தங்களையே மனப்பூர்வமாய் அர்ப்பணித்தார்கள் —மேற்கு ஆப்பிரிக்காவில்
கோட் டீவோரில் ஏழை சமுதாயத்தில் வளர்ந்துவந்த பாஸ்கல், வசதியாக வாழ ஏங்கினார். குத்துச்சண்டையை கற்றுக்கொண்டிருந்த அவர் ‘ஒரு பெரிய பாக்ஸிங் வீரனா பணக்காரனா ஆகறதுக்கு எங்கே போகலாம்’ என்று யோசித்தார். அதற்கு ஐரோப்பாதான் சரியான இடம் என்று முடிவு செய்தார்; அப்போது அவருக்கு கிட்டத்தட்ட 25 வயது. ஆனால், அங்கு போவதற்குத் தேவையான ஆவணங்கள் இல்லாததால் சட்டவிரோதமாகத்தான் செல்ல வேண்டியிருந்தது.
1998-ஆம் வருடம், தன்னுடைய 27-ஆம் வயதில் அவர் பயணத்தை ஆரம்பித்தார். முதலில், தன் நாட்டு எல்லையைக் கடந்து கானாவிற்கு சென்றார். பிறகு டோகோ வழியாக பெனினை கடந்து, நைஜரில் உள்ள பிர்னி எங்கோனியை அடைந்தார். இனிமேல்தான் அவருக்கு சிக்கலே. வடக்கு நோக்கி போகவேண்டுமென்றால், ‘டிரக்கில்’ சென்று சஹாரா பாலைவனத்தைக் கடந்தாக வேண்டும். பிறகு, மத்தியதரைக் கடலை அடைந்து, அங்கிருந்து கப்பலில் பயணித்தால்தான் ஐரோப்பாவிற்குள் நுழைய முடியும். ஆனால், நைஜரில் நடந்த இரண்டு விஷயங்கள் அவருடைய லட்சியத்தில் குறுக்கிட்டன.
ஒன்று, அவரிடமிருந்த காசெல்லாம் கரைந்தது. இன்னொன்று, நோவே என்ற பயனியரைச் சந்தித்தது. அந்தச் சகோதரரோடு அவர் பைபிள் படிக்க ஆரம்பித்தார். கற்றுக்கொண்ட விஷயங்கள் நெஞ்சைத் தொட்டதால் வாழ்க்கையைப் பற்றிய அவருடைய கண்ணோட்டமே மாறியது. சொந்த லட்சியங்களைத் தேடி வந்தவர், ஆன்மீக லட்சியங்களை நாட ஆரம்பித்தார். டிசம்பர் 1999-ல் ஞானஸ்நானம் எடுத்தார். யெகோவா செய்ததற்கெல்லாம் நன்றிக்கடனாக, 2001-ல் நைஜரிலேயே, சத்தியம் கிடைத்த அதே ஊரிலேயே, பயனியர் ஊழியம் செய்ய ஆரம்பித்தார். இப்போது, அந்தச் சேவையைக் குறித்து அவர் எப்படி உணருகிறார்? “இப்பதான் என் வாழ்க்கை ரொம்ப சந்தோஷமா, திருப்தியா இருக்கு” என்று உற்சாகம் பொங்க சொல்கிறார்.
சந்தோஷத்தை அள்ளித்தந்த ஆப்பிரிக்க வாழ்க்கை
ஆன்மீக இலக்குகளுக்கு முதலிடம் கொடுத்தால்தான் வாழ்க்கையில் அதிக திருப்தி கிடைக்கும் என்பதை பாஸ்கலைப் போலவே நிறையப் பேர் உணர்ந்திருக்கிறார்கள். இதை உணர்ந்த சிலர், ஐரோப்பாவிலிருந்து தேவை அதிகமுள்ள ஆப்பிரிக்க தேசங்களுக்குச் சென்றிருக்கிறார்கள். சொல்லப்போனால், 17 வயதுமுதல் 70 வயதுவரையுள்ள ஏறக்குறைய 65 சாட்சிகள் பெனின், பர்கினா பாஸோ, நைஜர், டோகோ போன்ற ஆப்பிரிக்க தேசங்களுக்குக் குடிமாறியிருக்கிறார்கள். * இவ்வளவு பெரிய மாற்றம் செய்ய எது அவர்களைத் தூண்டியது, இதன் விளைவு என்ன?
டென்மார்க்கைச் சேர்ந்த ஆன்னா-ராகெல் இவ்வாறு சொல்கிறார்: “என் அப்பா-அம்மா செனிகல் நாட்டுல மிஷனரிகளா சேவை செய்தாங்க. மிஷனரி வாழ்க்கைய பற்றி எப்பவும் என்கிட்ட ரொம்ப உற்சாகமா பேசுனதுனால நானும் அந்த மாதிரி ஒரு வாழ்க்கைய வாழ ஆசப்பட்டேன்.” சுமார் 15 வருடங்களுக்கு முன்னால் டோகோவில் உள்ள சைகை-மொழி சபையில் சேவை செய்வதற்கு அங்கே குடிமாறினார். அப்போது அவருக்கு சுமார் 22 வயதுதான். இப்படிச் செய்தது மற்றவர்களை எப்படி உற்சாகப்படுத்தியது? அவர் சொல்கிறார்: “எனக்கு அப்புறமா, தங்கச்சியும் தம்பியும் டோகோவுக்கு குடிமாறி வந்தாங்க.”
பிரான்சைச் சேர்ந்த ஆரல் என்ற மணமான சகோதரருக்கு இப்போது 70 வயதாகிறது. அவர் சொல்கிறார்: “அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி நான் ரிட்டயர் ஆனப்போ, ஒரு தீர்மானம் எடுக்க வேண்டியிருந்துச்சு: பூஞ்சோலை பூமி வர்ற வரைக்கும் பிரான்சிலேயே நிம்மதியா காலத்தை கடத்துறதா, இல்ல ஊழியத்தை இன்னும் அதிகமா செய்யுறதா.” அவர் ஊழியத்தை விரிவாக்கவே தீர்மானித்தார். மூன்று வருடங்களுக்கு முன்னால் அவரும் அவருடைய மனைவி ஆல்பர்-ஃபெயட்டும் பெனின் நாட்டுக்குக் குடிமாறிச் சென்றார்கள். “இந்த இடத்துல சேவை செய்ய முன்வந்ததுதான், வாழ்க்கையிலேயே நாங்க செஞ்ச நல்ல விஷயம்” என்கிறார் ஆரல். “சொல்லப்போனா இப்ப நாங்க ஊழியம் செய்ற சில கடலோர பகுதியே பூஞ்சோலை மாதிரிதான் இருக்கு” என்கிறார் புன்சிரிப்புடன்.
க்ளோடோமிர் மற்றும் அவரது மனைவி லிசியான் 16 வருடங்களுக்கு முன்பு பிரான்சிலிருந்து பெனினுக்கு மாறிச் சென்றார்கள். குடும்பத்தாரையும் நண்பர்களையும் விட்டுப் பிரிந்து தூரமாக வந்தது அவர்களுக்கு முதலில் கஷ்டமாக இருந்தது. மேலும், புதிய இடத்தில் வாழ்வது தங்களுக்கு ஒத்துவருமா என்ற பயமும் இருந்தது. ஆனால், அங்கிருந்த சூழ்நிலை அவர்களுடைய பயத்தைப் போக்கியது. அவர்கள் அளவற்ற சந்தோஷத்தை அனுபவித்தார்கள். க்ளோடோமிர் இவ்வாறு சொல்கிறார் “இந்த 16 வருஷத்துல சராசரியா வருஷத்துக்கு ஒருத்தர் ஞானஸ்நானம் எடுக்க நாங்க உதவியிருக்கோம்.”
செபாஸ்டியன்-ஸோவன்னா தம்பதியர் பிரான்சிலிருந்து பெனின் நாட்டிற்கு 2010-ஆம் ஆண்டு குடிமாறிச் சென்றார்கள். செபாஸ்டியன் சொல்கிறார்: “இங்க, சபையில செய்யறதுக்கு நிறைய வேலைகள் இருக்கு, ஏதோ தேவராஜ்ய பயிற்சி பள்ளியில மும்முரமா படிக்கிற மாதிரி இருக்கு!” சரி, ஊழியத்தில் மக்களுடைய பிரதிபலிப்பு எப்படி? ஸோவன்னா சொல்கிறார்: “ஜனங்க சத்தியத்துக்காக தவிக்கிறாங்க. நாங்க சும்மா தெருவுல நடந்துபோனாகூட, அவங்களாவே வந்து எங்ககிட்ட பைபிள் சம்பந்தமான கேள்விகள கேட்குறாங்க, பிரசுரங்களையும் வாங்கிக்குறாங்க.” புதிய இடத்தில் சேவை செய்வது அவர்களுடைய திருமண பந்தத்தை எப்படிப் பாதித்திருக்கிறது? செபாஸ்டியன் குறிப்பிடுகிறார்: “நாங்க ரெண்டு பேரும் ரொம்பவே நெருக்கமாயிருக்கோம். நாள் முழுக்க என் மனைவியோடு ஊழியம் செய்யறது ரொம்ப சந்தோஷமா இருக்கு.”
எரிக்-கேட்டி தம்பதியர், மக்கள் ஆங்காங்கே வாழும் வடக்கு பெனினில் சேவை செய்கிறார்கள். பத்து வருடங்களுக்கு முன்னால் பிரான்சில் இருக்கும்போது தேவை அதிகமுள்ள இடங்களில் சேவை செய்வது பற்றிய கட்டுரைகளை அவர்கள் வாசித்தார்கள், முழுநேர ஊழியர்களிடம் அதைப் பற்றிப் பேசினார்கள். இதனால், வெளிநாட்டிற்கு சென்று சேவை செய்ய ஆசைப்பட்டார்கள். 2005-ல், அவர்களுடைய ஆசை நிறைவேறியது. அவர்கள் அமோக வளர்ச்சியைக் கண்டார்கள். எரிக் சொல்கிறார்: “ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி நாங்க இருக்கிற டாங்கீட்டா தொகுதியில ஒன்பது பிரஸ்தாபிகள்தான் இருந்தாங்க; ஆனா இப்போ 30 பேர் இருக்காங்க. ஞாயிற்றுக்கிழமை கூட்டங்களுக்கு 50-லிருந்து 80 பேர்வரைக்கும் வர்றாங்க. இந்த வளர்ச்சிய பார்க்குறப்போ எவ்வளவு சந்தோஷமா இருக்கு தெரியுமா!”
சவால்களை இனம்கண்டு சமாளித்தல்
தேவையுள்ள இடங்களில் சேவை செய்கிற சிலர் என்ன சவால்களைச் சந்தித்திருக்கிறார்கள்? ஆன்னா ராகேலின் தம்பி, பென்யமினுக்கு 33 வயது. 2000-ல், அவர் டென்மார்க்கிலிருந்தபோது ஒரு மிஷனரியைச் சந்தித்தார். அந்த மிஷனரி டோகோவில் சேவை செய்தவர். பென்யமின் சொல்கிறார்: “பயனியர் செய்ய ஆசையா இருக்குனு அந்த மிஷனரிகிட்ட சொன்னேன், அதுக்கு அவர்: ‘நீ டோகோவிலேயே பயனியர் செய்யலாமே’னு சொன்னார்.” பென்யமின் அதைப் பற்றி யோசித்துப் பார்த்தார். “அப்போ எனக்கு 20 வயசுகூட ஆகல, ஆனா என்னோட ரெண்டு அக்காவும் ஏற்கெனவே டோகோவுல சேவை செய்துட்டு இருந்ததால அங்க போறது எனக்கு வசதியா இருந்துச்சு” என்று அவர் சொல்கிறார். ஆனாலும் போன இடத்தில் ஒரு பிரச்சினை. “பிரெஞ்சுல எனக்கு ஒரு வார்த்தைகூட பேச தெரியாது. என்னால மத்தவங்ககிட்ட ஒழுங்கா பேச முடியாததால முதல் ஆறு மாசம் ரொம்பவே கஷ்டப்பட்டேன்.” போகப்போக அந்த மொழியில் அவர் தேறினார். இப்போது பெனின் பெத்தேலில் சேவை செய்கிறார். பிரசுரங்களை அனுப்புவதிலும், அங்குள்ள கம்ப்யூட்டர் துறைக்கு உதவுவதிலும் உறுதுணையாக இருக்கிறார்.
முன்பு குறிப்பிடப்பட்ட எரிக்-கேட்டி தம்பதியர் பெனின் நாட்டிற்கு குடிமாறுவதற்கு முன்னால் பிரான்சிலுள்ள வேற்று மொழி சபையில் சேவை செய்தார்கள். மேற்கு ஆப்பிரிக்காவில் வாழ்க்கை எப்படி இருந்தது? கேட்டி சொல்கிறார்: “நல்ல வீடு கிடைக்குறது ரொம்ப கஷ்டமா இருந்துச்சு. கரண்ட் வசதி, குழாய் வசதி இல்லாத வீட்டுலதான் நாங்க மாசக்கணக்குல குடியிருந்தோம்.” எரிக் இவ்வாறு சொல்கிறார்: “அக்கம்பக்கத்திலிருந்து ராத்திரி ரொம்ப நேரம்வரைக்கும் சத்தமா பாட்டு கேட்டுக்கிட்டே இருக்கும். அதெல்லாம் பொறுத்துதான் ஆகணும், இடத்துக்கேற்ற மாதிரி மாற்றிக்கிறதுக்கு தயாரா இருக்கணும்.” ஆனாலும், “பிரஸ்தாபிகள் கால் வைக்காத இடத்துல ஊழியம் செய்றப்போ கிடைக்கிற சந்தோஷம் எல்லா கஷ்டத்தையும் மறக்க வெச்சிடும்” என்பதை இருவரும் ஒத்துக்கொள்கிறார்கள்.
இப்போது 60 வயதை நெருங்கிக்கொண்டிருக்கும் மிஷல்-மாரி ஆன்யஸ் தம்பதியர், சுமார் ஐந்து வருடங்களுக்கு முன்பு பிரான்சிலிருந்து பெனின் நாட்டிற்குக் குடிமாறிச் சென்றார்கள். அங்கு செல்வதற்குமுன் அவர்கள் குழம்பிப்போய் இருந்தார்கள். அப்படிக் குடிமாறிப் போவது ஆபத்தாக இருக்குமென சிலர் நினைத்தார்கள். “யெகோவாவோட உதவி இருக்குறது மட்டும் எங்களுக்கு புரியாம இருந்திருந்தா ரொம்பவே பயந்திருப்போம். நாங்க யெகோவாவுக்கு சேவை செய்றதுக்காக, அவரோட உதவியோட அங்கே போனோம்” என்று மிஷல் சொல்கிறார்.
நாம் எப்படித் தயாராகலாம்?
தேவை அதிகமுள்ள இடங்களில் சேவை செய்ய நம்மைத் தயார்படுத்திக்கொள்வது முக்கியம். இதற்கு அனுபவசாலிகள் கொடுக்கும் சில ஆலோசனைகள்: முன்பே திட்டமிடுங்கள். இடத்திற்கேற்றவாறு மாற்றிக்கொள்ளுங்கள். ‘பட்ஜட்’ போட்டு செலவு செய்யுங்கள். யெகோவாவைச் சார்ந்திருங்கள்.—லூக். 14:28-30.
முன்பு சொல்லப்பட்ட செபாஸ்டியன் இவ்வாறு சொல்கிறார்: “குடிமாறுறதுக்கு ரெண்டு வருஷத்துக்கு முன்னாடியிருந்தே நானும் ஸோவன்னாவும் பணத்தை சேமிக்க ஆரம்பிச்சோம். பொழுதுபோக்குக்கான செலவுகள குறைச்சோம், தேவையில்லாத பொருள்கள் வாங்குறத நிறுத்திட்டோம்.” தொடர்ந்து வெளிநாட்டில் சேவை செய்வதற்காக அவர்கள் ஒவ்வொரு வருடமும் ஐரோப்பாவிற்குச் சென்று சில மாதங்கள் வேலை செய்கிறார்கள். மற்ற மாதங்களில் பெனினுக்கு சென்று பயனியர் ஊழியம் செய்கிறார்கள்.
தேவை அதிகமுள்ள மேற்கு ஆப்பிரிக்காவில் சேவை செய்ய மற்ற நாடுகளிலிருந்து வந்த சுமார் 20 மணமாகாத சகோதரிகளில் மாரி-தேரஸும் ஒருவர். இவர் பிரான்சில் ஒரு பஸ் டிரைவராக வேலை செய்தார். நைஜரில் பயனியர் சேவை செய்வதற்காக 2006-ல் ஒரு வருடத்திற்கு விடுப்பு எடுத்தார். பயனியர் சேவையில் ருசி கண்டதால் அதைத் தொடர்ந்து செய்ய ஆசைப்பட்டார். மாரி-தேரஸ் சொல்கிறார்: “பிரான்சுக்குப் போன உடனே, என்னோட வேலையில கொஞ்சம் மாற்றம் செய்ய முடியுமானு முதலாளிகிட்ட கேட்டேன், அவரும் ஒத்துக்கிட்டார். இப்போ, மே மாசத்துலிருந்து ஆகஸ்ட்வரைக்கும் பிரான்சுல பஸ் டிரைவரா வேலை செய்றேன். செப்டம்பரிலிருந்து ஏப்ரல்வரைக்கும் நைஜரில் பயனியர் ஊழியம் செய்றேன்.”
‘முதலாவது கடவுளுடைய அரசாங்கத்தை நாடிக்கொண்டே’ இருப்பவர்கள், தங்களுடைய மற்ற எல்லாத் தேவைகளையும் யெகோவா கவனித்துக்கொள்வார் என்பதில் நம்பிக்கை வைக்கலாம். (மத். 6:33) பிரான்சைச் சேர்ந்த ஸஃபீராவின் உதாரணத்தை எடுத்துக்கொள்ளுங்கள். சுமார் 28 வயதுள்ள இந்த மணமாகாத சகோதரி தற்போது பெனினில் பயனியர் சேவை செய்து வருகிறார். ஆப்பிரிக்காவில் இன்னொரு வருடம் (ஆறாவது வருடம்) பயனியர் சேவையைத் தொடருவதற்குத் தேவையான பணத்தைச் சம்பாதிக்க 2011-ல் பிரான்சுக்குத் திரும்பிச் சென்றார். ஸஃபீரா இப்படிச் சொல்கிறார்: “ஒரு வெள்ளிக்கிழமையோட என் வேலை முடிஞ்சிடுச்சு. இன்னும் பத்து நாளுக்கு எங்கேயாவது வேலை பார்த்தால்தான் ஒரு வருஷத்துக்கு தேவையான பணத்தை சம்பாதிக்க முடியும். இன்னும் ரெண்டு வாரம்தான் இருந்துச்சு. என்னோட சூழ்நிலைய சொல்லி யெகோவாகிட்ட ஜெபம் செய்தேன். கொஞ்ச நேரத்திலேயே ஒரு வேலைவாய்ப்பு நிறுவனத்திலிருந்து போன் வந்துச்சு; ஒருத்தரோட வேலையை ரெண்டு வாரத்துக்கு செய்ய முடியுமானு கேட்டாங்க.” அந்த வேலையைக் கற்றுக்கொள்வதற்காக திங்கள்கிழமை அங்கு சென்றார். ஸஃபீரா சொல்கிறார்: “அங்கு போய் பார்த்தாதான் தெரிஞ்சது அவங்களும் ஒரு யெகோவாவின் சாட்சினு. பயனியர் ஊழியப் பள்ளிக்கு போறதுக்காக அவங்க பத்து நாள் லீவு கேட்டு இருந்தாங்க. அவங்களுக்கு பதிலா வேலை செய்ய யாராவது கிடைச்சாத்தான் லீவு கொடுப்பதா அந்த முதலாளி சொல்லி இருந்தார். நான் யெகோவாகிட்ட ஜெபம் செய்த மாதிரி அவங்களும் ஜெபம் செய்திருக்காங்க.”
மன நிறைவு தரும் சேவை
மேற்கு ஆப்பிரிக்காவில் பல வருடங்களாக பயனியர் ஊழியம் செய்த சகோதர சகோதரிகள் சிலர், நிரந்தரமாக அங்கேயே தங்கிவிட்டார்கள். மற்றவர்கள், சில வருடங்களுக்கு அங்கே ஊழியம் செய்த பிறகு தங்கள் தாயகத்திற்குத் திரும்பிவிட்டார்கள். ஆனாலும், அன்று செய்த சேவையின் பலனை இன்றும் ருசிக்கிறார்கள். யெகோவாவுக்குச் சேவை செய்வதே உண்மையான மன நிறைவு தரும் என்பதை அவர்கள் அறிந்திருக்கிறார்கள்.
^ பாரா. 6 பிரெஞ்சு மொழி பேசப்படும் இந்த நான்கு நாடுகளில் நடக்கும் ஊழிய வேலைகளை பெனின் நாட்டு கிளை அலுவலகம் மேற்பார்வை செய்கிறது.