொல்கிறாள்.

1930-களில், ஜெர்மனியில் இது போன்ற சம்பவங்கள் சகஜம். ஆம்! 1933-ஆம் ஆண்டு நாசிக்களின் ஆட்சி தலைதூக்கியதும், நாட்டின் பல்வேறு பகுதிகளில் யெகோவாவின் சாட்சிகளுடைய வேலைக்குத் தடை விதிக்கப்பட்டது. தற்போது 100 வயதைத் தாண்டிய சகோதரர் ரிச்சர்ட் ரூடால்ஃப் இது பற்றி சொல்கிறார்: “மனுஷங்க என்னதான் சட்டம் போட்டாலும் யெகோவாவையும் அவரோட பேரையும் அறிவிக்கிற வேலைய அவங்களால தடுக்கவே முடியாது; இத நாங்க உறுதியா நம்புனோம்.” * அவர் இவ்வாறு தொடர்கிறார்: “படிக்கிறதுக்கும், ஊழியம் செய்றதுக்கும் பிரசுரங்கள் இல்லனா எங்களுக்கு கை ஒடிஞ்ச மாதிரி இருக்கும். ஆனா, தடையுத்தரவு அமலில் இருந்ததால எங்களுக்கு எதுவும் கிடைக்கல. அதனால பிரசங்க வேலை இனி எப்படி நடக்குமோனு யோசிச்சோம்.” ஆனால் யாரும் நினைத்துப் பார்க்காத விதத்தில் இதைப் பூர்த்தி செய்யமுடியும் என்பதை ரிச்சர்ட் சீக்கிரத்திலேயே புரிந்துகொண்டார். மலைகளின் நிழலிலே அந்த வேலை செய்யப்படவிருந்தது.—நியா. 9:36.

கள்ள வணிகர்களின் பாதையில்...

எல்ப் ஆற்றின் பிறப்பிடத்தை நோக்கிப் பயணித்தால், கடைசியில் கர்கோனோஷி என்றழைக்கப்படும் ராட்சத மலைகளைச் சென்றடையலாம். இவை, இப்போது செக் குடியரசுக்கும் போலந்துக்கும் எல்லையாக அமைந்துள்ளன. வெறும் 5,250 அடி உயரம் மட்டுமே இருக்கும் இந்த மலைப்பகுதிகள், மத்திய ஐரோப்பாவின் ஆர்க்டிக் தீவு என அழைக்கப்படுகிறது. ஏனென்றால், வருடத்தில் ஆறு மாதங்கள் அதன் மலை உச்சிகளை சுமார் 10 அடி அளவுக்கு கடுமையான உறைபனி மூடியிருக்கும். இங்கே நிலவும் தாறுமாறான வானிலையை யாராவது தப்புக்கணக்கு போட்டால், அதன் உச்சிகளில் திடீரென உருவாகும் கடுமையான பனிமூட்டத்தில் வசமாக மாட்டிக்கொள்ளும் ஆபத்து இருக்கிறது.

இந்த மலைத்தொடர் பல நூற்றாண்டுகளாகவே மாகாணங்கள், அரசுகள், மாநிலங்கள் ஆகியவற்றை இயற்கையாகவே பிரிக்கும் எல்லைக்கோடாக இருந்து வருகிறது. மலைப்பாங்கான இந்தப் பகுதிகளைக் கண்காணிப்பது கஷ்டம் என்பதால், கடந்த காலங்களில் நிறைய கள்ளக்கடத்தல்கள் நடந்திருக்கின்றன. 1930-களில், இந்த மலைகள் செக்கோஸ்லோவாகியாவையும் ஜெர்மனியையும் பிரிக்கும் எல்லையாக மாறியதால், கடத்தல்காரர்கள் இந்தப் பாதையைக் கைவிட்டார்கள். அவர்கள் விட்டுச்சென்ற பாதையைத் துணிவுமிக்க சாட்சிகள் பயன்படுத்த ஆரம்பித்தார்கள். எதற்காக? விலைமதிப்புள்ள பைபிள் பிரசுரங்களை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டுசெல்வதற்காக! அந்தச் சாட்சிகளில் இளம் ரிச்சர்ட்டும் ஒருவர்.

சகோதர சகோதரிகள், மலையேறுபவர்கள்போல் உடை உடுத்தி ராட்சத மலைகளைக் கடந்து ஜெர்மனிக்கு பிரசுரங்களைக் கொண்டுசெல்கிறார்கள்

ஆபத்தான மலைப்பயணம்

“வார இறுதி நாட்கள்ல நாங்க ஏழெட்டு பேர் மலையேறுற ஆட்கள் மாதிரி ‘ட்ரெஸ்’ போட்டுட்டு அந்த மலைகளுக்கு போவோம்” என்று சொல்கிறார் ரிச்சர்ட். “ஜெர்மனியிலிருந்து அந்த மலைகள கடக்கறதுக்கு மூணு மணி நேரம் எடுக்கும். செக் குடியரசு பகுதிய சேர்ந்த ஷ்பின்டல்ரூவ் மலின்-ற இடத்துல இருக்குற ஒரு பண்ணை வீட்டுக்கு போவோம். அது ஜெர்மனியிலிருந்து ஏறக்குறைய பத்து மைல் (16.5 கி.மீ.) தூரத்துல இருக்கு. அந்த ஏரியாவுல நிறைய ஜெர்மானியர்கள் குடியிருந்தாங்க. அதுல ஒரு விவசாயி நம்ம சகோதரங்களுக்கு உதவ ஒத்துக்கிட்டாரு. பிரசுரங்கள் இருக்கிற பெட்டிகளை நம்ம சகோதரங்க ப்ராக் என்ற இடத்துலருந்து ரயில்ல அனுப்பி வைப்பாங்க. அந்த விவசாயி, டூர் போறவங்க பயன்படுத்துற குதிரை வண்டியில போய், அந்த பெட்டிகள எடுத்துட்டு வருவாரு. அத வைக்கோல் போர்ல மறைச்சு வைச்சிடுவாரு. அங்கிருந்து, சகோதரங்க பிரசுரங்களை ஜெர்மனிக்கு எடுத்துட்டுப் போவாங்க.

“நிறைய ‘வெய்ட்’ தாங்கற மாதிரி பெரிய பெரிய பைகள வெச்சிருந்தோம். பிரசுரங்கள அந்த பைகள்ல வைச்சு எடுத்துட்டு வருவோம். ஒவ்வொரு பையும் கிட்டத்தட்ட 50 கிலோ இருக்கும்.” போலீசிடம் பிடிபடாமல் இருக்க, சூரிய மறைவுக்குப்பின் அங்கிருந்து கிளம்பி, விடிவதற்குள் அவர்கள் ஜெர்மனி போய் சேர்ந்து விடுவார்கள். அந்தச் சமயத்தில் வட்டாரக் கண்காணியாக இருந்த எர்ன்ஸ்ட் விஸ்நர் பாதுகாப்புக்காக அவர்கள் செய்தவற்றைப் பற்றி இவ்வாறு சொல்கிறார்: “சகோதரங்க ரெண்டு பேர் முன்னால நடந்து போவாங்க. யாரையாவது பார்த்தாங்கனா உடனே லைட் அடிச்சு ‘சிக்னல்’ காட்டுவாங்க. கிட்டத்தட்ட 100 மீட்டர் தூரத்துல இருக்குற சகோதரங்க உடனே பைகளோட புதர்கள்ல ஒளிஞ்சுக்குவாங்க. அப்புறம் அந்த ரெண்டு சகோதரங்க திரும்பி வந்து ஒரு ரகசிய வார்த்தைய சொன்ன பிறகுதான் அங்கிருந்து கிளம்புவாங்க. அந்த வார்த்தைய வாராவாரம் மாத்திட்டே இருப்பாங்க.” ஆனாலும், அவர்களுக்குப் பிரச்சினையாக இருந்தது நீல நிற ‘யூனிஃபார்ம்களில்’ இருந்த ஜெர்மனி போலீஸ் மட்டுமே அல்ல.

அதைப் பற்றி ரிச்சர்ட் இவ்வாறு சொல்கிறார்: “ஒரு நாள் ரொம்ப நேரம் வேலை செய்ய வேண்டியிருந்துச்சு, அதனால சகோதரங்க எல்லாரும் போனதுக்கு அப்புறம் லேட்டா கிளம்பினேன். இருட்டா... பனிமூட்டமா... இருந்துச்சு. உறைய வைக்கிற மழையில நடுங்கிக்கிட்டே போனேன். குட்டையான பைன் மரங்களுக்கு இடையில வசமா மாட்டிக்கிட்டேன். ரொம்ப நேரமா வழி தெரியாம திண்டாடினேன். மலை ஏறுறவங்க நிறைய பேர் இப்படி மாட்டி செத்தே போயிருக்காங்க. சகோதரங்க விடியகாலையில திரும்ப அந்த வழியில வந்தப்பதான் எனக்கு உயிரே வந்துச்சு.”

சுமார் மூன்று வருடங்களுக்கு, அஞ்சாநெஞ்சம் கொண்ட அந்தச் சகோதரர்கள் வாராவாரம் அந்த மலைப்பகுதிகளுக்குச் சென்று வந்தார்கள். குளிர் காலத்தில், பனிச்சறுக்கு மட்டையில் அந்த விலைமதிப்புள்ள பிரசுரங்களைக் கொண்டுவந்தார்கள். சில சமயங்களில், கிட்டத்தட்ட 20 சகோதரர்கள் ஒன்றுசேர்ந்து மலை ஏறுகிறவர்கள் செல்லும் பாதையிலே போய் பகலிலேயே எல்லையைக் கடந்துவிடுவார்கள்; அவர்கள் ஆபத்தற்றவர்கள் என காட்டுவதற்கு சில சகோதரிகளும் அவர்களோடு சேர்ந்து செல்வார்கள். சிலர், முன்னால் நடந்து போவார்கள்; ஏதாவது ஆபத்து இருப்பதாக உணர்ந்தால், பின்னால் வருபவர்களை எச்சரிக்க அவர்களுடைய தொப்பிகளை கழற்றி மேலே எறிவார்கள்.

மலை முகடுகளைப் பனி போர்த்தியிருந்ததால், ராட்சத மலைகளைக் கடப்பது ஆபத்தாக இருந்தது

இருட்டோடு இருட்டாக திரும்பி வந்த பிறகு அந்தச் சகோதரர்கள் என்ன செய்வார்கள்? பிரசுரங்களைச் சகோதர சகோதரிகளுக்கு உடனடியாகக் கொண்டுபோய்ச் சேர்ப்பார்கள். எப்படி? சோப்புகளை ‘பார்சல்’ செய்வதுபோல் பிரசுரங்களை ‘பார்சல்’ செய்து, ஹிர்ஷ்பெர்க்கிலுள்ள ரயில் நிலையத்துக்கு கொண்டுசெல்வார்கள். ‘பார்சல்கள்’ அங்கிருந்து ஜெர்மனியின் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பப்படும். அங்கிருக்கும் சகோதர சகோதரிகள் புத்திசாலித்தனமாக சக கிறிஸ்தவர்களிடம் அவற்றை சேர்த்துவிடுவார்கள்; இதற்கான ஓர் உதாரணத்தைத்தான் ஆரம்பத்தில் பார்த்தோம். இந்த முழு வேலையையும் படு ஜாக்கிரதையாக, ரகசியமாக செய்ய வேண்டியிருந்தது. யாராவது ஒருவர் மாட்டிக்கொண்டால்கூட பெரிய பாதிப்பு ஏற்பட்டுவிடும். இப்படித்தான் ஒருநாள் எதிர்பாராத விதமாக ஒரு பிரச்சினை வந்தது.

1936-ல், பெர்லினுக்கு அருகே ஒரு புத்தகக் கிடங்கு பிடிபட்டது. அடையாளம் தெரியாத ஒருவர் ஹிர்ஷ்பெர்க்கிலிருந்து அனுப்பிய மூன்று ‘பார்சல்களும்’ அதில் இருந்தன. அதிலிருந்த கையெழுத்தை வைத்து அதைக் கடத்தியவர்களில் முக்கியமான ஒருவரை போலீசார் கண்டுபிடித்து கைதுசெய்தார்கள். சீக்கிரத்திலேயே சந்தேகத்தின் பேரில் இன்னும் இரண்டு பேரைக் கைதுசெய்தார்கள்; அவர்களில் ஒருவர் ரிச்சர்ட் ரூடால்ஃப். கைதான சகோதரர்கள் முழுப் பொறுப்பையும் ஏற்றுக்கொண்டதால், கொஞ்ச காலத்திற்கு மற்றவர்களால் மலைப்பயணத்தைத் தொடர முடிந்தது.

நமக்குப் பாடங்கள்

ஜெர்மானிய சாட்சிகளுக்கு பிரசுரங்கள் கிடைக்க அந்த ராட்சத மலைகள் சில காலத்திற்கு பெரிதும் கைகொடுத்தன. 1939-ல் செக்கோஸ்லோவாகியாவை ஜெர்மனி கைப்பற்றியது; அதுவரை, இது போன்ற மற்ற வழிகளைப் பயன்படுத்தியே செக்கோஸ்லோவாகியாவிலிருந்து பிரசுரங்களை ஜெர்மனிக்குக் கொண்டுவந்தார்கள். அதோடு பிரான்சு, நெதர்லாந்து, சுவிட்சர்லாந்து போன்ற அண்டை நாடுகளிலிருந்தும் ஜெர்மனிக்குப் பிரசுரங்கள் வந்தன; அதற்காக ஜெர்மன் சகோதரர்களும் சரி அண்டை நாட்டுச் சகோதரர்களும் சரி, தங்களுடைய உயிரைப் பணயம் வைத்து சக விசுவாசிகளுக்குத் தேவையான ஆன்மீக உணவை வழங்கினார்கள்.

இன்று நம்மில் அநேகருக்கு பிரசுரங்கள் தாராளமாகக் கிடைக்கின்றன, அதுவும் பல்வேறு விதங்களில்! ஒரு பிரசுரத்தை நீங்கள் ராஜ்ய மன்றத்திலிருந்து பெற்றுக்கொள்ளும்போதோ jw.org வெப்சைட்டிலிருந்து டவுன்லோட் செய்யும்போதோ, அதற்குப் பின்னால் இருக்கும் சகோதர சகோதரிகளின் கடின உழைப்பை நினைத்துப் பார்க்கலாம், அல்லவா? ஒருவேளை, பனிசூழ்ந்த மலைகளில் இரவு முழுவதும் பயணித்த அந்த சகோதரர்களைப்போல் இன்று யாரும் பிரசுரங்களைக் கொண்டுவராவிட்டாலும், நிச்சயமாகவே உங்களுக்குக் கிடைக்கும் பிரசுரங்களுக்குப் பின்னால் தன்னலமின்றி உழைக்கும் எண்ணற்ற சக விசுவாசிகளின் உழைப்பு இருக்கிறது.

^ சிலெசியாவிலுள்ள ஹிர்ஷ்பெர்க் சபையில் அவர் சேவை செய்து வந்தார். தற்போது தென்மேற்கு போலந்திலுள்ள யெலன்யா கூரா மாகாணம்தான் அப்போதைய ஹிர்ஷ்பெர்க் நகரம்.